R3805 (page 203)
லூக்கா 11:1-13
வேதவாக்கியங்களில் குடும்ப ஜெபமானது குறிப்பாய்ப் போதிக்கப்படாவிட்டாலும், அது தகுதியான ஒன்றே என்பதில் நமக்கு ஐயமில்லை. உண்மைதான் மாம்சீகக் குடும்பம் என்பது கர்த்தருடைய குடும்பத்திலிருந்து வேறுபட்ட ஒன்றாகும்; ஆனாலும் எங்கு மாம்சீக குடும்பமானது “”கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும்”” வளர்க்கப்பட்டு வருகின்றதோ, அங்குச் சிருஷ்டிகரைத் தொழுதுகொள்ளும் விஷயத்தில் தங்கள் பெற்றோரோடுகூடத் தலைவணங்கிடுவதில் இன்பம் கொள்ள முடியாத அளவுக்கு, மிகவும் பயபக்தி இல்லாமல் காணப்படும் சிறுபள்ளைகளின் நிலைமை அபூர்வமாகவே இருக்கும். ஒருவேளை பிள்ளைகள் தாங்களாகவே முடிவெடுத்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தவர்களாய் இருந்து, தொழுதுகொள்வதில் பங்கெடுக்க விருப்பமற்றுக் காணப்படுகையில், அவர்கள் வற்புறுத்தப்படாமல் விடப்படுவதில் கர்த்தர் பிரியம்கொள்வார் என்பது நமது எண்ணமாகும்; ஏனெனில் தம்மை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்பவர்களையே கர்த்தர் தேடுகின்றார். கணவனோ அல்லது மனைவியோ தேவனுடைய பிள்ளையாய் இராமல், ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாதவர்களாய் இருக்கும் பட்சத்தில் அவன் அல்லது அவள் கிருபையின் சிங்காசனத்தை நோக்கி ஜெபம் ஏறெடுக்கையில், தொழுதுகொள்கையில், ஜெபத்தினை வழிநடத்திடுவது தகுதியாய் இராது. இது விஷயத்தில் திவ்விய வரையறைகளை நாம் அதிகமதிகமாய்க் கண்டுகொள்கையில் நாமும், நம்மோடு தொடர்பில் இருப்பவர்களும் ஜெபம் என்பது ஒரு மாபெரும் சிலாக்கியம் என்று அதிகமதிகமாய் உணர்ந்துகொள்வோம்; மேலும் ஜெபமானது உண்மையுள்ள இருதயங்களுடன் யேகோவா தேவனை நம் பிதா என்று அழைக்க முடிபவர்களுக்கு மாத்திரமே உரியது என்றும், இப்படிப்பட்டவர்கள் மாத்திரமே கர்த்தர் இயேசுவைத் தங்கள் இரட்சகர் என்று ஏற்றுக்கொண்டவர்களாய் இருப்பார்கள், காரணம் “”என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வாரன்”” என்று இயேசு கூறியிருக்கின்றார் (யோவான் 14:6) என்றும் அதிகமதிகமாய் உணர்ந்துகொள்வோம்.
நிழலில் ஆசாரியர்கள் மாத்திரமே கர்த்தருக்குத் தூபம் ஏறெடுத்ததுபோல, இராஜரிக ஆசாரியகூட்டத்தாராகிய, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் மாத்திரமே, தற்காலத்தில் ஜெபம் என்னும் இச்சிலாக்கியத்தினை உடையவர்களாய் இருக்கின்றனர். எனினும் கர்த்தருக்கு உண்மையாய் இருக்க வேண்டும் அல்லது வேண்டாம் என்று தீர்மானிக்கும் கட்டத்தினை இதுவரையிலும் எட்டிடாத விசுவாசிகளினுடைய பிள்ளைகள், அர்ப்பணம்பண்ணியுள்ளதான தங்கள் பெற்றோரின் உறவுமுறை மூலமாய்க் கிருபையின் சிங்காசனத்தினை அணுகிடும் சிலாக்கியம் உடையவர்களாய் இருப்பார்கள் என்று நாம் அனுமானிப்பது நியாயமான கருத்தேயாகும். நீதிமானாக்கப்பட்ட விசுவாசிகள், ஆனால் கர்த்தருக்குத் தங்களையே அர்ப்பணித்திடும் கட்டத்தினை இன்னமும் எட்டாதவர்களாய் இருப்பவர்கள்கூட ஜெபத்தினை மீட்பரை நோக்கி ஏறெடுக்க சிலாக்கியம், உரிமைப் பெற்றிருக்கின்றார்கள் என்று கூட நாம் அனுமானிக்கலாம்; எனினும் அர்ப்பணம்பண்ணாத விசுவாசி – கிருபையின் சிங்காசனத்திற்றகு முன்பு ஏற்றுக்கொள்ளப்படுவான் என்றோ அல்லது “”பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே”” என்று ஜெபம்பண்ணுகையில், பிதாவை நோக்கி அழைக்க முடிகிறவர்களுக்கு இருப்பது போன்ற தகுதியினைப் பிதாவின் முன்னிலையில் பெற்றிருப்பான் என்றோ உறுதியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவித்திடும் எந்த வேதவாக்கியத்தினையும் நாங்கள் அறியோம்.