R5541 (page 284)
மாற்கு 14:12-25
“ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.” 1 கொரிந்தியர் 11:26
இந்த ஒரு பாடத்தினுடைய விஷயமானது, இயேசுவினுடைய பூமிக்குரிய ஊழியத்தின் மிகச் சுவாரசியமான அம்சங்களில் ஒன்றாகும். அப்போஸ்தலர்களுடனான தம்முடைய கடைசி இராப்போஜனமாக இது இருக்கப்போகின்றது என்பதை அப்போஸ்தலர்கள் அறியாதிருந்தார்கள் என்று அவர் அறிந்திருந்தார். அவர் தம்முடைய மரணம் சமீபித்திருக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தபோதிலும், அவர் குறிப்பிட்டிருந்தது போன்றதொரு விபரீதமானது மிகவும் சமீபமாய் இருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முடியாதவர்களாய் அவரது சீஷர்கள் காணப்பட்டனர். ஆனால் இயேசுவோ தாம் குறிப்பிட்டவைகளின் அர்த்தத்தினை முழுமையாய் உணர்ந்தவராய், தம்முடைய வேலையின் நிறைவிற்காய் ஆவலுள்ளவராய் இருந்தார். அந்த நாளினுடைய முடிவின்போது, அவரும், அவரது சீஷர்களும் பஸ்காவைப் புசிக்க சென்றபோது இயேசு: “நான் முழுக வேண்டிய ஒரு ஸ்நானம் உண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்” என்றார்; அது அடுத்தநாள் நிறைவேறின மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானமாகும்.
பஸ்காவை ஆயத்தம் பண்ணும்படிக்குப் பேதுருவும், யோவானும் அனுப்பிவைக்கப்பட்டிருந்த இரண்டு சீஷர்களாகக் காணப்பட்டனர். இப்படி இயேசுகூறி அனுப்பினபோது, அவர் பெத்தானியாவில், லாசருவின் வீட்டில் காணப்பட்டார் என்பது நிச்சயமே. இயேசுவும், அவரது சீஷர்களும் பஸ்காவைப் புசித்ததான அதே பெரிய மேல்வீட்டறையில்தான், அப்போஸ்தலர்களும், மற்றவர்களும் பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்திற்குக் காத்திருக்கத்தக்கதாகக் கூடியிருந்தார்களென அனுமானிக்கப்படுகின்றது. இந்த ஓர் அறையானது இன்னமும் பாரம்பரியத்தினால் அடையாளம் காண்பிக்கப்படுகின்றது, எனினும் கிறிஸ்தவர்கள்மேல் விசேஷித்தப் பொறாமை கொண்டவர்களான முகமதியர்களின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
அதே நாளினுடைய மாலையில் இயேசு பன்னிரண்டு பேரோடுகூட இவ்வறையில் கூடினார்; அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் யூதருடைய பஸ்காவினை, அதற்குக் குறிக்கப்பட்ட வேளையில் ஆசரிப்பதற்கெனக் கூடினார்கள். ஆட்டுக்குட்டியானது சுடப்பட்டிருந்தது மற்றும் புளிப்பில்லாத அப்பம் ஆயத்தம் பண்ணப்பட்டிருந்தது மற்றும் கசப்பான கீரைகளும் இருந்தன. அனைத்துமே ஆதிக் கட்டளைக்கு அப்படியே ஒத்திருந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு நிச்சயமே; ஏனெனில் புதிய யுகம் இன்னும் வராததினால் இயேசுவும், அவரது அப்போஸ்தலர்களும் மற்ற யூதர்களைப்போன்று யூத பிரமாணத்தினுடைய ஒவ்வொரு அம்சத்திற்கும் கட்டுப்பட்டவர்களாய் இருந்தனர். இயேசுவின் பலிக்கான தெய்வீக அங்கீகரித்தலையும், முழுமையான அர்ப்பணித்தலின் வாயிலாக அவருடைய சீஷர்களாகி உள்ளவர்கள் அனைவருக்குமான தெய்வீக ஏற்றுக்கொள்ளுதலையும் குறிக்கின்றதான பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்திற்கான வேளை வருவதுவரையிலும், நியாயப்பிரமாணத்தினுடைய ஒவ்வொரு அம்சமும் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாகவே காணப்பட்டது.
