R2424 (page 27)
யோவான் 4:43-54
“”உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.” யோவான் 4:53.
இராஜாவினுடைய மனுஷனின் குமாரன் சொஸ்தமாக்கப்படும் முன்பு இயேசுவுக்கு, சமாரியா ஸ்திரீக்குப் பிரசங்கிப்பதிலும், கலிலேயாவுக்கு நேரான தமது பிரயாணத்தை முடிப்பதிலும் இரண்டு நாள் செலவாயிற்று. முற்காலத்தில் இஸ்ரயேலினுடைய பத்துக் கோத்திரத்திற்கு உரிய நிலப்பரப்பில், கலிலேயா ஒரு பாகமாக விளங்கினது; மேலும் சமாரியா, கலிலேயா மற்றும் யூதேயாவுக்கு நடுவில் காணப்பட்ட கோட்டமாக/மாவட்டமாக இருந்தது. நமது கர்த்தர் இங்கும் அங்கும் பிரயாணிக்கையில், அவர் 12 கோத்திரத்தார் குடியிருந்த நிலப்பரப்பிற்கு வெளியே ஒருபோதும் கடந்துபோகவில்லை என்பதும் கவனிக்கப்படலாம். இயேசு, யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறந்தார் என்றும், இவ்விடம் எருசலேமிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்றும் இயேசுவின் பிறப்புச் சம்பவித்த கொஞ்சம் காலத்திலேயே, பெத்லகேமில் உள்ள குழந்தைகள் கொல்லப்படுவதற்கு முன்பு, தேவனுடைய வழிநடத்துதலினால் அவருடைய பெற்றோர்கள் எகிப்துக்குத் தப்பி ஓடினார்கள் என்பதும் நினைவில்கொள்ளப்பட வேண்டும்; பின்னர் எகிப்திலிருந்து திரும்பியபோது பெத்லகேமுக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர் நசரேயன் என்று அழைக்கப்படத்தக்கதாக, அவருடைய பெற்றோர்கள், கலிலேயாவிலுள்ள நாசரேத்துக்குக் குடிப்பெயர்ந்தார்கள்; இவ்விதமாக கபடற்ற உத்தம இஸ்ரயேலர்கள் மாத்திரம் உண்மையான வார்த்தையைக் கேட்டு, சொஸ்தமாக்கப்பட்டு, கிருபையின் உடன்படிக்கையின் கீழ், தேவனுடைய புத்திரர்களாக ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக, முன்பும் சரி, இதுவரையிலும் சரி ஒரு மனுஷனும் பேசியிராததும், அவருடைய வாயிலிருந்து புறப்பட்டதுமான கிருபையான வார்த்தைகள் மற்றும் அவருடைய ஆச்சரியமான தனித்துவத்தில் கூட நசரேயன் என்று அவர் அழைக்கப்பட்டது, விசித்திரம் மற்றும் வெறுப்பின் முத்திரை அச்சாகவும் கூட இருந்தது.
நமது கர்த்தரும், அவருடைய சீஷர்களும் “”கலிலேயர்கள்” என்று அழைக்கப்பட்டனர் என்பது நினைவில்கொள்ளப்பட வேண்டும். “”ஒரு தீர்க்கத்தரிசிக்கு, தன் சொந்த ஊரிலே கனமில்லை” என்ற பழமொழியின் உண்மையை உணர்ந்துக்கொண்டவராக, நமது கர்த்தர் கலிலேயாவில் அல்லாமல், யூதேயாவில் தமது ஊழியத்தை ஆரம்பித்தார். கானாவூரில் நடந்த முதல் அற்புதத்திற்குப் பின்னர், அநேகமாக அவர் தம்முடைய சீஷர்களுடன் யூதேயாவுக்குச் சென்றிருக்க வேண்டும்; மேலும் பஸ்கா பண்டிகையின் போதும் அவர் அங்கு இருந்திருக்க வேண்டும்; மேலும் அச்சமயம் அநேக பிரபலமான அற்புதங்களையும் அவர் அங்கே செய்திருக்க வேண்டும்; மேலும் இதன் காரணமாக அவருடைய கீர்த்திப் பரவிச் சென்றது; யூதேயா முழுவதிலும் மாத்திரமல்ல, தமது சொந்த ஊராகிய கலிலேயாவிலும் அவர் கீர்த்திப் பரவிச் சென்றது, காரணம் ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகை அனுசரிப்பதற்காக திரளான பக்தியுள்ள யூதர்கள் எருசலேமுக்குச் செல்வது வழக்கமாயிருந்ததினால், அப்போது கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்கள், தங்கள் ஊருக்குத் திரும்பியபோது, தங்களது ஊரைச்சார்ந்தவரின் கிரியையையும், கீர்த்தியையும் குறித்த செய்திகளைக் கலிலேயாவில் பரப்பினார்கள். இப்படியாக, மாபெரும் தீர்க்கத்தரிசியாக முதன்முதலாக பிரபலமடைந்தவராக நமது கர்த்தர் தமது சொந்த ஊருக்கு இப்பொழுது திரும்பி வந்தார்.
