R5103 (page 295)
மாற்கு 7:31,8:10
“”எல்லாவற்றையும் நன்றாய்ச் சொய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.” (வசனம் 37)
இயேசு தம்முடைய அற்புதங்கள் வாயிலாக, தனிப்பட்ட விதத்தில் சொஸ்தமடைந்தவர்களிடத்திலும், பொதுவான விதத்தில் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்ட ஜனங்களிடத்திலும், இந்தச் சொஸ்தப்படுத்தும் வல்லமை தேவனுடையது என்ற உண்மையைப் பதியப் பண்ணினார் என்றும், இப்படியாக தேவனிடத்திலான விசுவாசத்தை நிறுவினார் என்றும் கடந்த பாடத்தில் நாம் பார்த்துள்ளோம். கொன்னை வாயும், செவிடாயும் இருந்த ஒரு மனுஷனைச் சொஸ்தப்படுத்தும்படி, அவனை இரட்சகரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்.
இதிலிருந்து பெரும்பான்மையான அற்புதங்கள் கையை வைப்பதின் மூலமாகவே செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வருகின்றது; சிலர் இயேசுவைத் தொடுவதின் மூலமாகவும் (அ) அவருடைய வஸ்திரங்களைத் தொடுவதின் மூலமாகவும் சொஸ்தமடைந்ததாகவும் பதிவுகள் காணப்படுகின்றது. அவருடைய வஸ்திரத்தைத் தொட்டுச் சொஸ்தமடைந்த விஷயத்தில், அந்த ஸ்திரி விசுவாசத்தைக் காட்டினாள் என்பது நிச்சயமே, இல்லையேல் சொஸ்தமடையும் நம்பிக்கையில் வஸ்திரத்தைத் தொட்டிருந்திருக்கமாட்டாள். வேறு ஒரு தருணத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள ஜனங்களுடைய அவநம்பிக்கைக் காரணமாக, அவ்விடத்தில் இயேசுவினால் அநேக வல்லமையான செய்கைகளைச் செய்யமுடியவில்லை என்று நாம் வாசிக்கின்றோம். ஆகவே, எப்படியிருப்பினும் சொஸ்தப்படுத்தும் வல்லமையானது, விசுவாசம் செயல்படுத்தும் காரியத்தோடு தொடர்புடையதாக இருக்கின்றது; விசுவாசம் ஒன்றில் வியாதியஸ்தரின் சார்பில் (அ) வியாதியஸ்தனுக்காக அவனுடைய நண்பர்களுடைய சார்பில் செயல்படுத்தப்பட வேண்டும்.
நாம் பார்த்துக் கொண்டிருக்கும் சம்பவம் கொஞ்சம் விநோதமானதாகும். (1) ஏனெனில், இயேசு, மக்கள் கூட்டத்தாரிடமிருந்து, அம்மனுஷனைத் தனியே கூட்டிக்கொண்டு சென்று, இரகசியமாகச் சுகப்படுத்தினார் மற்றும் (2) அவர் பயன்படுத்தின விஷயங்களும் விநோதமாக இருந்தது. அவர் தமது விரல்களை அவன் காதுகளில் வைத்தார். அதாவது, ஜீவனுக்கான மின்னோட்டம் விரல்களிலிருந்து ஏதோ பாய்வது போன்று, அவன் காதுகளில் வைத்தார். பின்னர் அவர் உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டார். இவ்வளவுதான் இயேசுவினுடைய வல்லமை என்று நாம் எண்ணி விடக்கூடாது, வேறு தருணங்களில் வேறுவிதத்திலும் அவருடைய வல்லமை செயல்பட்டிருக்கின்றது. அம்மனுஷனுடைய கவனத்தை ஈர்ப்பதற்கும், விசுவாசம் அவன் கொள்ளத்தக்கதாக, அவனுக்கு உதவுவதற்கும்தான் இம்மாதிரியாகச் செயல்பட்டார் என்று புரிந்துக்கொள்வது தகுதியானதாக இருக்கும்.
