R1096 (page 6)
பரிசுத்தவான்களாக அழைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான ஸ்திரீகள், ஏற்கெனவே குடும்பத்தினுடைய பாரங்களைச் சுமக்கிறவர்களாய் இருக்கிறதினாலும், மேலும் தேவனும் அவர்களை அந்தப் பொறுப்புகளிலிருந்தும், கடமைகளிலிருந்தும் எந்த விதத்திலும் விடுவித்துவிடுகிறதில்லை என்பதாலும், அப்படிபட்ட ஸ்திரீகள் தெய்வீக வழிநடத்துதலுக்கு ஏற்ப அந்தப் பொறுப்புகளையும், கடமைகளையும் சிறந்த முறையில் எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதைக் குறித்துக் கவனமாய் ஆராய்வது, அவர்களுடைய கடமையாய் இருக்கிறது.
வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கும்பொழுது பிள்ளைகளை வளர்க்கும் வழிமுறைகள் மற்றும் திட்டங்களுக்கான முழு வழிக்காட்டுதல் எதையும் நம்மால் அதில் காணமுடிவதில்லை ஆனாலும் நாம் கவனத்தோடு தியானித்து, செயல்முறைப்படுத்த வேண்டிய சில கோட்பாடுகள் அதில் இருப்பதை நம்மால் காணமுடியும். மேலும் அப்படி அவைகளைச் செய்யும்போது, நாம் விரும்புகிற பலன்களை அது ஏற்றகாலத்தில் கொண்டுவரும் என்றும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சாலொமோன் சொன்னதாவது, “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” (நீதி. 22:6). பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாமல் இருக்கும்படிக்கும், ஆனாலும் அவசியம் இருக்கும் பட்சத்தில் அவர்களைக் கண்டித்தும், தண்டித்தும் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் அவர்களை வளர்க்கும்படிக்கும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், நாம் கற்றுக்கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும் ஏதுவாக நம்முடைய பரலோக பிதாவினுடைய முன்மாதிரியும்கூட நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டதான எளிமையான கோட்பாடுகளின்மீது [R1097 : page 6] நாம் கவனத்தைச் செலுத்தி, இதோடுகூட ஒருவரைப் பயிற்றுவிக்கவும், ஒழுங்குபடுத்தவும் தேவன் கையாளுகிற முறைகளையும் நாம் கூர்ந்து கவனித்தால், இந்தப் பாடத்திற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வோம்.
நாம் மற்றவர்களை நிர்வகிக்க வேண்டுமானால், முதலாவதாகத் தேவனைப்போல நாம் நம்மையே அடக்கியாள வேண்டும். நம்முடைய தனிப்பட்ட முன்மாதிரியான ஜீவியம் மிகவும் ஆற்றல்மிக்கப் பாடங்களைக் கொடுக்கும் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொண்டு, நாம் நீதியுள்ளவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் பரிவுள்ளவர்களாகவும், நன்றியுள்ளவர்களாகவும், பொறுமையுள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். நீங்கள் வெறும் வார்த்தைகளினால் மாத்திரம் போதிப்பீர்களானால், நீங்கள் தொடர்ந்து உங்களையே குற்றப்படுத்துகிறவர்களாகவும் மற்றும் உங்கள் பலவீனங்களை நீங்களே சுட்டிக்காட்டுகிறவர்களாகவும் இருப்பீர்கள்; மேலும் நீங்கள் போதிப்பவைகளை முதலாவது நீங்கள்தான் செய்யவேண்டும் என்று குழந்தைகளிலுள்ள அவர்கள் பருவத்திற்கேவுரிய வேகமான கிரகிக்கும் தன்மையானது, துரிதமாக அனுமானித்துவிடும்; அதனால் நீங்கள் அவைகளைச் செய்யாதவரையில், உங்களுடைய எல்லாப் போதனைகளும் வீணாயிருக்கும். ஆகையால் இங்கேதான், கிறிஸ்தவ பெற்றோர்களுக்கான முதலாம் கோட்பாட்டைப் பார்க்கின்றோம் – உங்கள் பிள்ளைகள் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே முடிந்த அளவுக்கு நீங்களும் இருக்கவேண்டும்; நீங்கள் ஒரு போதகர் என்பதையும், காலை முதல் இரவு வரையில் உங்கள் பிள்ளைகளால் நீங்கள் கவனிக்கப்பட்டும், பின்பற்றப்பட்டும் (studied & copied) வருகிறீர்கள் என்பதையும் ஒரு கணம்கூட மறந்துவிடக்கூடாது. நீங்கள் சீறி விழுகிறவர்களாகவும், சிடுசிடுப்பாகவும், முறையிடுகிறவர்களாகவும், ஜீவியத்தின் கடமைகளைச் செய்வதில் விருப்பம் இல்லாதவர்களாகவும், கடமைகளை அசட்டைச் செய்கிறவர்களாவும், உங்களுக்கு வரும் வேலைகள் வசதியான (இலகுவான) விதத்தில் வரவேண்டும் என்று விரும்புகிறவர்களாகவும், உங்கள் அயலகத்தாரர்களின் ஆஸ்திகளையோ அல்லது ஆரோக்கியத்தையோ அல்லது சொகுசுகள் முதலானவைகளையோ… பார்த்து இச்சிக்கிறவர்களாகவும் நீங்கள் இருந்துகொண்டு, இதேமாதிரியான மனநிலைகள் உங்கள் பிள்ளைகளிடத்தில் முளைத்தெழும்புவதை நீங்கள் பார்க்கும்பொழுது அதிர்ச்சியடைய வேண்டாம். மேலும் இப்படிப்பட்ட மனநிலைகள் பிள்ளைகளிடத்தில் முளைத்தெழும்பி, வீட்டினுடைய கடமைகளுக்கடுத்தவைகளில் தொடர்ந்து பிரச்சனை உண்டுபண்ணி, குறுக்கிட்டுக்கொண்டிருக்குமானால், நீங்கள் உங்கள் பிள்ளைகளைப் பலவந்தம்பண்ணவும், அவர்களிடத்தில் முழுப்பலத்தைப் பிரயோகிக்கவும், அவர்களை அச்சுறுத்தவும், தண்டிக்கவும் கட்டாயமாகிடும்; இப்படியாக உங்கள் சுமைகளும், கவலைகளும் பெரிதளவில் அதிகரித்திடும்.
