R3885 (page 346)
மத்தேயு 26:36-50
“என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” லூக்கா 22:42
கெத்செமனே தோட்டமானது காட்டு மரங்களையுடைய தோட்டமாகவோ அல்லது பொதுத் தோட்டமாகவோ இராமல் ஒலிவ மரத்தோட்டமாயிருந்தது. இத்தோட்டத்தின் பெயரை வைத்துப்பார்க்கும்போது, இத்தோட்டத்திற்குள் ஓர் இடத்தில் ஒலிவ பழங்களிலிருந்து எண்ணெய் எடுப்பதற்குரிய, எண்ணெய் செக்குக் காணப்பட்டதும் புரிகின்றது. இந்தத் தோட்டம் மாற்கினுடைய தாயாருக்குச் சொந்தமானது என்று அநுமானிக்கப்படுகின்றது. இந்தத் தாயார் ஆஸ்தியுள்ள விதவை என்றும், இயேசுவின் நோக்கங்களினிமித்தம் அவருக்கு நண்பராகவும் காணப்பட்டிருந்தாள் என்றும் கூறப்படுகின்றது. இவர்களுடைய வீடு, இந்தத் தோட்டத்திற்குள் ஓர் இடத்தில் காணப்பட்டிருக்க வேண்டும். இந்த இடம் இயேசுவினுடைய நண்பர்களுடைய கட்டுப்பாட்டிற்குள் காணப்படுகின்றது என்பதும், இயேசுவும் அவருடைய சீஷர்களும் அவ்விடத்திற்கு நன்கு அறிமுகமாக இருந்தார்கள் என்பதும் உறுதியே. நினைவுகூருதலின் போஜனம் புசித்த பிற்பாடு, நமது கர்த்தரும் அவருடைய சீஷர்களும் இத்தோட்டத்திற்கே வந்தார்கள். கெத்செமனே தோட்டம் என்று இப்பொழுது சுட்டிக்காட்டப்படுகின்றதான இடமானது, எருசலேம் மதிலினின்று அரை மைல் தொலைவில் காணப்படுகின்றது மற்றும் இதில் குறிப்பிடத்தக்கதான சில பழமைமிக்க ஒலிவ மரங்கள் காணப்படுகின்றன மற்றும் இத்தோட்டமானது அருகாமையில் வசிக்கும் சில துறவிகளின் பராமரிப்பின் கீழ்க் காணப்படுகின்றது.
நமது கர்த்தரும், அவருடைய பதினொரு சீஷர்களும் தோட்டத்தின் வாசலுக்கு முன்பு வந்தபோது, இயேசு அவர்களில் எட்டுப் பேரை வாசலிலே நின்று வெளியே காவல் காக்கும்படியாக நிறுத்தி, தமது அபிமான சீஷர்களாகிய பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானைத் தம்முடன் உள்ளே கூட்டிக்கொண்டு சென்றார். இந்த மூன்று பேரும் பல்வேறு தருணங்களில் இயேசுவின் விசேஷ தயவினை இப்படியாகப் பெற்றிருந்தார்கள். உதாரணத்திற்கு யவீருவின் மகளை உயிர்ப்பிக்கும்போது, இம்மூவரும் அவரோடுகூடக் காணப்பட்டார்கள். இன்னுமாக, இம்மூவருந்தான் மறுரூப மலையின் காட்சியைக்காணும் சிலாக்கியத்தையும் பெற்றிருந்தார்கள். இயேசு தம்முடைய அனைத்துச் சீஷர்களையும் அன்பு கூர்ந்தாலும், இவர்கள் மூவரிடமும் காணப்பட்ட விசேஷமான வைராக்கியம் மற்றும் தம் மீதான அன்பினிமித்தமே இம்மூவரும் அவருக்கு விசேஷமாக அருமையானவர்களாக, பிரியத்திற்குரியவர்களாகக் காணப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுதோ அவருக்கு விசேஷமாக அருமையாய் இருந்த இந்த மூன்று சீஷர்களாலும் கூட நமது கர்த்தருடைய இருதயத்தை அழுத்திக் கொண்டிருந்த பாரத்திற்காக அவருக்கு ஆறுதலளிக்கவோ, உணர்ந்துகொள்ளவோ முடியவில்லை. ஆகவே, கர்த்தர் அவர்களையும் தோட்டத்திற்குள் ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு, பிதாவிடம் ஜெபம் பண்ணும்படியாகக் கொஞ்சம் தொலைவில் போய்விட்டார். இச்சம்பவம் தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் அப்படியே கிரேக்க பாஷையின் அர்த்தத்தின்படி தத்ரூபமாகப் பார்க்கும்போது, இக்கட்டத்தில் துன்பம் கலந்த தனிமையும், சகித்துக்கொள்ள முடியாத துயரமும், பலமாய்க் கர்த்தருக்கு ஏற்பட்டது என்பது நமக்குத் தெரிய வருகின்றது. சீஷர்களோடு அவர் காணப்பட்டது வரையிலும் அவர்களுடைய நலன் கருதி அவர் மகிழ்ச்சியாய் இருக்க முயற்சித்தார் என்பதிலும், சீஷர்கள் மேல் வரப்போகும் சோதனைகளுக்கு அவர்களை ஆயத்தம் பண்ணும் படிக்குத் தேவையான படிப்பினைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார் என்பதிலும் ஐயமில்லை. ஆனால், இவைகளையெல்லாம் தம்முடைய முழுப்பலத்தோடு இப்பொழுது செய்துமுடித்த நிலையிலும், பிதாவினிடத்திற்குத் தனிமையாகச் சென்ற நிலையிலும், இப்பொழுது அவருடைய எண்ணங்கள் அவர் மீதும், அவர் பிதாவினிடத்தில் கொண்டிருந்த உறவின் மீதும், அவர் விசாரணை செய்யப்படப் போவதினிமித்தமும், கலகவாதி என்றும், தேவதூஷணம் சொன்னவர் என்றும், தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினிமித்தமும், விசாரணையின்போது அவருக்கு நேரிடப்போகும் அவமதிப்பு மற்றும் இகழ்ச்சியினிமித்தமும், இன்னுமாக தாம் இரண்டு கள்வர்கள் மத்தியில் பொது ஜனங்களின் கண்கள் காண கொல்லப்படுவதினிமித்தம் உண்டாகப்போகும் அவமானத்தின் மீதும் திசைத்திருப்பின. இந்த அனைத்து விஷயங்களும் இப்பொழுது அவருடைய மனதிற்கு முன்பு தெளிவாய் வந்து நிற்கும்போது, இவைகளே வியாகுலத்தையும், வலியையும், ஆழமானதும், கடுமையானதுமான வேதனையையும் அவருக்கு அளிப்பதற்குப் போதுமானதாகும்.
