R5900 (Page 154)
நமது ஆதிபெற்றோராகிய ஆதாம் மற்றும் ஏவாளை ஒன்றிணைத்து, எளிமையான முறையில் தேவன்தாமே முதலாம் திருமண நிகழ்ச்சியினை நடத்திவைத்தார். தாயாகிய ஏவாள் ஏற்கெனவே ஆதாமின் எலும்பின் எலும்பாகவும், மாம்சத்தின் மாம்சமாக இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் தனித்தனி நபர்களாகத் தேவனாலேயே பிரித்துவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சரீரத்தில் இருவராக இருந்தனர், ஆனால் இருதயத்திலோ ஒன்றாக இருந்தனர்; ஏனெனில் முழு மனுக்குலமும் இந்த ஒரு ஜோடியிடமிருந்து பிறப்பிக்கப்பட வேண்டும் என்று தேவன் நோக்கம்கொண்டிருந்தார்; இப்படி இருக்கையில் பாவமானது உட்பிரவேசித்து, முழு மனுஷஜாதியையும் உட்படுத்திக் காணப்படுகையில், முழு மனுக்குலத்தையும் மீட்பதற்கு ஒரு நபருடைய மரணம் போதுமானதாய்க் காணப்படும். “மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று” (1 கொரிந்தியர் 15:21; ரோமர் 5:12,19).
உலகத்தைச் சீர்ப்பொருந்தப்பண்ணுவதோடு தேவனுடைய மகா திட்டமானது நிறைவு பெறுகையில், இந்தச் சீர்ப்பொருந்துதலானது ஸ்திரீயானவள் ஆதாமிடமிருந்து பிரிக்கப்படுவதற்கு முன்பு ஆதாம் இருந்த நிலைமைக்கு மனுக்குலத்தினைக் கொண்டுவந்திடும் என்று வேதாகமம் தெளிவாய்ப் போதிக்கின்றதாய் இருக்கின்றது. ஆகையால் “மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை… தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய் இருப்பார்கள்” (லூக்கா 20:35) என்று இயேசு கூறியுள்ளார். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் திரும்பக்கொடுத்தலின் காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் தங்களது வேறுபடுத்தும் அம்சங்களை இழந்துபோய், ஆதியில் ஆதாம் இருந்ததுபோன்று மீண்டும் ஆகிடுவார்கள் – அதாவது பூமியானது ஜனங்களினால் நிரப்பப்பட்டிருக்கும் போது, ஒவ்வொருவனும் தன்னில் முழுமையானவனாகக் காணப்படுவான். பூமியானது அளவுக்கு மீறி நிரப்பப்படுவதற்குத் திட்டமிடாமல், மாறாக அதை நிரப்ப மாத்திரமே தேவன் திட்டமிட்டுள்ளார்.
புருஷன் மற்றும் ஸ்திரீயின் ஒன்றிணைதலானது, அவர்களுக்கிடையே உள்ள அன்பின் காரியமாக இருப்பினும், சட்டமானது முன்னேறிவந்து, எதிர்க்காலத்தில் பிரச்சனைகளைத் தவிர்க்கத்தக்கதாகச் சாட்சிகள் முன்னிலையில் இவர்களது ஒன்றிணைதலை அதிகாரப்பூர்வமானதாக்கிட, பொருத்தமான விதிமுறைகளும், சில ஒழுங்குமுறைகளும் அவசியமென வலியுறுத்துகின்றது. ஆகையாலே உரிமம் (licenses) முதலானவைகள் தொடர்புடைய சில திட்டவிவரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன மற்றும் இவை மிக ஏற்றவை என்றும் நாம் நம்புகின்றோம்.
