R2099 (page 35)
“நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்……. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.” (மத்தேயு 5:13-14)
உப்பும், வெளிச்சமும், மனுக்குலத்திற்கு மிகவும் அவசியமானவைகள் ஆகும். மேலும், இவ்விரண்டும் இயற்கை வாயிலாகவும் அதிகமாகக்கிடைக்கின்றது. மிருகங்கள் மற்றும் தாவரங்களினுடைய உட்பொருளுக்குள், உப்பானது பெருமளவில் பிரவேசிக்கின்றது. மேலும், உணவை ருசியுள்ளதாக்குவதற்கென பயன்படுத்தப்படும் இந்த உப்பானது மனிதனுக்கும், மிருகங்களுக்கும் ஏறக்குறைய அவசியமாகவே உள்ளது. மனிதனுடைய வளர்ச்சிப் பாதையின் ஆரம்பக்கட்டத்தில், உப்பு வர்த்தக விஷயங்களிலும் முக்கியமான பங்கு வகித்துள்ளது. இன்னுமாக, இந்த மிகவும் பயனுள்ள உப்பாகிய வியாபாரப் பொருளுக்காகவே, ஆரம்ப காலத்திலுள்ள வாணிப பாதைகள்/சாலைகள் அமைக்கப்பட்டன என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. உள்நாட்டு ஜனங்கள் மத்தியில் உப்புச்சுனை என்பது, தேவர்களிடமிருந்து வந்த விஷேசமான ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது. ஆகையால், உப்பிற்கு மத ரீதியில் மிகுந்த முக்கியத்துவம் காணப்பட்டபடியால், தேவர்களுக்குச் செலுத்தப்பட்ட பலிகளில், உப்பு விலையேறப்பெற்ற பொருளாகச் சேர்க்கப்பட்டது. ஹோமர் என்பவர் உப்பை தெய்வீகமானது என்றும், பிளாட்டோ என்பவர் “”உப்பு தேவர்களுக்கு அருமையானது” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உப்பினுடைய பயன் மற்றும் முக்கியத்துவத்தினிமித்தமாக நியாயப்பிரமாணத்தின் பழைய யுகத்திலும் மற்றும் கிருபையின் புதிய யுகத்திலும் முக்கியமான படிப்பினைகளைப் புகட்டுவதற்கென உப்பு என்ற வார்த்தை அடையாள வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டது. உணவிற்குச் சுவையூட்டும் பொருளாகிய உப்பு விருந்தோம்பலை அடையாளப்படுத்துகின்றது. மேலும், உப்பு கிருமி நாசினியாக இருக்கின்றபடியால், அது தூய்மைக்கும், நேர்மைக்கும், அழியாத்தன்மைக்கும் கூட அடையாளமாக இருக்கின்றது. “”உப்பு உடன்படிக்கை” என்ற வார்த்தை வேதாகமத்தில் இடம்பெறுகின்றது (எண்ணாகமம் 18:19 திருவிவிலியம்). உப்பை முக்கியமானப் பொருளாகக் கொண்டுள்ள பலிகள் மூலமாகவே உடன்படிக்கைகள் பொதுவாக ஏற்படுத்தப்படுகின்றது. “”நீ படைக்கிற எந்தப் போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜன பலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக” (லேவியராகமம் 2:13). உப்பினுடைய பதப்படுத்துகின்ற தன்மையானது, பொறுமையுடன் சகித்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்குப் பொருத்தமான அடையாளமாகக்கூடக் காணப்படுகின்றது. உப்பினுடைய சுத்தகரிக்கும் தன்மையானது, எலிசா தண்ணீரை ஆரோக்கியமாக்குவதற்கென உப்பைப் பயன்படுத்தின சம்பவத்தில் வெளிப்படுகின்றது (2 இராஜாக்கள் 2:20-22).
“”நீங்கள் உலகத்துக்கு உப்பாயிருக்கின்றீர்கள்.” அதாவது, உண்மையான கிறிஸ்தவன் ஒருவனிடமிருந்து, உலகத்தின்மீது செலுத்தப்படும் செல்வாக்கானது, சொஸ்தப்படுத்தக்கூடியதும், சுத்திகரிக்கக்கூடியதுமான செல்வாக்காகக் காணப்படும் என்றும், நல்லவைகள் புளித்துப்போகாமலும், அழுகிப்போகாமலும் எப்போதும் பதப்படுத்தி, பத்திரப்படுத்தும் செல்வாக்காகக் காணப்படும் என்றுமுள்ள அர்த்தத்திலேயே, நமது கர்த்தர் இங்கு உப்பு எனும் அடையாள வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். எவ்வளவு அருமையான ஒப்புமை!
