R1898 (page 273)
“நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா?” (1 கொரிந்தியர் 10:21,22)
எச்சரிப்பான இந்த வார்த்தைகளானது, “கொரிந்து பட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கு” மாத்திரமாகப் பேசப்படாமல், “கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும்” என்று பேசப்பட்டுள்ளது. (1 கொரிந்தியர் 1:2) யுகம் முடிவுவரையிலுமான சுவிசேஷ சபையினுடைய, தகுதியாகிக்கொண்டிருக்கிற அங்கத்தினர்கள் அனைவருக்கும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது.
தேவனுக்கு இருதயத்தில் உண்மையாயும், நேர்மையாயும் காணப்படுகின்றவர்கள், இத்தகையதொரு எச்சரிப்பைக் குறித்து விநோதமாய் எண்ணி, பவுலை நோக்கி: “பவுலே, பவுலே, பேய்களினுடைய உடைமைகளைத் தொடுவதற்கோ (அ) ருசித்துப்பார்ப்பதற்கோ (அ) கையாளுவதற்கோ நாங்கள் எவ்விதமான விருப்பமும் கொண்டிராமலிருக்க, ஏன் இப்படியானதொரு ஆலோசனையை எங்களுக்கு வழங்குகின்றீர்?” என்று கூறியிருக்கலாம். பவுல் கொடுத்துள்ளதான ஆலோசனையானது, கர்த்தருக்கான நமது நேர்மையின் விஷயத்தில் கொஞ்சம் அவருக்கு நம்பிக்கையின்மை ஏற்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஆனால் பவுலோ: “தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்” என்று பதிலளிக்கின்றார். எச்சரிப்பானது இங்கு நலம் தருகின்ற ஒன்றாய் இருக்கின்றது; அதென்னவெனில்: நமக்கான சோதனைகளும், பரீட்சைகளும் இன்னும் நிறைவடைந்துவிடவில்லை; கர்த்தருடைய பாத்திரமானது நம்முன் வைக்கப்பட்டிருக்கையில், பிசாசு, ஒளியின் தூதனுடைய வேஷத்தில், மிகவும் சூழ்ச்சிகரமாக/தந்திரமாய் தனது பாத்திரத்தையும், நம்முன் வைக்கின்றான்; மேலும் கர்த்தர் தம்முடைய போஜனபந்தியை நம்முன் வைத்திருக்கையில், பிசாசும் தனது போஜனப்பந்தியை நம்முன் வைக்கின்றான்.
கர்த்தருடைய பாத்திரம் எது? அதைக் குறித்துக் கர்த்தர் குறிப்பிட்டுள்ளவைகளை நினைவில் கொண்டுவாருங்கள் “பிதா எனக்குக்கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ?” மேலும் அதன் கசப்பான அடிமண்டிகள் பானம்பண்ணப்பட வேண்டியிருந்தபோது, அவர் பண்ணின ஜெபத்தைக் கவனியுங்கள்.
“என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது;” “என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது.” அது மரணம்வரையிலான பலியின் பாத்திரமாக இருக்கின்றது. அது ஜீவனை மாத்திரம் பலி செலுத்துதலாகக் காணப்படாமல், நற்கீர்த்தியையும், மனுஷீகத்திற்கு அருமையான அனைத்தையும் பலிசெலுத்துதலாகக் காணப்பட்டது. ஜீவனானது, நிந்தனைகள், உபத்திரவங்கள் மற்றும் விசுவாசம், பொறுமைக்கான உச்சக்கட்டமான பரீட்சைகள் மத்தியில் பலிசெலுத்தப்பட்டது. தம்முடைய சீஷர்களுடனான கடைசி இராப்போஜனத்தின்போது, இயேசு அடையாளமான பாத்திரத்தை எடுத்து, “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என்றார். (மத்தேயு 26:27,28) இதே பாத்திரத்தையே அப்போஸ்தலன், “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.” என்று குறிப்பிடும்போது குறிப்பிட்டுள்ளார். (1 கொரிந்தியர் 10:16)
இப்படியாகக் கிறிஸ்துவின் சரீரமானது, தலையானவருடன் அதே பாத்திரத்தில் – பலியின், அவமானத்தின் மற்றும் நிந்தனையின் பாத்திரத்தில் பங்குகொள்வதற்கு அழைக்கப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்.” கர்த்தருடைய பாத்திரத்தில் உண்மையாய் இதுவரையிலும் பங்குகொண்டுள்ளவன் பாக்கியவானாய்க் காணப்பட்டு, “உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது” என்று கூறமுடிகிறவனாய் இருப்பான்.
கர்த்தருடைய பாத்திரம் என்பது என்ன என்று நாம் பார்த்துள்ளோம்; இப்பொழுது பேய்களின் பாத்திரம் என்பது என்ன? இதுவும்கூடப் பலியின் பாத்திரமாகவே காணப்படுகின்றது; இதில் பானம்பண்ணுகிறவர்கள் தற்கால ஜீவியத்தினுடைய தங்களது உண்மையான சந்தோஷங்களையும், எதிர்க்கால ஜீவியம் பற்றியதான தங்களது நம்பிக்கைகளையும் பலி செலுத்திவிடுபவர்களாக/தியாகம் பண்ணுபவர்களாகக் காணப்படுவார்கள். எனினும் இவைகள் சாத்தானுடைய பாத்திரத்தின் அடிமண்டிகளாகவே காணப்படுகின்றது; இவைகள் மேற்புறத்தில் காணப்படுவதில்லை. பாத்திரத்தினுடைய பானத்தின் மேற்புறமானது பூமிக்குரிய நற்பேறுகளுக்கான, பெருமைக்கான, சுயமேன்மை அடைதலுக்கான, மற்றவர்கள் மத்தியிலான கனத்திற்கான நம்பிக்கையூட்டுதல்களினால் பளப்பளவென்று காணப்படுகின்றது மற்றும் இந்த நம்பிக்கைகளை [R1899 : page 273] அடையப்பெறுவதற்கென நேரம், தாலந்து மற்றும் செல்வாக்குகள் பலியாக்கப்படுகின்றன; இது கசப்பான மற்றும் ஏமாற்றமான முடிவில் முடிவடைகின்றது.
