R2787 (page 105)
லூக்கா 23:35-53
“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி, நமது பாவங்களுக்காக மரித்தார்.” 1 கொரிந்தியர் 15:3
“அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்” (மாற்கு 15:20). அன்றைய நாளில் மரணத்தீர்ப்பு வழங்கப்பட்ட இரண்டு குற்றவாளிகளுடன், இயேசு அப்பொழுது நூற்றுக்கு அதிபதி ஒருவனிடத்தில் ஒப்படைக்கப்பட்டார்; இந்த மூன்று கைதிகளில், ஒவ்வொருவரும் நான்கு ரோமச் சேவகர்களின் கீழ்க் காணப்பட்டனர் மற்றும் இவர்கள் ஒரு நூற்றுக்கு அதிபதியினுடைய கீழ்க் காணப்பட்டனர்; மொத்தம் பதினாறு நபர்களாகக் காணப்பட்டனர். அப்பொழுது காலை ஒன்பது மணியாக இருந்தது; முந்தின இரவு முதல் உணவோ, இளைப்பாறுதலோ இல்லாமல், தம்முடைய சத்துருக்களினால், குட்டப்பட்டு, அடிக்கப்பட்டு, சித்திரவதைப்படுத்தப்பட்டுக் காணப்பட்ட நமது கர்த்தர், அன்றைய வழக்கத்தின்படி, அவர் சுமந்து செல்ல வேண்டிய சிலுவையின் கடினமான பாரத்தினால் வலுவிழந்து காணப்பட்டார் எனப் பாரம்பரியம் தெரிவிக்கின்றது. இதற்கு இசைவாகவே, இயேசுவுக்காகச் சிலுவைச் சுமக்கும்படிக்கு, சிரேனே ஊரானாகிய சீமோன், போர்ச்சேவகர்களால் பலவந்தம் பண்ணப்பட்டார் என்று சுவிசேஷத்தின் பதிவுகள் காணப்படுகின்றன. எனினும் “சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டு வரும்படி” எனும் லூக்கா அவர்களின் பதிவை வைத்து, சீமோன் இயேசுவுக்குப் பின்னாகச் சென்றார் என்றும், இயேசு சிலுவையைச் சுமப்பதற்கு உதவி மாத்திரமே அளித்தார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
எப்படியிருப்பினும் எஜமானுக்கு ஊழியம் புரியும் விஷயத்தில், மிகவும் பொறாமைப்படுவதற்கு ஏதுவான ஒரு வாய்ப்பையே சீமோன் பெற்றிருந்தார்; அதாவது எஜமானுடைய பாரப் பளுவைப் பங்கிடுவதில் மாத்திரமல்லாமல், அவருடைய அவமானத்திலும் பங்கடைவதில் மகிழ்ச்சியாய்க் காணப்படும். இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்களில் சிலரால் வாஞ்சையாய்ப் பற்றிப் பிடிக்கப்படும் ஒரு வாய்ப்பை சீமோன் பெற்றிருந்தார். ஆனால் விநோதமாய்ச் சொல்ல வேண்டுமெனில், அந்த வாய்ப்பு இப்பொழுது நம்மிடத்தில் உள்ளது மற்றும் கர்த்தருடைய சீஷர்களாய் இருப்பவர்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு, அவரைப் பின்பற்றிச் செல்வதற்குரிய சிலாக்கியத்தில் காணப்படுகின்றனர்; ஏனெனில் சிலுவையின் அவமானம் இன்னும் முடிவடையவில்லை. சிலுவையானது இன்று நாகரிகமான பாணியாகிவிட்டது என்பதும், சிலுவைப்பற்றின சிந்தனைகள் இல்லாமலும், அதன் அர்த்தம்பற்றின சிந்தனை இல்லாமலும், சிலுவையின் அவமானத்தையோ, நிந்தனையையோ, பாரத்தையோ சுமப்பதற்கான எவ்விதமான விருப்பம் இல்லாமலும், சிலுவை அணிகலனாக அணியப்பட்டு வருகின்றது என்பதும் உண்மைதான். ஆனால் போதகருடைய ஆவியை உடையவர்கள் இன்னமும் காணப்படுகின்றனர் மற்றும் இவர்களிடத்திலேயே அப்போஸ்தலர் இவ்வார்த்தைகளைக் கூறுகின்றார்: “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்;” “நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்’ “கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்” (ரோமர் 8:17; 2 தீமோத்தேயு 2:12; 1 யோவான் 3:16; கொலோசெயர் 1:24).
மனிதனாகிய கிறிஸ்து இயேசு பரிசுத்தராகவும், குற்றமற்றவராகவும், மாசில்லாதவராகவும், பாவிகளுக்கு விலகினவராகவும், பூரணராகவும் காணப்பட்டாலும், அவர் சரீர பலத்திலோ, உயரத்திலோ இராட்சதனாக இருக்கவில்லை. இதிலிருந்து பரிபூரண மனிதன் சரீர ரீதியில் இராட்சதன் போலவோ அல்லது காட்டுமிராண்டித்தனமான பலமுடையவனாகவோ இல்லை என்பது தெரிகின்றது; ஏனெனில் பரிபூரண மனிதன் எப்படிக் காணப்பட்டாரோ, அப்படியாகவே பரிபூரண மனிதனுக்கு ஈடுபலியாகும்படிக்கு, நமது கர்த்தராகிய இயேசுவும் காணப்பட வேண்டும். அநேக மனிதர்களிடத்தில் நாம் காணும் முரட்டுத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான/மிருகத்தனமான பலமானது, மற்றவர்களிடத்தில் காணப்படும் பலவீனம் மற்றும் வலுவின்மையைப்போன்ற சீர்கேடேயாகும்; சொல்லப்போனால் சீர்கேடு இன்னொரு விதத்தில் இப்படியாக (மிருகத்தனமாக) வெளிப்பட்டுள்ளது. மிகுந்த மிருகத்தனமான பலத்துடனும், முரட்டுத்தனமான இயல்புடனும் உள்ள நபருக்கு அபூர்வமாகவே, இந்தப் பலத்தின் அளவுக்குத்தக்கதான திறமிக்க மூளையின் ஆற்றலும், சீரான மனநிலையும் காணப்படுகின்றது. சீர்த்திருத்தலின் வேலை நிறைவடையும்போது, மனிதன் முரட்டுத்தனமான மற்றும் இராட்சத பலமுள்ள நிலைக்குக் கொண்டுவரப்படுவான் என்று நாம் எதிர்பார்க்கக்கூடாது; மாறாக சரீர ரீதியிலும், மன ரீதியிலும் சீரான மற்றும் நேர்த்தியான நிலைக்குக்கொண்டுவரப்படுவான். இன்னுமாக நமது கர்த்தருடைய மூன்றரை வருட ஊழியக்காலமானது பொது ஜனங்கள் மத்தியில் அவர் பண்ணின பிரசங்கம் தொடர்புடைய விஷயத்திலும், தம்முடைய சொந்த சத்துவத்தைக் கொடுத்து அவர் செய்திட்ட அற்புதங்கள் தொடர்புடைய விஷயத்திலும், அவரது உயிராற்றலை/சத்துவத்தைத் தொடர்ந்து செலவழித்ததாய் இருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. “அவரிடத்திலிருந்து வல்லமை (சத்துவம்) புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்” (லூக்கா 6:19).