நமது கர்த்தருடைய இந்த அனுபவமும் புதிதல்ல, இது பொதுவானதேயாகும். நாம் மிகவும் நெருங்கி பழகின ஒன்றை/ஒருவரைக் குறித்துப் பெரிதாகப் பொருட்படுத்தாத விஷயமானது, மனித சுபாவத்தின் பண்பாய் உள்ளது.
[R2424 : page 28]
ஒருவர் ஒரு மலையைத் தொலைவில் நின்று பார்க்கையில், எல்லைக்கோடுகள் (outlines) சீரான அமைப்புடையதாகவும், கெம்பீரத்துடனும் காணப்படும், ஆனால் அவர் மலைக்கு அருகாமையில் வந்து பார்க்கையில், அவர் கணித்திருந்த அதன் அழகும், பிரமாண்டமும் நிச்சயமாக ஒன்றுமில்லாமல் போய்விடும், ஏனெனில் அவர்; கண்கள் அம்மலையின் உடைந்த பாகங்கள், வண்டல்கள் (சேற்றுப்படிவங்களையும்) மண்கள், (குவிந்துக் கிடக்கும்) களைகள் மீதும்தான், தன் பார்வையைச் செலுத்துகின்றார். எனினும் தொலைத்தூரத்திலிருந்து பார்க்கப்படுகிறவைகளும், கணிக்கப்படுகிறவைகளும் உண்மையானவைகளாக இருக்கின்றன. இப்படியாகவே, இன்றும் மிக உயர்வாகக் கருதப்படும் சில பூமிக்குரிய நபர்கள், அன்றாடம் (இத்தகைய நபர்களுடன்) மிக நெருங்கிப் பழகுகிறவர்களால் மிக உயர்வாகக் கருதப்படுவதில்லை, இதற்கான காரணம், தற்கால கண்ணோட்டங்கள் தவறானவைகள் என்பதினால் அல்லாமல், அவர்களுடன் நெருக்கமாய் இருப்பவர்களும், அன்றாட ஜீவியத்தில் அவர்களோடு புழங்குகிறவர்களும், அவர்களைச் சரிவர புரிந்துக்கொள்ளாததாலேயே ஆகும். இது பிரபலமான உலகத்தாரின், வீட்டார் மற்றும் உறவினர்களின் விஷயத்தில் உண்மையாய்க் காணப்படுகின்றன. தொலைத் தூரத்திலிருந்து மாத்திரமே பார்க்க முடிகிறதான வாழ்க்கையின் பெரிய சிறப்பம்சங்களை (சாதனைகளை) விட, வாழ்க்கையின் பக்கத்திலுள்ள சிறு சிறு விஷயங்கள் பார்க்கப்பட்டு, அவைகளின் அடிப்படையில் குணங்கள் மதிப்பிடப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஜுலியஸ் சீசர் என்பவர் உலகத்தால் மகாபெரும் மனிதனாகக் கருதப்பட்டார், ஆனால் அதேசமயம் அவருடைய நெருங்கிய நண்பனும், ஊழியனுமாகிய (Cassius) கேசியசின் பார்வையில் குறைவாகவே கருதப்பட்டார்; இந்த அவருடைய நண்பன், ஜுலியஸ் தண்ணீரில் மூழ்கிவிடாதபடிக்கு அவரைக் காப்பாற்றினான், மேலும் ஜுலியஸ் வியாதியடைந்தபோது, அவரோடுகூடே இருந்தவனானபடியினாலும், இச்சம்பவங்கள் மற்றும் இன்னும் பல சம்பவங்களில் அவரிடம் பார்த்த அவருடைய (சரீர) பெலவீனங்களின் அடிப்படையிலேயே அவரை மதிப்பிட்டானே ஒழிய, மற்றத் தருணங்களில் ஜூலியஸிடம் வெளிப்பட்ட மகத்துவங்களை அவன் கருத்தில் கொள்ளவில்லை. அவரிடம் அவன் கொண்டிருந்த நெருக்கமானது, நெருக்கமற்ற மற்றவர்களால் காணமுடிந்த அவருடைய மகத்துவத்தை அவன் பார்க்கமுடியாத அளவு தடைபண்ணினது.