இச்சம்பவத்தின்போது, நமது கர்த்தருக்கு ஏற்பட்ட பாடுகள் தொடர்பான விஷயங்களை நாம் பார்க்கும்போது, பாவத்தினால் கறைபடுத்தப்படாததும், மரித்துக்கொண்டிருக்கும் செயல்பாடுகளினால் சீரழிக்கப்படாததும், உணர்ச்சிகள் மந்தமாகிப் போகாததுமாகிய பூரணச் சரீரமும், உணர்வுகளும் உடையவராகிய நமது கர்த்தர், இப்படிப்பட்ட துயரங்களினாலும், வேதனைகளினாலும் காணப்பட நேரிடும் விழுந்துபோன மனித இனத்திலுள்ள ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும், அதிகமான பாதிப்பிற்குள்ளாவார் என்பதை நினைவில் வைக்க வேண்டும். மன உணர்வுகளும், பண்புகளும் நேர்த்தியாய் இருப்பதற்கு ஏற்ப, பாதகமான சூழ்நிலைகளின்கீழ் வேதனையும் அதிகமாய்க் காணப்படும். கலகத் தலைவனாக இருக்கும் முரடன் ஒருவன் சரக்கு வண்டியில் பயணம் செய்வதைக் கௌரவமாக எண்ணிக்கொள்வான். ஆனால், ஒரு நாகரிகமான மனிதனுக்கு அப்படியானதொரு வண்டியில் பிரயாணம் செய்வது என்பது, அவனுக்குப் பயங்கரமானதாய்த் தோன்றும். வேறொரு உதாரணத்தைக் கூட நாம் பார்க்கலாம்: நன்கு கற்றுத் தேர்ந்த இசை வித்வானுக்கே அதாவது, சுரங்களின் இசைக்கு நன்கு பழகிப்போன செவிகளையுடைய ஒருவருக்கே பாடலிலுள்ள தவறான இசையினிமித்தம் ரசனைக் குலைச்சலும் மற்றும் அத்தவறான இசையினிமித்தம் மனச்சஞ்சலமும் ஏற்படுகின்றது. ஆனால், இசையில் குறைவான திறமை உடையவர்களுக்கு அப்பாடலில் தவறான இசை/சுரம் காணப்பட்டது என்பதுகூடத் தெரியாமல் இருக்கும். நமது கர்த்தருடைய தலைக்கு மேலாக எழுதிப்போடப்பட்டிருந்ததான “யூதருடைய இராஜா” என்ற விலாசமானது ஒருவேளை நமது கர்த்தருக்கு அருகாமையில் காணப்பட்டதான கள்வர்களில் ஒருவனுடைய தலைக்குமேல் போடப்பட்டிருந்ததானால், அவன் தனது மரணமானது ஒரு வெற்றியென மேன்மைப்பாராட்டியிருந்திருப்பான் என்பதில் ஐயமில்லை. பூரணத்தைக்குறித்துப் புரிந்துகொள்வது என்பது நமக்குச் சிரமமாகவே உள்ளது. ஏனெனில், நாமும் சரி, நம்முடன் தொடர்புகொண்டிருப்பவர்களில் எவரும் சரி, ஒருவரும் பூரணர்களாக இருந்ததில்லை. ஆகவே, இப்படிப்பட்ட உபத்திரவமான சூழ்நிலையின் கீழ் ஒருவேளை நமது கர்த்தருடைய சீஷர்கள் பாடுபட நேரிடுகையில், அவர்கள் படும் பாடுகளைக் காட்டிலும் அதிகமாகவே நமது கர்த்தர் பூரணமான சரீரமும், உணர்வும் கொண்டிருப்பதினால், பாடுபடுவார் என்ற உண்மையை நாம் மீண்டும் நினைப்பூட்டுகின்றோம்.
இத்தருணத்தில் நமது கர்த்தர் துயரப்படுவதற்கும், அவ்வியாகுலம் மிகவும் கடுமையான நிலைக்குச் சென்று அவருக்கு இரத்த வியர்வை உண்டாகுமளவிற்கு நமது கர்த்தர் பாரப்படுவதற்கும், வேறொரு காரணம் உள்ளது. உண்மையைச் சொல்லப்போனால், இதுவே பிரதானமான காரணமாகவும் உள்ளது. தேவனுக்கு முன்பாக தம்முடைய நிலைமையைக்குறித்தும், தாம் பலி செலுத்துவதற்கென, தாம் பண்ணியிருந்த உடன்படிக்கையின் நிலைமைக்குறித்தும் அவருக்குள் ஏற்பட்ட சிந்தனைகளே அந்தக் காரணமாகும். தேவனுடைய கிருபையினால் ஆதாமை மீட்பதற்கும், ஆதாமை மீட்பதன் மூலம் அவருக்குள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட ஆதாமின் சந்ததியை மீட்பதற்குமெனக் காணப்பட்ட பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு, இயேசு பரலோக மகிமைகளைத் துறந்து, தேவதூதர்களுக்கும் குறைவான மனித சுபாவத்திற்கும், ரூபத்திற்கும் இறங்கிவந்தார். இப்படியாக, தம்மையே குறைவாக தாழ்த்தும் விஷயத்தில், இயேசு மகிழ்ச்சிக்கொண்ட காரியமானது, “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்ற வார்த்தைகளில் வெளிப்படுகின்றது (சங்கீதம் 40:8). இந்த உணர்வுதான் இயேசுவை அவருடைய முப்பதாம் வயதின்போது, அவர் தம்மை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் முழுமையான அர்ப்பணிப்புக்குள் வழிநடத்திற்று. மேலும், இந்த உணர்வினால்தான் அவர் தம்மைப் பாவநிவாரண பலியாக நேர்த்தியாக ஒப்புக்கொடுக்க முடிந்தது. அதே அன்பும், வைராக்கியமும் அவருடைய ஊழிய நாட்கள் முழுவதிலும் அவரை உண்மையுடன் காணப்படுவதற்கும் உதவிற்று; இன்னுமாக அவருக்கு வாழ்க்கையில் வந்த சகல அனுபவங்களையும், பாவிகளால் வந்த பல்வேறு விபரீதங்களையும் அவர் இலேசான உபத்திரவங்கள் என்று கருதுவதற்கும் உதவிற்று; ஏனெனில் தாம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார் என்பதை அவர் உணர்ந்துகொண்டிருந்தார்.
பின்னர் ஏன் கெத்செமனே தோட்டத்தில் நமது கர்த்தர் இப்படியான கடுந்துயரமடைந்தார்? அதாவது, அவருடைய ஊழியத்தின் முடிவின்போதும், அவருக்கு வரவிருக்கின்ற மரணம் குறித்து, அவர் தமது சீஷர்களிடம் கூறிவிட்டபோதும், தாம் “மூப்பராலும், பிரதான ஆசாரியராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு” (லூக்கா 9:22) சிலுவையில் அறையப்படுவார் என்பது குறித்து அவர் தமது சீஷர்களுக்கு விவரித்திருந்தபோதும், இவைகள் பற்றிய அனைத்தும் தெரிந்திருந்தபோதும், பிதாவினிடத்தில் அவருக்கு நம்பிக்கை காணப்பட்டிருந்தபோதும், அன்புடன்கூடிய கீழ்ப்படிதல் பிதாவினிடத்தில் அவருக்கு இருந்தபோதும், மரணம் வரையிலான அவருடைய அர்ப்பணிப்பிற்கு அவர் உண்மையாயிருந்தபோதும், ஏன் நமது கர்த்தர் கெத்செமனே தோட்டத்தில் இப்படியான கடுந்துயரத்தை அடைந்தார்? எதற்கு?