தாங்கள் மாபெரும் துன்பம் நிகழப்போவதற்கு முந்தைய நாளில் காணப்படுகின்றார்கள் என்பதை உணர்ந்துகொள்வதற்குப்பதிலாக, இயேசு சீக்கிரமாய் இராஜாவாகச் சிங்காசனத்தில் அமருவார் என்று அப்போஸ்தலர்கள் நம்பினவர்களாய் இருந்தனர். அவரது சிங்காசனத்தில், அவரோடுகூடத் தாங்கள் உட்காருவதற்கான அவருடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்தார்கள். இந்த வாக்குத்தத்தத்தை அடைவது மிகவும் அருகாமையில் காணப்படுவதுபோன்று அவர்களுக்குத் தோன்றினபடியால், தாங்கள் இராஜ்யத்தில் பெறப்போகின்றதான கனத்தின் நிலைகள் குறித்த சிந்தனைகளே அவர்களுக்குக் காணப்பட்டது. இதற்காகப் பிடிவாதமாய்ப் போராடவில்லையெனில், மிகுந்த கனமிக்க ஸ்தானங்கள் தங்களுக்குக் கிடைக்காது என்பதாக அவர்கள் எண்ணினார்கள். அவர்களுடைய மனநிலையை உணர்ந்தவராக இயேசு, “புறஜாதியாரின் இராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்பேலாவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்” என்றார்.
இவைகள் அவர்களுக்குப் புரிந்துகொள்வதற்குக் கடினமாய்க் காணப்பட்டதான புதிய கொள்கையாய் இருந்தன; மற்றும் இன்றுவரை இது இயேசுவின் பின்னடியார்கள் முழுமையாய்ப் புரிந்துகொள்வதற்குச் சிரமமாகவே உள்ளது. மாம்சத்தில் பிரதான பணிவிடைக்காரனாய்க் காணப்படுபவனே, இராஜ்யத்தில் பிரதானமானவனாய்க் காணப்படுபவான். பணிவிடைக்காரர்களிலேயே பெரிய பணிவிடைக்காரர் கர்த்தராகிய இயேசுவே ஆவார். இதே கொள்கையானது அவரது பின்னடியார்கள் அனைவரின் விஷயத்திலும்கூட உண்மையாயிருக்கின்றது. இவர்களில் யார் மிகுந்த உண்மையுடனும், மிகுந்த நேர்மையுடனும், மிகுந்த வைராக்கியத்துடனும் சகோதர சகோதரிகளுக்குப் பணிவிடைச் செய்கின்றானோ, அப்படிப்பட்டவனே தேவனிடத்திலான தனது தயவைப் பெருகப் பெற்றவனாகவும், மேசியாவின் இராஜ்யத்தில் மிகவும் பெரிதான ஒரு ஸ்தானத்திற்கெனத் தன்னை ஆயத்தம் பண்ணுகிறவனாகவும் இருப்பான்.