அம்மனுஷனுக்குக் கேட்கும் திறன் இல்லாதபடியினால், சூழ்நிலைகளை/காரியங்களை விவரிப்பதற்காக அம்மனுஷனிடம் எதுவும் கூறமுடியாது; உமிழ்வதை அம்மனுஷனால் காண முடியும், அவர் தொடுவதை அம்மனுஷனால் உணர்ந்துக்கொள்ள முடியும். மேலும், என்ன நடந்துக் கொண்டிருக்கின்றது என்பதை அம்மனுஷன் புரிந்துக்கொண்டான்; அம்மனுஷன் சொஸ்தமடைந்தான். இவைகளெல்லாம் அவனுடைய மனதின் கீழ்ப்படிதலை அல்லது விசுவாசத்தைக் குறிக்கின்றது. இந்தப் படிப்பினைகளைக் கொடுத்தப் பிற்பாடு, அம்மனுஷன் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இயேசு வானத்தை அண்ணாந்துப் பார்த்தார்; இப்படியாக நோயாளிக்கு மூன்றாவது படிப்பினையாக, தான் சொஸ்தப்படுவதற்கான வல்லமை, தேவனிடமிருந்தே எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்பது வழங்கப்பட்டது. இயேசு பெருமூச்சுவிட்டு எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்பது அர்த்தமாகும்; உடனடியாக அம்மனுஷனுடைய செவிகள் திறக்கப்பட்டன, மற்றும் பேசுவதில் அம்மனுஷனுக்கு இருந்த பிரச்சனையும் போய்விட்டது.
இயேசு பெருமூச்சு விட்ட காரியம் கவனிக்கப்பட வேண்டியதாகும்; இது இயேசுவின் முன் காணப்பட்ட மனஷன் மீதும் மற்றும் தவித்துக் கொண்டிருக்கும் சிருஷ்டிகள் மீதுமுள்ள அவருடைய ஆழ்ந்த அனுதாபத்தையே சுட்டிக்காண்பிக்கின்றது. இயேசு, “”ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார்” என்று பதிவு செய்யப்பட்டுள்ள வேறொரு தருணத்தையும் நாம் நினைவுகூருகின்றோம். அது அவருடைய நண்பனாகிய லாசருவின் கல்லறைக்கு முன்பாக அவர் நின்று கொண்டிருந்தபோது சம்பவித்தது; “”மரியாள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யுதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித்துயரமடைந்து” (யோவான் 11:33). தீர்க்கத்தரிசனத்தில் உரைக்கப்பட்டுள்ளபடி அவர், மனிதனுடைய பலவீனங்கள் குறித்தும் பரிதபிக்கக்கூடியவராக காணப்படுகின்றார் என்பதே நமக்கான பொதுவான படிப்பினையாகும். உண்மை என்னவெனில், அவர் பரிபூரணமானவர் ஆவார்; வலிகளும், வேதனைகளும், குறைவுகளுமுள்ள பூரணமற்ற சரீரத்தை அவர் பெற்றிருக்கவில்லை; ஆனால், இதற்கென்று அவர் உணர்ச்சியற்றவராகவும், அனுதாபமற்றவராகவும் இராமல், எதிர்மாறாகவே காணப்பட்டார். அவருடைய பரிபூரணமான மனமானது, நம்முடையதைக் காட்டிலும், அவருடைய உணர்வுத் திறன்கள் அனைத்தையும் விழிப்பாக வைத்தது; அவருடைய அனுதாபம் பலமாய்க் காணப்படும். மற்றும் வலியை உணரக்கூடிய அவருடைய திறன் அதிகமாகவும் இருக்கும். விழுந்துபோன சந்ததியாகிய நாம், நம்முடைய அநேக சுற்றுச் சூழல்களுக்கு மிகவும் பழக்கப்பட்டிருப்பதினால், அவைகள் சர்வ சாதாரணமாக நமக்குத் தோன்றுகின்றது. மற்றும் அவைகளை இயல்பென எண்ணிக்கொள்ளத்தக்கதாகவும் நாம் காணப்படுகின்றோம். அதாவது பூரணமான ஒழுங்குமுறையே, மனிதனுக்கான இயல்பான ஒழுங்குமுறை என்றும், குறைபாடுள்ள நிலை என்பது மனிதனுக்கான இயல்பில்லா ஒழுங்குமுறை [R5104 : page 295] என்றுமுள்ள காரியத்தை நாம் மறந்து விடுமளவுக்குச் சர்வ சாதாரணமாகிவிட்டது.