கல்வாரியை நோக்கின பிரயாணம், ஒரு சோகம் நிறைந்த காட்சியாகும். சிலர் அழுதுகொண்டே ஊர்வலத்தில் பின்தொடர்ந்தனர்; இப்படியாக அனுதாபமும், இரக்கமும் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்திலேயே இயேசு திரும்பி, “நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று கூறினார் (லூக்கா 23:28). இரட்சகருடைய எண்ணங்களானது, அவரைப்பற்றியே முழுமையாய் மையம் கொண்டிருக்கவில்லை; மாறாக இன்னும் சீக்கிரத்தில் எவ்வாறு இந்த அநீதியானது ஜனங்கள் மீது பின்விளைவைச் செயல்படுத்தப்போகின்றது என்பதையே இயேசு சிந்தித்தவராய்க் காணப்பட்டார்; இந்த ஜனங்களின் பிரதிநிதிகள் தேவனுக்கும், மனிதர்களுக்கும் முன்பாக, “இவருடைய இரத்தப்பழி, எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும்” வரக்கடவது என்று கூறினவர்களாய் இருந்தனர். தானியேல் மற்றும் எரேமியாவின் தீர்க்கதரிசினங்களில் குறிப்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ள, எருசலேமின் மீது வரவிருக்கும் உபத்திரவத்தின் விவரங்களை நமது கர்த்தர் மனதில் கொண்டிருந்தார் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை (தானியேல் 9:24-27; எரேமியா 6). எருசலேம் முற்றுகையிடப்பட்ட சம்பவத்தையும், எவ்வாறு ஸ்திரீகளும், பிள்ளைகளும் அக்காலக்கட்டத்தில் விசேஷமாய்த் துன்பப்பட்டார்கள் என்பதையும் நினைவுகூரும் போது, எவ்வளவு சொல்லர்த்தமாகவே நமது கர்த்தருடைய வார்த்தைகள் நிறைவேறியுள்ளது என்பதை நாம் எண்ணுகின்றோம். ஒருவர் இப்படிப்பட்ட சோதனையான/கடுமையான சூழ்நிலைகளில் காணப்படும்போது அவர் தம்மைப்பற்றிக் குறைவாகவும், மற்றவர்களைப்பற்றி அதிகமாகவும் எண்ணுவது என்பது, பெருந்தன்மையுடைய மனதிற்கான அடையாளமாகும்.
கல்வாரியில் வந்து சேர்ந்த பின், சிலுவையில் அறையப்படுதல் நடைப்பெற்றது. வழக்கமாக சிலுவைத் தரையில் கிடத்தப்பெற்ற நிலையில், குற்றவாளி ஆணியினால் சிலுவையில் அறையப்படுகின்றார் மற்றும் நான்கு கட்டுறுதியான போர்ச்சேவகர்கள் சிலுவையைத் தூக்கி, அதனைக் குழிக்குள் பொருத்தி, நிற்கப்பண்ணுகின்றனர். சிலுவையானது செங்குத்தான நிலைக்குக் கொண்டுவரப்படும்போது, ஏற்படும் குலுக்குதலினால் காயத்தின் வலி அதிகரிக்கின்றது மற்றும் [R2787 : page 106] தொங்கிக் கொண்டிருக்கும் சரீரத்தினுடைய பாரப் பளுவினால், வலி கடுமையாய் அதிகரிக்கின்றது. சிலுவையில் அறையப்படுதல் என்பது, மிகவும் கொடூரமாய் மரிக்க வைக்கும் முறைமையாகும்; ரோமர்கள்கூட இந்த முறைமையைக் குற்றவாளிகள் மீதே, அதாவது சட்டத்தை மீறுபவர்கள், கலகவாதிகள் மற்றும் கொள்ளையர்களாகிய குற்றவாளிகள் மீதே செயல்படுத்துவர். இப்படியாகத் தீர்க்கத்தரிசியினுடைய வார்த்தைகளுக்கு இசைவாக இயேசு, “அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்” என்று பார்க்கின்றோம் (ஏசாயா 53:12).
நமது கர்த்தருடைய சிலுவையில், அவரது தலைக்கு மேலாக அவரது குற்றம், அதாவது அவர் குற்றவாளியெனத் தீர்ப்பு கூறப்பட்டு, மரணத் தண்டனைக்கு ஒப்புக்கொடுக்கப்படுவதற்கான காரணம் மூன்று மொழிகளில், “நசரேயனாகிய இயேசு, யூதருடைய இராஜா” என்று எழுதப்பட்டிருந்தது. இது அதிகாரத்திற்கும், வல்லமைக்கும் பிரதிநிதியாய்க் காணப்பட்ட ரோமர்களின் மொழியாகிய இலத்தீன் மொழியிலும், பண்பாட்டிற்கும், கல்விக்குமான மொழியாக திகழ்ந்த கிரேக்க மொழியிலும், தேவனுக்குப் பயப்படுவதாகக் கூறிக்கொள்ளும் ஜனங்களின் எபிரெய மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. இதை வாசித்தவர்களுக்கு, இது அவமானம் மற்றும் இகழ்ச்சிக்குரிய பட்டமாகவும், தேவதூஷணத்திற்கான அடையாளமாகவும் காணப்பட்டது; பட்டணத்துக்குப் போக்கும், வரத்துமாய் இருந்த திரளான ஜனக்கூட்டத்தினர், இந்த அவருடைய வாசகத்தினிமித்தம் பரியாசம் பண்ணினவர்களாகவும், இப்படிப்பட்ட உயர் கனங்களையும், மதிப்புகளையும் தமக்கென உரிமைப்பாராட்டிக்கொண்டு தவறு செய்ய முற்பட்ட விஷயத்தில், இயேசுவின் மோசடி மிகவும் தோல்வியடைந்ததினிமித்தமும் பரியாசம் பண்ணினவர்களாகவும் காணப்பட்டனர். தங்களுடைய கைதி மரித்துப்போவதைக் காணத்தக்கதாக பிரதான ஆசாரியர்களும், அதிகாரிகளுங்கூட அங்கு வந்திருந்தனர்; தங்களது நடவடிக்கையிலுள்ள அநீதி தொடர்புடைய விஷயத்தில் அவர்களுக்கு இருந்த கொஞ்சமான மனசாட்சி குத்துதலுங்கூட, இயேசுவை மரிக்கப்பண்ணுவதில் அவர்கள் அடைந்திட்ட வெற்றியிலும், இயேசு தம்முடைய ஆபத்துக் காலத்தில் தம்மை இரட்சிக்க வல்லமையற்றவர் போன்று காணப்பட்டதிலும், அவர்களுடைய தீர்ப்பு நிலைநாட்டப்பட்டதினால் அடக்கப்பட்டுவிட்டது போன்று தோன்றுகின்றது. பொறுப்பேற்றிருந்த போர்ச்சேவகர்களுங்கூட (இயேசு மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கபபட்ட) இக்காரியத்தில் மற்றொரு மோசடி வெளிப்பட்டுள்ளதாகவும், இராயனுடைய அதிகாரத்திற்கு எதிராக தன்னையே உரிமைப் பாராட்டிக்கொண்ட ஒருவர் அவமானமாய் மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டதாகவும் கருதினார்கள்.
