R4199 (page 200)
1 சாமுயேல் 12:1-25
“நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.” (24-ஆம் வசனம்)
சாமுயேல் தனது சொந்தக் கணக்கை ஜனங்கள் முன்பாக ஒப்புவிப்பதற்கென, சவுலின் முடிச்சூட்டு விழாவைத் தெரிந்தெடுத்துக்கொண்டார். தேவனுடைய ஊழியக்காரனாக, சாமுயேல் அந்த ஜனத்திற்குப் பிரதானமான நியாயாதிபதி ஸ்தானத்தை வகுத்துவந்தார், ஆனால் இராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதின் காரணமாக அரசியல் சம்பந்தமான செல்வாக்குச் செலுத்துவதிலிருந்தும், பொறுப்பிலிருந்தும் தீர்க்கத்தரிசியான சாமுயேல் விடுவிக்கப்பட்டார். பரிதானமாக (இலஞ்சமாக), அதாவது ஏதேனும் விதத்தில் ஜனங்கள் தொடர்பான காரியத்தில், தான் எடுத்த முடிவு அல்லது செலுத்தின தீர்ப்புக்குமேல் செல்வாக்குக் கொள்ளும்விதத்தில், தான் ஜனங்களிடத்தில் எதையாகிலும் வாங்கியுள்ளாரா அல்லது இல்லையா என்று சொல்லும்படிக்குச் சாமுயேல் அனைத்து ஜனங்களிடமும் கேட்டார். சாமுயேல் உண்மையுள்ளவராகக் காணப்பட்டார் என்று ஜனங்கள் ஏகமாய்க் கூறினார்கள்; பின்னர்த் தனக்கு எதிராக எதிர்காலத்தில் எப்போதாவது ஒருவேளை ஏதேனும் சொல்லப்படாதப்படிக்கு, ஜனங்கள் கொடுத்த இந்தச் சாட்சிக்கு இராஜாவும், சர்வவல்லமையுள்ள தேவனும் சாட்சியாய் இருக்கின்றார்கள் என்றும் சாமுயேல் கூறினார்.
தைரியத்திற்கும் மற்றும் தேவனிடத்திலும், ஜனங்களிடத்திலுமான உண்மைக்கும் மோசே மற்றும் சாமுயேலின் ஆட்சித் திறமையானது, மேன்மையான உதாரணங்களாக வரலாற்றின் பக்கங்களில் காணப்படுகின்றது. இந்தச் சுவிசேஷயுகத்திலுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களில் மிகச் சொற்பமானவர்களே ஒருவேளை, விசேஷித்த அரசியல் செல்வாக்குள்ள ஸ்தானங்களில் காணப்பட்டிருந்தாலும் அல்லது காணப்பட்டு வந்தாலுங்கூட, இங்கு முன்வைக்கப்பட்டுள்ள கொள்கையானது அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் காணப்படும் தேவனுடைய பரிசுத்தவான்கள் அனைவராலும் உணர்ந்துகொள்ளப்பட வேண்டும். இதே கொள்கை, வீட்டிலும், குடும்பத்திலும்கூடப் பொருந்துகின்றது. ஒவ்வொரு தகப்பனும் தன்னுடைய குடும்பத்தைக் கையாளும் காரியத்தில் உள்ள மேன்மை தாங்கின தன்மை மற்றும் உயர்ந்த குணம் தொடர்புடைய விஷயத்தில் (சாமுயேலைப்போன்று) தனது குடும்பத்தாரின் கவனத்தைக் கவரமுடிகின்றவராகக் காணப்பட வேண்டும். தகப்பன் எவ்விதத்திலும் சுயத்தை நாடுகிறவராக இல்லை என்றும், அவர் ஒரு கணவனுக்குரிய, ஒரு தகப்பனுக்குரிய தனது பொறுப்பில் உண்மையுள்ளவராய் இருந்து, தெய்வீக ஏற்பாட்டின்படி தனக்குரியதாய்க் காணப்படும் பொறுப்புகளையும், வாய்ப்புகளையும் ஞானமாய்ப் பயன்படுத்துவதற்கென நாடுபவராய்க் காணப்படுகின்றார் என்றும், தனது பொறுப்பின்கீழ் இருப்பவர்களைப் பராமரிக்கின்றார் என்றும், குடும்பத்தாரின் நலனுக்காக, போதுமான அளவுக்கு தனது ஜீவியத்தைச் செலவிடுகின்றார் என்றும், ஒருபோதும் குடும்பத்தாரின் நன்மைகளுக்கு எதிராக அவர் செயல்படுவதில்லை என்றும் தகப்பனைக்குறித்துக் குடும்பத்தார் சாட்சி சொல்வதற்கு முடிகின்றவர்களாகக் காணப்பட வேண்டும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தாயாரும், ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு மகளும்கூடத் தங்களது உண்மைத்தன்மையை, தங்களது நேர்மைத் தன்மையைக் குறித்து, தங்களது குடும்பத்தின் அங்கத்தினர் சாட்சிபகரத்தக்க நிலைமையில் காணப்பட வேண்டும். குடும்பத்திற்கு உண்மையாய் இருப்பவர்தான், பெரிய குடும்பமாகக் காணப்படும் தனது தேசத்தாருக்கு நேர்மையாய்க் காணப்பட முடியும். சாமுயேலுக்குக் குமாரர்கள் காணப்பட்டாலும்கூட, அவர் தனது குமாரர்களை அரசியல் பதவிகளில் அமர்த்த நாடவில்லை. இஸ்ரயேலின் நலனுக்கடுத்த விஷயங்களில் சாமுயேல் காண்பித்த உண்மை என்பது தேவனிடத்தில் அவர் கொண்டிருந்த உண்மையைக் குறிக்கின்றதாக இருக்கின்றது.
இப்படியாகவே தேவனுடைய ஜனங்கள் விஷயத்திலும் உள்ளது. தேவனுடைய ஜனங்கள் தங்களது சொந்தக் குடும்பத்தாருக்குப் பணிவிடைகள் செய்யும் விஷயத்தில் மாத்திரம் இல்லாமல், எல்லாவற்றிலும் தங்களுடைய சொந்தக் கணிப்பை நம்பாதவர்களாய்க் காணப்பட வேண்டும். அவர்கள் பரத்திலிருந்துவரும் ஞானத்தை நாட வேண்டும்; அதாவது ஜெபம் பண்ண வேண்டும், வேதவாக்கியங்களின் போதனைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.