R740 (page 1)
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதற்கேற்ப கர்த்தருடைய இராப்போஜனமானது, அதன் ஆண்டு நிறைவு நாளில், மார்ச் 29-ஆம் தேதி மாலையன்று ஆசரிக்கப்பட்டது. இதுவரையிலும் நாங்கள் பெற்றுக்கொண்ட கடிதங்கள் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம், அந்நிகழ்வானது, பரவலாய் ஆழமான ஈடுபாடு கொண்டுள்ள அனைத்துத் திசைகளிலுமுள்ள நம்முடைய வாசகர்களால் ஆசரிக்கப்பட்டுள்ளது என்றும் மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நாங்கள் இதுவரையிலும் தகவல் பெற்றுக்கொள்ளாதவர்கள் அநேகராலும்கூட ஆசரிக்கப்பட்டிருக்கும் என்றும் நிதானிக்கின்றோம். சில இடங்களில் திரளானவர்களும், சில இடங்களில் இரண்டு (அ) மூன்று பேரும், சில இடங்களில் ஒருவர் தனிமையிலும் ஆசரித்திருக்கின்றனர். நாங்கள் அறிந்துகொண்டதுவரையிலும் இவர்கள் அனைவருக்கும், அலிகெனி பட்டணத்திலுள்ள (Allegheny City) எங்களுக்குக் காணப்பட்டதுபோலவே அது மிகவும் விலையேறப்பெற்ற காலப்பகுதியாய் இருந்துள்ளது.
இங்கு வழக்கமான “மேல்வீட்டறையில்” சுமார் நூறு பேர்கூடி, நமக்கான ஈடுபலியினை, நம்முடைய மீட்பருடைய பிட்கப்பட்ட சரீரத்திற்கும், சிந்தப்பட்ட இரத்தத்திற்குமான அடையாள சின்னங்களில் பங்கெடுப்பதன் வாயிலாக நினைவுகூர்ந்து, ஆசரித்தோம். நியூயார்க் (New York), மேற்கு வெர்ஜீனியா (West Virginia) மற்றும் பென்சில்வேனியாவின் (Pennsylvania) பல்வேறு பகுதிகளிலிருந்து எட்டுச் சகோதர சகோதரிகள் எங்களோடுகூடக் காணப்பட்டனர் மற்றும் நினைவுகூருதல் ஆசரிப்பதற்கு முன்னதாக நாங்கள் ஒன்றுகூடி ஓர் இனிமையான உரையாடல் கொண்டிருந்தோம்; இதில் எங்களுடைய இருதயங்களானது, நமது பிதாவினுடைய நற்பண்புகள், பராமரிப்பு மற்றும் அன்பு குறித்த நினைவுகூருதல்களால் புத்துணர்வு அடைந்தது. மற்ற விஷயங்களோடுகூட, தேவன் நமக்குத் தம்முடைய திட்டங்களை அதிகமதிகமாய் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது என்பது தேவனுடனான நம்முடைய உறவிற்கும், நம்முடைய புத்திரத்துவத்திற்குமான சான்றுகளில் ஒன்று என்று (உரையாடலில்) கவனத்தில் கொண்டோம். இது தொடர்பாகவும், இதற்கு ஆதாரமாகவும், “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்” என்ற இயேசுவின் வார்த்தைகளானது நினைவுக்கு வந்தது. (யோவான் 15:15)
மணி 8:30 ஆனபோது, அதாவது நமது கர்த்தரினால் பஸ்கா நிறுவப்பட்டதான நேரத்திற்கு மிகவும் ஒத்த நேரம் என்று நாங்கள் கணித்திருந்த நேரம் வந்தபோது, நாங்கள் அடையாளங்களில் பங்குகொண்டோம்; முதலாவதாக அவைகளின் அர்த்தத்தினைச் சுருக்கமாகப் பார்த்தோம். அனைவருடைய நலன் கருதி, நாங்கள் அப்போது பார்த்தவைகளைச் சுருக்கமாய் மறுபடியும் இங்குப் பதிவு செய்கின்றோம்.
