R4871 (page 344)
“வேலையில் அசதியாயிராமல், ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.” (ரோமர் 12:11)
இவ்வசனத்தில் இடம்பெறும் “business” / வேலை என்ற வார்த்தை மிகவும் ஆழமான அர்த்தமுடையதாகும். எதைச் செய்தாலும் நாம் அனைத்தையும் கர்த்தருக்கென்று செய்திட வேண்டும்; நாம் எதைச் செய்தாலும், அதைக் கர்த்தருக்கென்று முழுவதுமாய்ச் செய்திட வேண்டும். கிறிஸ்தவனைப் பொறுத்தமட்டில், ஜீவியத்தில் அவனுடைய பிரதான வேலை… தேவனை மகிமைப்படுத்துவதாகும், கர்த்தர் சுட்டிக்காண்பித்துள்ளது போன்று தேவனுக்கு ஊழியஞ்செய்வதாகும், சகோதர சகோதரிகளுக்கென்று ஊழியஞ்செய்வதாகும், சத்தியத்திற்காக ஊழியஞ்செய்வதாகும், நீதிக்கு ஊழியஞ்செய்வதாகும், “கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாய் அனைத்து மனுஷருக்கும், அதிலும் விசேஷமாக விசுவாச வீட்டாருக்கும்” ஊழியஞ்செய்வதாகும். நம்முடைய ஆதார வசனத்தில் இடம்பெறும் தொழில் எனும் வார்த்தையானது கர்த்தரால் அங்கீகரிக்கப்படும் எந்த ஒரு மற்றும் எவ்வகையான தொழிலையும் உள்ளடக்குகின்றதாய் இருக்கும். மதுபான தொழிலில், புகையிலைத் தொழிலில் அசதியாய் இராமல் ஜாக்கிரதையாய் இருக்கும்படிக்குச் சொல்லப்பட்டிருக்கின்றது என்று நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது; ஏனெனில் கர்த்தருடைய அங்கீகரிப்பிற்குப் பாத்திரமானது என்று நாம் நம்பிடும் அத்தகைய தொழில்களுக்கு மாத்திரமே நாம் கவனம் செலுத்திட வேண்டும்.
“அசதியாயிராமல் ஜாக்கிரதையாய் இருங்கள்” எனும் வார்த்தையானது, சோம்பேறியாய், சுறுசுறுப்பற்றவர்களாய் இராதேயுங்கள் என்று சொல்வதற்குச் சமமாகும். ஒருவர் செய்யக் கடமைப்பட்டுள்ள அல்லது செய்யும்படிக்குச் சிலாக்கியம் பெற்றுள்ளதான எந்த ஒரு தகுதியான வேலைக்கும் சிறந்த மற்றும் விழிப்புள்ள கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அப்போஸ்தலனின் கருத்தாய் இருக்கின்றது. செய்வதற்குப் பாத்திரமான எதுவும், வைராக்கியத்தோடு செய்யப்பட வேண்டும். முதலாவதாக நம்முடைய வேலை / தொழில் பாத்திரமானதாவென்று பார்த்துக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் இரண்டாவதாக அவ்வேலையினை உண்மையோடு செய்திட வேண்டும் என்பதே அப்போஸ்தலனின் கருத்தாகும். தனிப்பட்ட தேவைகளுக்காயினும் அல்லது கர்த்தருடைய வேலைக்காயினும் பணம் தேவையெனில், பணம் தரும் அந்தத் தொழிலினை ஊக்கமாயும், உற்சாகமாயும், கர்த்தருக்குச் செய்வதுபோன்று செய்வதற்குரிய சிலாக்கியமென உணர்ந்தவர்களாயும் நாம் செய்திட வேண்டும். நாம் எந்த விதத்திலும் அசதியாயோ, அஜாக்கிரதையாயோ காணப்படக்கூடாது.
