R3560 (page 152)
யோவான் 19:17-30
“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்” 1 கொரிந்தியர் 15:3
சரித்திரத்திலேயே மிகவும் அருமையான நிகழ்வினுடைய காட்சியாகத் திகழ்வது கல்வாரியாகும் மற்றும் இந்த ஆதாரத்திலேயே, மனுக்குலத்தின் மீது காணப்பட்டதான சாபத்தை அப்புறப்படுத்தத்தக்கதாக தெய்வீக அன்பும், நீதியும் செயல்பட்டன. கல்வாரி எவ்விடம் என்பது துல்லியமாய்த் தெரியாது, எனினும் இலத்தீன் வார்த்தையாகிய கல்வாரியானது, “கபால/மண்டைஓடு ஸ்தலம்” எனும் அர்த்தம் கொடுக்கும், கொல்கொதா எனும் எபிரெய வார்த்தைக்கு நிகரானதாய்க் காணப்படுவதினால், ஒரு துப்புக்கிடைக்கின்றதாய் இருக்கின்றது. முன்பாகத்தில் இரண்டு குகைகளுடனான சிறு குன்று ஒன்று உள்ளது மற்றும் அதனை தொலைவில் நின்று காண்கையில், மண்டை ஓட்டினுடைய தோற்றத்தைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது மற்றும் அதன் குகைகளும், அங்கு வளர்ந்து காணப்படுகின்றதான புதர்க்காடுகளும் கண்குழிகளினுடைய தோற்றத்தைக் கொடுக்கின்றதாக இருக்கின்றது. இந்த இடம்தான் சிலுவையில் அறையப்படுதல் நிகழ்ந்த இடமாகக் கருதப்படுகின்றது. பாறைகள் மற்றும் குன்றுகள் ஒத்திருக்கும் வடிவங்களின் அடிப்படையில், அவைகளை விவரிக்கும் வழக்கமானது இன்னமும் காணப்படவே செய்கின்றது. யாஸ்மைட்டில் (Yosemite) போர் வீரருடைய கலிகை மாட மலையும், மணப்பெண்ணினுடைய திரை நீர்வீழ்ச்சியும், ராக்கி மலைகளில் (Rocky Mountains) சொற்பொழிவு மேடைப் (Pulpit Rock) பாறையும் மற்றும் தேனீருக்கான மூடியும், கைப்பிடியுமுள்ள பாத்திரம் (Tea kettle Rock) பாறையும் மற்றும் வெள்ளை மலைகளில் (White Mountain) ஆந்தை தலையும் மற்றும் நீல மலைத்தொடரில் (Blue Ridge) சீசருடைய தலையும் நம்முடைய உலகத்தில் காணப்படுகின்றது.
சிலுவையில் அறையப்படுதல் என்பது மிகவும் கொடூரமான மற்றும் சித்திரவதைகள் கொண்ட மரண முறைமையாகும்; எனினும் கல்வாரியினிடத்திற்கும், அதற்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வுகளினிடத்திற்கும் நம் மனங்களை நாம் திருப்புகையில், நமக்காக நமது மீட்பர் அனுபவித்திட்டதான மரணத்தினுடைய சித்திரவதையானது, நமக்கு மிகுந்த அனுதாபத்தின் உணர்வுகளையும், துக்கத்தையும் கொடுக்கிறதாக இல்லை. இயேசுவோடுகூட இரண்டுபேர் சிலுவையில் அறையப்பட்டிருந்தனர்; அநேகர் இதுபோன்றதான ஒரு மரணத்தை இயேசுவுக்கு முன்பும், பின்பும் அடைந்திருக்கின்றார்கள் மற்றும் அவர் அளவுக்கும் (அ) நீண்டகாலமான சித்திரவதைகள், கொஞ்சம் கொஞ்சமாக கழுமரத்தில் கட்டப்பட்டு எரிக்கப்படுதல், சித்திரவதைப் படுத்திக் காயப்படுத்தல் முதலானவைகள் மூலம் அதிகமான அளவுக்கும் சிலர் பாடுபட்டுள்ளனர் என்று நாம் எண்ணுகின்றோம். நமது அருமை இரட்சகருக்கான அனுபவங்களானது, “நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்த” அவருக்கு தகுதியற்றது மற்றும் ஏற்றதல்ல என்பது மாத்திரமல்லாமல், “அவருடைய தழும்புகளால் நாம் குணமாகத்தக்கதாக,” நமக்கான தண்டனையைச் சந்திப்பது தொடர்புடையதாகவே அவருடைய அனுபவங்களானது காணப்பட்டது என்பதுமான கருத்தே நம்முடைய இருதயங்களைப் பாதித்தவைகளாக இருக்கின்றன (ஏசாயா 53:5).
நம் மீதான தண்டனை தீர்ப்பிலிருந்து, சாபத்திலிருந்து நாம் விடுவிக்கப்பட்டு, மீண்டுமாக தெய்வீகத் தயவினிடத்திற்குச் சீர்ப்பொருந்தப்படத்தக்கதாக, நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கத்தக்கதாக, அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் நம்முடைய பாவங்களுக்காகக் கிறிஸ்து மரித்திருக்கின்றார் என்ற கருத்தே – இந்தக் கருத்தே நம்முடைய இருதயங்களை அன்புடன்கூடிய அனுதாபங்கொள்ளச் செய்கின்றது. “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் (மரணத்தீர்ப்பின் கீழ்க்காணப்பட்டார்கள்) மரித்தார்கள் என்றும், பிழைத்திருக்கிறவர்களாகிய நாம் இனித் நமக்கென்று பிழைத்திராமல், நமக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்” (2 கொரிந்தியர் 5:14,15).
“காலாக் காலங்களாக நிகழ்ந்துவந்த மரணங்கள் அனைத்திலும், மேலோங்கி நிற்கும்
கிறிஸ்துவின் சிலுவைதனிலே நான் மேன்மைப்பாராட்டுகின்றேனே; இதன் உயர் கருத்துகளிலேயே,
புனித கதையின் அனைத்து விளக்கமும் மையம் கொண்டுள்ளதே.”
