R1646 (page 126)
ஆதியாகமம் 50:14-26
“நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும். – நீதிமொழிகள் 4:18
யோசேப்பினுடைய ஜீவியத்தின் இறுதிகாலமானது, பல கடுமையான சோதனைகளில் நிலைநின்றதும், நீதியினுடைய ஆசீர்வாதமான கனிகள் அநேகவற்றை வெளிப்படுத்தினதுமாகிய உண்மையான உயர்ப்பண்புகளை உடையவரென அவரை நமக்கு வெளிப்படுத்துகின்றது. அவரது வாழ்க்கை நிறைவு பெறுவது என்பது, பிரகாசமாய்ப் பிரகாசித்தப் பிற்பாடு, ஓய்வெடுப்பதற்கென மறையும் சூரியன் போன்று காணப்படுகின்றது. அவர் உண்மையுள்ள ஊழியக்காரனாகவும், நேர்மையான நண்பனாகவும், இரக்கமும், அனுதாபமுள்ள சகோதரனாகவும், கடமையுணர்வும், அன்புமுள்ள குமாரனாகவும், இறுதியில் தன்னடக்கமும், நிதானமும் உள்ள பிரபுவாகவும் இருந்திருக்கின்றார்.
யோசேப்பிற்கும், பெரும்பான்மையான முற்பிதாக்களுக்கும் கடுமையான சோதனைகளும், பயிற்சிக்கான அனுபவங்களும் வாழ்க்கையினுடைய ஆரம்பம் மற்றும் இடைப்பட்ட காலப்பகுதிகளிலே வந்துள்ளது மற்றும் இவர்கள் அமைதியான முதிர்வயதின் காலங்களைப் பலனாக அருளப்பெற்றனர்; ஆனால் மற்ற அநேகருக்கோ, அப்போஸ்தலன் எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் பட்டியலிட்டிருப்பது போன்று, இறுதி நாட்களோ பயங்கரமான துன்பங்கள் நிறைந்ததாகக் காணப்பட்டது மற்றும் இவர்கள் இரத்த சாட்சியின் மரணம் மரித்தவர்களுமானார்கள். உபத்திரவம் எனும் சூளையில் கர்த்தருடைய ஜனங்கள் சோதிக்கப்படுகிறதும், பயிற்றுவிக்கப்படுகிறதுமான காரியமானது, அநேகரால் கர்த்தருடைய வெறுப்பிற்கான சாட்சியாகவும், பூமிக்குரிய வளமையானது கர்த்தருடைய கடாட்சத்திற்கான சாட்சியாகவும் கருதப்படுகிறது. ஆனால் இது பெரிய தவறாகும்; ஏனெனில் இரண்டு வகையான அனுபவங்களுமே சோதனை மற்றும் பரீட்சையின் பாகங்களாக இருக்கின்றன. ஒரு பக்கத்தில் நாம் துன்பத்தின் புயல்களினால் சோதிக்கப்படுகின்றோம் மற்றும் மற்றவர்களோ பூமிக்குரிய வளமைகளினால் உண்டாகும் அமைதியான நிலைமையினால் சோதிக்கப்படுகின்றனர்; துன்பத்தில் துவண்டு போகாதவனும் அல்லது வளமையினால் வஞ்சிக்கப்பட்டுப் போகாதவனுமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவானாய் இருக்கின்றான். இப்படிப்பட்ட நன்கு வனையப்பட்ட, சீரான மற்றும் பலமான பாத்திரங்கள் உண்மையில் கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்களாய்க் காணப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு மனிதனாகவே யோசேப்பு காணப்பட்டார்; இவர் ஜீவியத்தின் ஆரம்பக் காலங்களில் துன்பமெனும் பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டவர் ஆவார் மற்றும் இவரது ஜீவியத்தின் இறுதி காலங்களிலோ பூமிக்குரிய வளமையின் மிக உயர்ந்த அலைகளானது, இவரை ஒருபோதும் இறுமாப்பிற்கு நேராக அழைத்துச் செல்லவுமில்லை, தன் நிலைமையை இவர் மறந்துபோகவும் பண்ணவில்லை. இந்தப் பூமிக்குரிய வளமைகளுக்கு அப்பால் இவர் இன்னமும், “தேவன் தாமே கட்டி, உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கே” காத்திருந்தார். தேவன் மீதான இவரது நம்பிக்கையும், ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறும் என்ற இவரது விசுவாசமும், இவரை ஒருபோதும் கைவிட்டுவிடவில்லை. இவர் ஐசுவரியத்தினாலும், சௌகரியங்களாலும் சூழப்பட்டிருந்தாலும், எகிப்து வாக்களிக்கப்பட்ட தேசமல்ல என்று இவர் நினைவில் கொண்டவராய்க் காணப்பட்டார்; இவர் மரிக்கும்போது தனது தகப்பனாகிய யாக்கோபு போன்று, தன்னுடைய சரீரம் கானான் தேசத்தில் அடக்கம் பண்ணப்பட வேண்டுமென்று கட்டளையிடுவதின் மூலம், உயிர்த்தெழுதல் மற்றும் தெய்வீக வாக்குத்தத்தத்தினுடைய நிறைவேறுதல் தொடர்பான தனது நம்பிக்கையைச் சுட்டிக்காட்டினவராகக் காணப்பட்டார் (ஆதியாகமம் 50:24,25); “விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரயேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்திய காலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்” (எபிரெயர் 11:22).
