R5358 (page 359)
“நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன். . . அவர்களும் ஒன்றாயிருக்கும்படி . . . நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும் . . . வேண்டிக்கொள்ளுகிறேன்.”― யோவான் 17:9, 20-23.
இந்த வசனங்களின் வார்த்தைகளானது, நமது காத்தர் காட்டிக்கொடுக்கப் பெற்ற இரவில், பஸ்கா அனுசரிக்கப்பட்ட “”மாடி வீட்டறையிலிருந்து,” கெத்செமனே தோட்டத்திற்குப் போகிற வழியில், கர்த்தரினால் உரைக்கப்பட்ட வார்த்தைகளாக இருக்க வேண்டும். அவர் பதினோரு அப்போஸ்தலருக்குத்தான் இங்கு ஜெபம் ஏறெடுத்திருக்க வேண்டும். ஏனெனில், இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கர்த்தர், “”கேட்டின் மகன் கெட்டுப் போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை” என்று கூறினார் (யோவான் 17:12). ஆனால் நம்முடைய ஆதார வசனத்தின்படி, அவருடைய ஜெபமானது, சுவிசேஷ யுகம் முழுவதும் வரும் அவருடைய உண்மையுள்ள பின்னடியார்களை உள்ளடக்கி இருந்தது. “”நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:20). தாமும், தம்முடைய பிதாவும் ஒன்றாய் இருப்பது போன்று, அதாவது ஒத்த மனமுடையவர்களாய் இருப்பதுபோன்று, தம்முடைய பின்னடியார்களும் ஒன்றாய் இருக்கும்படிக்குக் கர்த்தர் ஜெபம் பண்ணினார்.
இவ்வசனமானது, கர்த்தர் இயேசுவும், பிதாவும் நபரில் ஒருவராக இல்லை என்பதற்கான சிறந்த நிரூபணமாக இருக்கின்றது. சபை அனைவரும், ஒரு நபராக இருக்கும்படிக்குக் கர்த்தரினால் ஜெபம் ஏறெடுக்க முடியாது. அது சித்தத்தில் ஒருமைப்பாடும், சித்தத்தில் முழுமையான இசைவும், நோக்கத்தில் ஒருமைப்பாடும் ஆகும். “”என் சித்தம் அல்ல, மாறாக உம்முடைய சித்தமே நடக்கக்கடவது” என்று கர்த்தர் கூறினார். கர்த்தர் இப்படியாகப் பிதாவுடனும், பிதாவின் சித்தத்துடனும், பிதாவின் திட்டத்துடனும் முழுமையான ஒருமைப்பாட்டிற்குள்ளாகவும், இசைவிற்குள்ளாகவும் வந்தார். இது ஒன்றுபடுவதற்கென ஒருவருக்கொருவர் தங்களது சில உரிமைகளை விட்டுக்கொடுக்கும், பரஸ்பர விட்டுக்கொடுத்தல் அல்ல.
உலகத்தின் இரட்சகராகவும், புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகவும் அவர் ஆகுவதற்கு முன்னதாக, மனுக்குலத்தின் உலகத்தினைக் கையாளும் விஷயத்தில் அவரது முதல் வேலை, சபையைத் தெரிந்துக்கொள்ளுதலாகும். இந்த வேலையைத்தான் கர்த்தர் இப்பொழுது ஆரம்பித்துள்ளார்; மற்றும் அவர்களிடம் சாட்சியை அளிக்கின்றார். சபை முழுவதும் நோக்கத்தில் ஒருமைப்பாடு கொண்டவர்களாகவும், தம்முடைய சித்தத்துடன் ஒருமைப்பாடு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டுமெனக் கர்த்தர் விரும்புகின்றார். மேலும் இப்படியாக சித்தத்தில் ஒருமைப்பாடு என்பது, நம்முடைய சித்தத்தை முழுமையாய் ஒப்புக்கொடுப்பதாகிய, ஒரே வழியின் மூலமாகவே அடையப் பெறக்கூடிய காரியமாக இருக்கின்றது; இந்த ஒப்புக்கொடுத்தல் என்பது வேதவாக்கியங்கள் தெரிவிப்பதுபோல, மரித்துப் போகிறவர்களாய் ஆகும்போது செய்யப்படுகின்றதாய் இருக்கின்றது.