இது உண்மையில் மயக்க வைக்கும் பாத்திரமாக, ஏமாற்றுகிறதும் வஞ்சிக்கிறதுமான பாத்திரமாக, இறுதியில் நித்திய மரணத்திற்கு வழிநடத்தும் அளவுக்குப் பயங்கரமான ஆற்றலுடையதான பாத்திரமாகக் காணப்படுகின்றது. “(விசுவாசமற்ற உலகத்தார்) அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று சொல்லுகிறேன்; நீங்கள் (விசுவாசிகள், கிறிஸ்தவர்கள்) பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை . ‘நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாய் இருக்கக்கூடாதே’ என்று அப்போஸ்தலன் நன்றாய்க் கூறியிருக்கின்றார். (1 கொரிந்தியர் 10:20,21) வேறுவார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் நாம் உலகத்தின் ஆவியிலும், சுயநலத்தின், பேராசையின், பெருமையின் ஆவியிலும் பங்குகொண்டு, இந்த இழிவான இலட்சியங்களுக்காக நம்முடைய ஜீவியங்களைப் பலிசெலுத்துபவர்களாகவும், அதேவேளையில் சுயநலமற்றதும், தாழ்மையானதும், சுயத்தை வெறுக்கிறதுமான கிறிஸ்துவின் ஆவியிலும் பங்குகொண்டவர்களாகவும், நம்மை தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே வாங்கினவருக்கு ஊழியம் புரிவதில் பூமிக்குரிய இலட்சியங்களைப் பலியாக்குவதில்/தியாகம் செய்வதில் விருப்பமுள்ளவர்களாகவும் இருத்தல் முடியாது. நாம் இரண்டு ஆவியிலும் பங்குகொண்டவர்களாய் இருத்தல் முடியாது; ஏனெனில் இந்த இரண்டு ஆவியும், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாய்க் காணப்படுகின்றது. “தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய [R1899 : page 274] உங்களாலே கூடாது.” “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்.” “இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாய் இருக்கிறான்;” “அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாம் என்று நினையாதிருப்பானாக.” (யாக்கோபு 1:8; 1:7)
இந்த எச்சரிப்பானது, உலகத்திற்கு வழங்கப்படாமல், கர்த்தருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுவதாக, ஏற்கெனவே வாக்குறுதி அளித்துள்ளவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளபடியால், இப்படிப்பட்டவர்கள் இப்பொழுது பேய்களுடைய பாத்திரத்தில் பங்கெடுத்தல் என்பது, இவர்கள் கர்த்தருடைய பாத்திரத்தினின்று விலகிப்போவதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். மேலும் கர்த்தருடைய பாத்திரத்திலிருந்து கொஞ்சமும் மற்றும் பேய்களுடைய பாத்திரத்திலிருந்து கொஞ்சமும் என்று, அதாவது இரண்டிலும் கொஞ்சம் பானம்பண்ணலாம் என்று தன் மனதில் முடிவுபண்ணுமளவுக்கு மதியீனமாய் ஒருவன் காணப்படுவானானால் அதாவது கர்த்தருடைய ஆவியிலும், உலகம் மற்றும் பேய்களின் ஆவிகளிலும், இன்னுமாக கர்த்தருடைய உபதேசங்களிலும், பேய்களினுடைய உபதேசங்களிலும் பங்குகொண்டிருப்பதற்கு ஒருவன் மதியீனமாய்த் தன் மனதில் முடிவுபண்ணினவனாய் இருப்பானானால், அவன் தன் உடன்படிக்கையை மனப்பூர்வமாய் அசட்டைப்பண்ணுகிறவனாயும், கிருபையின் ஆவியை அசட்டைப் பண்ணுகிறவனாயும் இருப்பான்.