மேலும், கர்த்தருடைய இந்த வார்த்தைகள் உலகத்தின் மீது, கிறிஸ்தவர்கள் தங்கள் சார்பில் பெற்றிருக்கும் ஒரு பொறுப்பைப் பொதுவாகச் சுட்டிக்காட்டுகின்றதாகவும் இருக்கின்றது. கிறிஸ்து உலகத்தான் அல்லாதது போன்று, இவர்களும் உலகத்தார் அல்லாதவர்களாகவும், உலகத்தினின்று பிரிக்கப்பட்டவர்களாகவும், தேவனுடைய சொந்த ஜனமாகவும், அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாகவும் இருந்தாலுங்கூட, இவர்கள் உலகத்தினின்று பிரிக்கப்பட்டதும் தேவனுடன் ஐக்கியம், உறவு மற்றும் அவருடன் ஒத்துழைக்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டதும், இவர்கள் தங்களுக்குள் பெருமையை வளர்த்துக்கொள்வதற்காய் இராமல் மாறாக, “”உலகத்தை ஆசீர்வதிப்பதற்கே” என இவர்கள் மறந்துவிடக்கூடாது. ஏனெனில், தேவன் உலகத்தை மிகவும் அன்புகூர்ந்தபடியால், அவர்களை மீட்கும்படியாக தம்முடைய ஒரேபேறான குமாரனை ஒப்புக்கொடுத்துள்ளார். மேலும், தேவனைப்போன்று கிறிஸ்துவும் உலகத்தை அன்புகூர்ந்தபடியால், உலகத்தின் இரட்சிப்பிற்காக அவர்தாமே தேவனுடைய கருவியாகும்படிக்கு தம்மை ஒப்புக்கொடுத்துள்ளார். (யோவான் 17:16; 3:16; 6:51; 10:18; எபிரெயர் 2:9; ரோமர் 5:18-19).
“”நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கின்றீர்கள், வெளிச்சமாக இருக்கின்றீர்கள்” என்ற இந்த வாக்கியங்கள் நிகழ்கால அமைப்பில் இருப்பதையும் நாம் கவனிக்கின்றோம். அதாவது, மகிமையடைந்த கிறிஸ்துவின் மூலம் பூமியின் குடிகள் அனைத்தின் மீதும் பொதுவான ஆசீர்வாதம் வருவதற்கு முன்னதாக, இப்பொழுதும் நீங்கள் பூமிக்கு உப்பாகவும், வெளிச்சமாகவும் இருக்கின்றீர்கள் என்பதாகும். “”புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” என்ற அப்போஸ்தலனாகிய பவுலினுடைய புத்திமதியை நாம் நினைவுக்குக் கொண்டுவருவோமாக (கொலோசெயர் 4:5,6).
உலகத்தாரிடமான கிறிஸ்தவனுடைய மனப்பான்மையானது, பெருமையாகவும், விருப்பு வெறுப்பு அற்ற நிலையிலும் இராமல் மாறாக, உலத்தினுடைய ஆவி, பரிசுத்தமற்ற இலட்சியங்கள், பேராசைகள் மற்றும் செய்கைகளிலிருந்து விலகின நிலையிலும், அதேசமயம் ஆசீர்வதிப்பதற்கு எப்போதும் ஆயத்தமாகக் காணப்படுவதற்கு ஏதுவாய்ப் பெருந்தன்மையுடனும், இரக்கத்துடனும், அன்புடனும் காணப்பட வேண்டும். மேலும், இவர்களது முன்மாதிரியின் மூலமாகவும், கொள்கைகளின் மூலமாகவும் ஜீவனுக்கான மற்றும் பரிசுத்தத்திற்கான வழியைச் சுட்டிக்காண்பிக்கின்றவர்களாகவும் இருக்க வேண்டும். “”நான் உன்னைக்காட்டிலும் பரிசுத்தமானவன்” என்று பெருமையுடன் சொல்லும் மனப்பான்மை சரியானதல்ல. மாறாக, [R2099 : page 36] “”தெய்வீகக் கிருபையினுடைய செல்வாக்கு என்மேல் இல்லையெனில், நான் உங்களைவிட மிகக் கீழான நிலையில்தான் இருந்திருப்பேன். இந்தத் தெய்வீகக் கிருபையை ஏற்றுக்கொள்கிறவர்கள் அனைவருக்கும், அது இலவசமாக வழங்கப்படும். கிருபையினால்தான் இவ்வளவாகக் காணப்படுகின்றேன் என்றபோதிலும், என்னிடம் காணப்படும் குறைவுகளுக்கு, எனக்குப்போதுமான