இயேசுவின் விஷயத்திலும் இப்படியாகவே இருந்தது. “”அவருடைய சகோதரரும் அவரை விசுவாசிக்கவில்லை” (யோவான் 7:5). (பண்டைய காலங்களில் சகோதரர் என்ற வார்த்தையானது உறவினர்களைக் குறிக்கின்றது, இதில் பெற்றோரின் உடன் பிறந்தோருடைய புத்திரர்களும், சொந்த சகோதரரும் உள்ளடங்குகின்றனர்). ஊரார் அவருடைய தாயாகிய மரியாளையும், அவருடைய சகோதரர்களையும், மரியாளுடைய கணவனாகிய யோசேப்பையும் அறிந்திருந்தனர்; மேலும் இயேசு யோசேப்பினுடைய குமாரன் அல்ல என்றும், யோசேப்பு, மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டு திருமணம் புரிவதற்கு முன்னதாகவே மரியாள் கருவுற்றிருந்தாள் என்றும் அவர்கள் அறிந்திருந்ததும் வெளிப்படையாகத் தெரிகின்றது, எப்படியெனில், அவர்கள் விவாதம் பண்ணுகையில், “”நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல” என்று இழிவான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்து இதன் [R2425 : page 28] உட்கருத்து விளங்குகின்றது (மத்தேயு 1:18 யோவான் 8:41). அவருடைய இளமை பிராயத்தில் இருந்து அவரை அறிந்திருந்தார்கள், அநேகமாக பல வருடங்களாக அவர்கள் மத்தியில் அவர் தச்சனாக வேலை செய்திருக்க வேண்டும். அவருடைய சொந்த ஊராகிய நாசரேத் ஒருபோதும் செல்வத்திற்கோ, கல்வி அறிவிற்கோ பெயர்ப்பெற்றது அல்ல, மேலும் நாசரேத்தூரில் உள்ள புத்திர செல்வங்கள், யூதர்களின் புத்திசாலிகள் வரிசையில் ஒருவராக இருந்ததுமில்லை. ஆகவே தாங்கள் நன்கு அறிந்திருந்த இயேசுவை, மோசே மற்றும் தீர்க்கத்தரிசிகளால் கூறப்பட்டதும், எழுதப்பட்டதுமான மகாபெரியவர் என்று ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்குச் சிரமமாக இருந்தது.
ஆகவேதான் அவருடைய சொந்த ஊரில், அவரைக் குறித்து, “”இவனுக்கு இந்த ஞானமும், பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?” என்று அவர்கள் ஆச்சரியம் அடைந்து கூறியபோதிலும், “”இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன் மற்றும் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கத்தரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை” என்றும் கூறினதை நாம் வாசிக்கின்றோம் (மத்தேயு 18:54-58).
