R5234 – பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R5234 (page 140)

பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது

MERCY IS BETTER THAN SACRIFICE

ஆதியாகமம் 45:1-46:7

“இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமானது.” சங்கீதம் 133:1

தனது சகோதரர்கள் எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளனர் என்பதைக் கண்ட யோசேப்பு, அவர்கள் மீது அனுதாபம்/இரக்கம் கொண்டார். யோசேப்பின் விஷயத்தில் தாங்கள் தவறு செய்துவிட்டார்கள் என்பதை அவர்களது இருதயம் இப்பொழுது உணர்ந்துகொண்டிருப்பதையும், தங்கள் மீதான தெய்வீக நிராகரிப்பை அவர்கள் உணர்ந்து கொண்டிருப்பதையும் மற்றும் அவர்கள் தவறுகளுக்காக வருந்துவதையும் யோசேப்பு கண்டபோது, அவர் அவர்கள் மீது அனுதாபம் கொண்டார். வயதான தங்கள் தகப்பன் மீது அவர்கள் அக்கறைக்கொண்டிருந்ததையும், அன்பற்ற செயல்பாட்டினாலோ (அ) வார்த்தையினாலோ தங்களது தகப்பனை மரிக்கப்பண்ணுவதில் துரிதப்படுத்துவதற்கான அவர்களது விருப்பமின்மையையும், யோசேப்பு கண்டபோது, மிகவும் அனுதாபம் கொண்டார். யோசேப்பு தன்னை யார் என்று வெளிப்படுத்தும் காரியத்தை எகிப்தியர்கள் காணக்கூடாது என்று விரும்பினார். தன்னுடைய உணர்வுகளைத் தன்னால் இனிக் கட்டுப்படுத்த முடியாது என்று உணர்ந்த யோசேப்பு, எகிப்தியர்கள் அனைவரும் அறையைவிட்டு வெளியேறும்படிக்கு அவசரமாய்க் கட்டளையிட்டார். பின்னர், “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்” என்று கூறித் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

அவரது சகோதரர்கள் அடைந்திருக்கும் திகைப்பை நம்மால் நன்கு கற்பனை செய்துகொள்ள முடிகின்றது. தங்கள் சிரமங்களும், சோதனைகளும் பெருகிக்கொண்டு வருவதாக அவர்களுக்குத் தெரிந்தது மற்றும் தங்களுக்கான பிரச்சனைகள் அனைத்தின் விஷயத்திலும் எப்படியோ யோசேப்பு சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இப்பொழுது யோசேப்பின் முன்னிலையில் காணப்படும்போதும், யோசேப்பு துபாசியைக்கொண்டு தங்களிடத்தில் பேசாமல், நேரடியாக தங்கள் சொந்த மொழியில், தான்தான் யோசேப்பு என்று கூறினதைக் கேட்கும்போது, அவர்கள் எவ்வளவு அதிர்ச்சியடைந்திருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது.

ஆனால் யோசேப்பு இரக்கத்தினாலும், அனுதாபத்தினாலும் முழுக்க நிரம்பினவராக, அவர்களை அமைதிப்படுத்திட துரிதப்பட்டார். அவர்களை அவர் கொடூரமாய் அச்சுறுத்தவில்லை அல்லது அவர்கள் தவறுகளுக்காக அவர்களைத் தண்டிக்கவுமில்லை. அவர்களது தவறுக்காக அவர்களை அவர் கடிந்துகொள்ளக்கூட இல்லை. மாறாக பாவமானது ஏற்கெனவே அவர்களுக்குத் தண்டனைக் கொடுத்துள்ளதை உணர்ந்த யோசேப்பு, அவர்களை ஆறுதல்படுத்தும் வண்ணமாக,” நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார்; பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும், தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்” என்றார் (ஆதியாகமம் 45:5-8).

