R4979 (page 69)
மாற்கு 1:29-45
“”அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.” மத்தேயு 8:17
இயேசு, கப்பர்நகூமின் ஜெப ஆலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், பரிசுத்தவானாகிய பேதுருவின் வீட்டிற்குப் போனார். அங்கே பரிசுத்த பேதுருவின் மாமி ஜுரத்தினால் படுத்துக்கிடந்தாள். அவளைக் கரம் பிடித்து எழுப்பி, அவளுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்தது என்பது கணநேர வேலையாக இருந்தது. இயேசுவைக்குறித்த புகழ் பரவிக்கொண்டிருந்தபடியால், அவருடைய சொஸ்தப்படுத்தும் வார்த்தைகளுக்கும், தொடுதுலுக்கும் வேண்டி மாலை வேளையில் திரளான ஜனங்கள் அவரை விடாப்பிடியுடன் தொடர்ந்துகொண்டு வந்தார்கள். “”பலவிதமான வியாதிகளினாலும் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை” (மாற்கு 1:34).
ஆனால் இயேசுவோ தாம் செய்த காரியங்களை இன்னும் அதிகமாய்ச் செய்வதற்கும் (நோய் சொஸ்தப்படுத்துவதற்கும்), தமக்கு ஆதரவாக அந்த ஜனங்களுக்குள் ஏற்பட்ட தாக்கத்தை இன்னும் ஆழமாக்குவதற்கும் தக்கதாக அவர் அவ்விடத்தில் தங்கவில்லை. அவர் தேவனிடம் ஜெபம் பண்ணுவதற்கும், அவரோடு உறவு கொள்வதற்குமென அடுத்த நாளில், விடியும் முன்பதாகவே கப்பர்நகூமை விட்டு, வனாந்தரமான இடத்திற்குச் சென்றுவிட்டார். அவருடைய சீஷர் ஆகுவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டிருந்த பரிசுத்தவானாகிய பேதுருவும், மற்றவர்களும் அவரைத் தொடர்ந்துபோய், “”அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டு வந்தேன் என்று சொல்லி; கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்” (மாற்கு 1:37- 39).
நோய்களைச் சொஸ்தப்படுத்தும் அற்புதமான வல்லமையைக் காட்டிலும் வேறு எதுவும் மனித மனதிற்கு அவ்வளவு கவர்ச்சியாக இருக்க முடியாது. யாரும் வியாதிகளில், வலிகளில், பாடுகளில் சந்தோஷமடைவதில்லை. ஒருவேளை சொஸ்தமாக்கப்படுதல்கள் சாத்தானுடைய வல்லமையினால் நடக்கிறது என்று காணப்பட்டால் கூட, ஜனங்கள் அவனுடைய வல்லமையினாலாகிலும் சொஸ்தமடைவதில் சந்தோஷமடைவார்கள். இன்றைய நாட்களிலும் கூடத் தவிக்கும் பாவப்பட்ட சிருஷ்டிகளுக்கு மருந்துகள் இல்லாமலேயே வியாதிகளிலிருந்து சரீர சுகம் அளிப்பதாகவும், இன்னுமாக இவைகள் தேவனுடைய வல்லமையினாலும், தயவினாலும் செய்யப்படுகின்றன எனவும் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கொஞ்சமும் இசைவில்லாத அநேக தவறான உபதேசங்கள் வாக்களித்துக்கொண்டுக் காணப்படுவதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் இப்படிச் சொஸ்தப்படுத்துகின்றவர்கள், பல்வேறு