அப்பம் தொடர்பான ஆண்டவருடைய வார்த்தைகளை நாங்கள் நினைவுகூர்ந்தோம்; அவை பின்வருமாறு: “இது (அடையாளமாக) உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது.” “வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான். நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை.” (யோவான் 6:53) அடையாளமான அப்பத்திலிருந்து, இயேசுவின் சரீரத்தைப்பார்த்தபோது, அதுவே உண்மையில் மெய்யான அப்பம் என்று நாங்கள் உணர்ந்துகொண்டோம். அப்பமானது வானத்திலிருந்திறங்கினது என்று சொல்லப்படுவது என்பது, அவர் பூமியிலிருந்து உண்டானவராய் இராமல், பரலோகத்தில் உண்டானவராய் இருந்தார் என்ற விதத்திலேயே ஆகும்; அவர் மாம்ச சித்தத்தினால் ஜெநிப்பிக்கப்படாமல், அவர் இடமாற்றப்பட்ட ஜீவியாக இருந்தார் என்ற விதத்திலேயே ஆகும். நம்முடைய சார்பில் மரணத்தை அனுபவிக்க வேண்டுமென்ற விசேஷித்த நோக்கத்திற்காகவும், நாம் அவரது தரித்திரத்தினாலே (அவர் தாம் பெற்றிருந்த அனைத்தையும், ஜீவனையும் கொடுத்துவிட்டார்) ஐசுவரியவான்களாகும்படிக்கும், நம்முடைய பிரதிநிதியாகிய ஆதாம் முன்பு பெற்றிருந்ததும், அவருக்கும் நமக்கும் தொலைந்து போனதுமான அனைத்தும், நம் அனைவருக்கும் திரும்பக்கொடுக்கப்படும்படிக்கும், ஐசவரியவானாய்க் காணப்பட்ட அவர், தரித்திரரானார், கீழ்ச் சுபாவமாக்கப்பட்டார், மாம்சமாக்கப்பட்டார்.
அவர் பிட்கப்படுவதற்கான, நமக்காக அடிக்கப்படுவதற்கான அவசியமென்ன என்பதை நாங்கள் மீண்டுமாக எண்ணிப்பார்த்திட்டோம். நம்மில் நாம் ஜீவனற்றுக் காணப்பட்டதே காரணம் என்று நாங்கள் கண்டோம். மரணமானது முழுச்சந்ததியையும் விழுங்கிக்கொண்டிருக்கின்றது மற்றும் முழுச் சந்ததியிலும் கிரியைப் பண்ணிக் கொண்டிருக்கின்றது. அனைவருமே இந்த ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட சந்ததியிலிருந்து வந்தவர்களானபடியால், எவனாலும் தன்னுடைய ஜீவனையும் காத்துக்கொள்ளவும் முடியவில்லை, தன்னுடைய சகோதரனையும் மீட்டுக்கொள்ளவும் முடியவில்லை, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு, மரிக்கின்ற அனைவருக்கும் மற்றும் தனக்கும் தேவனிடத்தில் மீட்கும்பொருளினையும் கொடுக்க முடியவில்லை. ஆனால் மனிதனுடைய இயலாமை என்பது, தேவனுக்கான வாய்ப்பாய் இருக்கின்றது; ஒரே சுபாவத்தின் காரணமாக, ஈடுபலியைக் (சரிநிகர்சமான விலையை) கொடுக்க முடிகின்றவரும், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட ஆதாமின் சந்ததியிலிருந்து வராததினால் (பரலோகத்திலிருந்து வந்ததினால்), ஏற்றுக்கொள்ளப் படத்தக்கதான மீட்பராகக் காணமுடிபவருமான ஒருவரை தேவன் அருளினார். ஆதாமினுடைய பாவத்தின் காரணமாக, ஏதேனிலுள்ள ஜீவ விருட்சத்தினின்று சந்ததி விலக்கப்பட்டிருக்க மற்றும் இதன் காரணமாக ஜீவிக்க முடியாது என்றிருக்க, அவர்களுக்கு இயேசுவின் வாயிலாக பரலோகத்திலிருந்து ஓர் ஈவாக ஜீவ அப்பமானது இப்பொழுது முன்வைக்கப்பட்டது; இதை ஏற்றுக்கொள்வார்களானால், இது இழந்த ஜீவனையும், ஆசீர்வாதங்களையும் அவர்களுக்குத் திரும்பக்கொடுத்திடும்.