எந்தளவுக்கு நமது கர்த்தருடைய மரணத்திற்கான அவசியத்தையும், மனுக்குலத்தினுடைய பாவங்களுக்கான பாவநிவாரணமாகிய அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தினுடைய முக்கியத்துவத்தையும் நம்முடைய நாட்களிலுள்ள “இவ்வுலகத்தின் ஞானிகளும்” மற்றும் வேதசாஸ்திரிகளும், இறையியல் கல்லூரிகளினுடைய பேராசிரியர்களும் மறுக்கின்றவர்களாய் இருக்கின்றார்களோ, அவ்வளவுக்குத் தேவனுடைய கிருபையினால், தெய்வீகத் திட்டத்தைக்காணத்தக்கதாக தங்கள் கண்கள் திறக்கப்பெற்றவர்கள், மனிதனுக்கும், தேவனுக்குமான ஒப்புரவாகுதலுக்கான அடித்தளமாகக்காணப்படும் சிலுவையினுடைய முக்கியத்துவத்திற்கு அதிகமதிகமாய் முக்கியத்துவம் கொடுத்திட வேண்டும். சுவிசேஷத்தினுடைய இந்த அடித்தளமான அம்சத்தினுடைய விஷயத்திலிருந்து நம்முடைய நாட்களில் திரளானவர்கள் விலகி போயுள்ளனர். [R3561 : page 152] இயேசு நல்ல, சிறந்த, அருமையான மற்றும் ஞானமான போதகராக சித்தரிக்கப்படுகின்றார்; இவருடைய வார்த்தைகளானது, பாடங்களுக்கும், வியாக்கியானத்திற்கும் ஏற்றதாய் இருக்கின்றது; ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் வாயிலாகவே குரங்கு நிலையிலிருந்து, தேவனுடைய சாயலுக்கு வந்தான் என்று கூறப்படும்போது, உலகத்தினுடைய பாவம் என்கிற காரியமானது மறுக்கப்படுகின்றதாய் இருக்கின்றது; மேலும் பாவநிவாரணம் கொடுக்கத்தக்கதாக, உலகத்திற்குப் பாவம் இல்லையெனில், இயேசு உலகத்தினுடைய பாவங்களுக்கான பாவநிவாரணமானார் என்பதான வேதவாக்கியங்களினுடைய பதிவானது தப்பறையானதாக இருக்கும்; இந்தக் கண்ணோட்டமே கிறிஸ்தவ மண்டலம் முழுவதும் வேகமாய்ப் பரவி, உண்மை கிறிஸ்தவ விசுவாசம் அனைத்தையும் அழித்துப்போடுகின்றதாய் இருக்கின்றது.
மற்ற விசுவாசங்களானது, உண்மை கிறிஸ்தவ விசுவாசமல்ல; பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்டதான விசுவாசமல்ல; தேவனுக்குப் பிரியமாய் இருக்கும் விசுவாசமல்ல; நீதிமானாக்கப்படுதலுக்கும், பாவங்களினுடைய மன்னிப்புக்கும் அடிப்படையாய்க் காணப்படும் விசுவாசமல்ல; [R3561 : page 153] கர்த்தரினால் ஏற்றக்காலத்தில் மதிக்கப்படுகின்ற, கனப்படுத்தப்படுகின்ற, ஆசீர்வதிக்கப்படுகின்ற மற்றும் பலனளிக்கப்படுகின்றதான விசுவாசமல்ல. இக்காரியத்தினை நாம் அழுத்தமும், தெளிவாயும் விளக்கமுடியாது; சிலுவையினுடைய இரத்தத்தின் மூலம், அதாவது இயேசுவினுடைய மரணத்தின் மூலம் பாவநிவாரணம் எனும் உபதேசத்தைக் கொண்டிராதவர்கள், வேதவாக்கியங்களின் அடிப்படையில் கிறிஸ்தவர்கள் அல்ல என்று சொல்வதானது, சிலரைக் கோபமூட்டுவதாக இருக்கும். இறுதியில் இந்த உபதேசமானது, யார் கர்த்தருடையவர்கள், யார் அவருடையவர்கள் அல்ல என்பதைத் தெளிவாய்க் காண்பித்துத்தருகின்றதான உரைக்கல்லாக விளங்கும். விசுவாசத்தினுடைய இந்த மையத்தை இழந்துபோகின்றவர்கள், தற்காலத்தில் கிறிஸ்துவுக்குள்ளான அனைத்தையும் இழந்துபோகின்றவர்களாய் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் முகமதியர்கள் (அ) யூதர்கள் (அ) பிராமணர்கள் (அ) (சீன தத்துவ ஞானிகள்) கன்ப்யூசியன்கள் (confucions) போன்று கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் ஆவார்கள். இயேசு ஜீவித்தார் என்றும், அவர் மரித்தார் என்றும், அவர் மாபெரும் போதகராய் இருந்தார் என்றும், யூதர்களும், முகமதியர்களும், நாத்திகர்களும் நம்புகின்றனர்; ஆனால் இப்படியான நம்பிக்கையானது, அவர்களைக் கிறிஸ்தவர்களாக்குவதுமில்லை மற்றும் நீதிமானாக்குகிறதுமில்லை. அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுவதுபோன்று நாம், “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே” நீதிமானாக்கப்பட்டிருக்கின்றோம் (ரோமர் 3:26).
பிலாத்துவின் அரண்மணையிலிருந்து, கல்வாரிக்கு நேரான பாதையானது, துக்கமும், கவலையும் நிறைந்த பாதையாய்க் காணப்பட்டது. இம்மாதிரியான சூழ்நிலைகள் அனைத்திலும் நியாயமாய்ச் செய்ய முடிகிற ஒரே ஒரு காரியத்தை, பிலாத்தும் செய்திருந்தபோதிலும், அவருக்கு மன அமைதியில்லாமல் இருந்தது. பிரதான ஆசாரியர்களும், வேதசாஸ்திரிகளும் வெற்றிப்பெற்றனர் மற்றும் தங்களுடைய கைதி, பலியிடுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப்போன்று கொண்டு செல்லப்படுவதை அவர்கள் கண்டபோது, அவர்கள் ஆனந்தமாய் வெற்றியைக் கொண்டாடியிருக்க வேண்டுமென்று நாம் எண்ணக்கூடும். அவர்களிடம் மனச்சாட்சி காணப்பட்டது என்றும், அவர்களால் பெரியளவு மகிழ்ச்சிக்கொள்ள முடியவில்லை என்றும் நாம் யூகிக்கின்றோம்; “இவருடைய இரத்தப்பழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக” என்று அவர்கள் பிலாத்துவிடம் சொன்னாலும், அவர்கள் தாங்கள் யாருக்கு எதிராக வெற்றிப்பெற்றிருந்தார்களோ, அந்த அருமையான நபர் குறித்த ஒருவித மர்மமான அச்சத்தினை உணர்ந்தார்கள். அவர்களது இருதயங்கள் கலங்கவே இல்லை என்று எண்ணுவது என்பது, அவர்களை எல்லாவிதத்திலும் களங்கப்படுத்துவதாக இருக்கும். வழியில் இயேசுவுக்குச் சீஷர்கள் அல்லாத உருக்கமுள்ள ஸ்திரீகளானவர்கள், அவர் கடந்து போகையில் அழுதார்கள். இயேசுவை வாரினால் அடிப்பித்து, அவரைக் குற்றஞ்சாட்டுகிறவர்கள் முன் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி, பின் பிலாத்து இயேசுவைக் குற்றஞ்சாட்டினவர்களின் மனதை இளகப் பண்ணிடுவதற்கு முற்பட்டார். அப்போது பிலாத்துக் கூறினதாவது: “(Ecce Homo) எக்கிஹோமோ அதாவது இதோ இந்த மனுஷன்! சிலுவையில் – அறைந்துபோடும்படிக்கு என்னிடத்தில் நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் இந்த மனிதனைப் பாருங்கள்; உங்கள் தேசத்திலேயே வேறெந்த மனிதனுக்கும் இவரைப் போன்றதான முகமும், ரூபமும் இல்லை; இவர் ஒரு பொல்லாத மனிதர் என்று உங்களில் ஒருவர்கூட, ஒரு கணம்கூட எண்ணுவதில்லை; இவருடைய முகமானது, இவர் பொல்லாதவர் இல்லை என்பதைக் காட்டுகின்றது. உங்களுக்கு இன்னமும் திருப்தியாகவில்லையா? இவர் அடைந்துள்ள அடிகளானது, இவருக்கு எதிரான உங்களது கோபத்தினைத் தணித்திடாதா? நான் இவரைப் போகவிடுவதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்களா?” ஆனால் இந்த முறையீடுகள் யாவும் பயனற்றதாயின. இயேசுவின் சத்துருக்களானவர்கள் கசப்பினாலும், பொறாமையினாலும் மிகவும் நிரம்பிக் காணப்பட்டிருந்தபடியால், இயேசுவின் தோற்றமானது, அவர்களைக் கவரமுடியாதளவுக்கு அவர்கள் குருடர்களாகக் காணப்பட்டனர். எனினும் இவைகள் இயேசு கடந்து செல்கையில், காணப்பட்ட ஸ்திரீகளின் மனதை இளகச் செய்தது. அந்தச் சூழ்நிலையில் காணப்பட்ட அனைவரிலும், இயேசுவே மிகவும் அமைதியுடன் காணப்பட்டார், ஏனெனில் பிதாவினுடைய சித்தத்தையே தாம் செய்து வருகின்றார் என்ற உறுதியை அவர் பெற்றிருந்தார். தெய்வீகத் தயவுள்ளது எனும் வார்த்தையினை இயேசுவுக்குக் கொடுப்பதற்கும் மற்றும் இப்படியாக அவரைப் பெலப்படுத்துவதற்கும் என்று தேவதூதன் கெத்செமனேயில் இயேசுவுக்குத் தோன்றினது முதல், மேற்கூறின அந்த உறுதியானது அவரை அமைதியாகவும், உணர்ச்சிவசப்படாதவராகவும் காணப்படச்செய்தது. பிதாவினுடைய திட்டத்தை அரங்கேற்றப்போகிறதும், பிதாவின் சித்தமாகக் காணப்படப்போகின்றதுமான எதையும் சகிப்பதற்கு, இயேசு ஆயத்தமாய்க் காணப்பட்டார்; இயேசு தேவனுடைய ஞானத்தின் மீதும், அன்பின் மீதும், நீதியின் மீதும், வல்லமையின் மீதும் அப்பேர்பட்டதான ஒரு நம்பிக்கையினைக் கொண்டிருந்தார். சந்தேகத்திற்கிடமின்றி முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிற்பாடு அந்தப் பட்டணத்தின் மீது வந்ததான பயங்கரமான உபத்திரவத்தை மனதில் கொண்டவராக, அழுது கொண்டிருந்த ஸ்திரீகளை நோக்கி: “நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காக அழுங்கள்” என்று இயேசு கூறினார்.
இயேசு தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, நான்கு ரோம போர்ச் சேவகர்களுடன் ஊர்வலத்தின் முன்னாகச் சென்றார்; இவர்களுக்குப் பின்னாக இரண்டு கள்வர்கள் வந்தார்கள்; ஒவ்வொரு கள்ளனையும் நான்கு போர்ச் சேவகர்கள் பாதுகாத்து வந்தார்கள் மற்றும் இவர்கள் அனைவரும் நூற்றுக்கு அதிபதி ஒருவருடைய தலைமையின் கீழ்க் காணப்பட்டார்கள். அந்தக் கள்வர்களைக் காட்டிலும் மிகவும் அறிவுள்ளவராகவும், மிருகத்தனம் அற்றவராகவும், சுபாவத்தில் முரட்டுத்தன மற்றவராகவும் நமது மீட்பர் காணப்பட்டப்படியால், அநேகமாக அவர்களைக் காட்டிலும் அவருக்கே பாரமான மரச் சிலுவையைச் சுமப்பதில் சிரமம் இருந்திருக்கும்; இன்னுமாகக் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரங்கள் அவர் உணவு இல்லாமல், மிகவும் மன அழுத்தம் நிறைந்த நிலையிலும் காணப்பட்டிருந்திருக்கிறார். அவரால் அவரது சிலுவையின் பாரத்தைக் கொஞ்சமும் சுமக்கமுடியவில்லை மற்றும் நூற்றுக்கு அதிபதியானவனோ, இயேசுவின் பின்னே சிலுவையைச் சுமந்துவரும்படிக்கு, சிரேனே ஊரானாகிய சீமோனைப் பலவந்தம் பண்ணினான். “இயேசுவின் பின்னே” எனும் வார்த்தைகளானது, இவர் சிலுவையைச் சுமந்துகொண்டு, ஊர்வலத்தில் இயேசுவுக்குப் பின் நடந்துவந்தார் (அ) சிலுவையின் கடைப்பாகத்தைத் தாங்கிக்கொண்டு, இயேசுவோடுகூட வந்தார் என்பதைக் குறிக்கின்றதா எனத் தெளிவாய்த் தெரியவில்லை; எப்படியாக இருப்பினும், இவர் பலவந்தம் பண்ணப்பட்டிருந்தாலும், இவர் மிகவும் மகிமையான ஒரு வாய்ப்பினைப் பெற்றிருந்திருக்கின்றார்.
இந்தப் பதிவுகளை வாசித்துள்ளதான அநேக கர்த்தருடைய அருமையான ஜனங்களானவர்கள், தங்களுக்கு இப்படியாக அந்தச் சிலுவையைச் சுமப்பதில் ஒரு பங்கு கிடைத்திருந்திருக்காதா என்று ஏங்கியிருந்திருக்கின்றனர். பேதுருவும், யாக்கோபும் மற்றும் யோவானும் மற்றும் மற்றவர்களும் எங்கே போனார்கள்? அந்தோ! மிகவும் மகிமையானதொரு ஊழியத்தைத் தாங்கள் புரிவதிலிருந்து தடைப்பண்ணப்படத்தக்கதாகவும், தங்களிடமிருந்து பிடுங்கிப்போடப்படத்தக்கதாகவும், அவர்கள் பயத்தை அனுமதித்துவிட்டனர். இவைகளைக் குறித்து நாம் எண்ணிப்பார்க்கின்றதான அதேவேளையில், நமது கர்த்தரானவர் தம்முடைய பின்னடியார்கள் அனைவரும், தம்முடைய சிலுவையைச் சுமப்பதில் பங்கடையத்தக்கதாகக் கிருபையாய் ஏற்பாடு பண்ணியுள்ளார் என்பதை நினைவுகூருவதும் ஏற்றதாய் இருக்கும். சிலுவையினுடைய அவமானங்களும், சிலுவையினுடைய பாரங்களும், இன்னும் ஓயவில்லை; கிறிஸ்துவினுடைய சிலுவையானது இன்னமும் உலகத்திலேயே காணப்படுகின்றது; அவரோடுகூட சிலுவையைச் சுமப்பதற்கும், அவருக்குப் பின் நடப்பதற்குமான சிலாக்கியம் இன்னமும் நமக்குள்ளது. இயேசுவுக்காக சொல்லர்த்தமான சிலுவையைச் சுமப்பதற்கான சிலாக்கியத்தினை அப்போஸ்தலர்கள் இழந்துபோனபோதிலும், அவர்கள் தங்கள் பயங்களினின்று மகிமையாய்க் குணமடைந்தார்கள் மற்றும் பிற்காலங்களில் அவர்கள் ஜீவித்த வருடங்கள் அனைத்திலும், அவர்கள் கிறிஸ்துவின் சிலுவையைச் சுமந்து, சிறப்பாய் ஊழியம் செய்தது குறித்த பதிவுகளை நாம் பெற்றிருக்கின்றோம்.