எதிர்மறையான உபதேசங்களைப் பற்றிக்கொண்டிருப்பதினால் இவர்கள் கொண்டுள்ள இந்த உபதேசங்கள் தேவனுடையது அல்ல என்பது தெரிகின்றது. நாம் புரிந்துக்கொண்டுள்ள வரையிலும், தற்காலத்தில் வியாதியஸ்தர்களை அற்புதமான விதத்தில் சொஸ்தப்படுத்துவதற்கெனத் தேவனுடைய வார்த்தைகள் அதிகாரம் கொடுக்கவில்லை என்றே வேதாகமம் போதிக்கின்றது. ஆதிசபையினருக்கு அருளப்பட்டதும் மற்றும் இயேசுவினாலும், அப்போஸ்தலதர்களினாலும் செயல்படுத்தப்பட்டதும் மற்றும் அப்போஸ்தலர்களுடன் நெருக்கமாய் இருந்தவர்களுக்கு அவர்கள் அருளினதுமாய் இருந்த வரங்கள் ஒழிந்துபோம் எனப் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட பரிசுத்தவானாகிய பவுல் தெரிவிக்கின்றார். அவ்வரங்கள் ஓய்ந்து போய்விட்டன என்று நாம் நம்புகின்றோம். அதாவது, தெய்வீகக் கிருபையின் வெளிப்படுத்தலின் வரிசையில் இடம்பெறும் அடுத்த விஷயமும், மேன்மையான விஷயமுமாகிய பரிசுத்த ஆவியின் கனிகளுக்கு இந்த வரங்கள் இடம் விட்டுக்கொடுத்துப் போய்விட்டன. பரிசுத்த ஆவியின் கனிகளாகிய சாந்தம், பொறுமை, நீடிய பொறுமை, அன்பு ஆகியவை தேவனுடைய கிருபைக்கும், முதற்பேறானவர்களாகிய சபையின் அங்கங்களுக்கும் உள்ள ஆதாரங்களாக இருக்கும்படிக்கு இந்த வரங்கள் இடம்கொடுத்துப் போய்விட்டன. ஆதிசபை நிறுவப்படுதற்கான நோக்கத்திற்கு என மாத்திரமே இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் அற்புதங்கள் செய்யப்பட்டன. இந்த யுகத்திலேயே சகல ஜனங்களும் வியாதியிலிருந்து சொஸ்தமாக்கப்பட வேண்டும் என்பதே தெய்வீகச் சித்தமாக இருக்கின்றது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
மேசியாவின் மகிமையான இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு ஜனங்கள் அனைவரும் சொஸ்தமடையப்படும் காரியமானது, மேசியாவின் இராஜ்யத்திற்குரிய வேலையில் முக்கியமான அம்சமாகத்திகழும் என்பதில் ஐயமில்லை. மாம்சத்தின் குறைபாடுகள் மாத்திரம் சீர்ப்பொருத்தப்படுவதோடு அல்லாமல், சீர்த்திருத்தலின் வேலையானது படிப்படியாக மனுக்குலத்தை, பாவம், நோய் மற்றும் பூரணமற்ற நிலைகளிலிருந்து தூக்கிவிட்டு, முற்றும் முழுமையான பூரண நிலைக்குக்கொண்டு சேர்க்கும்; ஆனால் தெய்வீக ஏற்பாடுகளைத் துணிந்தும், வேண்டுமென்றும் எதிர்ப்பவர்கள் ஏற்றகாலத்தில் இரண்டாம் மரணத்தில் அறுப்புண்டுப் போவார்கள். பின்னர் வேதவாக்கியங்களில் குறிப்பிட்டிருக்கின்ற பிரகாரம் மீதியான மனுக்குலம் முழுவதும் பூரணத்தின் மகிமையான நிலையை அடைவார்கள், “”அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்” (வெளிப்படுத்தல் 21:4-5).
