R2887 – ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R2887 (page 315)

ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்

FOR GOD WAS WITH HIM

“ஆதியாகமம் 41:38-49

“என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்.” 1 சாமுயேல் 2:30

உலகத்தில் உண்மையான மேன்மையை அடைந்தவர்களுடைய வெற்றிக்கான இரகசியமாக தெய்வீகத் தயவானது காணப்பட்டதுபோன்று, யோசேப்பின் வெற்றிக்கான இரகசியமாகவும் தெய்வீகத் தயவே காணப்பட்டது. முந்தின யுகங்களில், உண்மையான வெற்றி என்பது பூமிக்குரிய வளமை, ஐசுவரியங்கள் மற்றும் வல்லமையுடன் தொடர்புடையதாக ஏறக்குறைய அடையாளம் கண்டுகொள்ளப்பட்டதாய் இருந்தது; ஆனால் இந்தச் சுவிசேஷ யுகத்திலோ, அதாவது ஆவிக்குரிய யுகத்திலோ, உண்மையான வெற்றியும், தெய்வீகத் தயவும், ஆவிக்குரிய வளமையுடனும், ஆவிக்குரிய வளர்ச்சிகளுடனும், பயனுள்ளவர்களாய் இருக்கும் நிலையுடனும் தொடர்புடையதாய்க் காணப்படுகின்றது மற்றும் இதற்கான உதாரணத்தை நமது கர்த்தர் இயேசுவிலும், அப்போஸ்தலர்களிலும் மற்றும் இவர்கள் நாட்கள் துவங்கி இன்று வரையிலுமுள்ள பிரபலமற்ற சிலுவையின் ஊழியக்காரர்களிலும் நாம் காணலாம். செயல் முறைகளின் பாணி வித்தியாசமாக இருப்பினும், கொள்கை ஒன்றே. குணலட்சணத்தைக் கட்டி எழுப்புவதற்குரிய பிரதான படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதற்கான பள்ளிக்கூடமென இன்னமும் துன்பம் காணப்படுகின்றது; இந்தத் துன்பமெனும் பள்ளிக்கூடத்தில்தான், ஜீவியத்திற்கான சரியான கொள்கைகள் உருவாகுகின்றன மற்றும் இறுதியில் உறுதியான குணலட்சணம் உருவாகுகின்றது. இப்பாடத்தில் நாம் பார்க்கவிருக்கும் யோசேப்பு அடையும் மாபெரும் ஆசீர்வாதமும், முள்னேற்றமும் பற்றின சம்பவமானது, ஒரு தேசத்தின்/ஜாதியின் காரியங்களை நெறிப்படுத்துவது மாத்திரமல்லாமல், “தம்முடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களும்” மற்றும் அந்த அழைப்பிற்கான நிபந்தனைகளுக்கு மற்றும் கோரிக்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்திடுவதற்கு நாடுபவர்களுமாகிய அனைவரின் தனிப்பட்ட காரியங்களையும்கூடத் தேவன் நெறிப்படுத்துகின்றார் என்ற உண்மையை விளக்குகின்றதாய் இருக்கின்றது.

யோசேப்பிடம் சில குணலட்சணங்கள் காணப்பட்டதின் காரணமாகவே, இவருடைய குடும்பம் எகிப்திற்கு வருவதற்கும், இன்னும் பல காரியங்களுக்குமான வழியை ஆயத்தப்படுத்துவதற்காக, அநேகமாக கர்த்தர் இவரைத் தெரிந்தெடுத்திருக்க வேண்டும். ஒருவேளை யோசேப்பு தான் கடந்து சென்ற படிப்பினைகள் மற்றும் அனுபவங்களைப் புறக்கணித்தவராக இருந்திருப்பாரானால், கர்த்தரும் தம்முடைய கையாளுதல்களை மாற்றியிருந்திருப்பார் என்பதில் நமக்கு நிச்சயமே. கர்த்தருடைய அனுக்கிரகங்களும், ஆசீர்வாதங்களும் தகுதியான பாத்திரங்கள் மீதே அருளப்படுகின்றதாயிருக்கப் பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது, யோசேப்பும் ஒவ்வொரு சோதனையிலும் கீழ்ப்படிதலுள்ளவராகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் காணப்பட்டதை நம்மால் காணமுடிகின்றது. யோசேப்பினுடைய குணலட்சணத்தின் பலத்திற்கும், கடமை மற்றும் கொள்கையின் விஷயத்திலான அவரது [R2887 : page 316] நேர்மைக்குமான அஸ்திபாரமாக, அவர் கர்த்தரிடத்தில் கொண்டிருந்த விசுவாசம் காணப்பட்டது என்பதில் எவ்விதமான ஐயமில்லை. தனக்குச் சொப்பனங்கள் வாயிலாக முன்னறிவிக்கப்பட்ட, தன் விஷயத்திலான கர்த்தருடைய வழிநடத்துதல்களைக் குறித்து யோசேப்பு சந்தேகப்பட்டிருப்பாரானால், தன்னிடம் சொப்பனங்களின் அர்த்தங்களைப் பற்றி விசாரித்திட்ட இராஜ வட்டாரத்துக் கைதிகள் இருவரிடமும், அவர்கள் சொப்பனங்களில் நம்பிக்கை வைக்கக்கூடாது என்றும், தான் (ஒரு காலத்தில்) அதிகாரமும், செல்வாக்கும் அடையப்போவதாகச் சொப்பனம் கண்டிருக்க, (இப்பொழுதோ) அவைகளுக்குப் பதிலாக தான் கீழ் நிலையையும், அடிமைத்தனத்தையும் மற்றும் சிறையில் கைதியாக்கப்பட்ட நிலையையும் அடைந்துள்ளதை எடுத்துக்கூறி, தான் அடைந்துள்ள கசப்பான ஏமாற்றத்தைக்கூறி, சொப்பனங்கள் நம்பத் தகுந்தவைகளல்ல என்றும் கூறியிருந்திருப்பார். ஆனால் யோசேப்பு இன்னமும் தன்னுடைய சொப்பனங்களில் நம்பிக்கைக் கொண்டிருந்தார் மற்றும் ஏதோ ஒரு விதத்தில் விடுதலையை எதிர்பார்த்தவராகவும் மற்றும் கர்த்தர் தன்னுடைய காரியங்களை நன்மைக்கு ஏதுவாய் மாற்றுவார் என்று நம்பினவராகவும் இருந்தார்.

