R1988 (page 128)
லூக்கா 23:33-46
இந்நாட்களில் தங்களைத் தாங்களாகவே உயர்வாய் எண்ணிக்கொள்ளும் விமர்சகர்களுடைய கோட்பாடுகளும், பரிணாமத்தின் வாயிலாக இரட்சிப்பு என்ற கோட்பாடுகளை ஆதரிப்பவர்களும் பல்வேறு திசைகளில் முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்க, “கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்” என்ற ஆதார வசனத்தின் அடிப்படையிலான நம்முடைய இந்தப் பாடம் போன்றதான பாடங்கள் மீது “உலகளாவிய பாடங்கள்” (International Lessons) அடிக்கடி வேதத்தின் மீது ஆர்வமுள்ள மாணவர்களின் கவனத்தைத் திருப்புகின்றதைப் பார்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.
மேற்கொள்ளப்பட்டவைகளிலேயே மிகப் பெரியதான நடவடிக்கையானது, அதாவது பாவம் எனும் மாபெரும் விசாரணைக்காரனிடமிருந்து (50 பில்லியனுக்கும் மேலான) அடிமைகளை வாங்கிக்கொண்டதான நடவடிக்கையானது, இது நடந்த நாட்களிலும் உணர்ந்து கொள்ளப்படவில்லை மற்றும் இதுவரையிலும்கூட உணர்ந்து கொள்ளப்படவில்லை; வெகு சொற்பமானவர்களாகிய “சிறுமந்தையினராலேயே” உணர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட நாட்களில் காணப்பட்டதான ஜனங்கள் என்ன செய்தார்களோ, அதுபோலவே இன்று வரையிலும் மனுக்குலத்தின் ஜனங்கள் செய்துகொண்டு வருகின்றனர். சிலர் நோக்கிப்பார்த்தனர், கொஞ்சம் அனுதாபம் கொண்டனர், ஆனால் எதையும் உணர்ந்துகொள்ளவில்லை; வேறு சிலர் ஏளனம் செய்து, தூஷித்தனர்; சிலர் களிக்கண்டனர் மற்றும் சிலர் அவரது வஸ்திரத்தின் மீது கேலியாகச் சூதாடினார்கள். அவர்கள் அவர் யார் என்று அறியவில்லை; அவர்களுக்காக அவர் நிறைவேற்றியுள்ளதான வேலையினுடைய முக்கியத்துவத்தை அவர்கள் அறியவில்லை. அவரது ஜீவியம் குறித்து ஏதோ கொஞ்சம், அதுவும் மிகவும் அரைகுறையாகவே அறிந்திருந்தார்கள், ஆனால் அவரது மரணத்தினுடைய முக்கியத்துவம் குறித்தோ, அவர்களால் எதுவும் காண முடியவில்லை. இப்பிரபஞ்சத்தினுடைய தேவனானவன் அவர்களுடைய மனங்களைக் குருடாக்கியுள்ளபடியால் அவர்களால் காண முடியவில்லை என்று கூறி, அவர்களது நிலைமையைக் குறித்துத் தேவ ஏவுதலின் பேரில், அப்போஸ்தலன் அவர்களது கவனத்திற்குக் கொண்டுவந்தார். அன்று முதல் இன்று வரையிலுங்கூடத் தவறான கொள்கைகள், தவறான எதிர்பார்ப்புகள், தவறான மன விவாதங்கள் மற்றும் கர்த்தருக்கான உண்மையான அர்ப்பணம் இல்லாமை என்பவைகள் அநேகருடைய கண்களை, அதாவது உலகத்தாருடையது மாத்திரமில்லாமல், இன்னுமாக கிறிஸ்துவின் சீஷர்கள் என்று தங்களைக் குறித்து அறிக்கைப்பண்ணிக் கொள்கின்றவர்களுடைய கண்களையும் கூடக் குருடாக்கியுள்ளது.
