PASTOR RUSSELL'S SERMONS / ஆங்கிலத்தில் பக்கம் 557
“நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” – 1 கொரிந்தியர் 5:7,8
இஸ்ரயேல் தேசத்தின்மீதான தெய்வீகத் தயவிற்கான முதல் நிறுவுதலாய் விளங்கின பஸ்கா அனுசரிப்புகளானது, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் இறுதி விருந்தில் அல்லது திருவிருந்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதான தெய்வீகத் தயவிற்கான முதல் நிறுவுதலுக்கு நிழலாய்க் காணப்படுகின்றது. நம்முடைய ஆதார வசனத்தில் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டியுள்ளதுபோலவே, யூதர்களுடைய பஸ்காவானது, கிறிஸ்தவர்களாகிய நாம் ஆசரிக்கின்றதான உண்மை பஸ்காவாகிய மேலானவைகளுக்கு நிழலாக இருக்கின்றது. நமக்கான தகவல்களுக்கென்று நாம் யூதருடைய நிழலை முழுமையாய்ச் சார்ந்திருப்பதில்லை; ஏனெனில் கிறிஸ்துவுக்கும், அவரது சபைக்கும் இடையிலான உறவு தொடர்பாகவும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கான விசேஷித்த இரட்சிப்புத் தொடர்பாகவும் நமது கர்த்தர் மற்றும் அவரது அப்போஸ்தலர்களுடைய தெளிவான, திவ்விய வார்த்தைகளை நாம் பெற்றிருக்கின்றோம். எனினும் நிஜத்தைப்பற்றின புரிந்துகொள்ளுதலில் நமக்குப் பெரிதும் உதவக்கூடிய அநேக விவரங்களை நாம் நிழலான பஸ்காவில் பெற்றிருக்கின்றோம்.
பஸ்காவானது மறைமுகமாக மீதமான இஸ்ரயேலர் அனைவருடன் சம்பந்தமுடையது என்றாலும், பஸ்காவானது இஸ்ரயேலர்களின் முதற்பேறானவர்களுடனே நேரடியாய்ச் சம்பந்தம் கொண்டிருந்தது என்பதை நாம் முதலாவதாகக் கவனிக்க வேண்டும். எகிப்தின்மீதான கடைசி வாதையானது, அவர்களது முதற்பிறப்புகள் அனைவரின் மரணமாக இருந்தது மற்றும் பஸ்கா என்பது அந்த இரவின்போது கடந்துவந்ததான சங்காரத்தூதன், இஸ்ரயேலின் முதற்பிறப்புகளைக் கடந்துசென்றார் என்ற உண்மையைச் சுமக்கின்ற வார்த்தையாய் இருக்கின்றது. எகிப்தியர்களுடைய இளைய பிள்ளைகள் அபாயத்திற்குள் காணப்படாததுபோன்று, இஸ்ரயேலர்களின் இளையப் பிள்ளைகளும் அபாயத்திற்குள் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் கடந்துபோகப்படவில்லை. எனினும் இவர்கள் முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதலில் அக்கறையுடன் இருந்தார்கள் என்பதில் உறுதியே; இதற்குக் காரணம் உறவுமுறைகள் என்பது மாத்திரமல்லாமல், கர்த்தருடைய ஏற்பாடுகளின்படி அந்த முதற்பேறானவர்களே அடுத்த நாளில், இவர்கள் எகிப்திலிருந்து வெளியேறுகையில், ஜனங்களை வழிநடத்துபவர்களாகவும், விடுவிக்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள் (எண்ணாகமம் 8:17,18) என்பதினாலும் ஆகும்.
