R2622 (page 131)
நமது கிறிஸ்தவ நம்பிக்கைகள் அனைத்திற்குமான அஸ்திபாரமாகிய மாபெரும் நிகழ்வினை ஆசரிப்பதில், அதாவது நமது பஸ்காவாகிய கிறிஸ்துவினுடைய மரணத்தினை ஆசரிப்பதில், கர்த்தருடைய ஜனங்கள் ஒவ்வொரு வருடமும் ஆர்வம் காட்டிக்கொண்டுவருவது அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு வருடமும் இவ்விஷயமானது அதிக தெளிவுடன் அதிகமானவர்களால் கிரகிக்கப்பட்டு வருகின்றது மற்றும் இதற்கேற்ப அத்தருணத்திற்கு ஏற்புடையதான பயபக்தியும், பரிசுத்தத்துடன்கூடிய சந்தோஷமும் தீவிரமாகுகின்றது மற்றும் பொங்கிவழிகின்றதான ஆசீர்வாதமும்கூடத் தெளிவாய்த் தெரிகின்றதாய் இருக்கின்றது.
எவ்வளவு பேர் கலந்துகொண்டார்கள் மற்றும் கர்த்தருடைய ஆவியும், ஆசீர்வாதமும் எவ்வளவு காணப்பட்டது என்பது பற்றித் தகவல் கொடுக்கும்படிக்கான நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்கி, ஏப்ரல் 12-ஆம் தேதி மாலையன்று ஆசரித்திட்டதான கர்த்தருடைய ஜனங்களின் சிறு, சிறு கூட்டத்தாரில் அநேகர் தகவல் கொடுத்துள்ளனர். தகவல்களை வைத்துப்பார்க்கையில், இந்த வருடம் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையானது, கடந்த வருடத்தைக்காட்டிலும் அதிகரித்துள்ளது என்று நாம் எண்ணுகின்றோம். அநேகரிடமிருந்து இன்னும் நமக்குத் தகவல் கிடைக்கவில்லை என்றாலும், எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகின்றது. கடிதங்களை வைத்துப்பார்க்கையில், அவ்வாசரிப்பின் காரியமானது ஆழமாய்ப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது என்றும், அது நமது கர்த்தராகிய இயேசுவினுடைய மாபெரும் பலியை மாத்திரமல்லாமல், அவருடைய பலியில், அவரோடுகூட ஒன்றுப்பட்டிருப்பதற்கான அவருடைய ஜனங்களின் அர்ப்பணிப்பையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்று ஆழமாய்ப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
அலிகெனியிலுள்ள (Allegheny) சபையாருக்கு அது மிகுந்த ஆசீர்வாதமான தருணமாய்க் காணப்பட்டது; சுமார் 290-பேர் கலந்துகொண்டார்கள். நாங்கள் முதலாவதாக யூதர்களுக்கு நிறுவப்பட்டதான பஸ்காவின் பொதுவான அர்த்தத்தையும், நிழலான பஸ்கா ஆட்டுக்குட்டிக்கும், நம்முடைய பஸ்காவாகிய தேவாட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவுக்கும் இடையிலுள்ள தொடர்பையும் பார்த்தோம் மற்றும் அந்த இரவில் கடந்துபோகப்பட்டவர்களாகிய இஸ்ரயேலின் முதற்பேறானவர்களிடத்தில், இந்தச் சுவிசேஷ யுகத்தில், தேவனால் கடந்துபோகப்படுபவர்களாகிய முதற்பேறான சபைக்கு நிழலைக் கண்டோம். பின்னர் இந்த முதற்பேறானவர்கள், ஒட்டுமொத்த இஸ்ரயேலர்களுக்குத் தலைவர்களாகவும், அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்தினின்று விடுவிக்கிறவர்களாகவுமானார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம்; மேலும் இந்த விடுதலைக்கான நிஜமானது, தேவனை அன்புகூருகிறவர்களுக்கும், உலகம், பாவம் மற்றும் பார்வோன் அடையாளப்படுத்துகின்ற சாத்தானின் அடிமைத்தனத்தினின்று, விடுதலையாகி, தேவனுக்கு ஊழியம்புரிய விரும்புகின்றவர்களுமான அனைவரின் இறுதி விடுதலையாகக் காணப்படுகின்றது என்றும் நாங்கள் பார்த்தோம்; மேலும் இந்த விடுதலையானது, ஆயிரவருட யுகத்தின்போது, முதற்பேறான சபை ஆயிரவருட இராஜ்யத்தில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது சம்பவிக்கிறதாய் இருக்கும் என்று நாங்கள் பார்த்தோம்.
