R3752 (page 105)
மத்தேயு 12:1-14
“”ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக” யாத்திராகமம் 20:8
ஓய்வுநாளைக் குறித்த சரியான கருத்துக்களைச் சொற்பமானவர்களே அறிந்திருக்கின்றனர். சிலர் தங்களை மோசேயின் பிரமாணத்திற்குக் கீழிருக்கும் யூதர்களாகக் கருதிக்கொள்கின்றார்கள். இன்னும் வேறு சிலரோ மறு எல்லைக்குப்போய், தாங்கள் பிரமாணங்களுக்குக் கீழிராமல், கிருபையின் கீழ் இருக்கின்றோம் என்று கூறி, ஓய்வுநாளின் காரியங்களை முற்றிலும் தள்ளிவிடுகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த இரண்டு எல்லைகளுக்கும்/கருத்துக்களுக்கும் இடைப்பட்ட கருத்தே சரியான கண்ணோட்டமாக இருக்குமென்று நாம் நம்புகின்றோம்.
தேவன் யூத தேசத்தாரை, அதாவது ஆபிரகாமின் பிள்ளைகள் அனைவரையும், யாக்கோபின் மூலமாக, உலகத்தில் தமக்குரிய விசேஷமான சம்பத்தாக ஏற்றுக்கொண்டார். இவர்களுடன் மோசேயின் வாயிலாக சீனாயில் தேவன் நியாயப்பிரமாண உடன்படிக்கையைச் செய்தார்; இவர்களிடம் தேவன் தம்முடைய தூதுவர்களாகிய தீர்க்கத்தரிசிகளையும், இறுதியில் தம்முடைய குமாரனையும் அனுப்பினார். இவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதன் மூலம் தேவனுடைய கிருபையில் நிலைத்திருப்பார்கள் என்றும், வியாதி, வலி, வறட்சி மற்றும் பஞ்சத்திற்குப் பதிலாக, ஜனங்கள், நிலம், மந்தைகள் மீது தெய்வீக ஆசீர்வாதம் நிலைத்திருக்கும் என்றும் இவர்களோடேயல்லாமல், மற்றபடி வேறு எந்தத் தேசத்தாரோடும் தேவன் தமது ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ளவில்லை. வேறு எந்தத் தேசத்தாருக்கும் சீனாயின் நியாயப்பிரமாணமும் கொடுக்கப்படவில்லை, உடன்படிக்கையும் பண்ணப்படவில்லை. “”பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்” (ஆமோஸ் 3:2).
யூதர்கள் இயேசுவைப் புறக்கணித்தப் பிற்பாடு, மற்றும் இயேசு சிலுவையில் நியாயப்பிரமாண உடன்படிக்கையை முடிவிற்குக்கொண்டு வந்த பிற்பாடு, சிலர் எதிர்மாறாக கற்பனை செய்துகொள்வது போன்று நியாயப்பிரமாணமானது, உலகத்தின் மற்றத் தேசத்தாருக்கு ஒன்றும் கொடுக்கப்படவில்லை. யூத தேசத்தார் மத்தியில் இருந்தும், மற்றத் தேசத்தார் மத்தியில் இருந்தும் தெரிந்தெடுக்கப்படும் கிறிஸ்துவின் பின்னடியார்களாகிய சபைக்கும் கூட நியாயப்பிரமாணத்தின் உடன்படிக்கைக் கொடுக்கப்படவில்லை. ஏனெனில், “”விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாக கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” ரோமர் 10:4. யாரெல்லாம் இந்தக் கருத்தை தெளிவாகப் புரிந்திருக்கின்றார்களோ, அவர்களே ஓய்வுநாளைக்குறித்தும், நியாயப்பிரமாணத்தின் மற்ற அனைத்து அம்சங்களைக்குறித்துமுள்ள சரியான கண்ணோட்டங்களுக்கான அஸ்திபாரத்தைப் பெற்றிருப்பார்கள்; மேலும் இக்கருத்தைப் புரிந்துக்கொள்ளாதவர்களே ஓய்வுநாளின் காரியங்களிலும் குழப்பத்துடனே காணப்படுவார்கள்.
யூதர்களின் ஓய்வுநாளையோ அல்லது வேறெந்த ஓய்வுநாளையோ ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா தேசங்களானது, தங்கள் ஜனங்கள் அநுசரிக்கும்படி நடைமுறைக்குக்கொண்டு வரலாமே? என்று நாம் கேள்வி கேட்பது நமக்கடுத்தக் காரியமல்ல. உண்மைதான், நாகரிக உலகமானது, “”கிறிஸ்தவ மண்டலம்” அதாவது கிறிஸ்துவின் இராஜ்யம் என்று அழைக்கப்படுகின்றது; ஆனால் இது ஒவ்வாத பெயராகும். பூமியின் இராஜ்யங்கள் இன்னமும் இவ்வுலகத்தின் லோகாதிபதியினுடைய ஆளுகையின் கீழேயே காணப்படுகின்றது (2 கொரிந்தியர் 4:4). இவைகள் இந்த உலகத்தின். இராஜ்யங்களே, மாறாக தேவனுடைய இராஜ்யங்கள் அல்ல. இந்த இராஜ்யங்கள் நிலவிக்கொண்டிருப்பதைத் தேவன் அறிந்தவராக இருக்கின்றார் என்பது உண்மைதான். மேலும், இந்த இராஜ்யங்களை ஒரு குறிப்பட்ட காலம் வரையிலும் தேவன் அனுமதித்துள்ளார்; ஆனால் இந்த இராஜ்யங்கள் மீது அதிகாரம் செலுத்த தேவன் ஒருபோதும் முயன்றதுமில்லை, இன்னுமாக இந்தப் பூரணமற்ற இராஜ்யங்களுக்கு தாம்தான் பொறுப்பாளி என்று நிலைநிறுத்திக் கொள்ளவுமில்லை; இந்த இராஜ்யங்கள், அவருடைய இராஜ்யங்கள் அல்ல. பரலோகத்தின் தேவன், ஆயிர வருஷம் அரசாட்சியின்போது, கிறிஸ்துவும், சபையுமாகிய, மகிமையடைந்திருந்த மேசியாவின் கரங்களைக்கொண்டு தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கும்போது, அந்த இராஜ்யத்தின் ஒழுங்குகளும், சூழ்நிலைகளும் இந்த உலகத்தின் இராஜ்யங்களுடைய சூழ்நிலைக்கு மிகவும் வேறுபாடாகக் காணப்படும். ஆகவேதான் ஓய்வுநாள் முதலியவைகளை உலகத்தின் தேசங்கள் அநுசரிக்கும்படி, தேவன் கட்டளையிடவில்லை; உலகத்தார் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இராதபடியினாலும், வேறெந்தப் பிரமாணங்களும் அவர்களுக்குக் கொடுக்கப்படாததினாலும், பிரமாணத்திற்கடுத்த விஷயங்களில் உலகத்தார் என்ன செய்தாலும், அது அவர்கள் கட்டளையிடப்படாமலேயே விருப்பம்கொண்டு செய்கிறதாக இருக்கும்.