யோசேப்பை உயர்த்தின பார்வோனுக்கு, அவர் மிகவும் பயனுள்ள ஊழியக்காரனாய் இருந்தபடியால், அரியணையில் பின்வந்த பார்வோனும், அவரைப் பணியில் தொடரப்பண்ணினான்; அநேகமாக யோசேப்பு தன்னுடைய ஜீவியத்தின் முடிவுவரையிலும் பணியில் தொடர பண்ணப்பட்டிருக்க வேண்டும். யோசேப்பினால் எகிப்திற்கு வந்த நன்மைகளானது, மகா விலையேறப்பெற்றதாய் இருந்தது மற்றும் இந்த நன்மைகளானது மிகவும் நன்றியுணர்வோடு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், நினைவுகூரப்பட்டதாகவும் தெரிகின்றது.
ஆதார வசனத்தில் இடம்பெறும், “நீதிமான்களுடைய பாதையானது,” தனிப்பட்ட நபர்களுடைய பாதையல்ல, மாறாக அனைத்து நீதிமான்களும் நடக்கும் ஒரு பாதையாகும்; அது நீதியின் பாதையாகும் (சங்கீதம் 23:3); அது சாந்தத்தின், பொறுமையின், விசுவாசத்தின், அன்பின் [R1646 : page 127] பாதையெனக் கர்த்தருடைய வார்த்தையானது சுட்டிக்காட்டும் பாதையாகும்; மேலும் இப்பாதையில் நடப்பவர்கள், தேவனால் அனைத்துச் சத்தியங்களுக்கு நேராக, அதனதன் ஏற்றக்காலங்களில் வழிநடத்தப்படுகின்றார்கள். இந்தப் பாதையானது நடுப்பகலை நெருங்குகையில், தெய்வீகச் சத்தியத்தினுடைய மகிமையான ஒளியினால் மிகவும், மிகவும் பிரகாசிக்கின்றதாய் இருக்கும்; நடுப்பகலில் நீதியின் சூரியனானது உதித்திருக்கும் மற்றும் கர்த்தரைப் பற்றின அறிவானது, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல பூமியை நிரப்பியிருக்கும்; அது பூமியின் மீதான கிறிஸ்துவினுடைய ஆளுகையின் ஆயிரவருட நாளாகும்.
முற்காலத்தின் அனைத்துத் தீர்க்கத்தரிசிகளும், முற்பிதாக்களும், பரிசுத்தவான்களும் இந்தப் பாதையில் நடந்துசென்றுள்ளனர் மற்றும் அவர்கள் அனைவரின் மீதும் அந்தந்த ஏற்றவேளைகளில் தேவனுடைய ஒளியானது பிரகாசித்தது; ஆனால் அவர்களில் எவருக்கும், இன்று பிரகாசிக்குமளவுக்கு ஒருபோதும் மிகவும் தெளிவாய்ப் பிரகாசிக்கவில்லை; ஏனெனில் நாம் இப்பொழுது கிறிஸ்துவினுடைய மகிமையான நாளினுடைய விடியலில் காணப்படுகின்றோம் மற்றும் சீக்கிரத்தில் இந்த வெளிச்சமானது அனைவர் மீதும் பிரகாசித்திடும்.
ஆமென்!!
_________
திடன்கொள்! தொடர்ந்து செல்…
சோர்வுக்குள்ளானாயோ! சரி, அதற்கென்ன?
தென்றல் காற்று வீசிட, அது ரோஜா இலைகளை மெல்ல பரப்பிட,
இப்படிச் சௌகரியமாய் வாழ்க்கையைக் கடத்தலாமெனக் கற்பனை செய்திட்டாயோ?
வா, எழுந்திரு! பகற்காலமாயிருக்கும் மட்டும் கிரியையைச் செய்திடு;
திடன்கொள்! எழுந்திரு! உன் வழியிலேயே தொடர்ந்து நட…
தனிமைக்குள்ளானாயோ! சரி, அதற்கென்ன?
சிலர் தனிமையில்தான் இருந்திட வேண்டும்;
எழுச்சியிலும், வீழ்ச்சியிலும் தன்பால் இசைந்திருக்கும் இருதயம் ஒன்றினை பெறுவதும்,
தன் ஜீவியத்திற்குள் மற்றொருவரை இணைக்கப்பெறுவதும்,
எல்லாருக்கும் அருளப்பட்டதல்லவே;
தனிமையிலும் நீ வேலை செய்திடலாம். தொடர்ந்து செய்…
இருளாய் இருக்கின்றதோ! சரி, அதற்கென்ன?
சூரியன் ஒருபோதும் அஸ்தமிப்பதில்லை என்ற கனவில் இருக்கின்றாயோ?
உன் வழிதனில் பயம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதோ?
எனினும் திடன்கொள்!
தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பதற்குக் கற்றுக்கொள்;
உன் பாதங்களுக்கு வழிக்காட்டப்படும், ஆம் சரியாய் வழிகாட்டப்படும்.
கஷ்டமாய் இருக்கின்றதோ! சரி, அதற்கென்ன?
வாழ்க்கை முழுவதும் கோடைக்கால விடுமுறையாகவும்,
படிப்பதற்கு ஏதுமில்லாமல், விளையாடிக்கொண்டே இருக்கலாமெனவும்
கற்பனையில் மிதந்திட்டாயோ?
போ – உன் வேலையைப் போய்த் தொடர்ந்து செய்!
ஓன்றில் ஜெயங்கொள் அல்லது மரித்துவிடு!
இதனையே கற்றுக்கொள்ள வேண்டும்; ஆம் பொறுமையோடே கற்றுக்கொள்.