இன்னுமாக தெய்வீகக் கட்டளையின்பேரில் இஸ்ரயேல் புத்திரரிலுள்ள முதற்பேறானவர்களுக்குப் பதிலாக, முழு லேவிக் கோத்திரமும் எடுத்துக்கொள்ளப்பட்டபடியால், லேவிக் கோத்திரம் அவர்களுக்கு அடையாளமானார்கள் மற்றும் பலிச்செலுத்தும் ஆசாரியர்களும், போதிக்கும் லேவியர்களும் அந்தத் தேசத்திற்கான நியாயப்பிரமாண உடன்படிக்கையின் ஊழியக்காரரானார்கள். இதன் நிஜமானது, அப்போஸ்தலனாகிய பவுலினால் தெளிவாய்ச் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது; அதாவது இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய தெரிந்துகொள்ளப்பட்ட சபையே, “பரலோகத்தில் பேர் எழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சபையாய்” இருக்கின்றது எனச் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. இவர்களே “புது உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாய்” இருக்கப்போகின்றார்கள் (எபிரெயர் 12:23; 2 கொரிந்தியர் 3:6).
இந்த முதற்பேறானவர்கள் மாத்திரமே இந்தச் சுவிசேஷயுகத்தில் அல்லது “இரவில்” கையாளப்படுகின்றனர். இவர்கள் மாத்திரமே மரணத்தண்டனைக்கான அபாயத்தில் காணப்படுகின்றனர். அப்போஸ்தலன் சொல்லுகின்றதுபோல், “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்” (எபிரெயர் 10:26,27). மனுக்குலத்தின் முழு உலகமும்கூட முதற்பேறானவர்களாகிய இந்தச் – சபையினிடத்திலும், இவர்களை வெற்றிகரமாய்க் கடந்துபோகுதலிலும், இவர்கள் நித்தியமான ஜீவனை அடைவதிலும் அக்கறைக்கொண்டிருப்பதில் உறுதியே; ஏனெனில் இவர்கள் சீக்கிரத்தில் முத்திரை இடப்படப்போகிறதும், நிபந்தனைகளுடன் பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிக்கப்போகிறதுமான புதிய உடன்படிக்கையின் ஆசாரியக் கூட்டத்தாராகவும், ஆசிரியர்களாகவும் காணப்படுகின்றனர். மனுக்குலம் முழுவதும் சத்திய அறிவின் மூலமாகவும், புதிய உடன்படிக்கையின்கீழ் ஆயிரவருட இராஜ்யத்தினுடைய ஆசீர்வாதங்கள் மூலமாகவும், தேவனுடன் ஒப்புரவாகுதலின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள் (எரேமியா 31:31-34).
முதற்பேறானவர்களின் வகுப்பாரைக் குறித்து நாம் பார்த்துள்ளதினால், நாம் பஸ்கா ஆட்டுக்குட்டியையும் குறித்துத் தெளிவாய் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்; ஏனெனில் இதன் இரத்தத்தின் காரணமாகவே முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதல் சாத்தியமானது. ஆட்டுக்குட்டி என்பது விசேஷமாகக் கபடற்ற விலங்காகவும், தற்காத்துக்கொள்வதற்கோ அல்லது எதிர்ப்பதற்கோ முற்றிலும் தயாரற்ற விலங்காகவும் காணப்படுகின்றது மற்றும் இதன் காரணமாக நமது கர்த்தருக்குப் பொருத்தமான நிழலாகக் காணப்படுகின்றது; அதாவது எதிர்க்காதவராகவும், நம் சார்பாக முதற்பேறானவர்களின் சார்பாக தம்முடைய – பூமிக்குரிய நலன்களையும், தம்முடைய உரிமைகளையும் முழுமையாகவும், மனப்பூர்வமாகவும் ஒப்படைத்தவராகவும் காணப்பட்ட நமது கர்த்தருக்குப் பொருத்தமான நிழலாகக் காணப்படுகின்றது. முதற்பேறானவர்கள் அல்லாதவர்களும் இறுதியில் அவரது பலியினால் நலம்பெறுவார்கள் என்பது உண்மையே; எனினும் முதற்பேறானவர்களுக்கு இப்படி விசேஷமாயும், குறிப்பாயும் உள்ளது. இந்தச் சுவிசேஷயுகத்தில், இதுவரையிலும் தேவனுடைய நடவடிக்கைகளானது இந்த வகுப்பார் மட்டிலே இருந்துள்ளது. இவர்கள் மாத்திரமே, பிதாவினிடத்தில், நீதிபரராகிய இயேசு கிறிஸ்துவைப் பரிந்துபேசுகிறவராகப் பெற்றிருக்கின்றனர் (1 யோவான் 2:1,2). இதுவரையிலும் இவர்கள் மாத்திரமே தேவனிடம் ஒப்புரவாகியுள்ளனர்.