“கர்த்தருடைய போஜனபந்தி” என்பது என்னவென்று இப்பொழுது நாம் பார்க்கலாம். அது திரளான அளவிலான தெய்வீகச் சத்தியங்கள் திரளாய்ப்பரப்பப்பட்டுள்ள பந்தியாகும் – ஜீவ அப்பம், ஏற்றக்கால சத்தியங்கள், தேன்கூட்டில் தேன், உச்சிதமான பால் மற்றும் திராட்சரசம் மற்றும் பளிங்கைப்போல் தெளிவான ஜீவத் தண்ணீர் வைக்கப்பட்டுள்ள பந்தியாகும். (யோவான் 6:32-35; மத்தேயு 24:45; சங்கீதம் 19:10; ஏசாயா 55:1; வெளிப்படுத்தல் 21:6; 22:1). நீதியின்மேல் பசிதாகமுள்ள அனைவருக்காகவும் அது பரப்பிவைக்கப்பட்டுள்ளது மற்றும் அதினிடத்திற்கு வருபவர்கள் பாக்கியவான்களாய் இருப்பார்கள்; ஏனெனில் அவர்கள் திருப்தி அடைவார்கள்; அவர்கள் திரளாய்ப் போஷிக்கப்பட்டு, மிகுதியாய்த் திருப்திப்படுத்தப் பட்டிருப்பார்கள் மற்றும் அவர்களது ஆத்துமாக்கள் கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். (ஏசாயா 55:1,2; மத்தேயு 5:6; சங்கீதம் 22:26)
கர்த்தருடைய இந்தப் போஜனபந்தியானது, அவரது பரிசுத்தவான்களுக்காக, அவரது சபைக்காக, சுவிசேஷயுகத்தினுடைய ஆரம்பம் முதற்கொண்டு பரப்பிவைக்கப்பட்டுள்ளது; அந்தப் போஜனபந்தியில் எப்போதும், ஏற்றக்கால சத்தியங்கள் காணப்பட்டது; மற்றும் கர்த்தருடைய ஜனங்களில் சிலர், பரிமாறி வழங்குவதற்கென நியமிக்கப்பட்டிருந்தனர். உதாரணத்திற்கு யுகத்தினுடைய ஆரம்பத்தில் அப்போஸ்தலர்கள் பரிமாறி வழங்கினார்கள்; இவர்கள் கர்த்தருடைய ஜனங்களுக்கு முன்பாக ஏற்றக்கால சத்தியங்களை வைத்தது மாத்திரமல்லாமல், எதிர்க்காலத்திற்கெனச் சபைக்கு உணவைச் சேமித்தும் வைத்தார்கள். (2 பேதுரு 1:15,19) இவர்களது ஊழியமானது முழுச் சபைக்கும், இன்றைய நாள்வரையிலும் விலையேறப்பெற்றதாய் இருந்துள்ளது. மேலும் யுகம் முழுவதிலும் அர்ப்பணிப்புமிக்க தேவமனிதர்கள், கர்த்தருடைய ஜனங்களை, அவரது போஜனபந்திக்கு அழைத்து, அந்தப் பந்தியிலுள்ள திரளானவைகளை அவர்களுக்கு வழங்கினார்கள்; மற்றும் பசியாய் இருந்தவர்கள் போஷிக்கப்பட்டனர் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
ஆனால் இப்பொழுதோ முடிவு, அதாவது யுகத்தினுடைய அறுவடைப் பகுதி வந்துள்ளது; அதாவது வருடத்தினுடைய செழிப்பான காலப்பகுதி வந்துள்ளது; இக்காலத்திலேயே தீர்க்கத்தரிசனம் மற்றும் வாக்குத்தத்தம் எனும் மொக்குகள் வளர்ந்து, தங்கள் பொன்னான கனியைக் கொணர்ந்து கொண்டிருக்கின்றன மற்றும் கர்த்தருடைய போஜனபந்தியானது, அதன் திரளானவைகளால் தத்தளிக்கின்றது. இது மாத்திரமல்லாமல் இப்பொழுது பிரசன்னமாகியுள்ள அறுவடையின் கர்த்தர், தமது வாக்குத்தத்தத்தின்படி வந்து, தம்முடைய ஜனங்களுக்குப் பரிமாறிக்கொண்டிருக்கின்றார். (லூக்கா 12:37) முற்காலங்களில் இல்லாத அளவுக்குத் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் மற்றும் நோக்கங்களுடைய ஐசுவரியங்களும், கொழுமையும், முழுமையாய் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முன்பு ஒருபோதும் அறிந்திராத அளவுக்குத் தெய்வ காரியங்கள் முழு நிறைவுடன் சபைக்கு வெளிப்பட்டுள்ளது. இரட்சிப்பின் திட்டமானது, நமது பிரகாசமான நம்பிக்கைகளை/எதிர்ப்பார்ப்புகளை மிஞ்சும் அளவுக்கு, அப்படியானதொரு வசீகரத்திலும், முறைப்படியும் நம்முன் வைக்கப்பட்டுள்ளது; அது எல்லா விதத்திலும் முரண்பாடில்லாமலும், இசைவாயுமுள்ளதான ஒரு திட்டமாகும்; அது – திட்டமிடுகின்றவரும், நடந்தேற்றுகின்றவரும், வெளிப்படுத்துகின்றவருமான மாபெரியவரால், மிக மேன்மையான கொள்கைகளின் அடிப்படையிலும், துல்லியமான கணக்குடனும் மற்றும் ஒழுங்குடனும் யுகங்களினூடே இரகசியமாய்த் தீட்டப்பட்டுள்ளது; அதன் முழுமையிலும், அதன் சீரான அமைப்பிலும், அழகிலும் அது மிகவும் மகிமையானதாய் இருப்பதினால், திருப்தியடைந்த ஆத்துமாவானது, அதனோடு எதையாகிலும் கூடச்சேர்ப்பது என்பது அதன் சிறப்பினைக் கெடுப்பதாகவே இருக்குமென உணர்ந்து, சந்தோஷத்தோடே பின்வருமாறு கூறுவார்கள்: “இது கர்த்தருடைய செய்கையாகும் மற்றும் இதைக் கர்த்தர் வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் இது நம்முடைய கண்களுக்குப் பிரம்மிப்பாயுள்ளது;” தம்முடைய