கேட்காமலேயே வழங்கப்பட்ட மன்னிப்பையும், இரக்கத்தின் வெளிப்படுத்தல்களையும், யோசேப்பு தனது சகோதரர்கள் மீது குவித்தார். (யோசேப்பினுடைய) பழிவாங்குதல் எத்துணை அருமையானதாய்க் காணப்படுகின்றது! அந்தோ, எத்துணை சொற்பமான கிறிஸ்தவர்களே இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் இவ்வளவுக்குப் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார்கள்! கிறிஸ்தவர்கள் எல்லா விதத்திலும், யோசேப்பைக்காட்டிலும் மிகவும் அநுகூலமுடையவர்களாய் இருக்கின்றனர்.

அதாவது கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகவும், வேதவாக்கியங்களுடைய அறிவுரையைப் பெற்றுக்கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். கிறிஸ்துவுக்கும், அவரது ஆவிக்கும், யோசேப்பு எத்துணை அருமையான நிழலாய் இருக்கின்றார். இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவரது சீஷர்களாகுவதற்குப் பதிலாக, அவரைச் சிலுவையில் அறைந்துபோட்ட யூதர்களாகிய, கிறிஸ்துவின் சகோதரர்கள் நித்தியகாலமும் சித்திரவதைப்படுத்தப்படுவார்கள் என்று நாம் நம்பிக்கைக்கொள்ளத்தக்கதாக, நமக்குக் கற்பித்த இருளான யுகங்களுடைய விசுவாச பிரமாணங்களானது, நம்மைத் தவறாகவே வழிநடத்தியுள்ளது!

ஒன்றன்பின் ஒன்றாக இப்பொழுது பிரகாசித்துக்கொண்டிருக்கும் வேதாகமத்தினுடைய பக்கங்களின் வெளிச்சத்தில், யூதர்களை நித்திய காலம் சித்தரவதைக்குட்படுத்த மேசியா நோக்கம் கொண்டிருக்கிறார் என்பதற்குப் பதிலாக, நேர்மாறாக மேசியா நோக்கம் கொண்டிருப்பதாக தேவனுடைய ஜனங்கள் பார்க்கின்றனர்; அதாவது யூதர்கள் தெய்வீக இரக்கத்தையும், மன்னிப்பையும் பெற்றுக்கொள்வார்கள் என்பதாக தேவனுடைய ஜனங்கள் பார்க்கின்றனர். பரிசுத்தவானாகிய பவுல் சுட்டிக்காட்டுவது போன்று, மேசியாவின் இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டப்பின்னர், உடனடியாக இந்த இரக்கமானது, யூதர்களுக்குக் காண்பிக்கப்படும்; “உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்” (ரோமர் 11:25-33). இதே கருத்தானது, இஸ்ரயேலரைக் குறித்துத் தீர்க்கத்தரிசியினாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, “நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” (சகரியா 12:10). யூதர்களும் 18 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக நடந்திட்ட துயரத்திற்கு இடமான தவறை உணர்ந்துகொள்ளுகையில், உண்மையான துக்கத்துடனே துக்கிப்பார்கள். அவர்கள் நித்திய காலத்துக்கும் உரிய சித்தரவதையினால் தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக கர்த்தர், “நான் அவர்களுக்குக் கிருபையின் ஆவியையும், விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்” என்று கூறியுள்ள பிரகாரமாய், அவர்களிடத்தில் கிருபை பாராட்டுவார். இவ்விஷயமும் மற்றும் நம் பாடத்தில் இடம்பெறும் நிழலும், எத்துணை அருமையாயும், எத்துணை இசைவாயும் காணப்படுகின்றது! யோசேப்பின் பத்துச் சகோதரர்கள் இஸ்ரயேலர்களுக்கு நிழலாய் இருக்கின்றனர்; எகிப்தியர்கள் புறஜாதிகளுக்கு நிழலாய் இருக்கின்றனர்; பென்யமீன் திரள் கூட்டத்தினருக்கு நிழலாய் இருக்கின்றார்; யோசேப்பு மேசியா வகுப்பாருக்கு, அதாவது தலையாகிய இயேசுவையும், அவரது சரீரத்தின் அங்கத்தினர்களாகிய ஜெயங்கொள்ளும் சபையையும் உள்ளடக்கின மேசியா வகுப்பாருக்கு நிழலாய் இருக்கின்றார்.