இயேசுவே இந்த ஜீவ அப்பமாகக் காணப்பட்டாலும்கூட ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதான நம்முடைய சந்ததியிலிருந்து எவரேனும், அவரது புண்ணியங்களில் பங்கெடுப்பதற்கு முன்னதாக, அவர் பிட்கப்படுவது, பலியாகுவது அவசியமாயிருந்தது என்று நாங்கள் பார்த்தோம். முதலாம் பிரதிநிதியானவருடைய (ஆதாமினுடைய) பாவத்தின் வாயிலாக அனைவர்மேலும் வந்ததான மரணச் சாபத்தினை இரத்துச்செய்யத்தக்கதாகப் பரிபூரணமான மனிதனாகக் காணப்பட்ட அவர் தம்மையே சரிநிகர்சமான விலையாகக் கொடுத்திட்டார். இப்பொழுது செய்யப்பட வேண்டிய ஒரே காரியம் என்னவெனில், ஆதாமின் காரணமாக அழிவுக்குள் கடந்து சென்றதான ஒவ்வொருவரும் நம் சார்பிலான இயேசுவினுடைய பலியின் வாயிலாக, அவர் நமக்குப் பெற்றுவைத்திருக்கின்றதான அந்தப் பரிபூரணங்களிலும், உரிமைகளிலும் வந்து, பங்குகொண்டிட (புசித்திட வேண்டும்). விசுவாசத்தின் வாயிலாகக் கிறிஸ்துவினுடைய பரிபூரணங்களை நாம் புசிக்கின்றோம் (அ) நம்முடையதாக்கிக்கொள்கின்றோம்; அதாவது விசுவாசத்தின் வாயிலாக இயேசு நமக்கான மீட்கும்பொருளென்று உணர்ந்துகொள்கின்றோம் மற்றும் விசுவாசத்தின் வாயிலாக, இயேசு பரிபூரணமான மனிதனெனப் பெற்றிருந்ததும், நமக்காக அவர் பிட்ட (அ) பலிச்செலுத்திட்டதுமான அந்தப் புண்ணியங்களை நம்முடையதாக்கிக்கொள்கின்றோம்.
அந்தப் பலியானது அனைவருக்கும் போதுமானதாக இருப்பினும், பலியாக்கப்பட்டவரே ஜீவனளிப்பவர் என்று ஏற்றுக்கொள்வதின் மற்றும் ஒப்புக்கொள்வதின் மூலமே ஒழிய மற்றப்படி எவரும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற தேவ ஏற்பாட்டின் அருமையையும் அப்போது நாங்கள் பார்த்தோம். இக்காலத்தில் மாத்திரமல்லாமல், எதிர்க்காலத்திலும்கூட ஈடுபலியை ஒப்புக்கொள்வது என்பது ஜீவன் பெற்றுக்கொள்வதற்கு அவசியமானதாய்க் காணப்படுகின்றது. “மாம்சத்தைப் புசியாமல் இருந்தால், உங்களுக்குள்ளே ஜீவனில்லை” என்பது எப்போதும் உண்மையாய் இருக்கின்றது. கொடுக்கப்பட்டதான ஈடுபலியே, அனைத்து ஆசீர்வாதங்களுக்குமான அஸ்திபாரமாய் இருக்கின்றது என்பது எப்போதும் அடையாளங்கண்டுகொள்ளப்பட வேண்டும். “தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே, பாவங்களை நீக்குகிறவரும்”, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறதான தேவ ஆட்டுக்குட்டியினுடைய பிட்கப்பட்ட சரீரத்தின் மூலமாகவும், சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாகவுமேயல்லாமல், மற்றபடி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்; ஒருவனும் அவரோடு ஒன்றாய் இருக்கவும் முடியாது.