ஒருவேளை அநேகரால் வீட்டுவேலைதானே என்று சாதரணமாகப் பார்க்கப்படுகிற வாழ்க்கையினுடைய இந்தக் கடமைகளைக் குறித்து, அதுவே உங்களுடைய மிகப்பெரிய மனமகிழ்ச்சி என்று நீங்கள் சந்தோஷத்தோடும், மகிழ்ச்சியோடும் இருப்பீர்களானால் – இவ்வாழ்க்கையில் இப்படிப்பட்ட கடமைகள் உங்களுக்குக் கிடைத்திருப்பதற்காக நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பீர்களானால் – கஷ்டங்களில் இருக்கும் உங்கள் அண்டை வீட்டுக்காரர்களின் கவலைகளைத் தணியச்செய்வதிலும், அவர்களுடைய பாரங்களை இலகுவாக்கிவிடுவதிலும் ஆர்வமாகவும் உதவிகரமாகவும் இருப்பீர்களானால் – உங்களோடுள்ள சின்னஞ் சிறுசுகளும் உங்களுடைய சந்தோஷம், நன்றியுணர்வு, உற்சாகம், உதவி மனப்பான்மை போன்ற ஆவியைச் சீக்கிரமாகக் கிரகித்துக்கொண்டு, அதைப் பற்றிக்கொள்வார்கள்; இப்படியாக வீட்டில் கொடுக்கப்படும் பயிற்சியின் (home training) விஷயத்தில், பாதி ஜெயத்தை அடைந்துவிடலாம்.
அன்பான தாய்மார்களே, “எனக்குப் பாத்திரங்களைக் கழுவ வெறுப்பாக இருக்கிறது,” அல்லது “எனக்குச் சமைக்க வெறுப்பாக இருக்கிறது,” அல்லது இப்போது உங்கள் மேல் இருக்கும் எந்த ஒரு கடமையையும் செய்கிறதற்கு உங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது என்று நீங்கள் சொல்வதை உங்கள் பிள்ளைகள் கேட்காத அளவிற்கு நடந்துகொள்ளுங்கள். மேலும், அவர்களிடமிருந்தும் அதுபோன்ற வார்த்தைகள் வரும்பொழுது அதைக் கடிந்துகொள்ளாமலும் விடக்கூடாது. மாறாக அவர்களிடம், “என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் யோசித்துப்பார்த்தால், தேவன் இவ்வளவு தாராளமாய் உங்கள் உணவு தட்டுகளை (plates) நிரப்பியிருந்தும் அவருக்கு நீங்கள் மிகவும் நன்றியறிவற்றவர்களாகவும், அவர் அந்த தட்டுகளை மறுபடியும் நிரப்பத்தக்கதாக அதை நீங்கள் கழுவிவைப்பதில் மிகவும் சோம்பேறிகளாகவும் இருக்கிறதை நீங்களே காண்பீர்கள்” என்று சொல்லுங்கள். ஒருவேளை நாம் இப்படி நன்றியறிதல் இல்லாதவர்களாக இருப்பதைத் தொடர்வோமானால், நம்மை நம்முடைய உணர்வுக்குக் கொண்டுவந்து, நாம் எவ்வளவு அற்பத்தனமாக இருக்கிறோம் என்பதை நமக்குக் காண்பிக்கும் பொருட்டும், சில சமயங்களில் அந்த உணவு தட்டுகளை நிரப்புவதற்குத் தேவன் மறுத்துவிடலாம் என்று சொல்லிக்கொடுங்கள். கடமையைச் செய்வதில் இருக்கிற சந்தோஷத்தை விட, சந்தோஷத்தை வேறெங்காவதுதான் தேடவேண்டும் என்ற எண்ணத்தை, உங்கள் வார்த்தையின் மூலமாகவோ அல்லது பார்வையின் மூலமாகவோ ஒருபோதும் உங்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்காதீர்கள். இப்படியெல்லாம் அவர்களைப் பயிற்சித்து வந்தால், நாள் முழுவதும் கடினமான வேலைகளில் ஆர்வமே இல்லாமல் வேலை செய்து, இந்தச் சலிப்பைப்போக்க வேண்டி, அந்த நாளின் முடிவிலோ அல்லது வாரத்தின் முடிவிலோ சிறிய பொழுதுபோக்குகளுக்காக அல்லது விளையாட்டுகளுக்காக, அவர்கள் பொறுமையற்றுக் காத்திருப்பதற்குப் பதிலாக, அன்பு மற்றும் கடமையினுடைய கனிவான வேலைகளின் மூலமாக, நாள் முழுவதும் சந்தோஷத்தைக் கண்டடைய நீங்கள் அவர்களை ஆயத்தம்பண்ணலாம். சந்தோஷத்தோடு செய்யும் கடமைகளில்தான் மிக உயர்ந்தபட்ச மகிழ்ச்சி இருக்கின்றது; இந்த மகிழ்ச்சியோடுகூட எந்த ஒரு மாலை நேர பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள் (picnic) போன்றவைகள்… ஒப்பிடுவதற்குத் தகுதியற்றதாய் இருக்கிறது. எனினும், இதுபோன்ற (மாலை நேர பொழுதுபோக்கு, சுற்றுலா போன்ற) குற்றமற்றச் சந்தோஷங்களானது விசேஷமாகத் தேடப்படாமல் வரும்பொழுது… வாழ்க்கையினுடைய பிரதான காரியமாகக் கருதி தேடப்படாமல், அதற்காக ஏக்கங்கொள்ளாமல் இருக்கையில், எதிர்ப்பாராமல் வரும்பொழுது… இவைகள் இனிமையாகவும், ஆரோக்கியமாகவும், சந்தோஷகரமான நிகழ்வுகளாகவும் காணப்படும்; அதுவும் இவை குறிப்பாக அடிக்கடி வராமல், அன்புள்ள பெற்றோர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து வந்த இன்ப அதிர்ச்சிகளாகக் காணப்படுகையில், இவை விசேஷமாகச் சிறுவர்களுக்கு அதிகப்படியான சந்தோஷத்தைக் கொடுக்கிறதாய் இருந்திடும். பிள்ளைகள் வேலை செய்ததற்காய்ப் பணம் கொடுக்கும் சிலருடைய பழக்கமானது, பிள்ளைகள் வீட்டு வேலைகளுக்கடுத்த விஷயங்களில் பெற்றிருக்கும் கடமை உணர்வினை அவர்களிடத்திலிருந்து அகற்றிப்போட்டு, அதற்குப் பதிலாகச் சுயநலம் மற்றும் தன்னிச்சையான மனப்பான்மையை உருவாக்கிவிடுகின்றது. பரிசு (gift) என்பது, இலாபத்தை எதிர்ப்பார்ப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று பிள்ளைகளைப் புரிந்துகொள்ளச் செய்வது மிகவும் நல்லது.
நம்முடைய இரண்டாவது கோட்பாடு என்னவென்றால், சோம்பலை வார்த்தையின் மூலமாகவோ அல்லது உதாரணத்தின் மூலமாகவோ ஒருபோதும் ஊக்குவித்திடக்கூடாது. சோம்பல் என்பது தீய பழக்கத்திற்குத் தாயாக இருக்கிறது. மேலும், சோம்பல் எல்லா விதமான தீமையையும் உண்டுபண்ணுகிற மூலக்காரணமாகவும் இருக்கிறது. ஏனென்றால், சாத்தான் சோம்பலாய் இருக்கிற கைகள் செய்வதற்கென்றே சில பொல்லாங்குகளை இன்றைக்கும் வைத்திருக்கிறான். சோம்பலாய் இருப்பது எந்த ஓர் ஆரோக்கியமான மனிதனின் இயல்பான நிலை அல்ல என்று இயற்கையே நமக்குப் போதிக்கின்றது. ஒன்றுமே செய்யாமல் வெறுமனே (சும்மா) உட்கார வைப்பதைப்போன்று வேறொரு கொடுமையான தண்டனையை ஒரு பிள்ளைக்குக் கொடுக்க முடியாது. தூங்கும் நேரத்தைத் தவிர்த்து மனித மனம் / சிந்தை ஒருபோதும் சும்மா (idle) இருப்பதில்லை, சில சமயங்களில் தூங்கும் போதும்கூடச் சும்மா இருப்பதில்லை. நோயினால் செயல் இழந்தாலொழிய மனிதனுடைய சரீரம் செயல்படாமல் இருப்பது என்பது இயலாதது.
அதினால், கடமையின் பிடியிலிருந்து ஒரு பிள்ளைக்குக் கொஞ்சம் விடுப்புக் (release) கொடுக்க வேண்டும் என்பது, அவனைச் சும்மா இருக்கச்செய்ய வேண்டும் என்று ஒருபோதும் அர்த்தமாகாது. அவன் மேல் எந்த ஒரு கடமையும், பொறுப்பும் இல்லாவிட்டால், அவன் நேரத்தையும், அவனுடைய முயற்சிகளையும் தன் இஷ்டப்படி செலவழிப்பான்; மேலும் அவன் முரண்பாடான மற்றும் பயிற்றுவிக்கப்படாத பிள்ளைகளிடத்திலிருந்து சில காரியங்களைக் கற்றுக்கொள்வதற்கும் வேண்டி நேரத்தைச் செலவழிப்பான்; மேலும் அவன் கற்றுக்கொண்ட இவைகளைப் பின்நாட்களில் நீங்கள் அடியோடு அழிக்கவோ, முற்றிலுமாக தடைசெய்யவோ முயற்சித்தாலும் கூடாமல் போய்விடும். பிள்ளைகளுக்குக் கூடுமானமட்டும் சில பொறுப்புகளும், சில கடமைகளும் கொடுக்கப்பட வேண்டும், எனினும் அவர்கள் மேல் அதிகமான பாரத்தைச் சுமத்திவிடக்கூடாது. அவர்களுடைய சொந்த யோசனைகளைச் (original ideas) செயல்படுத்துவதற்கான நேரமும், வாய்ப்பும் கிடைத்தால் அவர்கள் மிகச் சிறப்பாக முன்னேறுவார்கள். ஆண் பிள்ளைகள் தச்சு வேலை (carpenting) செய்யும் பொருட்களிலும் மற்றும் ஆக்கப்பூர்வமான (constructive) கருவிகளிலும் நன்றாகவும், சந்தோஷமாகவும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்;; மேலும், பெண்பிள்ளைகள் பொம்மைகள், ஊசிகள், குண்டூசிகள் போன்றவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். ஆனபோதிலும், அவர்களுக்கு அதிகமான பொருட்களையும் அல்லது அந்த விளையாட்டுப் பொருட்கள் அனைத்தையும் (full set) கொடுக்க வேண்டாம்; இப்படி இல்லையென்றால், நீங்கள் அவர்களுடைய புத்திகூர்மைக்கு இடம்கொடுக்காமல் போய்விடக்கூடும். கேத்தி (katie – பெண் பெயர்) அவளாகச் செய்த கந்தையான பொம்மையும், ஜானி (ஆண் பெயர்) அவனே பென்சிலால் வரைந்த வரைபடமும் நீங்கள் வெளியே வாங்குபவைகளைவிட எப்போதுமே மிகவும் விலையேறப்பெற்றதாய் இருக்கும். மிருதுவாக இருக்கும் கிறிஸ்துமஸ் பொம்மைகளை மிகப் பத்திரமாக வைத்துக்கொள்ள கற்றுக்கொடுக்கிறதின் மூலம், நீங்கள் அவர்களுக்குச் சிக்கனத்தையும், கவனத்தையும் கற்றுக்கொடுக்கலாம். மேலும், அவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும்போது, பயனுள்ள காரியங்களில் அவைகளை உபயோகப்படுத்த வையுங்கள். அந்தத் திறமைகளைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நீங்கள் அவர்களுக்குச் சில உரிமைகளைக் கொடுக்கிறதின் மூலமாக அவர்களுடைய திறமைகளை நீங்கள் பாராட்டுகிறீர்கள் என்பதை அவர்கள் உணரும்படி செய்யுங்கள். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான வேலைக்கு (real service) அடுத்தப்படியாக (secondary) இருக்கவேண்டும். நிஜமான குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்ட உடனே, [R1097 : page 7] குழந்தையைக் கவனிப்பதற்கு வேண்டி நெலி (Nellie – பெண் பெயர்) தன் பொம்மையை உடனடியாகக் கீழே வைத்துவிட்டுப்போக வேண்டும்; மேலும் எடுபிடி வேலை செய்யும்படிக்கு ஜானி அழைக்கப்படும்போது, அவன் தன் சுவாரசியமான சுத்தியலையும், ஆணியையும் கீழே வைத்துவிட்டுப்போக வேண்டும். குழந்தைப் பருவத்திலேயே இவ்விதமாக அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டால் இந்தப் பழக்கங்கள் நிச்சயமாக வளரும். மேலும், அவர்கள் அப்படிச் செய்வதில் சந்தோஷமுள்ளவர்களாகவும், பயனுள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
திரும்பத்திரும்ப வேலையைச் செய்யும்படி கட்டாயப்படுத்தி அல்ல, மாறாக வேலையைச் சுட்டிக்காட்டுவதின் மூலமாகவும், அதைச் செய்யாதபோது சில விதங்களில் அவர்களைத் தண்டிப்பதின் மூலமாகவும் அவர்களிடமிருந்து உடனடியான, சந்தோஷமான மற்றும் அன்பான கீழ்ப்படிதல் எதிர்ப்பார்க்கப்பட்டு வலியுறுத்தப்படவேண்டும். கீழ்ப்படியாத பிள்ளையை எப்போதும் கடிந்துகொண்டும், வேலை செய்யாததின் நிமித்தம் அவர்களை வற்புறுத்திக்கொண்டும் இருப்பதன் மூலம் உங்களுக்குள்ளாகவே ஒரு பதட்டத்தை உண்டாக்கிக்கொண்டு, குடும்பத்திலுள்ள மீதமுள்ளவர்களின் சமாதானத்தையும் குலைத்துப்போட்டு, இப்படியாக உங்களுடைய தன்மானத்தை / மதிப்பை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டாம். மாறாக, அந்த வேலையைச் செய்யும் சிலாக்கியத்தை மற்றப் பிள்ளைக்குக் கொடுங்கள் (அப்படிக் கொடுப்பதின் மூலம் அந்த வேலையைக்குறித்து அவர்களைக் கவனிக்க வையுங்கள்); மேலும், கீழ்ப்படியாத பிள்ளையோ அந்த வேலையைச் செய்யும் சிலாக்கியத்தையும், அதோடுகூட வருகின்ற அங்கீகரிப்பையும் தான் இழந்துபோனதைக்குறித்து உணர்ந்துகொள்ளட்டும்.