நமது பரம பிதாவாகிய சர்வ வல்லமையுள்ள இராஜா மீதான இத்தகைய நம்பிக்கையும், விசுவாசமும், ஆபிரகாமுக்கான வாக்குத்தத்தத்தினுடைய ஆவிக்குரிய சுதந்தரவாளிகளாகிய நம்மில் காணப்படுவது, இன்னும் அதிகம் பொருத்தமானதாய் இருக்கும், ஏனெனில் மாம்சீக ஆசீர்வாதங்களுக்கு மாத்திரமே சுதந்தரவாளிகளாகக் காணப்பட்ட யோசேப்பு மற்றும் நம்முடைய முற்பிதாக்களைக் காட்டிலும், நாம் அனைத்து விதங்களிலும் அதிகம் அனுகூலம் உடையவர்களாய் இருக்கின்றோம். கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்தவர்கள், எவ்வளவுதான் உயர்வான நிலைகளில் காணப்பட்டவர்களாய் இருப்பினும், அவர்கள் அதிகபட்சமாக, “பணிவிடை வீட்டாரின் அங்கத்தினர்களாகவே” காணப்பட்டனர்; ஆனால் இந்தச் சுவிசேஷ யுகத்திலுள்ள நாமோ, குமாரர்களென, அதாவது நமது கர்த்தர் இயேசுவைத் தலையாகப் பெற்றிருக்கும் “புத்திரர் வீட்டாரின்” அங்கத்தினர்களெனத் தேவனால் இலவசமாய் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டிருக்கின்றோம். புத்திரர்களானவர்கள் பரிசுத்த ஆவியின் வாயிலாக, தெய்வீகத் திட்டம் பற்றின ஆழமான மற்றும் தெளிவான அறிவை மாத்திரம் அருளப்பெற்றிராமல், அனைத்து விதங்களிலும் பணிவிடை வீட்டார் மற்றும் பொதுவான உலக ஜனங்களைக் காட்டிலும் அதிகம் அனுகூலமும் உடையவர்களாக இருக்கின்றனர். எனினும் யோசேப்பு மற்றும் எகிப்தினுடைய நிழலான சிங்காசனம் தொடர்புடைய விஷயத்தில் காணப்பட்டது போலவே, நம் விஷயத்திலும் நாம் தேவனால் தயவு பெற்றுக்கொள்வதும், இராஜ்யத்தில் உடன் சுதந்தரர்களாகுவதற்கு அழைக்கப்படுவதும் மாத்திரம் போதுமானதாய் இராமல், “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடையத்தக்கதாக” அவருடைய அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளின் கீழ் நாம் எளிதில் இணங்குபவர்களாகவும், கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுப்பவர்களாகவும் இருப்பதும் அவசியமானதாகும். விசேஷமாய் நம்முடைய விசுவாசமானது பலமுடையதாய்க் காணப்படுவதும், இருளிலிருந்து, அவரது ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாகக் காணப்படத்தக்கதாக, நம்முடைய விசுவாசமானது பலமடைவது வரையிலும் பரீட்சிக்கப்படுவதும் அவசியமாய் உள்ளது.

