R3980 – இரக்கமுள்ள யோசேப்பு

துன்பம் எனும் பள்ளிகூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R3972 - துன்பத்தின் மத்தியில் பொறுமையாய்ச் சகித்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R1635 - பொறாமை மற்றும் விரோதம்
R1639 - யோசேப்பு எகிப்தில் விற்கப்பட்டார்
R1268 - இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது
R5216 - துன்பப்பட்டவர், எனினும் தேற்றுபவர்
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
யோசேப்பு எகிப்தின் சிங்காசனத்தில்
R1640 - யோசேப்பு அதிகாரியாக எகிப்தில்
R2887 - ஏனெனில், தேவன் அவனோடேகூட இருந்தார்
R3978 - என்னைக் கனம் பண்ணுகிறவர்களை, நான் கனம் பண்ணுவேன்
யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R2893 - இரக்கமுள்ள யோசேப்பு
R3980 - இரக்கமுள்ள யோசேப்பு
R1645 - யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல்
R5234 - பலியைப் பார்க்கிலும் இரக்கம் உத்தமமாயிருக்கிறது
R5231 - பென்யமீனுக்கு ஐந்து மடங்கான பங்கு
R5232 - யோசேப்பின் சகோதரர்களால் கற்றுக்கொள்ளப்பட்ட பாடங்கள்
R5225 - விதைத்தலும், அறுத்தலும்
யோசேப்பின் இறுதிக்காலங்கள்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R1646 - யோசேப்பின் இறுதி நாட்கள்
பிற்சேர்க்கை
R57B - யோசேப்பு மற்றும் கிறிஸ்து -சகோதரர் ஜெ. எச். பி.
யோசேப்பும், அவரது சகோதரர்களும்- சகோதரர் ராபர்ட் எஸ். ஷெக்லீமியன்
யோசேப்பின் வெள்ளிப்பாத்திரம்-சகோ. யூஜின் பேர்ண்ஸ்

R3980 (page 123)

இரக்கமுள்ள யோசேப்பு

BLESSED ARE THE MERCIFUL

“ஆதியாகமம் 45:1-15; 50:15-21 (refs2)

“ஒருவருக்கொருவர் தயவாயும், மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” – எபேசியர் 4:32
யோசேப்பினுடைய சரித்திரத்தின் உச்சக்கட்டத்தை இப்பாடத்தில் நாம் பார்க்க இருக்கின்றோம். வேதாகமத்தின் எளிமையான பதிவுகளை வாசித்து, அதினால் ஆசீர்வதிக்கப்படாமல் எவரும் காணப்பட முடியாது. யோசேப்பு அடிமையாக எகிப்திற்கு வந்து, 22-வருடங்களுக்குப் பின்னாக நடந்த சம்பவத்தை இந்தப் பாடத்தில் பார்க்கவிருக்கின்றோம். திரளான அறுவடைகளுள்ள ஏழு வருடங்கள் முடிந்து மற்றும் ஏழு வருட பஞ்சக் காலத்தின், இரண்டாம் வருடமாக அப்போது இருந்தது. யோசேப்பு எகிப்தின் அதிபதியானபோது, தனது வயதான தந்தையைத் தொடர்புகொள்வதற்கான அநேகம் வாய்ப்புகள் அவருக்கு இருந்தது என்பதை விசேஷமாய் நாம் நினைவுகூர்ந்து, அவர் ஏன் அந்த 22-வருடங்கள் முழுவதிலும் தொடர்புகொள்ளவில்லை என்று யோசிக்க முற்படுவோமானால், யோசேப்பின் காரியங்கள் அனைத்தும் எப்படிக் குறிப்பாகக் கர்த்தரினால் வழிநடத்தப்படுகின்றது என்பதையும், இந்த விஷயத்திலும் அவர் தெய்வீக வழிகாட்டுதலின்படியே செயல்பட்டுக்கொண்டிருந்தார் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். வறட்சியும், அதன் விளைவான பஞ்சமும் பாலஸ்தீனியாவிலும், அநேக நாடுகளிலும் பரவிக் காணப்படும் என்பதை அறிந்திருந்த யோசேப்பு, தனது சகோதரர்கள் (எகிப்துக்கு) வருவார்கள் என்று எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார். பஞ்சமானது எபிரெயர்களை, ஆகாரம் வாங்கும்படிக்கு எகிப்துக்கு வரச்செய்யும் என்ற எதிர்ப்பார்ப்பில், நம்பிக்கைக்குப் பாத்திரமான சில ஊழியக்காரர்கள் மூலமாக, எபிரெயர்கள் வருகிறார்களா என்று பார்த்துக்கொள்வதற்குக் கண்காணிக்க அமர்த்தப்பட்டிருப்பார்கள் என்பது உறுதியே. ஆகவேதான் யாக்கோபின் பத்துக் குமாரர்கள் வந்தபோது, யோசேப்பு உடனடியாக அதைத் தெரிந்துகொண்டார். அவர்கள் கைது செய்யப்பட்டு, யோசேப்பிற்கு முன்பு கொண்டுவரப்பட்டார்கள் மற்றும் சந்தேகத்தோடு அவர்கள் பார்க்கப்பட்டு, வேவுகாரர்கள் எனக் குற்றஞ் சுமத்தப்பட்டு, மூன்று நாட்கள் சிறையில் போடப்பட்டார்கள்.