இயேசு நியாயப்பிரமாண உடன்படிக்கையைச் சிலுவையின்மேல் ஆணியடித்து முடிவிற்குக்கொண்டு வந்தபடியால், அவருடைய பின்னடியார்களாகிய கிறிஸ்தவ விசுவாசிகள் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் இல்லை. மாறாக, அப்போஸ்தலர் குறிப்பிடும் வண்ணமாக, “”நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம்” (கொலோசெயர் 2:14; ரோமர் 6:14). மோசேயின் கரங்கள் மூலம் இஸ்ரயேலின் மீது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையின் காலத்திற்கு நிலவின உறவுமுறை போன்றே, தேவனிடத்திலான நம்முடைய உறவு காணப்படுகின்றது; அதாவது, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு அனுபவித்த அதே உறவுமுறை, அதாவது ஆபிரகாமின் உடன்படிக்கையினுடைய நிபந்தனையின் கீழுள்ள கிருபையின் உறவுமுறையையே நாம் தேவனிடத்தில் கொண்டுள்ளோம். நாம் வாக்குத்தத்தத்தின் உண்மையான சந்ததியாக இருக்கின்றோம் (கலாத்தியர் 3:29). நியாயப்பிரமாணம் இல்லாமலேயே ஆபிரகாமும், ஈசாக்கும் மற்றும் யாக்கோபும் செழித்தோங்குகினார்களா? ஆம்! அதே கிருபையின் சூழ்நிலைகளின் கீழ் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாலும் அதிகமதிகமாக செழித்தோங்கலாம். ஏனெனில், மாபெரும் மீட்பரிடத்திலும், இவரை மையமாகக் கொண்டுள்ள மகாமேன்மையான வாக்குத்தத்தங்களிடத்திலும் விசுவாசத்தின் மூலம் நமக்கிருக்கும் விசேஷமான உறவின் வாயிலாக அனைத்து வழிகளும்/காரியங்களும் இப்பொழுது நமக்கு மிகவும் அனுகூலமாய் உள்ளது; மீட்பருடைய மணவாட்டி வகுப்பாரின் அங்கங்களாகிய அவருடைய சரீரத்தின் அங்கங்களாக ஏற்றுக்கொள்ளப்படும் அனைவருக்கும் மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்கள் பொருந்தக்கூடியதாய் இருக்கின்றன.
[R3753 : page 105]
நியாயப்பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிவது தொடர்பான விஷயத்தில் நியாயப்பிரமாண உடன்படிக்கையினின்று விடுவிக்கப்பட்டாயிற்று என்று சொல்லப்படும் கருத்தின் நிமித்தம் சிலருக்கு அச்சம் ஏற்பட்டு விடுகின்றது. இப்படி அச்சம் கொள்பவர்களுக்கு, நியாயப்பிரமாணம் இல்லாமலேயே ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோபு கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் என்பதை நாம் நினைப்பூட்டுகின்றோம். இவர்கள் தேவனிடத்தில் கொண்டுள்ள விசுவாசமே, இவர்கள் அறிந்துக்கொண்டிருப்பற்கு ஏற்பவும் மற்றும் இவர்களால் முடிந்தமட்டும் இவர்கள் தெய்வீகச் சித்தத்தைச் செய்யும் கடமைக்குள்ளாக இவர்களைக் கொண்டுவருகின்றது; மேலும் இப்படியாகவே நம் விஷயத்திலும் காணப்படுகின்றது. ஏனெனில், நாம் தேவனுடைய பிள்ளைகளாக, அவருடைய குடும்பத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருடைய ஆவியின்/சிந்தையின் பங்காளிகளாக ஆக்கப்பட்டுள்ளதால், இதுமுதல் நம்முடைய செய்கைகள் அன்பால் ஆளப்பட வேண்டும்; மற்றும், நமக்கு அன்பே நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கின்றது. அதாவது, ஒருவேளை நாம் தேவனுடைய குடும்பத்திற்குள் அங்கம் ஆகுவதற்கெனப் புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றிருக்கின்றோம் என்றால், இது நாம் அன்பின் ஆவியைப் பெற்றிருக்கின்றோம் என்பதாக இருக்கும். ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கின்றார். மேலும், தேவன் பேரிலான இந்த அன்பு வளரும்போது இந்த அன்பானது, தேவனோடு இசைவாக வாழும் அனைவரின் பேரிலும் காட்டும் அன்பாகவும், மற்றும் தேவன் தம்முடைய அனைத்துச் சிருஷ்டிகள் மீதும் கொண்டுள்ள இரக்கத்துடன்கூடிய அன்பாகவும் காணப்படும். இத்தகைய அன்பானது, நம்மால் முடிந்தமட்டும் தெய்வீகச் சித்தத்திற்கு நாம் இசைவாகச் செயல்படுவதற்கும் நம்மை நடத்துகின்றது; நம்முடைய [R3753 : page 106] நோக்கங்கள் மற்றும் முயற்சிகளின் அடிப்படையில் நம்மைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கின்ற கர்த்தரானவர் மற்றும் நம்முடைய பூரணமற்ற தன்மைகளையும், வேண்டுமென்றே இல்லாத குறைவுகளையும் மூடிப்போடுகின்ற கர்த்தரானவர் நமது, இருதயத்தினுடைய இந்த ஊழியத்தையும், நோக்கத்தையும் தெய்வீகப் பிரமாணத்தினுடைய பூரணமான கைக்கொள்ளுதல்களாகவே கருதிக்கொள்கின்றார். “”மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார் (ரோமர் 8:4). நாம் எவ்வளவுதான் தெய்வீகப் பிரமாணத்திற்குரிய முழுமையான ஆவியில் குறைவுப்பட்டிருந்தாலும், நம்மால் முடிந்த மட்டிலுமான நம்முடைய அன்றாட பிரயாசங்கள் காணப்படும் பட்சத்தில், நாம் தெய்வீகப் பிரமாணத்தை முழுமையாய் நிறைவேற்றுகிறவர்களாகவே கருதப்படுகின்றோம்.
