R5214 (page 107)
ஆதியாகமம் 37- ஆம் அதிகாரம்
“அன்புக்குப் பொறாமையில்லை.” ― 1 கொரிந்தியர் 13:4
எளிமையான பதிவுகளில், அருமையாய்க் காணப்படுகின்றதான யோசேப்பு மற்றும் அவரது சகோதரர்கள் பற்றின கதையானது, மிகவும் சுவாரஸ்யமாகவும், பல்வேறு கோணங்களில் பாடம் கற்பிக்கின்றதாகவும் காணப்படுகின்றது. மற்றப் பிள்ளைகளைக் காட்டிலும் ஒரு பிள்ளைக்கு மிகவும் அதிகமான முன்னுரிமைக் கொடுத்து, இப்படியாகப் பிள்ளைகள் மத்தியில் பொறாமையின் ஆவியை வளர்த்திவிடும் விஷயத்திலுள்ள பெற்றோருடைய ஞானமின்மையைப் பற்றியதாக ஒரு பாடம் காணப்படுகின்றது. யோசேப்பு தனது சொப்பனங்களை, தனது சகோதரர்களிடத்தில் தெரிவித்தது போல, நம்முடைய சொப்பனங்களை நாம் இரக்கமற்ற செவிகளை உடையவர்களிடத்தில் சொல்லுவதிலுள்ள ஞானமின்மை தொடர்புடையதான இன்னொரு பாடம் காணப்படுகின்றது. ஒரு சொப்பனத்தில் பதினொரு அரிக்கட்டுகள், தன்னுடைய கட்டிற்கு முன்பு வணங்கி நின்றதாக யோசேப்பு கண்டார். மற்றொரு சொப்பனத்தில் சூரியனும், சந்திரனும், பதினொரு நட்சத்திரங்களும் தன்னை வணங்குவதாக யோசேப்பு கண்டார்.
இந்தச் சொப்பனங்களைக் கண்டதற்காக யோசேப்பு குற்றஞ்சாட்டப்பட முடியாது. அஜீரணத்தின் காரணமாக ஏற்படும் பெரும்பான்மையான சொப்பனங்களைப் போலல்லாமல், யோசேப்பிற்கு இச்சொப்பனங்கள் கர்த்தரிடமிருந்து வந்ததாக இருந்தது. வஞ்சனை இல்லாமல், சொப்பனத்தைத் தனது சகோதரர்களிடம் கூறினதற்காகவும், யோசேப்பு குற்றஞ்சாட்டப்பட முடியாது; ஏனெனில் யோசேப்பு இப்படியாகச் செய்ய வேண்டும் என்பதே கர்த்தருடைய நோக்கமாயிருந்தது. யோசேப்பின் சகோதரருடைய பொறாமையையும் மற்றும் அவர்கள் மனதில் எவ்வாறு பொறாமை வளர்ந்திருக்கும் என்பதையும் கர்த்தர் முன்னமே அறிந்திருந்தார் மற்றும் அதற்கான வாய்ப்பையும் கொடுத்தார்; ஏனெனில் அவர் யோசேப்பிற்கு அடுத்து வரும் அனுபவங்களை ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார் மற்றும் இது நிறைவேற்றப்படுவதற்கென யோசேப்பின் சகோதரர்களுடைய பொறாமையானது உதவியாக மாத்திரம் அமைந்தது.
மற்றவர்கள் அறிந்துகொள்ள அவசியமாய் இராததும், அறிந்தால் எதிர்ப்பை மாத்திரமே உருவாக்குவதற்கு ஏதுவானதுமான உண்மைகளை அறிவியாமல் இருப்பதிலுள்ள ஞானம் பற்றின பாடத்தை நாம் இங்குக் கற்றுக்கொள்ளலாம். இதே கருத்தையே இயேசுவும், “உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் போடாதேயுங்கள்” என்று கூறி ஆதரித்தார். தெய்வீகத் திட்டம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைத் தொடர்புடையதான மிகவும் ஆழமான சத்தியங்களை, கர்த்தர் அறிவிப்பதற்குச் சித்தங் கொண்டுள்ளவர்களாகிய சாந்தமுள்ளவர்களைத் தவிர, மற்றவர்களிடம் சொல்லாமல் இருப்பது நலமாக இருக்கும்.