ஞானத்தையும், அன்பையும், கிருபையையும் குறித்து, “கர்த்தர் கூறியுள்ளவைகளைக்காட்டிலும், இன்னும் அதிகமாய்ச் சொல்லுவதற்குண்டோ?” தேவனுடைய புத்திரர்களும், சுதந்தரர்களுமானவர்களிடத்தில் தம்முடைய கிருபையின் ஐசுவரியங்களையும், தம்முடைய அன்புடன் கூடிய இரக்கத்தின் ஐசுவரியங்களையும் சித்தரிப்பதற்கும் மற்றும் பிரகடனம் பண்ணுவதற்கும் கர்த்தர் மனித பிரதிநிதிகளைப் பயன்படுத்தியிருந்தபோதிலும், இன்னுமாகப் போஜனபந்தியிலுள்ள அனைவரும் அவரோடுகூட, பந்தியிலுள்ளவர்களுக்கு ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்கென உடன்வேலையாட்களாகக் காணப்படுவதற்குக் கர்த்தர் அனுமதித்திருந்தபோதிலும், திட்டத்தின் விஷயத்திலும், அதை நிறைவேற்றும் விஷயத்திலும் தேவனுக்கே அனைத்து மகிமைகளும் சேருகின்றதாய் இருக்கும் மற்றும் திட்டத்தினை வெளிப்படுத்தின விஷயத்திற்காகவும், அதை நமது இருதயங்கள் ஏற்றுக்கொள்வதற்கும், அதை நமது கண்கள் காண்பதற்கும், அதை நமது காதுகள் கேட்பதற்கும் மற்றும் அதை நமது நாவுகள் அறிக்கைப்பண்ணுவதற்குமென அபிஷேகித்த விஷயத்திற்காகவும், நமது கர்த்தரும், தலையுமானவருக்கே ஸ்தோத்திரம் உரித்தாகுகின்றதாயிருக்கும். உன்னதத்திலுள்ள தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் என்றென்றும், சதாகாலங்களுக்கும் மகிமை உண்டாவதாக! முழுப்பூமியும் அவரது மகிமையினால் நிரம்பியிருப்பதாக!
தேவனை அறிந்துகொள்வது என்பது ஜீவனும், சமாதானமுமாய்க் காணப்படுவதினால், தேவனை அறிந்துகொள்வதற்கும் மற்றும் நீதியின் மீதும் பசிதாகம் உள்ளவர்கள் அனைவருக்கும் திருப்திகரமான பங்கினால் திரளாய் நிறைந்து பரப்பப்பட்ட நிலையில் கர்த்தருடைய போஜனபந்தி காணப்படுகையில், தேவனுடைய ஜனங்களை வரவேற்கும் வேறு அநேக போஜனபந்திகளும்கூடப் பரப்பப்பட்டுள்ளன. போப்மார்க்கமானது, அதன் போஜனபந்தியைக் கொண்டுள்ளது மற்றும் அதில் கொஞ்சம் அரைகுறை சத்தியங்களும், பூசைபலி, நித்தியமான சித்திரவதை, உத்தரிக்கும் ஸ்தலம் மற்றும் மரியாளின் சிலை வணக்கம், பரிசுத்தவான்களாகப் பாவிக்கப்பட்டுள்ள சிலரின் சிலை வணக்கம், குருமார்களின் காதுகளில் பாவங்களை அறிக்கையிடுதல், குருக்களின் திட்டங்களுக்கு உடனடியாய்க் கீழ்ப்படிதல் முதலான தீட்டான உபதேசங்கள் திரளாயும் காணப்படுகின்றன. புராட்டஸ்டண்டினர்களும் தங்களின் பல்வேறு விதமான போஜனபந்தியைப் பெற்றிருக்கின்றனர்; அதில் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக மீட்பு, ஞானஸ்நானம், தேவனிடத்திலும், அவரால் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ள வார்த்தைகளிலும் விசுவாசம் முதலான சில சத்தியங்கள் காணப்படுகின்றன; ஆனால், அந்தோ பரிதாபம்! அவர்கள் பெற்றிருப்பதான அரைகுறையான சத்தியங்கள் அனைத்தும் அசுசிப்பண்ணப்பட்டுள்ளவைகளாக இருக்கின்றன; ஏனெனில் “(அவர்களது) போஜன பீடங்களெல்லாம் வாந்தியினாலும், அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை” என்று தீர்க்கத்தரிசி கூறுகின்றார் (மற்றும் அவரது வார்த்தைகள் உண்மையாகவும் உள்ளது; ஏசாயா 28:8). இந்தப் போஜன பீடங்களானது, புறக்கணிக்கப்பட்டக் காரியங்களினால் – சிந்தித்துப்பார்க்காமலேயே திருப்தியடைந்த நிலையில் முற்காலங்களில் புசித்து விழுங்கப்பட்ட பழைய தப்பறைகளினால் நிரம்பியுள்ளது. ஆனால் இந்த நியாயத்தீர்ப்பின் காலங்களினுடைய (எபிரேயர் 12:26,27) அசைக்கப்படுதல்களானது, ஜனங்களை நலிவடையச் செய்கின்றது; மற்றும் இதனால் அவர்களால் நித்திய சித்திரவதை மற்றும் மனிதர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே, மனுக்குலத்தில் பெரும்பாலானவர்கள் நித்தியமான வேதனைக்கே முன்குறிக்கப்பட்டிருக்கின்றனர் போன்றதான பயங்கரமான உபதேசங்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும் வெளிப்படையாய் மறுப்புத் தெரிவிப்பதற்கும், புறக்கணிப்பதற்கும் தைரியம் இல்லாமையின் காரணமாக, அவர்களது போஜனபீடங்களானது, புறக்கணிக்கப்பட்ட, நலம்கெடுக்கும் காரியங்களினால் அசுசிப்பண்ணப்பட்டுள்ளது; அவர்களது போஜனபீடங்கள் அனைத்தும் அசுத்தமாயிருக்கிறது.