இந்தக் கண்ணோட்டத்தின்படி பார்க்கையில், தேவன் இப்பொழுது இஸ்ரயேலுடன் தொடர்பு வைக்கவில்லை என்பதும், அவர் தமக்கென வேறு எந்தத் தேசத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் நமக்கு விளங்குகின்றது. மாறாக, அவர் ஒரு புதிய தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். மேலும், இந்தப் புதிய தேசத்திற்கான குடிகளை அவர் அனைத்துத் தேசம், கோத்திரம், ஜனங்கள் மற்றும் பாஷைக்காரர்கள் மத்தியிலிருந்து சேர்த்துக் கொண்டிருக்கின்றார். இந்தப் புதிய தேசத்தார், சபையாக இருக்கின்றார்கள். இவர்களைக் குறித்தது, “நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துக்கொள்ளப்பட்ட சந்ததியாயும், இராஜரிகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்று அப்போஸ்தலர் கூறுகின்றார் (1 பேதுரு 2:9). இந்தப் புதிய தேசம் நிறைவடைந்து, மகிமையிலும், கனத்திலும், அழியாமையிலும் சென்று, பூமியின் குடிகள் அனைத்தையும் ஆளுகை செய்து, ஆசீர்வதித்து மற்றும் சீர்தூக்கி விடுவார்கள். தேவனுடைய வழிநடத்துதல்கள், போதனைகள், பரீட்சைகள் முதலியவைகள் இந்தப் புதிய தேசத்தின் (சபை) மீதே காணப்படுகின்றது; ஆம், நாம் பார்த்த வண்ணமாக, தேவன் மீதும், நம்முடைய அயலார் மீதும் காட்ட வேண்டிய அன்புக்கான பிரமாணத்தை அல்லாமல் வேறு எந்தப் பிரமாணத்தையும் தேவன் நம் மீது வைக்கவில்லை. இந்தப் பரிசுத்தமான தேசத்தின்/ஜாதியின் அங்கத்திற்குள் நாம் சேர்க்கப்படுவதற்கு முன்பு, அதன் அன்பின் பிரமாணத்தை நாம் ஏற்றுக்கொண்டு, சுயநலமானது அந்தகாரத்தின் கிரியையாக இருக்கின்றது என்றும் அடையாளம் கண்டுகொண்டிருந்தோம். மேலும், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் நாம் தேவனிடத்திலும், நம்முடைய அயலாரிடத்திலும் காட்ட வேண்டிய அன்பின் முழு அர்த்தத்தையும் நாம் அதிகமதிகமாகக் கற்றுக்கொண்டிருக்கின்றோம். இந்தப் படிப்பினைகள் தொடரும். ஆனாலும், இராஜ்யத்தின் அங்கங்களாக நாம் பரலோகத்திற்குரியதும், நித்தியத்திற்குரியதுமான ஸ்தானத்திற்கு மாற்றப்படுவதற்கு நாம் பாத்திரவான்களாகக் கருதப்படுவதற்கு முன்பு, இந்தப் படிப்பினைகள் ஒரு குறிப்பிட்ட நிறைவை அல்லது பலன் கொடுக்கின்ற நிலையை அடைய வேண்டும்.
மாம்சீக இஸ்ரயேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணமாகிய பத்துக்கட்டளைகள் முதலியவைகளோடு நமக்குத் தொடர்பு இல்லையா? இல்லை; நாம் நியாயப்பிரமாணத்தின்று விடுதலையுள்ளவர்களாக இருக்கின்றோம். தேவனுக்கு நன்றி! எனினும் நாம் விடுதலையாக்கப்பட்டுள்ள அந்த நியாயப்பிரமாணத்தை ஆராய்வதின் மூலம் நாம் மாபெரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில், இந்த நியாயப்பிரமாணமானது நீதியுள்ளது, பரிசுத்தமுள்ளது மற்றும் நல்லது என்று நாம் அறிந்துள்ளோம். மேலும், இந்த நியாயப்பிரமாணம் பூரணமற்றதாய் இருந்த காரணத்தினால், இது தள்ளி வைக்கப்படாமல், மாறாக மனிதன் பூரணமற்றவனாகவும், அதைக் கைக்கொள்ள முடியாதவனாகவும், அதன் வாயிலாக ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியாதவனாகவும் இருந்ததினாலேயே நியாயப்பிரமாணம் தள்ளிவைக்கப்பட்டது. ஆகையால், இந்தப் பூரணமான நியாப்பிரமாணத்தை நாம் ஆராய முற்படுகையில், அதன் வெளித்தோற்றத்தை மாத்திரமே நாம் அறிந்துக்கொள்வதற்கு நாடாமல், விசேஷமாக அதன் உள்ளான அர்த்தத்தை, அதன் ஆவியை அறிந்துக்கொள்வதற்கும் மற்றும் அதன் முக்கியத்துவமும், அது சுட்டிக்காட்டும் காரியமும் என்ன என்பதை அறிந்துக்கொள்வதற்கும் நாம் நாட வேண்டும். அதன் முக்கியத்துவத்தையும், அர்த்தத்தையும் குறித்து உறுதியடைந்த பிற்பாடு, புதிய சிருஷ்டிகளாகிய நாம் நம்முடைய பெலவீனங்கள், பூரணமற்ற தன்மைகள் மற்றும் வேண்டுமென்றே செய்யாத குறைபாடுகள் அனைத்தையும் தேவனுடைய ஆட்டிக்குட்டியானவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் ஈடு செய்துவிடுகின்றது என்பதை அறிந்த நிலையிலும் இந்த நியாயப்பிரமாணத்தின் ஆவி தொடர்பாக நாம் சேகரித்துள்ள ஆசீர்வாதத்திற்குரிய கருத்துக்கள் அனைத்தோடும் நம்முடைய ஜீவியங்களை இசைவாக வாழுவதற்கு நாம் நாடுகின்றவர்களாய் இருக்க வேண்டும்.
இதை நாம் செய்ய வேண்டும், ஆனாலும் இரட்சிப்படைவதற்கு என்று இதை நாம் செய்ய வேண்டியதில்லை; நாம் இரட்சிப்பு அடைந்தும், பாவங்கள் மன்னிக்கப்பட்டும், இன்னும் ஒருபடி மேலாக பரிசுத்த ஆவியினால் புதிய ஜீவனுக்கு, ஒரு புதிய சுபாவத்திற்கு ஜெநிப்பிக்கப்பட்டுள்ளபடியால், நாம் நம்மை நியாயப்பிரமாணத்தைக்கொண்டு நீதிமானாக்கிக்கொள்ள நாட வேண்டாம். ஏனெனில், நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கின்றோம். இப்பொழுதோ நாம் புதிய சிருஷ்டிகளாக நமது பரம பிதாவைப் பிரியப்படுத்த நாடுகின்றபடியால், தெய்வீகச் சித்தம் குறித்துத் தெளிவாகப் புரிந்துக்கொள்வதற்கும் மற்றும் தேவன் மீது காண்பிக்க வேண்டிய அன்பின் விஷயத்தில் நாம் நம்மால் முடிந்தமட்டும் எல்லாவற்றையும் வல்லமையோடு செய்வதற்கும் என, மாம்சீக இஸ்ரயேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணமானது நமக்கு வழங்கும் ஏதேனும் கருத்துக்களில் மகிழ்ச்சிக்கொள்கின்றவர்களாகவும் இருப்போம்.
