யோசேப்பும், அவரது சகோதரர்களும் – சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

யோசேப்பும், அவரது சகோதரர்களும் - சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்

JOSEPH AND HIS BRETHREN - Robert Seklemian

இன்று நாம் யோசேப்பினுடைய கதையைப் பார்க்கப்போகின்றோம்; இச்சம்பவங்கள் ஆதியாகமம் புஸ்தகத்தின் 37, 39 முதல் 50-ஆம் அதிகாரங்களில் காணப்படுகின்றது. உண்மை சம்பவப் பதிவை நாம் வாசித்தோமானால், நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும், ஆகையால் நாம் சம்பவங்களைச் சுருக்கமாய்த் தொகுத்துக் கூறிவிட்டு, பிற்பாடு அதிலிருந்து கற்க வேண்டிய படிப்பினைகளை நாம் பார்க்கலாம்.

ஆபிரகாமின் பேரனும், இஸ்ரயேல் என்று மறு பெயரிடப்பட்டவருமான யாக்கோபு, தனது மனைவியாகிய ராகேலை விசேஷமாய் நேசித்தார். அவளுடைய முதற்பிறப்பு யோசேப்பு ஆவார். ராகேல் மற்றொரு குமாரனாகிய பென்யமீனை பெற்றெடுக்கையில் மரித்துப்போனாள். ராகேலினுடைய மரணத்தினிமித்தம் யாக்கோபு மிகவும் துக்கப்பட்டார் மற்றும் ராகேல் மரித்துப்போய்விட்டதால், யாக்கோபினுடைய அதிகப்படியான அன்பானது, அவளது பிள்ளைகள் மீது, அதிலும் விசேஷமாக முதற்பேறான யோசேப்பின் மீது, பொழியப்பட்டது. யாக்கோபிற்கு யோசேப்பைத் தவிர இன்னும் பதினொரு குமாரர்கள் இருந்தார்கள், ஆனாலும் யோசேப்பே அவரது அபிமான குமாரனாக இருந்தார். யாக்கோபு தனது பாரபட்சத்தினைப் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினார். உதாரணத்திற்கு, பல வருணங்களினாலும், பல துண்டுகளினாலுமான அங்கி ஒன்றை, அதாவது பிரபுக்கள் அணிகின்றது போன்றதான அங்கி ஒன்றை யாக்கோபு, யோசேப்பிற்காகச் செய்வித்தார். இப்படியாக யோசேப்புதான் சுதந்தரவாளி என்பதைக் குடும்பத்தில் மீதமுள்ளோருக்கு யாக்கோபு அநேகமாக சுட்டிக்காண்பித்திருக்க வேண்டும். மற்றப் பத்துச் சகோதரர்களும் பொறாமை அடைந்தனர். “அவர்கள் அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்” என்று வசன பதிவுகள் தெரிவிக்கின்றது.

இருக்கின்ற பிரச்சனைப் போதாதது போன்று யோசேப்பு ஒரு விநோதமான சொப்பனத்தைக் கண்டவராக அதைக் கள்ளங்கபடமில்லாமல், தன்னுடைய சகோதரர்களிடத்தில் கூறினார். சொப்பனத்தில் அவர்கள் வயலில் அரிகளைக் கட்டிக்கொண்டிருக்கையில், யோசேப்பின் அரிக்கட்டானது நிமிர்ந்து நிற்க, அவரை வட்டமாகச் சுற்றி நின்ற அவரது சகோதரர்களுடைய அரிக்கட்டுகளானது, யோசேப்பினுடைய கட்டிற்கு முன்பாக வணங்கினது. இந்தச் சொப்பனத்தின் காரணமாக, “அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்” என்று பதிவுகள் தெரிவிக்கின்றது. பின்னர் மீண்டுமாக யோசேப்பு சொப்பனம் கண்டார். இம்முறை சூரியனும், சந்திரனும் மற்றும் பதினொரு நட்சத்திரங்களும் அவரை வணங்கினது. இச்சொப்பனத்தை யோசேப்பு கூறினபோது, “நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும், உன் தாயாரும் உன்னை வணங்க வருவோமோ? என்று யாக்கோபு அவரைக் கடிந்துகொண்டார்.” இதுவே போதும்; யோசேப்பின் சகோதரர்களுடைய பகைமையானது, பொறாமையினாலான வெஞ்சினமாய் அவதாரமெடுத்தது. இம்மனநிலைமையே, அவர்கள் தங்கள் மந்தைகளுக்காக மேய்க்கும் பகுதிகளைக் கொஞ்சம் தொலைவில் போய்க் கண்டுபிடிப்பதற்கெனத் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறினபோது காணப்பட்டது. அவர்கள் வெளியேறி, நீண்ட நாட்களானபோது, அவர்களது தகப்பன் அவர்களைக் குறித்துக் கவலை அடைந்தவராக, அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்கும் மற்றும் திரும்பி, தனக்குச் செய்தி கொண்டுவருவதற்கும் என்று யோசேப்பை அனுப்பி வைக்கலாமென முடிவெடுத்தார். யோசேப்பையும், அவரது மேம்பட்ட நிலை குறித்ததான சொப்பனத்தையும், அவரது சகோதரர்கள் வயல்வெளியில் முற்றிலும் விவாதம் பண்ணியிருப்பார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. இப்படி ஒருவருக்கொருவர் மனக்குறையினால், குறைகூறினபோது, அவர்களது பகைமையினை இன்னுமாகத் தூண்டினது. இப்படியாக அவர்கள் பொறாமையினாலான வெஞ்சினத்தின் வெறியில் காணப்படுகையில், அவர்கள் கூட்டத்திற்குக் காவலாளாக நியமிக்கப்பட்டிருந்தவர் “இதோ வருகிறான்! சொப்பனக்காரன் வருகிறான்” என்று சத்தமிட்டார்.

அப்பகுதியிலுள்ள தெளிவான காற்றில், நெடுந்தொலைவில் ஒருவர் வருவதைத் தெளிவாய்க் காணமுடியும். வருவது யோசேப்பு என்று அவர்கள் எளிதில் அடையாளங்கண்டுகொண்டார்கள்; பிரகாசமான வருணங்களும், அநேகம் துண்டுகளினால் செய்யப்பட்டதுமான அவருடைய நீள அங்கியை வைத்து, அவரை அடையாளங்கண்டு கொண்டார்கள். ஒவ்வொரு சகோதரனுக்கும் உடனடியாக, “இப்பொழுது யோசேப்பு தங்கள் வல்லமைக்குக் கீழ் இருக்கின்றார்!” என்ற ஒரே எண்ணம் உதித்தது. யோசேப்பைப் பாதுகாத்திடுவதற்கு அவரது தந்தை இங்கில்லை. தங்களால் பகைக்கப்பட்டவர், தங்கள் கரங்களில் இப்பொழுது காணப்படுகின்றார். யோசேப்பு கள்ளங்கபடமில்லாமல் வந்து கொண்டிருக்கையில், அதுவும் அநேகமாக அவர் மகிழ்ச்சியுடன் அவர்களை நோக்கி கைகளை அசைத்துக்காட்டி வந்துகொண்டிருக்கையில், அவர்கள் அவசரமாய்க் கூட்டங்கூடி எடுத்துக்கொண்ட ஒருமித்த தீர்மானம் பின்வருமாறு: “நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றில் அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்” (ஆதியாகமம் 37:20).

“யோசேப்பின் சகோதரருடைய பகைமை”

அவர்களது பகைமை மிக அதிகமாய்க் காணப்பட்டது; அவர்களில் ஒருவர் மாத்திரமே இந்தத் தீர்மானத்திற்கு மாறுபட்ட கருத்துத் தெரிவித்தவராய்க் காணப்பட்டார். இவர் மூத்த குமாரனாகிய ரூபன் ஆவார். இவர் சமாதானமான ஓர் ஆலோசனையைத் தெரிவித்தார்; “யோசேப்பினுடைய இரத்தத்தை நீங்கள் சிந்தலாகாது,” “யோசேப்பை இந்தக் குழிக்குள்ளே உயிரோடே போட்டுவிடுங்கள்” கள்” என்று கூறினார். பிற்பாடுவந்து, யோசேப்பைக் குழியிலிருந்து விடுவிப்பதற்கு ரூபன் சித்தங்கொண்டிருந்ததாகப் பதிவுகளானது தெரிவிக்கின்றது. இவ்வாலோசனைக்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. யோசேப்பு பக்கத்தில் வந்தபோது, அவரை முரட்டுத்தனமாய் அவர்கள் பிடித்திழுத்து அவரது பலவருண அங்கியைக் கழற்றி, அவரை ஆழமான வறண்ட கிணற்றிற்குள் எறிந்தார்கள்; இக்கிணற்றிலிருந்து உதவியில்லாமல் அவரால் வெளியே வரமுடியாது. பிற்பாடு யோசேப்பினுடைய பொறுக்க முடியாத வலியினாலான கதறல்களும், அவரது கெஞ்சுதல்களும் அவர்களது காதுகளில் தொனித்துக்கொண்டிருக்கவே, அவர்கள் உணவு உண்பதற்கென உட்கார்ந்தார்கள். இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களால் உணவு உண்ண முடிகின்றதான காரியமானது, அவர்களது இருதயங்களினுடைய கடினத்தை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

இக்கட்டத்தின்போது, இரக்க பண்பு கொண்டிருந்த ரூபன், அங்கிருப்பதைத் தவிர்த்துக்கொண்டு, மந்தைகளைப் பராமரிக்கும்படி போயிருந்திருக்க வேண்டும், ஏனெனில் எகிப்துக்கு ஒட்டகங்கள் மீது ஏறி போய்க்கொண்டிருக்கும் கூட்டத்தார் வந்தபோது, ரூபன் அங்கிருக்கவில்லை. யூதா ஆலோசனை ஒன்றை முன்வைத்தார். ஏன் இச்சந்தர்ப்பத்தை இலாபம் ஈட்டுவதற்கென்று பயன்படுத்திடக்கூடாது? யோசேப்பு குழியில் காணப்பட்டு மரிப்பதற்குப் பதிலாக, அவரை ஏன் அடிமையாக விற்கக்கூடாது? ஆகவே அவர்கள் குழிக்குள் கயிற்றை இறக்கினார்கள்; தனது சகோதரர்கள் மனமிரங்கி விட்டார்களென எண்ணி, ஆர்வமாய்க் கயிற்றைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்த யோசேப்பு, தான் இருபது வெள்ளிக்காசுகளுக்கு, சில மீதியானிய அடிமை வியாபாரிகளிடத்தில், கட்டப்பட்டு மிருகம் போன்று விற்கப்பட்டதையே கண்டார். அந்நாட்களில் முழு வளர்ச்சியடைந்த அடிமைக்கான விலை முப்பது வெள்ளிக்காசுகளாகும். யோசேப்பு பதினேழு வயதானவராக இருந்தபடியால், அவருக்கான விலை இருபது வெள்ளிக்காசுகளாய் இருந்தது. யோசேப்பு வியாபாரிகளினால் இழுத்துச் செல்லப்படும்போது, அவர் மீண்டும் கதறினார், இரங்கும்படியாக தனது சகோதரர்களிடம் கெஞ்சினார், ஆனால் அவர்கள் வெள்ளிக்காசுகளைப் பங்குபோடுவதில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு முழு வெள்ளிக் காசுகள் கிடைத்திருக்கும். சுற்றித்திரிந்துவிட்டு வந்த ரூபன், யோசேப்பை விடுவிப்பதற்கெனக் கிணற்றண்டைக்கு வந்தார். யோசேப்பு அங்கில்லாததைக் கண்ட இவர், உண்மையாகக் கவலைக்குள்ளானார், ஆனால் இப்பொழுது காலம் கடந்துபோய்விட்டது.

