R2388 (page 338)
நீதிமொழிகள் 4:10-19
“என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.” (நீதிமொழிகள் 1:10)
சாலொமோன் தன் சொந்தப் போதனைகளின்படி நன்கு கைக்கொண்டு அல்லது கைக்கொள்ளாமல் நடந்திட்டாலும்சரி, அந்தப் போதனைகளானது அன்றும், இன்றும் ஆரோக்கியமான ஞானமென அனைவராலும் ஒத்துக்கொள்ளப்படுகின்றது. சாலொமோனால் எழுதப்பட்டவைகளானது ஆவியின் ஏவுதலினால் வேதவாக்கியங்களில் இடம்பெறும் தீர்க்கத்தரிசனங்களுக்குச் சமமானவை என்று கருதப்படாவிட்டாலும், ஞானத்திற்கான சாலொமோனின் விண்ணப்பத்தைக் கர்த்தர் கேட்டருளி விண்ணப்பத்தை அருளினார் என்ற உண்மையும், நமது கர்த்தருடைய நாட்களில் இவரது எழுத்துக்களானது திருமறை நூல்களில் ஒரு பாகமாகக் கருதப்பட்டதும், புதிய ஏற்பாட்டின் எழுத்தாளர்களால் மறுக்கப்படாததும், இந்த எழுத்தாளர்களால் அவரது எழுத்துக்கள் மேற்கோள் இடப்பட்டிருப்பதுமான உண்மையும் – இந்த நீதிமொழிகளின் ஞானமானது பரத்திலிருந்துவரும் ஞானவகையாய் இருக்கின்றது என்று நமக்கு உறுதியளித்திட போதுமானவையாகும்.
நம்முடைய பாடத்தில் நாம் பார்க்கும் வேதப்பகுதியில் ஞானி தன்னை ஒரு குமாரனுக்கு நல் ஆலோசனைக்கொடுக்கும் தகப்பன் என அடையாளம் காட்டுகின்றார்; மேலும் தகப்பன்மார்கள் வாலிபர்களோடு அடிக்கடி சம்பாஷித்து, ஜீவியத்தில் கிடைக்கப்பெற்ற தங்கள் அனுபவங்களைக்குறித்துப் பகிர்ந்துகொள்வார்களானால், அது உலகத்திலுள்ள வாலிபர்கள் அனைவருக்கும் நலமாயிருக்கும். தகப்பன்மார்கள் தங்களால் உலகத்திற்குள் கொண்டுவரப்படுபவர்களின் விஷயத்தில், உணவு, உடை முதலான பூமிக்குரிய காரியங்கள் தொடர்பாகப் பொறுப்பு ஒன்றினைத் தாங்கள் பெற்றிருப்பதாக அடையாளம் கண்டுகொள்கின்றனர். ஆனாலும் தங்களுடைய பிள்ளைகளின் இருதயங்களையும், மனங்களையும், ஞானம், நீதி, நியாயம் மற்றும் சத்தியத்தின் பாதையில் வளர்ப்பது தொடர்புடைய விஷயத்தில் தகப்பன்மார்கள் மிக அதிகமான பொறுப்பையுடையவர்களாக இருக்கின்றார்கள் அல்லவா?
நம்முடைய நாட்களில் கிறிஸ்தவ ஜனங்கள் மத்தியிலுங்கூடப் பெருகிவரும் தீமைகளில் ஒன்று பெற்றோர்களின் ஒரு விதமான மனப்பான்மையாகக் காணப்படுகின்றது; குறிப்பாகத் தாங்கள் தகப்பன்மார்கள் ஆகிட்டபோது தாங்கள் எடுத்துக்கொண்ட இந்தப் பொறுப்பினைத் தகப்பன்மார்கள் தள்ளிவிடுவதாகும். தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரைக் கொடுப்பதையும், கண்டிப்பதையும், வழிக்காட்டுவதையும், ஆலோசனை வழங்குவதையும் முற்றிலுமாக மற்றவர்களிடத்தில் – அதாவது சபை ஊழியக்காரரிடத்தில், ஞாயிறு பள்ளி ஆசிரியரிடத்தில் அல்லது தாய்மார்களிடத்தில் விட்டுவிடும் மனப்பான்மை கொண்டிருக்கின்றனர். முறையான பெற்றோருக்குரிய இயல்புணர்வுகளில் இவ்வளவுக்குக் குறைவுபட்டிருக்கும் தகப்பன்மார்களின் பிள்ளைகளானவர்கள், மற்றவர்களின், விசேஷமாகத் தங்கள் தாய்மார்களின் ஆலோசனை, அறிவுரை முதலானவைகளைப் பெற்றுக்கொள்வது நலமாய் இருக்கும்; எனினும் இவைகள் அனைத்தும் தகப்பன் கொடுக்கும் ஆலோசனைக்கு ஈடாகாது; அதாவது உண்மையான விதத்தில் தகப்பனாயிருந்து, தெய்வீக ஏற்பாட்டினால் தன் பராமரிப்பிற்குக் கீழ்க்காணப்படுபவர்களின் உயர்ந்த நன்மைக்கு அடுத்தவைகளைப் பார்த்துக்கொள்ளும் தகப்பனுடைய ஆலோசனைக்கு ஈடாகாது.
