R2464 – நான் திராட்சச்செடி – நீங்கள் கொடிகள்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2464 (page 108)

நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்

I AM THE VINE – YE ARE THE BRANCHES

யோவான் 15:1-11,15

நமது கர்த்தருடைய பூமிக்குரிய வாழ்க்கையினுடைய கடைசி இரவின் போது, அனுசரித்திட்ட நினைவுகூருதல் இராப்போஜனத்திற்குப் பிற்பாடு, அவர் உரையாடியவைகளில் ஒன்றாக இவ்வசனத்தின் காரியங்களை அப்போஸ்தலர் (யோவான்) பதிவு செய்திருக்கின்றார். அநேகமாக புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை அடையாளப்படுத்தும் “பாத்திரத்தில்” பானம் பண்ணின காரியமானது, இவ்வுரையாடலுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது; யூதாஸ் போன பிற்பாடும், கர்த்தர் பதினொரு பேருடன் கெத்செமனே தோட்டத்திற்குப் போகுவதற்கு முன்னதாகவும், உரையாடப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இல்லையேல், அவர்கள் கெத்செமனேக்குப் போகும் வழியில் காணப்பட்ட திராட்சத்தோட்டங்களைக் கடந்து போனதுகூட, இவ்வுரையாடலுக்கு வழிவகுத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அல்லது ஆலயத்தின் பொன்னினால் ஆன நுழைவாயிலிலுள்ள கதவில் பொறிக்கப்பட்டுள்ள பொன்னினாலான மாபெரும் திராட்சச்செடியைப் பார்த்த மாத்திரத்திலும் உரையாடப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆலயத்தில் இந்தப் பொன்னினால் ஆன நுழைவாயில் (அழகான நுழைவாயில்) மிகவும் பெரிதாகக் காணப்பட்டது என்றும், “மனிதனுடைய உயரத்தின் அளவு திராட்சக்குலைகளைக்” கொண்டிருந்தது என்றும் ஜோசபஸ் அவர்களால் கூறப்படுகின்றது. வேறொரு எழுத்தாளர் பின்வருமாறு எழுதுகின்றார்: “இலைகளும், மொக்குகளும் மங்கலான செந்நிற பொன்னினாலும், அதன் குலைகள் மஞ்சள் நிற பொன்னினாலும், அதன் திராட்சப்பழங்கள் விலையேறப்பெற்றக் கற்களினால் செய்யப்பட்டிருந்தது.” பௌர்ணமி நிலவானது, நுழைவுவாயிலில் பொறிக்கப்பட்டிருந்த இந்தத் திராட்சச்செடியை அருமையாய்க் காட்டியிருக்கும். “இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூடக் கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்” என்பது முதலாம் அனுமானத்திற்கு ஆதரவாயுள்ளது (யோவான் 18:1). இது அவர்கள் இராப்போஜனத்திற்குப் பிற்பாடு, அநேகமாக நடு இரவு வரையிலும், மேல் வீட்டறையில் காணப்பட்டார்கள் என்பதைக் காட்டுகின்றது. இதற்குப் பின்னர், நமது கர்த்தர், “எழுந்திருங்கள் இவ்விடம் விட்டுப்போவோம் வாருங்கள்” என்றார் (யோவான் 14:31).

“நான் மெய்யான திராட்சச்செடி” என்ற வார்த்தையானது, போலியான (அ) பொய்யான திராட்சச்செடி ஒன்று இருக்கின்றது என்ற கருத்தை நமது மனதுக்குக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இன்னுமாக இது, இதே யோவான் வாயிலாக நமது கர்த்தர் இரண்டு அறுவடைகள் காணப்படும், அதாவது மெய்யான திராட்சச்செடியின் கனி சேர்க்கப்படும், பின்னர், “பூமியின் திராட்சக்” குலைகள் சேர்க்கப்படும் என்ற உண்மையை நமக்கு நினைப் பூட்டுவதாகவும் இருக்கிறது (வெளிப்படுத்தல் 14:18-20). மெய்யான திராட்சச்செடி, உண்மையான சபையைக் குறிக்குமானால், பூமியின் திராட்சச்செடியானது, போலியான உண்மையற்ற பொய்யான சபையைக்குறிக்கின்றதாய் இருக்கின்றது.

பரம பிதா திராட்சச்செடியை நட்டவரும், திராட்சச்செடியின் சொந்தக்காரரும், உண்மையான திராட்சச்செடியைப் பராமரிக்கிறவருமாகிய, தோட்டக்காரராக இருக்கின்றார். மேலும், இவருக்கே திராட்சச்செடி தனது கனிகளைக் கொடுக்கின்றது. இங்கு, “திராட்சத்தோட்டக்காரர்” என்று இடம்பெறும் வார்த்தையானது, வெறுமனே பராமரிக்கின்றவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்காமல், மாறாக திராட்சத்தோட்டத்தின் உரிமையாளர் என்ற அர்த்தத்தையும் கொடுக்கின்றதாக இருக்கின்றது. இதற்கு இசைவாகவே வேதவாக்கியங்கள் அனைத்தும் காணப்படுகின்றது. தேவனே மனிதனுக்கான நம்பிக்கையாகவும், அவனுடைய இரட்சகராகவும், தேவன் மூலம் மாத்திரமே பாவம் மற்றும் மரணத்திலிருந்து விடுதலை வருகிறதாகவும் வேதவாக்கியங்கள் முன் வைக்கின்றது. இவையனைத்தையும் கனம் மிக்க ஊழியக்காரனும், பிரதிநிதியுமாகிய தம்முடைய நேசக்குமாரன் மூலம்தான் செய்யப்போகின்றார் என்ற உண்மையையும், இன்னுமாக நியமிக்கப்பட்ட பிரதான ஆசாரியனாகிய தம்முடைய குமாரனின் கீழ் இராஜரிக ஆசாரியக்கூட்டமாகத் தெரிந்துகொள்ளப்பட்ட சபையைப் பயன்படுத்தப்போகின்றார் என்ற உண்மையையும், நன்மையான [R2465 : page 108] எந்த ஈவும், பூரணமான எந்த வரமும், வருகின்ற ஊற்றாய் இருப்பவர் தேவன்தான் என்ற உண்மையை அகற்றிவிட முடியாது. (1 கொரிந்தியர் 8:6; யாக்கோபு 1:17)