இப்பொழுது நாம் நமது பாடத்திற்குத் திரும்புகையில், கலிலேயாவின் மாபெரும் தீர்க்கத்தரிசியும், வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்குகிறவருமாகிய அவர் தமது சொந்த ஊருக்கு வந்திருக்கின்றார் என்ற செய்தியானது, கானாவூருக்கு 20 மைல் தொலைத் தூரத்தில் காணப்பட்ட கப்பர்நகூமுக்குச் சென்றடைந்தது; சமுதாயத்திலும், அரசியலிலும் நல்ல மதிப்பிற்குரிய நிலையில் காணப்பட்ட அப்பட்டணத்தைச் சார்ந்த ஒருவனே விசுவாசத்தை வெளிக்காட்டுபவர்களில் முதல் நபராகவும், அதற்குப்பதிலாக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறவனாகவும் இருந்தான், ஏனெனில் யூதேயாவிலிருந்து திரும்பிவந்த பிற்பாடு, இம்மனுஷனுடைய குமாரன் சொஸ்தமாக்கப்பட்டதே நமது கர்த்தரால் செய்யப்பட்ட “”இரண்டாம் அற்புதம்” என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது.
இம்மனுஷனுடைய விசுவாசத்தைப் பரீட்சிக்கும் நோக்கத்திற்காகவே, அவனுடைய விண்ணப்பத்தை நமது கர்த்தர் மறுத்தார் என்பதில் ஐயமில்லை. “”நான் மேசியா என்று நீ என்னை விசுவாசிக்கவில்லை, என்னுடைய அற்புதம் மற்றும் அடையாளத்தின் மீதே நீ கவரப்பட்டிருக்கின்றாய்” என்ற விதத்தில் நமது கர்த்தருடைய வார்த்தைகள் காணப்பட்டது. துக்கத்துடன் காணப்பட்ட, அந்தப் பாசமிக்க தகப்பன், ஓர் அற்புதத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் தனக்கிராமல், கிறிஸ்துவின் வல்லமையின் மீது தனக்கு உண்மையான விசுவாசம் இருக்கின்றது எனவும், இதனால்தான் தன்னுடைய குமாரனை மரணத்திலிருந்து இயேசு விடுவிக்க முடியுமா? என்று, கேள்வி கேட்காமல், “”ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்கு முன்னே வரவேண்டும்” என்று கூறுகின்றான் (வசனம்-49). அவனுடைய உண்மையான விசுவாசத்திற்குப் பலன் கொடுக்கப்பட்டது, எனினும் பல மணி நேரங்கள் அவனுக்குச் சொஸ்தமாக்கப்பட்டதைக் குறித்த எவ்வித நிரூபணம் இல்லாமல் இருந்தபோதிலும், அவன் இன்னும் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும் என்றும், தனது விண்ணப்பம் பதிலளிக்கப்பட்டது என அவன் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவனிடத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டது. அவன் விசுவாசம், பரீட்சையில் மீண்டும் உறுதியாய்க் காணப்பட்டது. அவன் வீட்டிற்குப் போகையில், அவர் தனது விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்து அருளின அத்தருணத்தில் குழந்தை பிழைத்து, சொஸ்தமானது என்று அறிந்தும் கொள்கின்றான். அவனுடைய குமாரன் சரீரப் பிரகாரமாக சொஸ்தமாக்கப்பட்டதைப் பார்க்கிலும் இன்னும் மேலான ஆசீர்வாதத்தை அவனுடைய விசுவாசம் அவனுக்கு அளித்தது, எப்படியெனில், இவ்வற்புதம் காரணமாக அவனும், அவனுடைய வீட்டாரும் மேசியாவின் மேல் விசுவாசிகளாகி, யோவான் 1:12-ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உடன்சுதந்திரர் மற்றும் புத்திரராகும் மாபெரும் சிலாக்கியம் அடையும் வாய்ப்பிற்குள் அவர்களைக் கொண்டு வந்தது.