அற்புதம் பண்ணும் ஒவ்வொரு தருணத்திலும், நமது ஆண்டவர் தமது சத்துவத்தை இழப்பதன் வாயிலாகவும், நம்முடைய ஆண்டவர், நம்முடைய பலவீனங்களினால் தொடப்பட்டுள்ளார் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இதுவே, “”அவர் தமது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார்” என்று கூறும் வேதவாக்கியத்தின் அர்த்தமல்லவா? தினந்தோறும், ஒவ்வொரு மணிநேரமும் அவருடைய உயிர் ஆற்றலானது, அவர் சந்தித்தவர்களைச் சொஸ்தப்படுத்தியதிலும், ஆசீர்வதித்ததிலும், ஆறுதல் படுத்தியதிலும், போதித்ததிலும் செலவழிக்கப்பட்டது. இதை நாம் மாற்கு 5:25-34 வரையிலான வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் பார்க்கலாம்.
ஆண்டவர், தேவனுடைய பிரதிநிதியாக, தெய்வீக வல்லமையை மாத்திரம் பயன்படுத்தாமல், மனிதனுடைய துயரத்தை முடிப்பதற்கென அவர் தமது சரீரத்தின் வல்லமையையும்/சத்துவத்தையும் பயன்படுத்தியுள்ளார் என்ற காரியத்தைக் குறித்த எண்ணமானது, அவரிடத்திற்கு நமது இருதயங்களை நெருங்கச் செய்திடும், மற்றும் இரட்சகருடைய அன்பைக்குறித்த தெளிவானக் கண்ணோட்டத்தையும் நமக்குக் கொடுத்திடும்; மேலும், நம்முடைய ஜீவியத்தின் சகல [R5104 : page 296] விஷயங்களிலும் அவர்மேல் நாம் நம்பிக்கை வைக்கத்தக்கதாக, சிறப்பான அஸ்திபாரத்தையும் அமைத்துத் தருகின்றது.
இப்பாடத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதம் நடந்திட்ட சம்பவத்தில், நமது கர்த்தர் பெருமூச்சுவிட்ட விஷயமானது, அவருடைய சரீரத்தில் ஏற்பட்டுள்ள சோர்விற்கான ஆதாரமாகவும் இருக்கலாம். அதாவது, நோயாளியைச் சொஸ்தப்படுத்தும் விஷயத்தில் அவர் தமது உயிர் ஆற்றலையும், சக்தியையும் அளித்ததின் காரணமாக ஏற்பட்ட உடல் சோர்வாகவும் இருக்கலாம். இயேசுவின் மரணமானது, முற்றிலுமாகக் கல்வாரியில்தான் நிறைவேறினது என்று நாம் எண்ணிக்கொள்ளக்கூடாது. மாறாக, அவர் தமது முப்பதாம் வயதின்போது, யோர்தானில் தம்மை அர்ப்பணம் பண்ணினது முதல் ஆரம்பித்து, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருஷமும் தொடர்ந்து நடைபெற்றது, கல்வாரியில் நிறைவு மாத்திரமே அடைந்தது என்று நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இதைக் குறித்து நமது கர்த்தர் தாம் சிலுவையில் அறையப்படுவதற்குரிய முந்தின தினத்தில் கூறினார். மரணம் வரையிலான தம்முடைய அர்ப்பணிப்பைக் குறித்துப் பேசுகையில், அவர் “”என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்” என்று கூறினார். (மத்தேயு 26:38; லூக்கா 12:50) இதைப் பேசின நாளுக்கு, அடுத்த நாள் அன்று, கல்வாரியில், அவர் “”எல்லாம் முடிந்தது” என்று உரக்க கத்தினபோதுதான், முழுமையாய் நிறைவடைந்தது; அதாவது, மரணத்துக்குள்ளான அவரது ஞானஸ்நானம் நிறைவடைந்தது.
