R3178 (page 118)
“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.” – மாற்கு 14:38
மற்றக் காலப்பகுதிகளைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பாவத்திற்குள் விழுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது என்பது விநோதமாய்த் தோன்றினாலும், நாம் பல வருடங்களாகக் கவனித்து வந்ததும் மற்றும் மற்றவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவந்ததும் என்னவெனில் – ஒவ்வொரு வசந்த/இளவேனிற் காலத்தின்போதான பஸ்கா காலங்களில், குறிப்பிடத்தக்கதான வீரியத்துடன் சோதனைகள் கடந்துவருகின்றது என்பதேயாகும். வருடாவருடம் இந்த ஒரு காலப்பகுதியில் அநேகர் அல்லது அனைவருமே இடறிவிழுவதற்கு விசேஷித்த வாய்ப்புள்ளதை நாம் கவனிக்கின்றோம். ஆகையால் நமது கர்த்தருடைய வார்த்தைகளுக்கு உண்மையாய்ச் செவிக்கொடுத்து நமக்காகவும், மற்றவர்களுக்காகவும் உண்மையாய் விழித்திருந்து, ஜெபம்பண்ணிடுவோமாக; மற்றும் ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு முன் இடறலின் கற்களைப் போட்டுவிடாதப்படிக்கும் எச்சரிக்கையாயிருப்பானாக. (ரோமர் 14:13; எபிரெயர் 2:1)
பஸ்கா காலத்தின்போதுதான் நமது கர்த்தர், “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவஅப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.” அப்போது அவரது நண்பர்கள் மற்றும் பின்னடியார்களில் அநேகர், “இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்… அதுமுதல் … அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப் போனார்கள்.” (யோவான் 6:4,51,60,66,67)
பஸ்கா காலத்தின்போதுதான் யூதாஸ் நமது கர்த்தரைக் காட்டிக்கொடுக்கத்தக்கதாக பேரம் பேசினார் மற்றும் கொஞ்சம் பிற்பாடு, அதைச் செய்தும் முடித்தார்.
பஸ்கா காலத்தின்போதுதான் நமது கர்த்தர், “என் ஆத்துமா மரணத்துக் கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” என்றார் (மத்தேயு 26:38) மற்றும் “ஆகிலும் நான் முழுக வேண்டிய ஒரு ஸ்நானம் உண்டு அதுமுடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்” என்றார். (லூக்கா 12:50)
பஸ்கா காலத்தின்போதுதான் நமது கர்த்தர் சீஷர்களை அழைத்து, மனுஷகுமாரன் பிரதான ஆசாரியர், வேதபாரகர் கையில் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்றும், தாம் கொல்லப்படுவார் என்றும் விளக்க ஆரம்பித்தார் (மத்தேயு 16:21); அப்போது, தான் ஒரு சீஷன் என்பதை மறந்துபோவதற்கு ஏதுவாய்ப் பேதுரு சோதிக்கப்பட்டு, அவர் கர்த்தரை அழைத்து, “ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை” என்று கூறி அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார். இவ்விதமாய் இவர் நமது கர்த்தர் தம்மைப் பலி செலுத்திடுவதற்கு மறுத்துவிடுவதற்குக் கர்த்தரையும் சோதிப்பவனானார் மற்றும் “எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாய் இருக்கிறாய் தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்ற கடிந்து கொள்ளுதலைப் பெற்றுக்கொண்டார். (மத்தேயு 16:22,23)
பஸ்காவைப் புசிப்பதற்குக் கூடினபோது, தங்களில் யார் இராஜ்யத்தில் பெரியவராய் இருப்பார்கள் என்று பன்னிரண்டு பேருக்குள் வாக்குவாதம் உண்டாயிற்று. இப்படியாய்க் கர்த்தருடைய நீதியான கடிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொண்டார்கள் மற்றும் அவர்களது பாதங்களைக் கழுவுவதின் வாயிலாகத் தாழ்மைக்கான உதாரணத்தைக் கர்த்தர் கொடுப்பதற்கு ஏதுவானார்கள்.
