R4277 (page 342)
2 சாமுயேல் 18:24-33; நீதிமொழிகள் 17:25
தன் குமாரனுக்காக தாவீது கொண்டிருக்கும் அன்பினை நாம் பார்க்கும்போது, அப்சலோம் நாடு கடத்தப்பட்ட அந்நிய தேசத்திலிருந்து திரும்பிவருவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், இரண்டுவருட காலங்களாக தாவீது தன் இருதயத்தினுடைய அன்பின் உணர்வுகளைத் தன் மகனாகிய அப்சலோமிடத்தில் சரியாக வெளிப்படுத்தவில்லை என்று நாம் அனுமானித்துக்கொள்ளலாம். அந்த இரண்டுவருட காலங்களில் அப்சலோமைச் சந்திக்க இராஜா மறுப்புத் தெரிவித்திருந்தார் மற்றும் இப்படியாக அப்சலோமினுடைய எதிர்ப்பையும், பகைமையையும் அவரில் வளரத்தக்கதான சூழ்நிலை உண்டாகுவதற்கு ஏதுவாக்கிவிட்டார். இதை நாம் குறிப்பிடுவதற்கான காரணம், இதில் அநேகம் பெற்றோர்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது என்று நாங்கள் நம்புவதினாலேயே ஆகும். ஏதோ சில காரணங்களுக்காகப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இயல்புக்கும் அதிகமாகக் கடினமாய் நடத்திடும் தன்மையுடையவர்களாய் இருக்கின்றனர் என்றும், இப்படியாகத் தங்கள் இருதயத்தினுடைய உண்மையான பாசத்தினைக்குறித்துத் தங்கள் பிள்ளைகளுக்குத் தவறான அபிப்ராயம் கொடுக்கின்றனர் என்றும் எங்களுக்கு அடிக்கடி தோன்றுகின்றது. பிள்ளைகளைக் கையாளும் விஷயத்தில் எவ்வளவுதான் கடினம் அல்லது கடுமை அவசியமாய் இருப்பினும், எவ்வளவுதான் சிட்சைகள் அவசியமாய் இருப்பினும், அனைத்துமே பிள்ளைகளுக்குப் பெற்றோரினுடைய அன்பைக்குறித்த முழு உறுதியினைக் கொடுக்கும் விதத்தில் காணப்படவேண்டும்; மேலும் கொடுக்கப்படும் தண்டனைகளானது கடமை கண்ணொட்டத்திலும், பிள்ளைகளினுடைய நலனுக்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது எனும் விதத்தில் செய்யப்படவேண்டும். நீதி அருமையானதே, ஞானம் விலையேறப்பெற்றதே, தண்டனைகள் அவசியமானதே, ஆனால் எல்லாவற்றையும்விட “அன்பே பிரதானமானதாய்” காணப்படவேண்டும். ஆகையால் இந்தத் திவ்விய தரநிலைக்கு இசைவாக நம்மை – நமது கிரியைகளை, நமது வார்த்தைகளை, நமது ஒவ்வொரு சிந்தனைகளை நிதானித்துக்கொள்வோமாக. தூய்மையான அன்பினால் முழுமையாய் நிர்வகிக்கப்படாத எந்தக் கிரியைகளும், வார்த்தைகளும் அல்லது சிந்தனைகளும், நமக்கும் சரி, நாம் யார் விஷயத்தில் செயல்படுத்துகிறோமோ அவர்களுக்கும் சரி பாதகமானதாகவே இருக்கும்.