பிற்பாடு அந்தச் சகோதரர்கள் மிகவும் கொடூரமான மற்றும் மனக்கடினமுமான காரியத்தைச் செய்தார்கள். அவர்கள் யோசேப்பினுடைய பலவருண அங்கியை எடுத்து, அதை ஆட்டினுடைய இரத்தத்தில் தோய்த்து, தந்தையினால் மிகவும் நேசிக்கப்பட்ட யோசேப்பின் வருகைக்காகக் கவலையுடன் காத்துக்கொண்டிருந்த தங்கள் பாவப்பட்ட வயதான தந்தையினிடத்திற்கு எடுத்துச் சென்றார்கள். “இதை நாங்கள் கண்டெடுத்தோம்” என்றார்கள் அந்தச் சகோதரர்கள். “இது உம்முடைய குமாரனின் அங்கி அல்லவோ, பாரும்” என்றார்கள். யாக்கோபு தெளிவான முடிவிற்குள் வந்தார். யோசேப்பு ஏதோ ஒரு காட்டுவிலங்கினால் பீறப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். அப்பகுதிகளில் சிங்கங்கள் மற்றும் கரடிகள் காணப்பட்டன. யாக்கோபின் துக்கம் ஆழமானதாய்க் காணப்பட்டது. அவர் ஆறுதலுக்கு இடம் கொடாமல், “நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன்” என்றார்.

யோசேப்பின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றமானது தீர்க்கமானதாயும், முற்றும் முழுமையானதாயும் இருந்தது. பாசத்திற்கும், பிரியத்திற்குமுரிய குமாரனாகவும், தனது தந்தையினுடைய வீட்டில் அன்பாய் வளர்க்கப்பட்டவராகவும் இருந்த யோசேப்பு திடீரென அந்நிய புறஜாதியார் தேசத்தில் அடிமை நிலைமைக்கு மாற்றப்பட்டார். இதனோடுகூட அவர் தனது சொந்த சகோதரர்களுடைய கொலைப்பாதகமான பகைமையையும், மனமார்ந்த கொடூரத்தையும் கண்டதினால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும், வீட்டைப்பற்றிய ஏக்கத்தையும், தனது தகப்பன் அடையப்போகிற துக்கத்தைப் பற்றின எண்ணத்தையும் மற்றும் தனிமையையும் சுமந்தவராகக் காணப்பட்டார்.

“எகிப்தில் யோசேப்பினுடைய அனுபவங்கள்”

எகிப்தை அடைந்தபோது, யோசேப்பு அக்காலக்கட்டத்தினுடைய வழக்கத்தின்படி திறந்த வெளிச்சந்தையில், விற்பனைக்காகப் பார்வைக்குக்கொண்டு நிறுத்தப்பட்டார். அடிமைகளை வாங்குபவர்கள் என்பவர்கள் உயர் ஸ்தானத்தில் இருப்பவர்களாகவும், உயர்க்குடியைச் சார்ந்தவர்களாகவும், இராஜாவினுடைய அதிபதிகளாகவும், ஐசுவரியமான வணிகர்களாகவும், அதிகமான நிலங்களுக்கு உரிமையாளர்களாகவும், காணப்படும் மனுஷர்களாகக் காணப்பட்டனர். அடிமைகளுக்கு அதிக விலைக்கொடுக்க வேண்டியிருந்தது. அடிமைகளின் எஜமான் மற்றவர்களைக் காட்டிலும் யோசேப்பை மிகவும் சிறப்பானவராகக் காட்டிக்கொள்வதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது; அவர் பின்வருமாறு கூறியிருந்திருக்க வேண்டும்:
“மேன்மக்களே, நாங்கள் இன்று மிகவும் சிறப்பானதொன்றை வைத்திருக்கின்றோம். ஓர் எபிரெய இளைஞன்! இம்மனிதன், ஓர் உயர்வான இனத்திலிருந்து வந்தவனாவான். இவன் பலசாலி மாத்திரமல்லாமல், மிகுந்த அறிவாளியுங்கூட. இவனது பெரிய நெற்றியைப் பாருங்கள்! இவனை விலைக்கு வாங்குகிறவருக்கு, இவன் தலைச்சிறந்த மற்றும் நம்பத்தக்க வேலைக்காரனாவான். மேன்மக்களே ஏலத்திற்கு என்ன விலை கூறுகின்றீர்கள்?”

இப்படியாகத்தான் யோசேப்பை, பார்வோனுடைய பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் விலைக்கு வாங்கினார்.

யோசேப்பு தனது தகப்பனிடமிருந்து அநேகம் சிறந்த பண்புகளைச் சுதந்தரித்துக் கொண்டவராகக் காணப்பட்டார். ஆபிரகாமின் தேவனிடத்திலான பலமான விசுவாசமுள்ள சூழ்நிலையில் யோசேப்பு வளர்க்கப்பட்டவர் ஆவார். குழந்தைப் பருவம் முதல், அவர் உயர் கொள்கைகளை மனதில் பதிய வைக்கப் பெற்றவராவார்; அவர் நேர்மையுள்ள, மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட மற்றும் உண்மையுள்ள வாலிபனாவார். இன்றுபோல் அன்றும் முற்றும் முழுமையான உண்மைத்தன்மை என்பது அபூர்வமானதாகவே காணப்பட்டது. இந்த உண்மைத்தன்மையை யோசேப்பிடம் உடனடியாக அடையாளங்கண்டுகொண்ட அவரது எஜமான், அவருக்கு அதிகமதிகமான பொறுப்புகளைக் கொடுத்தார். “யோசேப்பு செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார்” என்பதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதையுங்கூட அவரது எஜமான் கவனித்தார். யோசேப்பு இருபத்திரண்டு வயதான போது, அவர் போத்திபாரின் வீட்டனைத்தின் மீது விசாரணைக்காரனாக்கப்பட்டார். போத்திபாருடைய முழு நம்பிக்கையையும், விசுவாசத்தையும் யோசேப்பு பெற்றுக்கொண்டார். “போத்திபார் தனக்கு உண்டானதை எல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்தார்” என்று நாம் வாசிக்கின்றோம்.

யோசேப்பு இந்தப் பொறுப்பில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகக் காணப்பட்டார், பிற்பாடு பெருந்துன்பம் அவர்மேல் வந்தது. யோசேப்பு திட்டமிடாமலேயே, போத்திபாருடைய மனைவியினால் விரும்பப்பட்டவரானார். யோசேப்பு கொள்கைகளுக்கு உறுதியாய் இருந்த காரியமானது, அவளைச் சினமூட்டியது. அவள் அவர்மேல் பொய்யாய்க் குற்றஞ்சாட்டினாள் மற்றும் அவர் சிறையில் போடப்பட்டார் மற்றும் அவர் மிக வெறுக்கத்தக்க குற்றம் புரிந்தவராகக் காண்பிக்கப்பட்டார்; அதாவது அவர் தனது எஜமானும், உபகாரியுமானவருக்கு நம்பிக்கைத் துரோகம் புரிந்தவராகக் காண்பிக்கப்பட்டார். இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தை ஷேக்ஸ்பியர் பின்வருமாறு விளக்குகின்றார், அதாவது “நரகத்தைவிட, பெண்ணிற்கு ஏற்படும் வெறுப்பினிமித்தமான சீற்றமே பெரிது.” “யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்” என்பதாக நாம் வாசிக்கின்றோம் (ஆதியாகமம் 39:20). யோசேப்பிற்கு எதிரான தனது மனைவியின் குற்றச்சாட்டினைப் போத்திபார் தனது இருதயத்தில் உண்மையில் நம்பவில்லை என்று நான் (ஆசிரியர்) எண்ணுகின்றேன். ஒருவேளை நம்பியிருந்திருப்பாரானால், அவர் நிச்சயமாய் யோசேப்பைக் கொன்றுபோட்டிருப்பார். போத்திபார் இராஜாவின் பிரதானியாகவும், தலையாரிகளுக்கு அதிபதியாகவும் காணப்பட்டவர் ஆவார்; யோசேப்பு வெறும் அடிமை தான். (ஒருவேளை யோசேப்பைக் கொன்றுபோட்டாலும்) யாரும் போத்திபாரைக் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால் கொன்றுபோடுவதற்குப் பதிலாக யோசேப்பை, போத்திபார் சிறையில் அடைத்தார்.

சிறைச்சாலைத் தலைவன், யோசேப்பிடம் நிர்வாகத் திறமைக் காணப்பட்டபடியால் அவரைப் பெற்றுக்கொண்டதில் மகிழ்ச்சிக் கொண்டவராக, யோசேப்பின் தாலந்துகளை வேலையில் பயன்படுத்தினார். யோசேப்பு கைதியாக இருந்தப்போதிலும் அவர் கொஞ்ச காலத்திற்குள்ளாகவே சிறைச்சாலையின் காரியங்கள் மீதான முழுப்பொறுப்பையும் பெற்றுக் கொண்டவரானார். மீண்டுமாக, “கர்த்தர் யோசேப்போடே இருந்தபடியால், அவர் எதைச் செய்தாரோ, அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினார்” என்பதாக நாம் வாசிக்கின்றோம்.

அது இராஜாவினுடைய சிறைச்சாலையாக இருந்தபடியால், அங்கிருந்த கைதிகள் அனைவரும் குற்றவாளிகளாக இருக்கவில்லை. சில சமயம் அங்குக் காணப்பட்ட கைதிகள் அரசியல் கைதிகளாக அல்லது இராஜாவினுடைய கோபத்திற்குத் தற்காலிகமாக ஆளானவர்களாக மாத்திரம் காணப்பட்டனர். ஒருநாள் பார்வோன் தனது பிரதானிகளில் இரண்டு பேர்மேல் கோபம் அடைந்தார்; இவர்களில் ஒருவர் பானபாத்திரக்காரரின் தலைவனாகவும், மற்றொருவர் சுயம்பாகிகளின் தலைவனாகவும் காணப்பட்டனர். பானபாத்திரக்காரரின் தலைவன் என்பவன் பார்வோனின் வீட்டாரிலேயே உயர்ந்த பிரதானி ஆவார், அதாவது இராஜ காரியதரிசி/செயலாளர் போன்றவர் ஆவார். சுயம்பாகிகளின் தலைவன் என்பவன் சமையல் சார்ந்த விஷயங்களினுடைய நிர்வாகியாகவும், இராஜ குடும்பம் மற்றும் சமையலறை மற்றும் உணவுகள் சார்ந்த விஷயத்திலான பொதுவான விசாரணைக்காரனாகவும் காணப்பட்டான். இவர்கள் இருவரும் யோசேப்போடு, அதே சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் இவர்களைக் கவனிக்கும் பொறுப்பு யோசேப்பினுடையதாய் இருந்தது. ஆகையால் இவர்களோடு யோசேப்பு நன்கு பழகி, பார்வோனின் அரசவை/அரமனையின் முறைமைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் அநேகவற்றைக் கற்றுக்கொண்டார். இந்தத் தகவல்களானது, பிற்பாடு அவருக்கு உதவப் போவதாக இருந்தது.