அவிசுவாசிகளுக்கு, தேவனுடைய ஆசீர்வாதங்கள் அனைத்துமே எதிர்க்காலத்தில், புதிய உடன்படிக்கையின்கீழ்க் கடந்துவரும்; ஏனெனில் விசுவாசிகள் மாத்திரமே விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு, விசுவாச உடன்படிக்கையாகிய, ஆபிரகாமின் உடன்படிக்கையினுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானது”, முதலாவது முதற்பேறானவர்களாகிய சபையை இரட்சிக்கின்றது மற்றும் பின்னர் ஆயிரவருடக்காலத்தின்போது, ஆபிரகாமின் சந்ததியாகப் போகிற அனைவரையும் ஆசீர்வதிக்கும்.
சபையானவள், கர்த்தரோடுகூட அவரது பலியில் பங்கெடுப்பதை அடையாளப்படுத்தும் விதத்தில் நிழல்கள் காணப்படுகின்றன; ஆனால் இந்தப் பஸ்கா நிழலானது, இப்படியானதொன்றல்ல. பஸ்கா ஆட்டுக்குட்டியானது, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக” இருப்பதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கிறது (யோவான் 1:29). ஆனால் உலகத்தின் பாவமானது இன்னமும் போக்கப்படவில்லை. நமது கர்த்தர் தம்முடைய புண்ணியத்தினை இன்னமும் உலகத்திற்கெனச் செயலாக்கத்தில் கொண்டு வரவில்லை, மாறாக விசுவாச வீட்டாருக்காக மாத்திரமாகவும், குறிப்பாகவும் செயலாக்கத்தில் கொண்டுவந்துள்ளார். நமது கர்த்தரும், சபையும் சேர்ந்து, தலையும், சரீரமாக பலிச் செலுத்துவதை அடையாளப்படுத்துகின்றதான வேறொரு பலியில், விலங்கின் சரீரமானது, பல்வேறு துண்டுகளாக வெட்டப்பட்டு, தலையோடுகூட, பலிப்பீடத்தில் வைக்கப்படும் காரியமானது, கிறிஸ்து இயேசுவைத் தலையாகவும், சபையை, அவருடைய அங்கத்தினர்களாகவும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது (யாத்திராகமம் 29:15-18). ஆனால் பஸ்காவின் பலியானது, துண்டங்களாக துண்டிக்கப்படக் கூடாது என்பதாக கட்டளையிடப்பட்டிருக்கிறது. அது முழுவதுமாகப் புசிக்கப்பட வேண்டும் – அதன் ஓர் எலும்புகூட முறிக்கப்படக்கூடாது. அது கிறிஸ்துவையும், சபையையும் குறிக்காமல், மாறாகக் கிறிஸ்துவின் பலியில், அவரை மாத்திரமாகவே அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. (யாத்திராகமம் 12:46; யோவான் 19:36)
கடந்து போகுதலானது, காலை வேளையில் நடைபெறாமல், இரவிலே நடைப்பெற்றது என்பது நினைவில்கொள்ளப்படவேண்டும். காலை வந்தபோது, இஸ்ரயேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து சுதந்திரமடைந்தார்கள்; அடிமைத்தனத்திலிருந்து, சுதந்திரத்திற்குள் கடந்துபோனார்கள். இரவில் அவர்கள் அடிமைத்தனத்திலேயே காணப்பட்டார்கள் மற்றும் முதற்பேறானவர்கள் கடந்து போகப்பட்ட பிற்பாடு மாத்திரமே வரக்கூடிய விடுதலைக்காகக் காத்திருந்தார்கள். நிழலில் இடம்பெறும் அந்த இரவானது, இந்தச் சுவிசேஷ யுகத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
இதே கருத்தானது, நமது கர்த்தர் பின்வருமாறு பேசுகையில் வெளிப்பட்டதாய் இருக்கின்றது: “உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது;” மீண்டுமாக, “விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்” (மத்தேயு 5:16,15). இதே கருத்தையே அப்போஸ்தலனாகிய பேதுருவும் பின்வருமாறு கூறுகையில் வெளிப்படுத்துகின்றார்: “அதிக உறுதியான தீர்க்கத்தரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்” (2 பேதுரு 1:19). மீண்டுமாகச் சபையைக் குறித்துத் தீர்க்கத்தரிசி பேசுகையில், “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங்கீதம் 119:105) என்றார்.