இந்தத் தற்காலத்தின் “அசைவுகளானது”, இந்தப் போஜனபீடங்களை அசுசிப்பண்ணத்தக்கதாக, குமட்டலை/வெறுப்புணர்வை உண்டுப்பண்ணுவதற்கு முன்னதாக, அருமையான கர்த்தருடைய ஜனங்களில் அநேகர், அங்கு உட்காருவதற்கும், நல்ல உணவை அதிலிருந்து தெரிந்தெடுப்பதற்கும், தேவனுடைய வார்த்தையாகிய ஊற்றிலிருந்ததான திரளான ஜீவத்தண்ணீரைக் கொண்டு, தப்பறையான விஷயங்களை முறிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்பொழுது அறுவடைக் காலம் வந்துள்ளப்படியாலும், பிரிக்கும் வேலை நடைப்பெறுகின்றபடியாலும் (மத்தேயு 13:30), தேவனுடைய உண்மையான ஜனங்கள் அனைவரும் இந்தப் போஜனபீடங்களிலிருந்து, கர்த்தர் இப்பொழுது பரிமாறிக் கொண்டிருக்கின்றதான, திரளான அறுவடையுள்ள போஜனபீடத்தினிடத்திற்கு அழைக்கப்படுகின்றனர். கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்ததின் காரணமாகவும், அசுத்தமான போஜனபீடங்களைப் [R1899 : page 275] புறக்கணித்ததாலும், அநேக சத்துருக்கள் உருவாகியுள்ளனர்; விசுவாச காதுகளை உடையவர்களும், கர்த்தருடைய போஜனபீடத்திற்கு வரும்படியான அழைப்பிற்குக் கீழ்ப்படிபவர்களும் பாக்கியவான்களாய் இருக்கின்றனர். இதைக் குறித்தே சங்கீதக்காரன் “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் (ஆசீர்வாதத்தின்) பாத்திரம் நிரம்பி வழிகிறது” என்று பாடியுள்ளார். (சங்கீதம் 23:5)
பாபிலோனுடைய அசுத்தமான போஜனபீடங்களைத் தவிர, இன்னும் வேறே போஜனபீடங்கள் உள்ளன. அவைகள் பேய்களினுடைய போஜனபீடங்களாக இருக்கின்றன; இந்தப் போஜனபீடங்களில், சகலவிதமான சூழ்ச்சிகரமானதும், வெளிப்படையானதுமான தீமையான உபதேசங்கள் காணப்படுகின்றன; இது தங்களை விலைக்கொடுத்து வாங்கின கர்த்தரையும்கூட மறுதலித்து மற்றும் வேதவாக்கியங்களைப் புரட்டி, வேதவாக்கியங்களுக்குத் தவறாய் அர்த்தம் கொடுத்து, அவைகளின் போதனைகளை நாசப்படுத்தி, மனிதத் தத்துவங்களை உட்புகுத்தும், மதத்திற்கு எதிரான நரகலான கொள்கைவாதிகளை உள்ளே கொண்டுவருகின்றது. “சாத்தானுடைய தலைச்சிறந்த படைப்பாகிய” போப்மார்க்கம்போன்றதான இந்தப் போஜனபீடங்களில் பிரம்ம ஞானம்) தியோசோபி/theosophy, (ஆவியுலகக் கோட்பாடு) ஸ்பிரிட்டிசம் (spiritism), கிறிஸ்டியன் சைன்ஸ்/Christian science, (பரிணாமக் கொள்கை) எவலூஷன்/Evolution மற்றும் தேவனால் அனுப்பி வைக்கப்பட்டவரின் பலியினாலான மீட்புபற்றின உபதேசத்தை மறுதலிக்கிறதும், வேறு ஏதாகிலும் வழியின்மூலம் எப்படி நித்திய ஜீவனை அடைந்திடலாம் என்று மனிதனுக்குப் போதிக்க முற்படுகின்றதுமான மனித தத்துவத்தின் பல்வேறு பாகங்கள் அனைத்தும் அடங்குகின்றன. இவைகள் அனைத்தும்தான் பேய்களினுடைய போஜனபீடங்களாக இருக்கின்றன மற்றும் இவைகளுக்கு எதிராகவே, “நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும், பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாய் இருக்கக்கூடாதே” என்று கூறி அப்போஸ்தலன் நம்மை எச்சரிக்கின்றார்.
