(Q803:2; Q825:2)
கேள்வி – “என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லைவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்கும் இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன” (1 கொரிந்தியர் 7:14) எனும் அப்போஸ்தலன் பவுலினுடைய வார்த்தைகளை விவரிக்க முடியுமா?
பதில் – ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படியாமையும், பரம பிதாவிடமிருந்துள்ள இவர்களது விலகிப்போகுதலும், அவர்கள் பிள்ளைகள் அனைவரையும் விலகிப்போகப்பண்ணினபடியால், மகாபெரும் பாவநிவாரணத்தின் புண்ணியத்தின் வாயிலாய் உண்டாகும் “கர்த்தருடைய ஜனங்களின்” ஒப்புரவாகுதலானது, அவர்களை மீண்டும் தேவனுடன் இசைவுக்குள் கொண்டுவருவது மாத்திரம் இல்லாமல், அவர்களின் பிள்ளைகளும் பகுத்தறிந்து முடிவெடுக்கும் வயதை அடைவதற்கு முன்புவரையிலும் தங்களின் பெற்றோர்கள் வாயிலாக நீதிமானாக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றனர். பெற்றோரில் ஒருவர் கர்த்தருடைய பிள்ளையாகவும், மற்றவர் தேவனுக்கு அந்நியராகவும், புறம்பானவராகவும் காணப்பட்டால் எப்படி என்கிறபோதே கேள்வி சற்றுக் கடினமாகுகின்றது; ஆனால் இப்படியான சூழ்நிலைமையில், தேவன் குழந்தையைக் கர்த்தருடைய சீஷனாய்க் காணப்படும் பெற்றோர்மூலமாகத் – தம்முடையதாகக் கருதுகின்றார். குழந்தையினுடைய விஷயத்தில் பெற்றோர்களில் விசுவாசியாய்க் காணப்படும் ஒரு பெற்றோரின் நிலைமையானது, அர்ப்பணம்பண்ணாத பெற்றோரின் நிலைமையை ஈடுகட்டுகின்றது.