தான் இறுதியில் விடுவிக்கப்படுவார் என்பதிலும், தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் என்பதிலும், யோசேப்பு கொண்டிருந்த நம்பிக்கையானது, தன்னுடைய சொந்த விடுதலையை வாய்க்கப்பண்ணுவதற்குரிய அனைத்துக் காரியங்களையும் அவர் சரியான விதத்தில் செய்யும் விஷயத்தில் அவரைத் தடைப்பண்ணிடவில்லை. சிறைப்படுத்தப்பட்டிருந்த பானபாத்திரக்காரனை அன்போடு நடத்தி, அவரது சொப்பனத்தை அவருக்கு விளக்கி, அவர் அடையப்போவதாகச் சொப்பனத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்ட நற்பேற்றினிமித்தம், அவரோடுகூடக் களிக்கூர்ந்த பிற்பாடு, அவர் மீண்டுமாக இராஜாவின் தயவைப் பெற்றுக்கொள்ளும்போது, அவருக்கு ஆறுதலாய் இருந்த யோசேப்பாகிய தான், இன்னமும் சிறையிலேயே காணப்படுகின்றதை தயவாய் நினைவுகூர்ந்து, கூடுமானால் தனக்காக இராஜாவிடம் மன்னிப்புப் பெற்றுத்தரும்படிக்கு யோசேப்பு எவ்வாறு பரிந்து மன்றாடிக் கேட்டுக் கொண்டார் என்பதை நாம் கவனிக்கின்றோம். யோசேப்பு இப்படியாக தன்னுடைய விடுதலைக்காக, நியாயமான நடவடிக்கைகள்/முயற்சிகள் எடுத்தது சரியானதே மற்றும் இன்னும் அவர் தொடர்ந்து சிறையிலேயே இரண்டு வருடங்களாகக் காணப்பட்ட காரியமானது, அவரது விசுவாசத்திற்கும், கர்த்தர் மீதான அவரது நம்பிக்கைக்கும் பரீட்சைகளாகக் காணப்பட்டது என்பதில் ஐயமில்லை; ஏனெனில் பானபாத்திரக்காரன் தனக்கு நல்ல காலம் திரும்பி வந்தபோது, யோசேப்பை முற்றிலும் மறந்துபோனதாகத் தெரிகின்றது. எனினும் இவைகள் அனைத்திலும், நம்மால் இப்பொழுது பார்க்க முடிகின்றதுபோல, கர்த்தர் யோசேப்பைப் பராமரித்துக்கொண்டே இருந்தார். நீதியினிமித்தம் துன்பப்படுவதற்கும், கர்த்தரிடத்திலான விசுவாசத்திற்கும், பொறுமையுடன் சகித்தலுக்குமான படிப்பினைகளை யோசேப்பு கற்றுக்கொண்டிருந்தார். ஒருவேளை யோசேப்பு, இராஜ கட்டளையினால் விடுவிக்கப்பெற்று, விடுதலைப் பண்ணப்பட்டாரானால், அவர் பாலஸ்தீனியாவில் தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய சகோதரர்களையும் தேடும்படிக்குத் திரும்பிப்போயிருந்திருப்பார்; அல்லது எகிப்தில் ஏதோ ஒரு தொழிலில் மூழ்கிப்போயிருந்திருப்பார்; ஆனால் அவசியமானப் பாடங்களைக் கற்கத்தக்கதாக, யோசேப்பு முப்பது வயது வரையிலும் தெய்வீக வழிநடத்துதலினால், சிறையில் பாதுகாப்பாய்க் காக்கப்பட்டார்; மேலும் (யோசேப்புக்கு முப்பது வயது வரும்போது) இத்தருணத்தில்தான இராஜாவாகிய பார்வோன் அவரது மனதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தின இரண்டு குறிப்பிடத்தக்கதான சொப்பனங்களைக் கண்டார்; மேலும் இந்தச் சொப்பனங்களைக் குறித்துப் பார்வோன், எகிப்தின் ஞானிகளுடன் கலந்து ஆலோசித்தபோது, அவர்களிடமிருந்து அவரால் திருப்திகரமான பதிலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போதுதான் பானபாத்திரக்காரன், சிறையில் தான் காணப்படுகையில் கண்ட சொப்பனத்தையும், அதற்கு எப்படி ஓர் அருமையான வாலிபன் மிகவும் துல்லியமாக விளக்கம் கொடுத்தான் என்பதையும், அந்த வாலிபன் பாராட்டின இரக்கத்தை, தான் எத்தனை சீக்கிரமாய் மறந்து போயுள்ளார் என்பதையும் நினைவுகூர்ந்தார். இப்பொழுது இராஜாவுக்கும், சிறையில் கைதியாக இருக்கும், தன்னுடைய நண்பனுக்கும் உதவி புரிவதற்குரிய வாய்ப்புப் பானபாத்திரக்காரனுக்கு வந்தது; ஆகவே யோசேப்பை மிகவும் பாராட்டி, பானபாத்திரக்காரன் பார்வோனிடத்தில் தெரிவித்தார். மற்றவர்களுக்கு நாம் பாராட்டும் இரக்கமானது, உடனடியாக மறக்கப்பட்டுப்போனதுபோல் காணப்பட்டாலுங்கூட, அதற்குரிய ஆசீர்வாதமானது, பிற்காலங்களில் நம் தலைகள் மீதே கடந்து வருகின்றதாய் இருக்கும் மற்றும் கர்த்தரினால் அது ஆசீர்வாதத்திற்கான கால்வாயாகப் பயன்படுத்தப்படும் என்ற உண்மையானது இச்சம்பவத்தில் விளக்கப்படுவதை நாம் பார்க்கின்றோம்.