“யோசேப்பு சொப்பனங்களுக்கான அர்த்தத்தை விவரிக்கின்றார்”

ஒருநாள் காலையன்று, யோசேப்பு அந்த இரண்டு கைதிகளும் துக்கமாய் இருப்பதைக் கவனித்தவராக, “உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன?” என்று கனிவோடு விசாரித்தார். யோசேப்பினுடைய சொந்த அனுபவங்களானது, அவரை மற்றவர்கள்பால் மன உருக்கம் கொண்டிருக்கச் செய்தது. அவரால் மற்றக் கைதிகளினுடைய துக்கங்களையும், அவமானங்களையும் உணர்ந்துகொள்ள முடிந்தது, ஏனெனில் அவரும் இவ்வனுபவங்களுக்குள்ளாகக் கடந்து சென்றிருந்தவராய்க் காணப்பட்டார். அன்று காலையில் அவர்கள் துக்கமாய் இருந்ததை யோசேப்பு கவனித்து, அவர்கள்பால் உண்மையில் அக்கறைக் கொண்டிருந்தார்.

பானபாத்திரக்காரர்களின் தலைவனும், சுயம்பாகிகளுக்குத் தலைவனுமாகிய, இருவரும் முந்தின இரவில் சொப்பனம் கண்டார்கள் என்றும், அச்சொப்பனங்களின் அர்த்தம் என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தினால் தாங்கள் கவலையும், துக்கமும் கொண்டுள்ளார்கள் என்றும் யோசேப்பிடம் கூறினார்கள். தன் மூலமாக தேவன் அவர்களுக்கு அர்த்தத்தை வெளிப்படுத்தலாம் என்று கூறி, தன்னிடம் சொப்பனங்களைக் கூறுமாறு அவர்களிடம் யோசேப்பு கூறினார். பானபாத்திரக்காரன் முதலாவதாக தனது சொப்பனத்தைக் கூறினார் மற்றும் அர்த்தத்தைத் தெரிவிக்கத்தக்கதாக, தேவன் யோசேப்பினுடைய மனதை வெளிச்சமூட்டினார்; பானபாத்திரக்காரன் பார்வோனால் மன்னிக்கப்படப்போகின்றார் என்றும், இன்னும் மூன்று நாளுக்குள்ளாக, அவர் மறுபடியும் அவரது நிலையிலே நிறுத்தப்படப்போகிறார் என்றும் யோசேப்பு அர்த்தம் கொடுத்தார். பின்னர் யோசேப்பு பானபாத்திரக்காரனிடம் பரிதாபகரமான மன்றாட்டை ஏறெடுத்தார்; இது யோசேப்பு தன்னுடைய விடுதலைக்காக எவ்வளவு ஏக்கம் கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. யோசேப்பு பின்வருமாறு கூறினார்:
“நீ வாழ்வடைந்திருக்கும்போது என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை” (ஆதியாகமம் 40:14,15).

அடுத்துச் சுயம்பாகி தனது சொப்பனத்தைக் கூறினார். மீண்டுமாக தேவன் அர்த்தத்தைப் பற்றி யோசேப்பின் மனதிற்குத் தெளிவுப்படுத்தினார். அர்த்தத்தைத் தெரிவிப்பதற்கு யோசேப்பிற்கு வேதனையாக இருந்தது. இன்னும் மூன்று நாளுக்குள்ளாகச் சுயம்பாகி தூக்கிலிடப்படுவார் என்று யோசேப்பு அவரிடம் தெரிவித்தார். மூன்று நாட்களுக்குள்ளாகவே இரண்டு காரியங்களும் சொன்னப் பிரகாரமாகவே நடந்தது. பானபாத்திரக்காரன் மீண்டுமாக தனது நிலையில் நிறுத்தப்பட்டார் மற்றும் அவர் மீண்டுமாகப் பானபாத்திரத்தைப் பார்வோனின் கரங்களில் கொடுக்கும் பணியைத் தொடர்ந்தவரானார். ஆனால் பானபாத்திரக்காரன் யோசேப்பையும், அவரது வேதனை கலந்த மன்றாட்டையும் மறந்துபோனார். இதற்குப் பின்னர், யோசேப்பு இரண்டு வருடங்கள் சிறையில் காணப்பட்டார். இப்பொழுது அவருக்கு முப்பது வயதாக இருந்தது.

பிற்பாடு ஒரே இரவில் பார்வோன் இரண்டு சொப்பனங்களைக் கண்டார். இவைகள் சாதாரணமான சொப்பனங்கள் அல்ல. அச்சொப்பனங்கள் மிகவும் கவனத்தை ஈர்க்கின்றதாகவும், உணர்வுகளில் ஆழப் பதிந்தவைகளாகவும் காணப்பட்டப்படியால், அவைகளுக்கு விசேஷித்த அர்த்தம் இருக்குமெனப் பார்வோன் அறிந்துகொண்டார். முதலாம் சொப்பனத்தில் பார்வோன் ஏழு புஷ்டியுள்ள பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து நின்றதாகக் கண்டார்; கொஞ்ச நேரம் கழித்து அவலட்சணமும், கேவலமுமான வேறு ஏழு பசுக்களும் நதியிலிருந்து ஏறி வந்து நின்றதைக் கண்டார்; இவைகளைப் பார்க்கிலும் அவலட்சணமான பசுக்களை அவர் வேறு எங்குமே கண்டதில்லை. கேவலமான பசுக்கள், புஷ்டியான பசுக்களைப் பட்சித்துப்போட்டது மற்றும் பட்சித்துப்போட்ட பிற்பாடும் அந்தக் கேவலமான பசுக்கள் புஷ்டியடையவில்லை என்பதாகக் கண்டார். இரண்டாம் சொப்பனத்தில், பார்வோன் செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்ததைக் கண்டார்; இன்னுமாக சாவியானதும், தீய்ந்ததுமானதும், பிரயோஜனமற்றதுமான ஏழு கதிர்கள் முளைத்ததையும் கண்டார்; இதை அவர் பார்த்துக்கொண்டிருக்கையில் சாவியான கதிர்கள், அந்தச் செழுமையான ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; விழுங்கின பிற்பாடும் சாவியான கதிர்கள், செழுமையாய்க் காணப்படவில்லை. பார்வோன் சொப்பனத்தின் அர்த்தத்தைத் தனக்கு விளக்கும்படிக்கு, தனது சாஸ்திரிகளையும், மந்திரவாதிகளையும் அழைத்தார். ஆனால் அவர்கள் எவராலும், அவருக்குச் சொப்பனத்தினுடைய அர்த்தத்தைக் கூற முடியாமல் இருந்த காரியமானது, அவருக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. எப்போதும் பார்வோனுக்கு அருகாமையில் காணப்படுகின்ற பானபத்திரக்காரன், அப்போது இறுதியாக யோசேப்பை நினைவுகூர்ந்தார் மற்றும் இராஜாவிடம், சிறையிலுள்ள ஓர் எபிரெய வாலிபன் எப்படி, தனது மற்றும் சுயம்பாகியினுடைய சொப்பனத்திற்கான அர்த்தத்தைத் துல்லியமாகக் கூறினான் என்பதை எடுத்துக் கூறினார்.

நான் (ஆசிரியர்) பின்வருமாறு கற்பனை செய்து பார்க்க விரும்புகின்றேன்: யோசேப்பை அழைக்கும்படிக்கு ஆட்கள் வந்தபோது, யோசேப்பு விடுதலை வேண்டி, தேவனிடம் ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். சிறைத்தலைவன் தனது முகத்தில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினவராக உள்ளே வந்தார். “யோசேப்பு! இராஜா உன்னை அழைத்துள்ளார்! மாபெரும் பார்வோன் உன்னைப் பார்க்க விரும்புகின்றாராம்!” யோசேப்பு ஆச்சரியத்திற்குள்ளாகவில்லை. யோசேப்பு இதற்காக மிக நீண்ட காலமாய்க் காத்துக் கொண்டிருந்தார். இருதயம் முழுக்க நன்றியினால் நிரம்பப்பெற்றவராக, வேகவேகமாய்க் குளித்தார், சவரம் பண்ணினார் மற்றும் தனது வஸ்திரங்களை மாற்றிக்கொண்டார். தேவன் மீதான விசுவாசத்தின் காரணமாக உண்டான அமைதியையும், நிச்சயத்தையும் கொண்டவராக, யோசேப்பு உலகத்தினுடைய வல்லமையுள்ள பேரரசனாகிய பார்வோனைச் சந்தித்தார். பார்வோன் யோசேப்பை நோக்கி, “சொப்பனங்களுக்கு அர்த்தம் கொடுக்கும் திறன் உனக்குள்ளது என்று நான் உணர்கின்றேன்” என்றார். யோசேப்போ தன்னடக்கத்துடன், “நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு உத்தரவு அருளிச் செய்வார்” என்றார்.

“இந்நேரத்திலா தன்னடக்கம்!” என்று சிலர் கூறலாம். யோசேப்பு அடிமையாகப் பத்து வருடங்கள் காணப்பட்டிருந்திருக்கின்றார் மற்றும் சிறையில் மூன்று வருடங்கள் காணப்பட்டிருக்கின்றார். இராஜாவின் முன் மின்னிடுவதற்கான மாபெரும் வாய்ப்பு யோசேப்பிற்கு வந்தபோது, அதை அவர் தூக்கி எறிந்துவிட்டார். தன்னடக்கம் என்பது பொதுவாகக் குணலட்சணத்தினுடைய மேன்மையைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. கூர்மையாய்க் கவனிக்கும் பார்வோனின் கண்களுக்கு இக்குணம் தப்பிவிடவில்லை. பார்வோன் தனது சொப்பனங்களை யோசேப்பிடம் கூறினார். மீண்டுமாகக் கர்த்தர் யோசேப்பினுடைய மனதை வெளிச்சமூட்டினார் மற்றும் இரண்டு சொப்பனங்களுமே ஒரே காரியத்தையே குறிக்கின்றது என்றும், இரண்டு முறை ஒரே காரியம் சொப்பனமாக வந்துள்ளதான விஷயம், அதன் நிச்சயத்தை வலியுறுத்துகின்றது என்றும் யோசேப்பு பார்வோனிடம் விளக்கினார். ஏழு வருடங்கள் எகிப்து தேசத்தில், பரிபூரணமான விளைவு காணப்படும் என்றும், பிற்பாடு ஏழு வருடங்கள் பஞ்சம் காணப்பட்டு, பரிபூரணமான விளைவு காணப்பட்ட வருடங்களினுடைய திரளான விளைவுகளை முற்றிலுமாய்த் தீர்த்துப்போடும் என்றும் யோசேப்பு விளக்கம் கொடுத்தார். பரிபூரணமான விளைவுள்ள ஏழு வருடங்களின் திரளான விளைவு அனைத்தையும் வாங்கிடுவதற்கும் மற்றும் அதனை ஏழு வருட பஞ்ச காலத்திற்கான தேவைக்குப் பயன்படுத்துவதற்கெனச் சேகரித்து வைப்பதற்கும் இராஜா நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு பிரதிநிதியை நியமிக்கும்படியான ஆலோசனை ஒன்றை யோசேப்பு அருளினார்.

பார்வோன் இத்திட்டத்திலுள்ள ஞானத்தினால் உடனடியாகக் கவரப்பட்டார். ஆகையால் நாம் வாசிப்பதென்னவெனில்:” அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான்” (ஆதியாகமம் 41:38-40).