மேலும், இது மற்றுமொரு ஆலோசனையை நமக்குக் கொடுக்கின்றது; அதாவது தேவனுடைய அங்கீகரிப்பிற்கும், பெற்றோர்களுடைய அங்கீகரிப்பிற்கும் மற்றும் தங்களுடைய சொந்த மனசாட்சியின் அங்கீகரிப்பிற்கும் கவனம் உடையவர்களாக இருக்கும்படி நாம் பிள்ளைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதேயாகும். ஒருவேளை அவர்கள் தங்கள் மனசாட்சிக்குச் செவிகொடாமலும், தேவனை அறியாமலும் அல்லது அவரை அன்புகூராமலும் இருந்து, பெற்றோர்களை வேலைக்காரர்களைப்போல எண்ணினால், கடினமான முறையிலேயே (Brute force) அவர்களை அதிகாரத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணிடுவது அவசியமாகிடும்; அப்படிப்பட்ட கீழ்ப்படிதல் இழிவானதாக, அதுவும் தற்காலிகமானதாகத்தான் இருக்கும். இதை எப்படிச் சரிப்படுத்துவது? இதை ஒரே நாளில் செய்திட முடியாது; மேலும், கருத்தில்லாத, கவனமற்ற பெற்றோர்கள் இதை ஒருபோதும் செய்யவே முடியாது. இது மிகவும் நுணுக்கமான காரியமாகும்; இதற்குத் திறமையும் புத்திகூர்மையும் தேவையானது. உங்கள் பிள்ளைக்கு அறிவுரை கொடுக்கும்படிக்கும், அவனை ஈர்க்கும்படிக்கும் உங்கள் பிள்ளையினுடைய மனநிலையை நீங்கள் நன்றாய் ஆராய வேண்டும்; அதற்கான சரியான சந்தர்ப்பங்களைக் கவனித்து, அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் ஒன்றையும் தவறவிடக் கூடாது. அவனிடத்தில் இருக்கும் நல்லக் காரியங்களுக்காக உங்களது பாசமான அங்கீகரிப்பை வெளிப்படுத்துவதற்காகவும் (தக்கச் சமயத்தில்தான் அப்படி வெளிப்படுத்த வேண்டும், மாறாக எப்போதும் அல்ல, இல்லையென்றால் அது அகந்தையை வளர்த்துவிடும்), மேலும் அவனுடைய பிழைகளுக்காகவும், தவறுகளுக்காகவும் உங்களுக்கு இருக்கும் வலியையும் மனக்குறைவையும் வெளிப்படுத்துவதற்காகவும் அவனுடைய நடக்கையில் இருக்கும் சின்ன சின்ன காரியங்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நம்மீது தேவனுடைய பார்வை இருக்கிறதை நாம் எப்படி உணர்கிறோமோ, அப்படியே நம்முடைய பார்வையும், தேவனுடைய பார்வையும் எப்போதும் அவன் மீது இருக்கிறது என்பதை அவனும் உணரும்படி செய்யுங்கள். (2 நாளாகமம் 16:9; சங்கீதம் 34:15; I பேதுரு 3:12; நீதிமொழிகள் 15:3). சாப்பிடும் மேஜையில் பிள்ளை உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து, கத்தி மற்றும் முட்கரண்டியைப் (knife & fork) பயன்படுத்தத் தெரியாத ஓர் அநாகரிகமான பிள்ளையைப்போலச் சாப்பிடுவதற்கு நீங்கள் அனுமதிக்கக்கூடாது; அவன் எல்லாவற்றிலும் சிறந்ததைத் தனக்காக எடுத்துக்கொண்டு, மற்றவர்களுடைய தேவைகளுக்குச் சற்றும் கவனமில்லாமல், அற்பத்தனமாய் நடந்துகொள்வதற்கு நீங்கள் அவனை அனுமதிக்காதீர்கள்; பிள்ளைகள் தாராள மனமுடையவர்களாக இருக்கவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கவும், ஒருவர் இன்னொருவருடைய விருப்பங்களுக்குக் கவனம் கொடுக்கவும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்; மேஜையில் உணவு எவ்வளவுதான் எளிமையாக இருந்தாலும், சாப்பிடுவதற்கு மேஜையில் உட்காருகையிலேயே, இப்படிப்பட்டதான பாடங்களை அவர்கள் மனதில் பதியவைப்பதற்கான மிகச்சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும். இப்படிப்பட்ட நேரங்களில் நல்லப் பழக்கங்கள் மற்றும் நல்லக் கொள்கைகள் பற்றியே அடிக்கடி சம்பாஷணைப்பண்ணப்படுவதாக. உண்மையில் சொல்லப்போனால் இதைப்போல் வேறெந்த சந்தர்ப்பமும் இவ்வளவு சாதகமாகவும், இவ்வளவு அடிக்கடியும் கிடைக்காது; அவைகள் எல்லாவற்றையும் நன்றாகப் பயன்படுத்துங்கள்; பயன்படுத்தக் கற்றும்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் எதைப் பற்றியும் ஒன்றும் அறியாதவர்களாகவே இந்த உலகத்திற்குள் வந்தார்கள் என்பதையும், சாதாரணமான நல்லொழுக்கங்கள் கூட அவர்களுக்கு வார்த்தையின் மூலமாகவும், முன்னுதாரணத்தின் மூலமாகவும்தான் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீங்கள் நினைவுகூரவேண்டும். ஆதலால் நன்மையைக்குறித்தும், தீமையை எதிர்ப்பதைக்குறித்தும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது நீங்கள் பொறுமையாகவும், ஜாக்கிரதையாகவும், கவனமாகவும், ஞானமாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் பிள்ளைகளுடன் பழகுங்கள்; அவர்களுடன் நட்புகொண்டிருங்கள்; அவர்களும் உங்கள் தோழமையை அனுபவிப்பார்களாக. பிள்ளைகளோடு பிள்ளைகளாக இருங்கள், ஆனாலும் உங்கள் அனுபவ வயதிற்கேற்ப நடந்துகொள்ளுங்கள்; அற்பத்தனமாகவோ அல்லது மதியீனமாகவோ நடந்துகொண்டு உங்கள் மரியாதையைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். உங்களுடைய சொந்த நிலைப்பாட்டைப் பற்றிக்கொண்டிருங்கள்; ஆனாலும் அவர்களுடைய நிலைப்பாட்டைக் குறித்தும் அனுதாபம் கொள்ளுங்கள்; அவர்களுடைய வயதில் நீங்கள் காணப்பட்டபோது உங்களுக்கு இருந்த உணர்வுகளையும், அனுபவங்களையும் மறக்க வேண்டாம். அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அவர்களுடைய பிரச்சனைகளைக்குறித்து ஒருபோதும் பரியாசம் பண்ணாதீர்கள்; மாறாக உங்களுடைய அன்பும் அனுபவமும் நீங்கள் எவ்விதத்தில் செய்யவேண்டும் என்று உங்களை ஏவுகிறதோ அப்படியே அவர்களுக்கு ஆறுதலளித்து அறிவுரை கூறுங்கள். ஒருவரைப் பற்றி மரியாதைக்குறைவாக இன்னொருவருடன் ஒருபோதும் பேசவேண்டாம்; அல்லது பிள்ளைகள் அப்படிப் பேசினால், அதைத் திருத்தாமல் விட்டுவிடாதீர்கள்.