பார்வோன் கைதியை அழைத்து அனுப்பினார் மற்றும் தனது சொப்பனங்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்தினிமித்தம் முழுவதும் திருப்தியடைந்தபடியாலும் பானபாத்திரக்காரனுடைய சாட்சியும் கூடக் காணப்பட்டதினாலும், விளக்கங்கள் உண்மையாக இருக்குமோ என்று பார்வோனினால் சந்தேகப்பட முடியவில்லை மற்றும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லும் திறன் யோசேப்பிடம் இருந்ததற்கான காரணம், தேவன் யோசேப்போடு காணப்படுவதாலேயாகும் என்றும், தேவன் யோசேப்பைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்றும், இப்படியான சொப்பனங்களைக் கொடுத்தவரும், சொப்பனங்களுக்கான அர்த்தத்தை இந்த வாலிபனுக்குக் கொடுத்தவருமான தேவன், வரும் என்று அறிவித்துள்ள பஞ்சத்தின் கடினத்தை விலக்கிடுவதற்கென எடுக்க வேண்டிய முன் எச்சரிப்புகள் தொடர்புடைய விஷயத்தில் தேவன் தம்முடைய ஊழியக்காரனைப் பயன்படுத்துவதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் சித்தமாய் இருப்பார் என்றும் பார்வோன் முடிவுக்கு வந்தார். பார்வோன் தன் விருப்பப்படி ஆளுகைச் செய்யும் வல்லமையுடையவராகக் காணப்பட்டார் மற்றும் தன்னுடைய இராஜ்யத்தில் எவரை வேண்டுமானாலும் அதிகாரத்திற்கு உயர்த்துவதற்குரிய சுயாதீனம் உடையவராய் இருந்தார்; மேலும் சர்வ வல்லமையுள்ள தேவனால் நம்பப்பட்டவரும் மற்றும் அவரால் நண்பனாக்கப்பட்டவருமான யோசேப்பைக் காட்டிலும், அதாவது தேவனால் இரகசியங்கள் தெரிவிக்கப்பட்டவரும் மற்றும் தெரிவிப்பதற்குக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டவருமான யோசேப்பைக் காட்டிலும், வேறெவர் மேலும் நம்பிக்கை வைத்திட முடியாது என்று பார்வோன் ஞானமாய் முடிவெடுத்தார். இங்கும் கர்த்தருடைய ஜனங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் ஒரு படிப்பினை உள்ளது, அதென்னவெனில் கர்த்தருடைய ஜனங்கள் பரிபூரணமானவர்கள் இல்லை என்றாலும், நெருக்கடியான (emergency) வேளைகளில், மற்றவர்கள் மீது நம்பிக்கையை வைப்பதைக் காட்டிலும், யார்யார் மீது கர்த்தர் [R2888 : page 316] நம்பிக்கை வைத்திருக்கின்றாரோ, அப்படிப்பட்டவர்கள் மீது நம்பிக்கை வைப்பது பாதுகாப்பானதாய் இருக்கும் என்பதேயாகும்.

யோசேப்பு உடனடியாக எகிப்தின் பிரதம மந்திரி ஆக்கப்பட்டார். யோசேப்பு பார்வோனின் பிரதிநிதியாகக் காணப்பட்டார் மற்றும் இவர் ரஷ்யாவின் சர்வாதிகாரி மற்றும் துருக்கி நாட்டின் சுல்தான் (அ) பிரதிநிதி தவிர, மற்றபடியுள்ள ஐரோப்பிய நாட்டின் பிரதம மந்திரி அல்லது சக்கரவர்த்தியைக் காட்டிலும் மாபெரும் அதிகாரம் உடையவராய்க் காணப்பட்டார். சிறையிலிருந்து, சிங்காசனத்திற்கு அடுத்த நிலைக்கு உயர்த்தப்படுவதற்குரிய சாத்தியக்கூறு குறித்துச் சிலர் சந்தேகிக்கிறவர்களாகக் காணப்படுகின்றனர்; இதற்குக் காரணம் இவர்கள் கிழக்குத் திசை நாடுகளின் பழக்க வழக்கத்தை அறியாமல் காணப்படுவதே ஆகும். துருக்கி நாட்டின் சுல்தானைக் குறித்து ஒரு கதைச் சொல்லப்படுவதுண்டு. இந்தச் சுல்தானுக்கு ஒருநாள் கடுமையான பல்வலி ஏற்பட, அதுவும் இவருடைய வழக்கமான பல் மருத்துவர் ஊரில் இல்லாதபோது, ஏதேனும் ஒரு பல் மருத்துவரைக் கண்டுபிடித்து, வரவழைத்து வரும்படிக்கு, இவருடைய வேலைக்காரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். வேலைக்காரர்கள் மிகவும் தரித்திர நிலையில் காணப்பட்ட ஒரு பல் மருத்துவரைக் கண்டுபிடித்து, அவர் சுல்தானின் முன் கொண்டுவரப்படத்தக்கதாக, அவருக்குத் தகுதியான வஸ்திரங்களை அணிவித்து அழைத்து வந்தார்கள்; பல் மருத்துவா தனது வேலையை முடித்த பிற்பாடு, அவருக்கு சுல்தான் பட்டப் பெயரையும், பாஷாவுக்குரிய (துருக்கியில் உயர்ந்த பதவியிலுள்ள அதிகாரிக்குரிய) ஊதியத்தையும், ஒரு பட்டணத்தையும், நாட்டில் குடியிருப்பதற்கான இடத்தையும், செல்வங்கள் முதலியவைகளையும் கொடுத்தார். இதைக் காட்டிலும் மிதமிஞ்சிய நிலையிலொன்றும் யோசேப்பினுடைய அனுபவம் காணப்படவில்லை. பதிவுகள் தெரிவிக்கவில்லை என்றாலுங்கூட யோசேப்புக்குத் தெய்வீகக் கிருபை இருக்கின்றது என்பதற்கான சாட்சியங்களைத் தவிர, அவர் போத்திபாரின் வேலைக்காரனாக முன்பு இருந்தபோது கொண்டிருந்த நற்பண்புகள் குறித்தும், சிறையில் யோசேப்பு நம்பிக்கைக்குரிய விசாரணைக்காரனாக இருந்தது குறித்தும் பார்வோனுக்கு விவரங்கள் சில தெரிவிக்கப்பட்டதினிமித்தமும், யோசேப்பு நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் பாத்திரமான ஒரு மரியாதைக்குரிய மனுஷன் என்று பார்வோனுடைய மனமானது, திருப்தியடைந்தது என்பதில் ஐயமில்லை. இப்படியாகவே நம்முடைய காரியங்கள் அனைத்திலும்கூட, நிலைமை மாறுவதற்குரிய காலம் ஒன்று உண்டு; நாம் தவறாய்ப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் மற்றும் தவறாய்த் திரித்துக் காண்பிக்கப்பட்டிருந்தால், “உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்” என்று கர்த்தர் சொல்லியிருந்த [R2888 : page 317] பிரகாரமாகவே, இறுதியில் உண்மை வெளிக்கொண்டு வரப்படும் (சங்கீதம் 37:6). நாம் கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் மற்றும் நாம் அவருக்கு உண்மையாய்க் காணப்படும் பட்சத்தில், சகலமும் நம்முடைய நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்று வாக்களித்துள்ளவரின் வல்லமையையும், அன்பையும், ஞானத்தையும் குறித்துக் கேள்வி எழுப்பாமல், இப்படியான (தவறாய் நாம் புரிந்துகொள்ளப்படும்) அனுபவங்களை அவர், நமக்கு நியமித்ததான ஏற்பாடுகளெனப் பொறுமையுடன் ஏற்றுக் கொண்டிட வேண்டும்.