“என்னில் உள்ள… கொடி” என்பது ஒவ்வொரு பெயர்க் கிறிஸ்தவனையும், கிறிஸ்தவன் என்று அறிக்கைப்பண்ணுகின்ற அனைவரையும், கிறிஸ்தவ மார்க்கத்தின் உண்மைகளைப் பெயரளவில் ஒப்புக்கொண்டு, அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றவர்கள் அனைவரையும் குறிப்பதாக நாம் புரிந்துகொள்ளக்கூடாது. “நீதிமானாக்கப்பட்ட விசுவாசியானவன்” திராட்சச்செடியில் கொடியாவதற்கு ஆயத்தப்படுகிறவனாக மாத்திரம் இருக்கின்றான். ஆனால், அவனுடைய விசுவாசமும், இந்த விசுவாசத்தினாலாகும் நீதிமானாக்கப்படுதலும், அவனைக் கொடியாக்காது. விசுவாசத்தின் மூலமாக நீதிமானாக்கப்படுதல் எனும் படியை முதலாவதாக எடுத்துக்கொண்டு, பிற்பாடு தங்களை ஜீவபலியாக தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து விட்டு, இப்படியாக அர்ப்பணிப்பின் [R2465 : PAGE 109] வாயிலாக, “கிறிஸ்துவினுடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே கொடிகள் ஆகுகின்றனர்.”

நாம் கிறிஸ்துவுக்குள் அங்கத்துவம் (அதாவது, திராட்சச்செடியின் கொடி) ஆகுவதற்குரிய இந்த வழிமுறையானது, ரோமர் 6:3-5 வரையிலான வசனங்களில் அப்போஸ்தலரால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (நம்முடைய பாப்டிஸ்ட் சகோதரர்கள் தவறுதலாய்ச் செய்வதுபோல) நாமும் சரி, அப்போஸ்தலர்களும் சரி, தண்ணீரில் மூழ்கும் ஞானஸ்தானத்தைக் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் அங்கத்துவம் ஆகுவதற்கான நிபந்தனையாக முன்வைக்காமல், மாறாக அப்போஸ்தலர் வலியுறுத்துவது போன்று, நாமும் வலியுறுத்துவது என்னவெனில், “தங்களுடைய சித்தத்தை, கிறிஸ்துவினுடைய சித்தத்திற்குள்ளாக மூழ்கடித்துக்கொள்ளாத எவரும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் அங்கத்துவம் அடைவதில்லை.” அதாவது, அவரோடு மரிப்பதற்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும். நீதிமானாக்கப்பட்ட மனிதர்களாக, தங்களையே மரணத்திற்குச் சரணடையச் செய்து, பின்னர் அதுமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள்ளும், அவருக்குக் கீழும், அனைத்துக் காரியங்களிலும் தங்களது வழிகாட்டியாக (அ) தலையாக, அவரால் ஆளப்படுகிறவர்களுமாகிய புதிய சிருஷ்டியாய்க் காணப்பட வேண்டும்.

இப்படியாக, இப்பொழுது தெய்வீக ஏற்பாட்டிற்கு ஏற்ப உண்மையான திராட்சச்செடியின் கொடிகள் ஆகியுள்ளவர்கள் மத்தியில் இரண்டு வகுப்பார் காணப்படுகின்றனர்; அதாவது கனிக்கொடுக்கின்ற கொடிகள் மற்றும் “உறிஞ்சிகள்” என்று அழைக்கப்படும் கனிக்கொடுக்காத கொடிகள். ஆனால் இவர்கள் இருவரின் நிலையும், ஒவ்வொரு விதமான வளர்ச்சி என்று சொல்லப்படலாம்; ஒவ்வொரு கொடியும் மிகச் சிறிய முளைகளாகவே ஆரம்பிக்கின்றன; ஒவ்வொரு கொடியும் இலைகளை வளரச்செய்கின்றன; ஒவ்வொரு கொடியும், முக்கிய நடுதண்டாகிய கிறிஸ்து மற்றும் தெய்வீக நோக்கம் மற்றும் வாக்குத்தத்தங்கள் எனும் ஒரே வேரிலிருந்து உயிர்ச்சாறாகிய போஷாக்கைப் பெற்றுக்கொள்வதற்குரிய ஒரே மாதிரியான வாய்ப்பைப் பெற்றிருக்கின்றது. திராட்சச்செடியின் அனைத்துக் கொடிகளும், தங்களுக்காகவே தங்களது பலத்தைச் செலவிடும் தன்மைக் கொண்டிருக்கின்றது; அதாவது கனிகளைக்கொடுப்பதைப் பார்க்கிலும் கொடிகளை உருவாக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றது; எனினும் மாறுபட்ட தன்மையும் காணப்படுகின்றது. சரியான கொடிகளில் கனிக்கான மொக்குகள் காணப்படுவதையும், உறிஞ்சிகளிடத்தில் இந்தக் கனிக்கான மொக்குகள் இல்லாமல் இருப்பதையும், திராட்சத்தோட்டத்திற்கான உதவியாளர்கள் ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளலாம் என்று நமக்குத் தெரிவிக்கின்றனர்.

இப்படியாகவே, கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களின் விஷயத்திலும் காணப்படுகின்றது. இவர்களிடம் அவர் அதிகளவிலும், அருமையான தன்மையிலும் கனிகளை உடனடியாக எதிர்பார்ப்பதில்லை. ஆயினும், கனிக்கொடுப்பதற்கு ஏதுவான பிரயாசங்களுக்கான சுவடுகள் (அ) மொக்குகள் இருக்கின்றதா எனப் பார்ப்பார். மேலும் உண்மையான திராட்சச்செடியின், சரியான கொடியாக இருப்பவர்களிடத்தில், இந்தக் கனிகளுக்குரிய மொக்குகள் ஆரம்பத்திலே வெளிப்பட்டுவிடும். கர்த்தருக்காகவும், அவருடைய நோக்கங்களுக்காகவும் ஊழியம் செய்வதின் மூலமாகக் கர்த்தருக்கு மகிமை சேர்க்கும் விதமாக கனிக்கொடுக்கத்தக்கதான விருப்பத்தைக் கொண்டிராதவர்கள் கனிக்கொடுப்பதற்குப்பதிலாக, கிறிஸ்துவுடன் ஒன்றுபடுவதன் காரணமாக உருவாகும் ஆசீர்வாதங்களையும், அறிவையும் பயன்படுத்திக்கொண்டு, மனுஷர் முன்பாக தங்களை உயர்த்திக்கொள்ளுபவர்களாகவும், மாம்சத்தில் வேஷம் போடுகிறவர்களாகவும் இருப்பவர்கள் தொடர்ந்து (கொடிகளாக) தக்க வைப்பதற்குப் பாத்திரமற்றவர்களாகக் கருதப்பட்டு, வெட்டப்பட்டுப் போவார்கள்; அதாவது எல்லா விதத்திலும் கொடிகள் என்று அடையாளங்கண்டுகொள்ளப்படுவது நிறுத்தப்படும் நிலைக்கு ஆளாகுவார்கள். இப்படிப்பட்டவர்கள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட பிற்பாடும் தங்களது பச்சை இலைகள், புத்துணர்வு முதலானவைகளைச் சிலகாலம் வரையிலும் தக்க வைத்துக்கொள்ளலாம். எனினும், கொஞ்சம் காலத்திற்குள்ளாக நேர்மைக்கான அனைத்துச் சுவடுகளையும் இவர்கள் இழந்துவிடுவர். இவர்கள் உலர்ந்துபோய்விடுவர். இப்படிப்பட்டவர்கள் கொடிகளாக இருப்பது நின்ற பிற்பாடு, இவர்கள் ஒருகாலத்தில் கொடிகளாகக் காணப்பட்டார்கள் என்ற உண்மை எதற்கும் பயன்படாது. காரணம், கொடிகளுடைய மரத்திற்கு/தண்டிற்கு எவ்விதமான முக்கியத்துவமும் இல்லை. அவைகள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும்.

