R1963 (page 81)
பின்வரும் கடிதமானது, சந்தேகத்திற்கிடமின்றி அநேகருடைய உணர்வுகளின் குரலாகவே காணப்படுகின்றது.
அன்புக்குரிய நண்பரே:– எனக்கு இப்பொழுது இரண்டு வயதுள்ள பெண் குழந்தை இருக்கின்றாள். 1910-ஆம் வருஷத்தில் அவள் பதினாறு வயதை அடைபவளாக மாத்திரம் காணப்படுவாள். கேள்வி என்னவெனில், ஒழுங்கின்மை ஏற்படும் காலப்பகுதியில் அவள் நிலைமை என்னவாக இருக்கும்? என்பதேயாகும். அவள் அநேகமாய் ஒரு வகுப்பாரைச் சார்ந்தவளாய் இருப்பாள். அநேக தேவனுடைய பிள்ளைகளுக்கு, வளர்ந்துகொண்டிருக்கும் சிறு பிள்ளைகள் இருப்பார்கள் மற்றும் இதே கேள்வி அநேகருக்கும் காணப்படும். கிறிஸ்துவின் மணவாட்டியில் அங்கமாகிடும் நம்பிக்கையிலும், உலகத்தின்மீது வரவிருக்கும் உபத்திரவ காலத்தின்போது அவரோடுகூட எடுத்துக்கொள்ளப்படுவதிலும் களிகூரும் மற்றும் உலகில் விடப்படும் தன் பிள்ளையின் நிலைமைக்குறித்துச் சிந்திக்காமல் காணப்படும் எந்த ஒரு பெற்றோரும் நிச்சயமாய்ப் பாராட்டப்பட வேண்டியவர்களே. சங்கீதம் 37:25,26; 102:28 மற்றும் நீதிமொழிகள் 11:21 ஆகிய வாக்குத்தத்தங்களை நான் காண்கின்றேன்; ஆனாலும் இவை வழிவகைகளைப் பயன்படுத்துதல் குறித்துத் தவிர்க்கிறதில்லை. நீதிமான்களின் பிள்ளைகள் ஒருவேளை “உபத்திரவ காலத்தில்” காப்பாற்றப்படுவார்களானால், இது அவர்களது பாதுகாப்பிற்காய் ஏற்பாடுபண்ணப்பட்டுள்ள வழிவகைகளைப் பயன்படுத்துவதன் மூலமேயாகும் என்பதாக எனக்குத் தோன்றுகின்றது; பயன்படுத்தப்பட வேண்டிய வழிவகைகளைக்குறித்து அவர்களது பெற்றோர்களும், பாதுகாவலர்களும்தானே சிந்திக்க வேண்டும்?
நான் புரிந்திருக்கிறபடி ஒழுங்கின்மை நிலைமையானது (1) வர்த்தகத்தை முழுமையாய் அழித்துவிடும், இரயில்கள் இயங்காது, அஞ்சல் சேவை இயங்காது, தந்தி சேவைகள் திறந்திருக்காது; (2) வியாபாரத்தை முழுமையாய் அழித்துவிடும் – உற்பத்தி நடைபெறாது, வர்த்தகம் நடைபெறாது, அதுவும் வர்த்தகம் பண்டைய கால விதங்களில், குறுகிய வரம்பு நிலைகளுக்குள்ளாக மட்டும் நடைபெறுமே தவிர மற்றப்படியல்ல; (3) அரசாங்கத்தை முழுமையாய் அழித்துவிடும் – தனி நபர்கள் தங்கள் சொந்தப் பலத்தினால் மாத்திரமே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, மற்றப்படி தனி நபர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்புத் தராது. நாடுகளானது கொள்ளையர் கூட்டத்தாரினால் நிரம்பி இருக்கும்; மேலும் ஜனங்கள் மத்தியிலுள்ள சமாதான குணமுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும் தற்காப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் வேண்டி சிறுசிறு கூட்டத்தாராய் இணைந்துகொள்ளும் கட்டாயத்திற்குள்ளாவார்கள். உணவிற்காகவும், உடைக்காகவும் இவர்கள் தங்களால் உண்டுபண்ண முடிந்தவைகள்மீதும், கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்துக்கொண்டவைகள்மீதும் சார்ந்திருக்கும் கட்டாயத்திற்குள்ளாகுவார்கள்.