தேவனால் கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்குப் பெற்றோர்கள் சார்பில் காணப்படும் இத்தகைய அஜாக்கிரதையினால் பிள்ளைகள் மாத்திரம் பாதிப்பிற்குள்ளாகுகிறதில்லை இக்காரியத்தின் விளைவுகள் பெற்றோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது – கவனிக்கப்படாத பிள்ளையானது தன் மேலான நன்மைக்கடுத்த காரியங்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து, இதற்கேற்ப பெற்றோரைக் குறைவாய் மதித்திடுவார்கள். இதன் விளைவாகக் குடும்பத்தில் பெற்றோருக்கு மரியாதை இருக்காது மற்றும் இதனால் பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் இருக்காது; ஆகையால் குடும்பத்தில் ஒழுங்கின்மையே நிச்சயமாய் ஆளுகை செய்திடும் – சந்தோஷமற்றக் குடும்பமாகிடும். இம்மாதிரியான இல்லங்களில், குடும்பத்தினுடைய எந்த ஓர் அங்கத்தினனிடத்திலும் கிறிஸ்தவ இயல்புகளானது வேரூன்றுவதோ அல்லது வளர்ந்து செழிப்பதோ மிகவும் சிரமமான காரியமாகக் காணப்படும்; ஆனாலும் சிலசமயங்களில் இம்மாதிரியான இடங்களிலும்கூட வேரூன்றுகின்றது. அநேகம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடைய இருதயங்களாகிய தோட்டங்களில் சரியான கொள்கைகளை விதைத்திடத் தாங்கள் தவறிவிட்டதையும், தீய பண்புகளாகிய – அன்பின்மை, பெற்றோருக்குக் கீழ்ப்படியாமை, நன்றியின்மை முதலான களைகள் படர்ந்து அளவுக்கு மீறி தங்கள் பிள்ளைகளில் வளர தாங்கள் அனுமதித்துள்ளதையும் மிகவும் தாமதமாய் உணர்ந்துகொள்கின்றனர். பிள்ளையானவனைப் பயிற்றுவிக்க வேண்டிய விதத்தில் பயிற்றுவிப்பதற்கான அவசியத்தினைக்குறித்துக் கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு நாங்கள் வலியுறுத்துகின்றோம்; வார்த்தையிலும், மாதிரியிலும் தங்கள் பிள்ளைகளுக்குச் சமாதானத்தை, இரக்கத்தை, நன்றியுணர்வை, பெருந்தன்மையை, சாந்தத்தை, அன்பை அன்றாட ஜீவியத்தின் அவசியமான சட்டங்களென விளக்கிக் கொடுப்பதற்கும் கிறிஸ்தவ பெற்றோர்களை நாங்கள் வலியுறுத்துகின்றோம். இத்தகைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சரியான பாதையில் செல்வதற்கு நல்லதொரு துவக்கத்தினை ஏற்படுத்திக்கொடுக்கின்றவர்களாய் இருப்பார்கள்; ஜீவியம் ஆரம்பமாகுகையில் பிள்ளைகளுக்கு அவசியமானதாகவும், தங்களை ஜீவிகளாக உலகத்திற்குள் கொண்டுவந்தவர்களின் கரங்களிலிருந்து பிள்ளைகளும், சமுதாயமும் எதிர்ப்பார்ப்பதற்கு உரிமைக்கொண்டிருப்பதுமான ஒரு துவக்கத்தினை ஏற்படுத்திக்கொடுக்கின்றவர்களாய் இருப்பார்கள்.