இப்படியாக நாம் பத்துக் கட்டளைகளைப் பார்க்கும்போது, “”ஆம், இந்த நியாயப்பிரமாணங்கள் பூரணமானவைகள்தான்” என்று கூறுவோம்; மேலும் அவைகளை நாம் அதிகமதிகமாய் ஆராயும்போது, அவைகளுடைய முக்கியத்துவத்தின்/கருத்தின் ஆழத்தை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு, முதலாம் மற்றும் இரண்டாம் கற்பனைகளில், விக்கிரகங்களை உண்டுபண்ணி, அவைகளை வழிபடக்கூடாது என்று மாத்திரம் நாம் தடைப்பண்ணப்படாமல், தேவனுடைய இடத்தில் வேறெந்த ஒரு காரியத்தையும் வைக்கக்கூடாது, அதாவது, மனைவி (அ) பிள்ளைகள் (அ) செல்வம் (அ) சுயம் முதலியவைகளை வைக்கக் கூடாது என்றும் சரிசமமாகக் தடைப்பண்ணப்படுகின்றோம். இப்படியாகவே ஓய்வுநாள் தொடர்புடைய நான்காம் கட்டளையைப் பார்க்கும்போது, ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் தாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நாளுக்குக் கீழ்க்கட்டுண்டவர்களாக இல்லை என்பதை அறிந்துக்கொண்டாலும், அவர்கள், இந்தக் கட்டளையின் நோக்கம் (அ) ஆவி என்ன என்பதை அறிந்துக்கொள்வதற்கும், அந்த ஆவிக்கு இசைவுடன் காணப்படுவதற்கும் விரும்புவார்கள். மாம்சீக இஸ்ரயேலர்கள் இந்த மூன்று கட்டளைகளினுடைய வெளித்தோற்றத்தை மாத்திரமே அறிந்துக்கொண்டார்களே ஒழிய, அதன் உண்மையான கருப்பொருளை முற்றிலுமாகவே அறிய தவறிவிட்டார்கள்; மேலும் இவர்களைப் போலவே இன்றைய காலத்திலுள்ள அநேக கிறிஸ்தவர்களும் கூட, இந்தக் கட்டளைகளை, யூதர்களின் கண்ணோட்டத்தின்படியே மாத்திரம் பார்க்கிறவர்களாக இருந்து, அதன் உண்மையான தாழ்ப்பரியத்தைக் காண தவறிப்போகிறவர்களாக இருக்கின்றனர்.
ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய நாம் கர்த்தர் இயேசுவை நம்முடைய மீட்பராக, நமக்கு ஜீவன் அளிப்பவராக, நம்முடைய பாவத்திற்கான பரிகாரியாக ஏற்றுக்கொண்ட உடனே, நாம் பிரவேசிக்கும் விசுவாசமாகிய இளைப்பாறுதல் எனும் இந்த ஓய்வுநாளின் உண்மையான அர்த்தத்தை அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார். இந்த இளைப்பாறுதலுக்குள் நாம் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளோம் என நாம் நம்ப ஆரம்பிக்கும் பட்சத்திலும், மற்றும் நாம் கர்த்தருக்கு ஒருவேளை உண்மையாய் இருந்து, அவருடைய அன்பில் நிலைத்திருப்போமானால், நம்முடைய ஓய்வு ஒருபோதும் முடிவதில்லை. “”விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்” (எபிரெயர் 4:3).
விசுவாசம், வாரத்தின் அனைத்து நாட்களிலும் காணப்பட வேண்டும்; மேலும் இவ்விதமாக ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் ஒவ்வொரு நாளும் ஓய்வைக் கைக்கொள்கின்றனர். அதாவது, கிறிஸ்துவினால் முடிக்கப்பட்ட வேலையின் நிமித்தம் ஓய்வாகக் காணப்படுகின்றார்கள். அதாவது, நியாயப்பிரமாணம் மூலம் நம்மை நாம் நீதிமானாக்குவதற்கான அனைத்துப் பிரயாசங்களாகிய, நம்முடைய சொந்த வேலைகளிலிருந்து நாம் ஓய்வு அடைந்திருக்கின்றோம். நம்முடைய கர்த்தருடைய ஊழியம் அவருக்கு முடிவில்லாத ஓய்வாக இருந்தது அல்லவா? அதுபோல, இன்றைய கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் விசுவாசத்தின் மூலம் கர்த்தரில் இளைப்பாறினால், உலகத்திற்குள் நம்மை அவருடைய ஸ்தானாதிபதிகளாக அனுப்பி வைத்தவருடைய கிரியைகளைச் செய்ய நாமும் நாடினால், நமக்கும் ஒவ்வொருநாளும் (கர்த்தருக்கு இருந்ததுபோன்று) ஓய்வுநாளாக இருக்கும் அல்லவா? இவ்விதமாக ஜீவியத்தின் சகல வேலையும் நமக்குப் பரிசுத்தமானதாய்க் காணப்படும். நாம் புசித்தாலும் (அ) குடித்தாலும், எழுதினாலும் (அ) பேசினாலும், தூங்கினாலும் (அ) விழித்தாலும், அழுக்குகளைத் தேய்த்துக் கழுவினாலும் (அ) மண்ணைத் தோண்டினாலும், நாம் அனைத்தையும் தேவனுடைய மகிமைக்காகவே செய்கின்றோம்; அதாவது எதைச்செய்தாலும், அதைத் தேவனுக்கென்றே செய்வதுபோன்று செய்கிறவர்களாகவும் மற்றும் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் நாம் நம்முடைய இருதயங்களில் ஓய்வின் இளைப்பாறுதலைத் தக்க வைத்துக்கொள்கிறவர்களாகவும், அதாவது நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் கூடே உள்ள நமக்கான உறவின் காரணமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள தெய்வீக அன்பிலும், பராமரிப்பிலும் இளைப்பாறுதலைத் தக்க வைத்துக்கொள்கிறவர்களாகவும் நாம் காணப்பட வேண்டும்.
உண்மையான இளைப்பாறுதல் என்ன என்பதை அறிந்த நிலையிலும், அதனை அனுபவித்த நிலையிலும் காணப்படும் கர்த்தருடைய ஜனங்கள், கிறிஸ்தவ மண்டலத்தின் அமைதிகாலச் சட்டங்களின்படி நியமிக்கப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டுமா? என்ற கேள்விகள் எழும்பலாம்; மூன்று காரணங்களின் நிமித்தம் நம்முடைய பதில் ஆம் என்றே உள்ளது. அந்த மூன்று காரணங்களும் பின்வருமாறு:
(1) கிறிஸ்தவர்களாகிய நம்முடைய மனசாட்சிக்கு முரண்பாடாய்க்காணப்படாத மனித சட்டத்தின் எந்தக் கட்டளைகளுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும் என்பதே தெய்வீகக் கட்டளையாகக் காணப்படுகின்றது. மேலும், இந்த ஓய்வுநாள் குறித்த மனித சட்டமானது நம்முடைய மனசாட்சிக்கு முரண்பாடானதாக இல்லை என்பதையும் நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கின்றது.