இயேசுவின் தாயாரும், அவளுடைய சகோதரியும், சீஷனாகிய யோவானும், அவருடைய தாயாரும், மகதலேனா மரியாளும், கிலெயோப்பாவின் மனைவியாகிய மரியாளும் அங்குக் காணப்பட்டதாக, பதிவுகள் தெரிவிக்கின்றன (யோவான் 19:25; மத்தேயு 27:56). இவர்கள் அனைவரும் துக்கத்தில் காணப்பட்டார்கள்; இவர்களில் அநேகர் அழுதுகொண்டிருந்தனர். நமது கர்த்தரால் உரிமைப் பாராட்டிக்கொள்ளப்பட்டக் காரியங்கள் வஞ்சனைகள் என்று அதிகாரிகளும், ஜனங்களும் உறுதிப்படுத்தினவைகளை இவர்களால் மறுத்துக்கூற முடியவில்லை; அத்தகைய வல்லமையைக்கொண்டிருந்த அவர் மற்றும் தாங்கள் அத்தகைய ஒரு நம்பிக்கையை வைத்திட்ட அவர் எப்படி இங்ஙனம், தம்முடைய சத்துருக்களின் கரங்களில், ஒன்றும் செய்ய இயலாதவராகக் காணப்பட முடியும் என்பதை இவர்களால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. கலிலேயாவின் காற்றும், அலைகளும் அவருக்கு எவ்வாறு கீழ்ப்படிந்தன என்பதையும், அவரது கட்டளையின் வார்த்தைகளை எதிர்த்திட முடியாத அசுத்த ஆவிகள் எவ்வாறு பிசாசு பிடிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளியேற்றப்பட்டன என்பதையும் இவர்கள் நினைவுகூர்ந்தபோது, தற்போது அவர் இயலாதவராகக் காணப்படுவதை இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. கர்த்தரைத் தூஷிக்கிறவர்களுக்கு, அத்தருணத்தின்போது இவர்களால் எந்தப் பதிலையும் கொடுக்க முடியாவிட்டாலும், இவர்கள் கர்த்தரை அன்புகூர்ந்தார்கள்; ஏனெனில் அவருடைய வல்லமையும், அவருக்கான பட்டங்கள் என்னவாக இருப்பினும், பரம பிதாவுடனான தம்முடைய உறவை அவர் கொஞ்சம் மிகைப்படுத்தியே கூறியிருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி, “இந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும், ஒருக்காலும் பேசினதில்லை” மற்றும் மனுஷர் மத்தியில் தூய்மையின் விஷயத்திலும், ஆத்துமத்தின் உயர்தன்மையின் விஷயத்திலும், இயேசுவுக்கு ஒப்பாக எந்த மனுஷனையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. அவரை அன்புகூர்ந்து, அவரில் விசுவாசம் வைத்து, தாங்கள் சந்திக்கின்ற இந்த முரண்பாடான சூழ்நிலைக்குறித்த ஏதேனும் விளக்கங்களுக்காக காத்திருப்பதைக்காட்டிலும், இவர்களால் வேறு எதையும் செய்ய முடியவில்லை. அன்று முதல், இன்றுவரையிலான கர்த்தருடைய பின்னடியார்களின் விஷயத்திலும் இப்படியாகவே சில சமயங்களில் காணப்படுகின்றது. அவ்வப்போது புரிந்துகொள்ள முடியாத விதத்தில், கர்த்தருடைய வார்த்தைகள் தொடர்புடையதாய்ச் சில விஷயங்கள் நடைபெறுகின்றது மற்றும் தம்முடைய ஜனங்கள் பாடு அனுபவிக்கும்படிக்குச் சிலவற்றை கர்த்தர் அனுமதிக்கின்றார் மற்றும் அவர்களது எதிராளியானவர்கள் செயல்படுவதற்குச் சில அதிகாரங்களையும் அனுமதிக்கின்றார் மற்றும் இம்மாதிரியான தருணங்களில் அவருடைய பின்னடியார்கள் அமைதி மாத்திரமே காக்க வேண்டிய கட்டாயத்திற்குள் காணப்படுகின்றனர்; ஆனால் நெருக்கமான ஐக்கியத்தின் காரணமாகவும், இருதயத்தினுடைய உறவு காரணமாகவும், கர்த்தரை அறிந்திருப்பவர்களும், தேவனுடைய ஆழமான காரியங்களினால் போஷிக்கப்பட்டவர்களும், அவருடைய ஆவியை பானம் பண்ணினவர்களும், பிரச்சனைகளை/சிரமங்களை விவரிக்க முடியாவிட்டாலும், கர்த்தரில் விசுவாசமும், நம்பிக்கையும் முழுமையாய்க் கொள்ளவும், அவருடைய அனைத்துக் கிரியைகளும், வார்த்தைகளும், வழிநடத்துதல்களும் ஏற்றகாலத்தில் நியாயமென நிரூபிக்கப்படுவதற்குக் காத்திருக்கவும் முடியும்.