பட்டணங்களும், நகரங்களும் சுட்டெரிக்கப்படும் அல்லது சஞ்சரிப்பு இல்லாமல் பாழாய்ப்போம், அழிக்கப்பட்டுப்போம்; உற்பத்திக்கான இயந்திரங்கள் பயன்பாடில்லாமலும், பழுதடைந்து போனதினாலும் அழிக்கப்படும் அல்லது பிரயோஜனமற்றதாகக் கருதப்படும்; இதனால் ஒழுங்கின்மைக் காலத்திற்குப் பிற்பாடு, உலகமானது மீண்டுமாகப் புதிதாய்த் துவங்க வேண்டியதற்கான கட்டாயத்திற்குள்ளாய்க் காணப்படும்.
நாட்டினுடைய இந்நிலைமைப் பற்றின கேள்வியையும், தாங்கள் கருத்தில் எடுக்க நான் விரும்புகின்றேன்; அநேகமாக நான் இங்கு விவரித்துள்ள அளவுக்கு மிகவும் மோசமாக இருக்காது; ஐக்கிய நாடுகளிலும், இங்கிலாந்திலாகிலும் அவ்வளவுக்கு மோசமாக இருக்காது. இந்த இரண்டு நாடுகளும் சுவிசேஷயுகத்தின்போது விசேஷித்த தயவுகளைப் பெற்றிருக்கின்றன; அநேகமாக இந்த இரண்டு நாடுகள் உபத்திரவ காலங்களிலும்கூட இன்னும் தயவு பெற்றிடலாம். இந்நாடுகளின் உயர்தர அறிவும், ஒழுங்கிற்கான பெரிதான விருப்பமும், சத்தியம் பற்றின பெரிதான அறிவும் – இந்நாடுகளைப் புதிய ஒழுங்குகளுக்கு விரைவாய் இசைவிற்குக்கொண்டுவர உதவிடலாம்; மேலும் மீதியுள்ள உலகத்தார்மீது வரும் கடுமையான தண்டனைக்களவுள்ள மிகக்கடுமையான தண்டனைகளை இந்நாடுகள்மீது கொண்டுவராமல் இருக்கலாம். மேலும் தீர்க்கத்தரிசனங்களானது குறிப்பாய் ரோம சாம்ராஜ்யத்தைச் சுட்டிக்காட்டுகிறதல்லவா? ஐக்கிய நாடுகளும், இங்கிலாந்தும் அநேகமாக ரோம சாம்ராஜ்யத்தின் பாகமாய் நிச்சயமாக இருப்பதில்லை.
அக்காலத்தினுடைய ஆபத்துகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு ஏதுவாய் யார் மிகவும் தயவு பெற்ற நிலைமையில் காணப்படுகின்றனர் என்று நாம் பார்க்கையில், பட்டணங்களும், நகரங்களும்தான் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும் என்பது நிச்சயமே. பட்டணங்கள் மற்றும் நகரங்களிலிருந்தும், பயணம்பண்ணுவதற்கான முக்கிய பாதைகளிலிருந்தும் தொலைத்தூரத்தில் காணப்படுபவர்களும், பழங்கால முறைமையின்படி வாழ்பவர்களும், தங்களைச் சுற்றியுள்ள நிலங்களில் வேலை செய்வதன்மூலம் தங்கள் தேவைகளைச் சந்தித்துக்கொள்பவர்களும், தங்கள் தேவைகள் சந்திக்கப்படுவதற்காய் வர்த்தகத்தைச் சார்ந்திராதவர்களுமானவர்களே அவ்வளவுக்குச் சிரமத்திற்குள்ளாகதவர்களாய் இருப்பார்கள்; நகரங்களிலிருந்தும், பிரயாண பாதைகளிலிருந்தும் மிகத் தொலைத்தூரத்தில் காணப்படுபவர்கள், கொள்ளையர் கூட்டத்தாரிடமிருந்து தங்களைப் பாதுகாப்பாய் வைக்க முடிந்தவர்களாய் இருப்பார்கள். இத்தகையவர்கள் இருக்கும் இடங்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளாக இருக்கும்; மேலும் மலைப்பகுதிகள் மிக எளிதாகப் பாதுகாக்கப்படலாம் மற்றும் தாக்குதலிலிருந்து காக்கப்படலாம். இது யூதேயாவிலிருக்கும் கிறிஸ்தவர்கள் யூதருக்கான உபத்திரவ காலம் நெருங்குவதைக் காண்கையில், “மலைக்கு ஓடிப்போங்கள்” என்று கூறி கிறிஸ்து எச்சரித்ததை நமக்கு நினைப்பூட்டுகின்றது. யூதர்மீது வந்த உபத்திரவ காலமானது, வரவிருக்கும் உபத்திரவ காலத்திற்கான நிழலாய்க் காணப்பட்டது. நாம் எச்சரிக்கப்படுவதற்கும் மற்றும் ஒழுங்கின்மை ஆரம்பிக்கையில் உலகில் காணப்படப்போகும் நமது குடும்பங்களுக்காகவும், நண்பர்களுக்காகவுமான அடைக்கலமாயிருக்கும் இடங்களை நாம் ஏற்பாடுபண்ணிடுவதற்கும் வேண்டி, அவர் அந்த எச்சரிப்பைக்கொடுப்பதில் நோக்கம்கொண்டிருந்திருக்கலாம் அல்லவா?
