R2455 (page 91)
நமது கர்த்தர் தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதலை நிறுவினப் பிற்பாடு, கலக்கமடைந்திருக்கும் தம்முடைய சீஷர்களுக்குத் தம்முடைய உரையைத் தொடர்ந்துகொண்டிருக்கையில், ஏற்றக்காலத்தில் அவர் திரும்பிவந்து அவர்களைத் தம்மிடத்தில் சேர்த்துக்கொள்வதாக மாத்திரம் அவர் வாக்களிக்காமல், தாம் இல்லாத இடைப்பட்ட காலத்தில் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனையும் வாக்களித்தார். அவர் தம்முடைய மனித சுபாவத்தை ஒப்புக்கொடுக்கப்போகின்றபடியால், ஒப்புக்கொடுத்தப் பிற்பாடு அவர்களோடு அவரால் மனிதனாகிய கிறிஸ்து இயேசுவாய் இருக்கமுடியாது. அவருடைய உயிர்த்தெழுதலில், அவர் பிதாவுக்கு ஒத்த தன்மையிலான ஆவிக்குரிய ஜீவியாக வரப்போகின்றபடியால், முழுச் சபையும் நிறைவடைந்து, அவரைப்போல் (மற்றும் பிதாவைப்போல்) ஆக்கப்பட்டு, அவரைக் கண்டு, அவரோடிருந்து, அவருடைய மகிமையில் பங்கடைவதற்குரிய காலம் வருவதுவரையிலும், பிதாவைச் சீஷர்களால் பார்க்க முடியாததுபோல, அவரையும் சீஷர்களால் பார்க்க இயலாது. உயிர்த்தெழுதலில் அவருக்கு ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக, அவர் ஒன்றில் சுவிசேஷயுகம் முழுவதும், எவ்விதமான உதவியில்லாத நிலையில் சீஷர்களைத் தனியே விடுவதற்குரிய அல்லது வேறு ஏதாகிலும் விதத்தில் அவர்களுக்கு உதவியளிக்க ஏற்பாடு பண்ணுவதற்குரிய அவசியம் உண்டானது. நம்முடைய கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு, அவர் தம்முடைய சீஷர்களுக்கு முன்பாக சிறு கண நேரங்களில் சில முறைகள் தோன்றிக் காட்சியளித்தது என்பது, அவர் இன்னமும் மரித்த நிலைமையிலேயே இல்லையென்பதையும், அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் மற்றும் அவர் மனித சூழ்நிலைகளுடைய கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்பதையும், சீஷர்களுக்கு உறுதிப்பண்ணும் நோக்கத்திற்காகக் கொடுக்கப்பட்ட அற்புதமான வெளிப்படுத்தல்களே ஆகும். அவர் தோன்றுவதற்கு எடுத்துக்கொண்ட மாம்ச சரீரங்களானது, அற்புதமாகத் தோன்றி, அற்புதமாக மறைந்தும் போனது. அவர் காற்றைப்போல் வந்து போய்விட்டார். (யோவான் 3:8; லூக்கா 24:26,31; அப்போஸ்தலர் 1:3-4)
பரிசுத்த ஆவி என்பது வேறொரு தேற்றரவாளன், எனினும் தேற்றுதல் ஒரே வகையில்தான் காணப்படும். இங்கு இடம்பெறும் “தேற்றுதல்” (comfort) என்ற வார்த்தையானது, இவ்வசனத்தின் கருத்தாகிய பலப்படுத்தலை, தக்கவைத்தலைச் சரியாக வெளிப்படுத்துகிறதில்லை. “தேற்றுதல்” எனும் வார்த்தை கொடுக்கும் அர்த்தத்தின்படி பரிசுத்த ஆவி என்பது, வேதனைகளைத் தேற்றுகிறவராகவும், பயங்களைத் தணிக்கிறவராகவும் மாத்திரம் காணப்படாமல், பரிசுத்த ஆவியானது அவர்களது புரிந்துக்கொள்ளுதலை உயிர்ப்பிக்கின்றதாகவும், அவர்களது பக்தி வைராக்கியத்தைப் பலப்படுத்துகின்றதாகவும், அவர்களை நீதியில் சரிச்செய்யத் தக்கதாகவும், அவர்கள் “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தை” சுதந்தரித்துக்கொள்ளத்தக்கதாகவும் எனத் தெய்வீக விவேகமானது அனுமதிப்பவைகளைச் செய்வதற்கும் மற்றும் சகிப்பதற்கும் அவர்களை உற்சாகப்படுத்துகின்றதாகவும் இருக்கின்றது.