நமது கர்த்தரை மற்றவர்கள் நிந்தித்தும், அவருடைய மேசியாத்துவத்தை வெளிப்படுத்தவும், சிலுவையிலிருந்து இறங்கி வருவதற்கு வசைப்பாடியும் கொண்டிருந்தபோது, கள்வர்களில் ஒருவன் இழிவான தாக்குதல் பேச்சில் இணைந்துகொண்டான்; மரிக்க வேண்டிய நேரம் நெருங்குவதை உணர்ந்தவனாகவும், தனது சொந்த குற்றத்தை ஒத்துக்கொண்டவனாகவும் காணப்பட்ட மற்றொரு கள்வனோ, தன்னிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மைகளையும், குணலட்சணங்களையும் உடைய நபராக இயேசு காணப்படுவதை அடையாளங்கண்டு கொண்டது தெரிகின்றது. பதிவுகளைப் பொறுத்தமட்டில், இந்தக் கள்வன் மாத்திரமே, அவதூறுகளுக்கு எதிரான கண்டனத்தைத் தெரிவிப்பதற்கும், தம்மைத் தற்காத்துக்கொள்வதற்கென எதுவும் கூறாமலும் மற்றும் இப்படியாக நன்மை செய்யும் விஷயத்தில் பொறுமையுடன் கூடிய சகித்தலுக்கு அருமையான மாதிரியை முன்வைத்திட்ட சாந்தமும், மனத்தாழ்மையும் உள்ளவர் சார்பாக பேசுவதற்கும் தனது குரலை எழுப்பினவனாகக் காணப்படுகின்றான். ஒருவேளை அவர்கள் அறைக்கூவலிட்டதற்கு ஏற்ப, இயேசு தம்முடைய வல்லமையை நிரூபித்திருப்பாரானால் அவர், அவரை இகழ்ந்து, அவரைச் சிலுவையில் அறைந்தவர்களுடைய நம்பிக்கைகளைச் சிதைத்துப்போடுபவராக இருப்பது மாத்திரமல்லாமல், ஒட்டுமொத்த மனுக்குலத்தின் நம்பிக்கைகளையும் சிதைத்துப் போட்டவராகவும் இருந்திருப்பார். ஓ! அவர் மரணம் வரையிலும், அதாவது சிலுவையின் மரணப்பரியந்தம் காண்பித்த உண்மையினிமித்தம் நாம் எவ்வளவாய்க் களிக்கூருகின்றோம்! அவர் தம்முடைய வல்லமையைச் செயல்படுத்தாமலும், தம்மை விடுவிப்பதற்கென, “பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை” அழைக்காமலுமிருந்து, மாறாக ஆதாம் மற்றும் அவரது சந்ததிக்கான ஈடுபலியென, தம்முடைய சொந்த ஜீவனை ஒப்புக்கொடுத்து, தம்மைப் பலிச் செலுத்தினபடியாலும் நாம் எவ்வளவாய் அவரைத் துதிக்க வேண்டும்!
இயேசு நீதியினிமித்தமாக பாடு அனுபவித்து, பொறுமையுடன் சகிப்பதைக் கண்டதால் மாத்திரமேயல்லாமல், மற்றப்படி மனவருந்தின கள்ளனுக்கு இயேசுவைப் பற்றி எதுவும் தெரியாது; “தேவனற்றவர்களாகவும், நம்பிக்கையில்லாதவர்களுமாகிய” சிலருக்கு, உபத்திரவத்தின் மத்தியில் பொறுமையுடன் காணப்படும் கர்த்தருடைய பின்னடியார்களுடைய நடக்கையானது பலமான மற்றும் சிறந்த பாடமாக சில சமயங்களில் காணப்படுவது போன்றே, இந்த ஜீவனுள்ள நிரூபமானவர் (இயேசு) இந்த மனம் வருந்தின கள்வனிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார். கர்த்தருடனான இந்தச் சொற்ப நேரப் பழக்கத்தினால், இந்தக் கள்வன் ஒரு பரிசுத்தவானாகிவிட்டான் என்று குறிப்பிடுவதற்கு எந்த நிரூபணமும் காணப்படவில்லை; இந்தக் கள்வன் ஜெயங்கொண்டவனாகவும், இராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் உடன்சுதந்தரவாளியாகவும் காணப்படத்தக்கதான குணலட்சணத்தை அவ்வேளையில் கொண்டிருந்தான் அல்லது வளர்த்துக்கொள்ள முடிந்தது என்று சொல்வதற்கும் எந்த நிரூபணமும் இல்லை. இம்மாதிரியான கருத்துக்களுக்கு எதிர்மாறாகவே அனைத்தும் காணப்பட்டன. கள்வன் தான் ஒரு குற்றவாளி என்றும், நியாயப்பிரமாணத்திற்கு/சட்டத்திற்கு ஏற்ப மரணத்திற்குப் பாத்திரவான் என்றும், இயேசு குற்றமற்றவர் என்றும், எதிர்கால இராஜ்யம் தொடர்புடையதாய் இந்த அருமையான மனிதனாகிய இயேசு உரிமைப் பாராட்டிக்கொண்ட விஷயங்கள் கொஞ்சமேனும் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் உணர்ந்துமாத்திரம் கொண்டான். [R2788 : page 107] இயேசுவின் சார்பில் ஒரு வார்த்தையாகிலும் கூறிவிட்டு, பின்னர் ஒருவேளை இயேசு கூறியிருந்த பிரகாரமாகவே இராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு வரும்போது, தான் அவர் சார்பில் பேசினதைத் தயவாய் நினைவுகூர்ந்து, அவரது இராஜ்யம் வருகையில் தனக்கு இரக்கம் பாராட்டும்படிக்கு, இயேசுவிடம் கள்வன் வேண்டிக்கொள்ள வேண்டுமென்றிருந்தான்.
“இயேசு அவனை நோக்கி; இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே (என்பது அப்படியே ஆகக்கடவது, அப்படியே ஆகக்கடவது) உனக்குச் சொல்லுகிறேன் என்றார்”* (லூக்கா 23:43). [*ஆங்கிலத்தில் today என்ற வார்த்தைக்குப் பின்பே காற் புள்ளி இடம்பெற வேண்டுமே ஒழிய, முன்பு அல்ல; இப்படியாக இடம்பெறும்போதே நமக்கு, முன்பிருக்கும் உண்மைகளுக்கு இசைவாகப் பார்க்கப்பட முடியும், மற்றும் மற்ற வேதவாக்கியங்களுக்கும் இசைவாகப் பார்க்கப்பட முடியும். ஆரம்பத்தில் வேதவாக்கியங்களில் நிறுத்தல் குறியிடுதலானது (Punctuation) கிடையாது. நிறுத்தல் குறியீடு சமீபக்காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது]. கள்வன் கேட்டுக்கொண்டது, அப்படியே ஆகக்கடவது ஒழிய மற்றப்படியல்ல. பாவம் உலகத்தில் பிரவேசித்தபோது, தண்டனையின் ஒரு பாகமாக, இழந்துபோகப்பட்டதும், கல்வாரியில் அப்பொழுது இயேசுவால் நிறைவேற்றப்பட்ட பலியினால் மீட்கப்பட்டதுமான பரதீஸ், இயேசுவின் இராஜ்யம் வரும்போது, அந்த இராஜ்யத்தின் விளைவாக திரும்ப அடையப்படும். அவர் தம்முடைய இரண்டாம் வருகையின் போது, இராஜ்யத்தில் வருகையில், கள்வன் கேட்டுக்கொண்டதுபோல, இராஜ்யத்தில் கள்வனை நினைவுகூருவார் மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி நமது அருமை மீட்பருடைய சோதனையான வேளையில், ஆறுதலான வார்த்தைகளைப் பேசினதற்காக திரளான பலன்களைக் கள்வன் அடையப்பெறுவான். ஆனால் இந்தப் பலனானது சிங்காசனத்திலோ, இராஜ்யத்திலோ, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாகக் காணப்படும் ஸ்தானமாக நிச்சயமாய் இருக்கப்போவதில்லை; ஏனெனில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மத்தியிலான இந்த ஸ்தானம் என்பது, தேவனுடைய அருமையான குமாரனுக்கொத்த சாயலை அடைபவர்களுக்கு மாத்திரமே கொடுக்கப்படுகின்றது (ரோமர் 8:29). இதைத் தவிர பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாத எவரும் இந்த ஸ்தானத்தை அடையவும் முடியாது மற்றும் இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்குப் பிற்பாடு, பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானது, பணிவிடை வீட்டாரிலிருந்து, புத்திரர் வீட்டாருக்குள் கொண்டுவரப்படுவதற்கெனக் காத்திருந்தவர்கள்மேல் வருவதற்கு முன்பு வரையிலும், புதிய சுபாவத்திற்குள்ளாக ஜெநிப்பிக்கும் வல்லமையாகப் பரிசுத்த ஆவியானது அருளப்படவில்லை (யோவான் 1:12; 7:39).