நாம் அதிகமாய் அன்புகூருவோமாக மற்றும் சிலுவையைச் சுமப்பதிலுள்ள நம்முடைய வைராக்கியத்தின் வாயிலாக நம்முடைய அன்பை வெளிப்படுத்துவோமாக; மற்றும் எப்போதாகிலும் இந்த வைராக்கியமானது தணிந்துபோகிறதென்றால், “சிலுவையில்லையெனில் கிரீடமில்லை” எனும் ஒப்புக்கொள்ளப்பட்டதான உண்மையினை நினைவு கூருவோமாக; “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால், அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” என்றும், “நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்’ என்றுமுள்ளதான அப்போஸ்தலருடைய வார்த்தைகளை நாம் நினைவுகூருவோமாக. எனினும் மரணத்தின் காரணமான பயமோ அல்லது கிரீடத்திற்கு மதிப்புக் கொடுக்கும் காரியமோ, நம்மை ஆளும் நோக்கங்களாக இருந்தும் விடக்கூடாது. கர்த்தருக்கான நம்முடைய அர்ப்பணமானது, கர்த்தர் நமக்குச் செய்துள்ளவைகளைப் பற்றின உணர்ந்துகொள்ளுதலினாலும், அவரிடத்திலான நம்முடைய அன்பினாலும், அவரைப் பிரியப்படுத்தக்கூடியவைகளைச் செய்ய நாம் விரும்பி மற்றும் இவ்வாறாக நாம் பதில் அன்பைத் தெரிவிப்பதினாலுமே முக்கியமாய் உண்டானதாக இருக்க வேண்டும். சபையினுடைய தலையாகிய கர்த்தர் இயேசு நீண்டக் காலத்திற்கு முன்னதாகவே மகிமையடைந்திருந்த போதிலும், இந்த உலகத்தில் அவர் தம்முடைய சகோதரர்களென, “தம்முடைய சரீரத்தின் அங்கத்தினர்களென” அடையாளம் கண்டுகொள்ளப்படுபவர்கள் இன்னமும் காணப்படுகின்றனர் என்றும், இந்தச் சிறியவர்களில் ஒருவருக்கு நாம் செய்யும் யாதும், இந்தச் சிறியவர்கள் தங்கள் சிலுவையைச் சுமக்கும் விஷயத்தில் அவர்களுக்கு நாம் அளிக்கும் உதவிகள் எதுவாயினும், அவற்றை அவர் தமக்கே செய்ததாகவும், அவருக்கான நம்முடைய அன்பின் வெளிப்படுத்துதலாகவும் எண்ணிடுவார் என்றும் நாம் நினைவில் கொள்வோமாக.
இரண்டு கள்வர்கள் நடுவே நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டதான காரியமானது, பல்வேறு கண்ணோட்டங்களிலிருந்து பார்க்கப்படலாம். இக்காரியமானது அவருக்கு மிக ஆழமான அவமானப்படுத்தும் காரியமாக இருந்தது. தன் இருதயத்தில் தூய்மையை உயர்வாய் மதிக்கின்றதான நற்பண்புள்ள எந்த ஓர் ஆணுக்கும் (அ) பெண்ணிற்கும், இப்படியாக [R3561 : page 154] அக்கிரமக்காரர்களில், கொலைக்காரர்களில், திருடர்களில் ஒருவராக எண்ணப்பட்டுத் தவறாய்ப் புரிந்து கொள்ளப்படுகிறதானது மிகவும் வெறுப்பாய் இருக்கும். இப்படியாக மனதிலும், இருதயத்திலும் பூரணமற்ற நிலையில் காணப்படும் நமக்கே இருக்குமாயின், பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும் பூரணமற்ற உணர்ந்துகொள்ளுதலை உடையதான நமக்கே இருக்குமாயின், இவ்வுணர்வானது பூரணராகிய நமது கர்த்தருக்கு எவ்வளவு தீவிரமாய் இருந்திருக்கும். அவர் எவ்வளவாய்ப் பாவத்தை வெறுத்திருக்க வேண்டும்; அவர் எல்லாவிதத்திலும் எவ்வளவாய்ப் பாவத்தை எதிர்த்திருக்க வேண்டும்; மேலும் நாம் ஒருவேளை அவருடைய நிலைமையில் காணப்பட்டிருந்தால் நம்மால் அடைய முடிந்திருக்கிறதைக்காட்டிலும், அவர் எவ்வளவுக்கு அதிகமாய் வெட்கமடைந்திருக்க வேண்டும். தம்முடைய குமாரன் அக்கிரமக்காரர்களில் ஒருவராக எண்ணப்படுவதற்கான இந்த அனுமதி என்பது பரம பிதாவின் கண்ணோட்டத்தில், “மரணப்பரியந்தமாக, அதாவது சிலுவையின் மரணப்பரியந்தம் (குமாரன்) தம்மைத் தாழ்த்தினார்” என்று நாம் வாசிக்கிறபடியே, இந்த உச்சக்கட்ட அளவிலான குமாரனுடைய இருதயத்தின் நேர்மையை/உண்மையைத் தூதர்களுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் நிரூபித்துக் காண்பிப்பதற்காகவே ஆகும்.