சொஸ்தப்படுத்தும் இவ்வற்புதத்திலும், மற்ற அற்புதங்களிலும் நமது கர்த்தருடைய நோக்கமானது வலியிலிருந்து, வியாதியிலிருந்து வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்த வேண்டும் என்பதாக இல்லை. இது அவருடைய நோக்கமாக இருந்திருக்குமாயின் ஒரே மூச்சில் சகல வியாதியஸ்தர்களும் சொஸ்தமடையத்தக்கதாக அவர் கட்டளையிட்டிருந்திருப்பார், இதற்கும் மேலாக வியாதிகளை உண்டுபண்ணும் தீமையான சூழ்நிலைகளை அவர் சரிப்படுத்தியிருந்திருப்பார். உதாரணத்திற்கு இராஜாவினுடைய மனுஷனின் குமாரனுக்குக் காய்ச்சல் இருந்தது; அநேகமாக கப்பர்நகூமில் உள்ள அநேகர் இதைப் போன்று காய்ச்சலில் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் கப்பர்நகூம் பட்டணமானது தாழ்வான இடங்களில், சகதியான நிலப்பரப்பினால் கட்டப்பட்டிருப்பதினால், இது மலேரியாவிற்குரிய இடமாகவும், சுகாதாரமற்ற இடமாகவும் இருந்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்த்தர் பொதுவாக எல்லாருக்கும் சுகமளிக்கும் வேலையைப் பண்ணவில்லை, இப்படி அவர் செய்யாதது, அவரிடத்தில் அனுதாபம்/இரக்கம் இல்லாமைக்கான ஆதாரம் ஆகாது; அதேசமயம் கப்பர்நகூமையும், பூமியின் மற்றப் பகுதிகளையும் சுகாதாரமாக/ஆரோக்கியமாக வைப்பதற்கு எது அவசியப்படும் என்பதைக்குறித்த அறிவு/உணர்வு அவரிடத்தில் இல்லாமைக்கான ஆதாரமும் ஆகாது; மேலுமாக பல ஆயிரம் வருடங்களாக முழு உலகத்திலும் வியாதி, பெலவீனங்களை விளைவித்துக் கொண்டிருக்கும் மலேரியா மற்றும் மற்ற விதமான தீமையான சூழ்நிலைகளை அனுமதித்திருக்கும் தேவனானவர், அவர் சார்பில் மனுக்குலத்தின் மீது கவனமற்றவராக இருக்கின்றார் என்பதற்கான ஆதாரமும் ஆகாது. மாறாக தேவன் வியாதிகளைக்குறித்து முன்னமே அறிந்தவராகவும், பாவியான மனுஷனுக்கு எதிரான [R2425 : page 29] (மரண) தீர்ப்புக்குத் துணையாகவும், உதவியாகவும், உடன் இணைந்து வரத்தக்கதாகவும், தீமையான சூழ்நிலைகளை அனுமதித்தவராகவும் இருக்கின்றார்.
மனுக்குலத்தை மீட்டுக்கொண்டவரும், சபிக்கப்பட்ட பூமியிலிருந்து அவருக்குச் சொந்தமானவைகளை மீட்டுக்கொண்டவருமான அவர், அதினின்று சகல தீமையான, நச்சுத்தனமான தாக்கங்களைச் சுத்திகரிக்கும் காலம் வரும் (எபேசியர் 1:14 -“Who is the pledge of our inheritance, unto the redemption of the acquired possession, to the praise of his glory” (Recovery Version); “Which is the earnest of our inheritance, until the redemption of the purchased possession, unto the praise of his glory” (KJV); “Who is a deposit guaranteening our inheritance until the redemption of those who are God’s possession . . . to the praise of his glory” (NIV). “”கிரயமாகக்கொள்ளப்பட்ட தேவனுடைய சொத்து (மனுக்குலம் அவர்களுடைய உரிமை, ஜீவன், பூமி, இயற்கை) அவருடைய மகிமையின் புகழ்ச்சிக்காக விடுவிக்கப்படும் வரையிலும், ஆவியானது நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கின்றது” (சரியான மொழிப்பெயர்ப்பு); அப்படியாக சுத்திகரிக்கப்படும் காலம் வரும்போது பிற்பாடு மரணமோ, வலியோ, வியாதியோ, அலறுதலோ இருப்பதில்லை, ஏனெனில் முந்தினவைகள் எல்லாம் ஒழிந்திடும், எல்லாம் புதிதாய் ஆக்கப்படும். மனுக்குலத்தின் பயன்பாட்டிற்காகவும், ஆசீர்வாதத்திற்காகவும் திட்டமிடப்பட்டதான பூமியும், மனுக்குலம் புதுப்பிக்கப்படும் காலமானது வேதவாக்கியங்களில் சீர்த்திருத்தலின் காலங்கள் என அழைக்கப்படுகின்றது; “”ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக்குணப்படுங்கள். உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கத்தரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கத்தரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. அந்தத் தீர்க்கத்தரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்” (அப்போஸ்தலர் 3:19-23).