சபையினிடத்திற்கு வந்து, சபையோடு யுகம் முழுவதும் தங்கி, உண்மையுள்ளவர்களின் நலனுக்கடுத்த விஷயங்களை மேற்பார்வையிட்டு வழிநடத்துகிறதாகிய பரிசுத்த ஆவி அல்லது பரிசுத்தமான செல்வாக்கு என்பது, பிதா மற்றும் குமாரன் இருவருடைய பிரதிநிதியாக இருக்கின்றது. சபையின் விஷயத்தில், கர்த்தர் இயேசுவின் பிரதிநிதியாக, பரிசுத்த ஆவி காணப்படுகின்றது என்ற [R2455 : page 92] கருத்தானது, அநேக இடங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சில சமயம் கர்த்தரும், அவருடைய ஆவியும்/செல்வாக்கும் மாறிமாறிப் பேசப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, “இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கின்றேன்” என்று சீஷர்களிடம் இயேசு கூறுகின்றார். இன்னுமாக, “நான் உங்களை திக்கற்றவர்களாகவிடேன்; உங்களிடத்தில் பரிசுத்த ஆவியின் மூலமாக) வருவேன்” (யோவான் 14:18). இன்னுமாக, “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும் (பரிசுத்த ஆவியின் மூலமாக) நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்… அவனுக்கு என்னை (பரிசுத்த ஆவியின் வாயிலாக) வெளிப்படுத்துவேன்… நாங்கள் (பிதாவும், குமாரனும்) அவனிடத்தில் வந்து (பரிசுத்த ஆவியின் மூலமாக) அவனோடே வாசம் பண்ணுவோம்” (யோவான் 14:18,20,23)
பரிசுத்த ஆவியை, சத்தியத்தின் ஆவியை, அன்பின் ஆவியை, பிதாவின் ஆவியை, கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருப்பவர்கள், இயேசுவைப் பார்க்க உதவப்படுகின்றார்கள் மற்றும் தங்களுக்குள் புதிய ஜீவியத்தை ஆரம்பிக்கவும் பெற்றிருக்கின்றனர் (வசனம் – 19). இவர்கள் தங்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்களினால் பார்க்கின்றனர் மற்றும் இருளில் [R2456 : page 92] நடப்பதுமில்லை. “இதுவே வழி, இதிலே நடவுங்கள்” என்று சொல்லும் கர்த்தருடைய சத்தத்தை இவர்கள் கேட்கின்றனர். தேவனுடைய நல்ல வார்த்தைகளை இவர்கள் ருசித்து, அவர் மிகவும் கிருபையுள்ளவராய் இருப்பதை உணர்ந்துக்கொள்கின்றனர். தங்களுடைய இருதயத்தில் தேவனுடைய அன்பு ஊற்றப்பட்டிருக்கிறதையும், அந்த அன்பு இவர்களுக்குள், சகோதரருக்கான அன்பை உண்டுபண்ணுவதையும், ஆவியின் அனைத்து நற்கனிகளை உண்டுபண்ணுகிறதையும் இவர்கள் உணருகின்றனர். அதாவது, சாந்தம், பொறுமை, நீடியப்பொறுமை, சகோதர சிநேகம் அன்பாகிய ஆவியின் கனிகளை உண்டுபண்ணுகிறதையும் இவர்கள் உணருகின்றனர். (ஏசாயா 30:21; 1 பேதுரு 2:3; ரோமர் 5:5; கொலோசெயர் 3:12-13)
எனினும் இந்த அனுபவங்கள் அனைத்தும், நிபந்தனைகளின் அடிப்படையிலேயே வாக்களிக்கப்பட்டுள்ளது. அதாவது இவைகள் தேவனுடைய கிருபையை ஒருபோதும் கேட்காதவர்களுக்கு வாக்களிக்கப்படாமல், மாறாக தேவனுடைய கிருபையைக் கேட்டவர்களுக்கே, “தேவனாகிய கர்த்தரினால் வரவழைக்கப்பட்டவர்களுக்கே” அவருடைய கட்டளைகளைக் கேட்டு, அவைகளைச் செய்யத்தக்கதாக அன்பினால் ஏவப்பட்டவர்களுக்கே வாக்களிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கே பிதாவின் அன்பு காணப்படுகின்றது. இப்படிப்பட்டவர்களுக்கே குமாரனுடைய அன்பு காணப்படுகின்றது மற்றும் இப்படிப்பட்டவர்களுக்கே பரிசுத்த ஆவி எனும் கால்வாய் மூலம், பிதா மற்றும் குமாரன் இருவருடனும் உள்ள ஐக்கியம் காணப்படுகின்றது. இவைகள் குறித்து 15,16-ஆம் வசனங்களும், இன்னுமாக 21,23 மற்றும் 24-ஆம் வசனங்களிலும் தெரிவிக்கப்படுகின்றது. இருதயத்தில் விசுவாசமும், கீழ்ப்படிதலும் கொண்டிருத்தல் என்பது ஆவியில் ஜெநிப்பிக்கப்படும் நிலைமைக்குள் எவரும் வருவதற்கு முன்னதாக இருப்பது மாத்திரம் போதாது; மாறாக பரிசுத்தத்தின் ஆவியில் அல்லது பரிசுத்த ஆவியில் பிதாவுடனும், குமாரனுடனுமான ஐக்கியத்தின் ஆவியில் தொடர்ந்துக் காணப்படுவதற்கும், வளர்வதற்கும் என விசுவாசத்திலும், கீழ்ப்படிதலிலும் தொடர்வதும், வளர்வதும் அவசியமாய் இருக்கின்றது.