அவர்களிடம் தவறான கொள்கைகள் முளைத்தெழும்புவதை நீங்கள் நன்றாகக் கவனித்து அதைக் குறித்து அவர்களிடம் ஜாக்கிரதையாகப் பேசுங்கள். சில, மிகச் சிறிய கிரியைகளில் இருக்கும் இழிவான கொள்கையையும், அப்படிப்பட்ட கிரியைகள் இன்னும் கொஞ்சம் வளரும்போது அது கொண்டு வரும் துயரம் மிகுந்த கனிகள் (விளைவுகள்) என்ன என்பதையும் அவர்களுக்குக் காட்டுங்கள். பிள்ளைகளிடத்தில் நேரடியாய் இல்லாமல், மாறாக அவர்கள் பார்க்கிறவிதத்தில், மற்றவர்களுடைய தேவைகள், கஷ்டங்கள் மற்றும் சோதனைகளைக்குறித்துப் பேசுங்கள்; மேலும் அப்படிப்பட்டவர்களுடைய கஷ்டங்களிலிருந்து கூடுமானவரை அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் திட்டமிட்டு அவைகளைச் செயல்படுத்துகிற விதங்களையெல்லாம் உங்கள் பிள்ளைகள் கவனிக்கட்டும். அன்பு மற்றும் இரக்கத்தின் காரணமான பிரயாணங்களுக்கு அவர்களை அனுப்பிவையுங்கள் அல்லது உங்களுடன் கூட்டிச்செல்லுங்கள்; மேலும் சந்தோஷம் மிகுந்த (கொண்டாட்டமான) வீடுகளுக்குச் செல்வதைக் காட்டிலும், துக்கமும், துயரமும் மிகுந்த வீடுகளுக்குச் சென்று அங்கே அழுகிறவர்களை ஆறுதல்படுத்துவதையே நீங்கள் நாடுகிறீர்கள் என்று உங்கள் பிள்ளைகள் பார்க்கட்டும்.
உங்களுக்கென்று கஷ்டங்கள் இருந்தாலும், அல்லது மற்றவர்களுடைய கஷ்டங்களில் நீங்களும் அவர்களோடுகூடப் பரிதாபங்கொண்டிருந்தாலும், நீங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கவேண்டும்; மாறாக சோர்ந்துபோன முகத்தை வைத்திருக்கவேண்டாம். கிறிஸ்தவ சந்தோஷம் மற்றும் சமாதானம் என்னும் கதிரொளி எல்லா நேரத்திலும் உங்களின் முகத்தை ஒளிரச் செய்யட்டும். [R1098 : page 7] மேலும் அந்தக் கதிரொளியை உங்கள் சொந்த வீட்டிற்குள் மாத்திரம் அல்ல, நீங்கள் பிரவேசிக்கும் மற்ற எல்லாருடைய வீட்டிற்குள்ளும் கொண்டு செல்லலாம்.
நீங்கள் எவ்வளவுதான் ஏழையாக இருந்தாலும், தாராள மனதுடையவர்களாய் இருங்கள். மேலும், இந்தத் தாராள மனப்பான்மையைக் குறித்து உங்கள் பிள்ளைகளிடம் பேசி, அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, அதைச் சிக்கனமாக இருப்பதன் மூலம் எவ்வாறு சமாளித்துக் கொள்ள முடியும் என்பதை வார்த்தையின் மூலமாகவும், கிரியைகளின் மூலமாகவும் அவர்களுக்குக் காண்பியுங்கள். மேலும் இந்தத் தாராள மனப்பான்மையையும், சிக்கனத்தையும் சரியான முறையில் சமநிலைப்படுத்தவில்லை (balance) என்றால், இவை இரண்டுமே எந்த உச்சத்திற்கும், போகும் என்பதையும் கற்றுக்கொடுங்கள்.