ஏதாகிலும் கனமற்ற பணிவிடையைச் செய்வது என்பது, உயர் ஸ்தானத்திற்கான தங்களது அபாத்திர தன்மையை ஒப்புக்கொள்ளுகிறதாய் இருக்குமென்ற எண்ணத்தினாலும், எவரும் பணிவிடைக்காரனுடைய பணியை எடுப்பதற்கு விரும்பாததினாலும், பாதங்கள் கழுவுவதற்கான எந்த ஏற்பாடுகளையும் சீஷர்கள் பண்ணவில்லை. மணற்பாங்கான தேசத்தில், பாதரட்சைகளானது பயன்படுத்துகையில், பாதம் கழுவுதலானது மிகவும் இன்றியமையாததாய்க் காணப்படுகின்றது. கடிந்துகொள்ளும் வகையில் இயேசு பந்தியிலிருந்து எழும்பி, தம்முடைய சீஷர்களுக்காக இந்தக் [R5542 : page 285] கனமற்றப் பணிவிடையைப் புரிந்து, தாழ்மைக்குறித்த பாடத்தினுடைய முக்கியத்துவத்தைக்கூறி, அவர்கள் ஒருவருக்கொருவர் செய்ய வாய்ப்புப் பெற்றுள்ளதான பணிவிடையானது எவ்வளவு தாழ்வானதாக இருப்பினும், அதைப் புரிந்திடுவதற்கு அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டுமென்பதைச் சுட்டிக் காண்பித்தார்.
இப்படிப்பினையானது, அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்காச்சாரமாய் இராமல், மாறாக ஒரு கொள்கைக்கான விளக்கப்பாடமாக இன்னமும் நம் மத்தியில் காணப்படுகின்றது. கர்த்தருடைய சகோதரருள் ஒருவருக்குச் செய்யப்படுகின்றதான எந்த ஓர் எளிமையான/தாழ்வான பணிவிடையும், பாதம் கழுவப்படுவதற்கு ஒத்திருக்கின்றது.
பஸ்கா போஜனம், அதாவது ஆட்டுக்குட்டி, கசப்பான கீரைகள் மற்றும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்பட்டுக்கொண்டிருந்தது; புளிப்பில்லாத அப்பங்களானது தடிமனான ரொட்டிபோன்றிருக்கும் மற்றும் சிலசமயம் மாம்ச சாற்றை எடுப்பதற்குக் கரண்டிக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்படுகின்றது. சுவிசேஷங்களில் ஒன்றானது, இயேசு இருதயத்தில் வியாகுலமடையத் தொடங்கி, “என்னோடுகூட என் விருந்தினர்களாக, என் குடும்பத்தின் அங்கத்தினர்களாக உணவருந்திக் கொண்டிருக்கும் பன்னிரண்டு பேராகிய உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பதற்குத் திட்டம் பண்ணிக்கொண்டிருக்கின்றான்” என்று கூறினதாகத் தெரிவிக்கின்றது.
இப்படியாகக் கூறுவதில் இரண்டு நோக்கம் இருந்திருக்க வேண்டும். முதலாவதாக இவ்வார்த்தைகளானது, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருப்பதான காட்டிக்கொடுத்தல் குறித்து இயேசு நன்கு தெரிந்திருந்தார் என்பதைச் சீஷர்களுக்குக் காண்பிப்பதற்காகும். இதனால் இயேசுவுக்கு ஏதோ எதிர்ப்பார்க்காத விதத்தில் நடந்துவிட்டதென அல்லது தெய்வீகத் திட்டத்திற்குப் புறம்பாக ஏதோ நடந்துவிட்டதென அவர்கள் எண்ணமாட்டார்கள். இரண்டாவதாக யூதாசை திகைக்கப்பண்ணத்தக்கதாக, அவரைச் சிந்தித்துப்பார்க்க வைக்கத்தக்கதாக, அவருக்குக் கடைசி கண்டனமாகக் காணப்படுவதற்கென இயேசு இவ்வார்த்தைகளைக் கூறினார். துரோகியினுடைய நடக்கையானது, நமது அறிவுக்கு எட்டியவரை வெட்கக்கேடான ஒன்றுதான்; ஆனால் துரோகியானவன் யாருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டுகின்றானோ, அந்நபரிடமிருந்து விருந்தோம்பலைப் பெற்றுக்கொண்டு, அந்நபரினுடைய அப்பத்தைப் புசிக்கையில், அவனது நடக்கையானது இரட்டிப்பான விதத்தில் வெட்கக் கேடானதாகக் காணப்படும்.
