R4703 (page 332)
மத்தேயு 26:17-30
இந்தப் பாடங்கள் அனைத்துமே நமக்காக முன்கூட்டியே தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. இல்லையேல் நமது கர்த்தருடைய இறுதி பூமிக்குரிய நாட்களில், வருஷத்தினுடைய வசந்த காலத்தின்போது சம்பவித்த நிகழ்வுகளைக் குறித்து, அவைகள் நிகழ்ந்த காலப்பகுதியில்தான் தியானிப்பவர்களாய் இருந்திருப்போம். சத்தியம் எப்போதுமே நமக்கு விலையேறப்பெற்றதாய் இருந்துள்ளது மற்றும் எப்போதும் நன்மைக்கேதுவான படிப்பினைகளைக் கொண்டுள்ளது.
இயேசு ஒரு யூதனாவார்; ஆகையால் மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் அனைத்து அம்சங்களுக்கும் கீழ்ப்பட்டவராய் இருந்தார். அவர் நியாயப்பிரமாணத்தை அழிக்க வரவில்லை, மாறாக அதை நிறைவேற்றவே வந்தார். இன்றைய பாடமானது, நியாயப்பிரமாணத்தினுடைய ஓர் அம்சமாகிய பஸ்கா பிரமாணத்தினுடைய நிறைவேறுதலைச் சுட்டிக்காண்பிக்கின்றதாய் இருக்கின்றது; இது ஏற்கெனவே முழுமையாய் நிறைவேறிவிட்டது என்றில்லாமல், 18 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிழலானது நிறைவேறிக்கொண்டு வருகின்றது என்றும், சீக்கிரத்தில் முழுமையாய் நிறைவேறிவிடும் என்றும் சுட்டிக்காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. இந்தப் பாடத்தினைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், நாம் நிழலைத் தெளிவாய் மனதில் நினைவு பெற்றிருக்க வேண்டும்:
சுமார் 3,500-வருடங்களுக்கு முன்னதாக, தேவன் இஸ்ரயேல் ஜனங்களை, எகிப்தின் இராஜாவாகிய பார்வோனின் சர்வாதிகார/கொடுங்கோலாட்சியின் கீழிருந்து விடுவித்தார். ஜனங்களை அடிமைகளாக, சொத்துக்களாக வைத்துக்கொள்ள விரும்பி, அவர்களை அனுப்புவதற்குப் பார்வோன் திரும்பத்திரும்ப மறுத்து வந்தான். சிட்சைகளாக தேவன் எகிப்தின்மீது வாதைகளைத் திரும்பத்திரும்ப அனுப்பினார். ஒவ்வொரு வாதையினுடைய தாக்கத்தினாலும், பார்வோன் மனந்திரும்பினான் மற்றும் தன்மீது இரக்கம் காண்பிக்கப்படுவதற்கும், ஜனங்கள் வாதையினின்று விடுவிக்கப்படுவதற்கும், மோசே வாயிலாக தேவனிடத்தில் மன்றாடினான். எனினும் தெய்வீக இரக்கத்தினுடைய ஒவ்வொரு வெளிப்பாடும், அனைத்து வாதையிலுமே கடினமானதான பத்தாவது வாதை இறுதியில் வருவதை அவசியமாக்குமளவுக்குப் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்த மாத்திரமே செய்தது. அந்தப் பத்தாம் வாதையானது, எகிப்தினுடைய முதற்பேறானவைகள் அனைத்திற்கும் எதிரான மரணத் தீர்ப்பின் நிறைவேற்றுதலாய்க் காணப்பட்டது. ஆனால் எகிப்திலுள்ள இஸ்ரயேலர்கள், குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் எகிப்திற்கான இந்த ஏற்பாடுகளிலிருந்து விலக்கப்பட்டவர்களாய் இருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்கென்று ஓர் ஆட்டுக்குட்டியினைப் பெற்றிருக்க வேண்டும்; அதன் எலும்புகள் எதுவும் முறிக்கப்படக்கூடாது. அதன் இரத்தமானது, வீட்டுவாசல் நிலைக்கால்களில் தெளிக்கப்பட வேண்டும் மற்றும் வீட்டிற்குள் கூடியிருக்கும் குடும்பமானது, அதன் மாம்சத்தைப் புளிப்பில்லாத அப்பங்களுடனும், கசப்பான கீரைகளுடனும் புசிக்கவேண்டும்; அதுவும் பிரயாணிப்பவர் போன்று கையில் தடி பிடித்துக்கொண்டு, காலையில் எகிப்திலிருந்து வெளியேறுவதற்கு ஆயத்தமான நிலையில் புசிக்கவேண்டும்.