கள்வன் நன்கு குணலட்சணத்தில் வளர்ச்சியடைந்து, இராஜ்யத்தில் ஏதேனும் பங்கடைவதற்கு முன்னதாகவே, சீக்கிரத்தில் மரித்துப்போய்விட்டான்; அதாவது யோவான் ஸ்நானன் சீக்கிரமாய் மரித்துப்போனதுபோல மரித்துப்போய்விட்டான். இந்த யோவான் ஸ்நானனைக்குறித்து நமது கர்த்தர், யோவானைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கத்தரிசி இல்லையென்றாலும், “பரலோக இராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் (இராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட சபையாக, உடன்சுதந்தரர்களாக இருப்பவர்கள்) அவனிலும் பெரியவனாயிருக்கிறான் என்று” கூறினார் (மத்தேயு 11:11). இராஜ்யம் வரும்போதும் மற்றும் பரதீஸ் திரும்பக்கொடுக்கப்படும்போதும், மனம் வருந்தின கள்வன் மாத்திரமல்லாமல், மனம் வருந்தாத கள்வனும், அந்த ரோம போர்ச்சேவகர்களும், அந்த இரத்த வெறிக்கொண்டிருந்த வேதபாரகர்களும், பரிசேயர்களும், ஆசாரியர்களுங்கூட, பரதீசில் காணப்படுவார்கள். இவர்கள் தங்களுடைய சொந்த தகுதியினால் அங்குக் காணப்படாமல், மாறாக இவர்களது தண்டனையை ஏற்றுக்கொண்டு, இவர்கள் ஆயிரவருட பரதீசில் தேவனைப் பற்றின அறிவிற்குள் வருவதற்கும் மற்றும் இவர்கள் விரும்பும் பட்சத்தில் கீழ்ப்படிதல் வாயிலாக நித்தியமான ஜீவனை அடைவதற்குமான முழு வாய்ப்பையும் இவர்களுக்கு உறுதியளித்தக் கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியம் காரணமாகவே இவர்கள் பரதீசில் காணப்படுவார்கள்.
“இன்றைக்கு என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்ற வார்த்தைகள் எத்துணை அழுத்தம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது; “என்னுடைய சார்பிலிருந்து இயலாமை வெளிப்படுவது போன்று தோன்றினாலும் மற்றும் என்னுடைய சத்துருக்கள் வெற்றியடைந்துவிட்டதுபோன்று தோன்றினாலும், உன்னுடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கப்படும் என்றும், நான் என்னுடைய இராஜ்யத்தில் வரும்போது, பரதீஸ் திரும்ப அடையப்பெறும் மற்றும் தெய்வீகத் திட்டத்தில் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களை அருளிட நான் அங்கு இராஜாவாகவும், என்ற ஆசாரியனாகவும் இருக்கையில், நீ ஆசீர்வதிக்கப்படத்தக்கதாக அங்குக் காணப்படுவாய் என்றும், நான் இன்றைக்கு உன்னிடம் கூறுகின்றேன்” விதத்தில் இயேசு கூறினார். ஏதேன் தோட்டமே, இழந்துபோகப்பட்ட பரதீசாகும் மற்றும் இது ஏற்றவேளையில், இதையும் (ஏதேனையும்) மனுக்குலத்தையும் தம்முடைய பலியினால் விலைக்கு வாங்கினவரால் பெரிய அளவிலும் மற்றும் பிரமாண்டமான அளவிலும் திரும்பக்கொடுக்கப்படும் (எபேசியர் 1:14; வெளிப்படுத்தல் 2:7).
சிலுவையில் அறைந்தவுடனே, இயேசுவைப் பொறுப்பேற்றிருந்த நான்கு போர்ச்சேவகர்களும் தங்களுக்குள் அவரது வஸ்திரங்களைப் பங்கு போட்டுக் கொண்டார்கள்; ஆனால் இயேசுவினால் அணியப்பட்டிருந்த உயர்தரமான மற்றும் விலையுயர்ந்த நெய்யப்பட்ட அங்கியானது, போர்ச்சேவகர்கள் அனைவராலும் விரும்பப்பட்டதினால், அதற்காகச் சீட்டுப்போட்டனர். அந்த அங்கியானது, கிறிஸ்துவினுடைய நீதிக்கு, அதாவது கிறிஸ்துவோடு கூடப் பாடுபட்டு, இராஜ்யத்தில் அவருடன் கூட உடன் சுதந்தரத்துவத்தை அடைவதற்குரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும், மிகுந்த கிருபைப் பெற்றவர்களுக்கு, இந்தச் சுவிசேஷ யுகத்தில் அருளப்படும் மிகவும் விலையேறப் பெற்ற கலியாண வஸ்திரத்திற்கு அருமையான அடையாளமாய் இருக்கின்றது. கிறிஸ்துவினால் தரிப்பிக்கப்படும் நீதியாகிய இந்த வஸ்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சிலாக்கியம்/பாக்கியம் அல்லது சீட்டு, நாகரிகமான தேசங்களிலுள்ள நம் பேரில் பிரதானமாய் விழுந்துள்ளது; நமக்கே கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையான திட்டம் குறித்த அறிவின் வெளிச்சம் அருளப்பட்டுள்ளது. அந்த அங்கியானது, அடையாளப்படுத்தும் கிருபைகளைப் பெற்றுக்கொள்வதற்குரிய சிலாக்கியம் (அ) சீட்டு நம்முடையதாய் இருக்கின்றபடியால் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய்க் காணப்பட வேண்டும். இதை உணர்ந்துகொள்பவர்கள், தாங்கள் உணர்ந்துகொண்டுள்ளதை, தங்களது அன்றாட ஜீவியத்தின் சகல காரியங்களிலும் வெளிப்படுத்துகிறவர்களாகவும், உலகத்திலிருந்து தங்களது வஸ்திரத்தைக் கறைப்படாமல் காத்துக்கொள்வதற்கு நாடுபவர்களாகவும், வஸ்திரம் கறைதிறை அற்றதாகவும், கர்த்தருடைய குணலட்சணத்தினுடைய கிருபைகளினால் சித்திரதையலிடுவதற்கு சகல நாடுபவர்களாகவும் காணப்படுவார்கள்; இப்படியாக தாங்கள் பிரியமானவருக்குள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நாடுபவர்களாகவும் காணப்படுவார்கள் (சங்கீதம் 45:14; யாக்கோபு 1:27).
