R4942 (page 460)
இயேசு பிறந்து, நாற்பது நாட்கள் ஆனவுடன், யோசேப்பும், மரியாளும் அவரை ஆலயத்தில் அர்ப்பணிக்கும் பொருட்டாக, எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள முதற்பிறப்பிற்குச் செய்ய வேண்டிய வழக்கத்தின்படி அவருக்கும் செய்யப்பட்டது. முழுத் தேசத்திலும் உள்ள முதற்பேறானவர்கள் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டபோது முதற்பேறானவர்கள், தேவனுடைய பணிக்கென்று விசேஷமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு கோத்திரமாகிய லேவியர்களுக்கு அடையாளமாக இருப்பதினால், இந்த முறைமை ஒவ்வொரு தாய்க்குப் பிறக்கும் தலைச்சன் பிள்ளைக்கும் பொருந்தும். முதற்பேறான பிள்ளை தேவனுக்கும், அவருடைய பணிகளுக்கும் விசேஷமாக அர்ப்பணிக்கப்பட வேண்டும்.
இந்த முக்கியத்துவம், இந்தச் சுவிசேஷ யுகத்தில் சேர்க்கப்படும் தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையானது, முதற்பேறானவர்களின் சபை என்று அழைக்கப்படுவதிலிருந்து விளங்குகின்றது. மேலும் நம்மைக் குறித்துத் “தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பேறானவர்கள்” என்று பரிசுத்தவானாகிய யாக்கோபு கூறுகின்றார் (யாக்கோபு 1:18). சபை முதலாம் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் பரலோக மகிமைக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னர், திரும்பக்கொடுத்தலின் முறை மூலம், பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதித்து, பூமிக்குரிய தளத்தில் தேவனுடைய புத்திரர்களாகும் வாய்ப்பை மனுக்குலத்திற்கு அளிக்கக் கூடிய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் (அப்போஸ்தலர் 3:19-21).
விசுவாசிகளின் முன்னிலையில், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தேவனுக்கு அர்ப்பணிக்கும் வழக்கத்தை நாம் பார்த்திருக்கின்றோம். இப்படிச் செய்வதினால், பிள்ளைகள் மேல் நன்மைக்கு ஏதுவான செல்வாக்கே காணப்படும். அதாவது, பிள்ளைகள் எதிர்க்காலத்தில் தங்கள் பெற்றோர்கள் கர்த்தருக்கு மிகச் சிறந்ததை அர்ப்பணித்ததின் மூலம் வெளிப்பட்ட அவர்களின் பராமரிப்பு, அன்பு மற்றும் பக்தியை எதிர்க்காலத்தில் உணர்ந்துகொள்வார்கள். இப்படியாகப் பிள்ளைகள் கர்த்தருக்குத் தங்களை அர்ப்பணிப்பது தொடர்புடைய விஷயத்தில் அனுகூலமான தாக்கத்தினை அடையப் பெற்றிருப்பார்கள்.
மேலும் தங்களிடத்திலுள்ள சிறந்ததை கர்த்தருக்கு அர்ப்பணிக்கும் பெற்றோர்களும், மிகப்பெரிய ஆசீர்வாதத்தைத் தங்களுக்கு வருவித்துக் கொள்கின்றார்கள். சோதனைகளும், போராட்டங்களும் நிச்சயமாக வரும். ஆனால், அதன் மத்தியிலும், அவர்களுடைய பிள்ளைகள் தேவனுக்கு உரியவர்களே ஆவார்கள். மேலும் இவர்கள், உம் சித்தமே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினால், மற்றவர்களால் அறிந்துக்கொள்ள முடியாத சமாதானத்தையும், ஆவியில் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்வார்கள். இது பிள்ளைகள் பகுத்தறிவு மற்றும் தீர்மானம் பண்ணக்கூடிய வயதை அடையும்போது, அவர்களுடைய தனிப்பட்ட அர்ப்பணிப்பிற்கு அவர்களைத் தகுதியாக்கிடாது என்றாலும், பெற்றோர்களுடைய ஆசீர்வாதமான செல்வாக்கானது, [R4942 : page 461] பிள்ளைகள் வயதில் முதிர்ச்சியடைகையில் சத்தியம் மற்றும் நீதியின் விஷயத்தில், தேவனுக்குள் சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கு உதவியாகக் காணப்படும் என்று நாம் நம்புகின்றோம்.