தெய்வீகத் தீர்ப்பானது எகிப்தியர்களின் முதற்பேறானவர்களைக் கொன்றுபோட்டதான அந்த இரவில், இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் கடந்துபோகப்பட்டார்கள் அல்லது தப்புவிக்கப்பட்டனர்; ஆகையால்தான் பஸ்கா கடந்துபோதல் எனும் பெயர் வந்தது. மேலும் இஸ்ரயேலின்மீதான கர்த்தருடைய மிகப்பெரிய ஆசீர்வாதத்திற்கான ஞாபகமான இந்த ஆசரிப்பானது, தேவனுடைய தயவிற்கான நினைவுகூருதலாக வருடந்தோறும் ஆசரிக்கப்படும்படிக்கு கட்டளையிடப்பட்டது; ஏனெனில் இது கடந்துவரவிருக்கின்றதான இன்னும் மேலான இரக்கம் மற்றும் ஆசீர்வாதத்திற்கான நிழலாய்க் காணப்படுகின்றது. கொஞ்சம் காலத்திற்குப்பிறகு, தப்புவிக்கப்பட்டதான முதற்பேறானவர்களுக்குப்பதிலாக கோத்திரங்களில் ஒன்றாகிய, லேவி கோத்திரம் எடுக்கப்பட்டது. இதற்குப் பிற்பாடு லேவியர்களே, கடந்துபோகப்பட்ட முதற்பேறானவர்களாகக் காணப்பட்டனர் மற்றும் தேவனுக்கும் அவருடைய ஊழியத்திற்கென்றும் விசேஷமாய் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.
இஸ்ரயேலர்கள் மற்றும் அவர்களது முதற்பேறானவர்களின் இந்த அனுபவங்களானது மிகவும் உண்மையானவைகளாகவும், கவனத்தை மிகவும் ஈர்க்கின்றவைகளாகவும் அவர்களுக்குக்காணப்பட்டன; ஆனால் இவைகள் இப்பொழுது கடந்துபோகப்படுகின்றவர்களும், அந்நிழலுக்கு நிஜமானவர்களுமாய்க் காணப்படுகின்றவர்களுமான கிறிஸ்தவர்களுக்கு இன்னும் அதிகமாய்க் கவனத்தை ஈர்க்கின்றதாயுள்ளது. கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடுகையில், கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் குறித்து அறிக்கைப்பண்ணியுள்ளவர்கள் அனைவரையும் அல்லது சபைக் கூடுகைகளில் தினந்தோறும் பங்கெடுப்பவர்கள் அனைவரையும் நாம் குறிப்பிடவில்லை. இப்பொழுது அழைக்கப்பட்டு, கர்த்தருக்கான தங்களது உண்மையில் பரீட்சிக்கப்பட்டு, விசுவாசத்தின் வாயிலாக மரணத்தைவிட்டு, ஜீவனுக்குட்பட்டிருப்பவர்களாகிய, பரிசுத்தவான்களாகிய சிலரையே நாம் குறிப்பிடுகின்றோம். இவர்கள் வேதவாக்கியங்களில், “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபை” என்று குறிப்பிடப்பட்டுள்ளனர் (எபிரெயர் 12:23). முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதலுக்கு அல்லது முதற்பேறானவர்களின் தப்புவிக்கப்படுதலுக்குப் பிற்பாடே எகிப்திலிருந்து இஸ்ரயேல் தேசத்தாரின் விடுதலை சம்பவித்ததுபோலவே, “முதற்பேறானவர்களுடைய சபை” நிறைவேறுதலுக்குப் பிற்பாடே, முதலாம் உயிர்த்தெழுதலுடைய வல்லமையினால் இவர்கள் மரணத்திலிருந்து, ஜீவனுக்குள் கடந்து சென்றபிற்பாடே, தெய்வீக ஆசீர்வாதமானது மனுக்குலத்தினுடைய உலகத்தின்மீது நேரடியாய்க் கடந்துவரும். முதற்பேறானவர்களின் வகுப்பார் இருப்பது என்பது, பிற்பிறப்புகள் வகுப்பார் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இப்படியாக தற்காலத்தின் சபைக்கான