சீஷர்கள் மத்தியில் அச்சம் பரவினது; ஒருவர்பின் ஒருவராக, “நானோ?” என்று கேட்டார்கள். “என்னை நீர் குறிப்பிடவில்லை அல்லவா!” என்பதே இக்கேள்வியினுடைய உட்கருத்தாகும். “நானோ?” என்று பொதுவாய்க் கேட்கப்பட்ட கேள்வியை யூதாசும் கேட்டுக்கொண்டார். அப்போஸ்தலனாகிய யோவான், இயேசுவிற்கு அடுத்து உட்கார்ந்திருந்தார் மற்றும் ஆண்டவர் யாரைக் குறிப்பிடுகின்றார் என்று ஆண்டவரிடம் கேட்கத்தக்கதாகப் பரிசுத்த பேதுரு, யோவானுக்குச் சைகைக்காட்டினார். அது அநேகமாக இயேசுவுக்கு மாத்திரமே கேட்க, மிகுந்த மெல்லியக் குரலில் கேட்கப்பட்டக் கேள்வியாய் இருந்தது. “நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான்” என்பதாக மெல்லிய குரலில் நமது கர்த்தருடைய பதில் காணப்பட்டது. விசேஷித்த அக்கறையைச் சுட்டிக்காட்டும் வண்ணமான ஒரு விசேஷித்த துணிக்கையை (தோய்த்து) ஆயத்தம்பண்ணி, அதை யூதாசிடம் கொடுத்தார். இப்படியாகவே பரிசுத்த யோவானும், பரிசுத்த பேதுருவும் காரியத்தினை அறிந்துகொண்டார்கள்.
இது நடந்த கொஞ்ச நேரத்திற்குப் பிற்பாடு, யூதாஸ் புறப்பட்டுப்போனார்; “சாத்தான் அவனுக்குள் புகுந்தான்” என்பதாகப் பதிவுபண்ணப்பட்டுள்ளது. தனது சிறந்த நண்பனை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்கும் காரியத்தினை யூதாஸ் ஆலோசித்து, தீர்மானித்து, ஆதாயத்தினைக் கணக்குப்பார்த்தபோது, பொல்லாங்கனின் ஆவியானது அவனிடத்தில் முற்றிலுமாய் ஆதிக்கம்கொண்டது. கொஞ்சம் நேரத்திற்குப் பிற்பாடு இயேசு நிறுவினதும், இன்று கிறிஸ்தவர்களினால் ஆசரிக்கப்படுகிறதுமான நினைவுகூருதலின் இராப்போஜனத்தின்போது, யூதாஸ் அநேகமாக இருந்திருக்கமாட்டார்.
இயேசுவினால் நிறுவப்பட்டதான நினைவுக்கூருதலின் இராப்போஜனமானது, பஸ்கா இராப்போஜனத்திடத்திலிருந்து முற்றிலுமாய் வேறுப்பட்டதாகவும், வேறானதாகவும் இருக்கின்றது; எனினும் இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும்; ஏனெனில் ஒன்று நிழலாகவும், மற்றொன்று அதற்கான முழுமையான உதாரணமாய் (அ) இன்னும் மேலான அர்த்தமுள்ள உயர்தரமான நிழலாய்/மாதிரியாய்க் காணப்படுகின்றது. ஒன்றில் தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவை அடையாளப்படுத்துவதற்கு, சொல்லர்த்தமான ஓர் ஆட்டுக்குட்டி பயன்படுத்தப்படுகின்றது; மற்றதில், அதாவது முழுமையான உதாரணத்தில் அப்பம் பிட்கப்படுதலானது, இயேசுவின் மரணத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
யூதர்கள் தங்கள் ஜாதியினுடைய பிறப்பையும், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்ததான தங்கள் ஜாதியாரின் விடுதலையையும் கொண்டாடுகின்றனர். இதன் ஆரம்பமானது, எகிப்தியர்கள்மீது பத்தாம் வாதை கடந்துவந்தபோது, தங்கள் முதற்பேறானவர்களை வாதையானது கடந்துபோனதில் ஆகும். அந்தப் பஸ்கா இரவின்போது தப்புவிக்கப்பட்டவர்களாகிய இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள், மேசியாவின் இராஜ்யமாகிய காலை வருவதற்கு முன்னதாக பாவம் எனும் இரவு நிலவும் தற்காலத்தில் கடந்துபோகப்படுகிறவர்களாகிய (அ) தப்புவிக்கப்படுபவர்களாகிய முதற்பேறானவர்களின் சபைக்கு நிழலாய் இருக்கின்றனர் என்று பரிசுத்த பவுல் நமக்குக் காண்பிக்கின்றார்.
