R4634 (page 202)
மத்தேயு 13:1-9; 18-23
“”ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.” யாக்கோபு 1:21
தேவன் தம்முடைய ஆயிரவருஷ இராஜ்யத்தின் நிர்வாகத்தில் கிறிஸ்து இயேசுவுடன் அங்கங்களாக இருக்கும்படிக்கு அழைக்கும் சிறுமந்தையைத் தெரிந்தெடுக்க சர்வவல்லமையுள்ளவர் பயன்படுத்தும் முறை தொடர்பான மிக அருமையான பாடத்தை நமது கர்த்தர் படகில் இருந்துகொண்டு போதித்தார். இங்கு இடம்பெறும் உவமையிலுள்ள “”விதையானது,” இராஜ்யத்தின் செய்தி அல்லது அழைப்பாகும். இந்த விதைகளோ சாதகமான சூழ்நிலைகளில் முளைத்து, தேவைப்படும் குணலட்சணத்தின் வளர்ச்சியாகிய பலனைக்கொண்டு வருகின்றது. நமது கர்த்தரானவரே இராஜ்யத்தின் இந்த நல்ல விதைகளை விதைக்கும் மாபெரும் விதைப்பாளராக இருக்கின்றார். கர்த்தருக்குப் பின் அப்போஸ்தலர்கள் அதைச் செய்தார்கள். அதுமுதல் கர்த்தர், தம்முடைய உண்மையுள்ள ஜனங்கள் அனைவரையும் விதை விதைக்கும் வேலையில் ஏறக்குறைய பயன்படுத்தியுள்ளார்.
தெய்வீகச் செய்தி எனும் விதை பெரும்பாலும் வீணடிக்கப்பட்டது என்ற உண்மையானது, இந்தச் செய்தி நல்லதல்ல என்பதற்கும், விரும்பத்தக்கதல்ல என்பதற்கும் எவ்விதத்திலும் நிரூபணமாகாது. நிலத்தில், அதாவது இருதயத்திலேயே தவறு உண்மையில் காணப்படுகின்றது என இந்த உவமை காட்டுகின்றது. ஒருவேளை அனைத்து இருதயங்களும் சரியாக இருந்திருக்குமாயின், விதை (அ) செய்தி எல்லா இடத்திலும் அதிக பலனைக் கொடுத்திருக்கும்.
எல்லா நிலமும் நல்ல (அ) பொருத்தமான நிலமாக இல்லாவிட்டாலும், அநேகர் தங்களிடத்தில் இருக்கும் சாதகமற்ற நிலைமையைச் சரிச்செய்துகொள்வதற்கும், சீர்ப்படுத்துவதற்குமான ஆற்றல் பெற்றிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் உவமையின் காரியங்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்த உவமையின் அர்த்தம் தொடர்பாகவும் நாம் யூகம் பண்ண வேண்டியதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே விளக்கம் கொடுத்த சில உவமைகளில், இந்த உவமையும் ஒன்றாக உள்ளது. இவ்விஷயத்தை அநேகர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.
“”விதை” என்பது இராஜ்யத்தின் செய்தியாக இருக்கின்றது. அநேகர் இதைப் புரிந்துக்கொள்வதில்லை. இப்படியாகப் புரியமுடியாதவர்களின் செவிகள், இச்செய்தியை இழந்துவிடுகின்றன. ஏனெனில், இச்செய்தியை எடுத்துப்போடும்படிக்கு எதிராளியானவன் விழிப்பாகக் காணப்படுகின்றான். இந்த எதிராளியானவன், “”வழியருகே விழுந்துள்ள விதைகளைப்” பட்சித்துப் போடும் பறவைகளாக அடையாளப்படுத்துகின்றான். இப்படியாக, “”வழியருகே” கேட்டுச் [R4635 : page 202] செல்பவர்கள்தான் அனைத்துப் பெயரளவிலான சபை கூட்டத்தார்களிலுள்ள, பெரும் திரளான வகுப்பாராய் இருக்கின்றனர். இவர்கள் சம்பிரதாயமானவர்களே.