ஒரு மனுஷன் (அ) மனுஷியைப் பொறுத்தமட்டில், அவர்களது சித்தம் என்னவாக இருக்கின்றதோ மற்றும் அந்தச் சித்தமானது சரீரத்தையும், சூழ்நிலையையும் கொண்டு என்ன நிகழ்த்துகின்றதோ, அது அம்மனுஷனுடைய இயல்பாக இருக்கின்றது. ஆகவே நம்முடைய சீஷத்துவத்தின் ஆரம்பத்திலேயே, பார்க்கப்பட வேண்டிய முதல் காரியம், நாம் நம்முடைய சித்தங்கள் தொடர்புடைய விஷயத்தில் மரித்துவிட்டோமா என்பதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் ஜீவனுடையவர்களாக இருக்கின்றோமா என்பதும்தான்; இப்படியாகச் செய்கிறவர்கள் அனைவரையும் அவர் புதிய சிருஷ்டிகளென அழைக்கின்றார். அவர் அவர்களுக்குப் புதிய மனம், புதிய சித்தம் காணப்படத்தக்கதாக, அவர்களுக்குப் பரிசுத்த ஆவியை அருளுகின்றார். அவர்கள் எந்தளவுக்குப் புதிய மனதை, புதிய சித்தத்தை உடையவர்களாய் இருக்கின்றார்களோ, அவ்வளவாய் ஒருவரோடு ஒருவருக்கு ஒருமைப்பாடும் காணப்படும்.
தேவனுடைய ஜனங்கள் மத்தியில் வாக்குவாதம் உருவாகுவதற்கான காரணம், ஒன்றில் உண்மையில் குறைபாடாக அல்லது அறிவில் குறைபாடாக இருக்க வேண்டும். ஒருவேளை உண்மையில் குறைவுப்பட்டிருந்தால், அவர்கள் படிப்படியாக பின்னாக இழுக்கப்பட்டுப் போய்விடுவார்கள். தேவன் தம்முடைய குடும்பத்தார் எவரிடமும், வற்புறுத்துதலைக் காண்பிப்பதில்லை. தம்மை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்பவர்களையும், அனைத்து விஷயங்களிலும் உண்மையுள்ளவர்களையும் தேவன் தெரிந்தெடுக்கின்றார். இந்த முழுச் சுவிசேஷ யுகத்தையுமே, தேவன் இந்த வகுப்பாரைத் தெரிந்தெடுக்கும் நோக்கத்திற்காகவே ஒதுக்கியுள்ளார். இந்தத் தெரிந்தெடுக்கும் வேலையானது கிட்டத்தட்ட 19 நூற்றாண்டுகளாக நடைப்பெற்றுக் கொண்டு வருகின்றது. இந்த வகுப்பார் சிறுமந்தையினராக இருப்பார்கள் இவர்கள் மிகவும் தெரிந்தெடுக்கப்பட்ட வகுப்பாராகவே இருப்பார்கள். இவர்கள் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கும்படிக்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றனர்.
அநேகருக்கு அந்த வழியில் நடப்பதற்கும், உலகத்தைக் குப்பையும், தூசியுமாக எண்ணுமளவுக்கும், தேவனிடத்திலும், நீதியனிடத்திலும் உண்மை கொண்டிருப்பதில்லை. உண்மையற்றவர்கள் (உண்மையுள்ளவர்களை விட்டு) இடம் விட்டுப் போய்விடும்போது, உண்மையுள்ளவர்கள் (ஒருவருக்கொருவர்) அதிகமதிகமாய் ஒன்றாய் ஈர்க்கப்பட்டு காணப்படுகையில், இந்த உண்மையுள்ளவர்கள் மத்தியில் அதிகமதிகமாய் ஒருமைப்பாடு காணப்படும். இது எல்லா காலத்திலும், எல்லா தேசங்களின் விஷயத்திலும் உண்மையாகவே காணப்படும். முற்றும் முழுமையாக உண்மையுள்ளவர்கள் அனைவரும், பிதாவின் சித்தத்தைச் செய்கிறதற்கு விரும்புகிறவர்களாகவும், பிதாவுக்கான ஊழியத்தில் தங்களுடைய ஜீவியங்களையே ஒப்புக்கொடுத்துவிட விரும்புகிறவர்களாகவும் காணப்படுவார்கள். மேலும் இந்த விருப்பமானது, அவர்களை ஒருமைப்பாட்டில் காணப்படச்செய்யும்.