ஆவியில் ஜெநிப்பிக்கப்படுதல் என்பது ஒரு காரியமாகவும், “ஆவியினாலே நிறைந்து” என்று அப்போஸ்தலரால் வலியுறுத்தப்படும் நிலைமையை அடைவது என்பது, வேறொரு காரியமாகவும் இருக்கின்றது (எபேசியர் 5:18). நாம் எந்தளவுக்குச் சுயசித்தத்தின் ஆவியில் காலியாகி, விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் ஆவியினால் நிரப்பப்படுகின்றோமோ, அதனடிப்படையிலேயே நம்முடைய நிரப்பப்படுதல் காணப்படுகின்றது. கீழ்ப்படிதல் என்பது, அன்றாட ஜீவியத்தில் வெளிப்படுகின்றதாய் இருப்பினும், கர்த்தர் தம்முடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களிடத்தில் மாம்சத்தின் கட்டுப்பாட்டை மாத்திரமல்லாமல், நோக்கத்தின், சித்தத்தின், இருதயத்தின் கீழ்ப்படிதலையே பொருட்படுத்துபவராக இருக்கின்றார். ஆகவேதான் கர்த்தருக்கு முழுமையாக உண்மையுடன் இருக்கும் சிலருடைய இருதயங்கள், கர்த்தருக்குப் பிரியமாய்க் காணப்படும். ஆனாலோ இவர்களுடன் தொடர்புக்குள் இருப்பவர்களில் சிலருக்கு, இவர்கள் மீது பிரியம் இருப்பதில்லை. இன்னும் சிலர் வெளித்தோற்றமான நன்நடத்தையின் காரணமாக, “மனுஷர் மத்தியில் மிகவும் உயர்வாக” மதிக்கப்படலாம்; ஆனாலோ இவர்களுடைய உண்மையற்ற இருதயத்தின் காரணமாக, இவர்கள் தேவனுடைய பார்வைக்கு முன்பு அருவருப்பாய்க் காணப்படுவார்கள் (லூக்கா 16:15). எனினும், புதிய நம்பிக்கையையும், புதிய ஆவியையும் தனக்குள் பெற்றிருப்பவன், தன்னுடைய சிந்தனைகளில் மாத்திரமல்லாமல் தன்னுடைய வார்த்தைகளிலும், கிரியைகளிலும் அனைத்துக் காரியங்களிலும், உள்ளேயும் வெளியேயும் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள நாடுபவனாக இருப்பான் (1 யோவான் 3:3).