நாம் மேற்கூறியவைகளோடுகூட, யோசேப்புக் கிறிஸ்துவாகிய மேசியாவிற்கு நிழலாய் (அ) தீர்க்கத்தரிசனமான நிழலாய் இருக்கின்றார் என்று அடையாளங்கண்டுகொள்வது இன்றைய நமது வேத ஆராய்ச்சியினுடைய மிக முக்கியமான அம்சமாக இருக்கின்றது. யோசேப்பு தனது சகோதரர்களிடத்தில் அன்பாய் இருந்தார் மற்றுமாக அவர்களது பொறாமையானது தன்னை மரிக்கப்பண்ணுவதற்குத் திட்டமிட்டு, பின்னர்த் தன்னை எகிப்தில் அடிமைத்தனத்திற்குள் விற்றுப்போட்டபோது, அவர் நலன் பயக்க நெடும் பயணம் மேற்கொண்டவரானார். அவரது சகோதரர்கள் அவரைக் காரணமின்றி பகைத்தார்கள்; அவர் நல்லவராக இருந்தார் என்ற காரணத்திற்காக மாத்திரம் பகைத்தார்கள்; மற்றும் யோசேப்பின் தந்தை அவரை அன்புகூர்ந்ததற்காகவும், யோசேப்பு எதிர்க்காலத்தில் உயர்த்தப்படப்போவதை முன்கூட்டியே தேவன் சொப்பனத்தின் வாயிலாக யோசேப்பிற்குத் தெரிவித்ததற்காகவும் அவரைப் பகைத்தார்கள்.
யோசேப்பின் சகோதரர்கள் பின்வருமாறு சொல்லியிருந்திருக்க வேண்டும் அதாவது, “நமக்கு இவ்வளவு நல்ல ஒரு சகோதரன் காணப்படுவதினால் நாம் களிக்கூருவோமாக. இவர் மிகவும் உயர்வாய் உயர்த்தப்படுவது தேவனுடைய சித்தமாக இருக்குமானால், நாம் சந்தோஷம் கொள்வோமாக. நம்முடைய தாத்தாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் மற்றும் நம்முடைய தந்தையாகிய யாக்கோபுக்கும் பண்ணப்பட்டதான தேவனுடைய வாக்குத்தத்தமானது, இப்படியாக நிறைவேறுவதாக. தேவன் நலமானதெனக் காண்கிற எவ்வழியிலும், அவரது ஆசீர்வாதங்கள் கடந்து வருவதாக. நமது சகோதரன் தேவனுக்கும், நம்முடைய தந்தையாகிய யாக்கோபிற்கும் பிரியமாய்க் காணப்படுவதினால் நாம் சந்தோஷங்கொள்வோம். யோசேப்பின் குணலட்சணத்தை நாமும் அடைந்திடுவதற்கு அதிகமதிகமாய் நாடிடுவோமாக.” ஆனால் அவர்களோ அவரை முதலாவதாகக் கொன்றுபோடுவதற்கும், பிற்பாடு வந்த வெறும் மாற்று யோசனையின் பிரகாரமாக அவரை அடிமையாக விற்றுப்போடுவதற்கும் கொடூரமாய்ச் செயல்படுமளவுக்குப் பொறாமையுடன் காணப்பட்டார்கள்.
ஆனால் தேவனுடைய வழி நடத்துதலானது யோசேப்போடுகூடக் காணப்பட்டு, அவர் அடிமையாக இருந்த போதும் அவரை ஆசீர்வதித்தது மற்றும் அதிகமான உபத்திரவங்கள் வாயிலாக அவரை இறுதியில் எகிப்தின் சிங்காசனத்தில், பார்வோனுக்கடுத்த வல்லமையிலும், செல்வாக்கிலும் கொண்டுவந்தது. தேசத்தில் காணப்பட்ட பஞ்சமானது, கோதுமை வாங்கும்படிக்கு யோசேப்பின் சகோதரர்களை எகிப்துக்குக்கொண்டு வந்தது. இப்படியாக யோசேப்பின் சகோதரர்கள் அவர் முன் [R5215 : page 108] வணங்குவார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணமான பதினொரு அரிக்கட்டுகள், யோசேப்பின் அரிக்கட்டை வணங்கினதான சொப்பனம் நிறைவேறினது.
