R5250 (page 169)
யாத்திராகமம் 1:22-2:10
R5251 : page 169
இம்மாதிரியான சூழ்நிலையில்தான் மோசே பிறந்தார். மோசேயின் பெற்றோர்கள் இருவரும் பயபக்தியுள்ளவர்களெனப் பதிவானது சுட்டிக்காட்டுகின்றது; ஆகையால் மோசே அழகுள்ள பிள்ளையாக இருந்தார் என்ற பதிவில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. வெகுசில பெற்றோர்களே தங்கள் பிள்ளைகள் அழகிற்கு நேர்மாறாய் இருக்கையில் – அதாவது ரூபத்திலும், குணத்திலும், எழிலுள்ளவர்களாய் இருப்பதற்கு நேர்மாறாய் இருக்கையில், குறைபாடுகளுக்கான பொறுப்பானது பெற்றோர்களாகிய தங்கள்மீதே இருப்பதை உணர்ந்துகொள்வதாகத் தெரிகின்றது. ஆனால் அதற்கென்று எந்த ஒரு மனித ஜோடியினாலும் முழுமையாய்ப் பூரணக் குழந்தையைக் கொணர்வது சாத்தியம் என்று நாங்கள் சொல்லுகிறோம் என்று அர்த்தமாகாது. “அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை” (யோபு 14:4).
ஆனால் நாங்கள் சொல்ல விரும்புவது என்னவெனில் கவனமுள்ள இனப்பெருக்கமானது விலங்குகளின் ரூபத்தையும், சாயலையும், குணத்தையும் தாக்கத்திற்குள்ளாக்குகின்றது மற்றும் கனிகளையும், மலர்களையும்கூட மேம்படுத்துகின்றது… இதே ஆற்றல் மனுக்குலத்தின் விஷயத்திலும்கூடக் காணப்படும். ஆம் இதனிலும் மேலாய்க் காணப்படும்; ஏனெனில் பெற்றோரும் சரி, அரசாங்கமும் சரி மனுஷதிருமணத்தில் துணைவியைத் தெரிவு செய்யும் விஷயத்தைப் புறக்கணிக்கின்றது இல்லை என்றாலும், உலகிலேயே அறியப்பட்டிருக்கும் மிகவும் ஆச்சரியமான ஆற்றலை, திருமணமானவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றனர்; இந்த ஆற்றல் மூலம் குழந்தைப் பிறப்பதற்கு முன்னதாகவே குழந்தையினுடைய குணலட்சணம் மற்றும் சாயல் விஷயத்தில் தாக்கம் ஏற்படுத்த முடிகிறவர்களாக இருக்கின்றனர் மற்றும் பிள்ளைப் பிறந்த பிற்பாடும் இந்த ஆற்றலானது – அதாவது மனதின் ஆற்றலானது புறக்கணிக்கப்படக்கூடாது.
இந்த இயற்கையின் சட்டமானது அறிவுள்ள, கடமை உணர்ச்சியுள்ள ஜனங்களினால் தெளிவாய் அடையாளம் கண்டுணரப்படுமானால், எத்தனை சீக்கிரமாய் மாற்றங்கள் உண்டாகும்! இப்படி உணரும் பெற்றோர்கள் பிள்ளைகளைச் சாயலிலும், ரூபத்திலும், குணலட்சணத்திலும் அழகுள்ளவர்களாக உலகத்திற்குள் கொண்டுவருவதற்கு மாத்திரம் விரும்பிடாமல், இன்னுமாக இது விஷயத்தில் தங்களால் செய்யமுடிந்த அனைத்தையும் செய்யாமலிருப்பதைக் குற்றமாகவும் உணர்வார்கள் என்று நாங்கள் எண்ணுகின்றோம்.
ஒவ்வொரு தாயும் தனது கர்ப்பக்காலத்தில் தன்னுடைய மனநிலையானது (mental moods) தன் பிள்ளைக்கு ஒன்றில் ஆசீர்வாதமாகவோ அல்லது சாபமாகவோ இருக்கும் என்று உணர்வாளானால், தீயமனநிலைகளையும், சண்டைகளையும் எதிர்ப்பதில் அவள் எத்துணை விடாமுயற்சியுடன் காணப்படுவாள்! தான் வாசிப்பவைகள் விஷயத்திலும், தனது தோழமையின் விஷயத்திலும், தனது மனப்பான்மையின் விஷயத்திலும் எத்துணை ஜாக்கிரதையாய் இருப்பாள்! “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்” எனும் அப்போஸ்தலனின் அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதிலும், இப்படியாகத் தன்னால் சிந்திக்கமுடிந்த உயர்ந்த, சிறந்த கருத்துக்களைத் தன் பிள்ளையினிடத்தில் பதியவைத்திடவும் எத்தனை உண்மையாய் நாடிடுவாள்! (பிலிப்பியர் 4:8).
தகப்பன் தன் பொறுப்பினை உணர்வாரானால் தன் முழுக்கடமையினையும் நிறைவேற்றுவதில் – அதாவது தகப்பனாகவும், ஜீவன் அளிப்பவராகவும் மாத்திரமல்லாமல், தாயானவளுக்குப் பாதுகாவலனாகவும், பராமரிக்கிறவனாகவும் இருந்து மனித ஜீவியத்தின் மிக முக்கியமான இப்பணியின்போதும், அவளது மிகுந்த தேவையின்போதும் தன்னால் முடிந்த உதவியினை அவளுக்கு அளிப்பதில் எத்துணைக் கவனமாய் இருப்பார். கர்ப்பக்காலத்தில் விசேஷமாகத் தாயானவள் நலமானவைகளையும், மகத்துவமானவைகளையும், சிறந்தவைகளையும், தூய்மையானவைகளையும், அறிவுள்ளவைகளையும், கலைநயங்களையும் முன்வைத்திடும் காரியங்களினால் சூழப்பட்டிருக்க வேண்டும். தகப்பன் விசேஷமாய்ப் பரிவுகொண்டவராகவும், தாயினுடைய மனதைக் கவலையின்றி வைத்துக்கொள்வதற்கு முயற்சிக்கிறவராகவும் இருக்க வேண்டும். ஒருவேளை சௌகரியங்கள், ஓவிய படங்கள், கலைகள் முதலியவைகளை வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மிகுந்த தரித்திரம் இருக்குமானால், இவைகளுக்குப் பதிலாகத் தாயிடம் உயர்ந்த, மேன்மையான காரியங்களைச் சம்பாஷிக்க வேண்டும் அல்லது இவைகள் குறித்து அவள் கேட்கும்படிக்குத் தகப்பன் வாசித்துக்கொடுக்கலாம். ஆ! தங்களுடைய வேகமாய் ஓடும் குதிரைகளையும், ஆடம்பரமான நாய்களையும், புறாக்களையும், பன்றிகளையும், இனப்பெருக்கம் செய்வதில் செலுத்தப்படும் அதே அக்கறையானது, தங்கள் சொந்தக் குடும்பங்களின் விஷயத்திலும் அதிக வெற்றிகரமாய்ச் செயல்படுத்தப்படலாம் என்று நாகரிகமான ஜனங்கள் என்றுதான் கற்றுக்கொள்வார்களோ? அப்படிக் கற்றுக்கொண்டால் ஆச்சரியமான விளைவுகள் காணப்படும் என்பதில் யாருக்கேனும் சந்தேகம் வருமோ?