அதிபதியான யோசேப்பு தன்னை முற்றும் முழுமையாக மறைத்துக்கொள்ளத்தக்கதாகவும், தனது சகோதரர்கள் தனது முன்னிலையில் தங்கள் பேச்சில்/ சம்பாஷணையில் ஒளிவு மறைவு இல்லாமல் காணப்படத்தக்கதாகவும், துபாசியின் மூலமாகவே அவர்களிடத்தில் பேசினார். அவர்கள் சிறையில் மூன்று நாட்கள் கழித்த பிற்பாடு, யோசேப்பு அவர்களை நேருக்கு நேர் சந்தித்துப் பேசினார் மற்றும் அவர்கள் தங்களுக்கு இவ்விஷயத்தில் வந்துள்ளதான துன்பமானது, அவர்கள் 22-வருடங்களுக்கு முன்னதாக தங்கள் சகோதரனுக்குச் செய்த தவற்றின் நிமித்தமான கர்த்தருடைய நியாயத்தீர்ப்பாக இருக்கின்றது என்று தாங்கள் உணர்ந்து கொண்டதை ஒருவரோடொருவர் ஒப்புக்கொண்டதையும் யோசேப்பு கேட்டார். சாகும்படிக்குத் தன்னைக் குழியில் போட்டபோது, தான் கதறின கதறல்களை அவர்கள் இன்னமும் நினைவில் கொண்டிருப்பதை யோசேப்பு கவனித்தார்; மற்றும் இந்தக் காரியமானது அவர்களது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும், அவர்கள் இப்பொழுது மாற்றமான இருதய நிலைமையில் காணப்படுவதையும் யோசேப்பு உணர்ந்துகொண்டார். அவர்களில் ஒருவரைப் பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்குக் கொஞ்சம் ஆகாரம் கொடுத்து, அவர்கள் இனித் திரும்பி வருகையில் தாங்கள் சொல்லியவைகள் உண்மையானவைகள் என்று நிரூபிக்கத்தக்கதாக, தாங்கள் குறிப்பிட்ட இளைய சகோதரனைக்கொண்டுவர வேண்டும் என்றும், இப்படியாக அவர்கள் தங்கள் நேர்மையை நிரூபிப்பார்களானால், பிற்பாடு அவர்கள் (ஆகாரம் பெற்றுக்கொள்வதற்கென எகிப்துக்கு) வந்துபோவதற்கு எந்தத் தடையும் இருக்காது என்றும் உறுதியளித்து, அவர்களை அனுப்பி வைத்தார்.

