(Q54:2)
கேள்வி (1907)-2- “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” பிள்ளைகள் ஏன் அடிக்கடி சரியான வழியினின்று விலகுகின்றனர்?
பதில் – அவர்கள் நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படவில்லை என்பதே பிரதான காரணம் என்று நான் எண்ணுகின்றேன். சத்தியத்திலுள்ள ஜனங்களுக்குப் பிள்ளைகளைப் பயிற்றுவித்தல் விஷயத்தில் சிறு படிப்பினை அவசியம் என்று நான் எண்ணுகின்றேன். அநேகமாக இவ்விஷயத்தில் சில சாதகமின்மைகள் நமக்குக் காணப்படவே செய்யும். உங்கள் இருதயமானது எவ்வளவுக்கு அதிகம் பெரிதாகியும், மன்னிக்கிறதாகியும், தயவுள்ளதாகியும் உள்ளதோ, அவ்வளவுக்கு அதிகமாய் உங்கள் நண்பர்களையும், உங்கள் பிள்ளைகளையும் மன்னிக்கிறவர்களாகுவீர்கள்; ஆனாலும் உங்கள் பிள்ளைகளைக் கையாளும்போது, நீங்கள் அவர்களை மற்ற ஒரு புருஷனையோ அல்லது ஸ்திரீயையோ கையாளுகிறதுபோல கையாளக்கூடாது என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும்; நீங்கள் உருவாகிவரும் குணலட்சணத்தைக் கண்நோக்க வேண்டும் மற்றும் கர்த்தருடைய ஒழுங்குகளுக்கு இசைவாக, கர்த்தர் நடத்தப் பிரியப்படும் வழியில் அக்குணலட்சணத்தை வனையத்தக்கதாகப் பயிற்றுவித்திட வேண்டும். ஒருவேளை குணமானது, வளைந்த சிறு கிளையாக இருக்குமானால், வளைந்துள்ள பகுதிகளில் (splint) கட்டைகளை நீங்கள் கட்டி, அது நிமிரத்தக்கதாக உதவிட வேண்டும்; ஏனெனில் இவ்வளைந்த கிளைகளுடன் அதைப் பெரிய மரமாக வளர்வதற்கு நீங்கள் விட்டுவிடுவீர்களானால், பிற்பாடு அது நேராய் நிமிரத்தக்கதாக உங்களால் ஒருபோதும் அதற்குச் கட்டைகளைக் கட்டிட முடியாது. நண்பர்களில் சிலர் பிரம்பினைத் தவிர்த்து, வேதவாக்கியங்கள் கூறுவதைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர் என்று நான் எண்ணுகின்றேன். பிரம்பு தேவைப்படும்போது, அதை நாம் தவிர்த்திடக்கூடாது. இவ்விஷயத்தில் நாம் தேவனுடைய வழிமுறையினைப் பின்பற்றிட வேண்டும். உங்கள் விஷயத்தில் பிரம்பு தேவைப்படுகையில், அதைத் தேவன் தவிர்த்துக்கொள்கின்றாரா? இல்லவேயில்லை. “உமது கோலும், உமது தடியும் என்னைத் தேற்றும்.” தேவன் தம் ஜனங்களுக்காக ஒரு கோலையும், ஒரு தடியையும் வைத்திருப்பதற்காக நான் மகிழ்கின்றேன்; நாம் திருத்தப்பட வேண்டியபோது, நம்மைத் திருத்தாமல் அப்படியே அவர் நம்மை விட்டுவிடாமல் இருப்பதற்காய் நான் மகிழ்கின்றேன். ஆனால் இது விஷயத்தில் சரியான ஆவியை உடையவர்களாய் இருப்போமானால்… சிட்சையைப் பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக, சிட்சைக்கான அவசியம் நமக்கு ஏற்படுவதைக்குறித்தே நாம் மிகவும் வருத்தம் அடைகிறவர்களாய் இருப்போம். “நான் சிட்சிக்கப்பட அவசியம் ஏற்பட்டுள்ளப்படியாலும், நான் என்னைத் தானே சரிப்பண்ணிக்கொள்ளாததினாலும் அல்லது என்னை நான் சரியான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாததினாலும் நான் மிகவும் வருந்துகின்றேன்” என்பதே பிரம்பின் காரியமாகும். இதைத்தான் நீங்களும் பிள்ளையினிடத்தில் வளர்த்திட வேண்டும் – பிள்ளையானவன் சில அடிகள் பெற்றுக்கொள்வதல்ல, மாறாக தேவனுடைய பிள்ளையென நீங்கள் (அடிக்கொடுப்பதை) இதைச் செய்வதை உங்களது கடமையாகவும், பொறுப்பாகவும் பெற்றிருக்கின்றீர்கள் மற்றும் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு அடிக்கொடுத்தாக வேண்டும். என்னுடைய ஜீவியத்தில் என் கைகளில் நான் எத்தனை அடிகள் வாங்கினேன் என்று என்னால் சொல்லமுடியும்; ஐந்து முறை அடிகள் வாங்கியிருக்கின்றேன்; மேலும் அவற்றையும், அந்தச் சம்பவங்களையும் நினைவில் வைத்திருக்கின்றேன். மூன்று