கனிக்கொடுப்பதற்குரிய ஆதாரத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும் திராட்சச்செடியின் சிறப்பான/நல்ல கொடிகளுக்கும்கூட வெட்டிவிடுதல் அவசியமாய் இருப்பது போன்று, கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் மிகவும் உண்மையானவர்களாகவும், நேர்மையுள்ளவர்களாகவும் காணப்படுகிறவர்களுக்கும்கூடக் கர்த்தருடைய பராமரிப்பும், ஒழுங்குப்படுத்தலும் அவசியப்படுகின்றது. இல்லையேல், இவர்களும் விரைவில் செடித்தண்டை வளர்க்கின்றவர்களாகிவிட்டு, அதிகமான கனிகளைக்கொடுக்கத் தவறுகின்றவர்களாய்க் காணப்பட்டுவிடுவார்கள். தான் விரும்பும் சரியான மற்றும் முதிர்ச்சியடைந்த கனிகளைக்கொடுப்பதற்கு எவ்வளவு இலைகள், முளைகள், கிளைகள் அவசியமெனத் தோட்டக்காரர் அறிந்திருப்பதுபோல, நாமும் அதிகமான கனிகளைக்கொடுப்பதற்கு ஏதுவான மிகுந்த அனுகூலமான பூரணமான சூழல் எது என்பதை நமது பரம பிதாவும் நன்கு அறிந்துள்ளார். பல்வேறு திசைகளில் நம்முடைய இலட்சியங்கள்/குறிக்கோள்கள் முளைவிடுவதை அவர் காண்கின்றார். மேலும் இந்த முளைகள் நம்மை எவ்விடத்திற்கு நடத்திடும் என்பதை நாம் அறியோம், ஆனால் அவர் அறிவார்; நம்முடைய இந்த முளைகளானது அவருடைய வழிநடத்துதலினால் கிள்ளிவிடப்படுகின்றதால், இத்திட்டங்களுக்கெனச் செலவிட நாம் நோக்கம் கொண்டிருந்த பலமும், சக்தியும், நம்மில் ஏற்கெனவே வளர ஆரம்பித்தும், வளர்ந்து கொண்டும் இருக்கும் கனிகளை முதிரப் பண்ணுவதற்கேதுவாக செலவிடப்படுகின்றது.

இந்தக் கிள்ளிவிடுதல்களினிமித்தம், கர்த்தருடைய சித்தத்திற்குள்ளாக தனது சித்தத்தை மூழ்கப்பண்ணியுள்ள தேவனுடைய உண்மையான பிள்ளை சோர்வடைவதுமில்லை, கோபமூட்டப்படுவதுமில்லை. அவன் தன்னுடைய ஞானமற்ற தன்மையைக்குறித்து அறிந்தவனாகவும், மாபெரும் தோட்டக்காரருடைய ஞானத்தின் மீது நம்பிக்கைக்கொண்டவனாகவும் இருக்கின்றான். ஆகவே, ஏதோ ஒரு திசையை நோக்கின அவனுடைய முயற்சிகளைத் தெய்வீக வழிநடத்துதலானது தடைப்பண்ணும்போது, கர்த்தருடைய சித்தமும், கர்த்தருடைய வழியும் சிறப்பானது என்றும், ஆசீர்வாதத்தையே கொண்டுவரும் என்றுமுள்ள நிச்சயத்துடன், தன்னுடைய திட்டங்கள் தடைப்பண்ணப்பட்டதைச் சந்தோஷத்துடன் எடுத்துக்கொள்வான்.

பிதாவின் பிரதிநிதியாக இயேசு, திராட்சச்செடியின் முதல் கொடிகளைக் காத்துக்கொண்டார். அவருடைய கடிந்துகொள்ளுதல்களின் (அ) ஆலோசனைகளின் வாயிலாக அப்போஸ்தலர்களைச் சுத்திகரித்தப்படியால் (அ) கிள்ளிவிட்டப்படியால், தம்முடைய 31/2 வருட ஊழியத்தினுடைய நிறைவின்போது, அவரால் “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” என்ற வார்த்தைகளைக்கூற முடிந்தது (யோவான் 15:3). இன்னுமாக, தம்முடைய ஜெபத்தில் பிதாவிடம், “நீர் எனக்குத் தந்தவர்களை (கொடிகளாக, சீஷர்களாக, அங்கங்களாக) காத்துக் கொண்டுவந்தேன் கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை” என்றும் கூறினார் (யோவான் 17:12). ஆனால் இதற்குப் பின்னர், இந்த ஜெபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, கொடியின் பராமரிப்பு மற்றும் கிள்ளிவிடுதலானது, இதே மாதிரி நமது கர்த்தராகிய இயேசுவினால் செய்யப்படுவதில்லை, மாறாக பரிசுத்த ஆவியின் பிதா மற்றும் குமாரனுடைய ஆவியின் செயல்படுத்துதலினால் செய்யப்படுகின்றது.