அவரது சகோதரர்கள் காவல் கிடங்கில் (சிறையில்) காணப்படுகையில், தங்களது இந்த அனுபவங்களை யோசேப்போடு தொடர்புபடுத்திப் பார்த்தார்கள் மற்றும் இருதயத்தில் தங்கள் தவறான நடத்தைக்கான படிப்பினையை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். வேறு ஒரு பாடத்தில் இந்த மனிதர்களில் ஒருவரைத்தவிர, மற்றவர்கள் அனைவரும் தங்கள் இருதயத்தில் கொலைப்பாதகர்களாக இருந்ததாக நாம் பார்த்திட்டாலும், இன்றைய பாடத்தில் அவர்களது குணலட்சணங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பதை நாம் காண்போம். இந்த மாற்றம் அநேகமாக அவர்களது தந்தை, யோசேப்பின் மரணத்தின் நிமித்தம் அடைந்த துயரத்தின் காரணமாகவும், இன்னுமாக சந்தேகத்திற்கிடமின்றி தங்கள் சொந்த தவறான செய்கையின் நிமித்தமான மனவுளைச்சலின் காரணமாகவும் ஏற்பட்டது. ஆகையால் ஒரு தீமையான செய்கை என்பது எப்போதும் இன்னும் தீமை செய்வதற்கு வழிநடத்துகின்றதாய் இருக்காது, மாறாக சில சமயங்களில் குணலட்சணத்திற்கான திருப்புமுனையாகக்கூட அமைகின்றது. இம்மாதிரியான விதத்தில் எந்தக் கிறிஸ்தவன்தான் அனுபவம் பெற்றிராதவனாக இருப்பான்? அவன் குறிப்பிட்ட சில குணலட்சணத்தில் பெலவீனமாய் இருப்பதை அவனுக்கு வெளிப்படுத்துகின்றதான, அவன் தவறும் கட்டங்களானது, அவனுக்கு உண்மையில் விலையேறப்பெற்றப் படிப்பினையாக இருந்து, அவனை அந்தக் குறிப்பிட்ட குணலட்சணத்தில் பலப்படுத்தி, அதே விஷயத்தில் எதிர்க்காலத்தில் வருகின்றதான பரீட்சைகளிலும், சோதனைகளிலும் நன்றாய் நிற்க உதவி செய்கின்றது. “இப்படியாக நம்முடைய ஜீவியத்தின் அனுபவங்கள் அனைத்தும் (ஜீவியத்தின் தவறுகள்கூட) சரியாகப் பயன்படுத்தப்படும்போது, மேலான காரியங்களுக்குரிய படிக்கற்களாக அமைகின்றது.”

“மிகவும் மாற்றமடைந்துள்ள பத்து மனிதர்கள்”

வீட்டிற்குத் திரும்பின பின் அவர்கள், நடந்த சம்பவத்தைத் தங்கள் தந்தையாகிய யாக்கோபினிடத்தில் விவரித்தார்கள்; பிணைக்கைதியாகப் பிடித்து வைக்கப்பட்டதின் நிமித்தம், சிமியோனையும் இழந்துபோனபடியால், யாக்கோபு இப்பொழுது துக்கம் அடைந்திருந்தார், ஆனாலும் பென்யமீனை தன்னிடமிருந்து பிரித்து அனுப்பிவைப்பதற்கு அவர் முற்றிலும் மறுப்புத் தெரிவித்துவிட்டார். இங்குத் தனது தகப்பனுடைய துயரத்தைக் கண்ட ரூபன், பென்யமீனை பாதுகாப்பாய்க்கொண்டுவரும் விஷயத்திற்கு, தன்னையும், தனது பிள்ளைகளையும் பிணைக்கைதிகளாக ஒப்புவித்தார். பஞ்சம் அவர்களைக் கடுமையாய் வாட்டினபோது, பட்டினி அவர்களைப் பயமுறுத்தினபோது யாக்கோபு, பென்யமீனை அவரது சகோதரர்களோடுகூட எகிப்துக்குச் செல்லுவதற்கு அனுமதித்தார், அதுவும் ஏதாகிலும் பென்யமீனுக்குச் சம்பவித்தால், அதற்குப் பொறுப்பு தான் என்று வாக்களித்த யூதாவின் நிச்சயத்தின் பேரில் யாக்கோபு சம்மதித்தார். கடந்த 22-வருடங்களாக இந்த மனிதர்கள் தங்கள் தகப்பனாரிடமிருந்து, அனுதாபம் பற்றின படிப்பினைகளைக் கற்றுக்கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் தகப்பனிடத்தில் மிகவும் அக்கறையற்றவர்களாக இருந்து, தகப்பனுக்குப் உபத்திரவத்தைக்கொண்டு வந்தவர்கள், இப்பொழுதோ அவருடைய ஆறுதலுக்கெனத் தங்கள் சொந்த ஜீவியங்களையும் கையளிப்பதற்குங்கூட விருப்பம் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இம்மனிதர்கள் இஸ்ரயேலினுடைய கோத்திரத்தலைவர்களாக இருந்தார்கள் என்பதையும், இவர்களுடைய பிள்ளைகளில் சிலர் வரலாற்றில் மிகவும் சிறப்பு மிக்கவர்களாக இருந்தனர் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும்; உதாரணத்திற்கு மோசே மற்றும் ஆரோனையும் உள்ளடக்கின ஒட்டுமொத்த ஆசாரிய கோத்திரத்திற்கு லேவி பிதாவாகக் காணப்பட்டார்; யூதா வம்சாவழியில் தாவீதும், சாலொமோனும் மற்றும் நமது கர்த்தராகிய இயேசுவும் வந்தார்கள். இந்த மனிதர்களுக்கு, அவர்களது தகப்பனார் மற்றும் பஞ்சம் முதலியவை தொடர்பாக மாபெரும் படிப்பினைகளைக் கொடுப்பது தெய்வீக நோக்கத்தின் ஒரு பாகமாகக் காணப்பட்டது என்பது நிச்சயமே; இப்படிப்பினைகளானது அவர்களுக்கு நன்மையாய் இருப்பது மாத்திரமல்லாமல், எதிர்க்காலம் முழுவதிலும் தாக்கம் ஏற்படுத்துகின்றதாயும் இருக்கும்.