அடிகளை என் தாயாரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அவைகளில் ஒன்றைக்குறித்துச் சொல்ல விரும்புகின்றேன். எனக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். நான் மிகச் சிறுபிள்ளையாக இருந்தபோது, இடுப்பின்கீழ், அதாவது பிட்டத்தில் சில அடிகள் பெற்றிருந்திருப்பேன், எனக்கு அதுகுறித்து ஞாபகமில்லை ஆனால் ஐந்து வயது இருக்கையில், நான் அடி வாங்கினது எனக்கு ஞாபகம் இருக்கின்றது. என் தாயார், அவர்களால் முடிந்தவரை என்னைப் பயிற்றுவித்தார்கள். என் தாயார் ஒரு ஜோடி கோலிகுண்டு முனைகளை உடைய தோல் சாட்டையை பெற்றிருந்தார்கள்; அதன் முனைகள் வலியை உண்டாக்கும், ஆனாலும் உண்மையான சேதம் ஏதும் செய்யாது. அவைகளுக்குக் கிட்டத்தட்ட ஆறு அல்லது எட்டு வால் பகுதிகள் உண்டு – “அவைகளின் வால் முனைகளே வலியை உண்டாக்கும்.” “சார்லஸ் (ரசல்), தோல் சாட்டையை எடுத்துக்கொண்டு மாடிக்குவா” என்று என் தாயார் கூறினார்கள். நானும் தோல் சாட்டையை எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன். தாயார் என்னை நோக்கி: “இங்கே உட்காரு; நான் உனக்கு வேதத்திலிருந்து சிலவற்றை வாசிக்க வேண்டும்” என்றார்கள். நான் அச்சம்பவத்தில் ஓர் உண்மையைப் புரட்டினதாக அல்லது திரித்துப் பேசினதாக என் தாயார் எண்ணினார்கள்; நான் முழுப்பொய்ப் பேசினேன் என்றல்ல, மாறாக உண்மையினைக் கொஞ்சம் திரித்துப் பேசினதாக அவர்கள் எண்ணினார்கள்; அதாவது விசேஷமாக ஒருவேளை பிள்ளைப் பேசுவதைக் கேட்டு சில வயதானவர்கள் சிரிக்கவும், பேசினது புத்திசாலித்தனமானது (smart) என்று எண்ணுவதற்கும் வாய்ப்புள்ள தருணங்களில், பெரும்பான்மையான பிள்ளைகள் இப்படி உண்மையைக் கொஞ்சம் திரித்துப் பேசுவது போன்று நான் பேசினதாக எண்ணினார்கள்; ஆனால் அப்படியாக நான் எண்ணி ஒருவேளை பேசியிருந்தாலும், பேசுவதைக் கேட்டுச் சிரிப்பதற்கும், பேசினது புத்திசாலித்தனமானது என்று எண்ணுவதற்கும் அங்கு யாரும் இருக்கவில்லை. இப்படியாகச் செய்யக்கூடாது என்று நான் கற்றிருந்தேன். நான் இப்படிப் பேசினதாக என் தாயார் எண்ணினப்படியால், வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து, பொய்ப்பேசுபவர்கள் அக்கினியிலும், கந்தகத்திலும் எரிக்கப்படுவார்கள் என்று காணப்படும் வசனங்களை எனக்கு வாசித்துக் காண்பித்துவிட்டு, “சார்லஸ் (ரசல்), அக்கினியிலும், கந்தகத்திலும் சுட்டெரிக்கப்படப் போகிறவர்களோடுகூட நீயும் காணப்பட நான் விரும்பவில்லை மேலும் உன் தாயென உன்னைச் சிட்சிப்பது என் கடமையாக இருக்கின்றது மற்றும் நான் இதைச் செய்தாக வேண்டும். உன்னைச் சாட்டையினால் அடிக்க எனக்கு விருப்பமில்லை, ஆனாலும் உன்னுடைய நன்மைக்காக இதை நான் செய்தாக வேண்டும். இதுவே கர்த்தருடைய வசனத்தின் போதனையாகும் மற்றும் நீ ஒருவேளை வளர்ந்து பொய்யனாய்க் காணப்பட்டாயானால், ஒரு வேளை வளர்ந்து பொல்லாத மனுஷனாய்க் காணப்பட்டாயானால் இப்படியே சம்பவிக்கும்” என்று கூறினார்கள். வேதவாக்கியங்களிலிருந்துள்ள சிறுசிறு அந்த அறிவுரைகளானது என் மனதில் அதிகமாய்த் தாக்கத்தினை ஏற்படுத்தினது. ஒருவேளை காரியங்கள்குறித்து என் தாயார் புரிந்திருப்பார்களானால், அவர்கள் அப்படியாக அவ்வசனங்களைப் பொருத்திக் கூறியிருந்திருக்க மாட்டார்கள்; மாறாக அதற்கொத்த ஆற்றலுள்ள மற்றும் மிக அதிக ஆற்றலுள்ள வேறு ஏதேனும் வேதவாக்கியத்தினைக் கண்டுபிடித்து, எடுத்துக் கூறியிருந்திருப்பார்கள். தேவன் பொய்யர்களைப் பயன்படுத்துவதில்லை எனும் உண்மையானது மிகச் சுலபமாகப் பிள்ளையினுடைய மனதில் பதியவைக்கப்படலாம்.