அடுத்து நிஜத்தினைப்பற்றின அறிந்துகொள்ளுதல் இல்லாமல், எப்படி யூதர்கள் நிழலை 16 நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆசரித்துவந்தார்கள் என்றும்; ஏற்றக் காலத்தில் நிஜமான ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நிழலான ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்ட அந்த ஒரு மாதத்தினுடைய அதே நாளில் அடிக்கப்பட்டார் என்றும், நிழலான ஆட்டுக்குட்டியையும், நிழலான கடந்துபோகுதலையும் ஆசரிக்கத்தக்கதாக யூதர்களைப்போன்று இயேசுவும், அவரது சீஷர்களும் ஒன்றுகூடின அதே நாளில்தானே நமது கர்த்தர், நிழலை அல்ல, மாறாக நிஜமான தம்மைச் சுட்டிக்காட்டுகின்றதான ஒரு புதிய நினைவுகூருதலை ஏற்படுத்தினார் என்றும் நாங்கள் பார்த்தோம். இயேசு தம்முடைய மாம்சத்தையும், தம்முடைய இரத்தத்தையும் அடையாளப்படுத்திடுவதற்கெனத் தெரிந்துகொண்டுள்ள அந்த அடையாளச் சின்னங்களின் பொருத்தத்தையும் நாங்கள் பார்த்தோம்; புளிப்பில்லாத அப்பமானது மிகவும் அருமையாக நமது அருமை மீட்பருடைய தூய்மையையும், பாவமற்ற தன்மையையும் சித்தரிக்கின்றதாய் இருக்கின்றது; மற்றும் திராட்சப்பழரசமுள்ள பாத்திரமானது அவரது பாடுகளைச் சித்தரிக்கின்றதாய் இருக்கின்றது என்று பார்த்தோம்; இந்தப் பாடுகளானது கவலையோடு இல்லாமல், மாறாக நம் நிமித்தமாகச் சந்தோஷமாய், மகிழ்ச்சியாய், மனமுவந்து சகிக்கப்பட்டவையாகும் மற்றும் நாமும் அவைகளில் களிகூர்ந்தோம்.
அப்பத்தை அடையாளமாய்ப் பயன்படுத்துகையில், நம்முடைய இருதயங்களில் எப்படி அவரைப் புசிக்க வேண்டும் என்றும், அவரது பலியின் மூலமாக மாத்திரமே நமக்கு ஜீவன் உண்டு என்பதாகவும், அவர் மரணத்தில் நமக்குப் பதிலாளானதால் மாத்திரமே, நமது தந்தையாகிய ஆதாமினுடைய மீறுதல் காரணமாக, நம்மீது காணப்பட்டதான ஆக்கினைத்தீர்ப்பினின்று, நமது சந்ததி விடுவிக்கப்பட முடியும் என்பதாகவும் உள்ள உண்மைகளை மனதிற்குமுன் கொண்டுவரும் விதத்தில், நம்மால் அவரது மாம்சத்தைப் புசிக்கக்கூடும் என்றும் நாங்கள் பார்த்திட்டோம். புது உடன்படிக்கையினை முத்திரிக்கின்றதான நமது கர்த்தருடைய மரணத்திற்கு அடையாளமான திராட்சப்பழரசத்தை நாங்கள் பார்த்திட்டோம்; இந்த இரத்தத்தின் கீழ்த் தேவன் கிறிஸ்துவின் வாயிலாக நம்முடைய அபூரணங்களிடத்தில் இரக்கமாய்க் காணப்படக்கூடும், மற்றும் சில சமயங்களில் மாம்சத்தின் பெலவீனங்களானது விரும்பிட்ட பலனைக் கொணருவதற்குத் தடையாய்க் காணப்பட்டாலும்கூட, நம்முடைய நோக்கங்களை அவர் ஏற்றுக்கொள்கின்றார்.
பின்னர் வேறே கோணத்திலிருந்து இக்காரியத்தினை நாங்கள் பார்த்திட்டோம், அதாவது 1 கொரிந்தியர் 10:16,17-ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளதான இரண்டாம் கோணத்தை நாங்கள் பார்த்திட்டோம்; இந்த இரண்டாம் கோணத்தின்படி முழுச் சபையும் ஒரே அப்பமாய் இருக்கின்றார்கள் மற்றும் அந்த ஒரே அப்பத்தில், கிறிஸ்துவினுடைய ஒரே சரீரத்தில் அங்கமாகியுள்ளவர்கள் அனைவரும், தலையானவருக்கான ஊழியத்திலும், ஒருவருக்கொருவர் புரிந்திடும் ஊழியத்திலும் பிட்கப்படுவது என்பது, அவர்களுக்கான கடமையாகவும், சிலாக்கியமாகவும் காணப்படுகின்றது; மற்றும் இப்படியாக நாம் கிறிஸ்துவினுடைய பாடுகளில், ஐக்கியத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியும் மற்றும் இறுதியில் அவரது மகிமையில் கிறிஸ்துவோடு பங்காளிகளாகவும் முடியும். நாம் கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் (பாடுகளில்) பங்குகொள்ளுதலாய் இருக்கின்றது என்றும், நம்முடைய ஜீவியங்களை, அவருடையதுடன் ஒருங்கிணைத்துக்கொள்வதாய் இருக்கின்றது என்றும், கிறிஸ்துவினுடைய பாடுகளில் குறைவானதை நிறைவேற்றிடுவதற்காக நம்மை அவருடன் இணைத்துக் கொள்வதாய் இருக்கின்றது என்றும் நாங்கள் பார்த்தோம். அந்த அருமையான [R2622 : page 132] அடையாளத்தினுடைய மிக ஆழமான அர்த்தத்திற்குள் பிரவேசித்திட நாங்கள் முயற்சித்தோம் மற்றும் அதை எங்களுடைய இருதயங்களில் தேவனுடைய வல்லமையாகப் பெற்றுக் கொள்ளவும் மற்றும் இதன் மூலம் நமது அருமை இரட்சகர் பற்றின ஆழமான புரிந்துகொள்ளுதலுக்கும், அவரது சீஷர்களென அவரது அடிச்சுவடுகளில் நடக்கத்தக்கதாக ஆழமான பக்தியினைப் பெற்றிருத்தலுக்கும் நேராக வழிநடத்தப்படவும் நாங்கள் நாடினோம்.