ஆனால், நாம் முதலாவதாக நீதிமானாக்கப்பட்டு, பின்னர்க் கர்த்தருக்கு நம்மை அர்ப்பணிப்பதின் மூலமாக பரிசுத்தமாக்கப்படுவது மாத்திரம் போதாது. நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் பிரவேசித்து, திராட்சச்செடியின் கொடிகளாகுவது மாத்திரம் போதாது. சிறிய முளையாகக் காணப்படுவதும் நல்லதுதான். கொடியாக வளர்ந்து, கொடியானது கொடிச்சுருளைவிடுவதும் நல்லது தான். எனினும் கொடி பெரியதாகவோ (அ) சிறியதாகவோ, எவ்வளவு வயது முதிர்ந்ததாகவோ (அ) இளமையானதாகவோ காணப்பட்டாலும், கனிகளை உண்டுபண்ணும் உயிர்ச்சாறானது, திராட்சச்செடி மற்றும் வாக்குத்தத்தமாகிய அதன் வேருடன் தொடர்ந்து உறவு கொண்டிருப்பதன் மூலமாகக் கிடைக்கப்பெறும் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். ஒருவேளை உறவிலிருந்து பிரிந்து போவோமானால், அனைத்து நம்பிக்கைகளும் உலர்ந்து போய்விடும். நாம் கிறிஸ்துவுக்குள் காணப்பட்டால் மாத்திரமே மற்றும் அவர் மூலம் தேவனுடைய சுதந்தரர்களாய்க் காணப்பட்டால் மாத்திரமே நமக்கு இவ்விஷயத்தில் பங்கு காணப்படும். மேலும் இப்படியாக மாத்திரமே நம்மால் மாபெரும் தோட்டக்காரர் நாடும் கனிகளையும் கொடுக்க முடியும். கொடியானது, “நான் முதலில் கிறிஸ்து வாயிலாக திராட்சச்செடியுடன் இணைந்து காணப்படுவது எனக்கு அவசியமாயிருந்தது. ஆனால், இப்பொழுது என்னால் தனித்து நிற்க முடியும்” எனக் கூறுவது அறிவீனமாயிருக்கும். யாரெல்லாம் தனித்து நிற்கின்றார்களோ, யாரெல்லாம் திராட்சச்செடியிலிருந்தும், மற்றக் கொடிகளிடமிருந்தும் பிரிந்து காணப்படுகின்றார்களோ, அவர்கள் சீக்கிரமாய் உலர்ந்து போய்விடுவார்கள். மேலும் திராட்சச்செடியில் நிலைத்திருப்பவர்கள், திராட்சச்செடிக்குத் தொடர்ந்து நேர்மையுடன் காணப்பட வேண்டும் மற்றும் அதே திராட்சச்செடியின் மற்ற அனைத்து உண்மையான கொடிகளுடன் ஒன்றுபட்டும் காணப்பட வேண்டும். இங்கு நாம் உண்மையான திராட்சச்செடியில் காணப்படுவதிலும், உண்மையான கொடிகளுடன் ஒன்றுபட்டுக் காணப்படுவதிலுமுள்ள முக்கியத்துவத்தை நாம் காண்கின்றோம்.

திராட்சச்செடி மற்றும் கொடிகள் பற்றின பாடம் தொடர்பான தவறான கருத்து, பல்வேறு சபை பிரிவுகளில் காணப்படும் நம்முடைய நண்பர்களினால் அடிக்கடி கூறப்படுகின்றன. இவர்கள் திராட்சச்செடியின் கொடியானது கிறிஸ்தவர்களின் பல்வேறு ‘சபை பிரிவினர்’ என்று கூறிக்கொள்கின்றனர். இது, ஒரு பயங்கரமான தவறை ஆழப்பதிய வைத்துவிடுகின்றது. அதாவது, ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்தவனும் இந்தக்கொடிகளில், உதாரணத்திற்கு ரோமன் கத்தோலிக்கப் பிரிவில் (அ) கிரேக்க கத்தோலிக்கப் பிரிவில் (அ) மெத்தடிஸ்ட் பிரிவில் (அ) லூதரன் பிரிவில் (அ) பிரஸ்பிட்டேரியன் பிரிவில் அங்கத்துவம் பெற்றுக்கொள்வது, அவனுக்குரிய கடமை எனும் பயங்கரமான தவறை ஆழப்பதியவைத்துள்ளது. இதற்கு மாறான சரியான கருத்து என்னவெனில், அதாவது, கர்த்தருக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்தவனும், மெய்யான திராட்சச்செடியின் ஒவ்வொரு தனிப்பட்ட கொடியாகிறான் மற்றும் அவனுடைய ஊழியங்கள், ‘சபை பிரிவு’ எனும் கனிகளைக் கொண்டுவருவதற்காக அல்லாமல் மாறாக, அவனுடைய சொந்த குணலட்சணத்திலும், ஜீவியத்திலும் தேவனுடைய ஆவியின் கனிகளையே கொண்டுவருகிறதற்காகவே காணப்பட வேண்டும்.

கொடிகள் குறித்த தவறான இந்தக் கருத்தைக்குறித்து ஓர் எழுத்தாளர் பின்வருமாறு கூறுகின்றார்: “பெரியதாகவும், வளமை பொருந்தியதாகவும் இருக்கும் கனியற்ற சபைகளைத் தேவன் விரும்புவதில்லை. அவர்கள் உலர்ந்து போகும்படிக்கு விட்டுவிடுகின்றார். கிறிஸ்துவுடன் நெருக்கத்தில் காணப்படும் ‘சபைகளே’ விரைவாக வளர்வார்கள்.” இந்தத் தவறான கருத்திலுள்ள தவறான வாதத்தைப் புரிந்துகொள்வதில் எவருக்கும் கஷ்டம் இல்லை. ஒருவேளை இது சரியான கண்ணோட்டமாக இருக்குமாயின் ஜனங்களின் எண்ணிக்கையில் பெரியதாகவும், ஆஸ்தியிலும், மனுஷர் மத்தியிலுமான கனத்திலும் மிகவும் வளமையுடையதாகவும் இருக்கும் சபை அமைப்புகளே, மிகுந்த சத்தியத்தை உடையவர்களாகவும், கர்த்தரிடத்திலிருந்து பரிசுத்த ஆவியாகிய உயிர்சாற்றை மிக நேரடியாகப் பெற்றுக்கொள்பவர்களாக இருப்பார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் ரோம கத்தோலிக்க மார்க்கமானது, பரிசுத்தமானதாகவும், சிறப்பானதாகவும், கர்த்தருக்கு நெருக்கமானதாகவும் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படுவதாக இருக்க வேண்டியிருக்கும்; கிரேக்க கத்தோலிக்க மார்க்கம் இரண்டாவது இருப்பதாக உரிமைகோரும்; மெத்தடிஸ்ட் மூன்றாவதாகவும், மற்றவைகளும் இப்படியாக வரிசையில் காணப்படும். இப்படிப்பட்டதான விளக்கத்தில் இருக்கும் தவறைச் சுட்டிக்காண்பிக்க புத்தியுள்ள ஜனங்களுக்குத் தேவைப்படுவதில்லை.