கிறிஸ்துவினுடைய மரணத்திற்கான நினைவுகூருதலானது மாதந்தோறும் (அ) காலாண்டுதோறும் (அ) வாரந்தோறும் ஆசரிக்கப்படக்கூடாது என்றும், இது யூதருடைய பஸ்காவிற்கான முழுமையான உதாரணமாய்க் கருதப்பட்டு, யூதருடைய பஸ்கா ஆசரிக்கப்படுகின்றதான அதே காலத்தில், வருஷந்தோறும் ஆசரிக்கப்பட வேண்டும் என்றுமுள்ள முடிவிற்கு வேதத்தின் மாணாக்கர்கள் அதிகமதிகமாய் வந்துகொண்டே இருக்கின்றனர்.
தாம் நிறுவினதான இராப்போஜனத்தினுடைய அர்த்தத்தை அப்போஸ்தலர்களுக்கு விளக்கினபோது, அவர்கள் அவரது வார்த்தைகளினுடைய அர்த்தத்தினைப் புரிந்துகொண்டார்களென நாம் புரிந்திட வேண்டாம். மாறாக அவர் ஏற்கெனவே முன்னறிவித்திருந்ததுபோல, அவர்கள் பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்களையும், வெளிச்சமூட்டுதலையும் பெற்றுக்கொண்ட பிற்பாடு, பரிசுத்த ஆவியானது இக்காரியங்களை அவர்களது கவனத்திற்குக் கொண்டுவந்து, அவைகளின் அர்த்தத்தினை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினது. “இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்ற இயேசுவினுடைய வார்த்தைகளின் உட்கருத்தினை இப்பொழுது நாம் பார்க்கலாம். சிலர் எண்ணிக்கொள்வதுபோன்று, அப்பமானது அவரது உண்மையான சரீரமாகவும், திராட்சரசமானது அவரது உண்மையான இரத்தமாகவும் மாறினது என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருந்திருக்கமாட்டார் என்று நாம் உணர்ந்துகொள்கின்றோம். அவர் அத்தருணத்தில் இன்னமும் தம்முடைய உண்மையான சரீரத்தையும் மற்றும் தம்முடைய உண்மையான இரத்தத்தையும் பெற்றிருந்தார். “இந்த அப்பமானது, உங்களுக்காகப் பிட்கப்படப்போகின்றதான என் சரீரத்திற்கு அடையாளமாய் இருக்கின்றது; மற்றும் நாளை உங்களுக்காக சிந்தப்படப்போகிறதான என் இரத்தத்திற்கு – என் ஜீவன் கொடுக்கப்பட்டதற்கு – இந்தத் திராட்சரசம் அடையாளமாய் இருக்கின்றது” என்ற அர்த்தத்திலேயே அவர் கூறினார்.