பார்வோனுடைய மோதிரம் என்பது முத்திரை மோதிரமாகும். முற்காலங்களில் இராஜ கட்டளைகளானது, நம் காலத்தில் செய்யப்படுவது போன்று கையெழுத்திட்டு, முத்திரையிடப்படாமல், மாறாக முத்திரை மாத்திரமே இடப்படுகின்றது; இராஜா தனிப்பட்ட அடையாள சின்னமுடைய முத்திரையை வைத்திருப்பார் மற்றும் இந்த முத்திரையிடப்பட்ட கட்டளையானது எங்கெல்லாம் அனுப்பப்படுகின்றதோ, அங்கெல்லாம் அது இராஜாவிடமிருந்து வந்தது என அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றது; இதனை போலியாய்ச் செய்வது என்பது பெருங்குற்றமாகவும், மரணத்தண்டனைக்கு ஏதுவானதாகவும் இருந்தது. இப்படியான முத்திரையே யோசேப்புக்குக் கொடுக்கப்பட்டது மற்றும் இந்த முத்திரையினுடைய அதிகாரத்தின் மூலமாக, ஏழு வருட பரிபூரண விளைவின் காலத்தில் விளையும் அதிகப்படியான விளைச்சல்களைச் சேகரிப்பதும், அதைச் சேர்த்து வைப்பதற்கெனக் களஞ்சியங்களைக் கட்டுவதும் தொடர்புடைய விஷயத்தில் யோசேப்பினால் கட்டளைகள் பிறப்பிக்க முடியும்.

பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் உயர்த்தப்பட்ட யோசேப்பிற்கான கனமும், தனிச் சிறப்புகளும் நமது கர்த்தர் இயேசுவினுடைய மகிமையான உயர்த்தப்படுதலைச் சித்தரிக்கின்றதாய் இருக்கின்றது (இந்த மகிமையான உயர்த்தப்படுதலில், அவரது சரீரமாகிய சபை சீக்கிரத்தில் பங்கடையப்போகிறார்கள்). நமது கர்த்தர் சோதனைக்குட்படுத்தப்பட்டார்; அவர் உண்மையுள்ளவராக இருந்தும், அவர் மரணம் எனும் மாபெரும் சிறைச்சாலைக்குள் கடந்து போனார்; மூன்றாம் நாளிலே அவர் விடுவிக்கப்பட்டு, அண்டசராசரத்தினுடைய சிங்காசனத்தில், தேவனுக்கு அடுத்த ஸ்தானத்தில் வல்லமைக்கும், மகா மகிமைக்கும் உயர்த்தப்பட்டார். தெய்வீக முத்திரை மோதிரமானது அவருக்குக் கொடுக்கப்பட்டு, “பிதாவை கனம் பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம் பண்ண வேண்டும்” என்றும், “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது” என்றும், அவருடைய கட்டளையின் பேரிலேயே அனைத்தும் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது (யோவான் 5:23; மத்தேயு 28:18 (refs2)). கிறிஸ்துவின் தெரிந்துகொள்ளப்பட்ட சரீரத்தினுடைய உண்மையுள்ள அங்கத்தினர்களாகிய சபை, அதாவது ஜெயங்கொள்பவர்களுங்கூடப் பல்வேறு விதங்களில் பரீட்சிக்கப்பட வேண்டும் மற்றும் நீதியினிமித்தமாக தற்காலத்தில் பாடுபட வேண்டும், தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட வேண்டும் மற்றும் தவறாய்த் திரித்துக் காண்பிக்கப்பட வேண்டும். இவர்களும் மரணம் எனும் சிறைச்சாலைக்குள் கடந்து செல்ல வேண்டும் மற்றும் மூன்று மகா நாட்களின் (ஆயிர வருட நாட்களின்) பல பாகங்களில் அங்குக் காணப்பட வேண்டும்; ஐந்தாவது ஆயிர வருடத்தின் பகுதிக் கால அளவிலும், ஆறாவது ஆயிர வருடம் முழுவதிலும் மற்றும் ஏழாவது ஆயிர வருடக் காலத்தின் ஆரம்பப் பகுதி வரையிலும் (அல்லது இவர்கள் தங்கள் கர்த்தரும், தலையுமான கிறிஸ்துவோடுகூட இராஜ்யத்தின் மகிமையான காரியங்களில் உடன் சுதந்திரர்களாகும்படிக்கு இவர்களது உயிர்த்தெழுதலுக்குரிய ஏற்றக் காலமாகிய மூன்றாம் ஆயிரவருட நாள் வருவது வரையிலும்) இவர்கள் மரணம் எனும் சிறைச்சாலையில் காணப்பட வேண்டும். இவைகள் அனைத்தும் யோசேப்பு சிறைச்சாலையில் செலவழித்ததும், பின்னர் உயர்த்தப்பட்டதுமான காரியங்கள் நிகழ்ந்த மூன்று வருடங்களின் பாகங்களில் அருமையாய்ச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