பிற்பாடு யோசேப்பின் தந்தையும், முழுக்குடும்பமும், கோசேனில் குடியேறுவதற்கென எகிப்துக்கு வந்தபோது, இவர்கள் அனைவரும், யோசேப்பிற்கு, எகிப்து அரசாங்கத்தினுடைய பிரதிநிதியென மரியாதைச் செலுத்தினார்கள்; இப்படியாக இரண்டாம் சொப்பனமும் நிறைவேறினது. ஆனால் இந்த அனுபவங்கள் அனைத்துமே ஒரு காலக்கட்டத்தில் புரியாத புதிராகவே இருந்தது. யோசேப்பு சிங்காசனத்திற்கு உயர்த்தப்படுகின்ற நேரம் வருவது வரையிலும், இவர்கள் அனைவரும், யோசேப்பின் குடும்பத்திலுள்ள மற்ற அனைவரையும் காட்டிலும், யோசேப்பைக் கர்த்தர் குறைவாகவே நேசித்தார் என்பதாகவே பார்த்தார்கள். பிற்பாடு அனைத்துமே மாறிப்போனது.
யோசேப்பு தொடர்பான இந்தச் சம்பவம் அனைத்திற்குமான ஞான அர்த்தம், அவரும் முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார் என்பதாகும். “நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்” என்று சங்கீதம் 69:4-ஆம் வசனத்தில் வாசிக்கின்றோம். இதே வார்த்தைகளை இயேசுவும் மேற்கோளிட்டு, அதைத் தமக்கே பொருத்தி, “முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்” என்று கூறினார் (யோவான் 15:25). இயேசுவின் சகோதரர்களாகிய யூதர்களே, அவரைச் சிலுவையில் அறைந்தனர். இயேசு கொல்லப்படுவதற்கான எந்தக் (குற்றமும்) காரணமும் அவரிடத்தில் காணப்படவில்லை.
பொறாமையின் காரணமாகவே அவர் கையளிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார் என்று நாம் உணர்ந்து கொள்கின்றோம், ஏனெனில் அவரது கிரியைகள் நல்லவையாகவும், அவர்களது கிரியைகள் பொல்லாதவையாகவும் காணப்பட்டது; ஏனெனில் அவர்களைக் காட்டிலும் இயேசு தேவனுடைய பாதையை மிகவும் பூரணமாய்ப் போதித்தவராய்க் காணப்பட்டார்; ஏனெனில் வல்லமையிலும், மகா மகிமையிலும் மேகங்கள் மேல் வருகின்றதான மேசியாவெனத் தம்மை அவர்களும், மற்ற அனைவரும் அடையாளங்கண்டுகொண்டு, தமக்கு முன்பாக முட்டுகள் முடக்குவதற்கான காலம் வரும் என்று இயேசு கூறினார்.