அழைப்பும், பரீட்சைகளும், சோதித்தல்களும், நிரூபித்தல்களும் மற்றும் இறுதியில் பலன் அளித்தல்களும், மனுக்குலத்திற்கான தெய்வீக இரக்கம் பாராட்டுதலின் முடிவாக இல்லையென்றும், இது இரக்கம் பாராட்டுதலுக்கான ஆரம்பம் மாத்திரமே என்றும், வேதவாக்கியங்கள் எங்கும் தெளிவாய்ப் போதிக்கின்றன; ஏனெனில் பரிசுத்தவான்கள் “முதற்பேறானவர்களின் சபை” என்று அல்லது அப்போஸ்தலர் குறிப்பிடுவதுபோன்று “தேவனுடைய சிருஷ்டிகளில் முதற்பலன்கள்” என்று குறிப்பிடப்படுவதால், பிற்பலன்கள் என்பதும் தெய்வீகத் திட்டத்தினுடைய பாகமாய் இருக்கின்றது என்பதில் நமக்கு உறுதியே.
லேவியர்கள் மத்தியில் காணப்பட்ட பல்வேறு பிரிவுகள், கிறிஸ்துவினுடைய சபையின் பல்வேறு படிநிலைகள் மற்றும் நிலைகளை அடையாளப்படுத்துகின்றது. ஆனால் லேவியர்கள் மத்தியிலான முதன்மையான பிரிவினர், ஆரோனின் ஆசாரிய குடும்பத்தினராய் இருந்தனர்; இதுபோலவே நிஜமான லேவியர்கள் மத்தியிலும் ஒரு விசேஷித்த வகுப்பார், அதாவது உண்மையுள்ளவர்களாகிய சிலர் காணப்பட்டனர் மற்றும் இவர்கள் வேதவாக்கியங்களில் இராஜரிக ஆசாரிய கூட்டத்தினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இயேசுவின் நாட்களில் பஸ்காவினுடைய நிஜம் நிறைவேறுவதற்கான வேளை வந்தது. இயேசுதாமே பஸ்கா ஆட்டுக்குட்டியாகப்போகின்றார். விசுவாசத்தினால் அவரது பலியின், அவரது இரத்தத்தின் புண்ணியமானது, அவரது ஜனங்களுடைய இருதயங்களின் நிலைக்கால்களில் தெளிக்கப்படப்போகின்றது மற்றும் அவரது மாம்சமானது, அவரது பூமிக்குரிய பூரணத்தின் புண்ணியமானது அவர்களது மனங்களில் புசிக்கப்படப்போகின்றது அல்லது சொந்தமாக்கப்படப்போகின்றது. இதனோடுகூட அவருடைய ஜனங்கள் தெய்வீக வாக்குத்தத்தங்களாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் மற்றும் சோதனைகள், துன்பங்கள் எனும் கசப்பான கீரைகளையும் புசிக்கப்போகின்றார்கள் மற்றும் இன்னுமாக ஆட்டுக்குட்டியானவரோடுகூட, அவரது அவமானங்களிலும், பாடுகளிலும் அவர்கள் பங்கெடுப்பதை அடையாளப்படுத்துகின்றதான திராட்சப்பழரசத்தையும் அவர்கள் பானம்பண்ணப் போகின்றார்கள்.
தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு என்ற நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியானவர், நிழலான ஆட்டுக்குட்டிகளானது அடிக்கப்பட்டதற்கான நாளுக்குரிய ஆண்டு நிறைவு நாளில்தானே, சுமார் 19 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக அடிக்கப்பட்டார். இயேசுவின் பலியானது, மீண்டும் மீண்டுமாகத் திரும்பிச்செய்யப்பட வேண்டியதில்லை, ஏனெனில் விசுவாசத்தின் மூலமாக நாம் அனைவரும் அதே இரத்தத்தை இன்று தெளிக்கின்றோம் மற்றும் நம்முடைய இருதயத்தில் அதே பூமிக்குரிய பலியினுடைய புண்ணியத்தினைப் புசிக்கின்றோம் மற்றும் துன்பங்கள் எனும் அநேகக் கசப்பான கீரைகளைப் பெற்றிருக்கின்றோம் மற்றும் இரத்தத்தைப் பானம் பண்ணுகின்றோம் அதாவது ஆண்டவருடைய சிந்தனையிலும், நீதியினிமித்தமான பாடுகளுக்கான பலனிலும் பங்கடைகின்றோம்.