தேவ வசனத்தைப் பெற்றிருக்கும் கிறிஸ்தவ ஜனங்களாகவும், அந்த வசனத்தைக் குறித்த சில புரிந்துகொள்ளுதலுக்குள் வந்துள்ள வேத மாணவர்களுமாகிய நாம்… விவாகமுறையைத் தேவன் நிறுவினபோது அவர் அதில் கொண்டிருந்த ஒரு விசேஷித்த அர்த்தத்தினை காண்கின்றோம். புருஷன் மற்றும் ஸ்திரீக்கு இடையிலான விவாகமானது, கிறிஸ்து மற்றும் சபைக்கு இடையில் நடைபெறவிருக்கும் ஒன்றிணைதலுக்கான ஓர் அடையாளம் அல்லது மாதிரியாகும்; மற்றும் இப்படியாக இருக்கும்படிக்குத் தேவன் ஏற்படுத்தியுள்ளார். விவாகத்தினை ஓர் அடையாளமெனக் குறிப்பிட்டவராக அப்போஸ்தலன் தொடர்ந்து, கிறிஸ்து எப்படிச் சபையை அன்புகூர்ந்து, சபைக்காய்த் தம்மையே கொடுத்தாரோ, அப்படிப்போலவே புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்களது சொந்தச் சரீரமாக பாவித்து, அன்புகூர வேண்டும் என்று கூறினார் (எபேசியர் 5:25-32).
ஒரு புருஷன் தனக்கு என்ன செய்திடுவானோ அதைத் தன் மனைவிக்கும் செய்திட வேண்டும் என்பது எத்துணை மகா அன்பாகும்! இப்படியே கிறிஸ்துவும் எல்லாவற்றையும் தம் சரீரமாகிய சபைக்காகச் செய்திட்டார். இதைக்காட்டிலும் அதிகமாகவே அவர் செய்திட்டார் – அவர் நமக்காய்த் தம் ஜீவனையே கொடுத்திட்டார். இது புருஷன்மார்களும் தங்கள் மனைவிகளுக்காய்த் தங்கள் ஜீவியங்களைக் கொடுத்திட வேண்டும்; மேலும் அவளுக்கு உணவு, உடைகள் கொடுப்பது மாத்திரமல்லாமல், அவளது மனம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களுடைய நலனுக்கடுத்தவைகளுக்கும் கவனம் செலுத்திட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றதாயிருக்கின்றது. இவை அனைத்தும் புருஷனால் பார்க்கப்பட வேண்டும் மற்றும் ஒரு நல்லப் புருஷன் தன் மனைவியானவள் நன்கு கவனிக்கப்படுகிறாளா என்று பார்த்துக்கொள்ள வேண்டும், அதுவும் இது – தேவைப்படும் பட்சத்தில் அவனுக்கானவைகளில் சிலவற்றை அவன் தியாகம் செய்தும், அவனால் நிறைவேற்றப்படவும் வேண்டும்.
இப்பொழுது மறுபக்கத்திற்கு வருகையில், சபையானவள் எப்படிக் கிறிஸ்துவினிடத்தில் பயபக்திக்கொண்டிருக்கிறாளோ, அப்படிப்போலவே மனைவிகளும் தங்கள் புருஷன்மார்களிடத்தில் பயபக்திக்கொண்டிருக்கும்படிக்கு அப்போஸ்தலன் கூறுகின்றார். எந்தளவிற்கு இந்தத் தெய்வீகப் பாடத்திலுள்ள கருத்தினை மனுக்குலமானது கிரகித்துக்கொண்டுள்ளதோ, அந்தளவின்படியே அவர்களால் ஜீவியத்திலிருந்து சிறந்த நன்மைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறவர்களாக இருப்பார்கள். திருமண விஷயத்தில் கர்த்தருடைய ஏற்பாடுகளை கவனமாய்க் கைக்கொள்பவர்கள் திருமண உறவிலிருந்து சிறந்த நன்மைகளை அடைபவர்களாய் இருப்பார்கள். அவ்வப்போது தன் சொந்த விருப்பங்களையும் புறக்கணித்தவனாய் தன் மனைவியை அன்புகூரும் புருஷன் மிகுதியான பாராட்டிற்கு ஏதுவானவனாக இருப்பான் மற்றும் தன் கணவனுடைய நலனுக்கடுத்த காரியங்களுக்காக தன்னால் செய்ய முடிந்தவைகளைச் செய்பவளும், புருஷனுக்கு முழுவதும் சமர்ப்பிக்கப்பட்டவளாக இருப்பவளுமாகிய மனைவியானவள் – கர்த்தருக்குச் சபையால் செய்யப்படும் காரியங்களுக்கு உதாரணமாய் இருப்பாள்.