யோசேப்பிற்கு வழங்கப்பட்ட புதிய எகிப்திய பெயரின் அர்த்தத்தை, கேனான் கூக்கீ அவர்கள், “ஜீவ அப்பம்” என்று வழங்குகின்றார். பரிபூரண விளைச்சலுள்ள ஏழு வருடங்களின் கோதுமையானது, ஏழு வருட பஞ்ச காலத்தின்போது ஜனங்கள் அனைவரின் தேவைகளுக்கு ஏற்ப வழங்கப்படுவதற்குப் போதுமானதாய்க் காணப்படத்தக்கதாக, கோதுமையை மாபெரும் அளவில் சேகரிப்பதாகிய யோசேப்பினால் நிறைவேற்றப்பட்டதான மாபெரும் வேலையைக் கண்ணோக்கிப் பார்க்கையில், இப்புதுப்பெயர் அவருக்குப் பொருத்தமானதாகவே இருக்கின்றது. இப்படியாக நாம் பார்க்கையில், நாம் மீண்டுமாக, “ஜீவ அப்பம்” என்று தம்மைக் குறித்துக் கூறிட்ட கிறிஸ்துவைப்பற்றி நினைப்பூட்டப்படுகின்றோம். கிறிஸ்துவில் நிறைவேற்றப்பட்ட வேலையின் காரணமாகவே எகிப்தியர்களால் அடையாளப்படுத்தப்படும் மனுக்குலத்திற்கு ஜீவ அப்பம் அருளப்பட்டது மற்றும் யோசேப்பினுடைய சகோதரர்கள் மற்றும் யாக்கோபு அடையாளப்படுத்தும் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கும், கிறிஸ்து மூலம் ஜீவ அப்பம் வருகின்றதாய் இருக்கின்றது என்பதையும் நாம் நினைப்பூட்டப்படுகின்றோம். யோசேப்பு மற்றும் அவரது வேலையின் மூலமாக அல்லாமல், மற்றபடி சகல ஜனங்களும் ஜீவன் அடைய முடியாதது போலவும் மற்றும் யோசேப்பு பார்வோனின் பிரதிநிதியாக இருந்து, தன்னுடைய வேலையைச் செய்தது போலவும், நிஜத்திலுங்கூட நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலும் மற்றும் அவர் மூலமாயும் அல்லாமல் மற்றபடி உலகத்தில் எவராலும் ஜீவன் அடைய முடியாது மற்றும் இந்த வேலையானது அண்டசராசரத்தின் மேலான இராஜாவாகிய நமது பரம பிதாவின் நாமத்தில், பிதாவின் பிரதிநிதியான கிறிஸ்துவினால் நிறைவேற்றப்படும்.

