R1761 (page 22)
லூக்கா 9:28-36
இணையான பதிவுகள்…… மத்தேயு 17:1-13; மாற்கு 9:2-13
“”இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்.” – மத்தேயு 17:5
நம்முடைய இந்தப் பாடம் லூக்கா 9:22-ஆம் வசனத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. 22 முதல் 26 வரையிலான வசனங்களில், விரைவில் சம்பவிக்கப் போகும், தம்முடைய ஜீவியத்தின் அவலமான முடிவைக்குறித்து கர்த்தர் எப்படிச் சீஷர்களுக்கு வெளிப்படுத்தினார் என்பது குறித்தும், மூன்றாம் நாளின் தம்முடைய உயிர்த்தெழுதல் பற்றி எப்படி அவர்களுக்கு நிச்சயம் அளித்தார் என்பது குறித்தும் நமக்குத் தெரிவிக்கின்றது. பின்னர் தம்முடைய சீஷர்களும் இதே மாதிரியான உபத்திரவங்களுக்குள் கடந்துப் போவார்கள் என்றும், இம்மாதிரியான சோதனைகளின் கீழ் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருக்கும்படிக்கு ஆலோசனை வழங்கி, இப்படி உண்மையாய் இருப்பதின் விளைவாக, தாம் இரண்டாம் வருகையில் வரும்போது, தம்முடைய இராஜ்யத்தின் மகிமையில் திரளான பலனைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர்களுக்கு நிச்சயமும் அளித்தார்.
27-ஆம் வசனமானது ஒரு தீர்க்கத்தரிசனமாகும். இப்பாடம் காட்டுவதுபோன்று இந்தத் தீர்க்கத்தரிசனம் உடனடியாக நிறைவேறவும் செய்தது.
28 முதல் 36 வரையிலான வசனங்கள். இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒரு தரிசனமே ஒழிய, உண்மையாய் நடந்தது அல்ல என்று கர்த்தருடைய வார்த்தைகளே நிரூபிக்கின்றது; “”அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒரு வருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்” (மத்தேயு 17:9).
இந்தத் தரிசனத்தின் பொருளானது, அப்போஸ்தலனாகிய பேதுருவினால் தெளிவாகச் சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது. இதனை வரவிருக்கின்ற கிறிஸ்துவினுடைய இராஜ்யத்தின் மகிமைக்கான “”தரிசனமாகப்” பேதுரு குறிப்பிடுகின்றார். “”நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக்கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும், மகிமையையும் பெற்றபோது, அவரோடே கூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்” (2 பேதுரு 1:16-18).
“”தரிசனம்” என்கிற போது, அது கிறிஸ்துவினுடைய ஆயிரம் வருஷம் இராஜ்யத்தின் மகிமைக்கான அடையாளமான காரியமாக இருக்கின்றது. கர்த்தரும், அவருடைய வஸ்திரமும் மாறுவது என்பது, வரவிருக்கின்ற அவருடைய தனிப்பட்ட மகிமைக்கான அடையாளமாக இருக்கின்றது. மோசே மற்றும் எலியாவின் மகிமையான தோற்றம் என்பது, கர்த்தருடன்கூட அவருடைய இராஜ்யத்தின் மகிமையில் காணப்படும் மனுஷர் மத்தியிலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு கூட்டத்தாருக்கு அடையாளமாக இருக்கின்றது; இந்த இரண்டு வகுப்பரில், ஒரு வகுப்பார் இராஜ்யத்தின் பூமிக்குரிய பாகமாகவும், இன்னொரு வகுப்பார் பரலோகத்திற்குரிய பாகமாகவும் காணப்படுவார்கள். மோசே பூமிக்குரிய பாகத்திற்கு அடையாளமாக இருக்கின்றார் மற்றும் எலியா ஆவிக்குரிய அல்லது பரலோகத்திற்குரிய பாகத்திற்கு அடையாளமாக இருக்கின்றார். அடையாளத்தில் இங்குக் குறிப்பிடப்படும் “”தரிசனமானது,” 27-ஆம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஸ்தாபிக்கப்பட்டுள்ள இராஜ்யத்தை அடையாளப்படுத்துகின்றது. “”இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய இராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (லூக்கா 9:27). இது உண்மையான மோசேயும், எலியாவும் அல்ல. ஏனெனில், இது “”தரிசனமே” ஒழிய, உண்மையாய் நடந்தது அல்ல (யூதா 1:9; ரோமர் 5:12; பிரசங்கி 9:5; சங்கீதம் 146:4; யோபு 14:21; யோவான் 3:13; அப்போஸ்தலர் 2:34; சங்கீதம் 90:3). இவர்கள் உயிர்த்தெழுவதற்கான ஏற்றவேளை இன்னமும் வரவில்லை. “”அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்” (எபிரெயர் 11:40). கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் இராஜ்யத்தின் ஆவிக்குரிய பாகமாகிய, சுவிசேஷ யுக சபையின் முழுமையான ஸ்தாபித்தல் வரையிலும், முற்பிதாக்களின் உயிர்த்தெழுதல் சம்பவிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றது.