இப்படியாகக் கர்த்தர் மரிப்பதற்கான தமது விருப்பத்தை மாத்திரமல்லாமல், மிகவும் இழிவான விதத்தில் மரிப்பதற்கான தமது விருப்பத்தையும், தமது முழுமையான சுயத்தைத் துறத்தலையும், தம்முடைய சொந்த சித்தத்திற்கு முழுமையாய் மரித்திருப்பதையும், பிதாவின் சித்தத்திற்குத் தம்முடைய மனமும், இருதயமும் முற்றும் முழுமையாய் உயிருடன் இருப்பதையும் நிரூபித்துக்காட்டினவரானார். இந்த அனைத்து விஷயங்களிலும் அவர் தம்முடைய பின்னடியார்களுக்கு முன்மாதிரியானார்; அப்போஸ்தலர் கூறியுள்ளதுபோன்று, “ஏற்றக்காலத்தில் தேவன் உங்களை உயர்த்தும் படிக்கு (தேவனுக்குக் கீழ்ப்படிவது என்பது, எவ்வளவாய்த் தாழ்த்தப்படுதலைக் கொண்டுவருவதாக இருப்பினும்) அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேதுரு 5:6). இரண்டு கள்வர்கள் நடுவில் கர்த்தர், சிலுவையில் அறையப்பட்டதானது, ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகருடைய கண்ணோட்டத்தில் விசேஷமாய் விரும்பப்பட்ட ஒன்றாகக் காணப்பட்டது; இப்படி அவர் இரண்டு கள்வர் மத்தியில் அறையப்பட்டதான காரியமானது, அவரை ஜனங்கள் இரத்தச் சாட்சியாக மரித்தவரெனப் பார்ப்பதைத் தடைப்பண்ணுவதாக இருக்கும் மற்றும் இது அவரை ஜனங்கள் முன்னிலையில் அவமதிப்பதாகவும், [R3562 : page 154] இழிவுப்படுத்துவதாகவும் இருக்கும் மற்றும் தேவனுக்கும், மனிதனுக்கும் சத்துருவென, குற்றவாளியென வெளிப்படையாக மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்ட (இயேசுவினுடைய) மதப்போதகருடைய பின்னடியார் என்று தன்னைக்குறித்து எவனும் அறிக்கைப் பண்ணுவதற்கு வெட்கப்பட பண்ணுவதாகவும் இருக்கும். சிலுவையில் காணப்படுகின்ற கிறிஸ்துவை யாராகிலும் மேன்மைப் பாராட்டுவார்களென எதிர்ப்பார்த்திட எப்படி முடியும்? ஆனால் எத்துணை அருமையாகத் தேவனுடைய திட்டங்களானது, அனைத்து மனித ஏற்பாடுகளையும் ஒன்றுமில்லாமலாக்கிப்போட்டு, மனிதனுடைய இருதயத்தின் பொறாமையையும், கோபத்தையும் மற்றும் பாதகத்தையும் கூடத் தேவனுக்கு மகிமையை உண்டுபண்ணத்தக்கதாகவும், அவரது திட்டத்திற்கு இசைவாகச் செயல்படத்தக்க தாகவும் பண்ணிற்று!
பிலாத்துவின் அரண்மணைக்கும், கபால ஸ்தலத்திற்கும் இடையே அதிக தொலைவு இல்லை என்றாலும், கபால ஸ்தலமானது பட்டணத்தினுடைய மதிலுக்கு வெளியே இருந்தது. அந்த இடத்திற்குச் சீக்கிரமாய் வந்து சேர்ந்தார்கள்; சிலுவைகளானது தரையில் கிடத்தப்பட்டன மற்றும் கைதிகளினுடைய வஸ்திரங்களைப் போர்வீரர்கள் உடனடியாகக் கழற்றிப்போட்டுவிட்டு, அவர்களை ஆணி அறைந்தனர்; அநேகமாக மர ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; சிலுவையில் அறைந்திட்ட பிற்பாடு சிலுவையைத் தூக்கி, அது நிற்கத்தக்கதாக ஏற்கெனவே ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த குழிக்குள் அது நிறுத்தப்பட்டது; சிலுவையில் அறையப்பட்டவருடைய பாதங்களானது, தரையிலிருந்து சுமார் இரண்டு அடிகளுக்கு மேலாகக் காணப்பட்டது. இம்மாதிரியான முறைகள் கையாளப்படுகையிலான வேதனையை, அதிலும் விசேஷமாக குழிக்குள் சிலுவை நிறுத்தப்படுகிறதான தருணத்தின் போதான வேதனையை விவரிப்பதைக் காட்டிலும், நன்கு கற்பனைசெய்து உணர்ந்துகொள்ளப்படலாம்; சிலுவையானது குலுங்குகையில், ஆடி அசைகையில், மற்றும் இவைகளோடுகூடச் சரீரத்தின் பாரப்பளு இழுக்கையில், வலியானது முரட்டுத்தனமானவர்களுக்கும், கரடுமுரடானவர்களுக்கும் இருப்பதைக் காட்டிலும் நேர்த்தியான மனமும், நரம்பு மண்டலமும் உடையவருக்கே மிகக் கடுமையானதாய்க் காணப்படுகின்றது; ஆகையால் நமது கர்த்தரோடு காணப்பட்டிருந்த இருவரைக்காட்டிலும், அவருக்கே வலி மிகக் கடுமையாய் இருந்திருக்கும். “என் கர்த்தர் இதை எனக்காகச் சகித்தார்” என்று இயேசுவின் அர்ப்பணிப்புமிக்க சீஷர்கள் கூறுவதுண்டு மற்றும் அவருக்காக நாம் எந்த நிந்தனையை (அ) அவமானத்தை (அ) வலியைச் சுமந்திருக்கின்றோம்? என்று நாம் நம்மிடமே கேட்டுக்கொள்வோமாக. இது குறித்து நினைக்கும் மாத்திரத்திலேயே, நாம் சகித்துக் கடந்து வந்துள்ளதான எந்தச் சோதனைகளையும், நாம் பெருமையாய்க் குறிப்பிடுவதற்கு நம்மை வெட்கமடையச் செய்யும் மற்றும் நமது சீஷத்துவத்தின் காரணமாக நமது பாத்திரத்தில் இடம்பெறுவதற்குத் தெய்வீக ஏற்பாடானது அனுமதிக்கின்ற அனைத்தையும் நாம் சகிக்கிறதற்கும், அனைத்திலும் பொறுமையுடன் இருக்கிறதற்கும் நம்மைத் தைரியம் கொள்ளச்செய்யும்.
இயேசுவைச் சிலுவையில் அறைந்துபோடும் விஷயத்தில், நீதிக்கு எதிராகவும், தன்னுடைய சித்தத்திற்கு/விருப்பத்திற்கு எதிராகவும், தன்னை வற்புறுத்தியவர்களான பொறாமையும், தீய எண்ணமும் கொண்டிருந்ததான யூத அதிகாரிகளுக்குச் சரிக்குச் சரியாகச் செய்திடுவதற்கான தருணம் பிலாத்துவுக்கு வந்தது. எந்தக் குற்றத்திற்காக மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டதோ, அதை எழுதி, குற்றவாளியினுடைய தலைக்கு மேலாகத் தொங்கவிட்டுத் தெரிவிப்பது வழக்கமாய் இருந்தது. இயேசுவின் விஷயத்திலோ, பிலாத்து “யூதருடைய இராஜாவாகிய, நசரேயன் இயேசு” என்று எழுதிபோட்டார்; மாற்கு இதை “யூதருடைய இராஜா” என்றும், லூக்கா இதை “இவர் யூதருடைய இராஜா” என்றும் பதிவு செய்துள்ளனர். இந்த மூன்றுமே சரியே, ஏனெனில் இவ்வார்த்தைகளானது எபிரெயத்திலும், கிரேக்கிலும் மற்றும் இலத்தீனிலும் எழுதப்பட்டிருந்தது.