நியாயமான விளக்கங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும், குற்றம் கண்டுபிடிப்பதற்கும் சிலர் எப்போதும் ஆயத்தமாய்க் காணப்படுகின்றனர்; மேலும் இப்படிப்பட்டவர்கள் பரிபூரணமான விளைச்சல் காணப்படும் வருஷங்களுடைய அறுவடையில், யோசேப்பு ஐந்தில் ஒரு பாகம் வாங்கிக்கொண்டதைக் குறித்தும், அதைப் பின்னாட்களில் பார்வோனுடைய அதிகாரத்தையும், பார்வோன் தன் எல்லைக்குட்பட்ட ஜனங்கள் அனைவரின் மீதான தனது கட்டுப்பாட்டையும் பெலப்படுத்துவதற்குப் பயன்படுத்தினது குறித்தும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். விளைச்சலில் ஐந்தில் ஒரு பாகம் கேட்கப்படுவது என்பது நியாயமற்ற வரி என்று கருதப்பட முடியாது என்றும், இன்றும்கூட எகிப்தில் இதுவே வாடகையாக வசூலிக்கப்படுவது வழக்கமாக இருக்கின்றது என்றும், இதைக் காட்டிலும் அதிகமாகக்கூட நம்முடைய நாடுகளிலும், நாகரிகமான மற்ற நாடுகளிலும் அடிக்கடி வசூலிக்கப்படுகின்றது என்றும் நாம் பதில் கூறுகின்றோம். ஆனால் ஜனங்களிடமிருந்து வரியாக ஐந்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகின்றதா என்பதை நாம் அறியோம். அதிகமான விளைச்சல் காணப்படும் காலத்தில் கோதுமையின் விலை மிகக்குறைவாகக் காணப்படுகையில், கோதுமை சேகரிப்பதற்குரிய செலவுகளுக்குப் பார்வோனின் பணப்பையிலிருந்தும், வங்கியிலிருந்தும் பணம் செலவழிக்கப்பட்டதா என்பதையும் நாம் அறியோம். இதற்கான பதிவுகள் இல்லையென்றாலும், பின் குறிப்பிட்டுள்ளபடி பார்வோனின் பணப்பையிலிருந்து செலவழிக்கப்படுவதற்கான வாய்ப்புண்டு என்று நாம் எண்ணுகின்றோம்; மேலும் வசூலிக்கப்பட்ட ஐந்தில் ஒரு பாகமானது, அரியணையின் அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது என்றும், இப்படிச் செய்வது என்பது சகல ஜனநாயகக் கருத்துக்களுக்கும் முரணானது என்றுமுள்ள விஷயத்தைப் பொறுத்தமட்டில், குடியரசு/ஜனநாயக அரசாங்கமே விழுந்துபோன மனுக்குலத்திற்கு அனைத்து விதங்களிலும் சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டதாக உள்ளது என்பதைத் தவிர, வேறெதையும் நாம் சொல்வதற்கில்லை. சமுதாய ரீதியிலும், அரசியல் ரீதியிலும், ஒழுக்க ரீதியிலுமான தற்போதைய ஒழுக்கக்கேடுகளுக்கான தீர்வாக, தேவன் ஜனநாயக வடிவில் ஆயிர வருட அரசாட்சியை அறிமுகப்படுத்துவதற்குச் சித்தமாய்க் காணப்படவில்லை; மாறாக முடியரசு வடிவிலேயே ஆயிர வருட அரசாட்சியை அறிமுகப்படுத்திட சித்தமாய் இருக்கின்றார்; அது முற்றும் முழுமையாக முடி மன்னருக்குரிய ஆட்சியாக இருக்கும், அதில் உலகத்தை மீட்டுக்கொண்டவரான அவரது குமாரன் உலகத்தை ஆசீர்வதிப்பதற்கென எதேச்சதிகாரம் (தன் விருப்பம்போல் ஒருவர் ஆளுகைப் புரியும் அதிகாரத்தை) செலுத்தி அரசாள்பவராகக் காணப்படுவார்; குமாரன் தீமையை வெல்வதற்கும், மனுக்குலம் முழுவதையும் நீதியின் கொள்கைகளைப் பற்றின முழுமையான புரிந்துகொள்ளுதலுக்குள் கொண்டுவருவதற்கும் மற்றும் நிழலில் எகிப்தின் ஜனங்கள் பார்வோனின் நிரந்தரமான ஊழியர்களானதுபோல, மனுக்குலமும் மாபெரும் மேலான இராஜாவின் பிரஜைகளென என்றென்றும் காணப்படத்தக்கதாக, அவர்கள் விரும்புவதற்கேற்ப, அவர்களைத் தேவனுக்கு முழு இசைவாய்க் கொண்டுவருவதற்கும் எதேச்சதிகாரம் செலுத்தி அரசாள்பவராகக் காணப்படுவார்.

(பட்சமாய் இருத்தல் என்ற அர்த்தமுடைய) ஆஸ்நாத்தை யோசேப்பிற்கு மனைவியாகப் பார்வோன் கொடுத்து, எகிப்தை ஆசீர்வதிக்கும் வேலையில், யோசேப்போடு துணைவியாகவும், உடன் வேலையாளாகவும் இருந்து, கனத்திலும், மேன்மையிலும் யோசேப்போடு ஆஸ்நாத் பங்காளியானது போல, பிதாவாகிய தேவனும் உயர்த்தப்பட்ட தம்முடைய குமாரனுக்கு, நமது கர்த்தருக்கு ஒரு மணவாட்டியை அருள நோக்கம் கொண்டிருக்கின்றார் மற்றும் இந்த மணவாட்டியும் விரும்பப்பட்டவளாக இருப்பாள். இவள் நிச்சயம் பண்ணப்படுவதற்கும், திருமணத்திற்காக ஆயத்தம் பண்ணப்படுவதற்கும் இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் தேவையாய் இருந்தது மற்றும் இப்பொழுதோ இவள் அவர் அங்கீகரிக்கும் குணலட்சணங்களினால் சித்திரத் தையலிட்ட இவளது கர்த்தரின் மகிமையான வஸ்திரத்தைத் தரித்து, அழகுப்படுத்தப்பட்டவளென, மணவாட்டியாக, ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாக இராஜாவின் அருகே கொண்டுவரப்படுவதற்குரிய காலம் சமீபமாய் உள்ளது (சங்கீதம் 45:13,14).