இப்படியாக யோசேப்பு ஒரே நாளில் தாழ்வான கிடங்கிலிருந்து (சிறையிலிருந்து) வெளியேறி, அந்நாட்களிலுள்ள மாபெரும் சாம்ராஜ்யமாகிய எகிப்தினுடைய அதிகார நிலைமைக்கு உயர்த்தப்பட்டார். சகோதரர் ரசல் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோன்று, “யோசேப்பிற்குப் பதினான்கு வருட ஒப்பந்தம்” காணப்பட்டது.

“யோசேப்பின் குடும்பத்தைப் பஞ்சம் தீண்டியது”

பஞ்சம் பரவலாய்க் காணப்பட்டது மற்றும் உலகத்தில் இக்குறிப்பிட்ட பகுதியில் பஞ்சம் கடுமையாகவே காணப்பட்டது. இது கானானையும், எகிப்தையுங்கூட உள்ளடக்கினதாகவே இருந்தது. தேசம்/நிலம் வறண்டது மற்றும் விதைப்பதற்கு விதைகள்கூட இல்லாமல் போகுமளவுக்கு விளைச்சல் இல்லாமல் இருந்தது. எகிப்தில் உணவு பற்றாக்குறை இல்லை என்ற செய்தி பரவினது. ஆகையால் தங்கள் தங்கள் குடும்பங்களுக்குத் தலைவர்களாகக் காணப்பட்ட தனது குமாரர்களானவர்கள் எகிப்துக்குச் சென்று, கோதுமையை வாங்கும்படியாக யாக்கோபு கட்டளையிட்டார். ஆனால் இப்பொழுது தனது பிரியமான குமாரனாகக் காணப்பட்ட பென்யமீனை, யாக்கோபு மற்றவர்களோடு அனுப்பி வைக்கவில்லை.

பத்துக் குமாரர்கள் எகிப்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் எகிப்தியர்கள் அல்லாத அந்நியர்களாய்க் காணப்பட்டபடியால், அவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த யோசேப்பிடம் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். தன்னிடத்தில் அவர்கள் உணவுக்காக வருவார்கள் என்று அவர் அறிந்திருந்தார். இதுகூட இதற்கு முன்னதாக அவர்களைத் தொடர்புகொள்வதற்கு அவர் முயற்சிக்காததற்கான காரணமாய் இருக்கலாம். அவர்கள் யோசேப்பிடம் கொண்டு வரப்பட்டபோது, அவரை அவர்கள் அடையாளங்கண்டுகொள்ளாமல், அவரது பத்துச் சகோதரர்களும் அவர் முன் வணங்கினார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில், அவர் எகிப்தின் அதிபதியாய்த் தோற்றமளித்தார். அவர் முன் அவர்கள் வணங்கினபோது, அவர் கதிர்கட்டுகள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றியதான தனது சொப்பனத்தை நினைவுகூர்ந்தார். சேனையைக்கொண்டு வந்து தானியங்களைத் திருடிச் செல்லத்தக்கதாக, எகிப்தில் எவ்வளவு தானியங்கள் காணப்படுகின்றதெனப் பார்த்துச் செல்வதற்கு வந்த வேவுகாரர்களாக அவர்கள் காணப்படுகின்றார்களா? என்று யோசேப்பு துபாசி வழியாய் அவர்களிடத்தில் கேட்டார். அவர்கள் தங்கள் நிலைமையைக் குறித்து உண்மையாய் விவரித்தார்கள் மற்றும் சில கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, தங்கள் தந்தை குறித்தும், தங்கள் இளைய சகோதரனாகிய பென்யமீனைக் குறித்தும் குறிப்பிட்டார்கள்.

இருபது வருடங்கள் தாண்டிபோன நிலையிலும், தனது தந்தையும், தனது சகோதரனாகிய பென்யமீனும் உயிரோடும், நலமாயும் இருக்கின்றார்கள் என்பதை அறிந்தபோது, யோசேப்பினுடைய இருதயம் (மகிழ்ச்சியில்) துள்ளியிருக்க வேண்டும். ஆனால் யோசேப்பு தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. அவர் தன்னைக் கடுமையானவராகவே காண்பித்துக்கொண்டார் மற்றும் இறுதியில் அவர்களுக்குத் தானியத்தை விற்பதற்குச் சம்மதித்தார். ஆனால் பிற்பாடு, மேலும் தானியங்கள் வாங்க வேண்டுமெனில், அவர்கள் தங்கள் இளைய சகோதரனாகிய பென்யமீனைத் தங்களோடுகூட அழைத்துக்கொண்டுவருவதன் மூலமாக, தங்கள் உண்மைத்தன்மையை நிரூபித்தாக வேண்டுமென்று அவர்களிடம் யோசேப்பு கூறினார். அதுவரையிலும் சகோதரர்களில் ஒருவராகிய சிமியோன், பிணைக் கைதியாகச் சிறையில் வைக்கப்படுவார் என்று யோசேப்பு தெரிவித்தார். இக்கட்டத்தில் பத்துச் சகோதரர்களில் ஒவ்வொருவருடைய மனதிலும் ஒரு கருத்து, ஒரே நேரத்தில் எழுந்திருக்கும். அது அவர்களது பதினேழு வயது சகோதரனாகிய யோசேப்பு, பலவருண அங்கி தரித்தவராக, இருதயத்தில் வியாகுலத்தோடே, அவர்களிடத்தில் இரக்கத்திற்காகக் கெஞ்சி மன்றாடினது பற்றின கவலையுள்ள நினைவாகும். இப்படி யோசேப்பு கெஞ்சினபோது, அவர்கள் செவிக்கொடாமல், வெள்ளிக்காசுகளுக்காக அவரை விற்றுப் போட்டுவிட்டார்கள்.

“நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்” என்பதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றது (ஆதியாகமம் 42:21,22)

அந்தச் சகோதரர்கள் தாங்கள் செய்த தவறினிமித்தம் மனவுளைச்சலுக்குள்ளானார்கள். அவர்கள் யோசேப்பின் முன் நிற்கையில், இவ்வார்த்தைகளைப் பேசினார்கள்; அவர்களது ஒவ்வொரு வார்த்தையையும் அவர் புரிந்துகொள்கின்றார் என்பதை அறியாமல் இவ்வார்த்தைகளைப் பேசினார்கள். யோசேப்பு தன்னை அடக்கிக்கொள்ள முடியாததினால் யாருக்கும் தெரியாமல் அழத்தக்கதாக, அவர்களைவிட்டு அப்புறம் போனார். அவரது கண்ணீர்கள் சந்தோஷத்தின் மற்றும் இரக்கத்தின் கண்ணீர்களாகக் காணப்பட்டது; தனது சகோதரர்கள் தங்கள் தவறுகளுக்காக வருந்துவதை யோசேப்பு கண்டதினிமித்தமாகவும், கடந்து சென்ற வருடங்களின் அனுபவங்களானது அவர்களிடத்தில் உண்மையான மனம் வருந்துதலையும், குணலட்சணங்களில் மாற்றத்தையும் கொண்டுவந்துள்ளதை யோசேப்பு கண்டதினிமித்தமாகவும், யோசேப்பு சந்தோஷத்தின் கண்ணீர்களை வடித்தார். எனினும் அவர்களை அவர் இன்னும் சோதித்துப்பார்க்க வேண்டியிருந்தது. அழுத பிற்பாடு அவர் அவர்களிடத்தில் திரும்பி வந்து, சிமியோனைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டு, மற்றவர்களை அனுப்பி வைத்தார்.

வீட்டிற்குப் போகிற வழியில், அவர்கள் உணவிற்காக தங்கள் சாக்குகளைத் திறந்தபோது, அவர்கள் தானியத்திற்கான விலையாகக் கொடுத்திருந்த பணமானது, அவரவர் சாக்குகளில் இருந்ததைக் கண்டார்கள். அந்தச் சகோதரர்கள் கோதுமையுடன் வீடு வந்து சேர்ந்தபோது, அவர்கள் நடந்த அனைத்தையும், அதாவது தாங்கள் அதிபதியினால், வேவுகாரர்களெனச் சந்தேகிக்கப்பட்டதையும், சிமியோன் பிணைக் கைதியாக எகிப்தில் வைக்கப்பட்டதினால், சிமியோன் தங்களோடு வீடு திரும்பவில்லை என்பதையும் தங்கள் தந்தையாகிய யாக்கோபினிடத்தில் தெரிவித்தார்கள். பின்னர்த் தானியத்திற்கு விலையாக தாங்கள் செலுத்தின பணம் அவரவருடைய கோதுமை சாக்கில் திரும்ப வைக்கப்பட்டிருந்தது என்பதையும் அவர்கள் தெரிவித்தார்கள். அடுத்தமுறை கோதுமை வாங்க வேண்டுமெனில், அவர்கள் தங்களோடு பென்யமீனை அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் தெரிவித்தார்கள். இதற்கு யாக்கோபு மறுப்புத் தெரிவித்தவராக, “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை; சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்களா?” என்று சொன்னார் (ஆதியாகமம் 42:36).

யோசேப்பிற்கு எதிராக தாங்கள் செய்திட்ட குற்றமே, தங்களுக்கான இக்கட்டு நிலைக்குக் காரணம் என்பதாகவும், இந்த இக்கட்டு என்பது தங்களுக்குரிய தண்டனை என்பதாகவும் காணப்படுகின்ற அவர்களது பயங்களை, அவர்களது தந்தையாகிய யாக்கோபின் வார்த்தைகளும் எதிரொலிப்பதை அவர்கள் கேட்டபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

எகிப்திலிருந்து வாங்கி வந்ததான கோதுமை குறைந்தபோது, மீண்டும் போய் வாங்கி வரும்படிக்கு, யாக்கோபு தனது குமாரர்களை வற்புறுத்தினார். ஆனால் பென்யமீன் தங்களோடு வராதது வரையிலும், தாங்கள் போவதில்லை என்று அவர்கள் உறுதியுடன் மறுத்துவிட்டனர். யாக்கோபும் பலமாய் மறுப்புத் தெரிவித்தார். பின்னர் யூதா பேசி, பென்யமீனுக்கு உத்தரவாதியானார். இதே யூதாதான் பலவருடங்களுக்கு முன்னதாக, யோசேப்பை அடிமையாக விற்றுப்போடுவதற்கான கருத்தை முன்வைத்தவர் என்பதை நாம் நினைவில்கொள்வோமாக. இப்பொழுது இவர் பென்யமீனுடைய பாதுகாப்பிற்காக, தன்னுடைய சொந்த ஜீவனையே பணையம் வைத்திட்டார். எத்துணை மாற்றம் இவரது இருதயத்தில் ஏற்பட்டிருக்கின்றது. தேவையின் நிலைக் கருதி, இறுதியாக யாக்கோபு சம்மதித்தார். யாக்கோபு எகிப்தினுடைய அதிபதிக்குத் தேன், கந்தவர்க்கங்கள், கொட்டைகள் மற்றும் வாதுமைக்கொட்டைகளாகிய காணிக்கைகளையும், இரட்டிப்பான பணத்தையும் அவர்களிடத்தில் கொடுத்தனுப்பினார். பென்யமீனை அவர் போக அனுமதித்து, பரிதாபகரமாக, “அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் (சிமியோனையும்), பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப் பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான்” (ஆதியாகமம் 43:14).

