R5342 (page 328)
“நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை.” யோவான் 6:53
இந்த அதிகாரத்தில், கர்த்தர் தம்மைப் பரலோகத்திலிருந்து வந்த மெய்யான அப்பம் என்று கூறினதன் நிமித்தமாக, முறுமுறுத்தவர்களாகவும், தம்மை விசுவாசியாதவர்களாகவும் காணப்பட்ட யூதர்களிடம் அவர் பேசியவைகள் இடம்பெறுகின்றது. “மாம்சத்தைப் புசியாமலும், … இரத்தத்தைப் பானம்பண்ணாமலும்” எனும் அவரது வார்த்தைகளானது, ஆழமான ஆவிக்குரிய அர்த்தம் உடையவையாகவும், உத்தம இஸ்ரயேலர்களால் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடிகின்றவையாகவும் காணப்படுகின்றது. மேலும் இது இன்றுங்கூட உண்மையாகவே இருக்கின்றது. உலகமானது அடுத்த யுகத்தில், இயேசுவினால் கையாளப்படும்போது, அவரது மாம்சத்தைப் புசிப்பதற்கு அவரது பலியினுடைய புண்ணியங்களைத் தங்களுடையதாக்கிக் கொள்வதற்குரிய வாய்ப்பினை நிச்சயமாய்ப் பெற்றுக் கொள்ளும்; எனினும் அவர்கள் அவரது பாத்திரத்தில் பங்குகொள்வதற்கு – அவரது இரத்தத்தைப் பானம்பண்ணுவதற்குரிய எந்த வாய்ப்பினையும் அடையமாட்டார்கள். அடையாளப் பாஷையில் பாத்திரமானது, பலியாக்கப்பட்ட ஜீவனைக்குறிக்கின்றது. பாத்திரத்தினால் அடையாளப்படுத்தப்படும் கிறிஸ்துவினுடைய பாடுகளில், உலகத்திற்கு எந்தப் பங்கெடுப்பும் கிடைக்கப்பெறாது.
நமது கர்த்தருடைய வார்த்தைகளின் அர்த்தம் என்னவெனில் . . . “சுவிசேஷ யுகத்தில் என்னால் முன்வைக்கப்பட்ட காரியத்தினை நீ ஏற்றுக்கொள்வாயானால், நீ ஜீவனை அடையலாம் மற்றும் அந்த ஜீவனை மனிதன் இதுவரையிலும் பெற்றிராத (அ) பெறமுடிந்த அளவைக்காட்டிலும் மிக அதிகமாய்ப் பெற்றுக்கொள்ளலாம். நீ தன்னில்தான் ஜீவனை உடையவனாகலாம் உனக்குள்ளே ஜீவனை – உடையவனாகலாம்.”
கர்த்தருடைய மாம்சத்தை அடையாளப்படுத்துகின்றதான அப்பத்திற்கும், அவரது இரத்தத்தை அடையாளப்படுத்துகின்றதான திராட்சரசத்திற்கும் இடையில், வேத வாக்கியங்களில் வேறுபாடு நிலைநாட்டப்பட்டுள்ளது என்று நாம் நம்புகின்றோம். சபையானது அவரது மகிமையடைந்த சரீரத்தின் அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, மேற்கூறப்பட்டுள்ள இரண்டிலும் பங்கெடுப்பதன் வாயிலாக, அவைகளில் பங்கடைபவர்களாக இருக்க வேண்டும். அப்பமானது, அப்போஸ்தலன் விவரிப்பதுபோன்று, நமக்கு அவசியமான ஜீவ அப்பமென, நமது கர்த்தரை மாத்திரம் நமக்கு அடையாளப்படுத்துகின்றதாய் இராமல், இன்னுமாக நமது கர்த்தர் பிட்கப்பட்டதுபோன்று அவருடைய அங்கத்தினர்களெனப் பிட்கப்படப்போகின்ற நம்மையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; மேலும் திராட்சரசமானது நமது கர்த்தருடைய இரத்தத்தை மாத்திரம் குறிக்காமல், இன்னுமாக சபையினுடைய இரத்தத்தையும் நாம் அவரது தியாகமான பாடுகளில், – அவரோடுகூடப் பங்காளிகளாக இருப்பதையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது (1 கொரிந்தியர் 10:16,17).