பரிந்து பேசுபவராகக் காணப்படுபவரின் புண்ணியம் தேவைப்படுகின்றது” என்று சொல்லுகிற மனப்பான்மையே சரியானதாகும். வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஏனெனில் செய்கைகள் என்பது, வார்த்தைகள், சொற்களைக்காட்டிலும் அதிக ஆற்றல் உடையதாய் இருக்கின்றது. மேலும், இவர்களுடைய சாட்சியானது, மிகவும் ஆற்றல் உள்ளதாய்க் காணப்படும் பரிசுத்தமான நடத்தை மற்றும் சம்பாஷணையினுடைய சாட்சியானது தேவனுக்கு மகிமை சேர்ப்பதில் தவறுவதில்லை; நீதியினுடைய விவேகத்திற்கும், சிறப்பிற்கும் மகிமை சேர்ப்பதில் தவறுவதுமில்லை; இன்னுமாக, அநீதியைக் கடிந்துகொள்வதிலும் தவறுவதுமில்லை; வரவிருக்கின்ற நியாயத்தீர்ப்பில் நீதி நிச்சயமாய் ஜெயங்கொள்ளும் என்ற உண்மையை அறிவிப்பதில் தவறுவதுமில்லை. (யோவான் 16:8; அப்போஸ்தலர் 24:25).
“”உப்பு நல்லது தான்” என்ற இயேசுவின் வார்த்தைகள், உப்பின் தூய்மையை, நீதித்தன்மையை அடையாளப்படுத்துவதையும், அதன் சுத்திகரிப்பதற்கும், ஆரோக்கியத்திற்கும், பதப்படுத்துமான ஆற்றலை அடையாளப்படுத்துவதையும் குறிக்கின்றது. “”உங்களுக்குள்ளே (தூய்மை, நீதி எனும்) உப்புடையவர்களாயிருங்கள்” (மாற்கு 9:50). ஒருவேளை நம்மிடத்திலேயே உப்பு இல்லாதிருந்தால், நம்மால் எப்படிப் பூமிக்கு உப்பாக இருக்க முடியும்? ஒருவேளை நாமே நீதியில் உண்மையுள்ளவர்களாய் இல்லாமல் இருப்போமானால், மற்றவர்கள் மீது சுத்திகரிக்கும், ஆரோக்கியப்படுத்தும் செல்வாக்கை நம்மால் எப்படிச் செலுத்த முடியும்? நீதியுடையவர்களாய் இருக்கின்றோம் என வெளித்தோற்றமாக மாத்திரமே சொல்லிக்கொள்வது என்பது உண்மையான பரிசுத்தம் ஆகாது. வெளித்தோற்றமாக மாத்திரமே சொல்லிக்கொள்ளும் நீதியிடம், ஆரோக்கியமளிக்கும் தன்மைகள் இருப்பதில்லை; மற்றும் உலகத்தாரிடத்திலான நம்முடைய பொறுப்பை ஒருபோதும் நிறைவேற்றவும் செய்யாது. ஆகவே, தேவனுக்குத் துதி ஏறெடுக்கப்படத்தக்கதாக, மனுஷர்கள் நம்மில் கண்டு, உணரத்தக்கதாக, உண்மையான பரிசுத்தம் எனும் உப்பை நாம் பெற்றிருப்போமாக.
இந்த அடையாள வார்த்தையாகிய உப்பைக்குறித்து, நமது கர்த்தர் பேசும்போதுதான், ஓர் எச்சரிப்பின் வார்த்தையையும் கூட சேர்த்துப் பேசுகின்றார். “”உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது” (மத்தேயு 5:13). ஆகவே, நீதி என்னும் உப்பை ஒரு காலகட்டத்தில் பெற்றிருந்த கிறிஸ்தவன் ஒருவன், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளுவதற்கெனத் திரும்புவதுபோன்று திரும்பி, விரும்பி, வேண்டுமென்றே/துணிகரத்துடனே நீதியினின்று, தவறுவானாகில், அவன் “”ஒன்றுக்கும் உதவாதவனாகி விடுவான்” (எபிரெயர் 6:4-8; 10:26-31,38,39). உப்பை நமக்குள் பெற்றிருப்பது மாத்திரமல்லாமல், அதன் ஆரோக்கியப்படுத்தும் தன்மைகளை நாம் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதும் எவ்வளவு முக்கியமாய் உள்ளது.