அவர்கள் எகிப்துக்கு வந்தபோது, தனது வீட்டில் அவர்களுக்கு இரா உணவு பரிமாறப்படுவதற்கும், சிமியோனை விடுவித்து, அவர்களோடு அனுப்பிடுவதற்கும் யோசேப்பு கட்டளைகளிட்டார். அவர்கள் சாப்பிடுவதற்கு ஆயத்தமானபோது, யோசேப்பு எகிப்திய பிரபுவுக்குரிய இராஜ வஸ்திரம் தரித்தவராய் உள்ளே வந்தார் மற்றும் மீண்டுமாக அவரை அவர்கள் பணிந்து வணங்கிக்கொண்டார்கள். யோசேப்பு கனிவாய் அவர்களது தகப்பனைக் குறித்து விசாரித்தார். யோசேப்பு தன்னுடைய தாய் பெற்றக் குமாரனும், தனது சகோதரனுமான பென்யமீனைக் கண்டார் மற்றும் அவரைக் கட்டித்தழுவிடுவதற்கு ஏங்கினார். அவருடைய உணர்வுகளை அவரால் அடக்கிக்கொள்ள முடியாததினால், அவர்கள் அவரது ஆனந்த கண்ணீரைப் பார்க்காதபடிக்கு, அவர் சிறிது நேரம் அவர்களைவிட்டு அப்புறம் செல்ல வேண்டியிருந்தது. அந்தச் சகோதரர்கள் அவர்களது இருக்கைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் மற்றும் அவர்கள் தங்கள் வயதின் துல்லியமான வரிசையின்படி அமர்த்தப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்கள். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, தங்களைக் காட்டிலும் பென்யமீனுக்கு ஐந்து பங்குகள் கொடுக்கப்பட்டதைக் கண்டும் ஆச்சரியமடைந்தார்கள். இதனால் அவர்கள் கோபம் அடைந்தார்களா? யோசேப்பின் மீது அவர்கள் முன்பு கொண்டிருந்ததுபோன்று, இப்பொழுது பென்யமீன் மீது பொறாமை கொண்டார்களா? கொஞ்சமும் இல்லை! அவர்களுக்கு அது பிடித்திருந்தது. பென்யமீனுக்கு ஐந்து பங்கு கொடுக்கப்பட்டதினிமித்தம் அவர்கள் மகிழ்ந்து சிரித்தார்கள். “பென்யமீனோடுகூட சந்தோஷமாயிருந்தார்கள்” என்பதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர்களிடத்திலான இந்த ஒரு மாற்றத்தையும் யோசேப்பு கவனித்திருந்திருப்பார் என்பதில் நமக்கு நிச்சயமே.

அவர்கள் தங்கள் தந்தை மீது கொண்டிருக்கும் அனுதாபத்தையும், தங்கள் இளைய சகோதரனாகிய பென்யமீனுடைய நலனுக்கடுத்த விஷயங்கள் மீதான அவர்களது அக்கறையையும், இன்னும் சோதித்திட வேண்டுமென்று யோசேப்பு சிந்தித்தார். அவர்களது சாக்குகள் தானியங்களினால் நிரப்பப்படும்போது, தனது சொந்த வெள்ளிப்பாத்திரமானது பென்யமீனுடைய சாக்கிற்குள்ளாக மறைத்து வைக்கும்படிக்கு யோசேப்பு ஏற்பாடு பண்ணினார். காலையில் அந்தச் சகோதரர்கள் கொஞ்சம் தொலைவில் போயிருக்க, தனது பாத்திரத்தை அவர்கள் திருடியுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டுடன், தனது பிரதானிகளை/ஊழியர்களை அவர்கள் பின்பாக யோசேப்பு அனுப்பி வைத்தார். தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி, அவர்கள் குற்றச்சாட்டினை ஏற்க மறுத்தார்கள் மற்றும் “உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்று” கூறி, பாத்திரத்தைத் தேடிப் பார்க்கும்படிக்குப் பிரதானிகளை அழைத்தார்கள் (ஆதியாகமம் 44:9).

சாக்குகள் சோதிக்கப்பட்டன மற்றும் பாத்திரமானது பென்யமீனுடைய சாக்கில் கண்டு பிடிக்கப்பட்டது. அது எத்துணை பயங்கரமான அதிர்ச்சியாய் இருந்திருக்கும்! பென்யமீனுக்காக அவர்கள் தங்கள் சொந்த ஜீவன்களை உத்தரவாதமாக்குவதாக, அவர்கள் தங்கள் தகப்பனிடம் வாக்குறுதி கொடுத்து வந்திருக்கின்றார்கள்; ஆனால் இப்பொழுதோ தங்கள் சொந்த வார்த்தையினாலேயே பென்யமீன் மரிக்கப்போகின்றார் மற்றும் தாங்களும் அடிமைகளாகப் போகின்றனர். பென்யமீனை மாத்திரம் தங்களோடு அடிமையாகக் கூட்டிச் செல்வதற்கும், மற்றவர்களை வீடு திரும்புவதற்கென அனுமதிப்பதற்குமென்று அந்த ஊழியக்காரர்கள் பெருந்தன்மையுடன் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பென்யமீனைத் தங்களிடமிருந்து பிரிப்பதற்கு அனுமதித்திடவில்லை, ஒரு கணம்கூட அனுமதித்திடவில்லை. அவர்கள் அனைவரும் துக்கத்தினால், அதிர்ச்சியுடன் பென்யமீனோடு எகிப்திற்குத் திரும்பிச் சென்றார்கள். இவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னதாக, யோசேப்பு அடிமையாக தனியே செல்வதற்கு எளிதில் அனுமதித்திட்ட அதே மனிதர்கள்தானா? இவர்கள் ஒரு வயதான மனிதனுடைய இருதயத்தை நொறுக்கிடத்தக்கதாக, யோசேப்பினுடைய அங்கியை இரத்தத்தில் தோய்த்திட்ட அதே மனிதர்கள்தானா? அவர்கள் அரமனைக்குத் திரும்பி வந்தபோது, யோசேப்பு அவர்கள்மேல் குற்றஞ்சாட்ட, அவர்கள் யோசேப்பிற்கு முன்பாக தரையிலே விழுந்தார்கள். வார்த்தைகள் பேசுவது பயனற்றதாய் இருந்தது. அவர்களால் என்ன பேச முடியும்? சாட்சியம் இருக்க, அவர்களால் எப்படித் தங்களைக் காத்துக்கொள்வதற்கு வாதாட முடியும்? எந்த நம்பிக்கையும் இல்லை; தாங்கள் பிரச்சனையில் அகப்பட்டிருப்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்கள் சார்பில் யூதா பேசுபவரானார். “அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்” (ஆதியாகமம் 44:16).

இப்படியாக யூதா தன்னையும், தனது சகோதரர்களையும், பென்யமீனையும், யோசேப்பினிடத்தில் அடிமையாக ஒப்புக்கொடுத்தார். பாத்திரத்தை எடுத்தவர் மாத்திரமே தனது அடிமையாகக் காணப்பட வேண்டுமென்று கூறி, அனைவரையும் அடிமையாக ஏற்றுக்கொள்வதற்கு யோசேப்பு மறுத்துவிட்டார். யோசேப்போ, “நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள்” என்றார். யோசேப்பு இறுதியானதும், மிகக் கடினமானதுமான பரீட்சையைத் தனது சகோதரர்கள்மேல் வைத்தார். பென்யமீன்தான் பாத்திரத்தைத் திருடியுள்ளார் என்பது அவர்கள் அறிந்திருந்த காரியமாய் இருந்தது. பென்யமீன் இதற்கான பின்விளைவைச் சந்தித்தாக வேண்டியிருக்கும் என்பதையும் அந்தச் சகோதரர்கள் புரிந்திருந்தார்கள்; இதற்கு அவர்கள் காரணமில்லை. அவர்களுக்குச் சொந்த குடும்பங்கள் இருந்தபடியால், அவர்கள் சிந்திக்க வேண்டியிருந்தது. உணவானது தங்கள் குடும்பத்தாருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் அல்லது குடும்பத்தினர் பட்டினிக்கிடக்க நேரிடும் என்று அவர்கள் யோசித்திருக்கலாம். தந்தையைப் பொறுத்தமட்டில், தந்தைதான் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்படியாக அவர்கள் யோசிக்கின்றார்களா என்பதைப் பார்த்திடுவதற்கு யோசேப்பு ஆவலாய் இருந்தார். இது கடுமையான பரீட்சையாய் இருந்தது.

“யூதாவினுடைய இருதய பூர்வமான மன்றாட்டு”

அனைவரின் சார்பிலுமாக யூதா பேசுகையில், சரித்திரத்தில் எங்குமே இல்லாத அளவுக்கு மிகவும் பரிதாபகரமான மற்றும் உருக்கமான மன்றாட்டுகளை ஏறெடுத்தார்.

“அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர். உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர். அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன் மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம். அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்கு கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர். நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம். அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர். நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம். எங்கள் தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் கொள்ளுங்கள் என்று சொன்னார். அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக் காணக்கூடாது என்றோம். அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள். அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான்; அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் இவனையும் என்னை விட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார். ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால், அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவோம். இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்” (ஆதியாகமம் 44:18-34).

யூதா பேசிக்கொண்டிருக்கையில், யோசேப்பின் மனதில் காணப்பட்ட சந்தேகங்கள் கரைந்துபோயின. அவர்கள் உண்மையில் முழுமையாய் மாறியுள்ளனர். தங்கள் இளைய சகோதரனுக்காக தங்கள் சொந்த ஜீவியங்களைத் தியாகம் பண்ணிடுவதற்கும், தங்கள் தகப்பனுடைய இருதயத்திற்குத் துக்கம் கொடுக்காமல் இருப்பதற்கும் அவர்கள் இப்பொழுது விருப்பம் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.

தன்னை வெளிப்படுத்திடுவதற்கான வேளை யோசேப்பிற்கு வந்தது. மற்றவர்களாகிய எகிப்தியர்கள் அனைவரையும் அறையை விட்டு வெளியேற்றி, கண்ணீர்கள் முகத்தில் வடிய, யோசேப்பு தன்னை தன்னுடைய சகோதரர்களிடத்தில் வெளிப்படுத்தினார். “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான்” என்று யோசேப்பு எபிரெய மொழியில் பேசினார். அவரது சகோதரர்களுக்கு ஏற்பட்ட வியப்பை/திகைப்பை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகின்றதா? பல வருடங்களுக்கு முன்னதாக தாங்கள் யோசேப்பிற்குச் செய்தவைகளினிமித்தமான குற்ற உணர்வினுடைய வலியினை அடைந்தார்கள். அவர்கள் அமைதி இழந்தவர்களானார்கள். இதை உடனடியாகக் கவனித்த யோசேப்பு, கிருபையாய்/இரக்கமாய், அவர்களது இருதயத்தை அமைதிபடுத்தினார் மற்றும் கிருபைக்கான/இரக்கத்திற்கான சிறந்த மாதிரியானார். அவர் கூறினதாவது:
“என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்” (ஆதியாகமம் 45:5,7).

