R3325 (page 60)
ஏரோது மீது ஏரோதியாள் கொண்டிருந்த அதிகாரமானது, அவளுடைய மகளாகிய சலோமியின் மீது அவள் கொண்டிருந்த அதிகாரத்தில் விளங்குகின்றது. இராஜாவின் தாராளமான கொடை, இளம் பெண்ணாகிய சலோமியின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஐசுவரியங்கள், அரண்மனைகள், ஆடம்பரங்கள் அவளுடைய மனதிற்கு முன்பு தோன்றியிருக்க வேண்டும்; ஆனால், அவள் தாயின் அறிவுரையின்படி வழிநடத்தப்பட்டிருக்கிறபடியால், முன்புபோல இப்பொழுதும் அவள் தாயின் ஆலோசனையை நாடி, “நான் என்ன கேட்க வேண்டும்” என்று கேட்டாள் (மாற்கு 6:24). இங்குப் பெற்றோருடைய செல்வாக்குக் குறித்துக் காட்டப்படுகின்றது. பொல்லாத ஸ்திரீயாகிய ஏரோதியாள், தனது மகளுடைய பாசத்தையும், அவளுடைய முழுமையான நம்பிக்கையையும் மற்றும் கீழ்ப்படிதலையும் தன்வசமாகக் கொண்டிருந்தாள். நன்மை (அ) தீமை வழியில் அந்த வாலிபப் பெண்ணின் மனதை வழிநடத்துவது, ஏரோதியாளின் கரங்களில் இருந்தது. இது ஓரளவுக்கு ஒவ்வொரு பெற்றோரின் விஷயத்திலும், அதிலும் விசேஷமாக ஒவ்வொரு தாய்மாருடைய விஷயத்திலும் உண்மையாகவே காணப்படுகின்றது. பிள்ளைகளின் நடத்தை / வாழ்க்கை விஷயத்தில் தாய், தகப்பன்மாருடைய பொறுப்பு எவ்வளவு அதிகமாய்க் காணப்படுகின்றது! மாம்சீக உறவுமுறை மற்றும் வாய்ப்பின் காரணமாய்க் கர்த்தருடைய ஜனங்களில் பெற்றோருக்கு உரியதாகியுள்ள இந்த வல்லமையுள்ள செல்வாக்கை, அவர்கள் தங்களுடைய வழிநடத்துதலின் கீழிருப்பவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ஏதுவாகப் பயன்படுத்திடுவதற்கு, அவர்களிலுள்ள தெளிந்த புத்தியின் ஆவியானது நிச்சயமாய்த் தூண்டும்.
அந்தோ பரிதாபம், கிறிஸ்தவ தாய்மார்களில் சிலர்கூட இப்படியான வாய்ப்புகளை எடுத்துக்கொண்டு, தங்களது பிள்ளைகளை, பரலோக வழிகளில் நடத்துவதற்குத் தவறிவிடுகின்றனர். இவர்கள் கர்த்தருடைய நோக்கத்திற்காகத் தங்களுடைய பூமிக்குரிய நன்மைகளைத் தியாகம் செய்திடவும் மற்றும் பரலோகத்தில் பொக்கிஷத்தைச் சேர்த்து வைக்கவும் விரும்பினாலும், இவர்களுக்குள்ளாகவே அதிகமான உலகத்தின் ஆவி இருப்பதினால், இவர்கள் ஞானத்தின் வழிகளே இனிமையான வழிகள் என்பதையும், மற்ற அனைத்துப் பாதைகளும் தற்காலத்திலும், எதிர்க்காலத்திலும் உபத்திரவத்திற்கே வழிநடத்தும் என்பதையும் உணரத் தவறிப்போய், தங்களது பிள்ளைகளையும் (இந்த ஞானமான வழிகளில்) பங்கெடுக்க வைப்பதில் விருப்பமற்றுக் காணப்படுகின்றனர். “சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகளை இவர்கள் புரிந்துகொள்ள தவறிவிடுகின்றனர் (ரோமர் 12:1). மற்ற அனைத்துப் பாதைகளும் புத்தியற்றதும், ஞானமற்றதும், பகுத்தறிவில்லாததுமாக இருக்கின்றது.