R5612 (page 21)
நியாயாதிபதிகள் 13:8-16,24,25
“ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.” ( நியாயாதிபதிகள் 13:4)
ஒரு குறிப்பிட்ட விரதத்தை மேற்கொண்ட யூதன், நசரேயன் என்று அழைக்கப்படுகின்றான். இவர்களையும், நாசரேத்து ஊரின் ஜனங்களையும் ஒன்று என்று குழப்பிக்கொள்ளக்கூடாது. இயேசு நாசரேத்து ஊரானாவார்; ஆனால் அவர் நசரேய விரதம் மேற்கொண்டவரல்ல. நசரேய விரதம் என்பது, ஒருவன் எந்த விதத்திலும் காணப்படும் மதுபானத்தைத் தவிர்த்துக்கொள்பவனாகவும், தன் தலைமயிரைக் கத்தரிக்காதவனாகவும் இருப்பதாகும். சிம்சோன் தன் பிறப்பு முதற்கொண்டு இந்த விரதத்தில் காணப்பட்டார்; இது கர்த்தருடைய தூதனின் கட்டளையின்படி, அவரது பெற்றோரால் அவருக்குச் செய்யப்பட்டு வந்தது. சில விதங்களில் இந்த விரதமானது, தேவனுக்கும், அவரது ஊழியத்திற்கும் ஒரு நபர் முற்றும் முழுமையான அர்ப்பணிப்பை மேற்கொள்வதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
சிம்சோனுடைய பிறப்பிற்கு முன்பு இருமுறை கர்த்தருடைய தூதனானவர் தோன்றி – தாயினுடைய மனதில் விசேஷமாய் மிதமான உணவு பழக்கத்தின் முக்கியத்துவமானது பதியவைக்கப்பட வேண்டும் என்றும், இவ்விதமாய் அவளது குழந்தை அனுகூலமான சூழ்நிலைமையின்கீழ்ப் பிறக்க வேண்டும் என்றுமுள்ள நோக்கத்தில், சிம்சோனின் பெற்றோர்களைத் தொடர்புகொண்டார். எந்தளவுக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மனபலத்தையும், சரீர பலத்தையும் கொடுக்கமுடியும் என்பதையும், தங்கள் பிள்ளைகளுக்கு அனுகூலமான ஆற்றல்களைக் கொடுப்பதில் பெற்றோர்கள் எவ்வளவு விழித்திருக்க வேண்டும் என்பதையும் சிம்சோனின் பெற்றோர்கள் உணர்ந்துகொண்டார்கள் என்பதில் ஐயமில்லை.
ஜீவன், சத்துவமானது தகப்பனிடமிருந்து வருகையில், குணலட்சணத்தைப் பதியபண்ணுவதில் தாயானவள் பெரும் பங்குவகிக்கின்றாள். குழந்தைப் பிறப்பதற்கு முன்புள்ள தாயானவளுடைய கர்ப்பக்காலத்தின் பெலவீனமான நிலைமையில், தகப்பனார் சூழ்நிலையை உணரமுடியும் மற்றும் உணர வேண்டும்; மேலும் சிறந்த அறிவிற்குரிய ஆவிக்குரிய செல்வாக்குகளினால் / தாக்கங்களினால் தாயானவளைச் சூழப்பண்ணச் செய்வதற்குரிய தன் சிலாக்கியத்தினை உணர்ந்திட வேண்டும். இப்படியாகத் தகப்பன், தாயானவளின் சிந்தனைகளை வனைந்து, அவைகளைப் பிரயோஜனமான திசைகளுக்கு வழிநடத்துகின்றார்; மேலும் இந்த உயர்ந்த, சிறந்த எண்ணங்களை – குழந்தையானது நல்லக் குழந்தையாகவும், குடும்பத்திற்குப் புகழ் சேர்க்கிற, தன் சமுதாயத்திற்கு ஆசீர்வாதமாயிருக்கிற, எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுடைய ஊழியக்காரனாகுவதற்குத் தகுதியடைகிற குழந்தையாகவும் காணப்படத்தக்கதாக – தாயானவள் தன் குழந்தையினிடத்தில் பதியபண்ணுகிறாள்.
சிம்சோனின் அனுபவங்களிலிருந்து நம்மால் கற்றுக்கொள்ளப்படுகிற ஒரு பாடம்… வாழ்க்கையில் நோக்கம் ஒன்றினைப் பெற்றிருப்பதன் முக்கியத்துவமாகும். தன்முன் நோக்கம் ஒன்றினைக் கொண்டிராத எவனாலும் மிகச் சிறந்த விதத்தில் வாழ்க்கை வாழமுடியாது. தங்களுக்குத் தகுதியாயிராத, தங்களுக்குத் தகுதியில்லாத காரியங்களுக்காக ஆசைக்கொள்ளும்படிக்குப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஊக்குவியாமல், மாறாக அவர்கள் வாழ்க்கையில் எதற்குத் தகுதியாய் இருக்கின்றார்களோ, அவற்றின்மீதே ஆசைக்கொள்ள ஊக்குவித்திட வேண்டும்.
பன்னிரண்டுமுதல் பதினாறு வயது வரையிலுள்ள சிறுவன், சிறுமியினிடத்தில் மனவெழுச்சிகள் காணப்படும்; மேலும் இவைகள் சரியாய் வழிக்காட்டப்பட்டால், அவர்களைச் சிறந்த ஆணாகவும், சிறந்த பெண்மணியாகவும் ஆக்கிடும்; ஆனால் இவைகள் தவறான திசைகளுக்குப் புரட்டப்படும்போது, அவர்களைப் பொல்லாதவர்களாக்கிடும்; அல்லது இவைகள் முற்றிலுமாக அசட்டைப்பண்ணப்பட்டால், அவர்களை ஒன்றுமில்லாதவர்களாக்கிடும். இந்த உண்மைகளை ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு பாதுகாவலரும் உணர்ந்துகொண்டு, இதற்கேற்ப தன் பராமரிப்பின் கீழ்க்காணப்படும் சிறுபிள்ளைகளைக் கையாள பழகிக்கொள்ள வேண்டும்.
இது மாத்திரமல்ல, ஒவ்வொரு இளைஞனிலும் உயர்பண்பு அடைந்திடுவதற்கான ஒரு நாடுதலும், வாழ்க்கை மிக விலையேறப்பெற்றது, அது ஒருமுறையே பயன்படுத்தப்படமுடியும் மற்றும் வாழ்க்கை துவங்கும் திசையினையே, விளைவுகள் பெரிதும் சார்ந்துள்ளது என்றுள்ள ஓர் உணர்ந்துகொள்ளுதலும் காணப்படுகின்றது. அத்தருணத்தின் போது உண்மையுள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலர், இளைஞனின் பிரகாசம் அடைந்துவரும் மனதிற்கு முன்னதாக இளைஞர்கள் சிருஷ்டிகரிடத்தில் பெற்றிருக்கும் நியாயமான கடமை குறித்தும், தவற்றிற்கு எதிராய் நீதியின் பக்கமும், தப்பறைக்கு எதிராய்ச் சத்தியத்தின் பக்கமும் ஜீவனையே ஒப்புக்கொடுத்துவிடுவதற்குரிய பாக்கியமான சிலாக்கியம் குறித்தும் வெற்றிகரமாய் முன்வைத்திடலாம். இந்தக் காரியங்களெல்லாம் முழுமையாய்ப் புரிந்துகொள்ளப்படும் போது, உலகில் நல்லொழுக்கமுள்ள நாயகர்கள் அதிகமாய்க் காணப்படுவார்கள்.