இந்த வகுப்பாரை இயேசு, “”உலகத்திற்கு வெளிச்சம்” என்றும் குறிப்பிடுகின்றார். இவர்கள் முழுஉலகமும் வெளிச்சமடையத்தக்கதாக, தேவனுடைய இராஜ்யத்தில் சூரியனைப்போன்று பிரகாசிக்கின்ற காலம் வரவில்லை என்றாலும் கூட, இப்பொழுதும் இவர்கள் ஒளி வீசுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். மேலும், இவர்களிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கென, இவர்களுடைய ஒளியானது, சிறிய வட்டத்திற்குள்ளாகவே பிரகாசிக்கின்றது. கர்த்தருடைய பரிசுத்தவான்கள் மீதும், இருளிலுள்ள உலகத்தாரின் மீதுமான கர்த்தருடைய அக்கறையானது, பரிசுத்தவான்களுடைய ஒளி எப்படி இருக்க வேண்டுமென அவர்களுக்கு அவர் கொடுக்கும் புத்திமதியில் வெளிப்படுகின்றது அதாவது, “”மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது”; (மத்தேயு 5:16). இன்னுமாக இந்த உலகத்தினுடைய இருளைக் கூடுமானமட்டும் விரட்டுவதற்கு ஏதுவாக நாம் நமது ஒளியை வைக்க வேண்டிய இடம் குறித்தும் கர்த்தர் ஆலோசனை வழங்குகின்றார். ஆகவே, நாம் நமது ஒளியை/விளக்கை மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைக்க வேண்டும். இந்தக் கடமை மற்றும் சிலாக்கியத்தின் விஷயத்தில், நாம் கர்த்தருக்காகக்கொண்டுள்ள பக்தி வைராக்கியத்திற்கு, இன்னும் அதிகமான புத்திமதி அவசியப்படாது. ஏனெனில், கர்த்தரைப் போன்றே ஆவியைக்கொண்டிருப்பவர்கள், இந்தக் கடமை மற்றும் சிலாக்கியத்தில் தங்களுக்கான போஜனத்தையும், பானத்தையும் அடைவார்கள். இவர்கள் தங்களுடைய இருளை மாற்றிப்போட்ட ஒளியை, அதாவது தேவனுடைய சத்தியத்தின் மற்றும் அவருடைய பரிசுத்த ஆவியின் ஒளியை, தங்கள் மூலமாக, மற்றவர்களுடைய இருளின்மேல் பிரகாசிக்கச்செய்வதில் மகிழ்ச்சிக்கொள்வார்கள்.
இவ்விதமாக பார்க்கும்போது, உலத்திற்குரிய ஆசீர்வாதக்காலத்திற்கு முன்னதாகவே தேவனுடைய ஜனங்களுடைய உப்பு மற்றும் வெளிச்சத்தின் வாயிலாக, உலகத்தார் மீது ஓரளவுக்கு ஆசீர்வாதம் வரவே செய்கின்றது. மேலும், இந்த யுகத்தினுடைய முடிவிலோ, நமது உப்பு மற்றும் வெளிச்சத்தினால் உண்டான பலனைப்பார்க்க முடியும். “”சமுதாயப் பண்பாட்டு உயர்வு” (Civilization) என்ற வார்த்தைக்குள் அடங்கும் பூமிக்குரிய வளர்ச்சிக்கான சகல ஆசீர்வாதங்கள், இந்தச் [R2100 : page 36] சுவிசேஷ யுகத்தில், பூமியின் உப்பாகவும், உலகத்திற்கு வெளிச்சமாகவும் இருந்துள்ள சொற்பமான ஜனங்களுடைய நேரடியான மற்றும் மறைமுகமான செல்வாக்கின் காரணமாகவே வந்தவை என்று நாம் கொஞ்சம் கவனித்துப்பார்ப்பதின் மூலம் அறிந்துக்கொள்ளலாம். தற்காலம் வரையிலும் உலகத்தில் இருந்த உப்பு மற்றும் வெளிச்சத்தினுடைய மறைமுகமான செல்வாக்கினுடைய விளைவே/பலனே “”சமுதாயப் பண்பாட்டு உயர்வாகும் (Civilization).” தேவனுடைய உண்மையான ஜனங்கள், தெய்வீகச் சத்தியத்தினுடைய வெளிச்சத்தை எவ்வளவுக்கு தங்களால் முடியுமோ, அவ்வளவாய் முதன்மையானதாக உயர்த்திப் பிடித்துள்ளனர். இதன் வாயிலாக இவர்கள் நீதியையும், வரவிருக்கின்ற நியாயத்தீர்ப்பையும் குறித்து முன்வைத்துள்ளனர். மேலும், இவர்கள் தங்களுடைய குணலட்சணங்கள் வெளிப்படுத்தின நீதியின் கொள்கைகள் பற்றின அறிவினாலும், அக்கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றுமாறு வலியுறுத்தினதாலும், தங்களால் முடிந்தமட்டும் மனிதர்களுடைய மனதில் உப்பிடுவதற்கு முயற்சித்துள்ளனர். மேலும், எந்தளவுக்கு இந்தக்கொள்கைகள் உலகத்தால் செயல்முறைப்படுத்தப்பட்டதோ, அவ்வளவாய்ப் பலனையும் அடைந்தது.