ஸ்தோத்திரப் பாட்டுப்பாடிவிட்டு, அவர்கள் பஸ்காவை முடித்துக் கடந்துபோகுகையில்தான், நமது கர்த்தர் இப்பாடத்தினுடைய தலைப்பாகக் காணப்படும், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற வார்த்தைகளை அவர்தாமே வியாகுலமான போராட்டத்தில் காணப்படும் போதும், இரத்த வியர்வையுடன் தமது சித்தத்தை, தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கும்போதும், உண்மையாய் ஜெபம்பண்ணி, பெலப்படுத்தப்பட்டபோதும் – அவர்களிடத்தில் கூறினார். (லூக்கா 22:39-46)
கொஞ்சம் நேரத்திற்குப் பிற்பாடு பிரதான ஆசாரியனுடைய சேவகர்கள் அவர்களிடத்தில் வந்தபோது, பதினொருபேரும், அவரைவிட்டு ஓடிப்போனார்கள் (மாற்கு 14:50); சோதனையை, பயத்தை அவர்களால் எதிர்க்க முடியவில்லை.
கொஞ்சம் நேரத்திற்குப் பிற்பாடு, மற்றவர்களைக்காட்டிலும் தைரியமான பேதுருவும், யோவானும், ஆண்டவருக்கு என்ன சம்பவிக்கப்போகின்றது என்று பார்க்கத்தக்கதாக [R3179 : page 119] ஜனக்கூட்டத்தாரோடே போனார்கள்; கிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவராக அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பேதுரு, சபித்து, கர்த்தரை மறுப்பதற்குச் சோதனைக்குள்ளானார். (மாற்கு 14:68,70,71)
அதே வேளையில் நமது கர்த்தரும் பிலாத்துவின் முன்னிலையில் சோதனைக்குள்ளானார், ஆனால் வெற்றிகரமாய் “நல்ல அறிக்கையை” சாட்சியாக விளங்கப்பண்ணினார். (1 தீமோத்தேயு 6:14) நமது கர்த்தருக்கான சோதனைகள் அடுத்தடுத்து பின்தொடர்ந்துவந்தது. அவரது சத்துருக்கள் அவர்மேல் துப்பி, அவருக்கு முட்கிரீடம் சூட்டி, அவரை வைது, “இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும்” என்று கூறினபோது, அவரால் அவர்களை வியாதியினாலோ (அ) மரணத்தினாலோ அடித்திருக்க முடியும்; ஆனால் அவரோ ‘தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல, அவர் தம்முடைய வாயைத்திறவாதிருந்தார்; அவர் ஜெயங்கொண்டு, தம்மை இழிவுப்படுத்தினவர்களுக்காக வேண்டிக்கொண்டார்.’ (ஏசாயா 53:7; லூக்கா 23:33-37)
இத்தகைய நன்றிக்கெட்ட ஜீவிகளுக்கு மீட்பராக தாம் இருக்கப்போவதில்லை என்றுகூட அவரால் முடிவெடுத்திருக்க முடியும்; ஆனால் தாம் பிதாவை வேண்டிக்கொண்டு, பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை உதவிக்காகப் பெற்றுக்கொண்டு, தம்முடைய சத்துருக்களை ஜெயங்கொண்டிருக்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தபோதிலும், அவர் இச்சோதனையை எதிர்த்து, மறுத்தார். ஏற்றக்காலங்களில் சாட்சியாய் விளங்கத்தக்கதாக, அவர் அனைவருக்குமான மீட்கும்பொருளெனத் தம்மைக் கொடுத்தார்.