சாத்தானும், அவனுடைய ஊழியர்களாகிய விழுந்துபோன தூதர்கள் “”ஒளியின் தூதனுடைய” வேஷத்தைத் தரிப்பித்துக்கொள்ள நாடுவார்கள் என்றும், இதன் வாயிலாக மனுக்குலத்தின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தத்தக்கதாகவும், இன்னுமாக தேவன் மற்றும் அவருடைய வார்த்தைகளின் மேல் வைக்கப்படும் உண்மையான விசுவாசத்திற்கு எதிரான தவறான உபதேசங்களை வெற்றிகரமாக மனுக்குலத்தின் மனதில் பதிய வைத்துவிடலாம் என்றும் நாடுவார்கள் எனப் பரிசுத்தவானாகிய பவுல் தெரிவித்துள்ளார். அப்போஸ்தலருடைய இந்த வார்த்தைகள் குறிப்பாக நம்முடைய நாட்களுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்கின்றது என நாம் நம்புகின்றோம்; அநேக நல்ல ஜனங்களும், நல்ல மனசாட்சியுள்ள ஜனங்களும் இன்று வஞ்சிக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுவதை நம்மால் பார்க்கப்படுகின்றது; மேலும் இவர்களை வஞ்சிப்பதற்கு அற்புதவிதமான வியாதி சொஸ்தமாக்கப்படுதலையே, எதிராளியானவன் இரையாக / ஆயுதமாகப் பயன்படுத்துகின்றான். வஞ்சிப்பதற்கு இரையாக (தூண்டிலாக) பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபதேசங்களை இங்கு நாம் விவரிப்பது தேவையில்லை என நாம் கருதுகின்றோம்; மாறாக, தற்காலத்தில், தேவனிடமிருந்து எவ்விதமாக அற்புதகரமான வியாதி சொஸ்தமாக்கப்படும் காரியங்களை நாம் எதிர்பார்க்கக்கூடாது என்பதற்கான வேதவாக்கியங்களின் அடிப்படையிலான காரணங்களை முன்வைப்பதிலேயே நாம் திருப்திக்கொள்கின்றோம்.
தேவன் இஸ்ரயேலுடன், நியாயப்பிரமாண உடன்படிக்கைப் பண்ணுகையில், அவர்கள் நியாயப்பிரமாணத்தை மீறும்போது தண்டனையாக வியாதியையும், பிரமாணத்திற்குக் கீழ்ப்படியும்போது ஆரோக்கியத்தையும் அருளுவதாக கூறியிருந்தது உண்மையே ஆகும். “”உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றவர்” என்ற தீர்க்கத்தரிசியின் வார்த்தைகளானது, நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்க்காணப்படும் இஸ்ரயேலர்களுக்குச் சரீர ரீதியாக பொருந்தக்கூடிய ஒன்றாகும். மேலும் புதுச் சிருஷ்டியாகிய சபைக்கு இது ஆவிக்குரிய ரீதியிலும் பொருந்தக்கூடியதாயும் உள்ளது.
ஆனால் புதுச் சிருஷ்டி சொஸ்தமாக்கப்படுவதும், அவனுடைய மாம்சம் சொஸ்தமடைவதும் வெவ்வேறான காரியங்களாகும். புதுச் சிருஷ்டியின் ஆத்தும வியாதிகளும், இருதயத்தின் பாரங்களும்/பிரச்சனைகளும், அவனுடைய மாம்சம் ஒருவேளை பாடுகள்/வலிகள் அனுபவித்தும், மரணத்திற்குள் கடந்து போய்க் கொண்டிருந்தாலுங்கூட நல்ல வைத்தியனால் சொஸ்தமாக்கப்படும். மாம்சத்தை முற்றிலும் ஒப்புக்கொடுப்பதும், அதைத் தேவனுக்குப் பிரியமான மற்றும், புத்தியுள்ள ஆராதனையாகக் காணப்படுகின்றதாக உள்ள ஜீவபலியாகவும் ஒப்புக்கொடுப்பதுமான [R4980 : page 69] நிபந்தனைகளின் அடிப்படையிலேயே நாம் புதுச் சிருஷ்டிகளாக, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளோம் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும் (ரோமர் 12:1).
இன்னுமாக, ஆதிமுதல் கர்த்தர் சபையைக் கையாண்ட விதத்திலும், எவ்விதமான வித்தியாசத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. இயேசுவினாலும், அப்போஸ்தலர்களாலும் சொஸ்தமாக்கப்பட்டவர்கள், “”பாவிகள்” என்றுதான் அனைத்துப் பதிவுகளும் தெரிவிக்கின்றது. எந்த ஓர் அப்போஸ்தலரும் எவ்விதமான வியாதியிலிருந்தும் சொஸ்தமாக்கப்பட்டார் என்பதான எவ்விதமான சம்பவங்களுக்கான பதிவுகளும் இல்லை. பரிசுத்தவானாகிய பவுல் அநேக வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்கியிருந்த போதிலும், எப்பாப்பிரோதீத்து வியாதியாய் மரணத்திற்குச் சமீபமாயிருந்த போது, இவரை அற்புதமான விதத்தில் சொஸ்தப்படுத்துவதற்கான எந்தப் பிரயாசமும் எடுக்கப்பட்டதாக பதிவுகள் காணப்படவில்லை. (பிலிப்பியர் 2:25-27).