பிரதான ஆசாரியன் முன்னிலையில் நடந்திட்டதான இயேசுவுக்கான விசாரணையில், அவர் தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறினதால் தேவதூஷணம் கூறினவராக, மரணத்தண்டனை தீர்ப்பிற்குள்ளாக்கப்பட்டார்; ஆனால் நாம் பார்த்திருக்கின்ற வண்ணமாக, இந்த ஒரு குற்றச்சாட்டானது பிலாத்துவுக்கு முன்பு செல்லாததாய் இருக்கும், ஏனெனில் ஒரு மனிதன் தேவனையோ (அ) வேறொரு தேவனையோ தூஷிப்பது எதையும் ரோம அரசாங்கமானது பொருட்படுத்துவதில்லை. ரோமர்கள் அவருக்கு மரணத்தண்டனை வழங்கத்தக்கதாக, இயேசு தம்மை யூதர்களுடைய இராஜா என்று உரிமைப்பாராட்டிக் கொண்டதின் மூலம், அவர் ரோமுக்கு எதிராகக் கலகம் புரிந்தார் என்று அவரைக் குறித்துக் குற்றஞ்சாட்டினார்கள். எழுதினதை மாற்றுவதில்லை என்பதான பிலாத்துவினுடைய தீர்மானமானது சரியானதேயாகும் மற்றும் இயேசுவே உண்மையில் பூமியின் இராஜாவாக இருப்பதற்கான தெய்வீக அபிஷேகித்தலைப் பெற்றவர் என்ற இந்த மாபெரும் உண்மைக்கு, குருடாயிருக்கிற உலகத்தின் கண்கள் யாவும் இறுதியில் திறக்கப்படும். ஆனால் அவர் சொன்னது போலவே, “என் இராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல” அதாவது அதற்கான காலம் இன்னும் வரவில்லை என்பதாகும். அவர் சொல்லியுள்ளது போலவே, “அவர் மகா வல்லமையையும், ஆளுகையையும் எடுத்துக்கொள்ளும்” காலம் வந்துக்கொண்டிருக்கின்றது. தற்போது அவரை இராஜாவென அங்கீகரிப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களாகவும், இவ்வுலகத்திலுள்ள மிகவும் முக்கியத்துவமற்ற நபர்களாகவும் காணப்படுகின்றனர்; அதாவது ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, கல்விமான்கள் அநேகரில்லை” – மாறாக “விசுவாசத்தில் ஐசுவரியவான்களாய் இருக்கும் இவ்வுலகத்தின் தரித்திரரே” பிரதானமாய்க் காணப்படுகின்றனர்.
இயேசு உலகத்தினுடைய இராஜாவாக இப்போது இருக்கின்றார் என்றும், அவர் ஆளுகை செய்கின்றார் என்றும், கிறிஸ்தவ மண்டலமே அவரது இராஜ்யம் என்றும், பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிக்கைப் பண்ணியுள்ளவர்களான 400,000,000 – பேர் அவரது உண்மையுள்ள பிரஜைகளாகக் காணப்படுகின்றனர் என்றும் கூறித் திரிவது சிலருக்கு இனிமையான கட்டுக்கதையாய்த் தோன்றுகின்றது. இப்படியாக எண்ணிக்கொண்டிருப்பவர்கள், நமது கர்த்தருக்கு மரணத்தை உறுதிச் செய்திட்டதான வேத சாஸ்திரிகள் போலவே கிட்டத்தட்ட குருடான நிலையிலும், தவறான அபிப்பிராயத்திலும் காணப்படுகின்றனர். கருப்பை, வெள்ளை என்று கூறுவதுபோலவே, “கிறிஸ்தவ மண்டலத்தை,” கிறிஸ்துவினுடைய சாம்ராஜ்யம் என்றும், கிறிஸ்தவ மண்டலத்தினுடைய ஜனங்களைக் கிறிஸ்துவினுடைய ஊழியக்காரர்கள் என்றும் கூறுவது கூடக் காணப்படும். “நீங்கள் யாருக்கு ஊழியம் புரிகின்றீர்களோ, அவருக்கே ஊழியக்காரர்களாய் இருக்கின்றீர்கள்” என்பதே நமது கர்த்தருடைய நிலைப்பாடாய் இருக்கின்றது மற்றும் இந்த அவரது நிலைப்பாட்டின்படி, கர்த்தர் சொற்பமான உண்மையுள்ள ஊழியக்காரர்களை உலகத்தில் இன்று பெற்றவராய் இருக்கின்றார் மற்றும் பெரும்பான்மையானவர்கள் சுயநலத்தினுடைய பல்வேறு வடிவங்களில், பாவத்திற்கு ஊழியம் புரிகின்றவர்களாய் இருக்கின்றனர் மற்றும் வானத்தின் கீழ் தமது மகா வல்லமையையும், ஆளுகையையும் கிறிஸ்து எடுத்துக்கொள்ளப்போகிறதான கிறிஸ்துவினுடைய நாளானது, அதாவது அபிஷேகிக்கப்பட்டவரின் நாளானது இன்னும் தொலைவில் இருப்பதாக எண்ணுவதில் மகிழ்ச்சிக்கொள்பவர்களாக இருக்கின்றனர்.
“அவர் பிரசன்னமாகுதலை விரும்புகின்றவர்களும்,” இராஜாவினுடைய பிரசன்னத்திற்காகவும், பூமியில் அவரது நீதியின் ஆளுகையானது தொடங்குவதற்காகவும் ஏங்கும் [R3562 : page 155] ஆத்துமாக்களை உடையவர்களும், மிகச் சொற்பமானவர்களாய் இருப்பது வருத்தத்திற்குரியதே. ஆனால் “சிறு மந்தையினர்,” அதாவது சிலுவையின் போர் வீரர்கள் அனைவரும், ஒருவரோடொருவருடனான ஐக்கியத்தினை விசேஷித்த வண்ணம் புரிந்து கொண்டவர்களாக, வேத வாக்கியங்களானது புத்திமதிக் கூறுவது போன்று, “சகோதர சகோதரிகளுக்காக தங்கள் ஜீவியங்களை ஒப்புக்கொடுப்பதற்காக” ஆயத்தத்துடன் காணப்படவேண்டும். சகோதரனுக்காக தனது ஜீவியத்தை/ஜீவனை ஒப்புக்கொடுக்கிறவன், சத்தியத்திற்கு எதிராக எதுவும் செய்யாதபடிக்கும், சத்தியத்திற்காகவே அனைத்தையும் செய்யும்படிக்கும், எவருக்கும் இடறலானவைகளைச் செய்யாதபடிக்கும், இன்னுமாகக் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களுக்கு, ‘அவரது பாத அங்கங்களுக்கு’ கூடுமானமட்டும் உதவும்படிக்கும், தனது நடவடிக்கைகள் அனைத்திலும் நிச்சயமாய் ஜாக்கிரதையாய் இருப்பான்.