சகோதரர் ரசல் அவர்களின் பதில்:– வரவிருக்கும் உபத்திரவம் குறித்து மேலே இடம்பெறும் கருத்துகளானது, மிகவும் மிதமான ஒன்று என்று நாங்கள் நம்புகின்றோம். எருசலேமுடைய வீழ்ச்சியின்போது, அதன்மீது வந்திருந்த உபத்திரவம்குறித்த பதிவுகளானது, மிக அதிகமாய் அச்சம் தரக்கூடியதாகும்; அப்படியே ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாகப் பிரான்ஸ் நாட்டில் நடந்த பயங்கரமான ஆட்சி பற்றின பதிவும் காணப்படுகின்றது. இந்த இரண்டு மாபெரும் நிகழ்வுகளும் வேதவாக்கியங்களில், வரவிருக்கும் பொதுவான உபத்திரவத்திற்கான மாதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது; மேலும் வரவிருக்கும் உபத்திரவமானது இந்த இரண்டு உபத்திரவங்களைக் காட்டிலும் மோசமாய் இருக்கும் என்றும் – “யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்” என்றும் தெளிவாய்த் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 நூற்றாண்டுகளினுடைய தீர்க்கத்தரிசன சரித்திரத்தில் ரோம சாம்ராஜ்யமானது முக்கிய இடம் வகிக்கின்றது என்றபோதிலும், “கர்த்தருடைய நாளை” குறிப்பிடும் மகா உபத்திரவங்களானது, அடையாளமான பாபிலோனால் – குழப்பமான பெயர்க் கிறிஸ்தவ மண்டலத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இது நிச்சயமாய் இங்கிலாந்தையும், ஐக்கிய நாடுகளையும் உள்ளடக்கிடும் என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். கர்த்தருடைய முதலாம் வருகையின்போது, மாபெரும் ஒளியைக் கண்டு, அவரைப் புறக்கணித்தவர்கள் மீதே கடுமையான உபத்திரவங்கள் வந்ததுபோன்று, ஆங்கில மொழி பேசும் ஜனங்களால் அனுபவிக்கப்பட்ட மகா சிலாக்கியங்களும், ஆசீர்வாதங்களும், அவர்கள்மீது மாபெரும் பொறுப்புகளைக் கொண்டுவந்துள்ளது என்றும், கடுமையான உபத்திரவங்களையும் கொண்டுவரும் என்றும் நாங்கள் அஞ்சுகின்றோம்.
புயல் வருகையில், அனைவருடைய மனப்பான்மையும் மகா பர்வதங்களுக்குக் கீழும் (இராஜ்யங்கள் கீழும்), (பிரயோஜனமான அமைப்புகளாகிய) சமுதாயம் எனும் கல்மலைகளிலும் மூடலையும், பாதுகாப்பையும் நாடுவதாகக் காணப்படும் (வெளிப்படுத்தல் 6:15-17); மேலும் அநேகர் நாடுகளிலிருந்து நகரங்களுக்கு ஓடிடுவார்கள். “உலகத்தின்மீது வரவிருக்கும் யாவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளும்” “ஜெயங்கொள்பவர்கள்” பர்வதத்திற்கு – கர்த்தருடைய இராஜ்யத்திற்கு ஓடிடுவார்கள் மற்றும் மற்ற ஒருவராலும் அடையமுடியாத பாதுகாப்பில் [R1963 : page 82] காணப்படுவார்கள் (லூக்கா 21:36); “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.” (சங்கீதம் 24:3-6).
ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்தின் மகா நாளில், அவருடைய கோபத்திலிருந்து தங்களை மறைத்துக்கொள்வதற்கான மனுஷர்களின் பிரயாசங்கள் அனைத்தும் விருதாவாகிடுவதைக் காண்கையில், பரிசுத்தவான்கள் தங்கள் பிள்ளைகளை மறைத்துக்கொள்வதற்கான பிரயாசங்கள் எடுப்பது என்பது அறிவீனமாய் இருக்கும் என்று அறிந்தவர்களாக, இத்தகைய பிரயாசங்கள் எடுக்காமல் இருப்பது நலமாகும். உபத்திரவமானது பாவத்தையும், அனைத்துப் போலி அமைப்புகளையும், காரியங்களையும் கவிழ்த்துப்போடும்படிக்கு வருகின்றது; அது கொண்டுவரும் படிப்பினைகளானது பொதுவான மனுக்குலத்திற்குப் பிரயோஜனமாய்க் காணப்பட்டு, அவர்களது விக்கிரகங்களை நொறுக்கிப்போட்டு, அவர்களது இருதயங்களைச் சுத்திகரித்திடும். நம் பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும் சுத்திகரிப்பு வேண்டுமெனில், அவர்கள் அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நாம் எண்ணிடக்கூடாது. அவர்களுக்கு அது தேவையில்லையெனில், கர்த்தர் தமது சரீரமாகிய, தமது சபையின் மகிமையடைந்த அங்கத்தினர்கள் – உபத்திரவ காலத்தின்போது தங்கள் பிள்ளைகளையும், நண்பர்களையும் பராமரிப்பதற்கும், அவர்களுக்கு நன்மையாயிராத அனைத்திலிருந்தும் அவர்களுக்கு உதவியளித்திடுவதற்கும் அனுமதித்திடுவார் என்ற நம்பிக்கையில் நாம் இளைப்பாறலாம். மாம்சத்தில் பிள்ளைகளோடு இருந்து செய்வதைக்காட்டிலும், மகிமையில் பிள்ளைகளுக்கு உதவிசெய்ய நன்கு முடிகிற மற்றும் உதவிடும் பாதுகாவலர்களாக நாம் காணப்படுவோம்; இதைவிட நாம் வேறு எதை எதிர்ப்பார்த்திட வேண்டும்.
தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர்களால் முடிந்த சிறந்த ஏற்பாடு, வார்த்தையின் மூலமாயும், மாதிரியின் மூலமாயும் நீதியில் உண்மையுள்ள அறிவுரைகளைக் கொடுப்பதேயாகும். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஆகையால் இரட்சிப்பின் திட்டத்திலும், யுகங்களுக்கடுத்தத் திட்டங்களிலும் அவர்களுக்குப் போதிக்கத் துவங்குங்கள். அவர்கள் தேவனுடைய ஞானம், நீதி மற்றும் அன்புகுறித்த உண்மையான புரிந்துகொள்ளுதலுக்குள் வருகையில், இது அவர்களுக்குத் தங்கள் சொந்த நடக்கைத் தொடர்புடைய விஷயத்திலும், சக சிருஷ்டிகளுடன் நடந்துகொள்ளும் விஷயத்திலும், நீதி மற்றும் அன்புகுறித்த ஆழமான மற்றும் உண்மையான கண்ணோட்டங்களைக் கொடுத்திடும். சாந்தம், தாழ்மைகுறித்தும், பெருமை மற்றும் அகங்காரத்தின் அறிவீனம்குறித்தும் கற்றுக்கொடுங்கள். சிந்தையில் பெருந்தன்மை கொண்டிருப்பதுகுறித்தும், “போதுமென்கிற மனதுடனேகூடிய தேவபக்தியே உண்மையான ஐசுவரியம்” என்பதை அடிக்கடி நினைப்பூட்டி, கொஞ்சத்தில் சந்தோஷமாய் இருப்பதுகுறித்தும் கற்றுக்கொடுங்கள். “தேசத்திலுள்ள சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்” (செப்பனியா 2:3) எனும் கர்த்தருடைய வார்த்தைகளை அவர்களுக்கு நினைப்பூட்டுங்கள். உலகத்தின் நிரந்தரமற்ற ஐசுவரியங்களில் ஐசுவரியவான்களாய்க் காணப்படுபவர்களும், தரித்திரராகவோ அல்லது ஐசுவரியவான்களாகவோ காணப்படும் பெருமையுள்ளவர்களும், பொல்லாத செய்கைக்காரர் அனைவரும் விசேஷமாய் உபத்திரவத்திற்குள்ளாகுவார்கள். (மல்கியா 4:1; யாக்கோபு 5:1-6- ஆம் வசனங்களை ஒப்பிட்டுப்பார்க்கவும்).