அந்தோ பரிதாபம்! சிலர் கர்த்தருடைய போஜனபந்திக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டு, அதில் புசித்து, கர்த்தர் நல்லவர் என்று கண்டுகொண்ட பிற்பாடு, கர்த்தருடைய போஜனபந்தியிலிருந்து, பேய்களுடைய போஜனபந்தியினிடத்திற்குத் திரும்புகின்றனர், அதுவும் தாங்கள் இப்படி விரும்பும்போது போனாலும், பின்னர் வந்து, மீண்டுமாக தாங்கள் கர்த்தருடைய போஜனபந்தியினிடத்திற்கு வரவேற்கப்படுவார்கள் என்றும், இப்படியாய்ப் போய்வந்து காணப்பட்டு, இரண்டிலும் பங்குகொண்டிருக்கலாம் என்றுமுள்ள எண்ணங்களில் காணப்படுகின்றனர். இவர்கள் கூறுவது என்னவெனில்… ஓ! ஆம் நாங்கள் குறுகின மனமுடையவர்களும், பலவீனமுடையவர்களுமல்ல; ஒரு பந்தியில் காணப்படுபவைகளைத்தவிர, மற்றவைகள் எதையும் ருசித்துப் பார்க்கமாட்டோம் என்று சொல்லுவதற்கு நாங்கள் பயமுடையவர்கள் அல்ல. கர்த்தருடைய போஜனபந்தி என்பது உண்மையில் மிகவும் நல்லதுதான்; எனினும் மற்றப் போஜனபந்திகளிலும்கூட நல்லவைகள் காணப்படுகின்றன மற்றும் நாங்கள் அனைத்தையும் ருசித்துப்பார்ப்போம்; ஆம், “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்வோம்;” நலமானவை எந்தப் போஜனபீடத்தில் காணப்பட்டாலும் பரவாயில்லை, அதை நாங்கள் பிடித்துக்கொள்வோம்.
அந்தோ பரிதாபம்! இப்படிப்பட்ட மனப்பான்மையே அநேகரிடம் காணப்படுகின்றது மற்றும் இப்படிப்பட்டவர்கள், “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என்பதை மறந்துபோனவர்களாகக் காணப்படுகின்றனர்; (நீதிமொழிகள் 16:18) மேலும் இப்படிப்பட்டவர்களின் வழியிலுள்ள தவற்றினை, இவர்களுக்கு உணர்த்துவதற்கென உண்மையுள்ள சகோதரர்கள் ஏறெடுக்கும் பிரயாசங்கள் விருதாவாய்ப்போகையில், இவர்கள் கர்த்தருடைய போஜனபந்தியில் பரிமாறப்பட்டுள்ளதான உணவின்மீதான விருப்பமின்மையை வெளிப்படுத்துகிறதற்கு ஆரம்பிப்பார்கள் மற்றும் கர்த்தருடைய போஜன பந்தியினிடமிருந்து இவர்கள் முழுவதும் சீக்கிரத்தில் விலகிபோய்விடுவார்கள் என்பதும் அதிகமதிகமாய் உறுதியாகிறது. பேய்களுடைய போஜனபந்தியிலுள்ள பாதகமான, விஷத்தன்மையுள்ள பதார்த்தங்களானது, சீக்கரத்தில் சுவையைக் கெடுத்து, ஆவிக்குரிய ஆரோக்கியத்தை வலுவற்றதாக்கி, நலமல்லாதவைகள்மீது விநோதமான விருப்பங்களை உண்டுபண்ணிவிடுகின்றது; மேலும் ஆவிக்குரியதில் நோயுற்ற ஆத்துமாவானது, கர்த்தருடைய போஜனபீடத்தில் புசிப்பதற்கான மனநிலையினைக் கொண்டிருப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் புசிக்க வேண்டுமெனக் கர்த்தரும் விரும்புவதில்லை; ஏனெனில் கர்த்தருடைய போஜனபந்தியினிடத்திலிருந்து இப்படிப்பட்டவர்கள் விலகுகையில், இவர்கள் கிருபையின் ஆவியை இகழ்ந்தவர்களாக இருக்கின்றனர் மற்றும் இப்படியான போக்கைக்கொண்டிருக்கையில், இவர்கள் முற்றிலுமாய் விலகிப்போய்விட வேண்டும்; ஏனெனில் “நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும், பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாய் இருக்கக்கூடாதே.” “இரண்டு எஜமான்களை உங்களால் திருப்திபண்ணக்கூடாது.”
கர்த்தருடைய போஜனபந்தியினிடத்திலிருந்து, பேய்களினுடைய போஜன பந்தியினிடத்திற்குப் போகும் காரியத்தினை வெளிப்படையாய்ச் செய்கிறவன், தெய்வீக ஏற்பாட்டினுடைய தாராளத்தில், தான் திருப்திகொள்ளவில்லை என்றும், தேவனுடைய மாபெரும் எதிராளியாகிய பிசாசின்மேல் தனக்கு இன்னும் கொஞ்சம் மதிப்புக் காணப்படுகின்றது என்றும் சொல்லுகிறவனாய் இருப்பான். [R1900 : page 275] இப்படியாக அவன் அநீதியுடன் ஐக்கியம் வைத்திருப்பதன் மூலமாக தேவனுக்கு, தான் உண்மையற்றிருப்பதை நிரூபிப்பவனாய் இருப்பான். “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் எனும் வேதவாக்கியத்தினை மேற்கோளிடுகையில், இதோடுகூடத் தொடர்ந்து இடம்பெறும் வார்த்தைகளான, “பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்” என்பதை மறந்துபோய்விடுகிறான். (1 தெசலோனிக்கேயர் 5:19-22) நாம் செய்வதற்கு அநேகம் காரியங்கள் உள்ளன மற்றும் கர்த்தருடைய போஜனபந்தியிலுள்ள உணவினுடைய திரளான பலன்கள் நலமானவை என்று சோதித்து அறிந்துகொள்வதும், அவற்றை நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கும், ஆரோக்கியத்திற்குமெனச் சொந்தமாக்கிக்கொள்வதும், அவற்றை மற்றவர்களுக்கும் பரிமாறுவதும்தான் நாம் செய்ய வேண்டியவையாகும். கர்த்தர் நல்லவர் என்று நாம் ருசித்துப்பார்க்கின்றோம் மற்றும் அவரது உபதேசங்கள் ஆரோக்கியமானவைகள் என்று சோதித்து அறிந்துகொள்கின்றோம். ஆனால் பேய்களின் உபதேசங்களை விட்டுவிலகுவதைத் தவிர, மற்றப்படி அதை வைத்துக்கொண்டு செய்கிறதற்கு எதுவுமில்லை மற்றும் அந்த உபதேசங்களினால் வசப்படுத்தப்பட்டுக் கெட்டுப்போனவர்களில் உதாரணமாய் விளங்கின அவ்வுபதேசங்களின் மோசமான விளைவுகளைக் குறித்து நாம் மற்றவர்களுக்கு எச்சரிப்பு வழங்கமுடியும்.