மற்றக் கிருபைகளைப் போன்று பரிசுத்த ஆவியும் பிதாவினுடையதாக இருப்பினும், மற்ற அவருடைய வரங்கள் அனைத்தையும் போன்று பரிசுத்த ஆவியும், குமாரன் மூலமாகவே நமக்கு வருகின்றதே ஒழிய, இப்பரிசுத்த ஆவியானது பிதாவுக்கும் நமக்கும் இடையே எவ்விதமான நேரடித் தொடர்பினால்/உறவினால் அல்ல என்பதை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. நாம் வேறே பாடங்களில் பார்த்திருக்கிறபடிப் பிதாவிடம் ஏறெடுக்கப்படும் நம்முடைய ஜெபங்கள், குமாரனினாலேயே பதிலளிக்கப்படுகின்றது. “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்” (யோவான் 14:13). ஆகவே பிதாவுக்கும், நமக்கும் இடையிலான எவ்விதமான நேரடித் தொடர்பு/உறவு காரணமாக பரிசுத்த ஆவி நமக்கு வராமல், மாறாக நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் ஆலோசனையின்படியாக வருகின்றது. “நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன்; அப்பொழுது தேற்றரவாளனை உங்களுக்குத் தந்தருளுவார்,” அதாவது, “என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, என்னிமித்தமாக பிதா இதை உங்களுக்குச் செய்வார்” என்ற விதத்தில் இயேசு கூறுகின்றார் (யோவான் 14:16) இதே கருத்தானது, “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” என்று மீண்டுமாக தெரிவிக்கப்படுகின்றது (யோவான் 14:26).
இங்கு நமக்குள்ள பாடம் என்னவெனில், பிதாவின் முன்னிலையில், நமக்கிருக்கும் ஒரே அங்கீகரிப்பானது, இதுவரையிலும் கிறிஸ்துவுக்குள் அவருடைய சரீரத்தின் அங்கங்களாகக் கருதப்படுகின்ற நிலையிலுள்ள அங்கீகரிப்பாகத்தான் காணப்படுகின்றது. கர்த்தர் இயேசு நமக்குப் பிதாவை அடையாளப்படுத்துபவராக இருக்கின்றார்; மற்றும் பிதாவுக்கு நம்மை அடையாளப்படுத்துபவராக இருக்கின்றார் என்பதேயாகும். நமக்குக் கொடுக்கப்படும் பரிசுத்த ஆவியின் ஆறுதலும், பலமும் பிதாவினுடையதாகும். சத்தியத்தின் ஆவி, பிதாவிடமிருந்து ஊற்றெடுக்கின்றதாய் இருக்கின்றது. அதுவும் இது நமக்கு நேரடியாய் வராமல், மாறாக நம்முடைய கர்த்தரும் தலையுமானவராகிய இயேசுவின் மூலமாக மாத்திரமே நம்மிடம் வருகின்றது. சொல்லப்போனால், பிதாவுக்கு முன்பாக நமக்கு எந்த அங்கீகரிப்பும் இல்லை; மற்றும் அவருடைய கிருபையினால் நமது கர்த்தர் இயேசு மூலமாக நாம் “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுக்குரிய சுதந்தரத்தை” அடையத்தக்கதாக ஆகி, முதலாம் உயிர்த்தெழுதலில் “மாற்றம்” அடைந்து, தெய்வீகச் சாயலாகிய அவருடைய சாயலில் பூரணமடைவது வரையிலும் நமக்கு எவ்விதமான அங்கீகரிப்பும்/ஏற்புடைமையும் இருப்பதில்லை. இதற்குப் பிற்பாடு நாம் பூரணமானவர்களாகக் கருதப்படாமல், உண்மையில் பூரணமாய் இருப்பதினால் நமக்குப் பிதாவின் முன்னதாகத் தனிப்பட்ட அங்கீகரிப்பும் காணப்படும். ஆனால் இதற்கு முன்னால் வரை இருப்பதில்லை.
ஆகவே, துணிகரமாய்ப் பாவம் செய்வதன் காரணமாக, பரிசுத்த ஆவியை இழப்பதன் மூலமாக அல்லது விலையேறப்பெற்ற இரத்தத்தின் மீதான விசுவாசத்தை இழப்பதன் மூலமாக, ஒருவன் கிறிஸ்துவுடனான தன்னுடைய உறவை இழந்துப்போவானானால், அப்படிப்பட்டவன் இயேசுவினுடைய பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறைவிலிருந்து வெளியேறி, ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுகின்றவனாய் இருக்கின்றான். ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுவது என்பது, நடந்த உண்மைகள் மற்றும் கிரியைகள் அடிப்படையில் நியாயத்தீர்ப்பையும், பூரணமற்ற சிருஷ்டிகள் அனைத்திற்கும் மரணத்தையும் குறிக்கின்றதாய் இருக்கும் (எபிரெயர் 10:31). நாம் அவரில் [R2456 : page 93] நிலைத்திருக்க வேண்டுமென்றும், தெளிக்கப்பட்ட இரத்தத்தின் கீழ்க் காணப்பட வேண்டுமென்றும், அவருடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டுமென்றும் வேதவாக்கியங்கள் புத்திமதிக் கூறுகின்றன. (யோவான் 15:4,6,10; 1 யோவான் 2:24-29).