தங்கள் தகப்பன் வீட்டிலிருந்து, எகிப்துக்கு வந்த பத்துச் சகோதரர்களும், தாங்கள் அதிபதியினுடைய அரமனைக்குள் பிரவேசிப்பதற்கென வழிகாட்டப்பட்டபோது, ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் முன்பு வந்து தானியங்களை வாங்கினபோது, விலையாகக் கொடுத்திருந்த பணமானது, அவர்கள் சாக்கினைத் திறந்தபோது காணப்பட்டது மற்றும் அந்தப் பணத்தையும், இன்னும் அதிகம் கோதுமை வாங்குவதற்கான பணத்தையும் தாங்கள் கொண்டு வந்திருப்பதாகக்கூறி, யோசேப்பின் விசாரணைக்காரனிடம் விவரித்தார்கள். தாங்கள் பணத்தைத் திருடிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுவார்களோ என்று அவர்கள் நடுங்கினார்கள்; எகிப்திய சட்டத்தின்படி திருடியதற்கான தண்டனை, அடிமையாக்கப்படுவதாகும். யோசேப்பின் விசாரணைக்காரன் தனது எஜமானுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும், எஜமானுடைய மதம் பற்றின அறிவு கொஞ்சம் கொண்டிருப்பவராகவும் தென்படுகின்றார், ஏனெனில் அவர் அவர்களிடத்தில் இரக்கத்துடன் கூறினதாவது, “உங்களுக்குச் சமாதானம்; பயப்பட வேண்டாம்; உங்கள் தேவனும், உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்.” சிமியோனை விடுதலைப் பண்ணி, அவர்களிடத்தில் [R3981 : page 123] கொண்டுவந்து விட்டதன்மூலம், இன்னுமாக அவர்களுக்கு விசாரணைக்காரன் நம்பிக்கையூட்டினார். அவர்களுக்குச் சொல்லப்பட்டப்படியே அவர்கள் தங்களைக் கழுவிக்கொண்டு, அதிபதியினுடைய வீட்டில் போஜனம் பண்ணும்படிக்கு ஆயத்தமானார்கள். இதற்கெல்லாம் அர்த்தமென்ன?