(2) ஒருவேளை மற்ற ஜனங்களே தங்கள் வேலைகளிலிருந்து ஒருநாள் ஓய்ந்திருக்க முடிகின்றது என்றால், கர்த்தருடைய ஜனங்களாலும் அப்படிச் செய்ய முடியும். மேலும், இவர்கள் உலகத்தாரைக் காட்டிலும் அனுகூலமாய், ஒருநாள் ஓய்ந்திருக்க முடியும். ஏனெனில், நமக்குத் தேவனைக்குறித்தும், அவருடைய வார்த்தைகளைக்குறித்தும் உள்ள மேலான அறிவு இருக்கின்றபடியால், உலக வேலைகளிலிருந்து நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்த நேரத்தை நம்மால் ஞானமாகவும், சிறப்பாகவும் பயன்படுத்த முடியும்.
(3) உலகமும், பெயர்க் கிறிஸ்தவ மண்டலமும், ஓய்வுநாள் குறித்த விஷயத்தில் தவறு செய்துள்ளதாலும், மற்றும் யூத பிரமாணங்களுடைய கருத்தாகிய ஏழு நாட்களில் ஒன்றை மத ரீதியிலான ஓய்வுநாளாகக் கொண்டிருக்கும் கருத்தைக் கொண்டுள்ளதாலும், ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கு மிகுந்த நன்மை உண்டாகி உள்ளது. ஆகையால் உலகம் தவறு செய்தாலும், [R3753 : page 107]அறியாமையில் கட்டளையிட்டிருந்தாலும், அதனை தேவன் தம்மை அன்பு கூருகிறவர்களுக்கு நன்மைக்கு ஏதுவாக மாற்றியுள்ளார்.
ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள், தங்களுக்கு ஏழு நாட்களில், ஒரு நாளானது மாம்சீக வேலைகளினின்று விசேஷமான ஓய்வுக்காகவும், ஆவிக்குரிய வேலைகள், சந்தோஷங்கள் மற்றும் புத்துணர்வில் பங்குக்கொள்வதற்காகவும் அனுமதிக்கப்பட்டுள்ள சிலாக்கியத்தின் நிமித்தம் சந்தோஷங்கொள்வதோடு மாத்திரமல்லாமல், உலகம் தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றது என்றும், (கிறிஸ்தவ மண்டலத்தாரால், தெய்வீகக் கட்டளையாக வந்தது என்று அனுமானிக்கப்படும்) இந்த ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் சட்டத்தைத் தாங்கள் மீறும் காரியமானது, நன்மைக்கு ஏதுவாக தங்களுடைய செல்வாக்கைக் குறைத்துப்போடுவதாக இருக்கும் என்றும் அறிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே, உண்மையான ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் அனைவரும் தங்களுடைய அயலார்களைக் காட்டிலும் ஞாயிற்றுக் கிழமையை, ஓய்வுநாளாக அநுசரிக்கும் விஷயத்தில் கண்டிப்புடன் (அ) மிகுந்த கண்டிப்புடன் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய புத்திமதியாகும்; அதாவது மிகவும் அவசியம் வாய்ந்த காரியங்கள் அல்லது இரக்கம் காட்டும் வேலைகள் தவிர மற்றபடி உள்ள அனைத்து வேலைகளையும் நாம் அந்நாளில் தவிர்த்து, இந்த விலையேறப்பெற்ற நாளை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளாகவும்/உதவியாகவும் மற்றும் கிருபையிலும், அறிவிலும், அன்பிலும் வளருவதற்கான மாபெரும் சிலாக்கியமாகவும் மற்றும் வாய்ப்பாகவும் கருத வேண்டும் என்பதே நாம் அளிக்கும் புத்திமதியாகும். இந்த நியமிக்கப்பட்ட (ஞாயிற்றுக்கிழமை) ஓய்வின் நாளன்று நாகரிகமான தேசத்தில், நம்முடைய இல்லங்கள் மிகவும் அமைதியானதாக இருக்கக்கடவது; நாம் வசிக்கும் வீடுகளில்/இடங்களில் வேலை புரிகின்ற எவ்விதமான சத்தங்கள் (அ) லௌகீக இன்பங்களின் ஆரவார சத்தங்கள் இல்லாமல் இருக்கக்கடவது. ஆனால் நம்பிக்கையின், அன்பின், விசுவாசத்தின் சந்தோஷங்கள் பெருகக்கடவது. மேலும், நம்முடைய மகிழ்ச்சியான இருதயங்கள் நம்முடைய மகிழ்ச்சிகரமான வார்த்தைகளிலும், தொனிகளிலும், பார்வைகளிலும் வெளிப்படக்கடவது; இவ்விதமாக, கர்த்தருக்குள் நாம் கொண்டிருக்கும் நம்முடைய மகிழ்ச்சியும், நம்முடைய தன்னடக்கமும், நம்மோடு காணப்படும் அனைவருக்கும் வெளியரங்கமாகி, அவர்கள் நாம் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்றும், அவரிடமிருந்து கற்றுக்கொண்டவர்கள் என்றும் அறிந்துக்கொள்வார்கள். “”பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும், பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்று அறிந்துக்கொண்டார்கள்” (அப்போஸ்தலர் 4:13). நாம் மிகவும் நெருக்கமாய்க் காணப்படும் நம்முடைய நண்பர்கள் மற்றும் அயலகத்தாரிடம், நம்முடைய கண்ணோட்டத்தின்படி, ஒவ்வொரு ஓய்வுநாளும் விசுவாசத்தில் இளைப்பாறும் ஓய்வுநாளாகக் காணப்படுகின்றது என்று விவரிக்கலாம்; இன்னுமாக நாம் அழிந்துபோகக்கூடிய மாம்சீக உணவுகளுக்காக வேலை செய்வதற்குச் சில நாட்கள் அவசியப்பட்டாலும், நம்முடைய இருதயங்கள் ஓய்வுநாளுக்குரிய மாபெரும் கர்த்தரிலும், அவர் நிறைவேற்றின வேலையிலும் இன்னமும் இளைப்பாறிக் கொண்டுதான் இருக்கின்றது என்றும் விவரிக்கலாம்.
