R5613 (page 13)
ரூத் – SUB HEADING
“உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்தான் கதை ஆரம்பமாகிறது. இங்குதான் நூற்றாண்டுகள் தாண்டி தாவீதின் குமாரனும், தாவீதின் ஆண்டவருமான இயேசு பிறக்கின்றார். இந்தக் குடும்பத்தின் மத உணர்வு அவர்களது பெயர்களின் உட்பொருளிலிருந்து விளங்குகின்றது. புருஷனுடைய பெயரான எலிமலேக் என்பது, “என் தேவன் ஓர் இராஜா” என்று பொருள்படும். அவனுடைய மனைவியின் பெயரான நகோமி என்பது, “யேகோவாவுக்குப் பிரியமுள்ள” என்று பொருள்படும். இவர்களுடைய இரண்டு குமாரர்களின் பெயரானது, மக்லோன் (இளைத்துப்போகிறது) மற்றும் கிலியோன் (இளைத்துப்போகிறான்) ஆகும்.
எதிரியின் படையெடுப்பு மற்றும் தாங்கள் உழைத்த உழைப்பிற்கான பலனை அடிக்கடி இழந்துநின்ற நிலையில், கடுமையான வறட்சியைத் தொடர்ந்துவந்த பஞ்சத்தினிமித்தம் மிகவும் சோர்வடைந்ததால், இவர்கள் தங்கள் வீட்டைவிட்டு யோர்தானைக் கடந்து, மோவாப் தேசத்திற்குப்போய், அங்குப் பத்து வருஷங்கள் குடியிருந்தார்கள். அங்கு இவர்களுடைய இரண்டு குமாரர்களும் திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு குமாரர்களும் மரித்ததால், அவர்களின் மனைவிகள் விதவைகள் ஆனார்கள். எலிமலேக்கும் மரித்துப்போனார். தன்னுடைய சொந்தத் தேசத்திற்குத் திரும்பிச்செல்ல நகோமி முடிவு செய்தபோது, அவளிடத்தில் ஒன்றும் காணப்படவில்லை. மேலும் இதிலிருந்து, வாக்குத்தத்தம் மற்றும் உடன்படிக்கையின் தேசத்தைவிட்டு விக்கிரக ஆராதனை செய்பவர்களும், தேவனுடன் எவ்விதத்திலும் உடன்படிக்கையின் உறவு இல்லாதவர்களுமான ஜனங்கள் மத்தியில் வாழச்சென்றதில் இந்தக் குடும்பத்திற்கு எந்த ஓர் ஆதாயமும் இருக்கவில்லை என்று தெரிகின்றது.
பூமிக்குரிய காரியங்களுக்காக, நம்முடைய தேவன் சார்ந்த காரியங்களைத் தியாகம் செய்வது என்பது, ஒருபோதும் நல்ல நடத்தையாய் இருக்காது என்ற ஒரு பாடத்தை இங்கு நாம் கற்றுக்கொள்வது பயனுள்ளதாய் இருக்கும். “தேவனுக்குதான் முதன்மை” என்ற மேற்கோளிட்ட வாசகமே எல்லாக் கிறிஸ்தவர்களிடம் காணப்பட வேண்டும். மோவாபியர்கள் லோத்தின் சந்ததியாய் இருப்பதின்மூலம், இஸ்ரயேலர்களோடு தொடர்புள்ளவர்களாகக் காணப்பட்டிருந்தாலும், கிட்டத்தட்ட ஒரே மொழியில் பேசுகிறவர்களாக இருந்தாலும், தேவனுடைய உடன்படிக்கை என்பது, ஆபிரகாமின் சந்ததியோடு மாத்திரம் இருப்பதால், மற்றப் புறஜாதிகள்போல, மோவாபியர்களும் இஸ்ரயேலின் காணியாட்சிக்கு அயல்நாட்டாராக, வெளிநாட்டாராக மற்றும் அந்நியர்களாக உள்ளதால், இவர்கள் மத்தியில் ஊழியஞ்சார்ந்த வேலைகளைச் செய்யத்தான் இந்தக் குடும்பம் மோவாபுக்குச் சென்றது என்று சொல்லவும் முடியாது. “பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துகொண்டேன்” (ஆமோஸ் 3:2) என்று நாம் வாசிக்கிறபடி, இஸ்ரயேலை அல்லாமல் தேவன் மோவாபியர்களை அழைக்கவில்லை. ஆகையால், மோவாபியர்களை மதக்கொள்கையில் மாற்ற முயற்சிப்பது என்பதுகூடச் சரியானதாய் இருக்காது.
இந்தக் குடும்பம் செய்த தவறைப்போன்றே, அநேக கிறிஸ்தவர்கள் செய்கின்றார்கள். கிறிஸ்தவர்கள் தேவனுடன் மேலான ஓர் உறவு வைத்திருப்பதால், கிறிஸ்தவர்களுக்கே அதிக பொறுப்பு உள்ளது. மேலும் அவருடைய சித்தம் மற்றும் “தெளிந்த புத்தியுள்ள ஆவி” பற்றி அதிகமாகவும், தெளிவாகவும் அறிவு பெற்றிருக்க வேண்டும். தங்களுடைய இரண்டு குமாரர்களும் யேகோவா தேவனிடம் உண்மையாயிருப்பதைப் பாதுகாக்கும்வண்ணமாக, இவர்களால் ஒவ்வொரு சரியான செல்வாக்கும் பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டுமே அல்லாமல், கறைப்படும் வாய்ப்புள்ள கடவுள் நம்பிக்கையற்ற தேசத்தில் இந்த இரண்டு குமாரர்களைக் கொண்டுசென்றது ஞானமற்ற காரியம் ஆகும்.
“கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது” (ரூத் 1:13) என்று சொல்வதிலிருந்து, நகோமி இந்தக் காரியங்களை எல்லாம் உணர்ந்துகொண்டாள் என்பதில் சந்தேகமில்லை. அவளுக்கு விரோதமாக இருந்த கர்த்தருடைய கரமானது, உண்மையாகவே அவளுக்குச் சாதகமாகவே இருந்தது. மேலும் அது சரியான விதத்தில் அவளிடத்தில் செயல்பட்டு, வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு அவளை திரும்பிவரச்செய்தது.