“எருசலேமுடன் பட்சமாய்ப் பேசுங்கள்”

வேதாகமத்தின் பதிவுகள் அனைத்துமே வேதாகமத்திற்கும், தெய்வீகக் குணலட்சணத்திற்கும் இசைவாய்க் காணப்படுகின்றது. இருண்ட யுகங்களினுடைய விசுவாசப் பிரமாணங்களுக்கு நாம் செவிக் கொடுத்ததினாலேயே நமக்குப் பிரச்சனை ஏற்பட்டது. இயேசுவைத் தேவனுடைய குமாரன் என்று நம்பி, இராஜ்யத்தில் உடன் சுதந்தரத்தை அடையத்தக்கதாகச் சுயத்தை வெறுத்தலின் மூலமும், தற்காலத்தின் பாடுகளில் பங்கெடுப்பதன் மூலமும், அவருடன் இணைந்து கொள்வதன் மூலமுமாய் அல்லாமல் மற்றபடி யாரும், ஆவிக்குரிய இஸ்ரயேலில் அங்கத்தினராக முடியாது என்று வேதாகமம் சொல்வது உண்மைதான். ஆனால் இந்த எளிமையான செய்தியுடன், யூதர்களிடமும், உலகத்தாரிடமும், (ஆவிக்குரிய இஸ்ரயேலர் அல்லாத) மீதியான அனைவருக்குமே நித்திய சித்திரவதை உள்ளது என்று நாம் சேர்த்துக் கூறினதிலேயே நம்முடைய தவறு காணப்படுகின்றது.

ஆனால் ஆவிக்குரிய இஸ்ரயேலானது, இராஜ்யத்தை அடைகின்றது என்றும், இந்த உயர்ந்த மகிமையையும், ஆசீர்வாதத்தையும் அடைய தவறுகின்றதே மாம்சீக இஸ்ரயேலர்கள் மற்றும் உலகத்தாருடைய இழப்பாய் இருக்கின்றது என்றும் இப்பொழுது நாம் அறிந்துகொள்கின்றோம். மாம்சீக இஸ்ரயேலர்களுக்குத் தேவையான ஆசீர்வாதங்களை அவர்களுக்கு அருளுவதும் மற்றும் அவர்கள் மூலமாய் இறுதியில் அனைத்து ஜனங்கள் மீதும் ஆசீர்வாதங்களை அருளுவதுமே, இப்படியான ஓர் இராஜ்யத்தை ஏற்பாடு பண்ணினதிலுள்ள தேவனுடைய நோக்கமாய் இருக்கின்றது என்பதையும் நாம் காண்கின்றோம்.

இதுவே யோசேப்பினுடைய சகோதரர்கள் முழுமையாய் மன்னிக்கப்பட்ட விஷயத்திலிருந்து, கற்பிக்கப்பட்ட பொதுவான பாடமாகக் காணப்படுகின்றது. யோசேப்பின் சகோதரர்கள் தெய்வீகத் திட்டத்தை நிறைவேற்ற மாத்திரமே செய்திருக்கின்றார்கள் என்று அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிச்சயமானது, யூதர்களுக்கு இறுதியில் கொடுக்கப்படப்போகின்ற செய்திக்கு நன்கு இசைவானதாக உள்ளது; அதாவது யூதர்கள் மேசியாவைச் சிலுவையில் அறைந்துபோட்டதான காரியமானது, அவர்கள் தெய்வீக நோக்கத்தினை நிறைவேற்றினதாகவும் மற்றும் அதன் மூலமாக தேவனுடைய ஆசீர்வாதமானது, பூமியின் குடிகள் அனைத்திற்கும் கிடைக்கப்பண்ணினது என்பதாகவும் உள்ள செய்தி இறுதியில் யூதர்களுக்கு அறிவிக்கப்படும். இதற்கு இசைவாகவே பரிசுத்தவானாகிய பேதுருவும் பெந்தெகொஸ்தே நாளில் பேசிட்ட வார்த்தைகள் காணப்படுகின்றது. மனம்வருந்தின யூதர்கள் சிலரிடம் பரிசுத்தவானாகிய பேதுரு இக்காரியத்தை விவரிக்கும் விதத்தில், “சகோதரர் நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்“ என்றார் (அப்போஸ்தலர் 3:17). “அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே” என்று பரிசுத்தவானாகிய பவுல் குறிப்பிடுகின்றார் (1 கொரிந்தியர் 2:8).