இன்னும் அநேகம் வேதவாக்கியங்களானது, புதிய ஆயிரவருட யுகத்தினை பகல் என்று குறிப்பிடுகின்றது; அப்போது நீதியின் சூரியனானது, உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும் மற்றும் அதனால் மூடநம்பிக்கை எனும் நிழல்களும், அந்தகாரக் கிரியைகளும் துரத்தப்படும். இந்த அடையாளத்தின் பொருத்தமானது, சிந்திக்கிற மனதிற்குத் தெளிவாய்த் தெரிகின்றதாய் இருக்கும். தேவ ஜனங்களினுடைய நம்பிக்கைகளும், உணர்வுகளும் பாவத்தினுடைய இருளுக்குரியதாய் இராததினாலும், இரவுக்குரியதாய் இராததினாலும், பகலுக்குரியதாகவும், “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவதுபோல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக” என்று அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கின்றதான, நீதியின் ஆளுகைக்குரியதாகவும் காணப்படுவதினால், அவர்கள் பகலின் பிள்ளைகளாகக் காணப்படுகின்றனர்.
பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, நமது கர்த்தர், தாம் உலகத்திற்கு ஒளியாக வந்ததாகவும், மனிதர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்பினார்கள் என்பதாகவும் கூறியுள்ளார் (யோவான் 8:12; 3:19-21). இதுவரையிலும் சொற்பமானவர்கள் மாத்திரமே, அவரை “மெய்யான ஒளி” என்று அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். ஆனால் இறுதியில் அவர் “உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிறவராய்” இருப்பார் (யோவான் 1:9). அவரோடுகூட ஒளியைச் சுமப்பவர்களாகக் காணப்படுவதற்கென, அவரது சபையும் அழைக்கப்பட்டிருக்கின்றனர்; மேலும் இப்பொழுது தங்களது ஒளியைப் பிரகாசிக்கும் அனுபவத்தில் இவர்கள் உண்மையுள்ளவர்களாகக் காணப்படுவார்களானால், தமது செட்டைகளினால் உலகத்தைச் சுகப்படுத்துகின்றதான அந்த மாபெரும் நீதியின் சூரியனின் பாகங்களாக அக்காலத்தில் காணப்படுவார்கள். இதை நமது கர்த்தர் கோதுமை மற்றும் களைகள் உவமையில் சுட்டிக்காண்பித்துள்ளார். இந்த யுகத்தினுடைய முடிவில் அவர் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்த்துக்கொள்வார் என்றும், “அப்பொழுது நீதிமான்கள் தங்கள் பிதாவின் இராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்” என்றும் கூறியுள்ளார் (மத்தேயு 13:43). அந்தோ பரிதாபம், வெகு சொற்பமானவர்களே, “கேட்கிறதற்குக் காதுள்ளவர்களாகவும்” மற்றும் தெய்வீகத் திட்டத்தினுடைய அருமையான போதனைகளை ஏற்றுக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர்!