அந்த அப்பத்தைப் புசிப்பதினாலும், அந்தச் சொல்லர்த்தமான பாத்திரத்தில் பானம்பண்ணுவதினாலும், சீஷர்களுக்கு விசேஷமான புண்ணியம் உண்டாகும் என்ற அர்த்தத்தில் இயேசு கூறினதாகவும் நாம் எண்ணிவிடக்கூடாது. இவைகளுக்கு அப்பால் நாம் நோக்கிப்பார்ப்பவர்களாக இருந்து, அவர் பின்வரும் அர்த்தத்திலேயே குறிப்பிட்டார் என்று பார்க்க வேண்டும்; அதென்னவெனில், “என்னுடைய மரணமானது பெற்றுத் தந்ததான புண்ணியங்களில் நீங்கள் விசுவாசத்தினால் பங்கெடுக்கும்போது மாத்திரமே, என் சீஷர்களாக உங்களுக்கு அளிக்கப்பட்டதான மாபெரும் ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்” என்பதேயாகும். இயேசுவின் மரணமானது, தங்களுடைய பாவங்களுக்கேயாகும் என்றும், அதுவே தங்களைப் பரம பிதா ஏற்றுக்கொள்வதற்கான அடிப்படையாயிற்று என்றும் அப்போஸ்தலர்கள் நம்பினார்கள். கிறிஸ்துவினுடைய ஜீவனை அவர்கள் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் மாத்திரமே, தாங்கள் இந்த அனைத்து ஆசீர்வாதங்களையும் உண்மையில் பெற்றுக்கொள்பவர்களாக முடியும் என்று உணர்ந்துகொண்டார்கள்.
இந்த அப்பம் மற்றும் பாத்திரத்தினுடைய மற்றுமொரு முக்கியமான அர்த்தத்தினைப் பரிசுத்த பவுல் அடிகளார் நமக்காகச் சுட்டிக்காண்பிக்கின்றார். அவர் கிறிஸ்து மற்றும் அவரது சபையின் ஒருமைப்பாட்டினைக்குறித்துத் தெரிவிக்கின்றார். மேலும் ஒரே அப்பமும், ஒரே பாத்திரமும் காணப்படுவதை நமக்குத் தெரிவிக்கின்றார். முதலாவதாக இந்த அப்பமானது கிறிஸ்து இயேசுவை அடையாளப்படுத்துகின்றது; மேலும் இரண்டாவதான பார்வையில் பார்க்கையில் கிறிஸ்துவினுடைய பலியின் மூலமாக நீதிமானாக்கப்பட்ட பிற்பாடு, அவரது பின்னடியார்கள் அனைவரும் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களாகும் மற்றும் பிட்கப்பட்டு வரும் ஒரே அப்பத்தின் பாகங்களாகும் சிலாக்கியத்தினை உடையவர்களாய் இருக்கின்றனர். இதுபோலவே கிறிஸ்துவினுடைய இரத்தத்தின், அவரது பலியின் புண்ணியத்தில் பங்கெடுத்தப் பிற்பாடு, அவரது உண்மையான பின்னடியார்கள் அனைவரும், அவரோடு அங்கத்தினர்களாகவும், அந்த ஒரே பாத்திரத்தில் பங்கெடுப்பவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
அப்போஸ்தலனுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்:
“நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்” (KJV); “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்” (1 கொரிந்தியர் 10:16, 17;திருவிவிலியம்).
இயேசு பாத்திரமானது, திராட்சப்பழரசமானது புதிய உடன்படிக்கைக்குரிய இரத்தத்தினை அடையாளப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். நியாயப்பிரமாண உடன்படிக்கை என்பது பழைய உடன்படிக்கையாக இருக்கின்றது; இது யூதர்களுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவர முடியவில்லை, காரணம் இதை அவர்களால் கைக்கொள்ள முடியவில்லை. மேலும் இதனால் அவர்கள் பூமியின் மற்ற ஜாதிகளை ஆசீர்வதிக்கவும் தகுதியற்றவர்களானார்கள். ஆனால் மோசேயைக்காட்டிலும் மேன்மையான (அ) சிறந்த (அ) உயர்ந்த ஒரு புதிய மத்தியஸ்தரினால், மேம்பட்ட ஒரு புதிய உடன்படிக்கையானது அறிமுகப்படுத்தப்படும் என்று தேவன் வாக்களித்தார். பழைய நியாயப்பிரமாணமானது நிறைவேற்ற முடியாமல் போனவைகளை, புதிய உடன்படிக்கையானது நிறைவேற்றுமெனத் தேவன் தெரிவித்துள்ளார்; ஏனெனில் புதிய நியாயப்பிரமாண உடன்படிக்கையானது, அதன் மத்தியஸ்தராகிய மேசியாவினால், அவரது இரண்டாம் வருகையில் தொடங்கி வைக்கப்படும். வல்லமையிலும், மகா மகிமையிலும் ஸ்தாபிக்கப்படும் அவரது இராஜ்யமானது, மனுக்குலத்தை ஆண்டு, ஆசீர்வதித்து, கற்பித்து, இந்தப் பாக்கியமான வாய்ப்புகளுக்கு இணங்குகிற யாவருக்கும், “கல்லான இருதயத்தை எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை” அருளும்.