31-ஆம் வசனமானது இந்த மூன்று மகிமையானவர்களின் சம்பாஷணையின் பொருளைக் குறித்துப் பதிவு செய்கின்றது. அதாவது, சீக்கிரத்தில் எருசலேமில் நிறைவேற்றப்பட போகின்ற கர்த்தர் சிலுவையில் அறையப்படுதல் அதாவது, நமக்கான ஈடுபலிச் செலுத்தப்படுதல் எனும் மாபெரும் செயலைக் குறித்த இவர்களுடைய சம்பாஷணையின் பொருளைக்குறித்துப் பதிவு செய்கின்றது.
இந்தத் “”தரிசனத்திற்கான” நோக்கம் அநேகமாக இரண்டு விஷயங்களுக்காக இருக்க வேண்டும். ஒன்று கர்த்தரை ஆறுதல்படுத்துவதற்காகவும், பெலப்படுத்துவதற்காகவும், மற்றொன்று அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாகிய சாட்சிகளை வெளிச்சமூட்டுவதற்குமாகும். கர்த்தருடைய மரணம் குறித்துக் கர்த்தருடன் பண்ணப்பட்ட சம்பாஷணையானது, அநேகமாக சீஷர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது நடைபெற்றப்படியால் (32-ஆம் வசனம்), இது விசேஷமாக அவருடைய ஆறுதலுக்காகவே நடந்தது. கர்த்தருடைய ஜெபத்திற்குப் பதிலளிக்கும் வண்ணமாகவே “”தரிசனம்” வந்தது. மேலும், சீஷர்கள் இதனை அப்பொழுது புரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் பிற்பாடு, இது அவர்களுக்கு ஆசீர்வாதமான தூண்டுதலாக/உற்சாகமாகக் காணப்பட்டது, இது நமக்கும் இப்படியாகவே காணப்பட வேண்டும். எனினும், (உலகம் உண்டானது முதல் சகல பரிசுத்த தீர்க்கத்தரிசிகள் வாயிலாக உரைக்கப்பட்ட இராஜ்யம் மற்றும் அதன் மகிமை தொடர்பான) “”அதிக உறுதியான தீர்க்கத்தரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்” (2 பேதுரு 1:19; அப்போ. 3:19-21). “”தரிசனம்” இராஜ்யம் தொடர்பான தெளிவான மற்றும் புத்துணர்வுள்ள அடையாளப் பார்வையாக இருப்பினும், “”அதிக உறுதியான தீர்க்கதரிசனம்” இல்லையெனில், இத்தரிசனம் புரிந்துக்கொள்ளப்படாததாய் இருக்கும்.
34,35-ஆம் வசனங்களில், நமது கர்த்தர், தேவனுடைய குமாரன் என்றும், கர்த்தர் தேவனுக்குப் பிரியமாய் இருக்கின்றார் என்றும் வானத்திலிருந்து ஒரு குரல் சான்று பகர்ந்ததைப் பார்க்கலாம். இவருடைய பிறப்பின்போது, வானதூதர்கள் இவரைக்குறித்து அறிவித்தார்கள்; இவருடைய ஞானஸ்நானத்தின்போது, இவர் தேவனால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குமாரன் என்று இவரைக்குறித்து வானத்திலிருந்து ஒரு சத்தம் அறிவித்தது; மேலும், இப்பொழுது இவருடைய பூமிக்குரிய ஜீவியம் முடிவை நோக்கி நெருங்குகையில், இவர் மீண்டுமாக தேவனுக்குப் பிரியமாகவும், அங்கீகரிக்கத்தக்கதாகவுமுள்ள குமாரனாக இருப்பது அறிவிக்கப்பட்டது.
[R1761 : page 23]
36-ஆம் வசனத்தில், “”அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார்” என்று காணப்படுகின்றது. “”தரிசனமும்” சத்தமும், மேகமும் கடந்துப்போனது; மற்றும் எல்லாம் இயல்பான நிலைக்குத் திரும்பினாலும், இந்தக் குறிப்பிடத்தக்க சம்பவத்தின் அர்த்தமானது, சீஷர்கள் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிற்பாடு, அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, புரிந்துக்கொள்ளப்படுவதுவரையிலும், விரிவடைவதற்குக் காத்திருக்க வேண்டியிருந்தது.
இப்படியாக, தேவனுடைய மகிமையாயுள்ள இரக்கத்தின் திட்டம் பற்றின ஆசீர்வாதமான சத்தியங்கள், கற்பனையின் மேல் கற்பனையினாலும், பிரமாணத்தின்மேல் பிரமாணத்தினாலும், அவருடைய சீஷர்களின் மனங்கள் மற்றும் இருதயங்கள் மீது ஆழமாகப் பதியவைக்கப்படுகின்றது. மேலும், நாம் அவருடைய வார்த்தைகளுடன் நம்மை அதிகமதிகமாக ஐக்கியத்திற்குள் கொண்டு வரும்போது, நம்மிடத்திலுங்கூட இது ஆழமாகப் பதியக்கூடியதாயிருக்கும்.