சிலுவையில் அறையப்பட்ட பின் மதியம் துவங்கி, நமது கர்த்தர் மரித்தப் பிற்பாடு, மூன்று மணிவரையிலும் நீடித்திருந்த இருளானது, மிகவும் குறிப்பிடத்தக்கதான ஒன்றாகும் மற்றும் இது ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினது. புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்டு, “பேதுருவின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் சுவிசேஷமானது, இந்த இருளைக் குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: “அநேகர் இரவு வேளை என்றெண்ணி, விளக்குகளோடு போய்வந்தார்கள்” மற்றும் இயேசு சிலுவையிலிருந்து எடுக்கப்படும்போது, பூமியதிர்ச்சி ஏற்பட்ட வேளை வரையிலும் இருள் நீடித்திருந்தது; “பின்னர் சூரியன் பிரகாசம் காணப்பட்டபோது, அது ஒன்பதாம் மணிவேளை என்று அறியப்பட்டது” என்பதாகும்.
நமது கர்த்தருடைய மரணம் சம்பவித்தத் தருணத்தில் பூமியதிர்ச்சி ஏற்பட்ட அதேவேளையில், ஆலயத்தின் திரைச்சீலையும் கிழிந்தது. திரைச்சீலை என்று சொல்லும்போது, அது கிழிவது என்பது ஒரு சாதாரணமான/அற்ப காரியம் எனத்தோன்றலாம்; ஆனால் இது ஓர் அற்ப காரியமல்ல, ஏனெனில் இந்தத் திரைச்சீலையானது மிகவும் பெரியதாகவும், மிகவும் கனமான திரையாகவும் இருந்தபடியால், இது கிழிவது ஒரு சாதரணமான காரியமல்ல, மாறாக இது கிழிக்கப்படுவதற்கு இயற்கைக்கு அப்பாற்பட்டப் பலத்தினாலேயே கூடும். இந்தத் திரைச்சீலையானது, அறுபது அடி நீளமும், முப்பது அடி அகலமும், ஐந்து அங்குலம் பருமன் [R2788 : page 108] கொண்டது என்றும், எழுபத்திரண்டு சதுர துண்டுகள் இணைக்கப்பெற்ற ஒன்று என்றும் எடர்சேம் அவர்கள் விவரிக்கின்றார். இந்தத் திரைச்சீலையானது அடையாளமான அர்த்தம் கொண்டவை என்று (ஆசரிப்புக்கூடாரத்தின் நிழல்களில்) பார்த்திருக்கின்றோம்; இது நமது கர்த்தருடைய பலி நிறைவேற்றப்பட்டதின் வாயிலாக, அவருடைய மாம்சம் பலியாக்கப்பட்டதன் காரணமாக, திரைக்கு அப்பால், அவர் நமக்கு ஜீவனுக்கான புதிய மார்க்கத்தைத் திறந்து வைத்ததை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஆகவே தேவனாகிய கர்த்தர், திரையைக் கிழிப்பதன் வாயிலாக, இயேசுவின் மரணமானது மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு, அதாவது பரலோகத்திற்கு வருவதற்கான வழியைச் சாத்தியமாக்கிற்று என்பதை வெளிப்படுத்தினவராக இருந்தார்; இன்னுமாக திரைச்சீலையானது மேல் துவங்கி, கீழ்வரை கிழிந்தது என்ற காரியமானது, இது தேவனால் நடைப்பெற்றது என்றும், அதன் ஆரம்பம் துவங்கி, முடிவுவரை மனித திட்டமிடுதலும், பிரயாசமும் அதில் இல்லையென்றும் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.
நமது கர்த்தர் தம்முடைய ஆவியை, தமது ஜீவனைப் பிதாவின் கையில் ஒப்புவிக்கும் வண்ணமாகக் கூறின வார்த்தைகளானது, ஸ்தேவானின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றது (அப்போஸ்தலர் 7:59). நம் அனைவரையும் போல், ஸ்தேவானுக்கும் ஒப்புவிக்கிறதற்குக் கொஞ்சமே இருந்தது; ஆதாமிடமிருந்து வரும் ஜீவனுக்கான ஆவி, அதாவது ஆதாம் வழியான ஜீவன் ஏற்கெனவே பறிமுதல் பண்ணியாகிவிட்டது மற்றும் தேவனிடம் ஸ்தேவானால் ஒப்புவிக்கமுடிந்த ஜீவன் என்பது, ஜீவனளிப்பவராகிய இயேசுவின் மூலமாய், விசுவாசத்தினால் அடையப்பெற்ற, “கருதப்பட்ட ஜீவனேயாகும்.” நமது கர்த்தருடைய விஷயத்திலோ, காரியங்கள் வித்தியாசமாய்க் காணப்பட்டது. பாவத்தினால் ஒருபோதும் பறிமுதல் செய்யப்படாத, ஜீவனுக்கான உரிமைகளை இயேசு கொண்டிருந்தார் மற்றும் அதையே இயேசு ஆதாமுக்கும், அவரிடமிருந்து பறிமுதல் பண்ணப்பட்ட ஜீவனின் ஆவிக்குமான ஈடுபலி விலைக்கிரயமாக, பிதாவிடம் ஒப்புவித்தார்; எனினும் பிதாவினுடைய சொந்த வல்லமையினால், தாம் மரணத்திலிருந்து எழுப்பப்படுவார் என்பதான பிதாவின் வாக்குத்தத்தத்தில் நமது கர்த்தர் உறுதியாய் விசுவாசம் கொண்டிருந்தார்; இன்னுமாக ஜீவனுக்குள் எழுப்புவதாக வாக்களித்துள்ள தேவன், அதைச் செய்வதற்கும், தம்மை மரணத்தின் நிலையிலிருந்து, திவ்விய சுபாவத்திற்கும், அதன் மகிமைக்கும், கனத்திற்கும், அழியாமைக்கும் கொண்டுவருவதற்கும் மிகுதியாய் விருப்பமும், வல்லமையும் உடையவராய் இருக்கின்றார் என்றும் இயேசு தேவனில் விசுவாசம் கொண்டிருந்தார். இப்படியாக நமது கர்த்தர் தமது ஆவியை விட்டார்; அதாவது ஜீவனுக்கான ஆவியை விட்டார்; அதாவது மரித்தார் மற்றும் பிதா தம்முடைய சொந்த வல்லமையினால், மூன்றாம் நாளில் தம்மை மரணத்திலிருந்து எழுப்புவது வரையிலும், மரணத்திலேயே காணப்பட்டார்.