நம்முடைய (சபையினுடைய) பாவங்கள் மாத்திரமல்லாமல், சர்வலோகத்தினுடைய பாவங்களையும் நிவிர்த்திச் செய்வதற்காகச் சிந்தப்பட்ட இரத்தத்தைக் குறித்தும் நாங்கள் பார்த்தோம்; இதன் அடையாளத்தை நாங்கள் திராட்சரசத்தில் பார்த்திட்டோம்: “இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.” (மத்தேயு 26:28) நாங்கள் மூன்று மாபெரும் உடன்படிக்கைகளைக் கணநேரம் பார்த்திட்டோம்; உண்மையாய் ஆசீர்வாதமாய்க் காணப்படுவதற்கும், மரித்துக்கொண்டிருக்கும் சந்ததிக்கு ஜீவன் அளிப்பதற்கும் எப்படி மோசேயின் கீழான நியாயப்பிரமாண உடன்படிக்கையானது தவறிப்போனது என்றும், ஆனால் ஈடுபலியின் காரணமாக, எப்படிப் புது உடன்படிக்கையானது மேலானதாகக் காணப்பட்டு, பூமியின் குடிகள் அனைத்திற்குமான ஆசீர்வதிக்கும் (திரும்பக்கொடுத்தல்) பணியினை நிறைவேற்றிடும் என்றும் நாங்கள் பார்த்தோம். இப்படியாக அவரது இரத்தமானது, பலியாக்கப்பட அவருடைய ஜீவனானது, அனைவரையும் மீட்டுக்கொண்ட ஈடுபலியாய் இருக்கின்றது என்றும், அவர்களுக்கான திரும்பக்கொடுத்தலைச் சாத்தியமாக்கிற்று என்றும், இது புது உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துகின்றதான உடன்படிக்கையின் இரத்தமாய், முத்திரித்தலாய், உறுதிச் செய்கிறதாய்க் காணப்படுகின்றது என்றும் நாங்கள் பார்த்திட்டோம். பிதாவிடத்திற்குக் கிட்டிச்சேர்வதற்கு நமக்கு அனுமதி வழங்கிட்ட இவ்வளவு இலவசமாய்ச் சிந்தப்பட்ட இரத்தத்தில் நாங்கள் களிகூர்ந்தோம்; மற்றும் இரத்தத்தினைக் குறித்துப் பெரிதாய் எண்ணிக்கொள்ளாதவர்களிலும், “உடன்படிக்கையின் இரத்தத்தினை” சாதாரணமானது என்று எண்ணுகிறவர்களிலும், அந்த விலையேறப்பெற்ற பலியில் வெளிப்படுகின்றதான தேவனுடைய தயவின் ஆவியை இழிவுப்படுத்துபவர்களிலும் ஒருவராய் ஒருபோதும் காணப்பட்டுவிடாதபடிக்கு நாங்கள் தீர்மானித்துக்கொண்டோம். (எபிரெயர் 10:16-21 மற்றும் 26-31 வரையிலான வசனங்களைப் பார்க்கவும்).
இவைகளையெல்லாம் இயேசுவை அடையாளப்படுத்துகின்றதான அப்பத்திலும், திராட்சரசத்திலும் பார்த்தப் பிற்பாடு, அப்போஸ்தலனுடைய வார்த்தைகள் (1 கொரிந்தியர் 10:16, 17) வாயிலாக இந்த ஏற்பாட்டில் காணப்படுகின்றதான இன்னும் மற்றுமொரு அர்த்தத்தினைப்பார்த்தோம். “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா!” (திருவிவிலியம்). அவர் கருத்தென்னவெனில்: கர்த்தர் ஸ்தோத்திரம் செலுத்தி, பிட்டு, அடையாளங்களைப் பரிமாறி இவ்விதமாய்த் தம்முடைய பலியை அடையாளப்படுத்தினபோது, இது கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களென நாம் அர்ப்பணம் பண்ணி, நமது தலையோடுகூடப் பலியில் பிட்கப்படுகின்றோம் என்பதையும் அடையாளப்படுத்துகின்றது என்பது நம்மால் அடையாளங்கண்டுகொள்ள முடிகின்றதா? “அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்.” (திருவிவிலியம்)
இப்படியாக அடையாளங்களைப் புசிப்பது என்பது நம்மை மீட்டுக்கொண்டதான இயேசுவின் பலியையும், அவரோடுகூட உள்ள நம்முடைய பலியையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; அதாவது, இரண்டு அர்த்தங்களை உடையதாய் இருக்கின்றது; புது உடன்படிக்கையினை முத்திரித்தலில் இப்பொழுது இயேசுவோடுகூடவே உள்ள நம்முடைய பங்கெடுப்பின் காரணமாக, புது உடன்படிக்கையின் பாக்கியமான ஏற்பாடுகள் யாவற்றையும் [R741 : page 1] “அனைத்தையும் திரும்பக்கொடுக்கும் காலங்களில்,” உலகத்திற்குக் கொண்டுவருவதற்கு, நாம் அவரோடுகூட ஏற்றக்காலங்களில் அனுமதிக்கப்படுவோம் என்பதைப் பார்த்திட்டோம். இந்த ஒரு பாடத்தினுடைய