அந்த இரவில் ஆட்டுக்குட்டியின் இரத்தமானது தங்களுடைய வீட்டுவாசல் நிலைக்கால்களிலும், மேற்சட்டத்திலும் தெளிக்கப்பட வேண்டுமென்று இஸ்ரயேலர்கள் கற்பிக்கப்பட்டிருந்தனர். இது விசுவாச வீட்டாரில் அடங்கும் யாவரும் கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தில் விசுவாசிக்க வேண்டும் என்பதையும் மற்றும் இப்படியாகச் சபைப் பாகுபாடின்றி “விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுவதையும்” சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இப்படியாக விசுவாசிப்பது என்பது, நம்மை விசுவாச வீட்டாரில் அங்கத்தினர்களாக்குகின்றது; எனினும் இது நாம் முதற்பேறானவர்களாய்க் காணப்படுவோமா (அ) இல்லையா என்பதை நிர்ணயிக்காது. உண்மையுள்ளவர்கள், பரிசுத்தவான்கள், இராஜரிக ஆசாரியக்கூட்டத்தார் விசுவாச வீட்டாரில் மூத்த ஸ்தானத்தில் காணப்படுகின்றனர்; இந்த ஸ்தானமானது, வருஷதொகையின் காரணமாக இராமல், மாறாக ஆவிக்குரிய வளர்ச்சியின் காரணமாகவேயாகும். இவர்களது விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் சுட்டிக்காட்டுகின்றதான, மீட்பருக்கொத்த குணலட்சணத்தினுடைய வளர்ச்சியின் விஷயத்திலான இவர்களது முதன்மை நிலையின் அடிப்படையில், இவர்கள் ஆசாரியர்களாக, மூப்பர்களாகக் காணப்படுகின்றனர்.
இதுவே வேதவாக்கியங்களின் அடிப்படையிலான போதனையாய் இருக்கின்றது. இயேசு ஜீவித்தார் மற்றும் இயேசு மரித்தார் என்று மாத்திரம் நாம் விசுவாசிக்கிறவர்களாக இருக்கக்கூடாது. அவர் “அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்” பலியின் மரணம் மரித்தார் என்பதை நாம் விசேஷமாய் விசுவாசிக்க வேண்டும் மற்றும் அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தின் வாயிலாக அவர் பெற்றுத் தந்ததான மீட்பில் நமது பங்கினை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நிழலில் வீட்டுவாசல் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்பட்ட காரியமானது, தேவ ஆட்டுக்குட்டியின் மரணத்திலும், நமக்கான அதன் பயனிலும், அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தை வெளிப்படையாய் அறிக்கைப்பண்ணுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.
இஸ்ரயேலர்கள் இரவில் வீடுகளிலிருந்து வெளியேறக்கூடாது என்று கட்டளை இடப்பட்டிருந்தனர் என்பதை நினைவில்கொள்கின்றோம்; ஏனெனில் எகிப்தியர்களைச் சங்கரிக்கத்தக்கதாகக் கர்த்தர் கடந்துசெல்லுகையில், அவர் மேற்சட்டங்களிலும், வீட்டுவாசலினுடைய நிலைக்கால்களிலும் இரத்தத்தைக் காண்கையில், அவர் அந்த வீடுகளைச் சங்காரத்தூதன் அணுகவிடவில்லை (யாத்திராகமம் 12:1-13). இரத்தம் தெளிக்கப்பட்டுள்ள வீடுகளில் காணப்படுபவர்கள் இரவில், வீட்டிலிருந்து வெளியேறக்கூடாது என்ற கட்டளையானது, முதற்பேறானவர்களுக்கு விசேஷமாயும், அழுத்தத்துடனும் பொருந்துகின்றதாய் இருந்தது. நிஜத்தில் இதன் அர்த்தமாவது, முதற்பேறானவர்களாய்க் காணப்படும் நம்மில் எவரேனும் இரத்தத்தின் கீழிருந்து வெளியேறுவார்களானால், அதாவது இயேசுவினுடைய இரத்தத்தின் பயனை, புண்ணியத்தை மறுதலிப்பார்களானால், இத்தகைய செயல்பாட்டிற்கான தண்டனை மரணமாகும் – இரண்டாம் மரணமாகும் – நம்பிக்கையற்ற மரணமாகும். (எபிரெயர் 6:4-6; 10:26-31)
ஆட்டுக்குட்டியின் இரத்தமானது விசுவாச வீட்டாரிலுள்ள முதற்பேறானவர்களை மாத்திரமாக இல்லாமல், விசுவாச வீட்டாரை அடையாளமிட்டது போலவே, ஆட்டுக்குட்டியைப் புசிப்பது என்பதும் முதற்பேறானவர்களுக்கு மாத்திரமானதாய் இராமல், வீட்டார் அனைவருக்கும் உரியதாய் இருக்கின்றது. ஆகையால்தான் நமது கர்த்தர் கூறினதாவது: “என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது;” மீண்டுமாக “வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவான் 6:55,58). வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், இயேசு சிறந்த விதத்திலான பலியின் மரணம் மரிப்பது மாத்திரம் போதாது; இன்னுமாக அவரது பலியின் வாயிலாகப் பயனடைய வேண்டியவர்கள் அனைவரும், அவரைப் புசிக்க வேண்டும் – அவரது பலியினுடைய புண்ணியத்தினைத் தங்களதாக்கிக்கொள்வதும் அவசியமாகும்.