விவசாயிகளாகக் காணப்பட்ட அவர்களுக்கு அரமனையின் சூழ்நிலைகள் புதிதாய் இருந்தது மற்றும் தங்களை முன்பு வேவுகாரர்களென நடத்தின அதிபதி, ஏன் இப்பொழுது தங்களை இவ்வளவுக்குப் பெருந்தன்மையுடன் நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சூழ்நிலைகளினுடைய விநோதங்களை அவர்கள் கவனித்தபோது, அவர்களது ஆச்சரியம் உடனுக்குடன் அதிகரித்துக்கொண்டே போனது; அவர்களது பிறப்பினுடைய வரிசையின்படி அவர்கள் அமர்த்தப்பட்டனர் மற்றும் யோசேப்பின் தனி மேஜையிலிருந்து/பந்தியிலிருந்து போஜன பங்கு தங்களுக்கு வந்தபோது, பென்யமீன் மீது அதிபதி விசேஷித்த தயவு கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணம் பென்யமீனுக்கு ஐந்து பங்குகள் அனுப்பப்பட்டதை அவர்கள் கவனித்தார்கள். தங்கள் மொழியை அதிபதி புரிந்துகொள்ள முடியும் என்பதையும், தாங்கள் இன்னமும் பொறாமைக் கொண்டிருக்கின்றனரா அல்லது இல்லையா என்பதை அறிந்துகொள்ளத்தக்கதாக, தங்களது வார்த்தைகளை அதிபதி கவனித்துக்கொண்டிருக்கின்றார் என்பதையும் அல்லது இளைய சகோதரனுக்குக் கிடைத்திட்ட விசேஷித்த தயவினுடைய இந்த வெளிப்படுத்தலை தாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகின்றார்கள் என்பதை அதிபதி கவனித்துக்கொண்டிருக்கின்றார் என்பதையும் அவர்கள் அறியாதிருந்தார்கள். அவர்கள் பரீட்சையில் ஜெயித்தார்கள். தங்கள் பொறாமையானது செத்துப்போய்விட்டது என்பதையும், தங்களது இளைய சகோதரனுக்குக் கிடைத்திட்ட தயவில் தாங்கள் களிக்கூருகின்றார்கள் என்பதையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.

இன்னும் அடுத்தப்படியான பரீட்சை நிகழ்த்தப்பட வேண்டியிருந்தது; அந்த மனிதர்கள் பெற்றுக் கொண்ட ஆகாரத்துடன் புறப்பட்டுப்போகும்படிக்கு அனுமதிக்கப்பட்டார்கள், ஆனால் [R3981 : page 124] பென்யமீனுடைய கழுதையின் மீது ஏற்றப்பட்டிருந்த சாக்குகளில், ஒன்றில் விசாரணைக்காரன் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி அதிபதியினுடைய வெள்ளிப்பாத்திரத்தை வைத்தான்; அவர்கள் பட்டணத்தைத் தாண்டி செல்கையில், அவர்கள் அரமனையின் காவலர்களால் தொடர்ந்து பிடிக்கப்பட்டு, அவர்கள் அவமரியாதையாய் நடந்துகொண்டுள்ளதாகவும், அதிபதியினுடைய “புனிதமான பாத்திரத்தை” திருடினதின் மூலமாக, அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைக்கு, தீமையைச் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று அறிக்கைப் பண்ணிக்கொண்டு, ஒருவேளை தங்களிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டால், யாரிடத்தில் கண்டுபிடிக்கப்படுகின்றதோ, அவர் மாத்திரமல்லாமல், தாங்கள் அனைவருமே அடிமையாகிக்கொள்வதாகக் கூறினார்கள். பாத்திரத்திற்கான தேடுதலானது மூத்தவன் துவங்கி, இளையவன் மட்டும் நிகழ்த்தப்பட்டது; பென்யமீனிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சகோதரர்கள் எவ்வளவு கலக்கம் அடைந்திருந்திருப்பார்கள் என்று நம்மால் நன்கு கற்பனை செய்து பார்க்க முடிகின்றது; குற்றவாளி மாத்திரம் தனக்கு அடிமையாக வந்திட வேண்டும் என்று விசாரணைக்காரன் சொன்ன போதிலும், அவர்கள் அனைவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள். தங்கள் தகப்பனாகிய யாக்கோபின் முகத்தை அவர்களால் எப்படிப் பார்த்து, இந்தப் பெருந்துன்பத்தை விவரித்திட முடியும்? அரமனைக்குத் திரும்பியபோது, அங்கு அதிபதியாகிய யோசேப்பு காணப்பட்டார். யோசேப்பிற்கு முன்னதாக விழுந்து வணங்கினார்கள் மற்றும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று மறுப்புத் தெரிவிப்பது பயனற்றது என்று அறிந்தவர்களாக, இந்தக் காரியத்தைப் பெருந்துன்பமெனக் கூறி, தங்களை அடிமைகளாக ஒப்புக் கொடுத்தார்கள்.