எந்தத் தேவனுடைய பிள்ளையும், கர்த்தருடைய போஜனபந்தியில் புசித்தப் பிற்பாடு, பார்வையிலேயே/உடனடியாகக் கர்த்தருடைய பந்தியிலிருந்து வேறுபட்டதான பேய்களினுடைய பந்தியினை அடையாளங்கண்டு கூறமுடிகின்றவனாகக் காணப்பட வேண்டும். எந்த ஓர் அமைப்பினுடைய அஸ்திபாரமும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்படலாம் மற்றும் உண்மையான அஸ்திபாரமென ஒன்று மாத்திரமே உள்ளது, அது கிறிஸ்துவாகிய ஈடுபலியாகும். “வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும்கூடாது.” (1 கொரிந்தியர் 3:11; 15:3) சத்தியத்தினால் திருப்தியடைந்துள்ளதான எந்த ஓர் ஆன்மாவும், உடனடியாகத் தப்பறையின் அவலட்சணத்தைக் கவனித்துக்கொள்ள வேண்டும். இசை கவிஞனின் செவியானது, இசையின் இனிமையான ஸ்வரங்களுக்குப் பழக்கப்பட்டிருப்பதின் காரணமாக, உடனடியாக முரண்பாடான ஸ்வரங்களை அடையாளம் கண்டுகொள்வதுபோன்று அல்லது கலைஞனின் கண்களானது நுட்பமான வடிவங்களுக்கும், நிறங்களுக்கும், ஒழுங்கிற்கும் பழக்கப்பட்டிருப்பதினால், வேலைப்பாட்டிலுள்ள குறைப்பாட்டினை உடனடியாக அடையாளங்கண்டு கொள்வதுபோன்று, தெய்வீகத் திட்டத்தினுடைய அருமையான இசைவினாலும், பூரணமான மற்றும் நுட்பமான ஒழுங்கினாலும், முறைமையினாலும் பயிற்றுவிக்கப்பட்டதான மனமும், இருதயமும்கூட, உடனடியாகத் தப்பறையினுடைய முரண்பாட்டினையும் அடையாளங்கண்டுகொள்கின்றது மற்றும் வேறெதிலும் திருப்திகொள்கிறதில்லை மற்றும் வேறெதிலும் மிகுதியாய் மகிழ்வுறுவதுமில்லை; இந்தத் “தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தினை” பெற்றிருக்கின்றதான ஆன்மாவானது, தப்பறையினுடைய தாக்குதல்களையும், வெட்கம்கெட்ட தாக்குதல்களையும் அல்லது சூழ்ச்சிகளையும் சமாளித்து, நிலைநிற்பதற்கென்று, வேறெந்த ஆயத்தங்களையும் செய்ய வேண்டியதில்லை. “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்;” கர்த்தருக்குள் இளைப்பாறி, திருப்தியடையுங்கள்; இந்தப் பொல்லாத நாளினுடைய கொள்ளைநோய்கள் அனைத்திற்கும் எதிரான பாதுகாப்பாய்க் காணப்படும் ஆவிக்குரிய ஆரோக்கியமும், வலிமையும் வேண்டுமெனில், கர்த்தருடைய போஜனபந்தியில் மாத்திரம் போஷிக்கிறவர்களாய் இருங்கள்.