[R4703 : page 333]
“சிறுமந்தையினரைத்” தவிர மற்றபடி இந்த 19 நூற்றாண்டுகள் காலமாக, அநேகர் இந்தச் சிலாக்கியங்களை உணர்ந்துகொண்டதில்லை. சிறுமந்தையினருக்கான தற்போதுள்ள அனுபவங்களினிமித்தம், அவர்கள்மீது பொறாமைகொள்வதற்கும் எவருமில்லை; இனிவரவிருக்கும் ஜீவியத்தில் அவர்களுக்கான பலன் மற்றும் ஆசீர்வாதங்கள் எவ்வளவு மிகுதியாயிருக்கும் என்பது குறித்தும் எவரும் உணர்ந்துகொள்ளவுமில்லை. அக்காலத்தில் கிறிஸ்துவோடுகூடப் பாடுபடுவதற்குப் பதிலாக, இவர்கள் மகிமையோடும், கனத்தோடும், அழியாமையோடும் அவரோடுகூட ஆளுகைச்செய்வார்கள்.
(“நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே” – 1 கொரிந்தியர் 5:7) நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியென மரிப்பதன் வாயிலாக இந்த நிழலை நிறைவேற்றிட ஆரம்பித்த இயேசு, தம்முடைய பின்னடியார்களுக்கு வருடந்தோறும் நினைவூட்டும் சின்னங்களை நிறுவினார்; இது அவர்களுடைய மனதில் நிழலுக்குப் பதிலாக இடம் பெற்று, மாபெரும் நிஜத்தைத் தொடர்ந்து அவர்களுக்கு நினைப்பூட்டுவதாகக் காணப்படும். சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியினுடைய மாம்சத்திற்குப்பதிலாக, ஆண்டவர் அப்பத்தினைப் பயன்படுத்தினார் மற்றும் இரத்தத்திற்குப்பதிலாக திராட்சப்பழரசத்தைப் பயன்படுத்தினார் மற்றும் தொடர்ந்து நிழலானது ஆசரித்து நினைவுகூரப்படுவதற்குப்பதிலாக, இவைகள் (புதிய சின்னங்கள்) நிஜத்திற்கான, நினைவுகூருதலாக ஆசரிக்கப்படுவதற்குக் கட்டளையிட்டார்; அதாவது “உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடுகிறதான தேவ ஆட்டுக்குட்டிக்கும்” மற்றும் இஸ்ரயேலும், பூமியின் குடிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படுவதற்கு முன்னதாக முதற்பேறானவர்களின் சபைக்கு நிகழவிருக்கின்றதான கடந்துப்போகுதலுக்குமான நினைவுகூருதலாக – ஆசரிக்கப்படுவதற்குக் கட்டளையிட்டார்.
நமது கர்த்தர் யூதனாயிருந்தபடியால், சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டி, முதலானவைகளைப் புசிப்பதற்கு, அதாவது நிழலான பஸ்காவைக் கைக்கொள்வதற்கு முதலாவது கடமைப்பட்டிருந்தார்; ஆனால் அந்தப் பஸ்கா இராப்போஜனத்திற்குப் பிற்பாடு தமக்கான நினைவுகூருதலுக்கு மாற்றுப்பொருளான அப்பத்தையும், திராட்சப்பழரசத்தையும் பின்வருமாறு கூறி நிறுவினார் “நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்” (வசனம் 23). அவரது தெரிந்துகொள்ளப்பட்ட மணவாட்டியும், அவரது இராஜ்யத்தில் உடன்சுதந்தரர்களுமான சபையைச் சேர்த்துக்கொள்வதற்கென்றும், இஸ்ரயேல்மீதும் மற்றுமாக இஸ்ரயேல் வாயிலாக ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மீதும் சம்பூரணமான ஆசீர் வாதங்ளைப் பொழிந்திடுவதற்கென்றும் அவர் வல்லமையிலும், மகா மகிமையிலுமான தமது இரண்டாம் வருகையில் வரும்வரையிலும்… “நான் தேவனுடைய இராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்கச் சொல்லுகிறேன் என்றார்” (மாற்கு 14:22-25).