இயேசு, “தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணியுள்ளார்” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகள் சூழ்நிலையை நமக்கு விவரிக்கின்றன (எபிரெயர் 5:7). ஆனால் அநேகர் மரித்திருக்கின்றார்களே, இதுபோலவும் மற்றும் இதைக்காட்டிலும் கொடூரமான விதத்திலான மரணங்களை அமைதலுடன் அநேகர் சந்தித்திருக்கின்றார்களே. ஏன் நமது கர்த்தர் இப்படியான கடுந்துயரத்தினால் மனமுடைந்தார்? இரத்த வியர்வை வருமளவுக்கு அவர் ஏன் அப்படிப் பலத்த சத்தம் எழுப்பி அழுதார்? நாம் மரணத்தைப் பார்க்கும் விதத்திலிருந்து, அவர் மரணத்தைப் பார்க்கும் விதம் முற்றிலும் மாறுபட்ட காரியமாகும் என்பதே நம்முடைய பதிலாகும். நம்மைப் பொறுத்தவரையில், நம்மில் ஒவ்வொருவருக்கும் பத்தில் ஒன்பது பாகம் மரித்துப் போய்விட்டது. மேலும், பூரணமற்ற தன்மையின் காரணமாகவும், விழுகையில் உள்ள நமக்கான பங்கின் காரணமாகவும் மனம், சரீரம் மற்றும் ஒழுக்க ரீதியிலான சகல உணர்வுகளும் நமக்கு மரத்துப்போய்விட்டன. ஆகவே ஜீவன் என்றால் என்ன என்பதை அதன் மேன்மையான, சிறந்த, உன்னதமான நிலையில் நம்மால் முழுமையாய் உணர்ந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. ஆனால், நம் கர்த்தரின் விஷயத்தில் இப்படியாக இல்லை. “அவருக்குள் ஜீவன் இருந்தது”, அதாவது ஜீவன் பூரணமாய் இருந்தது. மூன்றரை வருடக் காலமாக அவர் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்ததும், சத்தியத்தைப் பிரசங்கிப்பதற்கு அந்த ஜீவனையே அவர் பயன்படுத்திக்கொண்டிருந்ததும் உண்மைதான். விசேஷமாக, திரளான வியாதியஸ்தர்களுடைய வியாதியைச் சொஸ்தப்படுத்தும் விஷயத்தில் அவரிடமிருந்து இந்த ஜீவனின் சத்துவமே/வல்லமையே புறப்பட்டுப்போய் வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்கியது. இச்செயல்கள் அவருடைய சரீர பலத்தைப் பலவீனப்படுத்தி / குறைவுபடுத்திக்கொண்டிருந்தது உண்மையாக இருந்தபோதிலும், மனரீதியில் [R3886 : page 347] அவர் ஜீவனோடும், முழுச் சக்தியுடனும், பூரணத்துடனுமே ஓடிக்கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை. மரணம் தொடர்பான விஷயங்களில் நாம் இந்நாள் வரைக்கும் வாங்கிக்கொண்டிருக்கும் அனுபவங்கள் காரணமாகவும், மரணத்தை நாம் (வாழ்க்கையில்) எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிற காரணமாகவும், மரணம் இன்றோ அல்லது நாளையோ நிச்சயமாய் வரும் என்றே நம்முடைய எண்ணங்கள் காணப்படுகின்றன. ஆனால், ஜீவன் தொடர்பான விஷயத்தில் நம்முடைய கர்த்தருடைய அனுபவங்கள் முற்றிலும் வேறாக இருந்தது. நமக்கு அறிவிக்கப்படாத பல நூற்றாண்டுகள் காலமாக, நமது கர்த்தர் பிதாவுடனும், பரிசுத்த தூதர்களுடனும் முடிவில்லா ஜீவனைப் பூரணமாக அனுபவித்திருக்கின்றார். மேலும், மரித்துக்கொண்டிருக்கும் மனுஷர்களுடன் அவர் வாழ்ந்த காலமும் கொஞ்சம் வருடங்கள்தான். ஆகவே மரித்துக்கொண்டேயிருக்கும் மனுக்குலம் மரணத்தைக்காணும் பார்வையிலிருந்து அவருடைய பார்வை மிகுந்த வித்தியாசமாய்க் காணப்பட்டது.
இதுமாத்திரமல்ல, இன்னும் சில காரியங்கள் அவர் அப்படித் துயரப்படுவதற்கு இருந்தன, அவை என்னவெனில்: புறஜாதியாரைப் பொறுத்தவரையில் அவர்களுடைய மூதாதையாருடைய பாரம்பரியமான கருத்துக்களின் அடிப்படையில் எதிர்க்கால வாழ்க்கைக்குறித்த நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. தேவனுடைய ஜனங்களைப் பொறுத்தவரையில், தெய்வீக வாக்குத்தத்தத்தின் காரணமாகவும், கிறிஸ்துவின் பலியினுடைய புண்ணியம் இந்த வாக்குத்தத்தங்களுக்கு நிச்சயம் அளித்ததின் காரணமாகவும், அவர்களுக்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கை இருந்தது. ஆனால் இயேசுவுக்கு என்ன நம்பிக்கை இருந்தது? மரித்தவர்கள் உண்மையில் மரித்துப் போகவில்லை என்ற புறஜாதியாருடைய நம்பிக்கையை அவரால் நம்ப முடியாது. ஏனெனில் அது உண்மையல்ல என்பதை அவர் அறிவார். இன்னுமாக, வேறொருவருடைய பலியினால், மீட்படைந்து, உயிர்த்தெழும் நம்பிக்கையும் அவரால் வைக்கமுடியாது; ஆக, அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவருடைய சொந்த ஓட்டமானது, அவரது அர்ப்பணிப்பின் நாள் துவங்கி முடிவுவரையிலும் முழுக்கப் பூரணமாகவும், நீதியின் பார்வையிலும், பரமபிதாவின் பார்வையிலும் எவ்விதமான குற்றமும் இல்லாததாகவும் இருப்பதிலேயே காணப்பட்டது. அவர் கெத்செமனே தோட்டத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தபோது, இந்தப் பயங்கரமான பயம் அவரை ஆட்கொண்டது: “நான் எல்லா சிந்தனைகளிலும், வார்த்தையிலும், கிரியையிலும் சரியாக/பூரணமாக இருந்துள்ளேனா? நான் பிதாவை முழுமையாகத் திருப்திபடுத்தியுள்ளேனா? என்னுடைய பூரணத்தன்மையின் காரணமாக என்னைக் கூனிக்குறுகிப்போகச் செய்யக்கூடிய நாளை எனக்கு வரப்போகின்றதான அவமானத்தையும், இகழ்ச்சியையும் என்னால் சகிக்கமுடியுமா? எனக்கு வரப்போகும் இந்த அவமானங்களை கூனிக்குறுகினதினிமித்தமாக (வெட்கத்தினிமித்தமாக) நான் பின்வாங்கிப்போகாமல் என்னால் அவைகளை எதிர்க்கொள்ள முடியுமா? இவைகள் அனைத்தினிமித்தம் நான் பிதாவினால் பாத்திரவானாகக் கருதப்பட்டு, மூன்றாம் நாளில் மரணத்திலிருந்து உயிர்த் தெழுப்பப்படுவேனா? ஒருவேளை நான் தோல்வியடைந்துவிட்டேன் என்றால் அல்லது ஏதோ ஒரு சிறிய விஷயத்தில் நான் தவறிப்போய்விட்டால், நான் உயிர்த்தெழுவதற்கு அபாத்திரனாகக் கருதப்பட்டு மரணத்திலேயே விட்டுவிடப்படுகின்ற நிலைக்கு ஆளாகிவிடுவேனோ? என்ற பாரமான கேள்விகள் நமது அருமையான மீட்பருடைய இருதயத்தில் எவ்வளவு தாங்கமுடியாத துயரத்தை உண்டுபண்ணியிருக்கும் என்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. ஆகவே, தம்மை மரணத்தினின்று உயிர்த்தெழுதலின் மூலம் இரட்சிக்க வல்லவரை நோக்கி, இயேசு பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார்.