யோசேப்பினுடைய சகோதரர்களுக்கு, நிஜமாய்க் காணப்படும் யூதர்களிடத்திலான, தேவனுடைய மனப்பான்மையானது, ஏசாயா 40:1,2 ஆகிய வசனங்களிலுள்ள தீர்க்கத்தரிசனத்தில் தெளிவாய்க் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்க்கத்தரிசனமானது, விசேஷமாக இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய முடிவு பகுதிகளில் நிறைவேறப்போவதாக இருக்கின்றது. இந்தத் தீர்க்கத்தரிசனமானது, அவர்களுக்கு நித்தியமான சித்திரவதை உள்ளதென ஒரு வார்த்தைக்கூடக் குறிப்பிடுவதில்லை, மாறாக இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய முடிவில் தேவனுடைய கிருபையானது யூதர்களுக்குக் கடந்துவரும் என்றும், இயேசுவைத் தலையாகப் பெற்றுள்ள, மேசியாவின் சரீரமாகிய ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் வாயிலாக அவர்கள் இரக்கம் பெற்றுக்கொள்வார்கள் என்றும் குறிப்பிடுகிற காரியங்கள், பரிசுத்தவானாகிய பவுலின் வார்த்தைகளுக்கு முழு இசைவுடனே காணப்படுகின்றது. “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, [R5235 : page 141] அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்” (ஏசாயா 40:1,2).

இஸ்ரயேலானவள் தனது மீட்பரை மரிக்கப்பண்ணத்தக்கத்தாக, அவரை ரோமர்களிடம் விற்றுப்போட்டது துவங்கி, கிட்டத்தட்ட 19 நூற்றாண்டுகள் காலமாக அவமானம், நிந்தை மற்றும் துக்கத்தின் பாத்திரத்தில் பானம் பண்ணும் கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டாள். இயேசுவின் பின்னடியார்களெனத் தவறாய்த் தங்களைக் குறித்து அறிக்கைப் பண்ணிக்கொண்டவர்களின் கரங்களிலிருந்து, இஸ்ரயேலானவள் இவ்வளவுக்கு உபத்திரவம் அடைந்ததற்காக நாங்கள் வருந்துகின்றோம்! கிறிஸ்துவின் ஆவியைத் தவறாய்ப் புரிந்துகொள்வதற்கு அநேகக் காரணங்கள், யூதர்களுக்குக் கிடைத்துள்ளதற்காகவும் நாங்கள் வருந்துகின்றோம்! உண்மையுள்ள யூதர்களும், போலி யூதர்களும் காணப்பட்டதை யூதர்கள் நினைவுகூர்ந்தால் மாத்திரமே உண்மை கிறிஸ்தவர்களும், போலி கிறிஸ்தவர்களும் காணப்பட்டிருப்பதை யூதர்களால் புரிந்துகொள்ள முடியும். “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவன் அல்ல” (ரோமர் 8:9).

“யோசேப்பு நீண்ட காலம் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டார்”

யோசேப்பினுடைய சகோதரர்கள் அவரைப் புரிந்துகொள்ள தவறினவர்களாய் இருந்தனர்; அவருக்கும், அவர்களுக்குமுரிய குணலட்சணத்தில் மிகவும் பெரிய வித்தியாசங்கள் இருந்தது. அவர்கள் மிகவும் இரக்கமுள்ளவர்களாகவும், உருக்கமான இருதயம் கொண்டவர்களாகவும் மாறியிருந்தாலும், அவர்களிடத்தில் இன்னமும் கொஞ்சம் கசப்பின் ஆவியும், வன்மத்தின் ஆவியும் காணப்படவே செய்தது; இம்மனநிலையில் அவர்கள் ஒருவேளை யோசேப்பின் ஸ்தானத்தில் காணப்பட்டிருந்தால், அவர்கள் எதிர்க்காலத்தில் ஏதோ சில தண்டனைகளை அளிப்பதற்குத் திட்டம் பண்ணினவர்களாக இருந்திருப்பார்கள். ஆகையால் இரக்கமும், சகோதர சிநேகமும் நிறைந்திருந்த யோசேப்பினுடைய வார்த்தையினால் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர் மற்றும் அவர் சொன்னப்படி எல்லாம் செய்வார் என்று அவர்களால் நம்பவும் முடியவில்லை. தங்களது தகப்பனாகிய யாக்கோபின் நிமித்தமாக, தங்களிடத்தில் யோசேப்பு இப்படித் தயவாய் நடந்துகொள்கின்றார் என்ற முடிவிற்குள்ளாக அவர்கள் வந்தார்கள்.