ஆதிமுதல், முடிவுவரை முன்னறிந்துள்ள கர்த்தர், தம்முடைய ஜனங்கள் தம்மோடுகூட வல்லமையிலும், மகா மகிமையிலும் உயர்த்தப்படுவதற்கான நியமிக்கப்பட்ட வேளைவருவதற்கு முன்புவரையிலும், தங்களிடத்திலுள்ள அனைத்து உப்பையும், ஒளியையும் கொண்டு, இப்பொழுது உலகத்திற்குச் செய்திருப்பதைக்காட்டிலும் அதிகம் செய்யமுடியாது என்று அறிவார். ஆனால், “”சமுதாயப் பண்பாட்டு உயர்வாகிய” இந்த வேலைகூட, சீர்த்திருத்தலுக்குரிய எதிர்கால வேலைக்கான ஆயத்தம்பண்ணுதல் எனும் விதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தேவனுக்கு முன்பாக இராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் காணப்படுவதற்கும், இயேசு கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரர் ஆகுவதற்குமென, கர்த்தருக்கென்று ஆயத்தமாய் இருக்கும் ஜனங்களைத் தெரிந்தெடுக்கும் இச்சுவிசேஷ யுகத்தின் விசேஷமான வேலைக்கு உதவியாகவும் காணப்படுகின்றது.
ஆகவே, தேவனுடைய வாக்குத்தத்தங்களைச் சுதந்தரிக்கப் போகின்றவர்களே, இராஜ்யத்தைக் கொடுப்பதற்கெனப் பிதா பிரியப்படுகின்றவர்களே, “”உங்களுக்குள் உப்புடையவர்களாய் இருங்கள்.” நீங்கள் உப்பிடப்பட்டவர்களாய் இருக்கின்றபடியால், நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கின்றீர்கள் என்பதையும், உங்கள் நடத்தை, அக்கிரமத்தைக் கண்டிக்கின்றது என்பதையும், நீங்கள் உப்புத் தன்மையில் தொடர்ந்து காணப்படுவது என்பது பரிசுத்தத்திற்கும், தெய்வீகக் கிருபையினுடைய வல்லமைக்கும் ஜீவனுள்ள சாட்சியாக உள்ளது என்பதையும் மறந்து விடவேண்டாம். செவிச்சாய்ப்பவர்களுக்கு ஆசீர்வாதமாகவும், செவிச்சாய்க்காதவர்களுக்கு எச்சரிப்பாகவும், சகல ஒளிக்கும் மகா மையமாக இருக்கும் தேவனுக்கு துதி உண்டாகவும் தக்கதாக ஒளி பரவிச்செல்லும் விதமாக தெய்வீகச் சத்தியம் மற்றும் அதன் பரிசுத்த ஆவியினுடைய ஒளியை, நம்முடைய சிட்சிக்கப்பட்டதும், திருத்தம்பண்ணப்பட்டதும், தூய்மையானதுமான குணலட்சணங்களில் பிரகாசிக்கின்ற ஒளிக்குவிமையத்திலிருந்து செலுத்த நாம் பிரயாசப்படுவோமாக.”