தம்முடைய அறிவுரைகளைக் கைக்கொள்வதன் மூலமாக அவரைப் பிரியப்படுத்துவதற்கு நாடாதவன், தம்மிடத்தில் அவனுக்கு அன்பில்லை என்பதை வெளிப்படுத்துகின்றவனாக இருப்பான் என்பதை நமது கர்த்தர் குறிப்பாகத் தெரிவிக்கின்றார் (23-24-ஆம் வசனங்கள்). பயபக்தியைப் பரீட்சிப்பதைக் காட்டிலும், அன்பைப் பரீட்சிப்பதற்கு வேறு சிறந்த பரீட்சை நிச்சயமாய் இராது; மற்றும் கீழ்ப்படிதலைப் பரீட்சிப்பதைக் காட்டிலும், பயபக்தியைப் பரீட்சிப்பதற்குச் சிறந்த பரீட்சை நிச்சயமாய் இராது. ஒளியூட்டப்பட்டதான நம்முடைய மனசாட்சிகளானது, ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு இருதயபூர்வமான சம்மதத்தைக் கொடுக்கின்றது மற்றும் நாமும் அப்போஸ்தலருடன் கூட, “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால் எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், பிழைத்திருக்கின்றவர்கள் (நீதிமான்களாக்கப்பட்டு, புதிதான ஜீவனுக்குள்ளாக ஜெநிப்பிக்கப்பட்டவர்கள்) இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம்” என்று கூறுகிறவர்களாக இருப்போம் (2 கொரிந்தியர் 5:14-15).
ஆண்டவருடைய வசனங்களை நாம் கைக்கொள்கையில், நாம் அவரை மாத்திரம் பிரியப்படுத்துகின்றவர்களாகவும், அவருக்குக் கீழ்ப்படிகின்றவர்களாகவும் இராமல், இந்த அனைத்து விஷயங்களில் ஆண்டவர், பிதாவாகிய தேவனுடைய வாயாக/வாய்க் கருவியாக இருப்பதினால், நாம் ஆண்டவரைப் பிரியப்படுத்தி அவருக்குக் கீழ்ப்படிகையில், பிதாவையும் பிரியப்படுத்திப் பிதாவுக்குக் கீழ்ப்படிகின்றவர்களாகவும் இருக்கின்றோம் என்று தெளிவாக நமக்கு ஆண்டவர் சுட்டிக்காண்பிக்கின்றார். ஆண்டவர் சீஷர்களோடு இருக்கையில், இவ்வளவு மாத்திரமே அவருக்குச் சொல்ல முடிந்தது. சீஷர்கள் அறிய வேண்டுமென ஆண்டவர் விரும்பினதும், அறிவது அவர்களுக்கு அவசியமாய் இருந்ததுமான அநேக காரியங்கள் சொல்வதற்கு அவருக்கு இருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் அவர்களால் தாங்க முடியாது. காரணம் பரிசுத்த ஆவி இன்னமும் அவர்கள்மேல் வராததினால், கல்வாரியில் ஈடுபலியைச் செலுத்தி, அவர் பரத்திற்கு ஏறி, அதை நமக்காக அவர் தேவனுக்கு முன்பாக ஒப்படைப்பது வரையிலும், பரிசுத்த ஆவி அவர்கள் மீது வருவது கூடாததினால் ஆகும் (யோவான் 7:39 / எபிரெயர் 9:24).
நம்முடைய மீட்பரும், தலையுமான இயேசுவின் வேண்டுகோளுக்கு இணங்கி அனுப்பப்படும் இந்தத் தேற்றரவாளன் அல்லது பலப்படுத்துகிறவர், தேவனுடைய பரிசுத்த ஆவியானது நமக்குப் போதிப்பவராக இருக்கும். அதாவது நமக்கு அறிவுரைகளை/போதனைகளைக் கொண்டுவருவதற்கென, பல்வேறு கருவிகளைப் பரிசுத்த ஆவியானது பயன்படுத்தும் என்று நமது கர்த்தர் உறுதியளிக்கின்றார். தேவைக்கேற்ப அவ்வப்போது கர்த்தர் பரிசுத்த ஆவியின் மூலமாகத் தம்முடைய மந்தைக்கு அளிக்கும் சத்திய வார்த்தைகள், அப்போஸ்தலரின் நிரூபங்கள், பல்வேறு உதவிகள் மற்றும் பிரதிநிதிகளே, இந்தப் பல்வேறு கருவிகளாகும்.