இறுதி காட்சிகள் நமது கர்த்தருடைய நண்பர்களுக்கு மாத்திரமல்லாமல், அவருடைய சத்துருக்களுக்குங்கூட மிகவும் வியப்பான எண்ணங்களைத் தூண்டினவைகளாக இருந்தது என்பது நிச்சயமே மற்றும் நிசப்தமும், கவலையின் உணர்வுகளும் நிலவின. இருள் வரவர அவருடைய சத்துருக்களின் வசைமொழிகள் நின்றன; இறுதியில் அநேகர், அங்கு நிகழ்ந்தவைகள் குறிப்பிடத்தக்கவைகள் என்று ஒத்துக்கொள்ளும் நிலையில் காணப்பட்டனர் மற்றும், “மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்” என்று கூறி போதகர் உரிமைப் பாராட்டியிருந்த விஷயங்களை ஓரளவுக்கு உறுதி செய்துகொண்டார்கள் (மாற்கு 15:39).
நமது கர்த்தருடைய மரணத் தருவாயில் வெளிப்பட்ட மகத்துவமான தன்மைகளானது, அவருடைய நண்பர்களில் சிலருக்கு மிகுந்த தைரியத்தை அளித்ததாகத் தெரியவருகின்றது; இப்படிப்பட்ட நண்பர்களில் இருவர் யோசேப்பும், நிக்கொதேமுவும் ஆவார்கள்; இவர்கள் இயேசுவை தண்டனைத் தீர்ப்புக்குள்ளாக்கின ஆலோசனை சங்கத்தின் அங்கத்தினர்கள் ஆவார்கள். இவர்கள் ஒன்றில் தண்டனை தீர்ப்பு வழங்கும்போது இல்லாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தண்டனை தீர்ப்பிற்கு எதிராக தங்களது வாக்குகளைத் தெரிவித்தவர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்கள், “யூதருக்குப் பயந்ததினால்,” இயேசுவிடத்திலான தங்களது ஈடுபாட்டை ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், தங்களது புகழ் குறைந்துவிடுமோவென ஒருகாலத்தில் மிகவும் ஜாக்கிரதையாய்க் காணப்பட்டனர்; ஆனால் இப்பொழுதோ கர்த்தர் தங்களது நண்பரென ஒத்துக்கொள்வதற்கும் அவரது அடக்கச் செயல்களை ஒழுங்குப்படுத்துவதற்கும் தைரியமடைந்தனர் (யோவான் 19:39). இந்த ஆஸ்தியும், செல்வாக்கும் மிகுந்த மனுஷர்கள், தாமதமாய் இயேசுவைக்குறித்து ஒப்புக்கொள்ளும் காரியமானது, வழியையும், சத்தியத்தையும், ஜீவனையும் ஒப்புக்கொள்வது தொடர்புடைய விஷயத்தில் ஆஸ்தியும், செல்வாக்கும் மிகுந்த மனிதர்களுக்குத் தடையாக இருக்கும் விசேஷித்த சிரமங்களை நமக்கு நினைப்பூட்டுகின்றது. இன்று அநேக ஐசுவரியவான்களும், செல்வாக்குமிக்க அநேகரும் (churchianity) சபைகள் மயமான மார்க்கத்தின் பிரபலம் காரணமாக, சபைகளின் ஊழியங்களில் முன்னிலை ஸ்தானம் வகிக்கின்றவர்களாய்க் காணப்படுவது உண்மையே; ஆனால் உண்மையான சபையாகிய, “கிறிஸ்துவின் சரீரத்தை,” சபைகள் மயமான மார்க்கத்துடன் (churchianity) குழப்பிப்பார்க்கக்கூடாது; இந்த உண்மை சபையானது, கர்த்தர் போன்று, உலகத்தின் கண்ணோட்டத்தில் செல்வாக்கு, அதிகாரம் (அ) ஐசுவரியம் அற்றதாகக் காணப்படுகின்றது. இந்தப் பாவநிவாரண நாள் எனும் மாபெரும் நாடகம் நிறைவடையும்போது, கிறிஸ்துவின் கடைசி அங்கத்தினன் அவனது பலியை நிறைவேற்றி முடிக்கும்போது, ஐசுவரியவான்களிலும், செல்வாக்குமிக்கவர்களிலும் அநேகர் இந்தத் தாழ்மையுள்ளவர்களைக் கனப்படுத்துவதற்கும், இவர்களின் கல்லறைகளை அலங்கரிப்பதற்கும் முன்வருவார்கள் என்பதில் ஐயமில்லை. பலி [R2789 : page 108] செலுத்துவதற்கான காலத்தில் இந்த ஐசுவரியவான்கள் தைரியமாய் முன்வந்து, தங்களது சொந்த பலிகளை, பலபீடத்தின் கொம்புகளில் கட்டி வைத்திருந் திருப்பார்களானால், இது அவர்கள் தங்களது அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் உறுதிபடுத்திக்கொள்ளும் விஷயத்தில் இன்னும் அதிகம் நன்மைக்கு ஏதுவானதாய் இருந்திருக்கும் (சங்கீதம் 118:27).