தேவனையும், நீதியினுடைய கொள்கைகளையும் அறிந்திராதவர்களும், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது என்பதை, கடமைப்பற்றின உயர்ந்தபட்ச புரிந்து கொள்ளுதலாகப் பெற்றிருப்பவர்களுமான ரோம போர்வீரர்கள் உணர்வுகளற்றவாகளாகக் காணப்பட்டனர்; அவர்களது கைதிகளினுடைய மாம்சமானது துடிதுடிப்பது என்பது அவர்களை உருகிடச் செய்யவில்லை. அவர்கள் கீழே உட்கார்ந்து, அவரைப் பார்த்துக்கொண்டிருந்தனர் மற்றும் உடனடியாக தங்களுக்குள்ளாக அவரது வஸ்திரங்களைப் பங்குபோடுவதற்கு ஆரம்பித்தனர். யூதனுடைய சாதாரணமான வஸ்திரமானது ஐந்து பாகங்களை உடையதாகும், அவை தலைப்பாகை, பாதரட்சைகள், மேல் வஸ்திரம் (அ) டோகோ (Togo; தளர்ந்த மேல் உடை), கச்சை மற்றும் அங்கி (chiton) ஆகும்; அங்கி என்றுள்ளதான இது கழுத்து முதல் கணுக்கால் வரையிலான இறுக்கமான சட்டைப்போன்றதாகும் மற்றும் இதற்கே அவர்கள் சீட்டுப் போட்டார்கள்.
அநீதியுள்ளவர்களுக்கான மீட்கும்பொருளாக, அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக நீதி உள்ளவராய்ப் பாடுப்பட்டுக்கொண்டிருந்த தேவ ஆட்டுக்குட்டியை அந்தப் போர்ச்சேவகர்கள் உணர்வுகளற்று நோக்கிப்பார்த்து, அவரது வஸ்திரங்களைத் தங்களுக்குக் கிடைத்த ஆதாயமெனப் பங்குபோட்டுக்கொண்டபோது, அவர்கள் அன்றுமுதல், இன்று வரையிலான ஒட்டுமொத்த “கிறிஸ்தவ மண்டலத்திற்கு” கொஞ்சம் ஒத்திருந்தார்கள். நாகரிகமடைந்துள்ள உலகத்தின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள மில்லியன் கணக்கானவர்கள் இயேசுவையும், அவரது அன்பையும், அவரது பலியையும், அவர் நமக்காகவே பலியாகியுள்ளார் என்பதையும் கேள்விப்பட்டிருக்கின்றனர்; எனினும் அவர்கள் முற்றிலும் உணர்ச்சியற்றவர்களாகவும், அக்கறையற்றவர்களாகவும், நன்றியற்றவர்களாகவும் (அ) உணர்ந்துகொள்ளாதவர்களாகவும், காணப்படுகின்றனர். அவரது மரணத்தின் வாயிலாக தங்களுக்குக் கடந்து வந்துள்ளதான பல்வேறு ஆசீர்வாதங்களையும், அனுகூலங்களையும் நாளுக்குநாள் பெற்றுக்கொள்வதற்கும் மற்றும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வதற்கும் விரும்புகின்றனர்; இவைகளைக்கூட அவர்கள் நன்றியறிதலாலோ (அ) உணர்ந்துகொள்ளுதலாலோ இல்லாமல்தான் பெற்றுக்கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்களைக்குறித்து நாம் கொண்டிருக்க வேண்டிய மிகவும் இரக்கத்துடன்கூடிய மனப்பான்மையானது, அப்போஸ்தலர் குறிப்பிட்டுள்ளதுபோன்று, “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” (2 கொரிந்தியர் 4:4) என்பதேயாகும்.
நமது கர்த்தருடைய மரணத்தருவாயின்போது, அவரது மிகவும் விசேஷித்த நண்பர்கள் நான்கு பேர் அவரோடுகூடக் காணப்பட்டனர். அவரது தாயாரும், கிலெயோப்பாவின் மனைவியும், மகதலேனா மரியாளும் மற்றும் யோவானும் காணப்பட்டனர். இயேசுவினுடைய மற்ற நண்பர்கள் சார்பிலான துணிவின்மையைக் குறித்து நாம் மிகுதியாய் எண்ணிக்கொள்ள வேண்டாம். இயேசுவைச் சிலுவையில் அறைந்துப்போடத்தக்கதாக வழிநடத்தின பிரபல்யமான கசப்பானது, அவரது பின்னடியார்களுக்கு எதிராகவும் கொஞ்சம் காணப்பட்டது. அவர்கள் பயப்படுவது இயல்பே; லாசருவையும் கொன்றுபோடுவதற்கு ஆலோசனை பண்ணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடுபடுகின்ற இயேசுவின் மீதான அக்கறை ஒருபக்கம் இருந்தபோதிலும், அந்த ஸ்திரீகள் மூவரும் தாங்கள் தொல்லைப்படுத்தப்படும் அபாயத்திற்கு நீங்கினவர்களாக இருப்பதை உணர்ந்தே, அங்கே அவருடன் காணப்பட்டிருக்க வேண்டும்; இன்னும் யோவானைப் பொறுத்தமட்டில், அவருக்குப் பிரதான ஆசாரியனுடைய வீட்டாரில் நண்பர் ஒருவர் இருந்தார் என்றும், அந்த நண்பரே இயேசு முதலாவதாக பிரதான ஆசாரியன் முன்னிலையில் கொண்டுவரப்பட்டபோது, யோவான் உள்ளே வந்து காணப்படுவதற்கு அனுமதித்திருக்க, பேதுரு வெளிப்பிரகாரங்களில் அடையாளம் கண்டுக்கொள்ளப்படுவாரோ என்று பயந்து காணப்பட்டார் என்றும் நாம் நினைவுகூருகின்றோம். அநேகமாக முழு நடவடிக்கை குறித்த விவரமளிக்கத்தக்கதாக, பிரதான ஆசாரியனுடைய ஊழியக்காரனும், சிலுவையில் அறையப்படும் வேளையில் காணப்பட்டிருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலைகள் அனைத்தும், யோவான் அவ்விடத்தில் காணப்படுவதற்குத் தைரியம் மூட்டினதாய் இருக்கலாம். இந்த வேளையில்தான் இயேசு மிகுந்த வலியில் காணப்பட்டபோதிலும், தமது தாயாரை தம்முடைய சீஷனுடைய பராமரிப்பின் கீழ் ஒப்படைத்தவராக, “தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன்” என்றும், “சீஷனை நோக்கி: அதோ, உன் தாய்” என்றும் கூறினார். சிலுவையில் இயேசுவிடம் சென்று நம்முடைய அனுதாபங்களை நம்மால் காண்பிக்க முடியாது, ஆனால் நம்மால் அவரது அன்பார்ந்த சரீர அங்கத்தினருக்கான இருள் சூழ்ந்த நேரங்களில், அவர்களினிடத்திற்குச் சென்று, உதவியைச் செய்திடமுடியும் மற்றும் இதை அவர் தமக்கே செய்ததாக கருதுவார்.