வசனம் 27-இல் தெரிவிக்கப்பட்டிருக்கிறபடி, நம்முடைய அருமையான மீட்பரினால் நமக்கு விட்டுச்செல்லப்படும் சமாதானம் மற்றும் அன்பாகிய சொத்து எவ்வளவு அருமையாகவும், எவ்வளவு ஆறுதலாகவும், சீஷர்களுடைய கலங்கின இருதயங்களுக்கு இருந்தன மற்றும் நமக்கு எவ்வளவு புத்துணர்வு அளிக்கின்றதாய் இருக்கின்றது. “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27). மனித புத்திக்கு எட்டாத இந்தச் சமாதானமும், சந்தோஷமும் உலகத்திற்குக் கொடுக்கப்படவில்லை, பெயர்க்கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப்படவில்லை, மரபு வழியை வலியுறுத்துபவர்களுக்கும், சமய சடங்குகளை வற்புறுத்துகிறவர்களுக்கும், இவர்கள் அனைவரும் எவ்வளவுதான் பக்தி வைராக்கியத்துடன் இருப்பினும், இவர்களுக்கும் கொடுக்கப்படவில்லை. இது பரிசுத்த ஆவியின் மூலமாகக் கிருபையின் ஐசுவரியங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும், சத்தியம் மற்றும் அதன் ஆவிக்குக் கீழ்ப்படிவதன் மூலமாக அனைத்துக் காரியங்களிலும் தங்களுடைய ஜீவனுள்ள தலையாகிய கிறிஸ்துவுக்கு ஒப்ப வளருகின்றவர்களுக்கும்தான் கொடுக்கப்படுகின்றது, மற்றும் கொடுக்க சித்தமும் காணப்படுகின்றது. இப்படிப்பட்டவர்களிடத்தில் சமாதானம் ஆழமாய்க் காணப்படுகின்றது. மேலும் இவர்கள் எந்தளவுக்குத் தெய்வீகக் கிருபையின் ஐசுவரியங்களை, விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் மூலம் சகல பரிசுத்தவான்களோடு உணர்ந்து, தேவனுடைய அன்பின் நீளம், அகலம், ஆழம் மற்றும் உயரத்தை உணர்ந்துக்கொள்கின்றார்களோ, அந்தளவுக்கு இந்தச் சமாதானம் பெருகுகின்றதாகவும் இருக்கின்றது.
இது உலகத்தினுடைய சமாதானமல்ல, ஜாக்கிரதையற்றவர்கள் மற்றும் அலட்சியமானவர்களின் சமாதானமல்ல, சுயதிருப்திகொள்பவர்களின் சமாதானம் அல்ல, விதியை நம்புகிறவர்களின் சமாதானமல்ல மாறாக, இது கிறிஸ்துவின் சமாதானமாய் இருக்கின்றது. “என்னுடைய சமாதானம்” என்று ஆண்டவர் கூறுகின்றார். தேவனிடத்திலான இந்தச் சமாதானத்தை, எல்லா சூழ்நிலைகளிலும் ஆண்டவர் தக்கவைத்துக் கொண்டதை நாம் பார்க்கின்றோம். இந்தச் சமாதானமானது, தெய்வீக ஞானத்தை, அன்பை, நீதியை, வல்லமையை அப்படியே நம்புகின்ற சமாதானமாய் இருக்கின்றது; மற்றும் கர்த்தருடைய உண்மையுள்ளவர்களை எதுவும் பாதிப்பதில்லை என்றும், தேவனை அன்புகூருகின்றவர்களுக்கு அனைத்தும் நன்மைக்கு ஏதுவாக மாற்றப்படும் என்றும், கர்த்தருடைய உண்மையுள்ளவர்களுக்குப் பண்ணப்பட்ட கிருபையான வாக்குத்தத்தங்களை நினைவுகூருகின்ற சமாதானமாகவும் இருக்கின்றது. இந்தச் சமாதானத்தினால், தெய்வீக விவேகம் அனுமதிக்கும் எதையும் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ள முடியும்; மற்றும் தற்கால சந்தோஷமும், சமாதானமும் முன் சுவைத்தலாக மாத்திரம் காணப்படும். கர்த்தரால் வாக்களிக்கப்பட்டுள்ள, முடிவில் வரும் ஆசீர்வாதங்களைக் கண்ணீர்கள் மத்தியில், மகிழ்ச்சியுடன் எதிர்ப்பார்த்திட இந்தச் சமாதானத்தினால் கூடும்.