யோசேப்பு எத்துணை பெருந்தன்மையான இருதயத்தைப் பெற்றிருந்தார்! தேவனுக்கொத்த எத்துணை மன்னிப்பைப் பெற்றிருந்தார்! அடிமையாக காலம் கழித்த வருடங்களை மறந்துவிட்டார், கிடங்கில்/சிறையில் காணப்பட்ட வருடங்களையும், தகப்பனுடைய வீட்டைப்பற்றின ஏக்கத்தினால் தனிமை துயரத்தில் கழித்திட்ட பகல்களையும், இரவுகளையும் யோசேப்பு மறந்துவிட்டார். இப்பொழுது, எல்லாம் சரியாகிவிட்டது! பென்யமீனை அவர் முதலாவதாகக் கட்டிப் பிடித்தார். பென்யமீன் அவரால் மிகவும் அன்புகூரப்பட்ட இளைய சகோதரனாவார். பின்னர் தனது அனைத்துச் சகோதரர்களையும் யோசேப்பு கட்டிப்பிடித்து, அவர்களை முத்தம் செய்தார். அவர்கள் அனைவரும் ஆனந்த கண்ணீர்களை வடித்தார்கள். யோசேப்பு உடனடியாக தனது தகப்பனையும், தனது சகோதரர்களின் குடும்பங்களையும் அழைத்து, அவர்களைக் கோசேன் தேசத்தில் சுகமாய்க் குடியேற்றினார். நீண்ட காலத்திற்குப் பின்பாக யோசேப்பு தன்னுடைய தந்தையுடன் இணையும் சம்பவத்தின் உருக்கத்தை நம்மால் நன்கு கற்பனை செய்துபார்க்க முடிகின்றது.

இதுதான் யோசேப்பின் கதை; அருமையானதும், மனதை உருகச் செய்கிறதுமான ஒரு கதையாகும். இக்கதையானது, மனித உணர்வுகளினால் நிரம்பியிருப்பதினால், இதனை வாசிக்கையில், நமது கண்களிலிருந்து கண்ணீர்கள் வடிகின்றது. இது தீர்க்கத்தரிசனமான அர்த்தங்கள் அநேகவற்றை உள்ளடக்கினதாகவும் இருக்கின்றது. இவைகள் என்ன உணர்த்துகின்றன என்பதை உங்களால் உணர முடிகின்றதா? இது தேவன் தம்முடைய திட்டங்களை நுணுக்கமாக திட்டமிட்டுள்ளார் என்றும், பின்னர் அத்திட்டத்தின் பாகங்களைச் சித்தரிக்கத்தக்கதாக யோசேப்பினுடைய ஒவ்வொரு அனுபவங்களையும் மேற்பார்வையிட்டு, மற்றும் நன்மைக்கேதுவாய் மாற்றிப்போட்டுள்ளார் என்றும் உணர்த்துகின்றதாய் இருக்கின்றது. எப்படித் தேவன் அனைத்துச் சூழ்நிலைமைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார் என்பதையும், தம்மால் கையாளப்படுகின்றவர்களின் அனுபவங்களை அவர் எப்படி முழுமையாய்த் திட்டமிடுகின்றார் மற்றும் அடக்கி ஆளுகின்றார் என்பதையும் உணர்கையில் சிலிர்க்கின்றது.

“யோசேப்பு, இயேசுவுக்கு நிழலாவார்”

யோசேப்பின் வாழ்க்கையில் தேவன் ஏற்படுத்தியுள்ள தீர்க்கத்தரிசனமான மற்றும் அடையாளமான காட்சிகள் சிலவற்றைப் பார்க்கலாம். யோசேப்பு இயேசுவுக்கு நிழலாவார். யோசேப்பு யாக்கோபுக்குப் பிரியமான குமாரனாகவும், எப்போதும் அவரோடுகூடத் துணைவராகவும் காணப்பட்டதுபோன்று, இயேசுவும் தேவனுடைய பிரியமுள்ள குமாரனாவார். இயேசு தேவனுடைய செல்லப்பிள்ளையாகவும், நித்தமும் தேவனுக்கு மனமகிழ்ச்சியாகவும் காணப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது (நீதிமொழிகள் 8:30). தோத்தானிலுள்ள அவரது சகோதரர்களிடத்தில் யாக்கோபு, யோசேப்பை அனுப்பி வைத்தது போன்று, பரம பிதாவும் தமது பிரியமான குமாரனை இஸ்ரயேல் தேசத்தாரிடத்திற்கு அனுப்பி வைத்தார். இயேசு தம்மைக் குறித்து, “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே அன்றி, மற்றபடியல்ல வென்றார்” (மத்தேயு 15:24). யோசேப்பின் சகோதரர்கள், அவரை முகாந்தரமில்லாமல் பகைத்ததுபோன்று, இயேசுவும் தம்மைக் குறித்து, “முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் (யோவான் 15:25). தன் சகோதரர்கள்பால் யோசேப்பு செய்துவந்த வேலையானது, ஏற்றுக்கொள்ளப்படாததுபோன்று, இயேசுவும் தமக்குச் சொந்தமானவர்களிடத்தில் வந்தபோது, அவருக்குச் சொந்தமானவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னுமாக அவர், “அசட்டைப் பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்” ஆவார் (ஏசாயா 53:3).

யோசேப்பின் சகோதரர்கள் அவர் மீது மிகவும் பொறாமை கொண்டிருந்ததுபோன்று, இயேசுவும் பொறாமையின் காரணமாக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்று நாம் மத்தேயு 27:18 மற்றும் மாற்கு 15:10-ஆம் வசனங்களில் வாசிக்கின்றோம். “நாம் அவனைக் கொன்று போடுவோம், வாருங்கள்” என்று யோசேப்பின் சகோதரர்கள் யோசேப்பைக்குறித்துக் கூறினார்கள். இம்மாதரியாகவே யூதர்களும் இயேசுவைக் கொல்லத்திட்டமிட்டு, “இவரைச் சிலுவையில் அறையும்! இவரைச் சிலுவையில் அறையும்!” என்று கத்தினார்கள். யோசேப்பு அவரது சகோதரர்களால் குழிக்குள் தள்ளப்பட்டபோது, அவர் வெளித்தோற்றமாகக் கொல்லப்பட்டதுபோன்று, இயேசு உண்மையிலேயே யூதர்களால் கொன்றுபோடப்பட்டார். யூதாவினுடைய ஆலோசனையின் பேரில் யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டதுபோல, இயேசுவும் யூதாசினால், அடிமைக்குரிய விலையாகிய முப்பது வெள்ளிக்காசுகளுக்காக விற்கப்பட்டார். உண்மையுள்ளவராகிய யோசேப்பு மூன்று வருடங்கள் சிறையில் கழித்தார்; உண்மையுள்ளவராகிய நமது கர்த்தர் இயேசுவும் மூன்று நாட்கள், மரணம் எனும் சிறைச்சாலையில் காணப்பட்டார். பார்வோன் யோசேப்பைச் சிறைச்சாலையிலிருந்து, எகிப்தின் அதிகாரியாகிய தனக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தினதுபோன்று, இயேசுவும் மூன்றாம் நாளில் மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, அண்டசராசரத்தை ஆளும் யேகோவா தேவனுக்கு அடுத்த நிலையிலுள்ள மகா மகிமைக்கும், மற்றும் வல்லமைக்கும் உயர்த்தப்பட்டார். தமது உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு இயேசு தம்மைக் குறித்து, “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்றார் (மத்தேயு 28:18). அனைவரும் யோசேப்புக்கு முன்பு வணங்க வேண்டும் என்றும், அவருக்குக் கனம் செலுத்த வேண்டும் என்றும், பார்வோன் கட்டளையிட்டதுபோன்று, தேவனும், “பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம் பண்ண வேண்டும்” என்று கட்டளையிட்டார் (யோவான் 5:22).

யோசேப்பின் விஷயத்தில் துன்பங்களும்/விபரீதங்களும், நம்பிக்கைத் துரோகங்களும், அவமானங்களும் எகிப்தின் அதிகாரிக்குரிய கனம் மற்றும் மகிமைக்கு நேரான வழியினை ஆயத்தப்படுத்தினது. இப்படியாகவே இயேசுவின் விஷயத்திலும் காணப்பட்டது; அவருக்கு வந்திட்டதான சோதனையான அனுபவங்களானது, அவரை உண்மையுள்ளவரெனத் தேவனுக்கு நிரூபித்துக்காட்டி, அவர் உயர்த்தப்படுவதற்கு வழிநடத்தினதாய் இருந்தது.

“அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபிரெயர் 12:2).

யோசேப்பு பார்வோனுக்காக நிலங்களையும், ஜனங்களையும் விலைக்கு வாங்கி, அனைவருக்கும் அப்பம் வழங்கினார். இயேசு மனுக்குலத்தை வாங்கியுள்ளார்; ஆயிர வருட யுகத்தின்போது கிறிஸ்து, ஜீவனை விரும்புகின்ற அனைவருக்கும் ஜீவனை (தம்முடைய புண்ணியத்தை) அருளுவார். பார்வோனின் பிரதிநிதியாகிய யோசேப்பின் மூலமே அல்லாமல் மற்றபடி ஜனங்களுக்கு ஜீவன் இல்லாமல் இருந்ததுபோன்று, பரம பிதாவின் பிரதிநிதியாகிய கிறிஸ்துவின் மூலமாயும், கிறிஸ்துவுக்குள்ளாகவும் மாத்திரமே ஒழிய, மற்றபடி உலகத்திலுள்ள எவருக்கும் ஜீவனில்லை. முதலில் யோசேப்பை நிராகரித்த அவரது சகோதரர்கள், இறுதியில் அவரை அங்கீகரித்ததுபோன்று, இயேசுவைப் புறக்கணித்து, அவரைச் சிலுவையில் அறைந்துபோட்டதான யூத தேசத்தார், யாக்கோபின் இக்கட்டுக் காலத்தினை உள்ளடக்கின கடும் சோதனை மற்றும் தாழ்மையை உருவாக்கும் பல அனுபவங்களுக்குப் பிற்பாடு, இறுதியில் இயேசுவை அங்கீகரித்து, ஏற்றுக்கொள்வார்கள். யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தினபோது அவர்கள் அழுதார்கள். “அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” என்று நாம் வாசிக்கின்றோம் (சகரியா 12:10). யோசேப்பு தன்னுடைய சகோதரர்களை, கடந்த காலத்தில் அவர்கள் தனக்குச் செய்த காரியங்களின் அடிப்படையிலோ அல்லது அவர்களது கடந்த கால பாவங்களின் அடிப்படையிலோ நியாயந்தீர்க்காமல், தற்போதுள்ள அவர்களது இருதயத்தினுடைய நிலைமையின் அடிப்படையில் நியாயந்தீர்த்ததுபோலவே, உலகத்திற்கான எதிர்காலத்திலுள்ள நியாயத்தீர்ப்பும்கூட, மனிதர்கள் அக்காலத்தின்போது கொண்டிருக்கும் மனம் மற்றும் இருதயத்தினுடைய நிலைமையின் அடிப்படையிலேயே காணப்படும்.

இவைகள் இக்கதையினுடைய சில நிழலான அம்சங்களாகும். இன்னும் அநேக அம்சங்கள் உண்டு. இந்த இணைகள்/ஒப்புமைகள் அனைத்தும் தற்செயலாய் நடந்தது என நீங்கள் எண்ணுகின்றீர்களா? இல்லை என்று நீங்கள் அறிவீர்கள். இவைகள் தேவனுடைய செயலே. இவைகள் நாம் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றவில்லை என்பதையும், நாம் உண்மையிலேயே சத்தியத்தைப் பெற்றிருக்கின்றோம் என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள உதவப்படுவதற்கும், நாம் உற்சாக மூட்டப்படுவதற்கும், அருளப்பட்டவைகளாகும் (2 பேதுரு 1:16).