(மத்தேயு 26:39) “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபம்பண்ணினதாக மத்தேயு கூறுகின்றார். (மாற்கு 14:36) “அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபம்பண்ணினதாக மாற்கு கூறுகின்றார். (லூக்கா 22:42) “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபம்பண்ணினதாக லூக்கா பதிவு செய்கின்றார். இவைகளனைத்தும் தெரிவிப்பது என்னவெனில், நமது கர்த்தர் தம்மைக்குறித்து மிகவும் பயந்துபோய்விட்டார். அதாவது, தாம் இவ்வளவு தூரம் கீழ்ப்படிதலுடன் கையில் எடுத்துக்கொண்டதும், இவ்வளவு தூரம் உண்மையுடன் நிறைவேற்றிக்கொண்டு வந்திருந்ததுமான தேவனுடைய திட்டமானது, தம்முடைய ஏதாகிலும் ஒரு தவறான அடியெடுத்து வைத்தலின் காரணமாக இல்லாமலாக்கப்பட்டுப் போய்விடுமோ என்று அவர் மிகவும் பயந்து காணப்பட்டார். ஆதாமின் கீழ்ப்படியாமையினிமித்தம் அவருக்கு உண்டான மரணத் தண்டனைக்கு ஈடுபலி கொடுப்பதற்கென ஏதாகிலும் ஒருவிதமான மரணத்தை இயேசு சந்திப்பதே போதுமானதாகும். ஆனாலும் பிதாவோ, தம்முடைய குமாரனாகிய மீட்பரை உச்சக்கட்டமாய் இருக்கும் அனைத்துப் பரிட்சைக்குள் அனுமதிப்பதற்கும், அவர் மேல் சிலுவையின் அவமானத்தையும், இகழ்ச்சியையும் அனுமதிப்பதற்கும் சித்தம் கொண்டிருந்தார். நமது கர்த்தருடைய கேள்வி: என்னால் அதைச் சந்திக்க/எதிர்க்கொள்ள முடியுமா? அல்லது தெய்வீகத் திட்டத்தில் குறுக்கிடாமல் அல்லது இந்த மாபெரும் வேலை நிறைவேறுவதில் எவ்விதமான தடையும் ஏற்படாதவாறு, அவமானம் மற்றும் இகழ்ச்சியாகிய அம்சங்களைப் பிதாவினால் விலக்கிவிட முடியுமா? என்பதாகவே காணப்பட்டது. ஆயினும், “என்னுடைய சித்தத்தின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்ற வார்த்தைகளானது அவசியமான கீழ்ப்படிதலைச் சுட்டிக்காட்டியது.
நமது கர்த்தருடைய விண்ணப்பம் கேட்கப்பட்டது என்றும், அவர் பயமடைந்த விஷயம் தொடர்பாக அவருக்கு பதிலளிக்கப்பட்டது என்றும், அதாவது சிலுவை பற்றியும், மரணத்திலிருந்து உயிரடையும் காரியம் பற்றியும், அவரடைந்த பயத்திற்குப் பதிலளிக்கப்பட்டது என்றும் அப்போஸ்தலர் தெரிவிக்கின்றார். இப்படிப்பட்டதான உபத்திரவங்களில் விடுவிக்கப்படுவதற்காக அல்லது உதவி பெற்றுக்கொள்வதற்காக ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் இரண்டு விதங்களில் பதிலளிக்கப்படலாம். எப்படியெனில், ஒன்றில் பிதாவானவர் பிரச்சனைக்குரிய காரணத்தை மாற்றிப்போட்டுவிடுவார், இல்லையேல் அப்பிரச்சனையை எதிர்க்கொள்ளத்தக்கதாக நம்மைப் பிதாவானவர் பெலப்படுத்துகின்றவராய் இருப்பார். ஆனால் நம் விஷயத்திலும் சரி, போதகரின் விஷயத்திலும் சரி, பிதாவானவர் எப்பொழுதும் இரண்டாம் முறையையே கையாளுகின்றவராகக்காணப்பட்டு, தமது வார்த்தையின் மூலம் உண்டாகும் நிச்சயத்தின் வாயிலாக நமக்குச் சமாதானத்தையும், பலத்தையும் அருளுகின்றவராய் இருக்கின்றார். ஆகவே, நமது போதகரிடம் தூதன் தோன்றி அவரைப் பலப்படுத்தினார் என்று நாம் வாசிக்கின்றோம். அருமையான மீட்பர் தனிமையிலும், தாங்க முடியாத துயரத்திலும் காணப்பட்ட அவ்வேளையில், அவருக்குத் தூதன் என்ன செய்தி கொண்டுவந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. நாம் தெரிந்தேயாக வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. பிதா அவருடைய விண்ணப்பத்தைக் கேட்டார் என்றும், அவர் அச்சம் கொண்ட விஷயம் தொடர்பான விண்ணப்பம் கேட்கப்பட்டது என்றும், அவருடைய சகல பயமும் மாற்றிப்போடப்பட்டது என்றும், நமது அருமையான மீட்பருடைய மனதில் சமாதானம்/அமைதி ஆளத் தொடங்கினது என்றும், அதுமுதல் அந்த இரவிலும், அடுத்த நாளிலும் நடந்த அனைத்துச் சம்பவங்களிலும் அவர் அனைத்து மனுஷர்கள் மத்தியிலும் சாந்தத்துடனும், அமைதியுடனும் காணப்பட்டார் என்றும், நாம் அறிந்துகொள்வது நமக்குப் போதுமானதாகும். குமாரன் மேல் தெய்வீகத் தயவு உள்ளது என்பதையும், அத்தருணம் வரையிலும் குமாரன் உண்மையாகவே இருந்துள்ளார் என்பதையும், பிதாவின் ஆதரவு குமாரனுக்கு இன்னும் காணப்படுகின்றது என்பதையும், குமாரனுக்கான சோதனை வேளை வரும்போது, அவ்வேளைக்கான சகல நெருக்கடிகளையும் குமாரனால் முழுமையாகச் சந்திக்க முடியும் என்பதையும் குறித்ததான பிதாவின் வாக்குறுதிக் குறித்த விஷயங்களையே தூதன் குமாரனிடம் கூறியிருந்திருக்க வேண்டும் என்பதே நம்முடைய அனுமானமாகக் காணப்படுகின்றது. பிதாவின் அங்கீகாரம் தொடர்பான நிச்சயத்தைக் கர்த்தர் பெற்றுக்கொண்ட மாத்திரத்தில் அவருக்குள் இருந்த துக்கங்கள் திசை தெரியாமலேயே போயிருந்திருக்கும். இன்னுமாக, அவருடைய இருதயத்திற்குள் நம்பிக்கையும், சந்தோஷமும், அன்பும், சமாதானமும் பாய்ந்து வந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. பின்னர்த் தமக்கு இன்னும் சற்று நேரத்தில் சம்பவிக்க இருக்கும் நிகழ்வுகளை அறிந்தவராக, அவைகளை எதிர்க்கொள்ளும்படியாகச் சீஷர்களை விட்டுவந்த இடத்திற்கு நடந்து போனார்.
கர்த்தருடைய ஜனங்கள் சந்தோஷத்துடன் ஜீவிக்க முயற்சி பண்ண வேண்டும் என்பதும், சகல விஷயங்களுக்காக எப்போதும் பிதாவுக்கு நன்றிச் செலுத்துகிறவர்களாக இருப்பதற்கு நாட வேண்டும் என்பதும், கிறிஸ்துவினிமித்தம் பாடுகள், நிந்தனைகள் முதலியவைகளைத் தாங்கள் அனுபவிப்பதற்குப் பாத்திரவான்களாக எண்ணப்பட்டதினிமித்தமாக களிகூர வேண்டும் என்பதும் நல்ல காரியந்தான். ஆனாலும், அப்போஸ்தலர் நாம் அச்சத்துடன் களிகூர வேண்டும் என்று கூறுகின்றார். இன்னுமாக, நாம் நம்மையே வஞ்சிக்கும் விதத்திலும், சிக்க வைக்கும் விதத்திலும் நம்முடைய முடிவைக்குறித்துக் கவலையற்ற நிலையிலும், சுயதிருப்தியுள்ள நிலையிலும் இருந்து களிகூருகின்றவர்களாகக் காணப்படக்கூடாது என்றும் கூறுகின்றார். இன்னுமாக, நம்மை அன்புகூர்ந்து நம்மை விலைக்கொடுத்து வாங்கினவரும், நம்மோடு என்றென்றும் கூடவே இருப்பவரும், நம்முடைய சிறந்த நண்பராகவும், உண்மையான வழிக்காட்டியாகவும் இருந்தவருமாய் காணப்படுகிறவரிடத்தில் நம்முடைய களிகூருதல் காணப்படுவதாக என்றும் கூறுகின்றார். இன்னுமாக, நமக்கு ஞானம் மற்றும் தைரியம் மற்றும் பலம் இருக்கின்றது என்பதான எண்ணங்களில் களிகூருகிறவர்களாய் இராமல், நமக்கு ஓர் இரட்சகர் இருக்கின்றார் என்பதிலும், அவர் மாபெரியவராக இருக்கின்றார் என்பதிலும், அவர் மூலம் பிதாவினிடத்திற்கு வந்தவர்கள் அனைவரையும் முடிவுபரியந்தம் இரட்சிக்க வல்லவராயிருக்கின்றார், என்பதுமான உண்மைகளில் களிகூருகின்றவர்களாய் இருக்கக்கடவோம். இவ்விதமாக, நமது கர்த்தர் நம்முடைய பெலனாகவும், நம்முடைய நம்பிக்கையாகவும், நமது கேடகமாகவும், நமது பரிசையாகவும் இருப்பார்.