ஆட்டுக்குட்டியைப் புசிப்பது என்பது, ஆதாமின் கீழ்ப்படியாமையின் காரணமாக இழந்துபோனதும், இயேசுவின் மரணத்தினால் மீட்கப்பட்டதுமான அந்தப் பூமிக்குரிய நலன்களையும், உரிமைகளையும் விசுவாச வீட்டார் தங்களதாக்கிக்கொள்வதற்கு நிழலாய் இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், இது பாவத்திலிருந்து, நாம் நீதிமானாக்கப்படுதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. நாம் விசுவாசத்தினால் புசிக்கின்றோம் மற்றும் இதன் காரணமாக, “விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுகின்றோம்” என்று கூறப்பட்டுள்ளது. ஆதாமினுடைய பாவத்தினாலான அபாத்திரத்தின் காரணமாக தெய்வீகத் தயவினின்று நாம் தள்ளிவிடப்பட்டது போலவே, விசுவாசத்தின் மூலமாக நாம் கிறிஸ்துவின் பலியினுடைய புண்ணியத்தின் காரணமாக தேவத் தயவிற்குள் மீண்டும் முழுமையாய்க் கொண்டுவரப்பட்டவர்களாய் நம்மைக் குறித்து எண்ணிக்கொள்வதற்கு நாம் அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம். ஆட்டுக்குட்டியைப் புசிப்பது என்பது இக்காரியங்களை உணர்ந்துகொள்வதையும் மற்றும் இவைகளை நமதாக்கிக் கொள்வதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. நாம் எந்தளவுக்கு அதிகமாய்ப் புசிக்கின்றோமோ, அந்தளவுக்குக் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்துள்ள நம்முடைய விடுதலைத் தொடர்புடைய விஷயத்திலும், நமது பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய புண்ணியத்தின் வாயிலாக தெய்வீகத் தயவிற்குள் நாம் மீண்டுமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது தொடர்புடைய விஷயத்திலும், நாம் அதிகமாய்த் திருப்திக்கொள்கின்றோம்.
பதினாறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக யூதர்கள் தெய்வீகக் கட்டளையின் பேரில் பஸ்காவை ஆசரித்து வந்துள்ளனர்; ஆட்டுக்குட்டியைப் பலிச்செலுத்தி, இரத்தத்தை நிலைக்கால்களில் தெளித்த பிற்பாடு, அந்த இரவில்தானே அதைப் புசிப்பதை மாத்திரம் ஆசரிக்காமல், இன்னுமாக பின்வந்த ஏழு நாளளவும் பண்டிகையையும் ஆசரித்தார்கள். இந்தப் பஸ்கா பண்டிகையானது, பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய பலி மற்றும் அதைப் புசித்தலினாலான புண்ணியத்தின் அடிப்படையில் உண்டான சந்தோஷங்களையும், களிகூருதல்களையும், தேவனுடனான உறவின் காரணமான ஆசீர்வாதங்களையும், தயவுகளையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. எனினும் யூதர்கள் தாங்கள் செய்து வந்தவைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமும் இருக்கவில்லை. தேவனுடைய ஏற்றக்காலங்கள் வருகையில், விளக்கம் அருளப்படும்.