யோசேப்பிற்கு வந்த வளமையினிமித்தம், அவர் தலைக்கனம் அடையவில்லை; இந்த வளமையைப் பெற்றுக்கொள்வதற்கு அவர் பாத்திரமானவராய்க் காணப்பட்டதை நிரூபித்தவராய் இருந்தார்; வளமையை ஞானமாய் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறியத்தக்கதாக, யோசேப்பு தன்னுடைய முந்தைய அனுபவங்களினால் பயனடைந்தவராய் இருந்தார். யோசேப்பு தன்னுடைய வேலையில் சோம்பலாய்க் காணப்படாமல், மாறாக வேலையிலே அனலாயிருந்தார்; தனக்கு முன்பு கர்த்தர் வழியைத் திறந்து வைத்துள்ளதைக் கண்ட யோசேப்பு, தன்னுடைய வேலையை நிறைவேற்றிடுவதற்கு உடனடியாக முயற்சிகளை எடுத்ததாக நாம் பார்க்கின்றோம். எவ்விடம் களஞ்சியங்களைக் கட்டுவதற்கானச் சரியான இடமாக இருக்கும் எனத் தீர்மானிப்பதற்கு, எகிப்து எங்கும் போய்ப் பார்ப்பதே அவரது முதல் கட்ட நடவடிக்கையாக இருந்தது; கர்த்தருடைய ஆசீர்வாதமும் அவரோடு தொடர்ந்து காணப்பட்டு, அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையில், [R2888 : page 318] அவரைத் தழைத்தோங்கச் செய்தது. இப்படியாகவே நம் விஷயத்திலும்கூடக் காணப்பட வேண்டும்; கர்த்தருக்கான ஊழியம் விஷயத்தில் எவ்விதமான பகுதிகளிலும், கர்த்தர் வாய்ப்பாகிய கதவை நமக்காக திறந்திடும்போது, நாம் அவருக்கான வைராக்கியத்துடனும், நம்மை அழைத்ததற்கான காரணம் குறித்த வைராக்கியத்துடனும், நாம் உடனடியாகப் பிரவேசித்திட வேண்டும். இப்படியாக நாம் காணப்படுவது என்பது, கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்குரிய ஒரு நிபந்தனையாகும். ஒருவேளை நாம் சோம்பலாகவோ, வாய்ப்புகளைக் கவனிப்பதில் கவனமற்றவர்களாகவோ காணப்படுவோமானால், வாய்ப்புகளானது நம்மிடமிருந்து மாற்றப்பட்டு, மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் என்பதில் ஐயமில்லை, ஏனெனில் கர்த்தர் தம்முடைய நோக்கத்திற்காக ஊழியம்புரியும்படிக்கு, இன்னொருவரை எழுப்புவதற்கு வல்லமையுள்ளவராக இருக்கின்றார் (அதாவது நம்மைக் கொண்டு ஊழியம் செய்யும்படிக்கு, நம்முடைய சுயமாய்ச் சிந்தித்துச் செயல்படும் நிலையை குறுக்கிடாமல், அவர் இன்னொருவரை எழுப்புவதற்கு வல்லமையுள்ளவராக இருக்கின்றார்). தேவனோடுகூட உடன் வேலையாட்களாக இருக்கும் விஷயத்திலும், அதிலும் விசேஷமாக நமது கர்த்தரும், ஆண்டவருமான இயேசு செய்துவருகிறதும் அவரது மணவாட்டிகளென, உடன் சுதந்தரர்களென அழைக்கப்பட்டுள்ள நாம் பங்குகொள்ளும்படிக்கு அழைக்கப்பட்டிருக்கிறதுமான இந்த மாபெரும் வேலை தொடர்புடைய விஷயத்திலும் நாம் எப்படிப்பட்ட ஒரு சிலாக்கியத்தினை அனுபவிக்கின்றோம் என்பதை அதிகமதிகமாய் உணர்ந்து கொள்வோமாக.

தேவனைக் கனப்படுத்துபவர்களை, தேவனும் தமக்குரிய விதத்தில் கனப்படுத்துவார் மற்றும் அவரது விதம்/வழி, சிறந்த வழியென இறுதியில் எப்போதும் கண்டுகொள்ளப்படும். நாம் வாயினால் மாத்திரம் கர்த்தருக்குக் கனத்தைச் செலுத்தாமல், விசேஷமாக ஜீவியத்தின் காரியங்களில், அதாவது குடும்ப/வீட்டுக் கடமைகளில், தொழில் ரீதியான கடமைகளில், சத்தியத்திற்கான ஊழியங்கள் தொடர்புடைய ஜீவியத்தின் காரியங்களில், அவரது புண்ணியங்களை அறிவிக்கின்றவர்களாய் இருக்க வேண்டும்; அனைத்துக் காரியங்களிலும், அவருக்குச் சொந்தமான நம்முடைய சரீரங்களிலும், ஆவியிலும் நாம் தேவனை மகிமைப்படுத்துகின்றவர்களாய் இருக்க வேண்டும். மேலும் இப்படியாகச் செய்பவர்கள் கர்த்தரினால் ஆசீர்வதிக்கப்பட்டு, அவரால் பயன்படுத்தப்படுவார்கள். இங்கு அனுமதிக்கப்படும் சிறிய ஊழியங்கள் உண்மையில் கனம் வாய்ந்தவைகளே; தற்காலத்தின் இந்தச் சிறிய ஊழியங்களுக்கு உண்மையாய் இருப்பவர்கள் இறுதியில் இராஜ்யத்தின் மாபெரும், பிரமாண்டமான ஊழியங்களை ஆசீர்வாதங்களாகவும், பலன்களாகவும் பெற்றுக்கொள்வார்கள்.