இன்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் நாம், யூதர்கள் செய்ய வேண்டும் என்று அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட நியாயப்பிரமாணத்தினுடைய வெளித்தோற்றமான அனைத்துக் காரியங்களுக்கும் நாம் இசைவாகக் காணப்பட முற்படுவது என்பது நமக்கான காரியமல்ல. உதாரணத்திற்கு ஒரு நான்கு சக்கர வண்டியை (Car), ஓய்வு நாளன்று ஓட்டிக்கொண்டு செல்வது என்பது நான்காம் கட்டளையை (யூதர்கள்) மீறுவதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை; ஒருவேளை யூதர்களுடைய நியாயப்பிரமாணமானது நம் மீது ஆளுகை கொண்டிருக்குமாயின், நாம் நான்கு சக்கர வண்டியை ஓட்டிச்செல்வதும், அதில் அமர்ந்து பிரயாணம் பண்ணுவதும் முற்றிலும் தவறாகவும், பாவச் செயலாகவும் காணப்படும். ஆனால் நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ்க் காணப்படாமல், கிருபையின் கீழ்க் காணப்படுகின்றபடியாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் வண்டியில் பிரயாணம் பண்ணுவதைச் சட்டங்கள் தடைப்பண்ணாததாலும், அது உடன் மனிதர்களால் தீமை என்று கருதப்படாததாலும், [R3754 : page 107] பிரயாண விஷயத்திலும் சரி, இதுபோன்ற மற்ற விஷயத்திலும் சரி, நாம் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாளில் பிரயாணத்திற்குரிய சொகுசுகளின் நன்மையைப் பயன்படுத்துவதில் தவறில்லை.
நம்முடைய பாடம், யூதர்களுடைய நியாயப்பிரமாணம் நடைமுறையில் காணப்பட்ட காலம் சம்பந்தமானது. மேலும், இன்றைய காலங்களில் யூத போதகர்களால் ஒருமனப்பட்டு வலியுறுத்தப்படும் மிதமிஞ்சின அனுசரிப்புகளைக் காட்டிலும், அன்றைய காலக்கட்டத்தில் நான்காம் கட்டளைக்குக் காணப்பட்ட சரியான விளக்கம், நாம் அக்கட்டளையை அனுசரிக்கும் விதத்திற்கு மிகவும் இசைவாகக் காணப்படுகின்றது. அன்றைக்கும், இன்றைக்கும் இடையே காணப்பட்ட வித்தியாசம் என்னவெனில், அன்று நியாயப்பிரமாணத்தின் கீழ்க் காணப்பட்ட யூதர்கள் ஓய்வுநாளில் எவ்விதமான உலகத்திற்குரிய வேலைகளும் செய்யக்கூடாது என்று தடைப்பண்ணப்பட்டிருந்தார்கள். ஆனால், இன்று நாமோ நம்முடைய ஆவிக்குரிய சிலாக்கியங்களை முழுமையாக, அதிகமாக அனுபவிப்பதற்கு ஏதுவாக நாமே விலகிக்கொள்ள விரும்பும் பூமிக்குரிய வேலைகள் மற்றும் பூமிக்குரிய சட்டங்கள் சொல்லும் வரையறைகள் தவிர மற்றபடி நமக்கு எத்தகைய தடையும் விதிக்கப்படவில்லை.
இயேசுவும், அவருடைய சீஷர்களும் கோதுமை வயலின்வழியே காணப்பட்ட பொது வழியில் நடந்துக்கொண்டு சென்றிருந்தார்கள். பயிர்கள் கிட்டத்தட்ட முதிர்ந்த நிலையை அடைந்திருந்தது. சீஷர்கள் பசியாக இருந்ததின் நிமித்தம் கொஞ்சம் கதிர்களைக் கொய்து எடுத்து, கோதுமையைப் புசிக்கும் வண்ணமாக அதின் உமியை அகற்றும்படிக்கு கோதுமை மணிகளைத் தங்கள் கைகளுக்கிடையே தேய்த்தார்கள். பரிசேயர்கள் தெய்வீகமான நியாயப்பிரமாணத்தின் உள்காரியங்களைக் காட்டிலும், அதன் வெளிக்காரியங்களை அறிந்திருந்தவர்களானபடியால், நியாயப்பிரமாணத்தின் உண்மையான சாரத்தை (அ) ஆவியை முற்றிலும் அறிய தவறியும், அதைப் புறக்கணித்தும் இருந்து, அதை வெளித்தோற்றமாக அனுசரிக்கும் விஷயத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர்களாகக் காணப்பட்டார்கள். ஆகவே இயேசுவின் சீஷர்களை, நியாயப்பிரமாணத்தை மீறினவர்களாகவும், இயேசு அவர்களுடைய போதகராக இருந்தும், அவர்களை அவர் கடிந்துகொள்ளவில்லை என்பதாகவும் குற்றம் சாட்டிக்கொண்டு, தங்களுடைய மத பக்தியை வெளிக்காட்டுவதற்குமான வாய்ப்பு இப்பொழுது கிடைத்துள்ளது என்று பரிசேயர்கள் எண்ணிக்கொண்டார்கள். இதே ஆவியை, இன்றும் அடிக்கடி நம்மால் பார்க்க முடிகின்றது. இன்றைய நாட்களில் சிலர் ஓய்வுநாளன்று தாங்கள் வண்டியில் பயணம் செய்யக்கூடாது என்ற விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கின்றார்கள். ஆனால், இவர்கள் தங்களுடைய மனங்களை உலகக்காரியங்களுக்குப் பின் அலைப்பாய விடுவதோடு மாத்திரமல்லாமல், மிகவும் மோசமாக தீமையான காரியங்களில் அல்லது அன்றைய தினத்தில் தங்களுடைய அயலாரைக்காட்டிலும் எப்படித் தாங்கள் முந்திக்கொள்ளலாம் என்பது தொடர்பான திட்டங்களில் அலைப்பாய விட்டுவிடுகின்றார்கள். இது மாய்மாலமாகும், மேலும் இது தெய்வீகக் கண்ணோட்டத்தின்படி மோசமான பாவங்களாகவும் உள்ளது.