இப்படியாக நாம் கூறுகையில், “இப்படியிருக்க, விவாகம் பண்ணுகிறவனும் நன்மைசெய்கிறான்; விவாகம் பண்ணாதிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்” (1 கொரிந்தியர் 7:38) என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகளுக்கு முரணாக விவாதிக்க நாம் முற்படவில்லை. இவ்வார்த்தைகளை அப்போஸ்தலன் உலகத்தாரிடம் பேசாமல், மாறாக தங்கள் ஜீவியங்களைக் கர்த்தருக்கு அர்ப்பணம்பண்ணியுள்ளவர்களுக்கே பேசுகின்றார். ஒருவேளை இவர்களது விவாகமானது, கர்த்தருக்கான இவர்களது அர்ப்பணிப்பிற்கு இடையூறாக இல்லாதிருக்குமானால் இவர்கள் விவாகம் செய்திடலாம். ஒருவேளை இவர்களது அர்ப்பணத்திற்கு இடையூறாகக் காணப்படும் பட்சத்தில் இவர்கள் விவாகம்பண்ணிக்கொள்ளுதல் என்பது இவர்களது ஜீவியங்களை அபாயத்திற்குள்ளாக்கிடுவதாய் இருக்கும் (அடமானம் வைத்துக்கொள்வது போலிருக்கும்). ஆனாலும் சகோதரர்களும் சரி, சகோதரிகளும் சரி – இருவருமே தனிப்பட்ட விஷயத்தில் மாத்திரமல்லாமல், கர்த்தருடனும், மற்றவர்களுடனுமான தங்களுடைய உறவிலும் விவாகத்தின் வாயிலாய் நன்மைகள் அடைந்துள்ள சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
விவாகம்பண்ணுகிறவர்கள் கர்த்தருக்கெதிராகச் செயல்படுகின்றனர் என்று நாங்கள் கூறுவதாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. கர்த்தரைப் பிரியப்படுத்த விரும்பிடும் யாவரும் இம்மாதிரியான காரியத்தில் மிகவும் ஜாக்கிரதையாகக் காணப்பட வேண்டும் மற்றும் விவாகம்பண்ணிக்கொள்கிறவர்களை மற்றவர்கள் விமர்சிக்கவும் முற்படக்கூடாது. இது தேவன் நமக்களித்த சுயாதீனமாகும் மற்றும் இந்தச் சுயாதீனத்தை நாம் நமக்காகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், மற்றவர்களுக்கும் அருளிட வேண்டும்.
விவாகம்பண்ணுகிறவர்கள் தாங்கள் பூரணநிலையிலுள்ள நபரை விவாகம்பண்ண வாய்ப்பில்லை என்ற உண்மையினைப் புரிந்திருக்க வேண்டும்; ஏனெனில் “பூரணமானவன் ஒருவனாகிலுமில்லை” என்று வேதம் நமக்குத் தெரிவிக்கின்றது. ஒருவனாகிலும் பரபூரணன் அல்ல மற்றும் ஒருவரும் பரிபூரணராய் இல்லாதிருக்கையில் அல்லது பரிபூரணமாய் இருக்கமுடியாது என்றிருக்கையில் அபூரணமான ஒருவர், மற்றவர் பரிபூரணராய் இருக்கும்படிக்குக் கேட்டுக்கொள்வது என்பது தவறாய் இருக்கும். எனினும் ஒவ்வொருவரும் தன்தன் சொந்தப் பலவீனங்களைத் திரையிட்டு மூடி அடக்கி வைப்பதற்கு முயற்சித்திட வேண்டும். இந்த விஷயத்தில் ஞானமற்றவர்களாய் இருப்பவர்களும் உண்டு. நம்முடைய மனங்கள் பூரணமாய் இருக்கின்றபடியால், மனதின் அந்த உயர் தரநிலைக்குத்தக்கதாக நம்மால் முடிந்தமட்டும் நாம் ஜீவித்திட வேண்டும். இடையூறு இராதவண்ணம் ஒவ்வொரு குறைவையும் விரைவாய் நாம் மூடி அடக்கிப்போட வேண்டும். ஒருவன் விவாகம்பண்ணுகையில், அவன் பூரணனாய் இருக்கும் நபரை விவாகம்பண்ணுவதாக எண்ணிக்கொள்வது தவறாக இருக்கும். அவன் தன்னுடைய பெலவீனங்களை அவளிடமிருந்து மூடி அடக்கிவைத்திருக்கின்றான் மற்றும் அவளும் அவளது பெலவீனங்களை அவனிடமிருந்து மூடி அடக்கிவைத்திருக்கின்றாள்; இவர்கள் தங்கள் தங்கள் பெலவீனங்களை ஜீவியம் முழுவதும் திரையிட்டு மூடி அடக்கிவைத்திருப்பது நலமாயிருக்கும்.