இயேசுவின் மரணமாகிய இரத்தமானது, அந்தப் புதிய உடன்படிக்கையை முத்திரையிடுகின்றது (அ) நடைமுறைக்குக் கொண்டுவருகின்றது. ஆனால் கவனியுங்கள்; இயேசுவின் இரண்டாம் வருகையின்போது அவரது இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகையில் தொடங்கி வைக்கப்படுகின்றதான ஆயிரவருட யுகத்தினுடைய புதிய உடன்படிக்கையின் கீழ்ச் சபையானது, ஆசீர்வதிக்கப்படுவதில்லை. அந்தப் புதிய உடன்படிக்கைக்கு முன்னதாகவே சபை ஆசீர்வதிக்கப்படும். ஆம், கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதான அவர்களது அர்ப்பணிக்கப்பட்ட [R5542 : page 286] ஜீவியங்களானது (இரத்தமானது) புதிய உடன்படிக்கையினை முத்திரையிடுகின்றதான அவரது சொந்த பலியில் ஒரு பாகமாகக் கருதப்படுகின்றது. ஆகையால் கிறிஸ்துவின் முழுச் சரீரமாகிய சபையானது, அவரது பாத்திரத்தில் அவரோடுகூடப் பானம்பண்ணுதலில் – பூமிக்குரிய உரிமைகள், சிலாக்கியங்கள், ஜீவனையே பலிச்செலுத்துவதில் பங்கடைந்து முடிவது வரையிலும், புதிய உடன்படிக்கையானது, முழுமையாய் முத்திரையிடப்பட முடியாது.
இதற்கிடையில் இயேசுவும், சபையும் தங்கள் பலனை நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் அல்லது புதிய உடன்படிக்கையின்கீழ்ப் பெற்றுக்கொள்ளாமல், மாறாகப் பலியினாலான உடன்படிக்கை என்று அழைக்கப்படும் ஒரு விசேஷித்த உடன்படிக்கையின்கீழ்ப் பெற்றுக்கொள்கின்றனர். கிறிஸ்து மற்றும் சபையினுடைய இந்த உடன்படிக்கைக்குறித்துச் சங்கீதங்களில் கர்த்தர், “பலியினாலே என்னோடே உடன்படிக்கைபண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள்” (சங்கீதம் 50:5) என்று கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசேஷித்த பலியினாலான உடன்படிக்கைக்குள் பிரவேசிப்பவர்கள், கர்த்தரோடுகூடக் கூட்டிச்சேர்க்கப்படுதலானது, 1800 வருடங்களுக்கும் மேலாக, இதுவரையிலும் நடைப்பெற்று வருகின்றது. பலியானது கிட்டத்தட்ட நிறைவேறியுள்ளது என்றும், சீக்கிரத்தில் பலிச்செலுத்தியவர்களாகிய, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் மகிமையடைந்து, முதலாம் உயிர்த்தெழுதலினுடைய வல்லமையினால் மாற்றமடைந்து, “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” என்ற அவரது வாக்குத்தத்தத்திற்கு ஏற்ப, அவர்களது கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பார்கள் என்றும் நம்புவதற்கு நமக்கு அநேக காரணங்கள் உள்ளது.