ஆகையால்தான் பல வருடங்களுக்குப் பின்பாக, யாக்கோபு மரித்தபோது, யோசேப்பு தங்களை இப்பொழுது பழிவாங்கிவிடுவார் என்று அந்தப் பத்துச் சகோதரர்களும் மிகவும் நடுங்கிப்போனார்கள். அவர்கள் மீண்டுமாக யோசேப்பினிடத்திற்குப் போய், அவரது மன்னிப்பைத் தொடர்ந்து காண்பித்தருளும்படி வேண்டிக்கொண்டார்கள். ஆனால் யோசேப்போ, “பயப்படாதிருங்கள்; நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்” என்றார் (ஆதியாகமம் 50:19-21).

“யோசேப்பு தேவனால் கற்பிக்கப்பட்டிருந்தார்”

யோசேப்பு படிப்பினைகளைக் கற்றுக்கொண்டவராக இருந்தாலும், அவர் தேவனால் கற்பிக்கப்பட்டிருந்தார் என்பது மிகவும் தெளிவாய்த் தெரிகின்றது. தனது சகோதரர்களுக்கு எதிராக, பழிவாங்குவதற்குரிய எந்த எண்ணமும் அவரிடத்தில் இருக்கவில்லை. அவர்களுடைய பாவத்தினிமித்தமாக எந்த ஒரு தண்டனையும் அளிப்பது யோசேப்பின் காரியமாய் இராமல், மாறாக தேவனுடைய காரியமாக இருந்தது. அந்தத் தண்டனையை, அவர்கள் பல வருடங்களாக தீமை சம்பவிக்குமென எதிர்ப்பார்த்த விதத்திலும், மனவேதனை அடைந்த விதத்திலும், பயந்துகொண்டிருந்த விதத்திலும் அடைந்தவர்களாகக் காணப்பட்டனர். ஒவ்வொரு தவறுகளுக்கும் நீதியானது, தண்டனை அளிக்கத்தக்கதாக, தெய்வீக ஏற்பாடுகளை ஒழுங்குப்படுத்துவது, யோசேப்புடைய காரியமாய் இருக்கவில்லை. அன்பாயும், இரக்கமாயும், தயாளமாயும், மாபெரும் மீட்பருக்கும், அவரது இராஜ்யத்திற்கும் மாதிரியாய்க் காணப்படுவதுந்தான் யோசேப்பினுடைய காரியமாய் இருந்தது.