கொடிகளைச் சபை பிரிவுகளுக்குப் பொருத்தும்போது ஏற்படும் முரண்பாடுகளானது, கொடிகளைத் தனிப்பட்ட கிறிஸ்தவனுக்கும், அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் பொருத்தும்போது, முரண்பாடாக இல்லாமல் மற்றும் இந்த உண்மை முற்றிலுமாய்க் காரணக்காரியத்திற்கு உட்பட்டதாகவும், இசைவானதாகவும் காணப்படுகின்றது. மாபெரும் தோட்டக்காரரின் பார்வையில் பிரியமாய் இருக்கும் கனிகளைக்கொடுக்கத்தக்கதாக, விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், கர்த்தருக்கான ஊழியத்திற்குரிய அர்ப்பணிப்பிலும், கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பவர்கள், தெய்வீக ஏற்பாடுகளின் காரணமாக, அடிக்கடி வேலியடைக்கப்பட்டுள்ள இடுக்கமான வழியில் தாங்கள் இருப்பதையும் மற்றும் பல்வேறு திசைகளை நோக்கின தங்களது பிரயாசங்கள் அத்திசைகளிலிருந்து மாற்றப்படுவதையும் அல்லது தங்களது நோக்கங்கள் தடைப்பண்ணப்படுவதையும் காண்பார்கள். ஆனால், இந்த அனுபவங்கள் அனைத்தும் தங்களால் சரியாக ஏற்றுக்கொள்ளப்படுவதின் விளைவாக தாங்கள் கிருபையிலும் அறிவிலும், தேவனுடைய அன்பிலும், ஆவியின் கனிகளிலும் வளர்வதை உணர்ந்துகொள்கின்றனர். (ரோமர் 8:28)

“ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால்” என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகளானது திராட்சச்செடி மற்றும் கொடிகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகின்றது. திராட்சச்செடிக்கும் அதன் கொடிகளுக்கும் இடையே அப்படிப்பட்ட ஓர் ஒற்றுமை காணப்படுவதினால், நாம் ஒரு கொடியை எங்கெல்லாம் தொட்டாலும், நாம் திராட்சச்செடியையே தொடுகின்றவர்களாய் இருப்போம். அது கொடிகள் அடங்கிய ஒரு திராட்சச்செடியாகும்; இப்படியாகவே கிறிஸ்துவின் சரீரம் அநேக அங்கங்களையுடைய ஒரே சரீரமாகக் காணப்படுகின்றது. எங்கெல்லாம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஓர் அங்கம் அல்லது ஒரு கொடி காணப்படுகின்றதோ, அங்குக் கிறிஸ்துவின் சகல பல்வேறு அம்சங்களும் காணப்படுகின்றது – ஆவியில், நோக்கத்தில், புதிய சிருஷ்டிகளெனக் காணப்படுகின்றது. கிறிஸ்துவுக்குள்ளான இந்த ஒற்றுமையே/ஒருமையே வல்லமைக்கான, கனிக்கொடுப்பதற்கான மற்றும் மாபெரும் தோட்டக்காரராகிய பிதாவினால் கொடிகள் அங்கீகரிக்கப்படுவதற்கான இரகசியமாகக் காணப்படுகின்றது.

[R2466 : PAGE 110]

“என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்ற வார்த்தைகள், கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள உண்மையாய் அர்ப்பணம் பண்ணியுள்ள ஒவ்வொருவரின் இருதயத்திலும் ஆழமாகப் பதிக்கப்படுவதற்குப் பாத்திரமானதாகும். ஆனால், கிறிஸ்துவுக்குள் நிலைத்திருப்பதென்பது, மாபெரும் தோட்டக்காரரின் சித்தம் அனைத்திற்கும் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுப்பதையும் மற்றும் அவருடைய ஞானம் சிறந்ததென அனுமதிக்கும் அனைத்துக் கிள்ளிவிடுதல்களுக்கும் மகிழ்ச்சியுடனும், சாந்தத்துடனும், கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுப்பதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. கிள்ளிவிடுதல் மற்றும் சிட்சைகளின் அவசியம் தொடர்பாக பெயர்பெற்ற இறையியல் வல்லுநர் டிரெஞ்ச் அவர்கள் பின்வருமாறு அருமையாய்க் கூறியுள்ளதாவது:

“இப்படியாகவே, தேவன் விஷயத்திலும், அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியர்கள் சிலரின் விஷயத்திலும் நிகழ்கின்றது. இவர்களுடைய ஆவியின் கிருபைகள், சராசரியான மனிதர்களுடைய கிருபைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தும், இன்னமும் இவர்கள் ஏன் பாடுகள்பட வேண்டுமென்றும், ஏன் இவர்களுக்குச் சோதனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றது என்றும் சிலசமயம் மனிதர்கள் வியந்தது உண்டு. ஆனால் மற்றக் கண்களால் பார்க்க முடியாததை இவர்களிடத்தில் தேவன் காண்கின்றார்; அதாவது இன்னமும் அதிகப்படுத்துவதற்கு ஏதுவான ஆவியின் கிருபைகள் இவர்களிடத்தில் இருப்பதைத் தேவன் காண்கின்றார். மேலும் தமக்குச் சொந்தமானவர்கள் தம்மை ஒருநாள் மாத்திரமல்லாமல், நித்திய காலமாய்த் தம்மைத் துதிக்கத்தக்கதாக, தம்முடையவர்கள் பேரில் அவர் கொண்டிருக்கும் தொலைநோக்குள்ள அன்பானது, அவர்களுடைய நன்மைக்கேதுவான எதையும் தடைப்பண்ணிவிடாது. அவர்கள் கனிக்கொடுக்கும் கொடிகள் ஆவர்; மேலும் அவர்கள் இப்படிக் கனிக்கொடுக்கும் கொடியாக இருக்கின்றபடியால், அவர்கள் இன்னும் அதிகமான கனியைக்கொடுக்கத்தக்கதாக அவர்களைக் கிள்ளிவிடுகின்றார்.”