நமது கர்த்தருடைய பாத்திரத்தில் பங்குகொள்வதற்கான சிலாக்கியமானது, உலகத்திற்குரியதல்ல. அவர்கள் கிறிஸ்துவினுடைய பாடுகளில் பங்கடைபவர்களாக இருக்கமாட்டார்கள்; ஏனெனில் சபை மகிமையடைவதோடு, அவருடைய பாடுகளிலும், மகிமையிலும் பங்கடைவதற்கான வாய்ப்புகள் அனைத்துமே முடிவடைந்துவிடும். “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” – முழுவதையும் பானம்பண்ணுங்கள் என்று கர்த்தர் கூறினார். உலகம் பானம்பண்ணுவதற்கு எதுவுமிராது. சபை வகுப்பாராகிய நாம், “கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை நிறைவேற்றுகின்றவர்களாய்” இருப்போம் (கொலோசெயர் 1:24).
“மனுஷகுமாரனுடைய மாம்சமானது,” மனித சிலாக்கியங்கள் திரும்பக் கொடுக்கப்படுதலை, அதாவது அதை அடைவதற்கான வழிவகையை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது மற்றும், மனிதன் இழந்துபோனதான ஜீவனை, அதாவது ஆதாமில் இழந்துபோகப்பட்டதான ஜீவனை [R5342 : page 329] – மனுஷஜீவனை – பூமிக்குரிய ஜீவனை மனுஷனுக்கு திரும்பக்கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இது கிறிஸ்து மூலமான தேவனுடைய ஈவாகும். ஆனால் இந்த அப்பம் அளிக்கப்படுவது மாத்திரம் போதாது. உலகம் அந்த அப்பத்தைப் புசிப்பதும், கர்த்தருடைய இராஜ்யத்தின் வாயிலாக அவர்களுக்கு அவர் அளிக்கப்போகின்றதான உதவியைப் பெற்றுக் கொள்வதும், அவசியமாகும். “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே” (யோவான் 6:51) என்று இயேசு கூறினார்.
ஒரு கோணத்தில் பார்க்கும்போது, உலகம் மரிக்கவில்லை என்று சொல்லப்படலாம். அவர்கள் ஜீவனுக்கான தங்களது உரிமையை இழந்துள்ளனர்; எனினும் ஜீவன் திரும்பக் கொடுக்கப்படத்தக்கதாக தேவன் இயேசுவின் மூலம் ஏற்பாடுகள் பண்ணியுள்ளார். ஜீவன் ஆதாமில் இழந்துபோகப்பட்டது, எனினும் அது இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் வாயிலாக திரும்பக்கொடுக்கப்படும். இந்த 6000 ஆண்டு காலங்களாக உலகமானது, உணவின்றியும், விழுந்துபோன நிலையிலும் இருந்து வந்துள்ளது. ஆனால் தேவன் இந்த அப்பத்தைத் தயார் பண்ணியுள்ளார் மற்றும் இதை அவர்கள் ஆயிரவருட யுகத்தின்போது பெற்றுக்கொள்பவர்களாய் இருப்பார்கள்.