காரியங்களினால், நினைவுகளில் உண்டான மறுமலர்ச்சியானது, அவரது மகிமை வெளிப்படுத்தப்படும்போது, நாமும் மகா சந்தோஷத்துடன் மகிழ்ச்சியடையத்தக்கதாக, “கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை நிறைவேற்றுவதற்கான” தீர்மானத்தினை எங்கள் அனைவருக்குள்ளும் பெலப்படுத்தினதாய் இருந்தது மற்றும் இயேசுவோடுகூடச் சிங்காசனத்தில் அமருவதற்கான இரண்டு அப்போஸ்தலர்களுடைய வேண்டுகோளை நாங்கள் நினைவுகூர்ந்து, இதற்கான இயேசுவின் பதிலாகிய “பாத்திரத்தில் உங்களால் பானம் பண்ணக்கூடுமா?” என்ற வார்த்தைகளையும் நினைவிற்குக் கொண்டுவந்தோம். நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றதான திராட்சரசம் அடையாளப்படுத்துகின்ற பாடுகள் மற்றும் மரணத்தின் பாத்திரத்தில் பங்கடைவதிலிருந்து நம்மைப் பின் தள்ளுவதற்கு ஏதுவான மாம்சம், உலகம் மற்றும் பிசாசானவனின் பல்வேறு நெருக்கங்கள் மற்றும் கவர்ச்சிகள் குறித்தும், எங்கள் சொந்த பெலவீனங்கள் குறித்தும் நாங்கள் உணர்ந்துகொண்டோம். எனினும் எங்களுடைய தலையானவரின் பெலத்தினால், எங்களால் அனைத்தையும் செய்ய முடியும் என்று நாங்கள் உணர்ந்தவர்களாக, “ஆம் கர்த்தாவே, நாங்கள் பானம் பண்ணுவோம், உம்முடைய பலத்தினால், எங்களால் கூடும்” என்றோம்; பின்னர் கர்த்தருடைய வார்த்தைகளிலிருந்து, எங்கள் ஒவ்வொருக்குமான அவரது பதிலாகிய, “என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்றும், “பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்,” “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, அதைச் செய்வேன்” என்றுமுள்ள வார்த்தைகளைக் கேட்டோம்.
அடையாளங்களில் பங்கெடுத்தப் பிற்பாடு, நாங்கள் ஸ்தோத்திரப்பாட்டு ஒன்றைப் பாடிவிட்டு, 1852-வருடங்களுக்கு முன் நடந்திட்டதான காட்சிகளைத் தியானம் செய்தவர்களாக, அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினோம்; அதாவது தோட்டத்தில் நிகழ்ந்தவைகள், காட்டிக்கொடுக்கப்படுதல், ஏரோதின் சேவகர்கள், முள்ளினாலான கிரீடம், சிவப்பான இராஜ அங்கி, பிரதான ஆசாரியர்கள் மற்றும் அவர் நாட்களின் மாபெரும் மதத் தலைவர்களிடமிருந்து இயேசுவை விடுவிப்பதற்கான பிலாத்துவின் பிரயாசம், அந்த மதத் தலைவர்களுடைய தவறான கோட்பாடுகளையும், மாய்மாலங்களையும் அவர் வெளிப்படுத்தினதற்காகவும் முகாந்தரமின்றி எப்படி அவரை அவர்கள் பகைத்தார்கள் என்பவைகள் குறித்துத் தியானம் செய்தோம்; அவர் சிலுவையில் தொங்குகையில் “முடிந்தது” என்று கூறி, மரித்ததை நாங்கள் கண்டோம் மற்றும் நினைவுகூர்ந்தோம். விசுவாசத்தின் கண்களானது சூழ்நிலைகளைக் கிரகிக்க, நன்றியுடன்கூடிய அன்பினால் எங்கள் இருதயங்களானது நிரம்பி, விசுவாசத்தில் “முடிந்தது” என்றும், நாம் மீட்கப்பட்டுவிட்டோம் என்றும், நமக்கான ஈடுபலி கொடுக்கப்பட்டாயிற்று என்றும் கூறினோம். நாம் ஜீவன் பெற்றிருக்கின்றோம், நாம் அவரைப் புசிக்கின்றோம், நமக்காக அவர் கையளித்ததான ஜீவனையும், உரிமைகளையும் நாம் நம்முடையதாக்கிக்கொள்கின்றோம். “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் [R741 : page 2] ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்பதற்காக தேவனுக்கு நன்றி. இறுதியில் நம்முடைய இரட்சகரும், கர்த்தருமானவருக்கு நன்றியோடு, பின்வருமாறு பாடினோம்:
“இயேசுவினுடைய நாமத்திற்கான வல்லமையைக் குறித்து
அனைவரும் வாழ்த்துவார்களாக; தூதர்கள் பணிந்துகொள்வார்களாக:
இராஜ கிரீடத்தைக்கொண்டு வாருங்கள்,
அனைவருக்கும் ஆண்டவரானவருக்கு முடிச்சூட்டுங்கள்.”