ஆனால் கல்வாரியில் “நிறைவேற்றப்பட்டதான” ஈடுபலியினுடைய உண்மையான மதிப்பை/முக்கியத்துவத்தைக் காண்கின்றவர்கள் அனைவருக்கும் மற்றும் அந்த மாபெரும் நடவடிக்கையின் விளைவாக இறுதியில் கடந்து வரப்போகின்றதான அருமையான பலன்களைக் காணத்தக்கதாக, கண்கள் திறக்கப்பெற்ற அனைவருக்கும் இவர்கள் அனைவருக்கும் “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். அநேக தீர்க்கத்தரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 13:16,17) என்பதான போதகருடைய வார்த்தைகளானது, அழுத்தத்துடன் பொருந்துகின்றதாய் இருக்கிறது. தெய்வீகத் திட்டம் முழுவதையும் புரியும்படி தெளிவாக்கின இந்த “மாபெரும் வெளிச்சத்தை” பார்க்கிறவர்களுக்கு, நன்றியுடன் இருப்பதற்கு மாபெரும் காரணங்கள் இருக்கின்றது; ஏனெனில் இப்படியானவர்கள் இருளினின்று, ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டுவரப்பட்டவர்களாய் இருக்கின்றனர். சிலுவையினுடைய வெளிச்சத்தில் பார்க்கையில், அவரது மாபெரும் பலியில் உண்மையாய் விசுவாசம் கொண்டிருக்கின்றதான அவரது சபையாகிய நமக்கு வந்துள்ளதான ஆசீர்வாதங்களுக்காக மாத்திரம் அல்லாமல், விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமான மீட்பு பற்றின இந்தக் கிருபையான செய்தியானது “ஏற்ற வேளையில்” அனைவருக்கும் தெரியப்படுத்தப்படும் என்றும், செவிடான காதுகள் அனைத்துமே திறக்கும் என்றுமுள்ள வாக்குத்தத்தத்திற்காகவும் நாம் தேவனுக்கு நன்றி ஏறெடுக்கின்றோம். அனைவருக்கு மாக ஒரே தரம் கொடுக்கப்பட்டதான மகா பாவநிவாரண பலியினுடைய உண்மையான முக்கியத்துவத்தையும், அதன் மதிப்பையும்/நன்மையையும் ஏற்ற வேளையில் அனைவரும் காண்பார்கள்; ஏனெனில் ஆசீர்வாதமான ஆயிர வருட நாளைக் குறித்துப் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது; “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்” (ஏசாயா 35:5); “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” (ஏசாயா 11:9)
அழுதுக்கொண்டிருந்த சீஷர்களைத் தவிர, மனம் வருந்தின கள்வன் மாத்திரமே, கர்த்தருடைய நீதியைக் குறித்து உணர்ந்துகொண்டவனாக இக்காட்சியில் காணப்படுகின்றான். அப்போதிருந்தது போலவே, அனைத்துக் காலப்பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது; பிரதான ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களில் அநேகர் உணர்ந்துகொள்ளுதலோ அல்லது அனுதாபமோ இல்லாமல், சத்தியத்தைச் சிலுவையில் அறைந்துபோட்டிருக்கின்றனர்; ஆதரவு கொடுப்பவர்களாகக் காணப்படும் (ஒரே) கூட்டத்தாரிலும், மிகவும் சீரழிந்து போனவர்களிலிருந்து வந்த சிலரே பெரும்பாலும் காணப்படுகின்றனர்.
ஒரு வேளை மனித இருதயங்களானது, இந்த மாபெரும் நடவடிக்கைக் குறித்து உணர்ந்துகொள்ளாமலும், அனுதாபம் கொள்ளாமலும் காணப்பட்டாலும்கூட, இயற்கையானது அப்படியாகக் காணப்படவில்லை; இந்த அருமையானதொரு காட்சிக்குச் சாட்சியாகக் காணப்பட்ட இயற்கையானவள், தனது முகத்தினை இருளினால் முக்காடிட்டுக் கொண்டாள் மற்றும் நடுங்கிப் போனாள். பரிசுத்த ஸ்தலத்திற்கும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் நடுவில் காணப்பட்டதான திரைச்சீலை கிழிந்ததானது, மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்வதற்கான வழி திறக்கப்பட்டுள்ளதை அடையாளமாய்க் கற்பிக்கின்றதாய் இருக்கின்றது. இதற்கு அப்போஸ்தலன் இவ்விதமாக எபிரெயர் 10:19-22 வரையிலான வசனங்களில் அர்த்தம் கொடுக்கின்றார்.