அதிபதியோ, “இல்லை! எகிப்தியர்களாகிய நாங்கள் ஒரு மனிதன் செய்த தவறுக்காக, உங்கள் அனைவரையும் அடிமையாக்கும் அநியாயமான காரியத்தைச் செய்வதில்லை. குற்றவாளி மாத்திரம் அடிமையாய்ச் சேவை புரியட்டும், மீதமானவர்கள் போகலாம். உங்கள் வீடுகளுக்கும், உங்கள் குடும்பங்களிடத்திற்கும் திரும்புங்கள்; உங்கள் கோதுமையை எடுத்துச்செல்லுங்கள்” என்று பதிலளித்தார். ஒருகாலத்தில் தனது சகோதரனாகிய யோசேப்பு மற்றும் தனது தந்தையாகிய யாக்கோபின் விஷயத்தில் கடின இருதயத்துடன் காணப்பட்ட யூதா, இத்தருணத்தில் மிகவும் உருக்கமான வேண்டுதலை அதிபதியினிடத்தில் ஏறெடுத்தார்; இந்த வேண்டுதலின் எளிமையும், வெளிப்படையான தன்மையும், அனுதாபமும், சரித்திரத்தின் பதிவுகளிலேயே இந்த வேண்டுதலை தலைச்சிறந்த ஒன்றாக்கிற்று. பென்யமீனைக் கொண்டு வந்தது தொடர்புடைய சம்பவங்களையும், பென்யமீனைப் பிரிகையில் தனது தந்தை அடைந்திட்ட துயரத்தையும், பென்யமீனுக்கு ஏதாகிலும் சம்பவித்தால், அது தனது தகப்பனுடைய மரணத்தைத் துரிதப்படுத்திடும் என்பதையும், தான் எவ்வாறு தனது சகோதரனாகிய பென்யமீனுக்கு உத்தரவாதமாய்க் காணப்படுகின்றார் என்பதையும் யூதா அதிபதியினிடத்தில் விளக்கிக்கூறி, “இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்” (ஆதியாகமம் 44:18-34).

“துன்பகாலத்தில் நம்பிக்கையூட்டும் ஓர் அம்சம்”

அந்தச் சகோதரர்கள் மீது கர்த்தரும், யோசேப்பும் வைத்த இறுதிப் பரீட்சையில் அவர்கள் வெற்றியடைந்தார்கள். இந்தப் பரீட்சையானது அவர்கள் மாற்றம் அடைந்துள்ள மனிதர்களாக இருக்கின்றனர் என்பதையும், இரக்கமின்மைக்கும், கல்நெஞ்சத்திற்கும், கொடூரமான மிருகத்தனத்திற்கும் பதிலாக அவர்கள் இப்பொழுது மனவுருக்கம் உடையவர்களாகவும், இரக்கம் உடையவர்களாகவும், ஒருவருக்காக இன்னொருவர் பாடுபடுவதற்கு விருப்பமுள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதையும் நிரூபித்தது. அவர்கள் மீது கொஞ்ச காலம் நிழலிட்டிருந்த மேகங்களும், நிழல்களும் கலைந்து போவதற்கான வேளை வந்தது. அதிபதியாகிய யோசேப்பினால் இனியும் தன்னை அடக்கிக்கொள்ள முடியாமல் இருந்தது. யோசேப்பு தனது சகோதரர்களுடன் தனிமையில் காணப்படத்தக்கதாக, யோசேப்பு மற்றவர்களை வெளியேறும்படிக்குக் கட்டளையிட்டார்; அங்கு நிகழப்போகிறவைகள், மற்றவர்கள் பார்க்கக்கூடாது எனும் அளவுக்கு முக்கியமானதாக இருந்தது. தனது மௌனத்தைக் கலைப்பதற்கும், தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்குமான நேரம் யோசேப்பிற்கு வந்தது. அவர்கள் மாத்திரமே அங்கு நிற்க, யோசேப்பு அழுதார், மற்றும் தான் யார் என்பதையும், தனக்கு விரோதமாக அவர்கள் 22-வருடங்களுக்கு முன்பாகச் செய்த காரியங்கள், எப்படித் தேவனுடைய வழிநடத்துதலின் கீழ்த் தன்னுடைய நன்மைக்கு ஏதுவாய் மாற்றப்பட்டது என்பதையும் யோசேப்பு அவர்களிடத்தில் கூறினபோது, உணர்வுகளினால் அவரது குரல் நடுங்கியது. குற்றம் புரிந்திருந்த அந்த மனிதர்கள் முன்பில்லாத அளவுக்கு இப்பொழுது அச்சத்தால் நடுங்கினார்கள். தங்களுக்கு எதிராக தங்கள் சகோதரன் எப்படிக் கோபம் கொள்ளப்போகிறார்? எப்படித் தாங்கள் செய்திட்ட தீமைக்கு, தீமையைச் சரிகட்டிப் பழிவாங்கப்போகிறார்? மற்றும் தங்களை அடிமையாக்கப்போகிறாரா (அ) கிடங்கில் தள்ளப்போகிறாரா? என்று எண்ணி நடுங்கினார்கள்.