நம்முடைய பூமிக்கடுத்த தேவைகளுக்காய்க் கொஞ்சம் ஏற்பாடுகள் பண்ணிடுவது அவசியமாகும். இதற்கு எத்தனை நேரம் செலவிடப்பட வேண்டும் என்பது, அவனவன் தனக்காய்த் தீர்மானித்துக்கொள்ள வேண்டிய காரியமாகும். கர்த்தருக்காகவும், அவரது ஊழியத்திற்கென நம் ஜீவியங்களைக் கொடுத்துவிடுவதற்காகவும் நாம் அர்ப்பணம்பண்ணின பிற்பாடு, வெகு சொற்ப நேரமே கொடுப்பதற்குக் காணப்படுகின்றது. சத்தியத்தைப் பிரகடனப்படுத்தும் விசேஷித்த ஊழியத்திற்கென்று அதிகம் நேரம் கிடைக்கத்தக்கதாக, நியாயமாய்க் கூடுமானமட்டும் இந்த ஜீவியத்தினுடைய காரியங்களிலிருந்து நாம் நேரத்தை மீட்டுக்கொள்ளத்தக்கதாக பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கென்று இது, நமது குடும்பத்தார், தங்கள் தேவைகளுக்கென்று மற்றவர்கள் மீது சார்ந்து இருக்கத்தக்கதாக நாம் விட்டுவிட வேண்டும் என்று குறிப்பதாகாது. நமக்கான தகுதியான நலன்களுக்கடுத்த காரியங்களை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் சுமையினால் பாரமடைந்து அமிழ்ந்துபோகக்கூடாது, மாறாக நம்மைச் சார்ந்து இருப்பவர்களைச் சரியாய் நாம் பார்த்துக்கொள்கின்றவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய சொந்தத் தேவையைப் பொறுத்தமட்டில், உண்ணவும், உடுக்கவும் இருந்தால், அதிலே நாம் திருப்தியாகிட வேண்டும் மற்றும் நீண்ட காலத்திற்காய்க் குவித்துக்கொள்கிறவர்களாய் இருத்தல்கூடாது.
“அனலாயிருத்தல்” என்னும் வார்த்தையின் அர்த்தம் மிகவும் சூடாய் இருப்பதை, வேகுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும். நாம் எதைச் செய்திட்டாலும், அதை நாம் கர்த்தருக்கென்று இருதயப் பூர்வமாயும், முழுப்பலத்தோடும் செய்திட வேண்டும் என்ற கருத்தையே அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். தான் செய்கிற எந்தக் காரியத்தையும் அசதியாய்ச் செய்பவன், அசதியாய் இருக்கும் பழக்கத்தினை உருவாக்கப் பெற்றிருப்பான் மற்றும் இது ஜீவியம் முழுவதும் அவன் மீது காணப்படும். நாம் எதைச் செய்திட்டாலும், அன்போடு / அனலாய்ச் செய்திட வேண்டும். நாம் கர்த்தருக்குரியவர்கள் மற்றும் நாம் செய்யும் எந்த வேலையும் அவருடையதேயாகும். நம்முடைய காரியங்களில் நாம் அனலாய்க் காணப்படுவதில் கர்த்தர் பிரியப்படுகின்றார். தன் மனசாட்சியினை மீறின நிலையில் ஒருவன் ஒரு தொழிலில் காணப்படுவானானால், அவன் அதனின்று விலகி, உலகில் ஏதேனும் நன்மை செய்ய முடிகின்ற வேலைக்குள் வருவானாக.
நாளைய தினத்தைக்குறித்துக் கர்த்தருடைய ஜனங்கள் கவலைப்படக்கூடாது. எனினும் தேவையில் காணப்படும் அயலார்களுக்கும், நண்பர்களுக்குமென்று ஏதேனும் செய்ய முடியத்தக்கதாய் நாம் காணப்படுவதற்கு வேண்டி நாம் கவனமாயும், முன்னேற்பாடுள்ளவர்களாயும் இருந்து, சேர்த்து வைக்க வேண்டும் என்றும் வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. சேமித்து வைக்கப்படும் பணமானது, பல நாட்களினுடைய உழைப்பின் சேமிப்பாய் இருக்கின்றது. தற்கால உடனடி தேவைக்கென்று நமது பணங்கள் அனைத்தையும் நாம் செலவழித்திடக்கூடாது, மாறாக எதிர்க்காலத்தில் நல்லப் பலன்கள் உண்டாகத்தக்கதாக, நாம் சுயக்கட்டுபாட்டுடன் காணப்பட வேண்டும். இந்த விஷயம் உணவு மற்றும் உடையின் விஷயத்திலும்கூடப் பொருந்தும். ஒருவேளை நம்முடைய கையிருப்புக் குறைவாக இருக்குமானால், எப்படி அடுத்து வஸ்திரங்கள் வரும் என்று எண்ணாதிருங்கள். ஒருவேளை நாம் அடுத்துத் துணிகளைப் பெற்றுக்கொண்டால், ஒருவேளை அது திருடப்பட்டுப்போகலாம்.