சிலசமயம் திராட்சச்செடியானது, அதனால் முதிர்ச்சியான கனிகளைக் கொடுக்க முடிகின்ற அளவையும் மிஞ்சி அதிகமான கனிகளைக்கொடுக்க முற்படும் உண்மையைக்குறித்தும் மற்றும் இதனை கிறிஸ்தவனுடைய அனுபவங்களுடனும், பிரயாசங்களுடனும் பொருத்துவது குறித்தும் H.L. ஹெஸ்டிங்ஸ் அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றார்:

“திராட்சச்செடியைக் குலுக்கி, அதன் அதிகப்படியான கனிகளின் சுமையினின்று அதனை விடுவித்துவிடுவதே சிறந்த வழியாகும். செடியினால் சமாளித்துக்கொள்ளும் நிலையை அடைவதுவரையிலும் மற்றும், செடியானது அதன் சுமையைத் தாங்கிக்கொள்ளும் நிலையை அடைவது வரையிலும் கிள்ளி, பிடுங்கி, கத்தரித்துவிட்டு, கனிகளைக்குறைத்துவிடுங்கள். ஒவ்வொரு கொடியும், முதிர்ச்சியடையக்கூடிய கனிகளைச் சுமந்துகொள்ளட்டும். மாறாக ஒருபோதும் முதிர்ச்சியடையாத கனிகளால் அதிகச் சுமை சுமத்தப்படாதிருப்பதாக.”

இந்தக் கருத்து மற்றவர்கள் சார்பாக, கர்த்தருடைய ஊழியத்தில் ஏறெடுக்கப்படும் பிரயாசங்களுடைய கனிகள் தொடர்புடைய விஷயத்தில் மிகவும் சரியாக இருக்கின்றது. காரணம் அநேகர் போதுமான அளவுக்குக் கவனம்/சிரத்தைக்கொள்ளாததினிமித்தமாகத் தங்களது பிரயாசங்களை வீணடிக்கின்றவர்களாய் இருக்கின்றனர்.

நாம் அதிகளவில் தாலந்து பெற்றிராத காரியங்களில் ஏறெடுக்கப்படும் நம்முடைய பிரயாசங்கள், திட்டங்கள், ஏற்பாடுகளில் சிலவற்றைக் குலக்கிப்போடுவதில் விளங்கும் ஞானம் குறித்தும், நம்மால் பூரணமான பலனைக்கொண்டுவருவதற்கு ஏதுவானவைகள் மீது நமது பிரயாசங்களைச் செலுத்துவது குறித்தும், சாட்சி பகரும் விதத்தில் தாலந்துகள் உடைய அப்போஸ்தலனாகிய பவுல், “ஒன்று செய்கிறேன்” எனக் கூறுகின்றார் (பிலிப்பியர் 3:13). முடிந்தமட்டும் தான் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதான நிலையை அடைவதும், இதே நிலையை மற்றவர்கள் அடையத்தக்கதாக தன்னுடைய பலத்தால் முடிந்த மட்டும் மற்றவர்களுக்கு [R2466 : page 111] உதவி செய்வதும் அப்போஸ்தலருடைய ஜீவியத்தின் ஒரே வேலையாக இருந்தது. ஆனால், மற்றவர்கள் கனிகொடுக்கத்தக்கதாக ஊழியம் புரிவதென்பது, இந்தப் பாடத்தின் பிரதானமான கருத்தல்ல. கர்த்தருடைய ஆவியின் கனிகளை நம்முடைய சொந்த இருதயத்தில் பெற்றிருப்பதும், ஆவியின் கிருபைகளை நன்கு வளர்த்தப்பட்ட நிலையில் கொண்டிருப்பதும்தான் முதல் விஷயமாக இருக்கின்றது. இது கர்த்தருடைய ஊழியத்தில் சுயத்தைப் பலி செலுத்துதலையும், வேலைகள் புரிதலையும் குறிக்கின்றது. காரணம், இப்படியாக மாத்திரமேதான் நம்முடைய தனிப்பட்ட கனிகளும், கிருபைகளும் முதிர்ச்சியை அடைவது கர்த்தருடைய ஏற்பாடாக இருக்கின்றது.

அதிகமான கனி வளர்வது என்பது, முற்றிலும் நம்மையே சார்ந்ததில்லை என்றும், நாம் அவரில் கனிகொடுக்கின்ற கொடிகளாக நிலைத்திருப்பினும் கனிகளுடைய தரமும், அளவும் நாம் நமது மனங்களுக்கு முன்பாக சரியான இலட்சியங்களைக்கொண்டிருப்பதன் மூலமாகவும், அவைகள் நிஜமாக்குவதற்கு உண்மையாய் நாடப்படுவதன் மூலமாகவும் மேம்படுகின்றது என்றும் நமது கர்த்தர் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார். ஆகவே அவர், “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்று கூறுகின்றார் (யோவான் 15:7). கருத்து என்னவெனில், பரம கிருபையின் சிங்காசனத்தில் இருக்கும் பிதாவிடத்தில் கேட்பதும், வாஞ்சிப்பதும்தான், நாம் திராட்சச்செடியின் உயிர்சாறாகிய பரிசுத்த ஆவியை அதிகமதிகமாய்ப் பெற்றுக்கொள்வதற்கும், ஆவியின் கனிகளை வளர்த்துக்கொள்வதற்குமுரிய வழியாய் இருக்கின்றது. இங்குப் பூமிக்குரிய நன்மையான காரியங்கள் நாடப்படுவது (அ) அடையப்படுவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கப்படலாம். இந்தப் பூமிக்குரிய நன்மைகள் தொடர்பானவைகள் முற்றிலுமாகக் கர்த்தருடைய ஞானத்திடத்திலும், ஏற்பாடுகளிடத்திலும் விட்டுவிடப்பட வேண்டும். மேலும் அவருடைய ஜனங்கள் அதாவது, திராட்சச்செடியின் மெய்யான கொடி, பரிசுத்த ஆவிக்காகவே வாஞ்சிக்கவும், நாடவும் வேண்டும். இந்தப் பரிசுத்த ஆவியைத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கக்கூடும் பூமிக்குரிய பெற்றோர்களைக் காட்டிலும், பிதாவானவர் அதிகமாய்க்கொடுக்க சித்தமுள்ளவராக இருக்கின்றார். (லூக்கா 11:13)