கிறிஸ்தவ சமயம் எனும் பெயரிலும், வேதவாக்கியங்களை வைத்துக் கொண்டும், தேவனுக்கும், மனிதனுக்கும் இடையிலான ஒப்புரவாகுதல் தொடர்புடைய விஷயத்தில் பல்வேறு கோட்பாடுகள் வந்துள்ளது. கல்வாரியில், தம்முடைய மரணத்தில், நமது கர்த்தரால் நிறைவேற்றப்பட்ட வேலையானது, நித்தியமான ஜீவன் மற்றும் பரம பிதாவுடன் ஒப்புரவாகுதல் தொடர்புடைய விஷயத்திலுள்ள சகல மனிதனுக்கான நம்பிக்கைகளுக்கு அஸ்திபாரமாகக் காணப்படுகின்றது என்று சிலர் ஒப்புக் கொள்கின்றனர்; ஆனால் மற்றவர்களோ, இதை மறுதலித்து, மனிதனுக்கும், தேவனுக்கும் இடையிலான உறவானது, ஒருபோதும் துண்டிக்கப்படவில்லை என்றும், மீண்டும் ஒப்புரவாகிக்கொள்வதற்கென எந்த ஈடுபலியும் தேவையில்லை என்றும், எந்த விழுகையும் நடைபெறவில்லை என்றும், ஆகவே முன்னிருந்த நிலைக்குக்கொண்டு வரப்படுவதற்கு அவசியம் எதுவுமில்லை என்றும், இப்படியான எந்தத் திரும்பப்பெறுதலும், நமது கர்த்தர் இயேசுவின் மரணத்தினால் அடையப்பெறவில்லை என்றுமுள்ள காரியங்களை முன்வைக்கும் கோட்பாடுகளைக்கொண்டு வருகின்றனர். நமது கர்த்தரின் மரணத்தினுடைய, மீட்பு எனும் பலனை மறுதலிக்கும் இந்தக் கோட்பாடுகளானது, கர்த்தர் மனுக்குலத்திற்கு ஒரு மாபெரும் போதகராக மாத்திரமே பணியாற்றினாரே ஒழிய, எந்த விதத்திலும் மீட்பராக இருந்ததில்லை என்று கூறி, அவருக்கான கனத்தை எடுத்துப்போடுகின்றதாய் இருக்கின்றது. ஈடுபலியைப் புறக்கணிக்கும் இந்தத் தவறான கோட்பாடுகளானது அதிகரித்தும், உறுதியடைந்து கொண்டும், மற்றும் திவ்விய வார்த்தைகளிலும், யுகங்களுக்கடுத்த திட்டங்களிலும் நன்கு வேரூன்றாதவர்களையும், உறுதியடையாதவர்களையும் நாளுக்குநாள் அதிகம் ஈர்த்துக்கொண்டும் வருகின்றது. ஆகவே யோர்தானில் கர்த்தரால் பண்ணப்பட்ட அர்ப்பணிப்பில் ஆரம்பித்து, கல்வாரியில் அவரது சுவாசம் நின்றதுடன் நிறைவடைந்த, நமது கர்த்தருடைய பலியெனும் மாபெரும் காரியத்தின்/நடவடிக்கையின் மீதே, இரட்சிப்பிற்கான முழுத் திட்டமும் மையங்கொண்டுள்ளது எனும் வேதவாக்கியங்களின்படியான உண்மையின் மீது விசேஷித்த கவனத்தைக் கொண்டுவருவது தகுந்த காரியமாகும். [R2789 : page 109] இதனை விசுவாசித்து, ஏற்றுக்கொள்பவன் அந்தப் பலியின் புண்ணியத்தில் தனக்கான பங்கை அடைவதற்குரியவனாகிறான். இதனை மறுதலிக்கிறவன், தேவனிடத்தில் ஒப்புரவாகுவதற்கும், நித்திய ஜீவனை அடைவதற்குமுரிய ஒரே நாமத்தையும், ஒரே விசுவாசத்தையும் மறுதலிக்கிறவனுமாயிருக்கிறான்.
ஒரு கோட்பாட்டினால் மனிதன் இரட்சிக்கப்படுவான் என்று நாம் கூறவரவில்லை, மாறாக இந்தச் சுவிசேஷ யுகத்தில் தேவனுடன் இசைவுக்குள் வருகின்றவர்கள் அனைவரும், கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மீதான விசுவாசத்தின் மூலமாக, தேவனிடம் வர வேண்டும் என்பதினால், தெளிவான கோட்பாடுகளின் மீதான தெளிவான விசுவாசத்தை அல்லாமல், வேறு விசுவாசத்தைத் தேவனால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நீதிமானாக்கப்படுதலுக்கும், ஒப்புரவாகுதலுக்குமான அடித்தளமாக இருக்கும் கிறிஸ்துவின் மரணத்தைப் புறக்கணிக்கும் எந்தக் கோட்பாடுகளும் வேதவாக்கியங்களால் அங்கீகரிக்கப் படாதவைகள் என்றும், இப்படியான கோட்பாடுகளினால் எவ்விதமான பயனுமில்லை என்றுமே நாம் கூறுகின்றோம். ஆகையால் வேறு ஏதாகிலும் ஒரு விசுவாசத்தின் அடிப்படையிலும், வேறொரு கோட்பாட்டின் அடிப்படையிலும், தேவனிடம் உறவு கொண்டிருப்பதாகக் கூறிக்கொள்பவர்கள் அனைவரும் தங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றனர்; இப்படிப்பட்டவர்கள் பிதாவுடனோ, குமாரனுடனோ ஒப்புரவாகாதவர்களாகவும், தங்களது பாவங்களிலிருந்து நீதிமானாக்கப்படாதவர்களாகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கத்தினர்களாகாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.
ஆகவே பாவ நிவாரணத்தின்/ஒப்புரவாகுதலின் கோட்பாடுகளைப்பற்றின தெளிவான புரிந்துகொள்ளுதல் உடையவர்கள் மாத்திரமே நீதிமானாக்கப்படுகின்றனர் என்று நாம் சொல்ல வரவில்லை; மாறாக இன்று நிலவும் தெளிவான புரிந்துகொள்ளுதல் இல்லாமலேயே, இருண்ட யுகங்களுடைய காலபகுதியில் தேவனுடைய அருமையான ஜனங்களில் அநேகர் வாழ்ந்து, மரித்துள்ளனர் என்று நாம் நம்புகின்றோம். கோட்பாட்டைக் காணத்தவறினாலும், தேவனுடைய உண்மையான ஜனங்கள் அனைவரும், கிறிஸ்துவின் மரணமே, பிதாவுடனான நம்முடைய ஒப்புரவாகுதலை ஏற்படுத்திற்று என்றும், கிறிஸ்துவின் மரணத்திலேயே, நித்திய ஜீவன் அடைவதற்குரிய சகல நம்பிக்கைகளும் மையங்கொண்டுள்ளது என்றுமுள்ள உண்மையை அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். தொகுதி.5, பார்க்கவும்.
தேவ ஆவியினால் ஏவப்படாதவைகளாகவும், அனுமானமானவைகளாகவும் இருப்பவைகளைக் காட்டிலும், ஏவப்பட்டுப் பேசப்படும் அப்போஸ்தலனின் வார்த்தைகளை விரும்புபவர்களுக்கு, நமது ஆதார வசனமே, ஈடுபலிக்கு எதிரான சகல கோட்பாடுகளுக்கு எதிராக போதுமானதாய்ப் பதிலளிக்கக்கூடியதாய் இருக்கின்றது. ஈடுபலிக்கு எதிரான கோட்பாடுகளில் ஒன்றான கிறிஸ்தவ விஞ்ஞானம் (Christian science) என்பது, “பாவம் என்ற ஒன்று இல்லை” என்பதினால், தண்டனை என்ற ஒன்றும் இல்லை என்றும், “மரணம் என்ற ஒன்று இல்லை” என்பதினால், கிறிஸ்துவும் மரிக்கவில்லை என்கிறது. ஆனால் பாவம் வந்தது என்றும், அதினால் தண்டனை வந்தது என்றும், மரணமும் வந்தது என்றும், கிறிஸ்துவின் மரணமானது, நாம் பாவத்திலிருந்து மீட்கப்படுவதற்காக நடைபெற்றது என்றும் அப்போஸ்தலர் வேதவாக்கியங்களுக்கும், காரியகாரணத்திற்கும் இசைவாய் உறுதியளிக்கின்றார். “பரிசுத்தவான்களுக்கு ஒருமுறை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தில்” உறுதியுடன் நிலைநிற்போமாக (யூதா 3).