நமது கர்த்தருடைய மரணமானது, சீஷர்கள் அனைவருக்கும் விசுவாசத்தின் விஷயத்தில் மாபெரும் சோதனையாய் அமைந்தது; அவர்கள் மீன்பிடிக்கிற தங்களது பழைய தொழிலுக்குத் திரும்பிடுவதற்கும் மற்றும் மனிதரைப்பிடிக்கும் பணியைப் புறக்கணிப்பதற்கும் ஏதுவாய்ச் சோதனைக்குள்ளானார்கள். (யோவான் 21:3-17)
இந்த ஒரு விசேஷித்த காலப்பகுதியில் பவுலும், மற்ற அப்போஸ்தலர்களும்கூட பின்நாட்களில் விசேஷித்த சோதனைகளைப் பெற்றுக்கொண்டவர்களானார்கள். அப்போஸ்தலர் 20:16; 21:10,11,27-36-ஆம் வசனங்களைப்பார்க்கவும்.
கடந்த காலங்களில் நிகழ்ந்த இவை அனைத்தையும் வைத்துப்பார்க்கும்போது மற்றும் 1874-ஆம் வருடத்திலிருந்து துவங்கின தற்கால அறுவடை முதல், இன்றுவரையுள்ள நம்முடைய அனுபவங்களை வைத்துப்பார்க்கும்போது, ஒவ்வொரு வசந்த/இளவேனிற் காலப்பகுதியிலும், நாம் கர்த்தருடைய ஆடுகளுக்காக விசேஷமான அக்கறைகொள்கின்றோம்; இந்த இளவேனிற் காலப்பகுதியிலும் அப்படியாகவே அக்கறைகொள்கின்றோம். சோதனைகளினுடைய தன்மை என்னவென்று, அவைகள் நம்மீது வருவதற்கு முன்பு, நம்மால் தெளிவாய் உணர்ந்துகொள்ள முடியாது; ஏனெனில் ஒருவேளை அவைகள்பற்றின அனைத்தையும் நாம் முன்கூட்டியே அறிந்துகொள்வோமானால், அவை இலேசான சோதனைகளாகவே இருக்கும். ஆகையால் விழித்திருங்கள் மற்றும் எப்போதும் ஜெபம்பண்ணுங்கள்; ஏனெனில் ஆயத்தமாய் இருப்பது மாத்திரமே ஒரே பாதுகாப்பான வழியாகும்; காரணம் உங்கள் எதிராளியான பிசாசானவன் எவனை விழுங்கலாம் என்று வகைதேடிக் கொண்டிருக்கின்றான். அவன் உங்கள் பெலவீனங்களை அறிவான் மற்றும் அதைப் பயன்படுத்துவதற்கு ஆயத்தமாய்க் காணப்படுகின்றான். நாம் ஜெயங்கொள்வதற்கு, நம் அனைவருக்கும் நம் இருதயங்களில் ஆவியின் கிருபைகளும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யும் கர்த்தருடைய கிருபையும் அவசியமாய் உள்ளது. “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு, விழித்திருந்து, ஜெபம் பண்ணுங்கள்!”
“என் ஆத்துமாவே, விழித்திரு,
பத்தாயிரம் சத்துருக்கள் எழுந்துள்ளனரே;
பரிசினின்று உன்னை திசைதிருப்ப
பாவத்தின் சேனைகள் பலமாய்ச் சூழ்ந்து நிற்கின்றதே.”
***
“அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.” (2 தீமோத்தேயு 3:12)
“வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?” (மத்தேயு 10:25)
“இயேசு பிலாத்துவுக்குப் பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது;” இது அவரது சரீரத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினர்கள் விஷயத்திலும் உண்மையாய் இருக்கின்றது. (யோவான் 19:11)
“ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.” (மத்தேயு 10:36)
“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்லுவார்கள்;” “சந்தோஷப்பட்டு, களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாய் இருக்கும்.” (மத்தேயு 5:11,12)
“இந்த உலகத்தின் தேவனானவன்… கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கின்றான்.”… “அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.”