இதற்கிடையில் நமது கர்த்தர், “என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருந்தால்” எனும் வார்த்தைகளைக் கூறுவதன் மூலமாக, தம்முடைய மெய்யான கொடிகளுக்கு அல்லது சீஷர்களுக்கு வேதவாக்கியங்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றார். தெய்வீகக் கிருபையை நாம் நாடுவதென்பது சரியானதாகவும், அவசியமானதாகவும் மாத்திரம் இராமல், மாறாக இதற்குச் சரிசமமான நிலையில், மெய்யான திராட்சச்செடிக்குரிய தோட்டக்காரராகிய, நமது பிதாவாகிய தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் என்ன என்பது தொடர்புடைய தெய்வீக வெளிப்படுத்துதல்களை நாம் பயன்படுத்துவதும் சரியானதாகக் காணப்படுகின்றது. ஆகவேதான் அதிகமான கனிகளையும், நல்ல கனிகளையும் கொடுப்பவர்கள் விசுவாசத்தின் மூலமாக நீதிமானாக்கப்பட்டு, அர்ப்பணிப்பின் மூலம் பரிசுத்தம் பண்ணப்பட்டு, அர்ப்பணிப்பின் மூலமாக மெய்யான திராட்சச்செடியின் அங்கத்துவத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக மாத்திரம் காணப்படாமல், இன்னும் கனிகொடுப்பவர்களாக இருக்க நாடுபவர்களாக, திராட்சச்செடியில் நிலைத்திருக்க நாடுபவர்களாக, திராட்சச்செடியின் அனைத்து அம்சங்களைப் பெற்றிருக்க நாடுபவர்களாக, தேவையானபொழுதெல்லாம் உதவிக்கான கிருபைக்காக நாடுபவர்களாக, வேர்கள் வழியாய் வரும் உயிர்ச்சாற்றைத் தங்களுக்குப் பயன்படுத்துவதோடல்லாமல், தங்கள் மீது கர்த்தருடைய வார்த்தை மூலம் பிரகாசித்துக்கொண்டிருக்கும் சத்தியம் மற்றும் கிருபையின் வெளிச்சத்தைப் பயன்படுத்துபவர்களாகக் காணப்படுவார்கள். இந்த நிபந்தனைகளைப் பின்பற்றுவதன் மூலமே நாம் கனிகொடுப்பவர்களாக இருக்கமுடியும். மேலும், கனிகொடுப்பவர்களாக நாம் இருப்பதன் மூலமாக மாத்திரமே நம்மால் முடிவு பரியந்தமும் கர்த்தருடைய சீஷர்களாக இருக்க முடியும். ஏனெனில், தற்காலத்தில் காணப்படும் சபையானது, உண்மையை, அன்பை, கீழ்ப்படிதலைக் கொண்டிருப்பதாக அறிக்கைப் பண்ணுபவர்களைக் கொண்டிருக்கும் கூட்டத்தாராக அதாவது, தகுதிக்கான தேர்வின் கீழிருக்கும் சபையாக (Probationary Church) மாத்திரம் இருக்கின்றனர் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இவர்களுடைய அறிக்கையின் நேர்மையை நிரூபிக்கத்தக்கதாக, கர்த்தர் பரீட்சைகளைக்கொண்டுவருவார் மற்றும் தங்களது அறிக்கையின் நேர்மையை நிரூபிப்பவர்கள் மாத்திரமே, ஆலயத்தின் வாயிலில் காணப்பட்ட பொன்னினாலான திராட்சச்செடி அடையாளப்படுத்தும் மகிமையடையும் சபையின் அங்கங்களாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

மெய்யான கொடிகளனைத்தும் தம்முடைய அன்பைக்குறித்தும், தம்முடைய அக்கறையைக்குறித்தும், அவர்களுக்கான தம்முடைய பராமரிப்புக்குறித்தும், திராட்சச்செடியில் அங்கத்துவம் அடைவதற்குரிய நிபந்தனைகளுக்கு இசைவாக அவர்கள் தங்களது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தமது வாஞ்சையைக் குறித்தும் உணர்ந்திட நமது கர்த்தர் விரும்புகின்றார். ஆகவே, தம்முடைய அன்பைக்குறித்துப் பலமான வார்த்தைகளினால் அவர்களுக்கு உறுதிப்படுத்துகின்றார். பிதா தம்மீது கொண்டிருக்கும் அன்பை போன்றே தாமும் அவர்கள் மீது அன்பு கொண்டிருப்பதாகக் கர்த்தர் அவர்களிடம் கூறினார். இந்த அவருடைய வார்த்தைகளிலுள்ள உண்மை தன்மைக்குப் பல்வேறு சாட்சிகளும், இதோடுகூடக் கர்த்தருடைய வார்த்தைகளின் மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களும் சான்றுகளாகக் காணப்பட்டாலும், இது முழுமையாய்ப் புரிந்துகொள்வதற்கு மிகவும் அற்புதமான ஒன்றாக உள்ளது. நமது கர்த்தர் இயேசு, பிதாவினால் மிகவும் அன்புகூரப்பட்டார் என்பதும், அவரைத் தமது நேசகுமாரன் என்று கூறப்பட்டதும் எப்படி மற்றும் ஏன் என்று நம்மால் உடனடியாக அறிந்துகொள்ளபடலாம். ஆனால், இதே அன்பானது, நமது ஆண்டவரால் திரும்பி நம்மிடம் செலுத்தப்படுகின்றது என்பதை நாம் அறியும்போது நம்மை மலைக்கச் செய்கின்றது. “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை” (1 யோவான் 3:1). பிதாவின் அன்பை நமது கர்த்தர் இயேசு முழுமையாக வெளிப்படுத்தித் தெரிவித்தார். (யோவான் 14:7)

ஆனால், இந்த ஆழமான அன்பு, “சிறுமந்தையினருக்கு” மாத்திரமே உரியது என்ற வரையறையும் இருக்கின்றது. “தேவன் இவ்வளவாய் உலகத்தை அன்புகூர்ந்தார்” மற்றும் நமது கர்த்தர் இயேசுவும் உலகத்தை அன்புகூர்ந்தார். ஆனால், அனுதாப அன்பின் அடிப்படையிலும், அவர்களுக்கு நன்மை செய்து கொடுக்க வேண்டும் என்ற வாஞ்சையிலும்தான் ஆகும். ஆனால் இங்குச் சபை மீது கர்த்தர் கொண்டதாகக்கூறும் அன்பானது முற்றிலும் வேறே அன்பாகும். அவர் சொல்லியிருக்கும் அன்பு, அவருக்கெனத் தங்களை முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களுக்கு மாத்திரமே காணப்படுகின்றது. உண்மையில் இந்த அர்ப்பணிப்புதான் அவருடைய விசேஷித்த அன்பைப் பெற்றுக்கொள்வதற்குரிய இரகசியமாகும். ஒரே பேறான குமாரனைப் பிதா அன்புகூர்ந்தார். காரணம் அவர், “மரணபரியந்தம் அதாவது, சிலுவையின் மரணபரியந்தம்” கீழ்ப்படிதல், நம்பிக்கை மற்றும் விசுவாசத்தினால் நிறைந்தவராகக் காணப்பட்டார். அதுபோலவே, அதே அன்பானது, நீதிமானாக்கப்பட்டு ஆண்டவரின் ஆவியினால் நிரப்பப்பட்டு, அவருடைய அடிச்சுவட்டில் நடப்பதற்கும், தங்களது சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரைப் பின்தொடர விரும்புகிறவர்களாகக் காணப்படுபவர்கள் மீதும் கடந்துவந்துள்ளது. நம்முடைய அருமையான மீட்பரிடத்திற்குக் கடந்துவந்த அதே தேவனுடைய அன்பானது, மேற்கூறப்பட்டவர்களிடத்திலும் கடந்துவருகின்றது மற்றும் அவர்களிடத்தில் மீட்பருடைய அன்பும் கடந்துவருகின்றது. இவர்களுக்கே, “எல்லாம் உங்களுடையது; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்;” “தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்?… கிறிஸ்துவே மரித்தவர்” என்ற நல்ல செய்தியும் கடந்து வருகின்றது (1 கொரிந்தியர் 3:22-23; ரோமர் 8:33-34).