“”ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கு” என நமது கர்த்தர் குறிப்பிடுகின்றார் (யோவான் 17:23). ஒவ்வொரு தனிப்பட்ட அங்கமும் முன்னேறிச் செல்லும்போது, ஒவ்வொருவனும், தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினைப் பயன்படுத்துவதற்கு அதிகம் தகுதியுடையவனாகுகிறான்; இப்படியாக (கிறிஸ்துவின்) சரீரமானது மிகவும் பயனுடையதாகிறது. ஆனால் இங்குக் கர்த்தர் தேறின நிலையை, முழுமையடைந்த நிலையைக் குறிப்பிடுகின்றார். கர்த்தர் யுகத்தினுடைய முடிவின்போது, வேலை நிறைவடையும்போது, முழுமையடையும்போது, அவர்கள் அனைவரும் ஒருமைப்பாட்டில் காணப்படுவதைக்குறித்தே குறிப்பிடுகின்றார். ஆனால் மகிமையான [R5359 : page 359] நிறைவைக் கர்த்தர் தாமே கொண்டு வருவார். நம்முடைய மாம்சத்தினுடைய வேற்றுமைகளினால், நம்மால் அனைத்திலும் இப்பொழுது முற்றிலுமாய் ஒருமைப்பாட்டுடன் காணப்பட முடியாது.
இப்பொழுது நம்மால் ஏறக்குறைய தெளிவில்லாமல்தான் காரியங்களைப்பார்க்க முடிகின்றது. இப்பொழுது நம்மால் காரியங்களை முற்றும் முழுமையாகக் காண முடியாது. இதன் விளைவாகக் கர்த்தருடைய சித்தம் செய்தவற்கெனத் தங்களை முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளவர்கள் மத்தியிலும் கூட, எப்போதும் பிணக்குகள்/உராய்வுகள் காணப்படவே செய்கின்றது. நாம் முதிர்ச்சி அடைய அடைய, இந்தப் பிணக்குகள்/உராய்வுகள் குறைந்துக் கொண்டுவர வேண்டும். நாம் இமைப்பொழுதிலே உயிர்த்தெழுதலின் மாற்றங்களை அனுபவிக்கும் மகிமையான நிறைவு அடைவதுவரையிலும், நம்மால் கண்ணார காண இயலாது. “”மாம்சமும், இரத்தமும், தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” இந்தப் பூரணமற்ற சரீரங்களில்தான் நமக்கான பரீட்சை நடைப்பெற வேண்டியுள்ளது. முடிவு பரியந்தம் உலகத்திற்கும், மாம்சத்திற்கும், எதிராளியானவனுக்கும் எதிரான போராட்டத்தில் தங்களது நேர்மையை/உண்மையைக் காண்பிப்பவர்கள், கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரர்களாயிருந்து, அவருடைய இராஜ்யத்தில் பங்கடைந்து, மனுக்குலத்தின் உலகத்தை ஆசீர்வதிக்கும் தெய்வீகத் திட்டத்தைச் செய்து முடிப்பவர்களாய் இருப்பார்கள்.