நம்முடைய கர்த்தருடைய விஷயத்தில், “அவர் ஒருவராய் ஆலையை மிதித்தார், ஜனங்களில் ஒருவனும் அவரோடு இருந்ததில்லை” என்று நாம் வாசிக்கின்றோம் (ஏசாயா 63:3). அவருடைய கடுமையான வேளையின்போது அவருக்கு மிகுந்த ஆறுதலும், தேறுதலும் அவசியப்பட்டபோது, அவருடைய பூமிக்குரிய நண்பர்கள் மத்தியில் அவருக்கு நெருக்கமாயும், அன்பாயும் காணப்பட்டவர்களால் கூட அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, அவருக்கு ஆறுதல் அளிக்கவும் முடியவில்லை. ஆனால், நம்முடைய விஷயம் எவ்வளவு வித்தியாசமாய் உள்ளது! நம்முடைய சந்தோஷங்களிலும், துக்கங்களிலும் நம்முடைய நம்பிக்கைகளிலும் அச்சங்களிலும் நம்மைப்போன்று ஒரே ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களும், ஒரே கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் போதிக்கப்படுகிறவர்களுமாகிய நம்முடைய சகோதர சகோதரிகளும், நம்மிடம் அனுதாபம் காட்டாமல் இருப்பதற்கு நாம் ஒன்றும் அவர்களிலிருந்து (இயேசு பரிபூரணமாய் இருந்ததினால், சீஷர்களிடமிருந்தும் அனைவரிடமிருந்தும் வித்தியாசமானவராய்க் காணப்பட்டதுபோன்று) வித்தியாசமானவர்கள் அல்ல. நம் விஷயத்தில் நமக்கு மனித ஆலோசனையும், ஆறுதலும் அளிக்கப்பட முடியும்; இது தகுந்ததும்கூட. நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் கொடுக்கவேண்டும் என, ஒருவரையொருவர் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கங்களாகக்கட்டி எழுப்பவேண்டும் எனக் கர்த்தர் விரும்புவதாகவும், இதுவே தெய்வீக ஏற்பாடு என்பதாகவும் வேதவாக்கியங்கள் நமக்கு உறுதியளிக்கின்றது. இப்படியாக ஏற்பாடு இருப்பினும் நாம் பரம கிருபையின் சிங்காசனத்தினிடத்திற்குப் பிதாவுடனும், மகிமையடைந்த கர்த்தருடனும் தனிப்பட்ட உரையாடல் வைத்துக்கொள்ளும் காரியத்தையும் நாம் ஒருபோதும் புறக்கணித்துவிடக்கூடாது. என்னதான் மனிதராகிய சகோதர சகோதரிகளின் தோழமை நமக்குக் காணப்பட்டாலும், கர்த்தருடைய தோழமையை நாம் ஒருபோதும் குறைவாக மதிப்பிடவோ அல்லது மறக்கவோ கூடாது. கர்த்தர் சில சமயங்களில் நம்மை ஆறுதல்படுத்து வதற்கும், அவருடைய அன்பு குறித்ததான நிச்சயத்தை நமக்கு அளிப்பதற்கும், நம்முடைய நம்பிக்கை மற்றும் எதிர்ப்பார்ப்புத் தொடர்பான நிச்சயத்தை நமக்குச் சுட்டிக்காண்பிப்பதற்கும் வேண்டி நமக்கு அவருடைய தூதர்களை அனுப்புவார். கர்த்தருக்கு ஏற்கெனவே பூமியில் மனித தூதர்களாகிய கிறிஸ்துவின் சரீர அங்கங்கள், சத்திய தூது கொடுப்பவர்கள் இருக்கின்றபடியினால், பரலோகத்தின் தூதர்களைத் தூது கொடுக்கும்படிக்கு அனுப்புவதற்கு இனி அவருக்கு அவசியமிராது. இந்த மனித தூதர்களாகிய கிறிஸ்துவின் சரீர அங்கங்கள் போதகருடைய ஆவியினாலும், அன்பினாலும் நிரப்பப்பட்டவர்களாகக் காணப்பட்டு அன்பான வார்த்தைகளைப் பேசுவதற்கும், நொறுக்கப்பட்டுள்ள இருதயங்களைக் [R3886 : page 348] காயங்கட்டுவதற்கும், போதகரின் பிரதிநிதியாக ஆறுதல் மற்றும் மகிழ்ச்சியின் திராட்சரசம் மற்றும் எண்ணெயையும் ஊற்றுவதற்கும், எப்போதும் ஆயத்தமாய்க் காணப்படுவார்கள். இப்படிப்பட்டதான ஊழியங்கள் மூலமாக எவ்வளவு சந்தோஷம் கடந்துவருகின்றது. மேலும், இவ்விதமான ஊழியங்கள் காரணமாக எத்துணை ஆசீர்வாதங்களை நாம் பெற்றிருக்கின்றோம். மேலும், இவ்விதமாக உடன் சகோதர அங்கங்களுக்குச் சந்தோஷம், சமாதானம் மற்றும் ஆசீர்வாதம் அளிக்கக்கூடிய ஊழியர்களாக நாம் கர்த்தரால் பயன்படுத்தப்படும் தருணங்களானது, எத்துணை சிலாக்கியங்களாக இருக்கின்றன! இப்படிப்பட்டதான வாய்ப்புகளை நாம் தவறி விட்டுவிடாதபடிக்கு விழிப்பாய் இருப்போமாக.
ஆகவே, “அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்” என்ற வார்த்தைகளைத் தெரிவிப்பதன் வாயிலாக இயேசு பயப்பட்ட விஷயத்திற்காக, நாமும் பயப்பட வேண்டும் என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார் (எபிரெயர் 4:1). புதிய சிருஷ்டிகளாக நாம் புதிய ஜீவனை, பரலோக ஜீவனை ருசி பார்த்துவிட்டோம். இன்னுமாக, பிதாவை அன்புகூருகிறவர்களுக்காக அவர் வைத்துள்ள பரம காரியங்களினுடைய அழகையும், மகத்துவத்தையும் பார்க்கத்தக்கதாக ஓரளவுக்கு நம்முடைய புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டுள்ளன. நாம் பண்ணியுள்ள பலியின் உடன்படிக்கைக்கு நாம் உண்மையாய் இருப்பதின் அடிப்படையிலேயே நம்மால் மகிமையையும், கனத்தையும், அழியாமையையும், கர்த்தரோடு உடன்சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. நாம் ஒருவேளை உண்மையாய்க் காணப்பட்டுவிட்டோமெனில், நமக்கு வாக்களித்தவர், பலனளிப்பதில் உண்மையுள்ளவர் என்பதை நாம் அறிவோம். ஒருவேளை நாம் உண்மையற்றவர்களாய்ப் போய்விட்டோமெனில், நாம் பரிசைப் பெற்றுக்கொள்வதற்குத் தவறிவிட்டோம் என்பதும் நமக்குத் தெரியும். இப்படியாக, சூழ்நிலைகள் இருக்கையில் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கவேண்டும்? இப்படிப்பட்டதான விலையேறப்பெற்ற மகிமையையும், கனத்தையும், அழியாமையையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் கொண்டவர்களாக, நம்முடைய உடன்படிக்கையை நிறைவு செய்வதற்குத் தொடர்ந்து முயற்சிப்பவர்களாகவும், நம்முடைய பிதாவின் அன்பிலும், நம்முடைய மீட்பருடைய தயவிலும், அங்கீகரிப்பிலும் நிலைநிற்பவர்களாகவும் இருப்போமாக. இப்படியாக, கவனமாக நடக்க முயற்சிக்கும் யாவரும், முழுமையான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும், சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கும், உண்மையாய் இருப்பதற்கும் அவசியமான அச்சத்தை இவர்களுக்குள் வளர்க்கத்தக்கதாகவும், இவர்கள் பரீட்சிக்கப்படத்தக்கதாகவும், இவர்கள் தங்களை நிரூபிக்கத்தக்கதாகவும், இவர்கள் கெத்செமனேயின் தனிமையினுடைய சிறு அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கான தருணங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.
