R5287 (page 235)
யாத்திராகமம் 20:12-21
“உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (லூக்கா 10:27)
எவ்வளவுதான் வயதானவர்களாகவோ, அறியாமையிலுள்ளவர்களாகவோ, புத்தியீனர்களாகவோ, பொல்லாதவர்களாகவோ பெற்றோர்கள் இருப்பினும், அவர்கள் தங்கள் பிள்ளைகளிடமிருந்து மரியாதையினைப் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரமானவர்களாய் இருப்பார்கள். எனினும் மரியாதையினுடைய வகையானது அல்லது அளவானது சிலவிதங்களில் பெற்றோரின் குணலட்சணத்தைச் சார்ந்திருக்க வேண்டும். பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் போவது என்பது எங்கும் பரவலாய்க் காணப்படுகையில், அதுவிஷயம் நாங்கள் சொல்லப்போகிற காரியம் கடினமானதாக இருப்பினும், அது உண்மை என்று நாங்கள் நம்புகின்றோம்… அது என்னவெனில், கீழ்ப்படியாமை என்பது பிள்ளையினுடைய பெற்றோரினால் அல்லது பாதுகாவலரினால் உண்டானதே ஆகும்.
குழந்தை நல்லப்பிள்ளையாகப் பிறந்திருக்காது. கர்ப்பக்காலத்தில் தாயின் மனதில் காணப்பட்ட அதிருப்தியும், கலகமும் பிள்ளைப் பிறப்பதற்கு முன்பாகவே பிள்ளையினிடத்தில் பதிந்து போய்விடுகிறபடியினால், எவ்வளவு பயிற்சி கொடுக்கப்பட்டாலும், பிள்ளையினால் அவைகளினின்று முழுமையாய் மீண்டுவரமுடியாது. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடத்திலுள்ள சந்தோஷமற்றப் பண்புகளிலும், கீழ்ப்படியாத பண்புகளிலும் பொறுமையாகவும், நீடிய பொறுமையாகவும் இருப்பது நல்லது.
அநேகமாக இதில் பழி, பெற்றோர்கள்மீது பகுதியாகவே காணப்படும்; அநேகமாக அவர்களுடைய சபை ஊழியக்காரர்கள் தேவனுடைய பிரமாணங்கள் குறித்தும், அதை மனுஷர்கள் செயல்படுத்துவது குறித்தும், அவைகளை மீறுகையில் வரும் தண்டனைகள் குறித்தும் போதிக்கவில்லை இன்னுமாக மனித சுபாவத்தின் பலவீனங்களைப் புரிந்துகொள்வதற்கும், அதனோடு எதிர்த்துப் போராடுவதற்கு உதவிடும் தன்மையிலுள்ள அல்லது ஆவிக்குரிய தன்மையிலுள்ள உணவுகளை வழங்குவதற்குப்பதிலாகப் பிரயோஜனமில்லாத சொற்பொழிவுகளை ஆற்றியிருந்திருக்க வேண்டும். அநேகமாக முழுத்தவறும் தாயிடமுமில்லை. தன் பிள்ளையின் விஷயத்தில் தனக்கும்கூட ஒரு கடமையிருக்கின்றது என்று தகப்பன் மறந்து போயிருக்கலாம் – அதாவது இரக்கமுள்ள, நற்குணமுள்ள, தலைச்சிறந்த எண்ணங்களை அந்த முக்கியமான காலப்பகுதியில் மனைவியைச் சிந்திக்க வைக்க உதவிடும் தன் கடமையினைத் தகப்பன் மறந்து போயிருக்கலாம்.
எப்படியேனும் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பெற்றோர்கள், தங்கள் மாறுபாடுள்ள பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் பயிற்றுவிக்கும் அருமையான வேலையை உடையவர்களாய் இருக்கின்றனர். இப்படியாக உண்மையாய் முயற்சித்திடும் பெற்றோர்கள் பாராட்டப்பட வேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும்; மேலும் நாம் அறியவரும் ஒவ்வொரு தலைச்சிறந்த புருஷன் மற்றும் ஸ்திரீயின் பெற்றோர்களைக்குறித்து நாம் அதிகமதிகமாய் உயர்வாய் எண்ணிட வேண்டும். அந்நியர்களாகிய நாமே அப்பெற்றோர்களைப் பாராட்டுவோமானால், இதைக்காட்டிலும் அதிகமாய்ப் பிள்ளைகள் செய்திட வேண்டும்.
நவீன கால ஆற்றல்மிக்க, செல்வாக்குமிக்க எழுத்தாளர் ஒருவர் ஞாயிறு பாடச் சாலைகளானது ஒரு விதத்தில் நன்மையைக் கொணர்ந்திட்டாலும், இன்னொரு விதத்தில் அதிகமான தீங்கைச் செய்துள்ளது – அதாவது பெற்றோருக்கான பிள்ளையின் மரியாதையினைப் பலவீனப்படுத்தியுள்ளது என்றும், தங்கள் பிள்ளைகளிடத்தில் பெற்றோர்கள் கொண்டுள்ள பொறுப்புக்குறித்த உணர்ந்துகொள்ளுதலிலிருந்து விலகச்செய்துள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றார். பெற்றோர்களானவர்கள் திவ்விய ஏற்பாட்டின்படி தங்கள் குழந்தைகளின் விஷயத்தில் குறிப்பாகத் தேவனுடைய ஆசாரியர்களாக இருக்கின்றனர். எந்தளவிற்கு இந்தப் பொறுப்பிலிருந்து பின்வாங்கப்படுகின்றதோ அல்லது எந்தளவிற்கு இந்த ஸ்தானத்தினுடைய கனமானது புறக்கணிக்கப்படுகின்றதோ, அவ்வளவிற்குக் குழந்தைகள்மீதான செல்வாக்கானது தொலைந்து போயிருக்கும்; மேலும் ஞாயிறு பாடச்சாலையினுடைய வாரம் ஒன்றிற்கு நடைபெறும் ஒருமணிநேர வகுப்பானது, ஒருபோதும் பெற்றோரின் தொடர்ச்சியான மேற்பார்வையின் இடத்தினை எடுத்திட முடியாது.
மிகவும் ஆபத்தான குற்றவாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் பதினாறு முதல் இருபது வயதுவரையிலான ஆண்பிள்ளைகளை உள்ளடக்குகின்றது என்றும், இவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுவருகிறது என்றும் புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. ஆகையால் வளர்ந்துவரும் தலைமுறையினரைச் சரியாய்ப் பயிற்றுவிப்பதில், நல்லுள்ளம்கொண்ட ஜனங்கள் அனைவரும் விழிப்பாய் இருந்திட வேண்டும். பெற்றோருக்குரிய அதிகாரத்தையும், அவர்களுக்குக் கீழ்ப்படிவதையுங்குறித்து வலியுறுத்துவதன், செயல்படுத்துவதன் மூலம், திவ்விய கட்டளையுடன் அனைவரும் விசேஷமாய் ஒத்துழைத்திட வேண்டும். நீண்ட ஆயுள்காலமும், வளமையுமாகிய பலன்களானது இந்த ஒரு கட்டளையின்கீழ் யூதர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது.