R1882 (page 243)
1 சாமுயேல் 3:1-13
“கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன்.” – 1 சாமுயேல் 3:9)
குழந்தைக்கான கல்வி புகட்டுதலானது அது பிறப்பதற்கு நூறு வருடங்களுக்கு முன்னதாகவே துவங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது சரியே. குணலட்சணம் உருவாகும் விஷயத்தில் பெற்றோர்களின் ஆரோக்கியமான செல்வாக்குகளானது ஆற்றல்மிக்கக் காரணியாக இருக்கின்றது. சாமுயேல் தேவபக்தியுள்ள பெற்றோர்களின் குமாரனாய்க் காணப்பட்டார்; அதாவது குழந்தை வேண்டுமென்று கர்த்தரிடத்தில் விண்ணப்பஞ்செய்து பிறந்தவராவார்; ஒருவேளை குழந்தையருளப்பட்டால், குழந்தையானவன் சிறுபிராயம் முதற்கொண்டு கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்படுவான் என்ற புனிதமான வாக்குறுதியும், இவர்களின் விண்ணப்பத்தோடுகூடச் செய்யப்பட்டது. இப்படியாகப் பயபக்தியுள்ள பெற்றோர்களினால் மாத்திரமே கொடுக்கமுடிகிற சொத்தோடுகூட – அதாவது தேவன் மற்றும் நீதியின்பால் விருப்பங்கொள்ளும் மனதோடுகூட ஐசுவரியமாய் உலகத்தில் சாமுயேல் பிறந்தார்.
கூடுமானமட்டும் சீக்கிரமாய் அன்னாள் தன் குமாரனைக் கூடாரத்திற்குக் கூட்டிக்கொண்டுவந்து அங்கே கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரனாய்க் காணப்பட்ட பிரதான ஆசாரியனாகிய ஏலியினுடைய பராமரிப்பின்கீழ்ப் பயிற்றுவிக்கப்படுவதற்கும், கர்த்தருடைய ஊழியத்தில் பயன்படுத்தப்படுவதற்கும் வேண்டி விட்டுச்சென்றாள். சாமுயேலின் இருதயமானது சரியானதாகவும், நற்தன்மையுள்ளதாகவும் காணப்பட்டபடியால், அவர் சுறுசுறுப்பானவராகவும், கீழ்ப்படிதல் உள்ளவராகவும், கற்பிக்கப்படத்தக்கவராகவும், சரியான வழியில் எளிதில் வழிநடத்தப்பட முடிகிறவராகவும் காணப்பட்டார் என்கிற காரியமானது, ஏலி அழைத்ததாகச் சாமுயேல் எண்ணி அவ்வழைப்புகளுக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர் கொண்டிருந்த ஆயத்தத்தன்மையில் வெளிப்படுகின்றது.