இந்த விசேஷமான அன்பானது, இந்த வகுப்பாருடைய அர்ப்பணிப்பு மற்றும் கீழ்ப்படிதலின் அடிப்படையில் காணப்படுவதுபோன்று, இந்த அன்பானது, அர்ப்பணிப்பு மற்றும் கீழ்ப்படிதலின் ஆவி தொடர்ந்து காணப்படுவதையும் சார்ந்துள்ளது. ஒருவேளை அவர்களது பக்தி தணிந்துபோய், சுயத்தின் மீதான அன்பினாலும், உலகத்தின் ஆவியினாலும் நிரப்பப்பட்டுவிடுவார்களானால், இதற்கேற்ப அவர்கள் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துகின்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் கர்த்தருடைய இந்த விசேஷமான அன்பினின்று விலகிப்போய்விடுபவர்களாக இருப்பார்கள். ஆகவேதான், “என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்” (யோவான் 15:9) என நமது கர்த்தர் கூறுகின்றார்: இந்த வார்த்தைகள், கர்த்தருடைய அன்பை நாம் இழந்துவிடுவதற்கும், தள்ளப்பட்டுப் போவதற்கும், தேவனைப் பிரதானமான அன்பினால் அன்புகூருபவர்களுக்கு வைத்துள்ள மகா மேன்மையானவைகளுக்கென நமது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்த தவறிப்போவதற்கும் நமக்கு வாய்ப்புள்ளது என்பதைத் தெரிவிக்கின்றது. (2 பேதுரு 1:4-11; 1 கொரிந்தியர் 9:27)

நாம் கொண்டிருக்கும் அன்பானது, கீழ்ப்படிதலில் வெளிப்படும் என்பதை நாம் மனதில்கொள்வது முக்கியமாகும். ஆகவே, கீழ்ப்படியாமை என்பது, கர்த்தருடைய கண்ணோட்டத்தில் அன்பில்லாமல் இருப்பதற்கான சான்றாக இருக்கின்றது. மேலும் இந்தச் சான்று [R2466 : PAGE 112] நியாயமான கண்ணோட்டத்தின்படியான கணிப்பு என்று நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். சிலர் கேட்கலாம், ஒருவேளை நாம் அறியாமையின் காரணமாகக் கீழ்ப்படியாமல் இருந்தால், இந்தக் கணிப்பு எவ்வாறு பொருந்தும்? நம்முடைய அறியாமைக்குக் கர்த்தர் ஏற்பாடு பண்ணியுள்ளார் என்பதே நமது பதிலாகும்: எப்படியெனில் முதலாவதாக, “தேவனுடைய மனுஷன் (நன்கு தகவல் பெற்றவனாகவும்) தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக” அவர் நமக்குச் சத்தியத்தின் வார்த்தைகளைக் கொடுத்துள்ளார் மற்றும் இரண்டாவதாக, அவருடைய பார்வைக்குப் பிரியமானவைகளை நாம் செய்திட நமக்கு உதவி செய்யும் அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கும், பரிசுத்தத்தின் ஆவியை அடைவதற்கும் உதவிகள் அருளப்படுமென நமக்கு அவர் வாக்களித்துமுள்ளார் (2 தீமோத்தேயு 3:16,17; யோவான் 16:13). ஆகவே, கர்த்தருடைய வார்த்தைகள் தொடர்புடைய விஷயத்தில் அஜாக்கிரதையுடன் இருப்பதென்பது, அன்பு இல்லாமைக்கான ஒரு சான்றாக இருக்கின்றது. தாம் பிதாவினுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததே, தாம் பிதாவின் நேசக்குமாரனாக, பிதாவின் அன்பில் நிலைத்திருந்து, தொடர்வதற்கான காரணமாக இருக்கின்றது என்றும், ஒருவேளை நாமும் கர்த்தருடைய அன்பில் நிலைத்திருந்து, அவருடைய சிங்காசனத்திலும், மகிமையிலும் பங்கடைவோமானால், நாமும் கர்த்தருக்குக் கீழ்ப்படிதலுடன் இருப்பதை எதிர்பார்ப்பார் என்றும் நமது கர்த்தர் சுட்டிக்காட்டுகின்றார்.

“என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11). நமது [R2466 : page 112] கர்த்தருடைய கட்டளைகளும், அறிவுரைகளும், நம்மைப் பயப்படுத்துவதற்கும், நம்முடைய சந்தோஷத்தை எடுத்துப்போடுவதற்கும் நோக்கமுடையவைகள் அல்ல. மாறாக மிகவும் கனிகொடுக்கின்ற கொடிகள் நன்கு அறிந்திருக்கின்றதுபோல, கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதும், இப்படியாக அவரிலும், அவருடைய அன்பிலும் நிலைத்திருப்பதின் வாயிலாக அடையப்பெறும் சிலாக்கியங்களும், மாபெரும் சந்தோஷமாகும் – உலகம் அளிக்கும் அனைத்து அற்பத்தனமான சந்தோஷத்திற்கும் மேலான சந்தோஷமாகும். இது எல்லாப் புத்திக்கும் எட்டாததும், இருதயத்தில் ஆளுகை செய்கிறதுமான சந்தோஷமாகவும், சமாதானமாகவும் இருந்து, தற்போதுள்ள ஜீவியம் பற்றியது மாத்திரமல்லாமல், இனிவரப்போகின்ற ஜீவியம் பற்றியதுமான வாக்குத்தத்தத்தையும், நிச்சயத்தையும் கூடவே கொண்டுவருகின்றதாகவும் இருக்கின்றது.