அதுபோலவே, தீமோத்தேயுவின் விஷயத்திலுங்கூட, இவருடைய வியாதி நீங்கும்படிக்குப் பரிசுத்தவானாகிய பவுல் இவருக்குக் கைக்குட்டைகளையோ, துண்டுகளையோ அனுப்பி வைக்கவில்லை, அல்லது தான் அவருக்காக ஜெபம் பண்ணுவேன் என்றும் கூறவில்லை அல்லது தீமோத்தேயு தனது சொஸ்தமாக்கப்படுதலுக்காக ஜெபம் பண்ணும்படிக்கு ஆலோசனையை அவருக்குப் பவுல் கொடுக்கவுமில்லை அல்லது இவருக்காக ஜெபம் பண்ணும்படிக்குப் பரிசுத்தவானாகிய பவுல் மற்றவர்களிடத்தில் வேண்டிக்கொள்ளவுமில்லை. மாறாக இவருக்கு ஏற்படும் வயிற்றின் பெலவீனங்களுக்காக சில குறிப்பிட்ட மருந்துகள் எடுத்துக்கொள்ளும்படியாகவே, பவுல் கூறினார் (1 தீமோத்தேயு 5:23). தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் சரீர சொஸ்தப்படுதலுக்காக ஜெபம் பண்ணும் காரியமானது, அவர்கள் கர்த்தரிடம் மரண பரியந்தம் வரையிலும் விசேஷமாக அர்ப்பணித்தவைகளை மீண்டும் திருப்பி எடுத்துக்கொள்வதற்குச் சமமாகிவிடும். ஆனால் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஜனங்களில் உள்ள அநேகரின் விஷயத்தில், அவர்கள் வேண்டிக்கொள்ளாமலேயே, கர்த்தரின் ஊழியத்திற்கென, அவர்கள் ஊழியம் புரிவதற்கு அவசியமான பலத்தையும், வியக்கத்தக்க ஆரோக்கியத்தையும் அவர்களுக்கு அளிக்கும் விதத்தில் கர்த்தர் விசேஷமாகச் செயல்படும் விஷயங்களும் உண்டு. சீக்கிரத்தில் ஸ்தாபிக்கப்படவிருக்கும் மேசியாவின் இராஜ்யத்தின் கீழ் மனுக்குலம் மீது பொதுவாக வரவிருக்கும் ஆசீர்வாதங்களுக்கு முன்மாதிரியாகவே தேவன் அர்ப்பணம் பண்ணாத ஜனங்கள் மத்தியில் அற்புதங்கள் செய்தார்.
சகல வியாதிகளைச் சொஸ்தமாக்கப்படுவதற்கு வலியையும், துக்கத்தையும் புறம்பாக்கிப் போடுவதற்குமென இயேசுவும், அப்போஸ்தலர்களும் அற்புதங்களை நிகழ்த்தவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். அற்புதங்கள், சுவிசேஷச் செய்தியின் மேல் கவனம் ஈர்க்கப்படுவதற்கு மாத்திரமே செய்யப்பட்டன. வெளிப்படுத்தல் 21:4-ஆம் வசனத்தின் விஷயங்கள் [R4980 : page 70] அனைத்திற்குமான காலம், மேசியாவின் ஆயிரம் வருஷம் அரசாட்சிக்கான காலமாக இருக்கும்.
கவனத்தை ஈர்க்கும் நோக்கத்திற்காக மாத்திரமே, இயேசு கப்பர்நகூமில் பல பலத்த கிரியைகளைச் செய்தார் என்று பார்க்கின்றோம். அநேக வியாதியஸ்தர்களை ஏமாற்றத்துடன் கப்பர்நகூமில் விட்டுவிட்டு, இயேசு வேறு பட்டணங்களுக்கும், கிராமங்களுக்கும் புறப்பட்டுப் போனார். இதுபோலவே சொஸ்தமாக்கப்படுவதற்கெனத் தண்ணீருக்குள் இறங்குவதற்கான வாய்ப்பிற்காக சீலோவாம் குளத்தண்டையில் காத்துக்கொண்டிருந்த ஜனங்கள் இருந்த குளத்தை இயேசு கடந்து போகையில் அக்கூட்டத்தில் ஒருவனைக் கவனித்து, “”உன் படுக்கையை எடுத்துக்கொண்டு போ” என்று கூறினார் என நாம் வாசிக்கின்றோம் (1 யோவான் 5:1-9).