உலகமானது, இரத்தத்தில் பங்குகொண்டு, கிறிஸ்துவின் பாடுகளில் பங்கெடுக்கும் என்று வேதவாக்கியங்களில் எங்குமே, அடையாளமான விதத்தில் காண்பிக்கப்படவில்லை. வெகு சொற்பமானவர்களே இரத்தத்தில் பங்கெடுப்பதாக அடையாளப்படுத்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. இது லேவியராகமம் 16-ஆம் அதிகாரத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம்முறையாகக் கிருபாசனத்தில் தெளிக்கப்படுகின்றதான இரத்தமானது, ஜனங்கள் அனைவருக்காகவுமிருந்து, இப்படியாய் நீதியைத் திருப்திப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இது மனுக்குலம் அனைத்தும் மரணத் தீர்ப்பினின்று விடுதலையாக்கப்பட்டு, அனைவருக்கும் அப்பத்தைப் புசிப்பதற்கும், மரியாமல் இருப்பதற்குமான வாய்ப்புக் கொடுக்கப்படுவதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
இன்னொரு காட்சியில் பயன்படுத்தப்பட்ட இரத்தமானது, தெய்வீக ஏற்பாட்டினை மனிதன் ஏற்றுக்கொள்ளும் காரியத்தினை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. புது உடன்படிக்கைக்கு நிழலான நியாயப்பிரமாண உடன்படிக்கையை முத்திரையிடுகையில், நீதியைத் திருப்திப்படுத்துதலை அடையாளப்படுத்தும் விதத்தில் மோசே முதலாவதாக நியாயப்பிரமாண புத்தகத்தின்மீது இரத்தம் தெளிக்கின்றார். பின்னர் அதே இரத்தத்தினை ஜனங்கள் அனைவரின்மேலும் தெளித்தார் (எபிரெயர் 9:19; யாத்திராகமம் 24:8). நியாயப்பிரமாண புத்தகத்தின்மீது தெளிப்பதற்குச் சில நொடிகளே ஆனது; ஆனால் ஜனங்கள்மீது தெளிப்பதற்கு நெடு நேரம் தேவைப்பட்டது.
ஆயிரவருட யுகத்தினுடைய ஆரம்பத்தில் சபையானவள் அவளது தலையானவருடன் திரைக்கப்பால் இணைந்த உடனே – உலகத்திற்காக, நீதியினைத் திருப்திப்படுத்துவதற்கென, இரத்தமானது தெளிக்கப்படும். பின்னர் கிறிஸ்து மத்தியஸ்தரென, யாவருக்குமாக ஒரு வேலை செய்யத்தொடருவார். அந்த வேலையானது, ஜனங்கள் இரத்தத்தினால் தெளிக்கப்படும் காரியத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் மத்தியஸ்தர் ஆயிரவருட ஆளுகையின்போது முன்வைக்கின்றதான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், மத்தியஸ்தர் வாயிலாக நம் இனத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும், தேவனுடன் ஓர் உடன்படிக்கை உறவிற்குள் வருவதற்குரிய சிலாக்கியமடைவான்.
அவர்கள் மேசியாவின் ஆளுகையின்போது எதிர்ப்பார்க்கப்படுபவைகளை நிறைவேற்றினார்களானால், அந்த ஆளுகையினுடைய இறுதியில் அவர்கள் பரிபூரணமாவார்கள் மற்றும் அவர்களைக் கிறிஸ்து பிதாவின் முன்னிலையில் ஒப்படைப்பார் மற்றும் அப்போது முன்வைக்கப்படும் பரீட்சையில் உண்மையாய் நிலைநிற்பவர்கள், பிதாவுடன் முழுமையான உடன்படிக்கை உறவிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
“என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு” (யோவான் 6:54). நமது கர்த்தருடைய வார்த்தைகளானது, அநேகம் தருணங்களில் சிறு [R5343 : page 329] மந்தையினரை மாத்திரமல்லாமல், திரள் கூட்டத்தினரையும் உள்ளடக்கின விதத்தில் மிகவும் பரந்த விதத்தில் இடம்பெற்றுள்ளது மற்றும் இதிலே மாபெரும் ஞானம் விளங்குகின்றதாய் இருக்கின்றது. இவ்வசனத்தில் கர்த்தர் “பானம் பண்ணுகிறவனுக்குள் ஜீவன் உண்டு” என்று சொல்லவில்லை; ஏனெனில் இக்காலத்தில் பலியினாலான உடன்படிக்கையைப் பண்ணி, பாத்திரத்திலும், அப்பத்திலும் பங்காளிகள் ஆகுகிறவர்களில் சிலர் தன்னில்தானே ஜீவனுடைய நிலையை அழியாமையை அடையமாட்டார்கள்; இவர்கள் மிகுந்த உபத்திரவங்கள் – வாயிலாகக் கடந்துவந்து, ஆவிக்குரிய தளத்திலுள்ள கீழ்த்தளத்தில் ஜீவனை அடைகின்றவர்களாய் இருப்பார்கள். இவர்கள் நித்திய ஜீவனை அடைந்தாலும், அது அழியாமை ஜீவனாக/தன்னில்தானே ஜீவனுடைய நிலையாக இருக்காது. அழியாமையை அடைபவர்கள் உயர்த்தளத்தில் நித்திய ஜீவனை உடையவர்களாக இருப்பார்கள். திரள்கூட்டத்தினர் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வார்கள், ஆனாலும் அது அழியாமையல்ல – தன்னில்தான் ஜீவனுடைய நிலையல்ல.