இந்த நற்பண்புள்ள குழந்தையைச் சிறுப்பிராயம் முதற்கொண்டு, புருஷன் ஆகிடுவதுவரையிலும், நீதியின் பாதையில் காத்துக்கொள்வதற்கேதுவான, மனுஷீகப் பயிற்சியையும், கட்டுப்பாட்டையும் சாமுயேலுக்குக் கொடுத்திடுவதற்கு ஏலியின் சாந்தகுணமும், [R1882 : page 244] கனிவான அணுகுமுறையும், இவரது நீதியுள்ள ஜீவியமும், போதித்தல்களும் போதுமானதாய் இருந்தன. இவரது செல்வாக்கின்கீழ்க் குழந்தையானது சிறந்த மற்றும் நீதியான குணங்களில் வளர்ந்து பலமடைந்தது மற்றும் கர்த்தருடைய ஊழியத்தில் சுறுசுறுப்பாயும், விடாமுயற்சியுடனும் காணப்பட்டது. ஆனால் ஏலியினுடைய சொந்தக் குடும்பத்தின் விஷயத்தில் காரியங்கள் இப்படியாக இருக்கவில்லை. இவரது சொந்தக் குமாரர்கள் ஒழுக்கமற்றவர்ளாகவும், கீழ்ப்படியாதவர்ளாகவும், நன்றியற்றவர்களாகவும், பரிசுத்தமற்றவர்களாகவும், சீர்க்கெட்டவர்களாகவும் காணப்பட்டனர். ஏலி தன் சுபாவத்தற்கே உரியதான சாந்தமான வழிமுறைகளில் அவர்களது இந்த ஒழுக்கமற்றத் தன்மையைச் சரிச்செய்திடுவதற்கு நாடினார்; ஆனாலும் தன்னுடைய
இந்தப் பிரயாசங்கள் தோல்வியடைந்தபோது, தன் பிள்ளைகள் விஷயத்தில் மிகவும் அவசியமாயிருந்த கடுமையான பிரயாசங்களினால் அவர்களைக் கட்டுப்படுத்திட அவர் முயற்சித்திடவில்லை இப்படியாக அவர்கள் தங்கள் தகப்பனுக்கும், பிரதான ஆசாரியனென அவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட தேவனுடைய நோக்கங்கள்மீதும் நிந்தையைத் தொடர்ந்து கொண்டுவந்தார்கள்.
இந்தக் கவனக்குறைவானது குற்றஞ்சாட்டப்படுவதற்கு ஏதுவானதாய் இருந்தது மற்றும் அது கர்த்தருக்கும் பிரியமற்றதாய் இருந்தது. ஆகையாலே குழந்தையாகிய சாமுயேல் வாயிலாக ஏலிக்கு வந்ததாக 11-13 வரையுள்ள வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதான எச்சரிப்புகளை நாம் பார்க்கின்றோம்.
கர்த்தருடைய சினம் குறித்தும், தன் குமாரர்களுடைய ஒழுக்கமற்ற நிலைக் குறித்தும், தன் சொந்த உண்மையற்ற நிலைக் குறித்தும், குற்றஞ்சாட்டப்படத்தக்கதான தனது கவனக்குறைவு குறித்தும் எண்ணிப்பார்ப்பதற்கு ஏலிக்குக் கடினமாகவே இருந்தது; ஆனாலும் சாந்தத்தோடும், தாழ்மையோடும் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொண்டவராக, “அவர் கர்த்தர், அவர் தன் பார்வைக்கு நலமானதைச் செய்வாராக” என்று கூறினார். இந்த முன்னுரைக்கப்பட்ட தீர்ப்பின் நிறைவேறுதல் குறித்தச் செய்திவந்தபோது – அதாவது பெலிஸ்தர்களுக்கு முன்பாக இஸ்ரயேலர்களின் தோல்விகுறித்தும், யுத்தத்தில் தனது இரண்டு குமாரர்களின் மரணம் குறித்துமான செய்தி வந்தபோது, அது கடுமையான அடியாக இருந்தது; ஆனாலும் கர்த்தருடைய பெட்டியானது சத்துருக்களின் கரங்களை எட்டியது என்ற செய்தியை அவர் கேட்டபோது, அவருடைய ஆழ்ந்த துக்கம் அவரை நிலைகுலையச் செய்தது, மற்றுமவர் இருக்கையிலிருந்து பின்னாக விழுந்து, பிடரி முறிந்து செத்துப்போனார் (அதிகாரம் 4:18). இவருக்குப் பெலவீனங்கள் காணப்பட்டபோதிலும், இவரது இருதயமானது எப்போதும் தேவனுக்கு நேர்மையாயும், உண்மையாயும் காணப்பட்டது மற்றும் தேவனுடைய நோக்கங்களானது இவருக்கு அருமையானவைகளாகவும் காணப்பட்டது; இரக்கமுள்ளவராகவும் கிருபையுள்ளவராகவும், கோபங்கொள்வதில் தாமதிக்கிறவராகவும் காணப்படும் தேவன், ஏலியை அவரது கவனக்குறைவின் காரணமாகக் கடுமையாகத் தண்டித்திட்டாலும், அவர் இயேசு கிறிஸ்துவின் வாயிலாய் மனுஷர்களுடைய இரகசியங்களை நியாயந்தீர்த்திடும் நாளில் இரக்கத்திலும், மன்னிப்பிலும் தம்முடைய இந்த வேலைக்காரனை நினைவுகூர்ந்திடுவார் என்பதில் ஐயமில்லை (ரோமர் 2:16).