நம்முடைய சொந்த அனுபவங்களின் விஷயத்திலும் நாம் இப்படியாகவே காணப்பட வேண்டும். மிகவும் சொற்பமான வாய்ப்புள்ள இந்த மனுஷன் எந்தளவுக்குக் கிறிஸ்துவின் ஆவியை/சிந்தையை, சத்தியத்தின் ஆவியை விரிவாய்க் கிரகித்துள்ளதை நாம் வியப்போடே கவனிக்கின்றோம். பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களும், இயேசு மற்றும் அப்போஸ்தலர்களுடைய வார்த்தைகளை மாதிரியாகப் பெற்றவர்களும், கடந்த யுகங்களினுடைய வரலாற்றினைப் பெற்றவர்களுமான நாம் யோசேப்பின் பாதத்தில் அமர்ந்துகொண்டு, எப்படி அவர் தேவனால் முற்றும் முழுமையாகக் கற்பிக்கப்பட்டார் என்பதை வியப்போடு கவனித்து, அந்தப் படிப்பினைகளை நம் விஷயத்திலும் செயல்படுத்திடுவோமாக. தனக்கு நேரிட்ட கசப்பான நிகழ்வுகளுக்கு எதிராக யோசேப்பு ஒருபோதும் முறுமுறுக்கவில்லை, ஒரு வார்த்தைக்கூடக் கூறிப் புலம்பவில்லை. ஒவ்வொரு வார்த்தையிலும், அனைத்து விஷயங்களிலும், யோசேப்பு தேவனுடைய ஞானத்தை, அன்பை, வல்லமையை மற்றும் தயவைக் குறித்துச் சாட்சிப் பகர்ந்தவராகவே இருந்தார். தனக்கு வந்திட்ட அனுபவங்களில் ஒரு மாற்றத்தையாகிலும் ஏற்படுத்துவது (அ) திருத்தம் பண்ணுவது என்பது, ஒட்டுமொத்த திட்டத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தனக்கு அவசியமாய் இருக்கும் ஜீவியத்தின் சில படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள, தான் தவறிப்போவதற்கு ஏதுவாகவும் இருக்கும் என்றும் யோசேப்பு உணர்ந்திருந்தார்.

ஓ! கர்த்தருடைய பின்னடியார்கள் எவ்வளவாய்த் தங்களுக்குரிய சோதனையான அனுபவங்கள் தொடர்புடைய விஷயத்தில், கர்த்தரை நோக்கிப்பார்க்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர்! நாம் தேவனை அன்புகூருகின்றபடியினாலும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டிருக்கின்றபடியினாலும் மற்றும் “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குவதும்,” நம்முடைய மீட்பருடன் உடன் சுதந்தரராக்குவதுமான, குணலட்சணத்தினுடைய வளர்ச்சியின் மூலம், நம்முடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திடுவதற்கு நாம் நாடுகின்றபடியினாலும், அனைத்தையும் நம்முடைய நன்மைக்கு ஏதுவாக மாற்றுவதற்குத் தேவன் விருப்பமும், வல்லமையும் உடையவராக இருக்கின்றார் என்றும், தேவன் அனைத்தையும் அறிவார் என்றும், தேவன் அனைத்தையும் காண்கின்றார் என்றும், நாம் அனைவரும் தேவன் பேரில் விசுவாசம் கொண்டிருப்பது அவசியம் மற்றும் விசுவாசம் கொண்டிருக்கவும் வேண்டும்.

“எகிப்தில் யாக்கோபு”

மீதியிருக்கிற இன்னும் ஐந்து வருட பஞ்சகாலங்கள் மாத்திரமாவது தனது தகப்பனாகிய யாக்கோபும், முழுக்குடும்பமும் எகிப்தில் காணப்பட வேண்டுமென்று யோசேப்பு திட்டம் பண்ணினார். கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் நிலப்பகுதியாக கோசேன் நாடு காணப்பட்டபடியால், இப்பகுதியே அவர்களுக்கு ஏற்றதாய் இருக்குமென யோசேப்பு எண்ணினார். தனது பிரதான ஊழியக்காரனாகிய யோசேப்புடன், பார்வோனின் இருதயம் இசைந்திருந்தபடியாலும், யோசேப்பினுடைய நிர்வாகத்தின் கீழ், காரியங்கள் செழித்தோங்கியிருப்பதின் நிமித்தம் பார்வோன் திருப்தியடைந்திருந்தபடியாலும், பார்வோன் முழுச்சம்மதம் தெரிவித்து, வயதான யாக்கோபினாலும், பெண்களினாலும், குழந்தைகளினாலும், ஒட்டகங்கள், கழுதைகள் மீது சவாரிச் செய்ய முடியாததினால், அவர்களைக் கொண்டுவரும்படிக்கு எகிப்திய வண்டிகளை அனுப்பி வைக்கும்படிக்குப் பார்வோன் கருத்துத் தெரிவித்தார். யோசேப்பு பிரயாணத்திற்கென்று பதார்த்தங்களை ஆயத்தம்பண்ணி, தனது அன்பைச் சுட்டிக்காட்டும் வண்ணமாக சிறு அன்பளிப்புகளையும் கொடுத்து அனுப்பினார். “எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி; யோசேப்பு தனது தகப்பனுக்கு விசேஷித்த செய்தியையும் அனுப்புவித்தார்” (ஆதியாகமம் 45:13). பின்னர் அவர்கள் அனைவரையும் யோசேப்பு முத்தஞ்செய்து வழியனுப்பிக் கூறினதாவது,
“”வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள்””