ஞானமுள்ள தகப்பனின் நல் ஆலோசனைகளுக்குச் செவிசாய்ப்பதன் மூலமாகக் கீழ்ப்படிதலுள்ள குமாரன் தன் நாட்களை நீடிக்கப்பண்ணுகிறவனாய் இருப்பான் என்று தகப்பனாகிய சாலொமோன் தெரிவிக்கின்றார். பிள்ளைகளுக்கான அன்பையும், பிள்ளைகளின் நலனுக்கான ஆழ்ந்த அக்கறையையும், பெற்றோரின் முழு ஜீவியமும் வெளிப்படுத்திட வேண்டும். பிள்ளையின் குழந்தைத்தனமான நம்பிக்கையானது பெற்றோர் சார்பிலான அன்பற்ற நடத்தைகளினாலும், பயமுறுத்துதல்களினாலும், பெற்றோரின் உதாசீனத்தினாலும் உடைந்து சிதறிடாததுவரையிலும், பிள்ளையானது இயல்பாகவே தன் பெற்றோர்களைக்குறித்து உயர்வாய் எண்ணம்கொண்டிருக்கும் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை மதித்திடும். பிள்ளைகள் பெரும்பாலும் பெரியவர்கள் போலவே, சிலசமயம் இவர்களைக் காட்டிலும் அதிகமாகவே சரியாய்ச் சிந்திக்கிறவர்களாய் இருப்பார்கள்; பிள்ளைகள் பின்வருமாறு, அதாவது (1) பெற்றோரின் அன்பையும், தங்களுடைய நலனுக்கடுத்த விஷயங்களில் பெற்றோரின் அக்கறையையும் தாங்கள் பெற்றிருக்கின்றனர் என்றும், (2) தன் வாழ்க்கையினைச் சரியாய்த் துவக்கத்தக்கதாகப் பெற்றோரின் ஜீவித அனுபவமானது தங்களுக்கு விலையேறப்பெற்ற ஒன்றாய்க் காணப்படுகின்றது என்றுமுள்ள சான்றுகளின் அடிப்படையில் பிள்ளைகள் சிந்திக்கின்றவர்களாய் இருக்க வேண்டும். இப்படியாகப் பெற்றோரின் அறிவுரையினால் வழிகாட்டப்படும், உதவப்படும் பிள்ளையானது, ஜீவியத்தின் அநேகமான சிரமங்கள், பிரச்சனைகள், படுகுழிகளினின்று தப்புவிக்கப்படுவார்கள் மற்றும் அநேகம் நோய்கள், [R2388 : page 339] சரீரப்பிரகாரமான பெலவீனங்கள் முதலியவைகளிலிருந்து தப்புவித்து, நீண்ட ஆயூட்காலம் பெறுவார்களே! மேலும் பிள்ளையின்மீது இப்படி அக்கறைக்கொண்டவர்களாகக் காணப்பட்டு, தன் சொந்த அனுபவங்களின் புத்தகத்திலிருந்து பிள்ளைக்குப் பாடம் கற்பிக்க நாடுகின்ற பெற்றோர் தன் ஜீவியத்தில் ஏற்பட்ட வெற்றிகள், தோல்விகள் மற்றும் தவறுகள் குறித்தும், இவைகளுக்கான காரணங்கள் குறித்தும் திரும்பிப்பார்க்கையில், இதனால் நன்மை அடைகின்றவனாய் இருப்பான். தகப்பனெனத் தன் கடமையினை நிறைவேற்றிடும் யார் ஒருவரும் தனக்கும் சரி, தன் பிள்ளைக்கும் சரி ஆசீர்வாதமாய் இருப்பான் மற்றும் தன் சொந்த ஆயுள்காலங்களையும், தன் பிள்ளையின் ஆயுள்காலங்களையும் கூட்டிக்கொள்கின்றவனாய் இருப்பான்.
நம்முடைய பாடத்தினுடைய 11-ஆம் வசனத்தின் வார்த்தைகளைத் தனது மரணப்படுக்கையில் தன் பிள்ளையை நோக்கி: “ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே (என்னுடைய முன்மாதிரியின் மூலமாய்) உன்னை நடத்தினேன்” என்று உண்மையாய்க் கூறமுடிகின்றதான எந்த ஒரு பெற்றோரும் எத்துணைப் பாக்கியவான்களாய் இருப்பார்கள்; மேலும் அப்பிள்ளைகளும் எத்துணைப் பாக்கியவான்களாய் இருப்பார்கள்; இப்பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டிலும் ஜீவியத்தின் பாதையில் சறுக்கிவிழுவதற்கு எத்தனை குறைவான வாய்ப்புகள் உடையவர்களாய் இருப்பார்கள்; இவர்கள் பரலோக பிதாவின் சத்தத்தைக் கேட்பதற்கும், அதற்குச் செவியைச் சாய்ப்பதற்கும், அவர் வழிகளில் நடப்பதற்கும், எவ்வளவுக்கு அதிகமாய் ஆயத்தமாயும் காணப்படுவார்கள்.