R5223 (page 121)
“தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.” (லூக்கா 14:27)
சீஷன் என்பவன் போதகரைப் பின்பற்றிடும் மாணவன் ஆவான். கர்த்தர் தம் சீஷர்களுக்குச் சில மாபெரும் ஆசீர்வாதங்களை வாக்களித்துள்ளார். அவர்கள் கீழ்ப்படிந்திருந்தார்களானால், அவர்கள் நித்தியமான ஜீவனினால் பெரிதும் ஆசீர்வதிக்கப்பட்டு, அவரோடுகூட அவர் சிங்காசனத்தில் உட்கார்ந்து, அவர் இருக்கும் இடத்தில், அவரோடுகூடக் காணப்படுவார்கள்.
ஆகையால் சீஷயத்துவத்தில் என்னென்ன செய்யப்பட வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாய் இருக்கின்றது. அது சுலபமான காரியமா அல்லது சிரமமான காரியமா? கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்திற்குள் நாம் எப்படிப் பிரவேசிப்பது? இவ்வசனத்திலும், வேறு வசனங்களிலும் கர்த்தர் நமக்கு நிபந்தனைகளைத் தெரிவித்துள்ளார். இன்னொரு வசனத்தில் அவர்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்;” “தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (மத்தேயு 16:24; லூக்கா 14:27) என்று கூறியுள்ளார்.
ஆகையால் இது விஷயத்தில் ஒரு வழிமுறை நிச்சயமாகவே இருக்கின்றது. முதலாவதாக சீஷயத்துவம் என்றால் என்ன என்றும், சிலுவை என்றால் என்ன என்றும் ஒருவன் கண்டுகொள்ள வேண்டும். சிலர் மற்றவரைக் காட்டிலும் ஏறக்குறைய தெளிவாய் உணர்ந்துகொள்ளலாம். சிலுவை சுமத்தல் என்பது சிலருக்கு மிகவும் கடினமான காரியமாகத் தோன்றிடலாம். சிலர் உய்த்துணர்வின் வாயிலாகவும், சிலர் அனுபவத்தின் வாயிலாகவும் காரியத்தினுடைய பாரப்பளுவினை நிதானித்துக்கொள்பவர்களாய் இருப்பார்கள்.
முடிவுவரை தொடர்ந்துபோக வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக்கொள்ளாதது வரையிலும், சிலுவையை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நலமென நமது கர்த்தர் கூறியுள்ளார். இதை “கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய இராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல” (லூக்கா 9:62) என்ற வார்த்தைகள் மூலம் தெரிவிக்கின்றார்.
சிலுவை எதைக் குறிக்கின்றதாயிருக்குமெனக் கர்த்தர் தம் சீஷர்களாகப் போகிறவர்களுக்கு மிகத் தெளிவாய்ச் சொல்லியிருந்தார். தம் சீஷர்களாக இருப்பவர்கள் துன்பப்படுவார்களென அவர் கூறியுள்ளார். சிலுவையைச் சுமத்தல் என்பது ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டிய விஷயமாகும் என்று அவர் நம்மை எச்சரித்துள்ளார். ஆகையால் “என் சீஷனாக வேண்டும் என்று நீ விரும்புகின்றாயானால், உட்கார்ந்து செல்லும் செலவைக் கணக்குப் பார். நீ சிலுவையை எடுத்துள்ளாயானால், அதைத் தூக்க மாத்திரம் செய்யாமல், அது மரணப்பரியந்தம் உண்மையாய்ச் சுமக்கப்பட வேண்டும்” என்று நம்மிடம்
கூறுகின்றார்.
ஆகையால் நாம் சத்திய அறிவிற்குள்ளாக வந்த பிறகே சிலுவையை எடுத்துச் சுமக்கின்றவர்களாய் இருக்கின்றோம். உலகம் சிலுவையைச் சுமப்பதில்லை தங்கள் சொந்தச் சித்தங்களினால் தொடர்ந்து குறுக்கிடப்படுபவர்களும்கூடச் சிலுவை சுமப்பதில்லை. அநேகம் புருஷர்கள் சொல்வதென்னவெனில்: “நான் திருமணமானது முதற்கொண்டு, என் மனைவியை எனது சிலுவையாக நான் பெற்றிருக்கின்றேன்;” மேலும் அநேகம் மனைவிகள் கூறுவதென்னவெனில்: “என் கணவன் எனது சிலுவையாய் இருக்கின்றார்” என்பதேயாகும். ஆனால் இது கிறிஸ்துவின் சிலுவையல்ல – இவர்களின் பிரச்சனை இவர்கள் திருமண விஷயத்தில் தவறாய் முடிவெடுத்ததேயாகும். தம்பதிகள் தவறாய் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும் இத்தகைய நிலைமையானது சிலுவை சுமத்தலாக மாறிடலாம். ஒருவேளை கணவன் அல்லது மனைவியினுடைய எதிர்ப்பானது, கர்த்தருக்கான உண்மையின் நிமித்தம் ஏற்படுமாயின், இதனை சகித்துக்கொள்ளுதல் என்பது சிலுவை சுமத்தலாகும்; ஏனெனில் இது கிறிஸ்துவின் நிமித்தமாக, சத்தியத்தின் நிமித்தமாகச் சகிக்கப்படுகின்றதாய் இருக்கின்றது. கிறிஸ்துவின் நிமித்தமான உண்மையின் காரணமாய் ஒருவேளை தொழிலில் நம்முடன் போட்டிப்போடுகிறவர்களின் எதிர்ப்பைச் சகித்தால், அது சிலுவை சுமத்தலின் பாகமாய் இருக்கும். அனைத்து நேரங்களிலும் எது சிலுவையாக இருக்கின்றது என்று நாம் காணாமல் இருப்பது அநேகமாக நமக்கு நலமானதேயாகும்.
“எங்களுக்கு வர என்ன காத்திருக்கின்றது என்று நாங்கள் அறியோம், தேவன் இரக்கமாய் எங்கள் கண்களுக்கு அவற்றை மறைத்துவிட்டாரே, போகிற வழிதனிலுள்ள ஒவ்வொரு அடியிலும் அவர் புது நிகழ்வுகள் நிகழப்பண்ணுகின்றாரே.”
சிலுவை என்றால் என்ன என்று அறிந்தும், அந்தச் சிலுவையைச் சுமக்க விரும்பி, கிறிஸ்துவின் சீஷனாகுவது வரை, நம்மால் சிலுவையினை எடுத்திட முடியாது. சிலுவையை எடுத்துக்கொண்ட பின்னர், அது சுமக்கப்பட வேண்டும் என்றும் நமது கர்த்தர் கூறுகின்றார். சிலுவையைச் சுமத்தல் என்பது, அதினிடத்தினின்று விலகி நாம் ஓடிவிடுவதையோ அல்லது அதுகுறித்து அதிர்ச்சியடைவதையோ குறிக்கிறதில்லை. சிலுவையைச் சுமத்தல் என்பது, அதைச் சகித்தலாகும். இதுவிஷயத்தில் அவர் அறிவுரையினை நாம் பின்பற்றிட வேண்டும்.