மனித சுபாவத்தைக் கூர்ந்து கவனிப்பவராக யோசேப்பு தோன்றுகின்றார். அனைத்துச் சூழ்நிலைகளிலும் வாக்குவாதங்களுக்கு எதிராக, சகோதரர்களை எச்சரிப்பது அவசியமற்றது என்று அநேகர் எண்ணிக்கொண்டிருக்கலாம். “அச்சகோதரர்கள் தங்கள் அனுபவங்களின் பலனாக வந்திட்ட தேவ ஆசீர்வாதங்கள் காரணமாக மிகவும் சந்தோஷத்தோடு காணப்படுவதினால், அவர்கள் மத்தியில் அன்பே நிலவுமேயொழிய, எவ்வித சண்டையும்/வாக்குவாதமும் நிலவாது” என்று கூட அநேகர் கூறியிருந்திருக்கலாம். ஆனால் இதற்கு எதிர்மாறானக்கருத்தே எப்பொழுதும் உண்மையாய் இருந்துள்ளது. செழிப்பு/வளமை வரும்போது, கிடைத்திட்ட பொருள்களின் விஷயத்தில் சண்டை பண்ணுவதற்கும், பொறாமைக்கொள்வதற்கும் மற்றும் சுயநலமாக இருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

பழைய நிலைமையிலேயே காணப்பட்ட அச்சகோதரர்கள், பென்யமீன் யோசேப்பிடமிருந்து பெற்றுக்கொண்ட “அதிகப்படியான கவனித்தல்” நிமித்தமாகவும், பென்யமீனுக்குக் கொடுக்கப்பட்ட முந்நூறு வெள்ளிக்காசுகளின் நிமித்தமாகவும், பென்யமீன் மீது பொறாமை அடைந்திருக்கலாம். கோசேன் நாட்டிலுள்ள தங்களுக்கான சுதந்தரவீதத்தைக் குறித்தும் அவர்கள் விசாரித்திருந்திருக்கலாம். தாங்கள் யோசேப்பினுடைய ஆதிக்கத்தின் கீழ்த்தான் காணப்படப் போகின்றார்கள் என்றும், யோசேப்பு பென்யமீனுக்கே அதிகமாய்த் தயவு புரிவார் என்றும், இதுபோன்று இன்னும் சில எண்ணங்களும் அவர்களில் சிலருக்குத் தோன்றியிருக்கும். “வழியிலே சண்டை பண்ணிக்கொள்ளாதிருங்கள்” என்பதான யோசேப்பினுடைய எச்சரிப்பு, அத்தருணத்திற்குப் பொருத்தமானதாகவே காணப்படுகின்றது. இப்படியாகவே கர்த்தருடைய சகோதரர்களின் விஷயத்திலும் காணப்படும் என்பதையும் நாம் அறிந்திருக்கின்றோம். உபத்திரவத்தின்போது அவர்களது இருதயங்களானது கர்த்தரை நோக்கி கதறுகின்றது, ஆனால் வளமையின்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக அதிருப்தி/ விரோதம் கொள்வதற்கும் மற்றும் ஒருவருக்கொருவர், ஒருவருக்கொருவருடைய வாய்ப்புகள், ஆசீர்வாதங்கள், சிலாக்கியங்கள் மீது பொறாமைக்கொள்வதற்கும் ஏதுவான நிலைக்குள்ளாகுகின்றனர். இது எத்துணை பெரிய தவறாய்க் காணப்படுகின்றது! கிறிஸ்துவுக்கு ஒத்த சாயலில், தனது வளர்ச்சியினுடைய முன்னேற்றத்தினை, ஆண்டவருடைய கண்களானது கவனிக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். சகோதர சிநேகம் என்பது குணலட்சணத்திற்குரிய பரீட்சைகளில் ஒன்றாய் இருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