உச்சக்கட்டமான மன வியாகுலம் காணப்பட்ட வேளையில், நமது கர்த்தர் மீண்டும் மீண்டுமாக ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் ஆறுதலடைவதற்கென அவர் தமது சீஷர்களிடத்தில் வந்தார். ஆனால், அவர்களுடைய கண்கள் துக்கத்தின் காரணமாக நித்திரை மயக்கத்தினால் இருப்பதையும், அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதையும் அவர் கண்டார். அப்போது நடுராத்திரி வேளையாய் இருந்தது. அவருடைய துக்கங்களில் அவரோடுகூட இருந்தாலும், அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களாகக் காணப்பட்டார்கள். அவர் பேதுருவை, “நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்று போதகர் கடிந்து கொண்டார்/கோபித்துக்கொண்டார் (மத்தேயு 26:40). “உம்மை அனைவரும் கைவிட்டுப்போனாலும், நான் உம்மை கைவிட்டு ஓடமாட்டேன்” என்று கொஞ்ச நேரத்திற்கு முன்பு சூளுரைத்தப் பேதுருவோ, பட்டயத்தைத் தன்னிடத்தில் பெற்றிருந்தவரும், பிற்பாடு அதனை போதகரைக் காக்கும் முயற்சியில் பயன்படுத்தினவருமாகிய பேதுருவோ, அந்நேரத்திற்குரிய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளாதவராகக் காணப்பட்டார். மேலும் தமக்கு வரப்போகும் பரிட்சைகள் எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்றும், அவைகள் எவ்வளவு அண்மையில் இருக்கின்றது என்றும் போதகர் அறிந்திருந்ததுபோன்று பேதுரு அறிந்திருக்கவில்லை. மேலும், “சேவல் கூவுகிறதற்கு முன்னே என்னை நீ மூன்றுதரம் மறுதலிப்பாய்” என்று பேதுருவிடம் போதகர் பேசின வார்த்தைகள் இன்னும் சிறிது நேரத்தில் நிறைவேறப்போகின்றது என்பதையும் பேதுரு அறியாதவராய் இருந்தார். பேதுருவும், போதகரைப் போன்று பரிட்சைகள் சமீபமாய் இருக்கின்றது என அறிந்திருப்பாரானால், அவர் எவ்வளவு எச்சரிப்பாய்க் காணப்பட்டிருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இன்றும் வாழும் நமக்கும் இது பொருந்துகின்றது அல்லவா? கர்த்தருடைய ஜனங்களாகிய நாமும் இந்த அறுவடைக் காலக்கட்டத்தில் சபைக்கான கெத்செமனே வேளையை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் அல்லவா? நாம் ஏற்கெனவே கொஞ்சம் அந்தச் சோதனை வேளைக்குள் காணப்படுகின்றவர்களாய் இருக்கின்றோமல்லவா? கிறிஸ்துவின் கடைசி சரீர அங்கம் சீக்கிரத்தில் தலையோடு சேர்ந்து, [R3887 : page 348] பலி நிறைவடையப் போகின்றதல்லவா? இவ்வனுபவங்களை எதிர்க்கொள்ளத்தக்கதாக நாம் எவ்விதத்தில் ஆயத்தமாய்க் காணப்படுகின்றோம்? நாம் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறோமா? அல்லது அப்போஸ்தலரின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கின்றவர்களாய் இருக்கின்றோமா? அதாவது, தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள் என்றும், இந்தப் பொல்லாத நாளிலும், நம்மீது ஏற்கெனவே மேலோங்கிக் காணப்படும் சோதனையான இந்த நாளிலும், இன்னும் கடுமையாக எதிர்க்காலத்தில் நம்மீது வரப்போகிற சோதனையிலும், நாம் நிற்கத்தக்கதாகப் பகலுக்குரியவர்களாகிய நாம் விழிப்புள்ளவர்களாகவும், தெளிந்தவர்களாகவும், தேவனுடைய சர்வாயுதவர்க்கங்களைத் தரித்தவர்களாய் இருக்கக்கடவோம்” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கிறவர்களாய் இருக்கின்றோமா? சீஷர்கள் அனைவரும் கர்த்தரைத் தனியே விட்டுவிட்டு ஓடினதுபோன்று, பொதுவான ஒரு சிதறடிக்கப்படுதல் நேரிடும் வேளைக்கு நாம் ஆயத்தமாய் உள்ளோமா? போதகரின் மாதிரியை நாமும் பின்பற்றி, தெய்வீக அங்கீகரிப்பு நம்மீது உள்ளது என்ற உறுதியான நிலைப்பாட்டை/நிச்சயத்தை நாம் முதலாவது பெற்றுக்கொண்டவர்களாய் இருப்பதற்கு ஏற்ப, நம்முடைய சோதனை வேளைகளில் நம்முடைய தைரியம் காணப்படும். கர்த்தருடைய ஏற்பாட்டின்படி நமக்குக் கெத்செமனே தருணங்கள் ஒருவேளை வருமாயின் அவைகளை நாம் தவிர்த்துவிடாமல், நம்மை மரணத்தினின்று மகிமையான உயிர்த்தெழுதல் மூலம் இரட்சிக்க வல்லவரை நோக்கி பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணுவோமாக. இன்னுமாக, அப்படியான தருணங்களில் நமக்குப் பரிந்து பேசுகிறவர் ஒருவர் இருக்கின்றார் என்பதையும், நமக்கு உதவி செய்வதற்கு ஒருவர் இருக்கின்றார் என்பதையும் நினைவில் கொள்வோமாக. பிதாவின் செய்தியை நமக்களிக்கும் நமக்கான தூதனாகக் கர்த்தர் காணப்பட்டு – நாம் அவருடைய அன்பில் நிலைத்து நிற்பவர்களாகக் காணப்பட்டுவிட்டால், முடிவின் தருவாயில் அனைத்தும் நலமாய் நிறைவேறும் என்றும், நம்மை அவருடைய சொந்த புண்ணியத்தின் மூலமாய் ஜெயங்கொண்டவர்களாக, ஆம் முற்றிலும் ஜெயங்கொண்டவர்களாக ஆக்குவதற்கு அவர் வல்லமையும், சித்தமும் கொண்டவராகவும் இருக்கின்றார் என்றும் அவர் நமக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
இந்த வார்த்தைகளே, நமது அருமையான மீட்பர் அவருடைய சீஷர்களைக்குறித்துக் கூறினவைகளாகும். அவர்கள் இருதயத்தில் தம்மிடத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள் என்ற உண்மையை அவர் உணர்ந்தவராகவே இருந்தார். அவர்கள் தம்முடைய சீஷர்களாகும்படிக்கு அனைத்தையும் விட்டுவந்த காரியத்தை அவர் பொருட்படுத்தாதவர் அல்ல. அவர் கடினமான/இரக்கமற்ற ஆண்டவருமல்ல. மாறாக அவர்களுடைய மாம்சம், பூரணக் கோட்பாடுகளை நிறைவேற்றும் விஷயத்தில் தோல்வியுற்றாலும்கூட, அவர்களுடைய இருதயத்தின் நோக்கங்களை ஏற்றுக்கொள்வதற்கு என்றென்றும் விருப்பமுள்ளவராகவே காணப்படுகின்றார். ஆகவே, “இனி நித்திரைப் பண்ணி இளைப்பாறுங்கள்” என்ற வார்த்தைகளை அவர் ஏளனத்துடன் சீஷர்களை நோக்கிப் பேசவில்லை என்றும், காலையில் வரப்போகிற காரியங்களினிமித்தம் இரவில் அவர்கள் கொஞ்சம் இளைப்பாறுதலும், புத்துணர்வும் அடையட்டும் என்றே கூறினார். ஆனால், அவர்களால் அதிக நேரம் உறங்கமுடியவில்லை. யூதாஸ் இயேசுவைத் தேடிவந்த திரளான அதிகாரிகளுக்கு வழிகாட்டி அவ்விடத்திற்கு வந்தான். இந்த அதிகாரிகள் ரோம சேவகர்களாய் இராமல், பிரதான ஆசாரியனுடைய சேவகர்களாகவும், என்ன நடக்கப்போகின்றது எனப் பார்ப்பதற்கும் வந்திருந்த கும்பலுமாய் இருந்தார்கள். பஸ்கா அநுசரிக்கும்படிக்குப் பட்டணத்தில் ஜனங்கள் நிறைந்திருக்கும் வேளையில் காலைப்பொழுது, இயேசுவைக் கைது செய்வது என்பது, பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என இவர்கள் கருதி, இவரை இரவோடு இரவாகக் கைது செய்யும்படிக்குக் கெத்செமனே தோட்டத்திற்கு வந்தார்கள். பிரச்சனைகள் வரும் என்று எதிர்ப்பார்த்தபடியால், அப்பிரச்சனைகளைத் தவிர்த்திடுவதற்கு நியாயப்பிரமாணத்தினுடைய அதிகாரிகள் நாடினார்கள்.