முதலாம் வருகையின்போது, நமது கர்த்தரின் ஊழியம் விசேஷமாக தம்மை உலகத்திற்கு ஈடுபலியாக ஒப்புக்கொடுப்பதேயாகும்; மேலும் தம்மீதும், தமது போதனைகளின்மீதும், தம்முடைய எதிர்க்கால வேலையின்மீதும் ஒரு குறிப்பிட்ட வகுப்பார் விசுவாசம் வைத்துக்கொள்ளத்தக்கதாக, அஸ்திபாரமாக விளங்கும்படி ஆதாரங்களைக் கொடுப்பதும் அவரது இரண்டாம் பட்ச வேலையாக இருந்தது; அதாவது, தற்கால யுகத்தின் இத்தகைய விசுவாசிகள் பிதாவினிடத்திற்கு வரவும், புத்திரசுவிகாரம் மற்றும் வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் சுயத்தைப் பலிச்செலுத்துவதின் மூலம் மாபெரும் எதிர்க்காலத்திற்குரிய சீர்த்திருத்த வேலையில், அதாவது பூமியின் சகல குடிகளையும் ஆசீர்வதிக்கும் வேலையில், மேசியாவுடன் உடன் சுதந்திரர்களாக்கத்தக்கதாக விசுவாசம் வைப்பதற்கான அஸ்திபாரமாக விளங்கும்படி ஆதாரங்களைக் கொடுப்பதும் அவரது இரண்டாம் பட்ச வேலையாக இருந்தது.
இராஜாவினுடைய அந்த மனுஷன் விசுவாசத்தின் மூலம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டவனானான், அவனுடைய நடத்தை அவன் விசுவாசத்தைக் காட்டுகின்றது. இப்படியாகவே தேவனால் அங்கீகரிக்கப்படும் சகலரும் காணப்பட வேண்டும்; நமக்கு முன்பாக சுவிசேஷத்தில் வைக்கப்பட்டுள்ள மாபெரும் பரிசை வெல்லப் போகும் யாவரும் இப்படியாகவே காணப்பட வேண்டும், “”இதுவே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாய் இருக்கின்றது.” ஆனால், “”விசுவாசமில்லாத கிரியை செத்தக் கிரியையாயிருக்கின்றது.” விசுவாசம் வெளியரங்கமாகாவிட்டால் விசுவாசம் இல்லை என்பதாகிவிடும். அவருடைய வாக்குத்தத்தங்களின்படி, கர்த்தருக்கான நமது சகல ஊழியங்களும் நமது விசுவாசத்திற்கான நிரூபணங்களாக விசேஷமாக/பிரதானமாக மதிப்பிடப்படுகின்றது (1 யோவான் 5:4; யாக்கோபு 2:26; எபிரெயர் 11:6).