தேவனிடத்திலும், மனுஷரிடத்தில் காண்பிக்கப்பட வேண்டிய/செய்யப்பட வேண்டிய நியாயப்பிரமாணத்தின் உண்மையான சாரத்தை யூதர்கள் புறக்கணித்து, தேவையற்ற விஷயங்களில் நியாயப்பிரமாணத்தை அவர்கள் மிகைப்படுத்தின காரியங்கள் நமக்கு உண்மையில் வேடிக்கையாக இருக்கின்றது. உதாரணத்துக்கு, இந்த ரபிகளின் சட்டத்தின்படி கொசுவை அடிப்பது என்பது வேட்டையாடுவதற்குச் சமமாக இருக்கின்றது; ஆகையால் இக்காரியம் ஓய்வுநாளன்று தடை பண்ணப்பட்டுள்ளது. இன்னுமாக, இரண்டு உள்ளங்கைகளால் கோதுமை மணியின் உமி தேய்த்து உரிக்கப்பட்டு ஊதிவிடப்படுவது என்பது கோதுமையைப் புடைப்பதற்கும், கதிரடிப்பதற்கும் சமமாய் இருப்பதினால், இக்காரியம் ஓய்வுநாளின் ஓய்வை மீறுவதாக மிகைப்படுத்தப்பட்டது. நமது கர்த்தர் இவர்களுடைய இக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாமல், மாறாக தம்முடைய சீஷர்கள் செய்த காரியம் தவறல்ல என்றும், தம்மால் அங்கீகரிக்கப்படுவதோடு கூட, இந்தப் பரிசேயர்கள் அங்கீகரிக்கும் சில பிதாக்களின் செயல்பாடுகள் மூலமாகவும் சீஷர்கள் செய்த காரியம் தவறல்ல என்றும் நமது கர்த்தர் சுட்டிக்காட்டினார். தேவை மற்றும் இரக்கத்திற்கான உதாரணமாக ஆசாரியர்கள் மாத்திரமே புசிக்கக்கூடிய தேவசமூகத்தின் அப்பத்தை, தாவீது புசித்த சம்பவத்தை நமது கர்த்தர் எடுத்துக்கொண்டார்; தாவீது பசியாய் இருந்தபடியால் இப்படியாகச் செய்துகொண்டார். இன்னுமாக ஆசாரியர்களும், லேவியர்களும், ஒவ்வொரு ஓய்வுநாளிலும், யூதர்களுடைய தேவாலயத்தில் ஆராதனை தொடர்பான விஷயங்களில் வேலை செய்வதையும் நமது கர்த்தர் உதாரணமாகச் சுட்டிக்காண்பித்தார். இப்படியான அங்கீகரிக்கப்பட்டக் காரியங்கள் ஓய்வுநாளின் சரியான கோட்பாடுகளைக் காட்டுகின்றது என நமது கர்த்தர் முன்வைத்தார். பயிர்களை ஓய்வுநாளன்று அறுவடை செய்வதோ, புடைப்பதோ, கதிரடிப்பதோ சரி என்று நமது கர்த்தர் சொல்ல முற்படாமல், பசியை ஆற்றுவதற்கான காரியங்களில், அதாவது அப்போஸ்தலர்கள் தங்கள் பசியை ஆற்றுவதற்கு இப்படிச் செய்த காரியங்களில், அவர்கள் ஓய்வுநாளில் வேலை செய்துவிட்டார்கள் என்ற விளக்கங்களைக் கொண்டுவந்து நுழைத்து, அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என்றும், ஓய்வுநாளின் கட்டளைகளை மீறிவிட்டார்கள் என்றும் சொல்லப்படக்கூடாது என்பதே நமது கர்த்தரின் வாதமாக இருக்கின்றது.
வேதவாக்கியங்களைக் கொண்டு, பரிசேயர்களின் கூற்றுகள் ஏற்கப்பட முடியாது என்று அவர்களிடம் நமது கர்த்தர் வலியுறுத்தின பிற்பாடு, நியாயப்பிரமாணத்தின் அர்த்தத்தை விளக்கிக் கூறுவதற்கான தம்முடைய அதிகாரத்தைக்குறித்து நமது கர்த்தர் அவர்களிடம் கூறினார். “”தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்றார். ஒருவேளை ஓய்வுநாளில் ஆலயத்தின் பணிகளை, லேவியர்கள் செய்வதே சரி என்றால், இயேசு இந்தத் தேவாலயத்தைக் காட்டிலும் பெரியவராகவும், தேவனுடைய குமாரனாகவும், தேவனுடைய பிரதிநிதியாகவும் இருக்கின்றபடியால், அவருடைய சீஷர்கள் அவரால் அங்கீகரிக்கப்பட்ட எதையும் மற்றும், அவருக்கான ஊழியத்திற்கென்று எதையும் கவலையின்றிச் செய்யலாம். நமது கர்த்தர் தம்முடைய சத்துருக்கள் முன்பு இப்படியாக அவருக்கு எதிர்ப்பேச்சுப்பேச முடியாத அளவுக்குச் சொல்வன்மையுடையவராகத் திகழ்வதிலிருந்து, அவர் எப்படிப்பட்ட தனித்துவமான சிறப்புப் பெற்றிருக்கும் மனிதனாக இருந்திருக்கக் கூடும் என்பது நமக்குத் தெரிகின்றது. எந்த ஒரு மனுஷனும் பேசாததுபோல் நமது கர்த்தர் பேசினவராக இருந்ததோடல்லாமல், அவருடைய தோற்றம் கூட விழுந்துபோன இனத்தின் அங்கங்களைக்காட்டிலும் தலைச்சிறந்ததாகவும் இருந்திருக்க வேண்டும் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.
“”மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்” (மத்தேயு 12:8). இயேசு ஓய்வுநாளின் ஆண்டவராகவும், மாபெரும் போதகராகவும் இருந்தபடியால், [R3754 : page 108] நியாயப்பிரமாணத்தின் விஷயங்களை இவர் நிறைவேற்றுவதன் மூலம், அதைச் சிலுவையில் அறைந்துப்போட்டு, நியாயப்பிரமாணத்தையும், இந்த ஓய்வுநாள் எனும் அம்சத்தையும் ஒழித்துப்போடுவதற்கு மாத்திரம் அவர் அதிகாரம் கொண்டவராய் இராமல் மாறாக ஓய்வுநாளின் ஆண்டவராகிய இயேசு, சரியான போதகராகக் காணப்பட்டு, நியாயப்பிரமாணத்தின் உண்மையான அர்த்தத்தையும் யூதர்களுக்கு முன்வைக்கின்றவராகவும் இருந்தார். “”பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்” என்ற காரியங்களைக் கர்த்தர் நமது கவனத்திற்குக் கொண்டு வந்தார் (ஓசியா 6:6). மேலும் ஒருவேளை ஓசியா 6:6-ஆம் வசனத்தின் இரக்கம் எனும் காரியத்திற்குப் பரிசேயர்கள் தங்கள் எண்ணங்களைத் திருப்பியிருந்திருப்பார்களானால், இவர்களுடைய எண்ணங்கள் மிகவும் இசைவானதாகவும் காணப்பட்டு, ஓய்வுநாளின் கட்டளையை மீறவில்லை என்று கர்த்தர் அறிக்கைப் பண்ணிக்கொண்டிருக்கும் தமது சீஷர்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பிடாதவர்களாகவும் இருந்திருப்பார்கள் என்றார் கர்த்தர்.