கெத்செமனே தோட்டத்திற்கு இயேசுவும், அவருடைய சீஷர்களும் அடிக்கடி போவார்கள் என்று, அல்லது இராப்போஜனத்தின்போது இயேசுவும் அவருடைய சீஷர்களும் இத்தோட்டத்திற்குப் போக இருக்கின்றார்கள் என்று யூதாஸ் அறிந்திருக்கலாம். யூதாசுக்குள் சாத்தான் புகுந்த பிற்பாடு, கர்த்தரைக் காட்டிக்கொடுப்பதின் மூலம், முப்பது வெள்ளிக்காசுகளைச் சம்பாதித்துக் கொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் பஸ்கா போஜனம் புசிக்கும்படிக்குக் கூடியிருந்த சீஷர்களை விட்டுவிட்டு யூதாஸ் புறப்பட்டுபோய், பிரதான ஆசாரியர்களைக் கண்டு அவர்களிடத்தில் பேரம் பேசினான். இந்த உடன்படிக்கையின் காரணமாகவே இயேசுவைச் சந்திக்கும்படியாகவும், சேவகர்கள் அவரைப் பிடிக்கத்தக்கதாக அவர்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுக்கத்தக்கதாகவும் சேவகர்கள் கூட்டத்திற்கு முன்பாக யூதாஸ் வந்தார். யூதாஸ் இயேசுவின் அருகே வந்து, ரபீ வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். கிரேக்க பதிவுகளின் அர்த்தத்தின்படி பார்க்கையில் யூதாஸ் மீண்டும் மீண்டுமாக முத்தஞ்செய்தான் என்பதாகத் தெரிவிக்கின்றது. அன்பிற்கான பொதுச் சின்னமாய் இருந்த இந்த முத்தத்தை இயேசு ஏற்றுக்கொண்டார். மேலும், இது துரோகத்தின் முத்தமாய் இருந்தது என்றும் இயேசு அறிந்திருந்தும் எவ்விதமான கோபத்தின் வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வரவேயில்லை. மாறாக, மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும், “சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கின்றாய்?” என்றார் (மத்தேயு 26:50). “தோழா, எதற்காக வந்தாய்?” என்று கேட்டார் (திருவிவிலியம்). இங்குத் தோழா, சிநேகிதனே என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதற்கான ஆங்கில வார்த்தையான, “friend” அன்பான நண்பனைக் குறிப்பதுமில்லை; இன்னுமாக பிரியமான எனும் அர்த்தத்தைக் கொடுக்கும் philos என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தும் வரவில்லை; மாறாக [R3887 : page 349] உடன்வேலையாள் அல்லது கூட்டாளி என்ற அர்த்தத்தை அளிக்கும் hetaire என்ற கிரேக்க வார்த்தையிலிருந்தே வந்துள்ளது.
கிறிஸ்துவின் ஒவ்வொரு சீஷனும், கர்த்தருக்கும் அவருடைய நோக்கங்களுக்கும், தான் ஒருபோதும் யூதாசாக மாறிவிடாத ஒரு வாழ்க்கைப் போக்கை வாழ முடிவு செய்ய விரும்புவது அவனவன் கையில்தான் இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் துரோகியாக இருப்பான் என்றும், தேவனுடைய கிருபையை விருதாவாக அவன் பெற்றுக்கொள்வதோடு அல்லாமல், அக்கிருபையை மிகுந்த தீமையான விதத்தில் பயன்படுத்துவான் என்றும், தேவன் முன்னறிந்து வைத்திருந்த காரியமானது, யூதாசின் வீழ்ச்சிக்கான காரணமல்ல. “கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்றும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்றும்” அப்போஸ்தலன் கூறுகின்றார் (2 தீமோத்தேயு 2:19). தேவனுடைய கிருபையை நாம் எப்படிப் பெற்றுக்கொள்வது என்பது குறித்தும், அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தும் தீர்மானிப்பது நம் கையில்தான் உள்ளது. தேவனுடைய முன்னறிவானது எவ்விதத்திலும் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணியாக இராது.
யூதாஸ் சீஷனாக தனது ஓட்டத்தை ஆரம்பித்தபோது, உண்மையுள்ளவனாகவே இருந்தான் என்பதை அநுமானிப்பதற்கு நமக்குப் பல காரணங்கள் உள்ளது. கடைசி வேளையில், அவனிடத்தில் வெளிப்பட்ட மிகக்கேடான குணலட்சணமும், இருதயத்தின் அவகேடான/தீமையான, கீழ்த்தரமான நோக்கங்கள்மீது வளைதலும் அவனுக்குள் படிப்படியாகவே ஏற்பட்டதென நாம் அநுமானிக்கிறோம். அதாவது இந்த அவக்கேடுகள் அவருக்குள் ஒரு சில சிறு யோசனைகளாக உதித்து, பின்னர் இறுதியில் மிகவும் பயங்கரமான அவல சம்பவமாக முடிந்தது என்று நாம் அநுமானிக்கின்றோம். அவருக்குள் உதித்த அந்த யோசனைகள் அநேகமாக சுயநலத்தின் அடிப்படையிலேயே காணப்பட்டிருக்க வேண்டும். அதாவது, பன்னிரண்டு பேர் மத்தியில் தனக்குப் போதுமான அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற யோசனைகள் அவருக்குள் தோன்றியிருக்கலாம். நமது கர்த்தர் பேதுருவுக்கும், யாக்கோபிற்கும், யோவானுக்கும் முன்னுரிமைக் கொடுத்து வந்த விஷயத்தில் கர்த்தருக்கு அறிவும், திறமையும் இல்லையென்பதை வெளிக்காட்டுகின்றன என்பதான யோசனைகள் கூட அவருக்குள் தோன்றியிருக்கலாம். இப்படியாக, மற்றவர்களிடத்தில் குறைக்காணும் விதமாக தனக்குள் ஏற்பட்டுள்ள ஆவிக்கு யூதாஸ் உற்சாகமூட்டிவந்தான் என்பதில் ஐயமில்லை. தீர்மானம் எடுக்க வேண்டிய எந்தெந்த விஷயங்களில் இயேசுவும் மற்றச் சீஷர்களும் தவறினார்கள் என்பதையும், எந்தெந்த இடங்களில் வாய்ப்புகளைப் பயன்படுத்த அவர்கள் தவறிவிட்டார்கள் என்பதையும், எந்தெந்த இடத்தில் சரியான வாய்ப்புகள் அமைந்தபோதும், தவறான வார்த்தைகளை அவர்கள் பேசிவிட்டார்கள் என்பதையும், யூதாஸ் தனக்கு மாத்திரமே புரிகின்றதுபோலவும், அதேவேளையில் தான் செய்பவைகள் சரியென்றும், தன்னிறைவு கொண்டவனாகவும் காணப்பட்டான். வீழ்ச்சி ஏற்படுவதற்கு முன்பு எப்போதும் இப்படிப்பட்ட சுயநலமான ஆவியும், இப்படியான சுயத்திருப்தியின் ஆவியும், மற்றவர் மேல் குற்றம் சாட்டும் இப்படியான ஆவியும் மற்றும் இப்படியான கண்மூடித்தனமான எண்ணங்களும் எப்போதும் காணப்படுகின்றது. இதற்குச் சபையின் வரலாறும், நம்முடைய தனிப்பட்ட அனுபவங்கள்கூடச் சாட்சிபகர்கின்றன.