இந்த அற்புதம் நடைபெற்றப் பிற்பாடு, ஜனக்கூட்டத்தார் “”இத்தலைப்பிலுள்ள” இவ்வார்த்தைகளைக் கூறினார்கள். இந்த ஓரே ஒரு அற்புதத்தின் காரணமாகத்தான், இவ்வார்த்தைகள் கூறப்பட்டது என்று நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில், இதே அற்புதத்தின் சம்பவத்தைப் பதிவு செய்துள்ள பரிசுத்தவானாகிய மத்தேயு, அவ்விடத்தில் அநேக சப்பாணிகளுடனும், குருடர்களுடனும், ஊமையர்களுடனும், முடமானவர்களுடனும், திரளான ஜனக்கூட்டத்தார் கூடி வந்து, நோயாளிகளை அவர் பாதத்தருகே வைத்தார்கள் என்றும், அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார் என்றும், ஊமையர்கள் பேசுகிறதையும், சப்பாணிகள் சொஸ்தமடைகிறதையும், முடவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் கண் பார்வை அடைகிறதையும், ஜனங்கள் கண்டு, இஸ்ரயேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள் என்றும் தெரிவிக்கின்றார் (மத்தேயு 15:29-31).
நமது கர்த்தருடைய அற்புதங்கள் தொடர்புடைய மாபெரும் மையக் கருத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் அவருடைய ஊழியமாக இராமல் மாறாக, “”எல்லாரையும் மீட்கும் விலைப் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுக்கவே வந்தார்.” அவருடைய வேலையின் இரண்டாவது அம்சமானது, “”கபடற்ற உத்தம இஸ்ரயேலர்களை” தம்முடைய அடிச்சுவட்டைப் பின்பற்றும் பின்னடியார்களாக அழைப்பதாகும்; இவர்கள் பெந்தெகொஸ்தே நாள் அன்றும், அது தொடர்ந்தும் பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுவார்கள். செய்யப்பட்ட அற்புதங்களும், சொஸ்தப்படுத்துதல்களும் இடைநிகழ்வுகள் மாத்திரமே ஒழிய, அவருடைய உண்மையான வேலையல்ல. இவைகள் அவருடைய ஆயிர வருஷம் ஆளுகையின்போது, அவருடைய இராஜ்யமானது நிறைவேற்றி தீரக்கூடிய மாபெரும் வேலைகளுக்கான, சிறிய அளவிலான உதாரணங்கள் என்றவிதத்தில், இவைகள் இடைநிகழ்வுகளாகும். “”அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்” (ஏசாயா 35:5).
தெய்வீகத் திட்டத்தை விளக்குவதும், ஜனங்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்களைத் திறப்பதும், ஜனங்களுடைய செவிடான காதுகளைத் திறப்பதும், (இப்பொழுது அவரால் செய்யப்பட்ட அற்புதங்களைக் காட்டிலும்) மிகவும் பெரியதும், மிகவும் பிரம்மாண்டமானதுமாகிய வேலையாகக் காணப்படும்; ஆனால், இவ்வேலையை, அவர் உன்னதத்திற்கு ஏறிச்சென்று, தம்முடைய பலியின் புண்ணியத்தை, விசுவாசிகள் நீதிமானாக்கப்படுவதற்கென ஒப்புக்கொடுப்பதுவரையிலும் நிறைவேற்ற முடியாது. ஆகையால்தான், இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி, “”நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” என்றார் (யோவான் 14:12).