யோசேப்பின் விஷயத்தில் எப்படி அவமானமும், விபரீதங்களும் / துன்பங்களும் மற்றும் நம்பிக்கைத் துரோகங்களும் எகிப்தினுடைய சிங்காசனத்திற்கு நேரான மகிமைக்கும் மற்றும் கனத்திற்குமான வழியினை ஆயத்தம் பண்ணினதோ, அப்படியாகவே இயேசுவின் விஷயத்தில் காணப்பட்டது. இயேசுவுக்கு நேரிட்டதான சோதனையான அனுபவங்களானது, அவரைத் தேவனுக்கு உண்மையுள்ளவரென நிரூபித்துக் காண்பித்தது மற்றும் அவர் தேவனுடைய வலது பாரிசத்தினிடத்திற்கு உயர்த்தப்படுவதற்கு வழிநடத்தினதாய் இருந்தது. இயேசுவைக் குறித்துக் கூறுகையில், மேற்கூறியவற்றை உறுதிப்படுத்தும் வண்ணமாக, “அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்”; மீண்டுமாக, “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” என்று பரிசுத்தவானாகிய பவுல் குறிப்பிட்டுள்ளார் (எபிரெயர் 12:2; 2 கொரிந்தியர் 8:9). அதாவது யோசேப்பு கடந்து சென்ற தாழ்வுபடுத்துவதான அனுபவங்களானது, அவர் பார்வோனால் உதவப்படுவதற்கும், கனப்படுத்தப்படுவதற்குமான வழியினை ஆயத்தப்படுத்தினதுபோலவே, இயேசுவின் விஷயத்திலும் காணப்பட்டது. மீண்டுமாக இயேசுவைக் குறித்து நாம் வாசிப்பது என்னவெனில், “தாம் புரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்” (எபிரெயர் 5:9).
தேவனுடைய மாபெரும் திட்டத்தில், இயேசு மாத்திரமே உலகத்தின் மேசியாவெனச் சிங்காசனத்தினிடத்திற்கு உயர்த்தப்படாமல், அவரோடுகூட, ஒரு சகோதரர் கூட்டத்தாரும் அதே மகிமையில், கனத்தில் மற்றும் அழியாமையில் பங்கடைபவர்களாகவும் இருக்கப்போகிறார்கள் என்று வேதவாக்கியங்கள் நமக்கு நிச்சயமளிக்கின்றன. மேலும் தேவனுடைய மாபெரும் திட்டத்தில் இந்தச் சகோதரர்களும், அவர்களது மூத்த சகோதரனாகிய இயேசு கடந்து சென்ற அதே அனுபவங்கள் வாயிலாகக் கடந்து செல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றனர். ஆகவே இவர்களது அனுபவங்களும் கூட, யோசேப்பின் அனுபவங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் மூத்த சகோதரனுக்குச் சமமானவர்களல்ல. இயேசு இவர்களது தலை என்றும், இவர்களது இரட்சிப்பின் அதிபதி என்றும் குறிப்பிடப்படுகின்றார். ஆகவே தான், தேவன் “அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்ப்பதற்கென, அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது” என்று நாம் மீண்டுமாக வாசிக்கின்றோம் (எபிரெயர் 2:10).
இந்த மாபெரும் தளபதியின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தப் பிள்ளைகள் கூட்டத்தார் அனைவரும், அவரைப் போன்று உபத்திரவங்களினாலே பூரணப்படுத்தப்பட வேண்டும்.
சபைக்கான இந்தச் சோதனையான அனுபவங்களானது, கடந்த 19 நூற்றாண்டுகளிலும் காணப்பட்டதல்லவா? “அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்” என்றும், மீண்டுமாக “உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை” என்றும் அப்போஸ்தலனாகிய யோவான் கூறியுள்ளார் (1 யோவான் 3:1; 4:17). தங்கள் சகோதரனாகிய யோசேப்பு பஞ்சகாலத்தில் தங்களுக்கு இரட்சகராகவும், எகிப்தியர்களுக்கு இரட்சகராகவும் இருக்கப்போகின்றார் என்ற உண்மைக்கு யோசேப்பின் சகோதரர்கள் குருடர்களாய்க் காணப்பட்டது போன்று, மேசியாவின் மூலமாகவே ஒருவரால் நித்திய ஜீவனை அடைய முடியும் எனும் உண்மையை உணர்ந்து கொள்ளுவதற்கு உலகம் தவறிவிடுகின்றது.
தாம் முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார் என்று இயேசு குறிப்பிட்ட போது, தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட பின்னடியார்கள் அனைவரும் கூடத் தாங்கள் இப்படி அநியாயமாய்ப் பகைக்கப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கலாம் என்று முன்னெச்சரிக்கைச் செய்கின்றார். “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று.” (யோவான் 15:18-25).