காட்டிக்கொடுப்பதற்கான வேளை சமீபமாயிற்று. நாம் அறிந்திராத ஏதோ ஒரு வல்லமையினால், யார் தம்மைக் காட்டிக்கொடுப்பார் மற்றும் இன்னும் பல விஷயங்களை ஆண்டவர் அறிந்திருந்தார். அக்காரியத்தைப் பன்னிருவரிடத்தில் வெளிப்படுத்தும் வண்ணமாக அவர் “உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார். ஒவ்வொருவரும், “ஆண்டவரே, நானோ, நானோ?” என்றும் கேட்டார்கள். தன்னுடைய வஞ்சகமான நடவடிக்கைப்பற்றி ஆண்டவர் அறிந்திருக்கிறார் என்பதை அறிந்தும், யூதாஸ் வெட்கம் இல்லாமலேயே “நானோ?” என்று கேட்டான். “நீ சொன்னபடிதான்” …நீ தான் காட்டிக்கொடுப்பவன் என்பதாகப் பதில் கடந்துவந்தது. தெய்வீகத் திட்டமானது துரோகியினால் நடந்தேற்றப்பட்டது மற்றும் அவர் முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்கப்பட வேண்டும் என்பதான வேதவாக்கியங்கள் நிறைவேறின; ஆனால் இது தொடர்பாக தேவன் முன்னறிவு கொண்டிருப்பதினால், தேவன் எவ்விதத்திலாகிலும் துரோகமானச் செயல் புரிவதற்குப் பின்னிருந்து தூண்டிவிட்டார் என்பதாகாது; ஆகையால்தான் “எந்த மனுஷனால் மனுஷக்குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ” என்பதாக வேதவாக்கியம் இடம் பெறுகின்றது. இந்தக் கண்ணோட்டத்தின்படி, யூதாசுக்கு எதிர்க்கால வாழ்க்கைக்கான எந்த நம்பிக்கையும் இல்லையென்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். யூதாஸ் தனது மரணத்திற்கு முன்பாக அடைந்த துக்கமும், வேதனையும், முந்திய நாட்களில் அவன் அடைந்திருந்த எந்தச் சந்தோஷங்களினாலும் சரிபடுத்தப்பட முடியவில்லை.
தமது மாம்சத்தை அடையாளப்படுத்துகின்றதான அப்பத்தையும், தமது இரத்தத்தை அடையாளப்படுத்துகின்றதான பாத்திரத்தையும் ஆண்டவர் சீஷர்களிடத்தில் கொடுத்தபோது, அவர் அவர்களுக்கு நீதிமானாக்கப்படுதலையும், பரிசுத்தமாக்கப்படுதலையும் அடையாளமான விதத்தில் கொடுத்தவராய் இருந்தார் மற்றும் பரிசுத்தவானாகிய பவுல் விவரித்ததுபோன்று, இதைக் காட்டிலும் அதிகமாய்ச் செய்தார்; அதாவது தற்காலத்தின் பாடுகளிலும், எதிர்க்கால மகிமைகளிலும் அவரோடுகூடப் பங்கெடுப்பதற்கு வாய்ப்பளித்தார் (1 கொரிந்தியர் 10:16,17; மத்தேயு 26:29). பாத்திரத்தினுடைய நிஜமானது, அதன் உயர்வான கோணத்தில் பார்க்கையில், அது மகிமையின் மகா இராஜாவாகிய கிறிஸ்து, தமது மகா வல்லமையையும், ஆளுகையையும் எடுத்துக்கொள்ளும்போது, அவரோடுகூட, அவருக்குள் உண்மையுள்ளவர்கள் அனைவரும், பங்கடைகின்றதான புதிய சந்தோஷங்களைக் குறிக்கின்றதாய் இருக்கும்.