இனிப் பாத்திரத்தில் பானம்பண்ணுவதில்லை என்று நமது கர்த்தர் குறிப்பிட்டார்; அவர் பானம்பண்ணவுமில்லை. அவரது வேலை – பாத்திரத்தில் அவர் பானம் பண்ணுதலானது, அடுத்த நாளில், கல்வாரியில் நிறைவேறினது. அங்கு அவர் பிதா தமக்கென ஊற்றின பாத்திரத்தில் பானம்பண்ணுதலை நிறைவேற்றி முடித்தார். அதே பாத்திரத்தினைப் பிதா, இயேசுவின் பின்னடியார்கள் அனைவருக்குமாக ஊற்றிக்கொடுத்துள்ளார்; மற்றும் சீக்கிரத்தில் ஸ்தாபிக்கப்படப்போகின்றதான இராஜ்யத்தில் அவரது உடன்சுதந்திரர்களாகக் காணப்படவேண்டுமானால், அவர்களும் அவரது பாத்திரத்தில் பானம்பண்ணிட வேண்டும் மற்றும் அவரது பிட்கப்பட்ட சரீரத்தினுடைய புண்ணியங்களில் பங்கெடுக்க வேண்டும்.
[R5543 : page 286]
இதுவே இராஜ்யத்தில் விசேஷித்த ஸ்தானங்களைக் கேட்டுக்கொண்டதான தமது சீஷர்களாகிய பரிசுத்த யோவானுக்கும், பரிசுத்த யாக்கோபுக்கும் கொடுக்கப்பட்ட நமது கர்த்தருடைய பதிலின் உட்கருத்தாகும். இயேசுவோ: “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா (உங்களுக்கு விருப்பமா)?” என்று கேட்டார். அவர்களும் தங்களது விருப்பத்தினை மனப்பூர்வமாய்த் தெரிவித்தனர். அவர்கள் வேண்டுதலை, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள் என்றும், அவர்கள் விருப்பத்துடன் காணப்பட்டால், அவர்கள் தமது பாத்திரத்தில் பானம்பண்ணத்தக்கதாக அவர் பார்த்துக்கொள்வார் என்றும் இயேசு அவர்களுக்கு உறுதியளித்தார். இப்படியாகவே அவரது பின்னடியார்கள் அனைவரின் விஷயத்திலும் காணப்படும். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28) என்று வேதவாக்கியங்களானது, அவரது பின்னடியார்களுக்கு உறுதியளிக்கின்றது.
சிலுவையில்லாமல் கிரீடமில்லை
“இனிமைமிகு சிவப்பான திராட்சரசம் செய்யவே,
கருஞ்சிவப்பு திராட்சை நசுக்கப்பட வேண்டுமே.
அழுக்குப்படிந்த பொன்தனை புடமிடவே,
உலையில் கடுமையான தீப்பிழம்பு எரிந்திட வேண்டுமே.
சக்கரம் கடுமையாய்ச் சுழலாவிடில்,
ஆபரணங்களுக்கு ஒளி எங்கே?
எஃகு தன்னை மெருகேற்ற கீழ்ப்படுத்தாவிடில்,
கூர்வாளாக எப்படி ஒளிர முடியும்?
ஆசீர்வதிப்பதற்காய்க் காயப்படுத்தும் கரத்தின் கீழ்தனிலே
உந்தனை நீ அன்போடே கீழ்ப்படுத்தாவிடில்,
எந்தன் ஆத்துமாவே நீ எப்படி
ஆவியின் கனிகள்தனைப் பெற்றிடுவாய்?
ஆ! அனைத்துப் பூமிக்குரிய அசுசிதனை
நெருப்புப் பட்சிக்கும் என்று பொறுமையாயிரு –
நீ சிலுவையை மறுத்தாயானால்,
கிரீடம் உனக்கில்லையே.
– ரீபிரிண்ட்ஸ், பக்கம் 5532