R13 (page 6)
யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டம் குறித்து நாம் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கப்பட்டு வருகையில், இயேசு கிறிஸ்து எனும் ஈவில் வெளிப்படுகின்றதான தேவனுடைய அருமையான அன்பைக் குறித்தும் நாம் அதிகமாய்ப் புரிந்துகொள்வோம். தேவன் எதையும் காரணமில்லாமல் செய்வதில்லை மற்றும் காரணத்தை நாம் புரிந்துகொள்ளும்போதுதான் அவர் செய்கிறவைகளின் மதிப்பினை நம்மால் சரியாய்ப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆகையால் கிறிஸ்து ஏன் தமது இரத்தத்தினைச் சிந்தினார் என்பதையும், இதனால் உண்டாகும் விளைவின் தன்மை என்ன என்பதையும் நாம் புரிந்துகொள்ளுகையில், அவரது இரத்தத்தின் உண்மையான மதிப்புக் குறித்த உணர்ந்துகொள்ளுதலுக்கு நெருங்கி வருவோம். கீழ்ப்படியாமையின் காரணமாக, மனிதன் பாவியானது மாத்திரமல்லாமல், தனது ஜீவனையும் இழந்துபோனவனானான். “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.” (ரோமர் 5:12) ஒருவேளை மனிதன் இந்நிலையிலேயே இருந்துவிடுவானானால், மனிதன் இறுதியில் தமது சாயலை அடையவேண்டுமென்று மனிதனைச் சிருஷ்டித்ததிலுள்ள தேவனுடைய நோக்கம் தோல்வியில் முடிவதாய் இருந்துவிடும்.
ஜீவனைக்கொடுப்பதற்கு வேறெந்தப் பிரமாணமும் இல்லாததினால், கிறிஸ்துவின் மரணம் மாத்திரமே, மனிதன் மேலான ஜீவனை நாடிடுவதற்குரிய நிலையில் மனிதனைக்கொண்டு நிறுத்திட முடியுமே ஒழிய, வேறு எதினாலும் செய்ய முடியாது.
அவர் தம்மைக் குறித்து, “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே” என்று கூறியுள்ளார். இயலாமையில் நாம், காணப்பட்டிருக்க, கிறிஸ்து ஏற்றவேளையில் அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். இப்பொழுது நீதிமான் ஒருவனுக்காக மரிப்பது அரிது. நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத்துணிவான். ஆனால் நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினால், தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணினார். இப்படி நாம் அவரது இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. (ரோமர் 5:6-9) ஆகவேதான் பவுல் பின்வருமாறு கூறமுடிந்தது: “ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையும் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.” (அப்போஸ்தலர் 20:28) இவர்கள் பாவத்திற்குக்கீழ் விற்கப்பட்டிருந்தார்கள், ஆனால் விலைக்கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.” (1 கொரிந்தியர் 6:19,20)
கிரயத்துக்குக்கொள்ளப்பட்டீர்கள், மீட்கப்பட்டீர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டீர்கள் என்ற வார்த்தைகளானது, ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படும்போது, நாம் நமக்குச் சொந்தமானவர்கள் இல்லை என்றும், நமக்குக் கட்டளையிட உரிமைக்கொண்டிருப்பவர் மற்றும் நம்மிடம் முழுமையான கீழ்ப்படிதலை எதிர்ப்பார்க்கின்றவருமானவருக்கு நாம் சொந்தம் என்பதையும் நமக்கு அடிக்கடி நினைப்பூட்டுகின்றதாய் இருக்கின்றது; “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.” (1 பேதுரு 1:15-19)
“ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்.” (வெளிப்படுத்தல் 5:9,10)
நாம் ஒருவருக்கொருவர் பணிவிடை புரிந்திட கற்பிக்கப்பட்டிருக்கின்றோம். “உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.” (மத்தேயு 20:27,28)
“எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.” (1 தீமோத்தேயு 2:6)
“அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும்.” (ஓசியா 13:14)
இவை மாத்திரமல்ல. நாம் இந்த விலையேறப்பெற்ற அழைப்பினைப் பெற்றிருக்கின்றோம்: “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.” (ஏசாயா 1:18) “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9)
“நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:6,7)
வெளிச்சத்தில் சிவப்புநிறக் கண்ணாடி வழியாகப் பார்க்கப்படும் எந்தக் கருஞ்சிவப்பு நிறமுள்ள பொருளும், வெள்ளைநிறப் பொருளாகத் தெரியும் என்பது விந்தையான உண்மையாகும்; இதுபோலவே நம்முடைய பாவங்கள் கருஞ்சிவப்பாய்க் காணப்பட்டாலும், தேவன் அதைக் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் வழியாய்ப் பார்த்திடும் நிலையில் நாம் வருவோமானால், அவை வெண்மையாய்க் கருதப்படும். நமக்கென்று சொந்த நீதி எதுவுமில்லை என்றாலும், நம்முடைய விசுவாசம், நமக்கு நீதியாய் எண்ணப்படுகின்றது. “ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களெனப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரயேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.” (எபேசியர் 2:11-13)
“கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டி சம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” (எபிரெயர் 9:11-14)
“இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக் குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசு கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக் கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே.” (ரோமர் 3:20-27)