அந்த ஏற்றக்காலமானது, நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில் வந்தது – நிழலான பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்டதான இரவில் – முதலாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதியின் இரவில் வந்தது. ஆண்டவர் தம்முடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களோடு கூடினார். அவர்கள் தங்கள் வழக்கமான பஸ்கா இராப்போஜனமாகிய, சுடப்பட்ட ஆட்டுக்குட்டியைப் புசித்தார்கள் மற்றும் இவைகளுக்குப் பிற்பாடு நமது கர்த்தர் நாம் பிரபல்யமாய் அறிந்திருக்கின்றதான “கர்த்தருடைய இராப்போஜனத்தை,” அதாவது நிஜமான பஸ்காவிற்கான புதிய அடையாளங்களை அறிமுகப்படுத்தினார்.
நமது கர்த்தர் அறிமுகப்படுத்தின காரியங்களானது, தம்முடைய பின்னடியார்கள் மத்தியில் யூதர்களுடைய அனுசரிப்பிற்குப்பதிலாக இடம் பெறப்போகின்றது மற்றும் இதுவும் அதே கருத்தை, ஆனால் உயர்வான தளத்தில், காரியத்தினைப்பற்றின தெளிவான, சிறந்த புரிந்துகொள்ளுதலாய்க் காணப்படப்போகின்றது. ஆட்டுக்குட்டிக்குப் பதிலாக, நமது கர்த்தருடைய மாம்சத்தினை அடையாளப்படுத்தும் புளிப்பில்லாத அப்பம் இடம் பெற்றது. இதை அவர் தம்முடைய அப்போஸ்தலர்களிடத்தில் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று கூறினார் (லூக்கா 22:19). புளிப்பில்லாத அப்பத்தைப் புசிப்பது என்பது, கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியத்தினை தங்களதாக்கிக்கொள்வதை விசுவாசத்தினாலான நீதிமானாக்கப்படுதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.
நமது கர்த்தர் இன்னொரு அடையாளத்தை “பாத்திரத்தைக்” கூடச் சேர்த்தார். விசுவாசிகள் அனைவரும் அப்பத்தைப் புசித்தாலும், அவரது பலியினாலான புண்ணியத்தின் வாயிலாக நீதிமானாக்கப்படுதலை உணர்ந்துகொண்டாலும், விசுவாசிகளில் ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மாத்திரமே, இரத்தத்தில் பங்கெடுப்பதற்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். பாத்திரம் மரணத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. பொதுவாக யூதருக்கான பிரமாணத்தின்கீழ் இரத்தத்தைப் பானம் பண்ணுதல் என்பது இரத்தத்தில் – குற்றமுள்ளவராய் இருப்பதை (அ) மரணத்திற்குக் காரணராய் இருப்பதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது (லேவியராகமம் 17:10-14). ஆனால் நமது கர்த்தர் தம்முடைய இரத்தத்திற்கு அடையாளமாக திராட்சப்பழரசத்தைத் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்தார்; அதை அவர்கள் தங்களதாக்கிக்கொள்வதற்கு வலியுறுத்தும் வண்ணமாக, “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது;” “அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது;” “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்றார் (லூக்கா 22:20; மத்தேயு 26:27,28).