“நமக்கான தனிப்பட்ட பாடங்கள்”

யோசேப்பு மற்றும் அவரது சகோதரர்கள் பற்றின கதையிலுள்ள சில தனிப்பட்ட பாடங்களை நாம் பார்க்கலாம். இக்கதையானது நான் (ஆசிரியர்) சிறுபிள்ளையாக இருக்கையில் எனது தாயார் அவர்களது அர்மேனியன் வேதாகமத்திலிருந்து எனக்கு வாசிக்கும் கதைகளில் ஒன்றாகும். இக்கதையிலுள்ள உயர்தரமான அனுபவங்களினால் நான் எப்படிக் கவர்ந்து இழுக்கப்பட்டேன் என்பதை நான் நன்கு நினைவில் வைத்திருக்கின்றேன். கதை வாசிக்க ஆரம்பிக்கையில், நான் என்னை யோசேப்பின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நிறுத்திப்பார்த்துக் கற்பனைப் பண்ணிப்பார்ப்பதுண்டு. என்னால் யோசேப்பின் சகோதரர்களுடைய பகைமையைக் குறித்து அவ்வளவுக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை, காரணம் என்னுடைய சொந்த சகோதரர்கள் மிகவும் நல்லவர்களாய்க் காணப்பட்டனர். ஆனால் யோசேப்பு குழிக்குள் தள்ளப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டதை வாசிக்கையில் நான் அழுவதுண்டு. அவருடைய அங்கியானது, இரத்தத்தில் தோய்க்கப்பட்டு, அவருடைய தகப்பனிடத்தில் கொண்டு செல்லப்படுவதை வாசிக்கையில் நான் அழுவதுண்டு. யோசேப்பு தயவு பெற்றதையும், மீண்டும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டதையும் நான் வாசிக்கையில், நான் சந்தோஷமும், வேதனையும் அடைந்தேன். யோசேப்பு கிடங்கிலிருந்து, எகிப்தின் அதிபதியென உயர்த்தப்பட்ட தருணத்தை வாசிக்கையில் நான் உச்சக்கட்டத்தில் மெய்சிலிர்த்துப் போனதுண்டு.

கதையை வாசித்துவிட்டு, எனது தாயார் வேதாகமத்தை மூடி வைக்கையில், நான் அமர்ந்து, சிந்தனை பண்ணிக்கொண்டிருப்பேன். நான் எனக்குள்ளாகவே கேள்வி எழுப்புவது என்னவெனில்: ஏன் எனக்கு இப்படியான ஓர் ஆச்சரியமானக் காரியம் சம்பவிப்பதில்லை? என்னை இவ்வளவாய்ப் பராமரிக்கத்தக்கதாகவும், இவ்வளவு உயர்த்தத்தக்கதாகவும் தேவன் ஏன் என்னை தெரிந்துகொள்வதில்லை? நான் இதைக் குறைகூறும் வண்ணமாகக் கூறவில்லை, மாறாக ஆவலினாலும், ஏக்கத்தினாலுமே கூறுவதுண்டு; நான் யோசேப்பாக இருக்கமாட்டேனா என்று இருதய பூர்வமான விருப்பத்தினால் இப்படிக்கூறுவதுண்டு; இப்படி உண்மையில் நடந்து விடாதா எனும் விருப்பத்தினால் இப்படிக்கூறுவதுண்டு. ஆனால் பல வருடங்களுக்குப் பிற்பாடு, கர்த்தர் என்னைச் சத்தியத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசேப்புக்கு என்ன சம்பவித்ததோ, அது எனக்கும் சம்பவித்துள்ளது என்ற அருமையான உணர்ந்துகொள்ளுதலை நான் அடைந்தேன். தேவன் என்னைத் தெரிந்துகொண்டுள்ளார் மற்றும் யோசேப்பின் விஷயத்தில் காணப்பட்டதுபோன்று, என்னுடைய ஜீவியத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் தேவனால் கவனிக்கப்படுகின்றது மற்றும் என்னுடைய நன்மைக்கு ஏதுவாய் மாற்றப்படுகின்றது. எகிப்தின் அதிபதியாய் இருப்பதைக் காட்டிலும் மேலான ஓர் உயர்த்தப்படுதலை இறுதியில் நானும் அடையப்போகின்றேன் என்பதை உணர்ந்துகொண்டேன். இது அர்ப்பணிக்கப்பட்டு, பரம அழைப்பிற்கான பந்தயப்பொருளுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. உங்களுக்கும் இது பொருந்தும். யோசேப்பின் கதை என்பது, உங்கள் ஜீவியம் பற்றிய கதையே ஆகும். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினராகிய உங்களுக்குக்கூட யோசேப்பு அடையாளமாய்க் காணப்படுகின்றார்! யோசேப்பின் அனுபவங்களானது, உங்கள் அனுபவங்களுக்கு அடையாளமாய் இருக்கின்றது.

யோசேப்பை யாக்கோபு சிநேகித்தது போன்று, தேவன் இயேசுவை அன்புகூர்ந்தார். “பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” என்று உங்களைக் குறித்தும் எழுதப்பட்டிருக்கின்றது (யோவான் 16:27). யோசேப்பு தன்னுடைய சகோதரர்களினால் பகைக்கப்பட்டது போன்று மற்றும் இயேசு யூதர்களால் பகைக்கப்பட்டது போன்று, உங்களைக் குறித்தும், “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்” என்று இயேசு கூறியுள்ளார் (யோவான் 15:18).

யோசேப்பு கிடங்கிலிருந்து, எகிப்தின் சிங்காசனத்திற்கு உயர்த்தப்பட்டதுபோன்று, இயேசுவும் மரணத்திலிருந்து, தேவனுடைய சிங்காசனத்தினிடத்திற்கு உயர்த்தப்பட்டார். நம்மைக் குறித்து, “நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்” என்று எழுதப்பட்டுள்ளது (2 தீமோத்தேயு 2:11,12). யோசேப்போடு கர்த்தர் இருந்து, அவருடைய காரியங்கள் அனைத்தையும் மேற்பார்வையிட்டு, அனைத்தையும் முடிவில் சரி செய்ததுபோன்று மற்றும் பரம பிதாவும் தமது குமாரனாகிய இயேசுவோடுகூட அவரது பூமிக்குரிய ஊழியம் முழுவதின்போதும் காணப்பட்டு, இறுதியில் அவரை மகிமைப்படுத்தின துபோன்று, “அவருடைய தீர்மானத்தின் படி அழைக்கப்பட்டவர்களும், தேவனை அன்புகூருபவர்களுக்கும் சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடந்தேறும்” என்ற நிச்சயம் நமக்கும் வழங்கப்பட்டுள்ளது (ரோமர் 8:28). யோசேப்பினுடைய துன்ப அனுபவங்களானது அவரிடத்தில் சரியான தாக்கங்கொண்டு, அவரிடத்தில் அருமையான குணலட்சணத்தை உருவாக்கினதுபோன்று, மற்றும் இயேசுவும் தாம் பாடுபட்டதின் மூலம் தம்முடைய கீழ்ப்படிதலை விவரித்ததுபோன்று, நம்மைக் குறித்தும் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்” (1 பேதுரு 4:12, 13).

ஜீவன்களை இரட்சிக்கத்தக்கதாக யோசேப்பு உணவை வழங்கினதுபோன்று, மற்றும் கிறிஸ்து அவருடைய இராஜ்யத்தில் அனைவருக்கும் ஜீவ அப்பத்தை வழங்குவது போன்று, நாமும் அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்களெனச் சகல மனுக்குலத்தை ஜீவனுக்குச் சீர்ப்பொருத்தும் பணியில் அவருடன் பங்கடைவோம்.

ஆழமான மற்றும் இருதயத்தைச் சீர்த்தூக்கிப் பார்க்கின்ற விதமான சில படிப்பினைகளையும் இங்குக் கற்க வேண்டியுள்ளது. முதலாவதும், பிரதானமானதுமான படிப்பினை, பொறாமையினுடைய விளைவு/தாக்கம் பற்றியதாகும். நாம் ஒருபோதும் பொறாமை கொண்டிருத்தல் கூடாது. அது நம்மை அழிக்கக் கூடியதாகவும், தகர்த்தக் கூடியதாகவும் காணப்படுகின்றது. சாதாரணமான/ஒழுங்கான ஜனங்கள் பொறாமையின் தீமையான தாக்கத்தின் கீழ்க் காணப்படுகையில், அவர்கள் மிகவும் கொடிதான காரியங்களைச் செய்திடுவதற்கும், பேசிடுவதற்கும் வழிநடத்தப்பட்டுவிடுகின்றனர். “வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும், சகல துர்ச் செய்கைகளுமுண்டு” என்று யாக்கோபு குறிப்பிடுகின்றார் (யாக்கோபு 3:16). இப்படியாக இருக்கின்றபடியால் சபையைத் தகர்ப்பதற்கும், அழித்துப்போடுவதற்குமெனச் சாத்தான் பொறாமையை வளர்த்திவிடுபவனாகவும், ஊக்குவிப்பவனுமாகவும் இருக்கின்றான் என்பது நிச்சயமே. கர்த்தரினால் மிகப்பெரிய அளவிலும் மற்றும் வல்லமையாகவும்/பயனுள்ள விதத்திலும் பயன்படுத்தப்படுகின்ற சகோதரர்கள், மிகுந்த பொறாமையைத் தூண்டிவிடுபவர்களாகக் காணப்படுகின்றனர் என்பது கவலைக்கிடமான உண்மையாகும். இந்தத் தீமையான காரியத்தினை நாம் விட்டுவிலகுவோமாக. பொறாமைக்கான சிறிய அறிகுறி நம் இருதயத்தில் காணப்படுமாகில், அது வேரோடே அழிக்கப்படுவதற்காக நாம் உண்மையாய் ஜெபம் ஏறெடுப்போமாக. அதை வளருவதற்கு அனுமதிப்போமானால், அது புதுச்சிருஷ்டியை அழித்துவிடக்கூடும்.

”பெருமை குறித்த ஒரு படிப்பினை”

யோசேப்பு பெருமை தொடர்புடைய விஷயத்தில் விலையேறப்பெற்ற படிப்பினையைக் கொடுக்கின்றார். “கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்” என்று நாம் பதிவில் வாசிக்கின்றோம் (ஆதியாகமம் 39:21). இவ்வுண்மையானது, பலமுறை யோசேப்பின் கதையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. துன்பம் நிறைந்த சூழ்நிலைகள் ஒவ்வொன்றிலும், அவர் பல்வேறு விதங்களில் தயவு பெற்றுக்கொண்டார். இந்த அனுபவங்களின் காரணமாக, யோசேப்பு தனக்குள் அதிக அளவிலான பெருமையை வளர்த்திடுவதற்கு அனுமதித்திருந்திருக்க முடியும். தான் அதிர்ஷ்டம் உள்ளவர் என்றோ (அ) தான் இயல்பாகவே அறிவுகூர்மையுள்ளவராக, கவர்ந்து இழுப்பவராக மற்றும் சாதுரியமானவராகக் காணப்பட்டதே தனது வெற்றிக்கான இரகசியமாகவும், தனது தகப்பன் தன்னை மிகவும் நேசித்ததற்கான காரணமாகவும் இருக்கின்றது என்றோ யோசேப்பால் எண்ணியிருந்திருக்க முடியும். இதன் காரணமாகவே தான் அடிமையாக விற்கப்பட்டபோது, தான் நல்ல ஓர் எஜமானால் வாங்கப்பட்டார் என்றும், தன்னுடைய சொந்த திறமையின் காரணமாகவே, போத்திபாரின் வீட்டில் தான் உயர் ஸ்தானம் பெற்றுக்கொண்டார் என்றும் யோசேப்பால் எண்ணியிருந்திருக்க முடியும். தனது உயர்தரமான திறமைகளினாலேயே, தனக்குச் சிறையில் அதிகாரம் வழங்கப்பட்டது என்றும், தன்னுடைய கூர்மையான அறிவின் காரணமாகவே, தன்னால் சொப்பனங்களுக்கு அர்த்தம் கூற முடிந்தது என்றும் யோசேப்பினால் எண்ணியிருந்திருந்திருக்க முடியும். இக்காரியங்கள் அனைத்தும் தன்னை மற்ற மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்து நிற்க/காணப்படப்பண்ணிற்று என்றும், தனது வெற்றிக்கான காரணமாகவும் அமைந்தது என்றும் யோசேப்பினால் எண்ணியிருந்திருக்க முடியும்.