கர்த்தருடைய வெளிப்படுதலில் உள்ள, epiphania காலத்தின்போது, தேவன் சபையை வழிநடத்தும் தம்முடைய தற்போதைய வேலையை, நிறைவேற்றி முடித்தவராகக் காணப்படுவார்; மற்றும் உலகமானது வேறே யுகத்தின் கீழ்க் காணப்படுகின்றது என்று உலகத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கும். உலகமானது காரியங்களைக் குறித்து முழுமையாய்ப் புரிய வரும்போது, அவர்கள் அப்போது, நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களுடன் ஏறெடுத்த கடைசி ஜெபத்தில், பிதா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அன்புகூருவது போன்று, பிதா சபையையும் அன்புகூருகின்றார் என்று கூறின வார்த்தைகளிலுள்ள உண்மையை அறிந்துக்கொள்வார்கள். இது பிரம்மிக்க வைக்கும் ஒரு வாக்கியமாகும். இது நமது கர்த்தரிடத்தில் சுயநலம் எதுவும் இல்லை என்பதைக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. “”அவர்கள் எனக்குக் கீழாகத்தான் இருப்பார்கள். நான் கொண்டிருக்கும் மகிமையை, அவர்கள் ஒருபோதும் அடைவதில்லை” என்று கர்த்தர் கூறவே இல்லை.
மாறாக கர்த்தர் இயேசுவோ, கொள்கை மற்றும் குணலட்சணத்தின் அடிப்படையிலேயே பரம பிதா, தம்முடைய அன்பைச் செயல்படுத்துவார் என அறிந்திருந்தார். இந்த மகிமையான கூட்டத்தாரில் அங்கத்தாராய் இருப்பவர்கள் அனைவரும், நமது கர்த்தர் கொண்டிருந்த அதே மகிமையான குணலட்சணத்தைக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும்; அதாவது, வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், அவர்கள் மனதின் அடி ஆழம் வரை, உண்மையுள்ளவர்களாகக் காணப்பட வேண்டும். அவர்கள் தாங்கள் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுப்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். “”நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்” என்றும் நாம் வாசிக்கின்றோம் (எபிரெயர் 1:9). கர்த்தர் சபை வகுப்பாரின் தலையாக இருக்கும்படிக்கு அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளார். ஆனால் சபை வகுப்பார் இந்த வேதவாக்கியத்தில் (எபிரெயர் 1:9) அவருடைய தோழர்கள்/துணையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்; அதாவது, அவர்கள் கீழானவர்கள் என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படாமல், ஒரே தளத்தில், அவரோடு கூட இருப்பவர்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர். அப்போது உலகமானது, பிதா இயேசுவை அன்புகூர்ந்ததுபோலவே, சபையையும் அன்புகூருகின்றார் என்று அறிந்துக்கொள்ளும். சபையானவள் தனது கர்த்தராகிய இயேசுவுடன் கூட, ஒரே தளத்தில் காணப்படுவாள் என்று நாம் புரிந்திருக்கின்றோம். எனினும் தேவன் கர்த்தரை, “”எல்லாவற்றிற்கும் மேலான தலையாக தந்தருளினார்” என்றும், தேவன் இப்படியாக அவரை என்றென்றும் இருக்கும்படிக்கு ஆசீர்வதித்துள்ளார் என்றும் நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சபை ஒருபோதும் கிறிஸ்துவுக்குச் சரிசமமானவளாக இருப்பதில்லை.
நம்முடைய பரம பிதாவானவர், கிறிஸ்துவை அன்பு கூர்ந்தது போன்று, நம்மையும் அன்புகூருகின்றார் என்பதும், புளுதியில் காணப்படும் வைரத்தைக் கர்த்தர் அன்புகூருகின்றார் என்பதும் நமக்கு மிகவும் ஆச்சரியமாய் இருக்கின்றது! மனிதனுடைய பாவமாகிய சேற்றிலிருந்து, கர்த்தர் இயேசு இந்தப் பாத்திரங்களைத் தெரிந்தெடுத்துக்கொண்டு வருகின்றார். கர்த்தர் இயேசு உண்மையாய் இருந்ததுபோன்று உண்மையுள்ளவர்களாகவும், முற்றிலும் ஜெயங்கொண்டவர்களாகவும் இருப்பதை நிரூபித்து காண்பிக்கும் வகுப்பாரைப் பிதா, கர்த்தர் [R5359 : page 360] இயேசுவை அன்புகூருவதுபோன்று அன்புகூர்ந்து, தம்முடைய குமாரனுடன் கூட அவர்களையும் மகிமைப்படுத்துவார்.