“”கற்பாறையான” நிலம் என்பது, இராஜ்யத்தின் செய்தியைக் கேட்கும் மற்றொரு வகுப்பாரை அடையாப்படுத்துகின்றது. இவர்களுக்கு இந்தச் செய்தி நல்லதாகத் தோன்றுகின்றது. இவர்கள் இதில் விருப்பம் கொள்கின்றனர். ஆனால், குணலட்சணத்தின் ஆழம் விஷயத்தில் இவர்கள் குறைவுபடுகின்றனர். இவர்கள் தங்களை (கிறிஸ்தவர்களென) அறிக்கை செய்துகொள்கின்றனர். இன்னுமாக, சில காலம் வரையிலும் அபரிவிதமாகத் தழைத்தோங்குகின்றனர். ஆனால், இராஜ்யத்தின் வேலைக்காக, இவர்களைக் கர்த்தர் பயன்படுத்துவதற்கு ஏதுவான குணலட்சணத்தின் வளர்ச்சிக்கு அவசியமான ஆழத்தில் இவர்கள் குறைவுபடுகின்றனர். மேலும், சோதனைகளும், பரீட்சைகளும் வரும்போது, இவர்கள் இடறி விழுந்து போய்விடுகின்றனர். “”மற்றவர்கள் பரிசை வெல்லத்தக்கதாகப் போராடுகையில்,” இவர்கள், தாங்கள் “”மலர் மெத்தைகளில் சுகமாக” இராஜ்யத்திற்குச் சுமந்துகொண்டு செல்லப்படுவார்கள் என எண்ணுகின்றனர். இராஜ்யத்திற்கு எவ்விதமான சுலபமான சாலையும் இல்லை. தெரிந்துக்கொள்ளப்பட்ட “”மணவாட்டியாக” இருக்கப்போகிறவர்கள் அனைவரும், “”மிகுந்த உபத்திரவத்தினாலே இராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள்” என ஆண்டவர் கூறியுள்ளார்.
முட்செடிகளை முளைப்பிக்கும் நிலமானது, சரியான கிறிஸ்தவக் குணலட்சணத்தை உருவாக்குவதற்குரிய ஐசுவரியமும், மிகவும் பொருத்தமுமான நிலமாகவே காணப்பட்டது. ஆனால், இந்த நிலமானது முட்செடியின் விதைகளைப் பெருமளவில் கொண்டிருக்கின்றது, மற்றும் இந்த நிலமானது கோதுமையையும், முட்செடிகளையும் வெற்றிகரமாக விளைவிக்க முடியாது. ஆகவே, உவமை கூறுகின்றதுபோல, முள் வளர்ந்து கோதுமையை நெருக்கிப் போடுகின்றபடியால், [R4635 : page 203] போதுமானளவுக்குக் கோதுமை விளைவதில்லை. இந்த முட்கள் சிலர் கருத்துத் தெரிவிப்பது போன்று தீயொழுக்கமும், குற்றமான ஆசைகளும் அல்ல சுயநல வேட்கைகளுள்ள இருதயங்களை உடையவர்கள் இராஜ்யத்தின் செய்தி தொடர்பான எதையும் கேட்பதில்லை. மேலும், இப்படிப்பட்டவர்கள் இவ்வுமையில் குறிப்பிடப்படவும் இல்லை. மாறாக, துணிகரமான பாவிகளாய் இல்லாமலும், வெளிப்புறமாக நீதியின் பாதையில் நடக்கிறவர்களுமாய் இருப்பவர்கள்தான் இந்த உவமையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். “”முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்” (மத்தேயு 13:22). உவமையில் இடம்பெறும் இந்த வகுப்பாரில் அநேக பெருந்தன்மையுள்ள நல்ல ஜனங்கள் அடங்குகின்றனர். ஒருவேளை உலகத்தின் ஆவியினின்றும், அதன் இலட்சியங்கள், ஐசுவரியம், செல்வாக்கிலிருந்தும், இந்த ஜீவியத்திற்கான நற்பொருள்களின் மீதான நேசத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டால், நீதியில் மிகவும் பலன் கொடுக்கின்றவர்களாய் இருப்பார்கள் என நாம் கருதும் அநேக ஜனங்களும் கூட இந்த உவமையிலுள்ள இவ்வகுப்பாரில் அடங்குகின்றனர். நாம் நம்மையும், நாகரிகமான இடங்களிலுள்ள அநேக ஜனங்களுடைய ஊதாரித்தனத்தையும், வீரியத்தையும் பார்க்கும்போது, நமக்குள்ளே பின்வருமாறு கூறுவோம், “”ஒருவேளை இவர்களுடைய ஜீவியங்கள் கர்த்தருடைய வழிக்கு நேராகத் திருப்பப்பட்டால் மற்றும், இந்தப் பூமிக்குரிய சுமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டால், எத்துணை அருமையான பாத்திரங்களாக இவர்கள் இருந்திருப்பார்கள்.” எனினும் இவர்களுடைய பலம், இவர்களுடைய ஆற்றல்/சக்தி உலகக்காரியங்களினாலும், கவலைகளினாலும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவரோடு உன்னதமான கனத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியென அவசியப்படும் கனிகளை இவர்களால் கொடுக்க இயலாது. இத்தகையவர்களுக்கு ஆண்டவருடைய செய்தி பின்வருமாறு உள்ளது; அதாவது, “”உலகப்பிரகாரமான காரியங்களுக்கு உங்களுடைய நேரத்தையும், பெலத்தையும், செல்வாக்கையும் கொடுத்துக்கொண்டு, அதேசமயம், என்னுடைய இராஜ்யத்தில் என்னோடு கூட ஓர் இடத்தைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக உங்களால், உங்கள் அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப் பண்ணிக்கொள்ள முடியாது; மற்றும் என்னுடைய சீஷனாக இருக்கிறவன், தனது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றுவானாக. நான் எங்கேயோ, அங்கே என் சீஷனும் இருப்பான்” என்பதேயாகும்.