கர்த்தருடைய போஜனபந்தியிலிருந்து புசித்தப் பிற்பாடும், அதில் திருப்தியடை யாதவர்களுக்குத் தீர்க்கத்தரிசியின் மூலமான கர்த்தருடைய வார்த்தைகள் பொருந்துகின்றதாய் இருக்கின்றது: “வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினார்கள். மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரயேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.” (ஏசாயா 1:1-6) மாடும், கழுதையும் எங்குப் போய்ப் போஷிக்கப்பட்டாலும், மீண்டும், மீண்டுமாக தன் எஜமானிடத்திற்கும், முன்னணையினிடத்திற்கும் திரும்புவதற்கு அறிந்திருக்கின்றது. இப்படியாக மாடும், கழுதையும் காணப்படுவதின் வாயிலாக அவைகள், கர்த்தருடைய போஜனபந்தியை விட்டுவிட்டுப் பேய்களுடைய போஜனபந்தியில் வைக்கப்பட்டுள்ளதான உணவுகளைச் சோதித்துப்பார்ப்பதற்கென அல்லது நலமானவைகள் அசுத்தமானவைகளுடன் தொடர்புக்குள் வந்தபடியால், அந்த நலமானவைகள் அசுத்தமானதாகிப்போய், அவைகள் வைக்கப்பட்டிருக்கின்றதான அசுத்தமான போஜனபந்தியினிடத்திற்குத் திரும்புகின்றதான சில கர்த்தருடைய ஜனங்களைக் காட்டிலும் பகுத்தறிவு உடையவைகளாக இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
இப்படிப்பட்டவர்கள் தம்முடைய போஜனபந்தியினிடத்திற்குத் திரும்புவதற்குக் கர்த்தர் அனுமதிப்பதில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; “நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும், பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாய் இருக்கக்கூடாதே.” ஏன்? ஏனெனில் சம்பூரணமாய்ப் போஷிக்கப்படுகின்றதும், கர்த்தர்தாமே இடைக்கட்டிக்கொண்டு பரிமாறிக் கொண்டிருக்கின்றதான கர்த்தருடைய போஜனபந்தியினிடத்திலிருந்து விலகிப்போவதன் மூலமாக, இப்படிப்பட்டவர்கள் கர்த்தருக்குத் தாங்கள் உண்மையற்றிருப்பதை [R1900 : page 276] வெளிப்படுத்துகின்றவர்களாகவும், அவரது கிருபையின் ஐசுவரியங்களை இழிவாகப் பார்ப்பவர்களாகவும், கிருபையின் ஆவியை நிந்திப்பவர்களாகவும் காணப்படுகின்றனர். ஒருமுறை பிரகாசிக்கப்பட்டப் பிற்பாடு, இப்படியாய்த் துணிகரமாய்ச் செய்கின்றவர்கள், கலகக்காரர்களாகிய இஸ்ரயேலரால் அடையாளப்படுத்தப்படுகின்றதான பாவமுள்ள வகுப்பாராய் இருக்கின்றனர். இவர்களைத் தீர்க்கத்தரிசி குறிப்பாய்ப் பின்வருமாறு விவரிக்கின்றார்: “ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரைவிட்டு இஸ்ரயேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப் போனார்கள். தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.” (ஏசாயா 1:4,5,6)
வீணான தத்துவ ஞானங்கள், மனித பாரம்பரியங்கள் மற்றும் கற்பனைகள் அனைத்தையும் தவிர்த்துவிட்டு, தெய்வீகத் திட்டத்தினை மாத்திரமாக நாம் ஆராய்வது என நமது ஆராய்ச்சியினை எல்லைக்குட்படுத்துவதினால் நாம் குறுகிய மனமுடையவர்களல்ல; ஏனெனில் தெய்வீகத் திட்டத்தினுடைய எல்லையானது மீட்பைப்போன்று பரந்ததாகவும், அதன் ஞானம் மிகவும் துல்லியமானதாகவும், அதன் கோட்பாடு மிகவும் ஆழமானதாகவும் காணப்படுகின்றது. வேதவாக்கியங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதான தெய்வீகத் திட்டத்தினை கற்றுக்கொண்டுள்ளபடியால், அதன் ஆவியினால் ஊக்குவிக்கப்படுகிறவர்கள் யாவரும் அதன் காரியங்களை, முழுத்தெய்வீக வெளிப்படுத்தல்களினிடத்துக்குப் பொருத்திப்பார்க்கும் சிலாக்கியமு டையவர்களாய் இருக்கின்றனர் மற்றும் அதன் உதவியினாலும், தேவனிடத்தினாலான ஜெபம் மற்றும் ஐக்கியத்தினுடைய பரிசுத்தமான தாக்கத்தினாலும், ஆவிக்குரிய காரியங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றனர் மற்றும் இதன் காரணமாக நாம் இசைக்கவிஞனின் செவிகளுடன் பரலோக இசையின், இனிமையான ஸ்வரங்களையும், அதன் துல்லியமான தாளத்தையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது மற்றும் கலைஞனுக்குரிய கண்களுடன் தெய்வீக ஞானம் மற்றும் கிருபையின் அருமையான மற்றும் நேர்த்தியான வண்ணத்தோற்றத்தினைக் காணமுடிகின்றது.
தேவனால் ஏற்றக்காலங்களில் வெளிப்படுத்தப்பட்டதும், “உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருந்ததும்,” பரிசுத்தவான்களுக்கு எப்போதும் பிரியமானவைகளாகக் காணப்படுவதுமான, “தேவனுடைய ஆழங்களுக்கு” நேரான கர்த்தருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றுவதினால், ஓ! நாம் குறுகின மனமுடையவர்களாகக் காணப்படுவதில்லை, இல்லை! நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? பேய்களும், அவனுடைய போஜனபந்திகள் அனைத்தும் அழிக்கப்படுகையில், பரிசுத்தவான்களும், தேவதூதர்களும் குறுகின மனமுடையவர்களாகக் காணப்படுவார்களா? பொல்லாங்கான அனைத்தையும் நாம் விட்டுவிலகுவோமாக மற்றும் தேவனில் பிரியம்கொள்வோமாக மற்றும் அவரது திரளான கிருபைகளினாலான ஆறுதலில் திருப்திக்கொள்வோமாக. நமது இருதயங்களினுடைய வார்த்தைகளானது எப்போதும் பின்வருமாறு காணப்படுவதாக:
“இளைப்பாறுதலிலிருந்து விலகிப்போய், இனியும் நான் சுற்றித் திரியேன்,
பேரின்பத்திற்காக நான் விருதாவாய்த் தேடித்திரியேன்;
என் ஆத்துமா இல்லத்தில் திருப்திக்கொண்டுள்ளது;
கர்த்தரே என் பங்காய் இருக்கின்றார்.”