வானத்திலிருந்து இறங்கிவந்திட்டதான ஜீவ அப்பத்திற்காக – இயேசுவுக்காக – மனித குடும்பத்தினுடைய ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதான அங்கத்தினனாய் இராமல், அவரது மகா பலியின் மூலமாக நாம் பெற்றிருக்கின்றதான ஆசீர்வாதங்கள் அனைத்திற்கும் நம்முடைய இரட்சகராய் இருப்பதற்கும், நம்முடைய அப்பமாய் இருப்பதற்கும், நமக்கு ஜீவன் அளிப்பவராய் இருப்பதற்கும் பொருத்தமானவராக விசேஷமாய் அருளப்பட்டவருக்காக தேவனுக்கு ஸ்தோத்திரத்துடன் கூடிய – ஜெபத்தினை ஏறெடுத்தப் பிற்பாடு, நாங்கள் அப்பத்தில் பங்கெடுத்தோம். பின்னர் எங்கள் கடந்தகால பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டிருந்தாலும்கூட, எங்களுக்கென்று எங்களிடத்தில் எந்த நீதியும் இல்லை என்றும், கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தின்கீழ் இல்லாமல், எங்களுக்குத் தேவன் முன்னிலையில் எந்தத் தகுதியும் இல்லை, அல்லது அவரிடத்தில் எந்தத் தொடர்பும் பெற்றிருக்க முடியாது என்றும் ஒப்புக்கொண்டவர்களாக, பாத்திரத்திற்காக [R2623 : page 132] ஸ்தோத்திரித்தோம். தேவனுடைய கிருபையினால் நாம் இயேசுவோடுகூட ஐக்கியங்கொள்ளத்தக்கதாக அழைக்கப்பட்டதற்காகவும் நாங்கள் ஸ்தோத்திரித்தோம் மற்றும் கர்த்தருடைய கிருபையினால், நாங்கள் உண்மையாய் எங்களுடைய ஓட்டத்தில் ஓடிடுவோம் என்றும், இறுதியில் எங்கள் போதகரோடுகூட, அவரது மகிமையில் உடன்சுதந்தரர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரோடுகூட இராஜ்யத்தின் சந்தோஷங்களில் பங்கெடுப்பவர்களாகுவோம் என்றுமுள்ள எங்களது நம்பிக்கைகளை ஆண்டவரிடத்தில் கூறினோம்.
இப்படியாக அந்த எளிமையான, ஆனால் மனதில் ஆழமாய்த் தாக்கம் ஏற்படுத்துகின்ற நினைவுகூருதலானது நிறைவு பெற்றது; மற்றும் அவ்வேளையினுடைய பயபக்தியானது நம்மில் நிலவத்தக்கதாகவும், நம்முடைய பரஸ்பர ஆறுதலுக்காகவும், சந்தோஷத்திற்காகவும், நம்முடைய மனங்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றதான அந்த விலையேறப்பெற்றவைகளிலிருந்து, நம்முடைய மனங்களைத் திசைத் திருப்புவதற்கு ஏதுவான எந்தச் சம்பாஷணைகளுக்குள்ளும் கடந்துபோகாமல், மாறாக பின்னர் தொடர்ந்து சீஷர்கள்மீது வந்திட்டதான கடுமையான சோதனைகளையும், அருமை போதகருடைய சோதனைகளையும் நினைவுகூரவும், அவரது உண்மையை அதிகமாய் உணர்ந்துகொள்வதற்கும், வருஷத்தினுடைய அந்தக் காலப்பகுதியில் மிகவும் வீரியத்துடன் காணப்படும் எதிராளியானவனுடைய தந்திரங்களுக்கு எதிராக அதிக ஜாக்கிரதையுடன் காணப்படுவதற்கும் நாடவும் வேண்டி, அந்த மாலையில் நாம் கலைந்து சென்றிடுவதற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. முதலாம் துதிப்பாடலைப் பாடிவிட்டு, நாங்கள் கலைந்துபோனோம்.