விவாகம்பண்ணுகிறவர்கள் ஒருவருக்கொருவர், ஒருவர் இன்னொருவருடைய கடந்தகால காரியங்களைக்குறித்து விசாரித்திடக்கூடாது; ஏனெனில் விவாகத்தின்போது ஒருவர் இன்னொருவரை நல்லவரோ கெட்டவரோ அவரை ஏற்றுக்கொள்கின்றார்; திரும்பிப்பார்த்தல் கூடாது. இப்படியாகவே கர்த்தர் நம்மை ஏற்றுக்கொண்டபோதும் காணப்பட்டது; அவர் பழைய வாழ்க்கையைக்குறித்து விசாரணை செய்துகொண்டிருப்பதில்லை. நாமும் அப்படிச் செய்யக்கூடாது. விவாகமான தம்பதிகளுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுகையில் அவர்களது பிரச்சனைகளை அவர்களுக்காகச் சரி செய்யும்படிக்கு மற்றவர்கள் பிரயாசம் எடுப்பதன்மூலம் அவர்களுக்கிடையே குறுக்கிடுவதற்கு, அவர்கள் யாரையும் அனுமதித்திடக்கூடாது; ஏனெனில் இம்மாதிரியான முயற்சிகள் அனைத்தும் பிரச்சனையையே உண்டுபண்ணிடும். தேவன் ஒன்றாய் இணைத்துள்ளவர்களுக்கிடையே குறுக்கிடுவதற்கு யாரும் முயற்சி செய்யாதிருப்பார்களாக. விவாக உறவில் ஏற்படும் பிரச்சனைகள், எப்பொழுதும் அநேகம் பேச்சு வார்த்தைகளுக்கு வழிநடத்துகின்றது; ஆகையால் இதை அறிந்தவர்களாக மற்றவர்களுடைய ஜீவியங்களில் பிரச்சனைகளை அதிகரித்திடும் யாதொன்றையும் செய்துவிடாதபடிக்கு நாம் விழிப்பாய் இருக்க வேண்டும். இப்பிரச்சனைகளின் விஷயத்தில் நாம் அனுதாபங்கூடப் பாராட்டிடக்கூடாது. அவர்களை நாம் தனியே விட்டுவிட வேண்டும். அவர்கள் எப்போதெல்லாம் ஆலோசனை கேட்கிறார்களே, அப்போதெல்லாம் ஆலோசனை கொடுங்கள், ஆனால் குறுக்கிடாதீர்கள். அவர்கள் விவாகம்பண்ணின பிற்பாடு, வாழுங்காலமெல்லாம் நல்லதோ கெட்டதோ அதை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆகையால் விவாகமென்பது தீவிரக் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு காரியமாகும் மற்றும் தீவிரமாய்ச் சிந்தித்தப் பிற்பாடு மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டும். அது மிகப் புனிதமானதொரு பொறுப்பாகும். விவாகம்பண்ணும் இருவரும் ஜீவியகாலம் முழுவதற்கும் தங்களை ஒப்பந்தம் பண்ணிக்கொள்கிறார்கள். இக்கருத்தானது முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டு, கைக்கொள்ளப்பட்டால் விவாகங்கள் அனைத்துமே அதிகம் திருப்திகரமாகக் காணப்படும்.