மற்றவர்களைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள்ளான சகோதர சகோதரிகளே சில சமயம் நமக்கு அதிகமானப் பிரச்சனைகளை உருவாக்குகின்றவர்களாய் இருப்பார்கள் என்பது உண்மையே. (சகோதரர்களாகிய) நம்முடைய நெருங்கின உறவும், ஒருவரையொருவர் பற்றின பெருமளவிலான அறிவும், தீமையாய்ப் பேசுவதற்கும், விமர்சிப்பதற்கும், அதிகமான வாய்ப்புகளை நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கின்றதாய் இருக்கின்றது; ஆனால் (சகோதரர்களல்லாத) மற்றவர்கள் விஷயத்தில் இப்படியாக வாய்ப்புகள் இருப்பதில்லை. தேவனுடைய ஜனங்கள் அனைவரும், “போகும் வழியிலே சண்டை பண்ணிக்கொள்ளாதிருங்கள்” என்ற யோசேப்பின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வது நலமாயிருக்கும். கர்த்தரினால் இவ்வழியே நமக்கு ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளது. அது இடுக்கமான வழியாகவும், சிரமமான வழியாகவும், மாம்சத்திற்கு முழுக்கத் துன்பம் நிறைந்த வழியாகவும், ஆவிக்கு/சிந்தைக்குச் சோதனைகளும், பரீட்சைகளும் முழுக்க நிறைந்த வழியாகவும் காணப்படுகின்றது; ஆகையால் இந்தச் சிரமங்களுக்கு ஏற்ப, அன்பும், இரக்கமும், ஒத்துழைப்பும் மற்றும் உதவிக்கரம் அளித்தலும்/ ஆதரவும் காணப்பட வேண்டும். நம்முடைய பாடத்தில் ஆதார வசனத்திலுள்ள சங்கீதக்காரனுடைய வார்த்தைகளானது, கர்த்தருடைய சகோதரராகிய சபையைக் [R5235 : page 142] குறித்துத் தீர்க்கத்தரிசனமாய் எழுதப்பட்டதாய் இருக்கின்றது; “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1).

சபையாகிய சகோதர சகோதரிகளினுடைய இந்த ஒற்றுமையை, இராஜா மற்றும் பிரதான ஆசாரியன் தங்கள் பணிக்கென ஏற்படுத்தப்படும் பொழுது, நல்ல தைலம் அவர்கள் தலையின் மீது ஊற்றப்படும் காரியத்துடன் சங்கீதக்காரன் ஒப்பிட்டுக் கூறுகின்றார். அபிஷேகத்தைலமானது பரிசுத்த ஆவியைக் குறிப்பதையும், இத்தைலமானது பிரதான ஆசாரியனுடைய தாடியில் வடிந்து, அவரது அங்கியில் இறங்கி வடிந்து, ஆசாரியனுடைய முழுச்சரீரத்தையும் அபிஷேகிப்பதையும் இங்குப் பார்க்கலாம். இந்த ஆசாரியன் தலையாகிய இயேசுவையும், அவரது சரீரமாகிய சபையையும் உள்ளடக்கினதுமான இராஜரிக ஆசாரியனாகிய மெல்கிசெதேக்கைக் குறிக்கின்றார். பெந்தெகொஸ்தே நாளன்று, கிறிஸ்துவின் சரீரமாகிய சபை மீது கடந்துவந்த பரிசுத்த ஆவியினுடைய அபிஷேகமானது, இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் தொடர்ந்து வருகின்றது மற்றும் அவரது உண்மையான அங்கங்கள் அனைவரையும் அபிஷேகிக்கின்றது. இந்த அபிஷேகத்தினாலேயே, இந்த அங்கத்தினர்கள், கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டவர்களாக அடையாளங்கண்டு கொள்ளப்படுகின்றனர். “நீங்கள் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக அபிஷேகிக்கப்பட்டிருக்கின்றீர்கள்” (1 கொரிந்தியர் 12:13).