மற்றொரு வேதவாக்கியமும் நிறைவேற வேண்டியிருந்தது. அவரைக்குறித்து, “என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) என்று தீர்க்கத்தரிசி குறிப்பிட்டுள்ளார். இதுவும் அவர்தான் என்று அடையாளம் கண்டுகொள்வதற்கான மற்றுமொரு அடையாளமாகும் மற்றும் இதுவே இயேசு இந்தத் தாகத்தைக் குறிப்பிட்டதற்கான காரணமாய் வழங்கப்பட்டுள்ளது. சிலுவையில் அறையப்படுதலின் காரணமாக ஏற்படக்கூடிய காய்ச்சல் அதிகமாகிக் கொண்டிருக்கும்போது, அவருக்குக் கொஞ்சம் நேரமாகவே தாகம் எடுத்துக்கொண்டிருந்தது; ஆனால் தம்மைக்குறித்த வேதவாக்கியமானது, நிறைவேறுவதற்குரிய தருணத்தைக் கொடுக்கத்தக்கதாகத் தாகத்தை வெளிப்படுத்துவதற்கான வேளை இப்பொழுது வந்தது. கசப்புக்கலந்த காடி அவருக்குக் கொடுக்கப்பட்டது; இது அவருக்குப் பாதிப்பை உண்டாக்குவதற்காகக் கொடுக்கப்படாமல், மாறாக இரக்கம் பாராட்டுதலாய்க் கொடுக்கப்பட்டது. இந்தக் கலவை பானமானது, ஓரளவுக்குத் தாகத்தைத் தணிப்பதாக எண்ணப்படுகின்றது.
தம்முடைய வாழ்க்கை போக்குத் தொடர்புடையதான பல்வேறு வேதவாக்கியங்களை இப்படியாக நிறைவேற்றி முடித்தபோது, நமது கர்த்தர் தமது ஓட்டத்தின் முடிவு வந்திருப்பதை உணர்ந்துகொண்டார். அநேகமாக இத்தருணத்தின்போதே, பிதாவின் தொடர்பானது, அவரிடமிருந்து ஒரு கணம் துண்டிக்கப்பட்டது; அவர் கொஞ்சம் நேரமாகிலும் பாவி எனும் தெய்வீகத் தயவு துண்டிக்கப்பெற்று காணப்படும் அனுபவம் யாவற்றையும் அனுபவிக்க வேண்டும்; ஏனெனில் நாம் அவர் நிமித்தமாகத் தேவனால் நீதிமான்களாகக் கையாளப்படத்தக்கதாக, நம் நிமித்தமாக அவர் பாவிபோல் நடத்தப்பட்டார். நமது கர்த்தருடைய அனுபவங்கள் அனைத்திலுமே, பிதா அவரிடமிருந்து தம்முடைய முகத்தை மறைத்துக்கொண்டதான அத்தருணமே, மிகவும் தாங்கமுடியாத தருணமாகவும், கடுமையான சோதனையாகவும் மற்றும் நமது கர்த்தரினால் முன்கூட்டியே எதிர்ப்பார்க்கப்படாத ஒன்றாகவும் இருந்தது என்று நாம் நம்புகின்றோம். பூமிக்குரிய ஆறுதல் மற்றும் தயவு மற்றும் சிலாக்கியம் மற்றும் ஆசீர்வாதம் அனைத்தையும் இழந்த நிலையிலும், அத்தருணம் வரையிலுமாகப் பிதாவுடனான ஐக்கியத்தையும், உறவையும்/தொடர்பையும் அவர் உணர்ந்துகொள்ள முடிந்தவராகக் காணப்பட்டார்; ஆனால் தம்முடைய முழு ஜீவியமே சார்ந்து, நம்பியிருக்கிறதான அந்த ஐக்கியம் இப்பொழுது துண்டிக்கப்பட்டபோதோ, அது கடுமையான பரீட்சையாகவே இருந்தது.
வேதனையில் அவர், “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்! எனக்கும், உமக்கும் நடுவில் மேகம் வரத்தக்கதாக, நான் என்ன செய்தேன்? மரணம் வரையிலும் நான் உமக்கு [R3563 : page 155] உண்மையாய் இருக்கவில்லையா?” என்று சத்தமிட்டார். ஆனால் உடனடியாக அவர் இந்த அனுபவத்தினுடைய அர்த்தத்தைப் புரிந்துகொண்டார்; அதாவது இவ்வாறாக தாம் பாடுகளின் பாத்திரத்தில் பானம் பண்ணிடுவதும், தம்முடைய உண்மை மற்றும் கீழ்ப்படிதலை முழுமையாய் நிரூபிப்பதும் மற்றும் இப்படியாக நம்முடைய சந்ததிக்கு எதிரான தீர்ப்பை முற்றும் முழுமையாய்ச் சந்திப்பதும் அவசியமாய் உள்ளது என்று உணர்ந்துகொண்டார். இந்த மேகம் நடுவில் காணப்படும் சூழ்நிலையிலேயே, ஆனால் காரியங்களை உணர்ந்துகொண்டவராக, அவர், “முடிந்தது!” என்று சொல்லி, மரித்தார். இருதயம் உடைந்து சில ஜனங்கள் மரித்துப்போவதாக, நாம் அடிக்கடி பேசுவதுண்டு. மற்றும் இதை அடையாளமான வார்த்தை விதத்தில் நாம் பயன்படுத்துவதுண்டு; ஆனால் நமது கர்த்தருக்கு இது உண்மையிலேயே நடந்தது. அவருடைய இருதயமானது உண்மையாக உடைந்ததினாலேயே அவர் மரித்தார் என்பது தெளிவாய்த் தெரிகின்றது. ஆழமான துயரமானது, இரத்த ஓட்டத்தைக் குறுக்கிட்டு, இருதயத்திற்கு அழுத்தத்தை உண்டுபண்ணும் தன்மைகொண்டதாகும். இதை நாம் அனைவரும் கூட உணர்ந்திருக்கின்றோம்; அதாவது சில குறிப்பிட்ட மன அழுத்தமுள்ள நேரங்களில் இருதயத்தில் ஒரு பாரத்தையும், கனத்தையும் உணர்ந்திருக்கின்றோம். நமது கர்த்தருடைய விஷயத்திலோ இது மிகவும் கடுமையாய்க் காணப்பட்டபடியால், அவரது இருதயமானது சொல்லர்த்தமாகவே உடைந்துபோனது. இருதயம் உடைந்து அவர் மரித்தார்.