இச்சம்பவமானது குணலட்சணத்தினுடைய பலத்திற்குக் கர்த்தரால் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து ஆற்றல்மிக்க விதத்தில் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகின்றது. நீதியின் வழிகளைக்குறித்துப் போதுமான அளவுக்குக் கற்பித்துக்கொடுத்த பிற்பாடு, பலமான குணலட்சணங்களைக் கர்த்தர் எதிர்ப்பார்த்திடுவார் மற்றும் எதிர்ப்பார்த்திடுவதற்குமான உரிமையையும் அவர் பெற்றிருக்கின்றார். “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபேசியர் 6:10). “விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்” (1 கொரிந்தியர் 16:13). நாம் விசுவாசத்திலும் பலமுள்ளவர்களாய் இருக்க வேண்டும், குணலட்சணத்திலும் பலமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்; இப்படியே நாம் தேவனுக்குப் பிரியமானவர்களாகவும், அவரால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவர்களாகவும் காணப்படுவோம். ஒருவேளை பெலவீனமும், இருமனமும் நம் இயல்பான குறைபாடாக இருப்பினும், இவைகளுக்கு எதிராய் நாம் போராடாமல் இருந்தால், அது நாம் சாக்குச் சொல்வதற்கு ஏதுவானதல்ல. தலைச்சிறந்த பாத்திரங்களில் சிலர் சுதந்தரிக்கப்பட்ட பலவீனங்களுக்கு எதிராக உண்மையாய்ப் போராடி சாதித்தவர்கள் ஆவார்கள். நாம் தேவனுடைய உதவியை வேண்டினால், அவர் நம் பிரயாசங்களோடுகூடத் தம் பலத்தை அருளுவதற்கு எப்போதும் ஆயத்தமாயிருக்கின்றார்.
இன்னொரு பாடம் கர்த்தருக்குரிய பயபக்தியிலும், அறிவிலும் பிள்ளையைப் பயிற்றுவிப்பதிலுள்ள பெற்றோரின் பொறுப்புக்குறித்த தேவனுடைய கண்ணோட்டம் பற்றியதாகும். கடமையானது வீட்டைத்தாண்டியும் செயலாக்கம்கொண்டிருப்பினும், அது வீட்டில்தானே துவங்குகின்றது எனும் உண்மையினை இங்கு நாம் வலியுறுத்துகின்றோம். வெளியில் உள்ளவர்கள் மத்தியில் வைராக்கியம் கொண்டிருப்பதைக் காட்டிலும், தங்கள் சொந்தக் குடும்பத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதிலும், அதை மாதிரிப்படுத்துவதிலும் குறைவான வைராக்கியம் கொண்டிருப்பதன்மூலம் சிலர் தவறு செய்கின்றனர். (அன்பு, பராமரிப்பு, பெருந்தன்மை) அறம் இல்லத்திலேயே துவங்கிட வேண்டும் மற்றும் அங்கிருந்தே தொடர்ந்திட வேண்டும். மற்ற அனைத்தையும்விட இக்களத்திலேயே (இல்லத்திலேயே), அதுவும் மற்றவைகளைக் காட்டிலும் இக்களம் பலன்கொடுப்பதில் தாமதமாய்க் காணப்பட்டாலும், இக்களத்திலேயே ஜெபத்துடனும், பொறுமையுடன் வேலை செய்யப்பட வேண்டும்.