இன்றைய நாட்களிலும் கூட குற்றம் கண்டுபிடிப்பவர்களிடமும், குறைகளை விமர்சனம் பண்ணுகிறவர்களிடமும், இரக்கமும், அன்பும் குறைவாகக் காணப்படுகின்றது. அன்பே நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாய்க் காணப்படுகின்றது. மேலும், யாரிடம் அன்பு அதிகமாக உள்ளதோ, அவர்களே (தேவையான) நிலைப்பாட்டை/உயர்வை எட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். நம்முடைய நண்பர்களிடமும், சகோதர சகோதரிகளிடமும், உலகத்தாரிடமும், நம்முடைய சத்துருக்களிடமும் நாம் காண்பிக்கும் இரக்கமானது, நம்மிடம் அன்பு இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. இயேசு ஜெப ஆலயத்தில் சென்றபோது, அங்கும் இதே கேள்வி கேட்கப்பட்டது. அங்குச் சூம்பின கைகளையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான், மேலும் இயேசுவைச் சிக்க வைக்கும் வண்ணமாக, ஓய்வுநாளன்று இம்மனுஷனைச் சுகப்படுத்துவது சரியான காரியமாக இருக்குமா என்று பரிசேயர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்டார்கள். பரிசேயர்களுக்கு வேறு வழியில்லாமல் இருந்தபடியால், அவரை ஏதாகிலும் குற்றம் சாட்ட நாடினார்கள்; அவருடைய சீஷர்களுக்காக அவர் வாதம் பண்ணி முடிந்தாகிவிட்டது, இப்பொழுது இயேசு தாமே ஓய்வுநாளில் அம்மனுஷனைச் சொஸ்தப்படுத்தும் காரியத்தில் இறங்குவாரா? எனப் பரிசேயர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
தேவனுடைய கணிப்பில் பலியைப் பார்க்கிலும் இரக்கம் செய்தலே முக்கியம் என்பதைக் கர்த்தர் கோடிட்டுக் காட்டி, வியாதியடைந்திருந்த மனுஷனுக்கு இரக்கம் காட்டும் செயலில் இறங்கினார். முதலாவதாக, பரிசேயர்களுடைய சொந்த வாழ்க்கையின், நடத்தையின் மூலமாகவே அவர்கள் முரண்பாடாகக் காணப்படுகின்றார்கள் என்பதை அவர்களுக்குக் காட்டினார்; ஒருவேளை அவர்களிடம் ஓர் ஆடு மாத்திரமே இருந்தது என்றால், அது ஓர் ஓய்வுநாளின் போது குழிக்குள் விழுந்துவிட்டது என்றால், அந்த ஆட்டின் மீதான அன்பின் காரணமாக அல்லாமல், அதன் இழப்பு, மதிப்பீடு குறித்த அச்சத்தின் காரணமாக அது காப்பாற்றப்படும் என்றார்.
“”ஆட்டைப் பார்க்கிலும் மனுஷன் எவ்வளவு விசேஷித்தவன்?” என்று நமது கர்த்தர் கேட்டார்; இன்னுமாக, “”ஓய்வுநாளன்று நன்மை செய்வது நியாயம்தானே?” என்றும் நமது கர்த்தர் கேட்டார். மனுஷன், மிருகத்தைப் பார்க்கிலும் விசேஷித்தவனா என்ற கேள்விக்கு உலகத்தார் பதில் கூறத்தயங்குவார்கள்/கஷ்டப்படுவார்கள்; ஆனால், ஆவிக்குரிய இஸ்ரயேவர்களாகிய கர்த்தருடைய ஜனங்கள் இக்கேள்விக்கு உடனடியாகப் பதில் கொடுத்துவிடுவார்கள். தேவனுடைய கிருபையினால் கர்த்தர் தம்மையே மனுஷனுக்கான ஈடுபலியாகக் கொடுத்தபோது மனுஷனுடைய முக்கியத்துவம் என்ன என்பதை நமக்கு முன் வைத்தார். ஆகையால், கர்த்தருடைய ஆவியைப் பெற்றுக்கொள்பவர்கள், பூமிக்குரிய (அ) ஆவிக்குரிய விஷயத்தில், தனக்கடுத்த மனுஷனுக்கு விடுதலை அளிப்பதற்குத் தாங்கள் செய்யும் எக்காரியங்களும் தங்களுக்கான சிலாக்கியம் என அதிகமதிகமாக எண்ணிக்கொள்ள வேண்டும்.
பரிசேயர்களுக்கு எல்லா கட்டங்களிலும் பதில் கொடுக்கப்பட்டது. மேலும், மாபெரும் போதகராகிய கர்த்தருடன் தங்களுக்கு ஏற்படும் மோதலின் நிமித்தம், ஜனங்கள் முன்னிலையில் தங்களுக்கான செல்வாக்கின் மதிப்புக் குறைந்து போவதைப் பரிசேயர்கள் உணர்ந்துக்கொண்டார்கள். ஆகவே, இயேசு தம்முடைய வார்த்தையினால் சூம்பின கரங்களையுடைய மனுஷனைச் சொஸ்தப்படுத்தினபடியால், அவரை அழித்துப் போடும்படிக்கு ஆலோசனைச் செய்வதற்கென, ஜெப ஆலயத்தைவிட்டுக் கோபத்துடன் வெளியேறினார்கள். இவர்கள் தங்கள் முக்கியத்துவத்தைக் கருதினவர்களாக இருந்தார்கள். இவர்கள் தங்களுடைய மதிப்பைக் களங்கப்படுத்தும் எச்செயலானாலும் சரி, அது கர்த்தருக்கும், அவருடைய நோக்கத்திற்கும் பாதிப்பை உண்டுபண்ண வேண்டும் என்று விரும்பினார்கள். மேலும், இவர்கள் தாங்கள்தான் பாரம்பரியமான கூட்டத்தாராக இருக்கின்றபடியால், தங்களுக்கு ஒத்துப்போகாத வார்த்தைகளையும், நடத்தைகளையும் உடையவருடைய செல்வாக்கானது இஸ்ரயேல் முழுவதும் பரவாமல் இருப்பதற்கென அவரைக் கொன்றுபோடுவது சரியானக்காரியமே என்றும் எண்ணினார்கள். இதேபோன்ற ஆவி, இன்றும் காணப்படுகின்றது; மதத்திற்காக வெளித்தோற்றமான வைராக்கியங்கொண்டுள்ள அநேக ஜனங்கள் மத்தியிலேயே, நாம் காணப்படுகின்றோம். இவர்கள் அன்பிலும், இரக்கத்திலும் மிகவும் குறைவுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் அமைப்பின்/ஸ்தாபன பிரிவின் ஆவியினால் மிகவும் ஆட்கொள்ளப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். மேலும், ஆண்டவருடைய சரீரத்தின் அங்கங்கள் முன்வைக்கும் சத்தியமானது, அமைப்பின் ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டுள்ள இவர்களின் கனத்தையும், உலகத்தின் முன்பான இவர்களுடைய அந்தஸ்தையும் குறைவுபடுத்தும் பட்சத்தில், ஆண்டவருடைய சரீரத்தின் அங்கங்களை இவர்கள் துன்பப்படுத்தவும் விரும்புவார்கள். அன்பான நண்பர்களே, நாம் ஆண்டவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கர்த்தருடனான நம்முடைய உறவைப் புரிந்தும், உணர்ந்தும் கொண்டு, நியாயப்பிரமாணத்தின் சாரத்திற்கு/ஆவிக்குக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருக்கக்கடவோம்.”