நமது கர்த்தர், “என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது” (யோவான் 6:55) என்று கூறினதிலிருந்து, இது அறியப்பெற்றதிலேயே மிகவும் விலையேறப் பெற்ற உணவாகவும், பானமாகவும் உள்ளது என்பதாக அவரால் குறிப்பிடப்பட்டுள்ளது என்று நாம் புரிந்துகொள்கின்றோம். வேறெந்த அப்பத்திற்கும் இத்தனை முக்கியத்துவம் இருந்ததில்லை மற்றும் இதைக்காட்டிலும் மிகவும் விலையேறப் பெற்றதான வேறெந்த பானமும் இல்லை; இதில் பங்கெடுப்பதன் மூலம் மகிமை, கனம் மற்றும் அழியாமை – திவ்வியச் சுபாவம் – தன்னில்தான் ஜீவனுடைய நிலையை அடையப்பெறலாம்.
உலகத்தின் ஜீவனுக்காக நமது கர்த்தரால் கொடுக்கப்படவிருந்த அவரது மாம்சமே, பரலோகத்திலிருந்து வந்த அப்பமாய் இருக்கின்றது. மேலும் இதற்குத்தான் வனாந்தரத்தில் பொழிந்த மன்னா நிழலாய்க் காணப்படுகின்றது என்று இயேசு விவரித்தார். “உங்கள் பிதாக்கள் (வனாந்தரத்தில்) மன்னாவை உண்டார்கள் மற்றும் அவர்கள் மரித்தார்களே. இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்” என்றார். அவர் பின்வருமாறு கூறினார்: “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.” (யோவான் 12:24). அவர் பூமியில் விழுந்து மரித்தார். மேலும் அவருடைய மரணத்தில், நாம் அவரோடுகூடப் பங்காளிகளானோம். நாம் அவரது பாடுகளிலும், மரணத்திலும் பங்கெடுத்தோம்; இப்படியாக உலகத்தால் ஒருபோதும் பங்கெடுக்க முடியாது. அவர்கள் இவைகளின் பலன்களில் மாத்திரம் பங்கடைபவர்களாக இருப்பார்கள்.
இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய வேலை அனைத்தும், உலகத்திற்கான ஆகாரத்தையும், அவர்கள்மீது தெளிக்கப்படவிருக்கின்ற இரத்தத்தையும் ஆயத்தப்படுத்தும் வேலையாகக் காணப்படுகின்றது. ஆனால் நம்முடைய ஆதார வசனத்தில் இடம் பெறுகின்றதான நமது கர்த்தருடைய செய்தியானது, உலகத்திற்குரியதல்ல. அவர் நம்மிடம் கூறுவதுபோன்று, “பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி நமக்கே அருளப்பட்டது.”
இந்த 19 நூற்றாண்டுகள் காலம் முழுவதிலும், தேவனுடைய இரகசியங்களை, ஒரு விசேஷித்த வகுப்பார் மாத்திரமே அறியமுடிந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இக்காரியங்கள் பொதுவான உலகத்திடமிருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அக்காரியங்கள் உலகத்திற்கு அருளப்படுவதற்கும், அவர்களுக்காக தேவன் வைத்து வைத்திருக்கின்றதான ஆசீர்வாதங்களை அவர்கள் அறிந்துகொள்வதற்குமான காலம் வந்துள்ளதென நாம் இப்பொழுது நம்புகின்றோம். ஏழாம் எக்காளம் தொனிக்கையில், இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் என்று வேதவாக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன; அந்த ஏழாம் எக்காளம் இப்பொழுது தொனிக்கின்றது. இந்தச் சத்தியங்களை இப்படி வெளிப்படப்பண்ணுவதே, மன்னா பொழியப்பண்ணுதலாகும்.