எருசலேமே, எருசலேமே நீ உந்தன் சந்திப்பின் நாளை அறிந்திருந்தாயானால் மேசியாவை உந்தன் நடுவில் அடையாளம் கண்டிருப்பாயானால் உந்தன் பரிசேயர்களும், ஏளனம் செய்யும் ஆசாரியர்களும், ஜனக்கூட்டத்தினரும் அவரைப் பணிந்திட வந்திருப்பார்கள் அல்லவா?
போதகருக்கு அயர்வும், கால்களுக்கு சோர்வும் உள்ளதென்றால் அவரது அழைப்பிற்கு இணங்கி இரவும் பகலும் அவருக்கு பணிபுரிய இரதங்கள் வந்திருக்கும் அல்லவா என்று நீ எண்ணுகின்றாயோ.
ஆ, அவர்கள் அவரை அறிந்திருந்தார்களானால், சீமோன் வீட்டிலே அவருக்குக் கொடுக்கப்பட்ட ஒரே ஒரு விருந்திற்கும், அதிகமாக எத்தனையோ விருந்துகள் கொடுத்திருப்பார்கள் அல்லவா?
“பறவைகளுக்குக் கூடும், நரிகளுக்குக் குழிகளும் உண்டு, ஆனால் மனுஷகுமாரனுக்கோ, தலைசாய்க்க இடமில்லை” என்று அவர் சொல்லக்கூடிய நிலைமை இருந்திருக்காது அல்லவா?
எருசலேமே, உன் அரண்களின் வாசல்கள் அவருக்காக திறந்திருக்கும் அல்லவா? அல்பாவும், ஓமெகாவும், தீர்க்கத்தரிசியும், ஆசாரியரும், இராஜாவுமான அவருக்கு திறந்திருக்கும் அல்லவா?
ஆ, அவர்கள் அவரை அறிந்திருந்தார்களானால், அன்றுமுதல் பல நூற்றாண்டுகள் காலமாக அவரது அடிச்சுவடுகளை துணிவுடன், பின்தொடர்ந்த தெரிந்துகொள்ளப்பட்ட சிலரை தனிமையிலும், ஏழ்மையிலும் இந்தப் பூமிக்குரிய மாபெரியவர்கள் விட்டிருந்திருப்பார்களா? அவர்கள் அசட்டைபண்ணப்பட்டு இருந்திருப்பார்களா?
“அவருடைய பாத அங்கங்கள்” களைப்புடன் புழுதியில் நடக்கையில் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டு இருந்திருப்பார்களா? மரியாளைப்போல் அவரின் தலையில் விலையேறப்பெற்ற தைலத்தினை ஊற்றிட ஏங்குகின்ற அனைவரும் நினைவுகூரவேண்டிய அவரது வார்த்தைகள் அன்றுபோல் இன்றும் பொருந்துகின்றதாய் உள்ளதே: “இந்தச் சிறியரில் ஒருவருக்கு என்ன செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” – என்பதேயாகும்.
ஆ, ஆம், ஒரு கலசம் தண்ணீர் கொடுக்கப்பட்டாலும் அதற்குப்
பலனுண்டு, ஏனெனில் அது கர்த்தராகிய கிறிஸ்துவின் நாமத்தில்,
கொடுக்கப்பட்டுள்ளது, ஆகையால் அவரது “சிறியவர்களுக்கு”
ஊழியம் புரிந்திட தாழ்மையுடன் நாடுவோமாக.
ஏனெனில், நாம் செய்வது அவருக்கே செய்வதாகும்.
– Poems of the Way, p. 129