நல்லப் புத்தகங்களை உங்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளத்தக்கதாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; மேலும் தகவல்களுக்காக அவைகளை அவர்கள் வாசிப்பதற்கும், வாசித்ததைக் குறித்து உங்களிடம் சொல்லும்படிக்கும் ஊக்குவியுங்கள். பரந்து விரிந்த ஆலோசனைகளை (broad ideas) அவர்களுக்குக் கொடுக்கும்படி பெருமுயற்சி செய்யுங்கள். சிறிய குடும்ப வட்டாரமும், அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களும்தான் உலகத்திலேயே மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பாகம் என்று அவர்கள் நினைப்பதற்கு இடம் கொடுக்காதீர்கள். மனுக்குலம் என்பது ஒரே பெரிய குடும்பம் என்றும், ஒரே தகப்பன் மற்றும் ஒரே தாயின் பிள்ளைகள் என்றும், அதனால் அவர்களைச் சகோதரர் மற்றும் சகோதரிகளைப் போல் பாவித்து ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்றும், மரித்தோரும் மற்றும் உயிருள்ளோரும் இந்த ஒரே குடும்பத்தின் அங்கங்கள் என்றும், அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும், அவர்கள் எதையெல்லாம் சாதித்தார்கள் என்பதையும், ஒரு சிலர் எப்படி நல்லவர்களாகவும் பெரியவர்களாகவும் இருந்தார்கள் என்பதையும், ஒரு சிலர் எப்படித் துன்மார்க்கராக இருந்தார்கள் என்பதையும் சரித்திரம் காட்டுகிறது என்றும் உங்கள் பிள்ளைகளுக்குச் சுட்டிக்காண்பியுங்கள். இது அதிக அறிவு சார்ந்த விஷயங்களை வாசிக்கும்படியாக அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், மேலும் இன்னும் இந்த மனுக்குலத்தினுடைய எதிர்கால முடிவை வெளிப்படுத்தும் தீர்க்கத்தரிசனங்களினால் அவர்கள் போதிக்கப்படுவதற்கு ஏதுவாய் அவர்கள் வழியை ஆயத்தப்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும். பல்வேறு விதமான அறிவு சார்ந்த புத்தகங்களைப் பிள்ளைகள் வாசிக்க நேரம் செலவாகுகையில், கெட்ட தொடர்புகளும், அதோடுகூட இணைந்திருக்கும் தீமைகளும் தவிர்க்கப்படும்.
இந்த ஆலோசனைகளோடு கீழ்க்கண்ட பயனுள்ள குறிப்புகளையும் நாங்கள் இணைக்கின்றோம் – ஒருவர் அதை இவ்வாறாகச் சொல்லுகிறார்:
குழந்தை வளர்ப்புப் பற்றிய அறிவியலின்
ஒரு சிறு தொகுப்பு
1.நீங்கள் ஒப்புக்கொண்டால் சந்தோஷமாக ஒப்புக்கொள்ளுங்கள்.
2.நீங்கள் மறுத்தால் இறுதிவரை மறுத்துவிடுங்கள்.
3.அடிக்கடி பாராட்டுங்கள்.
4.ஒருபோதும் திட்டாதீர்கள்.
5.உங்கள் பிள்ளைகளோடு எந்த ஒரு விவாதத்தையும் செய்வதில் ஜாக்கிரதையாய் இருங்கள்; ஆனால் ஒரு விவாதம் செய்யும் நிர்ப்பந்தம் ஆகுகையில், விவாதித்து முடிவிற்கு வாருங்கள். கோதி (Goethe) என்பவர் சொல்லுகிறதாவது…. விவாதத்தின் விஷயத்தில்… பெரியவர்களிடத்தில் எப்படியோ அப்படியே பிள்ளைகளிடத்திலும் உள்ளது, அதில் சிலர் முடிவெடுக்கின்றனர்;, ஆனால் பெரும்பாலானோர் ஆதாரங்கள் காட்டப்பட்டு இணங்க வைக்கப்படுகின்றனர்..
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், உங்கள் பிள்ளையை அடக்க முயற்சிப்பதற்கு முன்பாக உங்களை நீங்களே அடக்கி ஆண்டுகொள்ளுங்கள்.
இப்படிப்பட்டதான நல்ல மற்றும் ஞானமுள்ள எல்லாக் குறிப்புகளையும் உலகப்பிரகாரமான பெற்றோர்கள் கையாண்டு, அதன் மூலம் நன்மையும் அடைந்திருக்கிறார்கள்; மேலும் மத சம்பந்தப்பட்ட அதிகாரமும் மற்றும் கட்டுபாடுகளும் இல்லாதிருந்தாலும்கூட இவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கனமிக்க நிலைமைக்;கு உயர்த்தியிருக்கிறார்கள்; மேலும் அவர்களது ஒடுங்கிப்போகும் வருஷங்களில் அவர்களைப் பிள்ளைகள் ஆறுதல்படுத்தவும் செய்கின்றார்கள். எனினும் ஞானமும், ஜாக்கிரதையுமான வளர்ப்பில் இதுபோல எல்லாச் சிறந்ததும் நல்லதுமான காரியங்கள் இருந்தாலும், அதோடுகூட, திட்டமிடப்பட்ட மத ரீதியிலான பயிற்சியில்தான் இவை எல்லாவற்றைக் காட்டிலும் ஒரு பலமான வலிமை இருக்கிறது. தாங்கள் அனுபவிக்கும் எல்லா ஆசீர்வாதத்தையும் ஞானமாகவும், அன்பாகவும் வழங்குபவர் தேவன்தான் என்றும், நீதிக்கு அவரே பலன் கொடுப்பவர் என்றும், தீமை செய்பவர்களை அவரே தண்டிக்கிறவர் (எப்போதும் உடனே அல்ல, ஆனால் அவருடைய ஏற்ற வேளையில்) என்றும் கூறி, குழந்தைப் பருவத்திலிருந்தே தேவனை இதுபோல அவர்கள் அறியவும் நேசிக்கவும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டால், சின்ன சின்ன கஷ்டங்களை உதவிக்காகவும், இரக்கத்திற்காகவும் தேவனிடம் எடுத்து வரவும், அதே போல அவர்களுடைய சின்ன சின்ன சந்தோஷங்களையும் ஆசீர்வாதங்களையும் நன்றியோடும், துதியோடும் அவரிடம் கொண்டு வரவும் அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கற்றுக்கொடுக்கப்பட்டால், அவர்கள் கிரகித்துக் கொள்ளும் அளவிற்குத் தேவனுடைய திட்டத்தையும், அதனுடைய அவசியத்தையும் அவர்கள் கற்றுக்கொள்ளும்படி செய்தால், பச்சை மரம் போன்ற இந்தக் குழந்தைப் பருவத்தில் அவர்கள் பெற்றுக்கொள்கிற இதுபோன்ற அறிவுரைகள் ஒருபோதும் மங்கிப்போகாது. “பிள்ளையானவனை நடத்த வேண்டிய விதத்தில் அவனை நடத்து அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” ஒருவேளை அவன் தன் வாலிபப் பருவத்தில் அதை விட்டுவிட்டுத் திரியலாம், ஆனால் மெல்ல மெல்ல தேவனுடைய கண்டிக்கிற கரத்தின்கீழ் (தேவன் அவனை விட்டுவிடமாட்டார். ஏனென்றால், உங்கள் நிமித்தம் அவன் மேல் கவனமுள்ளவராக இருப்பார்) தாயினுடைய ஜெபங்களும், அறிவுரைகளும் மற்றும் அன்பும் புதுப்பொலிவுடன் நிச்சயமாக அவனால் திரும்பவும் நினைவுகூரப்பட்டுக் கவனிக்கப்படும்… ஒருவேளை தாய் இளைப்பாறுதலுக்குள் சென்று, அநேக நாட்களுக்குப் பிறகும் அது நடக்கலாம்.