நெப்போலியனின் படையில், ஒரு சாதாரண தனிப்பட்ட வீரன் அவருடைய வார்த்தையை எப்படி விசுவாசித்தான் என்றும், அதன் விளைவாக அவன் எவ்வாறு தலைமை பதவிக்கு உயர்த்தப்பட்டான் என்றுமுள்ள ஒரு கதை கூறப்படுகின்றது. பாரீஸ் பட்டணத்திலுள்ள தனது படையை நெப்போலியன் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில், அவர் கையிலிருந்த கடிவாளம் கீழே விழ, குதிரையானது பாய்ந்து ஓட ஆரம்பித்தது, ஒரு வீரன் அணிவரிசையிலிருந்து பாய்ந்து குதிரையையும் பிடித்து, கடிவாளத்தையும் நெப்போலியனிடம் எடுத்துக்கொடுத்தான். “”தளபதியே உமக்கு மிகுந்த நன்றி” என்று சக்கரவர்த்திக் கூறினான். அதற்கு அவன் உடனடியாக “”எப்படைப் பிரிவிற்கு ஆண்டவனே” என்று கேட்டான். அவனுடைய நம்பிக்கை மற்றும் புரிந்துக்கொள்ளும் தன்மையில் பிரியம் அடைந்த சக்கரவர்த்தி, “”மெய்காவலர் படையினருக்கு நீ தளபதி” என்று பதிலளித்தார். அந்த வீரனுடைய வஸ்திரங்கள் சாதாரணமான தனிப்பட்ட வீரனுக்குரிய வஸ்திரமாயிருப்பினும், தன்னுடைய நம்பிக்கை மற்றவருக்குப் பரிகாசமாக இருக்கும் என்ற உண்மை தெரிந்தும், அவைகளைக் கண்டுகொள்ளாமல், அவன் உடனடியாக, தலைமை அலுவலர்கள் மத்தியில்போய் (தலைவன் போல்) நின்றுவிட்டான். அவன் சக்கரவர்த்தியின் வார்த்தைகளை நம்பினான், அந்த நம்பிக்கையின்படி நடந்துகொண்டான், தளபதியுமானான். இப்படியாகவே, “”நாம் தெய்வீகச் சுபாவத்தில் பங்கடையத்தக்கதாக, மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களை நமது கர்த்தர் நமக்கு அருளியுள்ளார்.” மேலும் தம்மை அன்பு கூருபவர்களுக்குத் தேவன் ஏற்பாடு பண்ணி வைத்துள்ள மகா மேன்மையும், அருமையுமானவைகளை அடைகின்றவர்கள் மாத்திரமே, அவருடைய வார்த்தைகளை அப்படியே நம்புகிறவர்களாகவும் இருந்து, “”வெளிச்சத்தின் பிள்ளைகளாகவும் ஒளியில் நடக்கிறவர்களாகவும்” ஆவார்கள். இத்தகையவர்களே, பாவம், தீமை, மூடநம்பிக்கையின் இருளை அகற்றி, உலகத்தை ஆசீர்வதிக்கவும், புத்துணர்வு அடையச்செய்யவும்தக்கதாக, தனது செட்டைகளில் குணமாக்கும் வல்லமையுடன் எழும்பும் மாபெரும் நீதியின் சூரியனின் அங்கங்களாக இறுதியில் ஆவார்கள். “”அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் இராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” (மத்தேயு 13:43).
ஆனால் தங்கள் மீதே மாபெரும் விசுவாசம் வைத்துக்கொண்டு, இவ்விசுவாசமே தாங்கள் “”தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களில்” ஒருவராக இருப்பதற்கான ஆதாரம் என்று எண்ணிக்கொள்கின்ற தப்பறைகளிலிருந்து, நாம் நம்மைக் காத்துக்கொள்வோமாக. நெப்போலியனுக்கு ஊழியம் செய்து, அதே சமயம் அவரை நம்பின வீரனே பலனைப் பெற்றுக் கொண்டான். ஆகவே ஒவ்வொருவனும் தன்னிடத்தில் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி என்னவெனில், மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள் எனக்கு உரியவைகளாக இருக்கின்றதா? அந்த வாக்குத்தத்தங்களோடு நிபந்தனைகள் உள்ளனவா? ஒருவேளை இருக்குமாயின் என்னுடைய அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலும் உறுதிபண்ணப்படத்தக்கதாக நான் அந்த நிபந்தனைகளுக்கு இசைவாக வாழ்கின்றேனா?
“”விசுவாசத்தில் பூரண நிச்சயம்” அடையத்தக்கதாக, ஒருவனுக்கு இக்கேள்விகளுக்குப் பதில் வேண்டுமெனில், அவன் வாக்குத்தத்தங்களைத் தேடி/ஆராய வேண்டும்; அவைகளின் முக்கியத்துவம் மற்றும் அதனோடு கூட வரும் நிபந்தனைகளை ஆராய்ந்து, பரிசை அவன் வெல்ல வேண்டுமெனில், அவைகளின்படி நடக்கவும் வேண்டும்; அதேசமயம் நமது கர்த்தருடைய வார்த்தைகளையும் அவன் நினைவுகூர வேண்டும், அது என்னவெனில், “”பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத்தேயு 7:21).”