இறுதி வரையிலும் உண்மையாயும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் நமது கர்த்தர் இயேசு காணப்பட்டு, தம்முடைய ஆவியை, மரிக்கும் தருவாயில் பரம பிதாவிடம் ஒப்படைத்தார்; பிதாவின் வாக்குத்தத்தங்களானது, அவரது ஜீவியம் முழுவதிலும் அவரைத் தாங்கினது/ஆதரித்தது மற்றும் அவைகள் இப்பொழுது, அவரது மரணத் தருவாயில் அவருக்குப் பெலனாகவும் இருந்தது. எனினும் மற்றொரு பதிவில் பார்க்கும்போது, கடைசி தருணத்தில் பரம பிதா, நமது கர்த்தருக்கான இந்த ஆதரவை, அவரிடமிருந்து எடுத்துவிட்டு, அநேகமாக அவரை ஒரு கணம் தனிமையில் விட்டுவிட்டதாக நாம் பார்க்கின்றோம்; மேலும் இந்த அவருடைய கடைசி அனுபவமானது, அவருக்கு முற்றும் முழுமையான தனிமையாகவும், பிதாவிடமிருந்து முற்றிலுமான பிரிவாகவும் காணப்பட்டது. [R1989 : page 128] இது பிதாவினுடைய வெறுப்பின் காரணமாய் அல்ல என்பதை நாம் அறிவோம்; ஏனெனில் தாம் அனைத்துக் காரியங்களிலும் மற்றும் எப்போதும் பிதாவைப் பிரியப்படுத்தியுள்ளார் என்ற வாக்குறுதியை இயேசு பெற்றிருந்தார் மற்றும் இதை அப்போஸ்தலனாகிய பேதுரு அப்போஸ்தலர் 17:31-ஆம் வசனத்தில் குறிப்பிட்டுள்ளதுபோன்று, மரணத்திலிருந்து இயேசுவை உயிர்த்தெழுப்பினதின் மூலம் பிதா பின்னர் உறுதிப்படுத்தினார். இயேசு பாவியினுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டபடியால், அந்த அனுபவம் அவசியமாய் இருந்தது. பாவியாகிய ஆதாம் மற்றும் அவருக்குள் நாம் அனைவரும் ஜீவனுக்கான நமது உரிமையை மாத்திரமல்லாமல், இன்னுமாகப் பிதாவுடனான ஐக்கியத்தையும் இழந்து போயுள்ளோம்; மேலும் நமக்கான மீட்கும்பொருளாக வேண்டுமானால், நமது மீட்பர், நமக்காக மரிப்பது மாத்திரம் அல்லாமல் இன்னுமாக அவர் பாவியைப்போன்று மரிக்க வேண்டியது அவசியமாகின்றது. அதாவது மரணத்தீர்ப்பின் கீழாகக் காணப்படும் குற்றவாளி போன்று மரிக்க வேண்டியது அவசியமாய் உள்ளது; இன்னுமாக பாவி பிதாவினுடைய தயவு மற்றும் ஐக்கியத்திலிருந்து முற்றிலுமாய்த் துண்டிக்கப்பட்டுக் காணப்படும் அனுபவத்தையும் அவர் ருசிக்க வேண்டும். நமது அருமை மீட்பர் கடந்து சென்ற அனுபவங்களிலேயே, இந்தக் கடைசி அனுபவமே மிகவும் கடுமையான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். இத்தருணத்தில்தான், அவரது ஆன்மாவானது வியாகுலத்தோடே, “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னை கைவிட்டீர்?” என்று கதறினது.