“”நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார்” என்று ஆண்டவர் கூறினார் (யோவான் 15:8). இந்த உவமையில், நல்ல நிலத்தின் பலன் வேறுபடுகின்றது. அதாவது, 30, 60 மற்றும் 100 ஆக பலன் தருகின்றது. அதிகமான பலன் இருக்கையில், பிதாவின் மகிழ்ச்சியும், இரட்சகருக்கான மகிமையும் அதிகமாகக் காணப்படும். இருதயத்திலும், ஜீவியத்திலும், குணலட்சணத்திலும் பலன் கொடுக்கிற காரியமானது, அந்த நபரையும், அவர் எப்படி இராஜ்யத்தின் செய்தியை ஏற்றுக்கொள்கின்றார் என்பதையே அதிகமாய்ச் சார்ந்துள்ளது. அதிகமான பலனைக் கொடுப்பவர்கள் என்பவர்கள், அழைப்பை மிகவும் உண்மையாகவும், புத்திக் கூர்மையுடன் பற்றிப் பிடித்துக் கொண்டவர்கள் ஆவார்கள். “”வசனத்தைக் கேட்கிறவன் உணருகிறவனுமாயிருக்கிறான்” (மத்தேயு 13:23). யாருடைய இருதயம் தேவனுக்கு உண்மையாக இருக்கின்றதோ, மற்றும் யார் தன்னைத் தடைகளிலிருந்தும், உலகப்பிரகாரமான ஆசைகள் மற்றும் குறிக்கோள்களிடமிருந்தும் விடுவிக்கின்றனரோ, மற்றும் அப்போஸ்தலனாகிய பவுலைப்போல, “”ஒன்றையே செய்கிறேன்” எனக் கூற முடிகின்றதோ, அவர் நிச்சயமாய் இராஜ்யத்தை அடைவார்.
இராஜ்யத்தின் செய்தியை நாம் கேட்பது மாத்திரம் போதாது; இராஜ்யத்தின் செய்தி தொடர்பான நல்ல இருதயங்களை (அ) நல்ல நோக்கங்களை நாம் பெற்றிருப்பது மாத்திரம் போதாது; இவைகளுடன்கூட ஆண்டவர் கூறுவதுபோன்று, நாம் இராஜ்யத்தின் செய்தியை புரிந்துக்கொள்கின்றவர்களாகவும் இருப்பது அவசியமாகும். ஆகவே, வேத ஆராய்ச்சி அவசியமாய் உள்ளது. பூமிக்குரிய ஜீவியத்தின் சொற்ப வருடங்களுக்காக ஆயத்தப்படுவதில் நாம் பல ஆண்டுகள் (கல்வி) கற்றுக்கொள்வது மிகவும் சரியானதும், ஞானமானதுமாக இருக்கின்றது என்பதைப் புத்தியுள்ள ஜனங்கள் எண்ணுகின்றார்கள். அப்படியானால் நித்தியத்திற்குரிய ஜீவியத்திற்கும், இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களுக்குமான நமது ஆயத்தமாகுதலுக்கு எவ்வளவு கற்றுக்கொள்ளுதல் (அவசியமாய்) சரியானதாய் இருக்கும். இராஜ்யத்திற்கான குணலட்சணத்தின் வளர்ச்சியில் செலவழிக்கப்பட்ட நேரமும், பிரயாசமும் ஞானமான செலவழித்தல் ஆகும். மற்றும், 30, 60 அல்லது 100 என்ற அறுவடை பலனானது நம்முடைய உண்மையின் அளவையும், வீரியத்தையும் சுட்டிக்காட்டுகின்றது. இராஜ்யத்தில் வெகுமானமும் சரிவிகிதமான அடிப்படையிலேயே இருக்கும். “”மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.” இராஜ்யத்தில் மகிமையில் பல்வேறு அளவுகள் காணப்படும், எனினும் போதுமானளவு பலனைக்கொடுக்காத எவரும் பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்; தகுதியில்லாத எவருக்கும் “”நல்லது” என்ற வார்த்தை ஒருபோதும் சொல்லப்படாது.