கிறிஸ்துவின் நோக்கங்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லவில்லை என்று யூதாஸ் உணர்ந்தபோது அங்குக் கூடியிருந்த திரளான ஜனங்களின் – ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு, இயேசு இராஜாவாகிக் கொள்வதற்குக் கவனம் செலுத்தாமல் இருந்ததோடு, யூதர்களுடைய அதிகாரிகளிடமிருந்து தாம் எதிர்ப்பை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினதின் மூலம் இயேசுவின் மனம் வேறு திசையில் போய்க்கொண்டிருப்பதை யூதாஸ் உணர்ந்தபோது – அந்த உணர்வால் தன்னுடைய சொந்த கூட்டிற்குச் சொகுசான இறகுகள் வைப்பதற்கு ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற யோசனைகள் அவனுக்குள் எழும்பின. இதன் மூலமாக பிரச்சனைகளும், பிரிவினைகளும் வெடிக்கும்போது, கூட்டத்தாரிலேயே ஆதாயம் பெற்ற ஒருவனாகவும் மற்றும் சீஷனாக இருந்ததின் காரணமாக இழப்புகள் அடையாத நபராகவும் தான் இருக்க முடியும் என யூதாஸ் சிந்தித்தான். ஆக, அவனுடைய மனதை சுயநலம் ஆளுகை செய்து அவனைத் திருடுவதற்கு வழிநடத்தினபடியினால், “அவன் திருடனும், பணப்பையை உடையவனுமாயிருந்தான்” என்று அவனைக்குறித்து எழுதப்பட்டுள்ளது. அவன் சீஷர்களின் கூட்டத்தாருக்குப் பொருளாளராக இருந்தான். மேலும், அவர்களுக்குரிய பணத்தில் யூதாஸ் தன்னுடைய தனிப்பட்ட சில விஷயங்களுக்காக எடுத்துக்கொண்டவனாகவும் இருந்தான். (கர்த்தருடைய) நோக்கத்திற்காக தன்னுடைய ஈடு இணையற்ற நேரத்தைத்தான் கொடுத்துக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணத்தினாலும், தான் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் மூலம் உண்டாகும் மதிப்புகள் அவர்களுடைய பணப்பையிலிருந்து, தான் எடுத்துக்கொண்ட பணத்திற்கு ஈடு செய்வதாக உள்ளது என்ற எண்ணத்தினாலும், தான் திருடின விஷயம் ஒரு தவறல்ல என்று அவனுடைய நயவஞ்சகத்தினால் தன்னைக் குற்றமற்றவன் என யூதாஸ் எண்ணியிருக்கக்கூடும் என்றுகூட நாம் அனுமானம் செய்யலாம். இதுவே, சுயநலத்தின் ஆவியாகும். இந்தச் சுயநலத்தின் ஆவி, கர்த்தருடைய ஆவிக்கு அதாவது, பலி செலுத்தும் உணர்வின் ஆவிக்கும், சத்தியத்திற்காக முழு ஆன்மாவோடு செய்யப்படும் ஊழியத்திற்கும் முற்றிலும் எதிர்மாறானதாகும். யாரொருவர் இந்த ஆவியை எந்தளவில் பெற்றிருந்தாலும் சரி, அவர்கள் பெற்றிருக்கும் ஆவிக்கேற்ப அவர்களிடத்தில் யூதாசின் ஆவி இருப்பது மெய்யே. மேலும், இவ்வாவியைக் கொண்டிருப்பதினிமித்தம் உண்டாகும் விளைவுகள், யூதாசின் அளவிற்கு அல்லது அவரைக்காட்டிலும் குறைவாக இருப்பினும் அது நிச்சயமாக தீமையானதாகவே காணப்படும்.
உலகத்தில் காணப்படும் கர்த்தருடைய உண்மையான அங்கங்கள் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள் என்றும், அவர்களுக்கு எதிராக செய்யப்படும் எக்காரியமும் தமக்கு எதிராகவே செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்றும், நமது கர்த்தர் அறிவித்துள்ளார். ஆகவே, கர்த்தருடைய பின்னடியார்களில் மிகச் சிறியவராகக் காணப்படும் ஒருவரைக் காட்டிக் கொடுப்பதின் மூலமும், காயப்படுத்துவதின் மூலமும், இந்த யூதாசின் சுயநலத்தின் ஆவியானது இன்றும்கூடக் கர்த்தரைக் காட்டிக்கொடுப்பதற்கு வழிநடத்துகின்றது என்பது உறுதியே. யூதாசினுடைய ஆவிக்குப் பிரதிநிதிகளாகக் காணப்படுகிறவர்கள் முத்தம் கொடுத்துக் காட்டிக் கொடுக்கத்தக்கதான யூதாசின் வழிமுறையைப் பின்பற்றுவார்கள் என்ற விஷயத்தைக்குறித்து நாம் அதிர்ச்சியடைய வேண்டாம். அதாவது, யூதாசின் ஆவியுடையவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கங்கள் மீது தங்களுக்கு மிகுந்த அன்பும், மதிப்பும், மரியாதையும் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அதேசமயம் தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காக அல்லது முக்கிய ஸ்தானம் பெற்றுக்கொள்வதற்கோ, செல்வாக்குப் பெற்றுக்கொள்வதற்கோ, வேறெந்த சுயநலமான ஆதாயத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்கெனக் கிறிஸ்துவின் அங்கங்களை மறைமுகமாக/இரகசியமாகத் தாக்குகிறவர்களாக இருப்பார்கள். கர்த்தருடைய பின்னடியார்களாகிய ஒவ்வொருவரும், “ஆண்டவரே நானோ” என்று யூதாஸ் கேட்ட அதே வார்த்தைகள் அடங்கின கேள்வியைத் தங்களிடமே கேட்டுக்கொள்வார்களாக. புதுச் சிருஷ்டிகளாகிய நம்மை அழித்துப்போடுவதற்கும், நம்மைக் கண்ணியில் சிக்க வைப்பதற்கென ஏற்றச்சமயத்தைப் பதுங்கியிருந்து நாடுகின்றதான, இந்த யூதாசின் ஆவி நம்மிடத்தில் எவ்விதத்திலாகிலும் ஒளிந்துகொண்டிருக்கின்றதா என நம்மில் ஒவ்வொருவரும் நம்முடைய இருதயங்களை ஆராய்வோமாக.