இன்றும்கூட இயேசுவின் பின்னடியார்கள், அவர் செய்ததைக்காட்டிலும் பெரிய கிரியைகளை, அதாவது அந்த அற்புதங்களைக்காட்டிலும் பெரிய கிரியைகளைச் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். காரணம் மாம்ச கண்களைத் திறப்பதைவிட, மனதின் கண்களைத் திறப்பது நிச்சயமாக பெரிய அற்புதமேயாகும்; மாம்சக் காதுகளைத் திறப்பதைவிட, மனதின் செவிகளைத் திறப்பது என்பது, பெரிய அற்புதமாகும்; மாம்ச வாயைப் பேச வைப்பதைப்பார்க்கிலும், ஊமையனை தனது மனதின் ஆவியில் தேவனைத் துதிக்கப்பண்ணுவது என்பது, மாபெரும் கிரியையாகும். நாம் சுயமாக இயேசுவைக்காட்டிலும் மாபெரும் கிரியைகள் செய்துவிட முடியாதது மாத்திரமல்ல, அவரைப்போன்று அப்படியே பெரிய கிரியைகளையும் நம்மால் செய்துவிட முடியாது. அவர் இல்லாமல் நம்மால் எதையும் செய்துவிட முடியாது. வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தும்படிக்கும், பிசாசுகளைத் துரத்தும்படிக்கும் இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களை அனுப்பி வைத்தபோது, அவர்களால் நிகழ்த்தப்பட்ட குணமாகுதல்கள் இயேசுவாலேயே செய்யப்பட்டதுபோல, இன்றும் இயேசுதான் தம்முடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் வாயிலாக, இந்த மாபெரும் கிரியைகளைச் செய்து வருகின்றார்.
ஏழு அப்பங்களைக்கொண்டு, நான்காயிரம் ஜனங்களைப் போஷித்துவிட்டு, மீதியானவைகள் ஏழு கூடைகளில் சேர்த்து வைக்கப்பட்ட பதிவானது இயேசுவின் வல்லமைக்கான, அதாவது அவரிடத்தில் இருக்கும் தெய்வீக வல்லமைக்கான மற்றுமொரு வெளிப்படுத்தல் ஆகும். ஐயாயிரம் பேர் போஷிக்கப்பட்டபோது, ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் பயன்படுத்தப்பட்டன. இவைகள் ஒரு சிறுவனிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்திலோ, சீஷர்களிடமே ஏழு அப்பங்கள் இருந்தது. மேலும் அதை, ஜனக்கூட்டத்தாரைப் போஷிக்கும்படிக்கு முழுவதும் கொடுத்து விட்டார்கள்; மற்றும் அனைவரும் திருப்தியாய்ப் போஷிக்கப்பட்டார்கள்; மேலும், ஆண்டவரின் அறிவுரையின்படி மீதியான துண்டுகள், மீண்டுமாகச் சேர்த்துக் கூடையில் எடுக்கப்பட்டன.
இரண்டு சம்பவங்களிலுமே, ஆண்டவர் சிக்கனமான தன்மையை வெளிப்படுத்தி, தம்முடைய பின்னடியார்களுக்குச் சிக்கனமாக விவேகத்துடன் செலவுச் செய்யும் காரியத்தை ஊக்குவித்தார். பல்வேறு வகையான, மிகவும் சுவையான உணவுகளை உருவாக்குவது அவருக்குச் சுலபமான காரியமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. அன்று பயன்படுத்தப்பட்ட அதே அப்பங்கள், இன்றும் பாலஸ்தீனியா குடிமக்களால் பயன்படுத்தப்படுகின்றது. அவைகள் நம்முடைய பெரிய பன்களின் (bun) அளவு போன்றே காணப்படும்; மற்றும் அவைகள் அரைக்கப்பட்ட கோதுமையினாலேயே முழுமையாய்ச் செய்யப்படுகின்றது. எகிப்து மற்றும் பாலஸ்தினியாவின் பலசாலிகளான குடிமக்கள் இந்த அப்பத்தினாலேயே பெரும்பாலும் ஜீவியத்தைக் கழிக்கின்றனர்; இரண்டு அப்பங்களை இவர்கள் உணவாக எடுத்துக் கொள்கின்றனர். இப்படியான எளிமையான உணவுகளினால் நம்மில் சிலர் கூட ஆரோக்கியமாகவும், பலசாலிகளாகவும் காணப்படுகின்றோம். தேவனிடத்தில் விசுவாசம் வைத்து, நமக்கான அனுதின ஆகாரங்களை நன்றியுள்ள இருதயங்களுடன் புசிப்பது நமக்கான காரியமாகும்; உணவு எவ்வளவுதான் எளிமையாக இருப்பினும் அதில் ஆசீர்வாதம் காணப்படும்.