அவரது இரத்தத்தில் பங்கெடுப்பதற்கான இந்த அழைப்பானது, கிறிஸ்துவுடன் அவரது அங்கத்தினர்களென, பூமிக்குரிய ஜீவனை, பூமிக்குரிய நலன்களை, நம்பிக்கைகளை, இலட்சியங்களை, ஆசைகள் அனைத்தையுமே பலிச் செலுத்துவதில் பங்கெடுப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. அவரது இரத்தத்தைப் பானம் பண்ணுவதற்கான இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும், அவர் தம்முடைய ஜீவனை எந்த வேலைக்கென்று ஒப்புக்கொடுத்தாரோ, அதே வேலைக்கெனத் தங்களது ஜீவியங்களைக் கையளிக்கின்றவர்களாய்க் காணப்படுகின்றனர். இது யூதருக்கான பஸ்கா நிழலில் இடம் பெறாத காரியமாகும். வீட்டாரில் எவரேனும் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பானம்பண்ண வேண்டுமென எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும் அவரது இரத்தத்தைப் பானம் பண்ணுவதற்கும், சத்தியத்திற்காக நம்முடைய ஜீவியங்களை அவரோடுகூட ஒப்புக்கொடுப்பதற்குமான நமது கர்த்தருடைய அழைப்பினை இப்பொழுது ஏற்றுக்கொள்பவர்களாகிய நாம், இவைகளின் காரணமாக விசுவாச வீட்டாரில் மூத்த சகோதரர்களாக, நமது கர்த்தருடன், நமது மீட்பருடன், முதற்பேறானவர்களின் அங்கத்தினர்களாக, வருங்கால இராஜரிக ஆசாரிய கூட்டத்தினராகக் காணப்படுகின்றோம்.
நாம் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளவைகளையே அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டுகின்றார். கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட பின்னடியார்களானவர்கள், இயேசுவைத் தலையாகப் பெற்றுள்ளதான, சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கத்தினர்களாகக் கருதப்படுகின்றனர் என்று குறிப்பிடுகின்றார். நமக்காகப் பிட்கப்பட்டுள்ள நமது கர்த்தர் இயேசுவையே, பிட்கப்பட்ட அப்பமானது முதலாவதாகக் குறிக்கின்றது என்றும், இரண்டாவதாக அது கர்த்தருடைய காரணங்களுக்காக தங்களை மனப்பூர்வமாயும், சந்தோஷமாயும் ஒப்புக்கொடுக்கின்றவர்களாகிய கிறிஸ்துவின் சபையைக் குறிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். நாம் பங்கெடுக்கும்படிக்கு அழைக்கப்பட்டதான கிறிஸ்துவினுடைய இரத்தமாகிய பாத்திரமானது, கிறிஸ்துவின் பாடுகளிலும், உபத்திரவங்களிலும் நம்முடைய பங்குகொள்ளுதலைக் குறிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். (St. Paul Enterprise, ஏப்ரல் 18, 1916 மற்றும் Harvest Gleanings 3, பக்கம் 814-ஆகிய வெளியீடுகளைப் பார்க்கவும்).
ஆகையால் யார் ஒருவன் அறிந்து நினைவுகூருதலின் இராப்போஜனத்தில் பங்கு கொள்கின்றானோ, அவன் பின்வரும் இரண்டு காரியங்களைச் சுட்டிக்காண்பிக்கின்றவனாய் இருக்கின்றான்: (1) இயேசுவே பஸ்கா ஆட்டுக்குட்டியாக இருக்கின்றார் என்ற அவனது விசுவாசத்தையும்; இயேசுவின் புண்ணியத்தில் அவனது பங்கெடுத்தலையும், உணர்ந்து கொள்ளுதலையும் விசுவாசத்தினாலான அவனது நீதிமானாக்கப்படுதலையும் சுட்டிக்காட்டுகின்றது; மற்றும் (2) கிறிஸ்துவின் சரீரத்தில் அவனது அங்கத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றது; அந்தச் சரீரத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் பிட்கப்படும்படிக்கு இணங்கி இருக்கின்றனர்; ஆண்டவரோடு ஆளுகை செய்யத்தக்கதாக, அவரோடுகூடப் பாடுபடுவதின் மூலம், அவரோடுகூட அவரது பலியில் பங்கெடுப்பதின்மூலம், ஆண்டவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுவதன் மூலம் தங்கள் உண்மையை வெளிப்படுத்துகின்றதான அந்தச் “சிறு மந்தையில்” அவனது அங்கத்துவத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. (1 கொரிந்தியர் 10:16,17; 2 தீமோத்தேயு 2:11,12).