பிள்ளைகளுடைய சரீரம், மனம் மற்றும் பண்பு சார்ந்த தேவைகளின் விஷயங்களில், இப்படிப்பட்ட ஜாக்கிரதையும், விழிப்பும், தொடர்ச்சியான கவனமும் ஏறக்குறைய தாயினுடைய எல்லா நேரத்தையும், பலத்தையும் எடுத்துக்கொள்ளும். சில சமயங்களில் அவளால் முடிகிறதற்கும் அதிகமாகவே அவள் கொடுக்கவேண்டியிருக்கும்; தாய்மையினுடைய ஆரம்பக் காலத்தில் குடும்ப வட்டத்திற்கு அப்பாற்பட்ட காரியங்களில், அவளிடமிருந்து குறைவானதையே எதிர்பார்க்க முடியும். ஆதலால், பிள்ளையை வளர்க்கும் இந்த விஷயத்தில் அவள் கொண்டிருக்கும் உண்மைத்தன்மையானது, பெரிய பெரிய வேலைகளில் (ஆவிக்குரிய வேலைகளில்) உண்மையாக இருக்கவேண்டும் என்கிற அவளுடைய ஆவல் மற்றும் விருப்பத்தினுடைய அளவைக் காட்டுகின்றது; மேலும், உண்மையாகவே எஜமானரின் அங்கீகரிப்பிலோ அல்லது தன் குடும்பத்தாரின் அன்பு மற்றும் மதிப்பு மரியாதையிலோ, தனக்கான பலனை அவள் நிச்சயமாக இழந்து போகமாட்டாள். இயற்கையாகவே சில பிள்ளைகள் பார்ப்பதற்குத் தாறுமாறாகவும், சிந்தனையற்றவர்களாகவும் சிலகாலம் இருந்தாலும் கூட நிச்சயமாகப் போகப்போக அவர்களும் உயர எழுந்து, அவளைப் பாக்கியவதி என்பார்கள்.
கிறிஸ்தவ பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காக இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை, தற்காலத்தில் விடிந்து கொண்டிருக்கும் யுகத்தினுடைய மகா திரும்பக்கொடுத்தலின் வேலையின் ஒரு பகுதி என்று அவர்கள் கருத வேண்டும். தேவனுடைய திட்டத்தையும், மேலும் மகா உபத்திரவ காலத்தின் போதும் அதற்குப் பிற்பாடும் அவர் செய்துமுடிக்கவிருக்கிற அந்தப் பெரிய வேலைகளைக் குறித்தும் பரிசுத்தவான்களுடைய பிள்ளைகளுக்கு கவனமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டிருந்தால், மனிதர்களுக்கு, அவர்களுடைய அனைத்துத் துயரங்களுக்கும் உண்மையான மற்றும் ஒரே தீர்வைச் சுட்டிக்காட்டும்படிக்கு விசேஷமான விதத்தில் பரிசுத்தவான்களின் பிள்ளைகளை உலகத்தின் அறிவுரையாளர்களாக (Instructors) எடுத்துப் பயன்படுத்துவதற்குத் தேவன் விருப்பமுள்ளவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
பிரியமான கிறிஸ்தவ தாய்மார்களே, இப்படிப்பட்ட முடிவை மனதில் வைத்துக்கொண்டு வேலை செய்யுங்கள், கர்த்தருக்குள்ளான உங்களுடைய பிரயாசம் வீண்போகவில்லை என்பதை ஏற்றகாலத்தில் தேவன் உங்களுக்குக் காண்பிப்பார். நீங்கள் பார்ப்பதற்கு எளிமையாகவும், அறியப்படாதவர்களாகவும் இருந்தாலும், நீங்கள் நிறைவேற்ற வேண்டிய ஆசீர்வாதமான ஒரு பணி உங்களுக்கு இருக்கிறது. தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து, உங்களுடைய பங்கை நீங்கள் சிறந்த முறையில் செய்வதற்கு எல்லாவிதத்திலும் போதுமான ஞானத்தையும், பொறுமையையும், உறுதியையும், புத்திகூர்மையையும், விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் மற்றும் கிருபையையும் கொடுப்பாராக. அதேசமயத்தில், உங்களுக்காகவும், உங்கள் நிமித்தமாக விசேஷமாக உங்களுடையவர்களுக்காகவும் அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதை அறிந்து, உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மீது வைத்துவிட்டு, தேவனோடு தாழ்மையுடன் நடந்துகொள்ளுங்கள்.
– திருமதி C.T.R.