யூதர்கள் மத்தியில் குஷ்டரோகம், சொஸ்தப்படுத்த முடியாத வியாதியாகவும், பாவத்திற்கான நிழலாகவும் கருதப்பட்டது. இப்பாடத்தில் நாம் பார்க்கும் குஷ்டரோகியானவனுக்கு, இயேசுவின் வல்லமை மீது விசுவாசம் இருந்தபடியால், அவரிடத்தில் வந்து, முழங்கால் படியிட்டு, சொஸ்தமாக்கப்படுவதற்காக, சுத்திகரிக்கப்படுவதற்காக வேண்டிக்கொண்டான். இந்தக் குஷ்டரோகி, இயேசுவின் சீஷர்களில் ஒருவனாக இருந்த காரணத்தினாலோ அல்லது அவருடைய சீஷனாகுவேன் என்று இவன் வாக்களித்த காரணத்தினாலோ சொஸ்தப்படுத்தப்படாமல், மாறாக இந்தக் குஷ்டரோகி தனது விசுவாசத்தைக் காட்டினதற்காகவும், மேலும் இக்குஷ்டரோகியின் சம்பவமானது, இயேசு தெய்வீக வல்லமையைச் செயல்படுத்தினதற்கான சாட்சியாக ஆசாரியர்களுக்கு இருப்பதற்காகவுமே இவனுடைய விண்ணப்பத்திற்குப் பதில் கொடுக்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட குஷ்டரோகியை, நியாயப்பிரமாணத்தின்படி, தேவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பலிகளைச் செலுத்தவும், தான் சொஸ்தமாக்கப்பட்டதை ஆசாரியனிடத்தில் அறிவிக்கவும், நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியன் அவன் சொஸ்தமாகிவிட்டானா என்பதைச் சோதித்துப் பார்க்கவும் தக்கதாக இயேசு போகச் சொன்னார்.
இந்த மாபெரும் அற்புதத்தைக்குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கர்த்தர் அக்குஷ்டரோகியை எச்சரித்தார். ஆனால் நன்றியின் நிமித்தம் அக்குஷ்டரோகி தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல், எல்லாவிடத்திலும் அதை அறிவித்தான். இதன் விளைவாக அவரால் பெரிய பட்டணங்களுக்குப் போக முடியவில்லை. காரணம் அவர் சொஸ்தமாக்கும்படிக்கு அவரிடத்தில் வியாதியஸ்தர்கள் வந்து குவிந்து விடுவார்கள் என்பதினாலேயாகும். ஆகவே அவர் சிறு பட்டணங்களுக்குக் கடந்து சென்றார் என்ற போதிலும், எல்லா திசைகளிலும் இருந்து சொஸ்தமடையத்தக்கதாக ஜனங்கள் அவரைத் தேடினார்கள்.
ஆனால் அந்தோ! இவர்கள், கர்த்தரின் அடிச்சுவடுகளில் நடக்கும் பின்னடியார்கள் ஆகுவதற்கும், இராஜ்யத்தில் அவரோடு உடன் சுதந்திரர்கள் ஆகுவதற்குமான, கர்த்தரால் விசேஷமாக அழைக்கப்படும் மாபெரும் சிலாக்கியத்தை ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும், திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களையே அதிகம் ஏற்றுக்கொண்டவர்களாய் இருந்தார்கள். அதாவது ஆதாமின் வீழ்ச்சியின் காரணமாக தண்டிக்கப்பட்டு, கல்வாரியின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்டுக்கொள்ளப்பட்ட ஆதாமின் சந்ததியில் உள்ள ஒவ்வொருவரின் மேலும் மேசியாவின் இராஜ்யத்தினால் படிப்படியாக அருளப்படப்போகும், திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களையும், சொஸ்தமாக்குதல்களையுமே இந்த ஜனங்கள் நன்கு புரிந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.”