யோசேப்பினால் இப்படியெல்லாம் எண்ணியிருந்திருக்க முடியும். இப்படி எண்ணுவதெல்லாம் மனித இயல்புதான். ஆனால் அவர், தான் நிழலாய்க் காணப்படுகின்றதான, இயேசுவின் மனப்பான்மையைப் பிரதிபலித்தவராய் இருந்தார். “நான் என் சுயமாய் ஒன்றும் செய்கிறதில்லை” என்று கூறி, இயேசு அனைத்துக் கனத்தையும் தேவனுக்கு உரியதாக்கினார் (யோவான் 5:30). யோசேப்பு (இயேசுவைப்போன்றதான) இம்மனப்பான்மையைக் கொண்டிராவிட்டால், அவர் உயர்த்தப்பட்டிருந்திருக்க மாட்டார், மாறாக வீழ்ந்து போயிருப்பார். “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என்று நாம் வாசிக்கின்றோம் (நீதிமொழிகள் 16:18). ஆகையால், “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது” என்பதை நினைவில் கொண்டவர்களாக, நாம் பெற்றுக்கொண்ட நன்மைகள் அனைத்திற்குமான கனத்தைக் கர்த்தருக்கே உரித்தாக்குவோம் (யாக்கோபு 1:17). “கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தர திசையிலுமிருந்து ஜெயம் வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்” (சங்கீதம் 75:6,7).

அடுத்துப் பொறுமையாய்ச் சகித்தல் பற்றின படிப்பினை உள்ளது. சிலசமயம் நாம் நம்மால் முடிந்தமட்டும் கர்த்தருக்கும், சகோதர சகோதரிகளுக்கும் ஊழியம் புரிகையில் மற்றும் நம்முடைய காரியங்களில் கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும், தயவுகளையும் மிகவும் குறிப்பிடத்தக்கதான விதத்தில் பெற்றுக் காணப்படுகையில், திடீரென பிரச்சனை எழும்பி, துன்பம் நம்மேல் கடந்து வந்துவிடுகின்றது. இருளின் அதிகாரங்கள் வெற்றிக்கொள்வது/ மேற்கொள்வது போன்று தோன்றலாம். நாம் தெய்வீக வழிநடத்துதல்கள் இன்றிக் காணப்படுவது போன்று தோன்றலாம். கர்த்தர் நம்மைக் கைவிட்டுவிட்டதுபோன்று தோன்றலாம். இவைகளே யோசேப்பின் அனுபவங்களாகும்; “என் தேவனே, என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்?” என்று இயேசு கதறினபோது, அவரும் இதேபோன்றதான அனுபவத்தில்தான் காணப்பட்டார் (மத்தேயு 27:46). யாருக்கு வேண்டுமானாலும் இவ்வனுபவங்கள் ஏற்படலாம். இவ்வனுபவங்கள் ஏற்படுகையில், யோசேப்பு காணப்பட்டது போன்று, நாமும் அமைதியான மற்றும் உறுதியான விசுவாசத்துடன் இருப்போமாக; காத்திருப்பது மாத்திரமல்லாமல், மாறாக நாளுக்கு நாள் நம்மால் முடிந்ததைச் செய்துகொண்டும் இருப்போமாக, அதாவது வேலை செய்து கொண்டும், காத்துக்கொண்டும் இருப்போமாக. தனது வழக்கை பார்வோனிடத்தில் குறிப்பிடும்படி பானபாத்திரக்காரனிடம் கேட்டுக்கொள்வதன் மூலமாக, சிறையிலிருந்து விடுதலை அடையும் விஷயத்தில், யோசேப்பு தன்னால் முடிந்தது அனைத்தையும் செய்தார் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

இக்கதையிலுள்ள மிகவும் முதன்மையான / குறிப்பிடத்தக்கதான மற்றும் உளங்கனிந்த படிப்பினை, யோசேப்பு இரக்கத்தோடு, தனது சகோதரர்களை மன்னித்ததாகும். தனது சகோதரர்களிடத்தில் தன்னை வெளிப்படுத்தினபோது, அவர்கள் அமைதி இழந்து காணப்பட்டதைக் கண்ட யோசேப்பு, அவர் முதலாவதாகவும், உடனடியாகவும் வெளிப்படுத்தினது, அனுதாபமும், இரக்கமுமாகும். அவரது மன்னிப்பில் அவர் இரக்கமுள்ளவராய் இருந்தார். தன்னை அடிமையாக எகிப்துக்கு விற்றுப்போட்டதன் மூலமாக, அவர்கள் தனக்கு நன்மையையே செய்திருக்கின்றார்கள் என்று அவர்களை அவர் ஒரு வழியாக நம்ப வைத்துவிட்டார்! அவரது அன்புடன் கூடிய வார்த்தைகளைக் கவனியுங்கள்:

“என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்” (ஆதியாகமம் 45:5,7,8).

“யோசேப்பினுடைய இரக்கமான வார்த்தைகள்”

இவைகள் இரக்கம் நிறைந்த வார்த்தைகள் அல்லவா? அவரது சகோதரர்கள் தாங்கள் மாபெரும் பாவம், அதாவது கொலைக்குச் சமமான பாவம் செய்த குற்றவாளிகளாக இருக்கின்றனர் என்பதை அறிந்திருந்தார்கள். இதை யோசேப்பும் அறிவார். ஆனால் இவைகளையெல்லாம் மேலான நன்மைக்கு ஏதுவாய்க் கர்த்தர் மாற்றிப்போட்டுள்ளார் என்பதையும் யோசேப்பு அறிவார். ஆகையால்தான் இதை மாத்திரம் யோசேப்பு குறிப்பிட்டார். யோசேப்பு பேசிக்கொண்டிருக்கையில், குற்றத்தினிமித்தமான திகில் அவர்கள் இருதயத்தை விட்டுப்போனது மற்றும் இருபத்து மூன்று வருடங்களிலேயே முதல் முறையாக, அவர்களது மனங்கள் யோசேப்பின் விஷயத்தில் சமாதானம் அடைந்தது. நமக்கு எதிராய்ப் பாவம் செய்கிறவர்களிடத்தில், நாமும் யோசேப்பைப்போன்று இரக்கங்கொள்வோமாக. அன்புடன்கூடிய வார்த்தைகளினால் இரக்கமான/கிருபையான பதில் எப்போதும் கொடுப்பதற்கு நாம் கற்றுக் கொள்வோமாக.

ஒருவேளை யோசேப்பு இந்தச் சுவிசேஷ யுகத்தின் பரிசுத்தவானாய்க் காணப்பட்டு இருந்திருப்பாரானால், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டிருந்திருப்பாரானால், வேதாகமத்தின் வெளிப்படுத்தல்களையும், எச்சரிப்புகளையும் மற்றும் தேவனுடைய குணம் மற்றும் அவரது நோக்கம் பற்றி வெளிப்படுத்தும், யுகங்களுக்கடுத்த தெய்வீகத் திட்டம் பற்றின அறிவையும் பெற்றிருந்து, பரம அழைப்புக்குரிய பந்தயப் பொருளுக்காக ஓடிக்கொண்டிருப்பவராகக் காணப்பட்டிருப்பாரானால், அவரது நடத்தையானது கிறிஸ்தவ வளர்ச்சியினுடைய மிக உயர்ந்த வகையாகக் கருதப்படுவதற்குப் பாத்திரமானதாகும். ஆனால் அவரது குணலட்சணமானது வளர்க்கப்பட்டதான சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் நாம் பார்க்கும்போது, அதாவது புறஜாதி தேசத்தில் தேவன் மற்றும் அவரது திட்டம் பற்றின சிறிய வெளிப்படுத்தல்கள் மாத்திரமே உள்ள சூழ்நிலையில், அவரது குணலட்சணம் வளர்க்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கையில், நாம் வியந்து நிற்கின்றோம். இந்தப் பாடத்தைப் படிக்கையில் நாம் நம்மிடமே கேட்க வேண்டியதாவது, “எல்லா விதத்திலும் மிகுந்த அனுகூலமுள்ளவர்களாய் நாம் இருக்கையில், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்? யோசேப்பைப் போன்றதான அதே சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களின் கீழ் நாம் காணப்படுவோமானால், நாம் யோசேப்பைப்போன்று பெருந்தன்மையுடன் நடந்திருப்போமா? இவைகளெல்லாம் நாம் சிந்தித்துப்பார்க்கப்பட வேண்டியவைகளாகும்.

யோசேப்பின் கதையைப் பார்க்கையில், உங்கள் இருதயம் பிரகாசமடைகின்றதா? இது உங்கள் கதை போன்றுள்ளதா? யோசேப்பின் அனுபவங்களில் உங்களை நீங்கள் அடையாளங்கண்டுகொள்ள முடிகின்றதா? அவருடைய கஷ்டங்களில் அவரோடுகூட உங்களால் அனுதாபமும், அவருடைய வெற்றியில் அவரோடுகூட உங்களால் மகிழ்ச்சியுங்கொள்ள முடிகின்றதா?

யோசேப்பு செய்தவைகள் சரியானது மற்றும் நீதியானது மற்றும் தேவனுக்கும் ஒத்ததாய் இருக்கின்றதென உங்களால் எண்ணிக்கொள்ள முடிகின்றதா? இது உங்களை இன்னும் அதிகமாய்த் தேவனை அன்புகூரவும், அவரை ஸ்தோத்தரிக்கவும் செய்கின்றதா? ஆம் என்றால் இது நீங்கள் கர்த்தரால் அன்புகூரப்படுகின்றவர்களும், அவரால் உயர்த்தப்படப் போகின்றவர்களுமான, “யோசேப்பின் வகுப்பாரில்” ஒருவராகக் காணப்படுகின்றீர்கள் என்பதற்கான சிறந்த நிரூபணமாகும்.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிழலாய்க் காணப்படுகின்றதான யோசேப்பின் மாதிரிக்காக நாம் பரம பிதாவுக்கு நன்றி ஏறெடுக்கின்றோம். நாமும் ஏற்றக்காலத்தில் உயர்த்தப்படுவதற்குப் பாத்திரவான்களாய்க் காணப்படத்தக்கதாக, இங்குச் சித்தரிக்கப்பட்டுள்ள பண்புகளையும், குணங்களையும்/தனித்தன்மைகளையும் அடைந்திடுவதற்கு உதவப்படுவோமாக.