ஆனால் சந்தோஷத்தின் கண்ணீர்களை யோசேப்பு சிந்துகையில், தனது சகோதரர்களிடம் இரக்கமாய்ப் பேசினார்; யோசேப்பைவிட்டு விலகி ஓடுவதற்குரிய நிலைமையில் ஆரம்பத்தில் காணப்பட்ட அவர்கள், யோசேப்பின் பக்கத்தில் போனார்கள் மற்றும் யோசேப்போ, “என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார். நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுவதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்கவேண்டாம்” என்றார் (ஆதியாகமம் 45:5-9). இக்காட்சியைக் காட்டிலும் அதிகம் விறுவிறுப்பான சம்பவங்கள் அடங்கின நாடகக் காட்சியைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது; இக்காட்சியில் எளிமையும், நேர்மையும் காணப்படுகின்றது மற்றும் இவைகளுக்கு மேலாக ஒரே மாபெரும் போதகராகிய தேவனிடமிருந்து மாத்திரமே வெளிப்படுகின்றதும் மற்றும் அவருடன் நெருக்கமாய்க் காணப்படுகின்றவர்களாலும், அவரிடமிருந்து அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டவர்களாலும் மாத்திரமே, மாதிரிபடுத்துகின்றதுமான அன்பு மற்றும் இரக்கத்தின் ஆவியும் காணப்படுகின்றது.

“மனவுருக்கம், ஒருவருக்கொருவர் மன்னித்தல்”

ஒருவேளை யோசேப்பு இந்த யுகத்தின் பரிசுத்தவானாய்க் காணப்பட்டிருந்திருப்பாரானால், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டிருந்திருப்பாரானால், வேதாகமத்தில் நாம் பெற்றிருக்கிறதான தெய்வீக நோக்கம் மற்றும் தேவன் பற்றின பல்வேறு வெளிப்படுத்தல்களினால் வெளிச்ச மூட்டப்பட்டிருப்பாரானால், அவரது நடத்தையானது கிறிஸ்தவ வளர்ச்சியினுடைய மிக உயர்ந்த வகையாகக் கருதப்படுவதற்குப் பாத்திரமானதாகும். ஆனால் அவரது குணலட்சணமானது வளர்க்கப்பட்டதான சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் நாம் பார்க்கும்போது, அதாவது புறஜாதி தேசத்தில், தேவன் மற்றும் அவரது திட்டம் பற்றின சிறிய வெளிப்படுத்தல்கள் மாத்திரமே உள்ள சூழ்நிலையில், அவரது குணலட்சணம் வளர்க்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கையில், நாம் வியந்து நிற்கின்றோம். இந்தப் பாடத்தைப் படிக்கையில் நாம் நம்மிடமே கேட்க வேண்டியதாவது, “எல்லா விதத்திலும் மிகுந்த அனுகூலமுள்ளவர்களாய் நாம் இருக்கையில், நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும்? யோசேப்பைப்போன்றதான அதே சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்களின் கீழ் நாம் காணப்படுவோமானால், நாம் யோசேப்பைப்போன்று பெருந்தன்மையுடன் நடந்திருப்போமா? பெருந்தன்மையுடன் நடக்கவில்லையெனில், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் நமக்கு அளிக்கப்பட்டதான படிப்பினைகளை நாம் சரியான விதத்தில் பயன்படுத்தவில்லை என்று ஒப்புக்கொள்ளலாமே”. இந்தப் பாடங்களை நாம் கற்றுக்கொண்டு, இருதயத்தில் இரக்கத்தின் மற்றும் பெருந்தன்மையின் பண்புகளை நாம் வளர்த்திக்கொள்ளாதது வரையிலும், நாம் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்குத் தகுதியடைய முடியாது என்பதையும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய, மணவாட்டி வகுப்பாருடைய அங்கங்களாகக் கர்த்தரினால் ஏற்றுக்கொள்ளப்படவும் முடியாது என்பதையும் நாம் அறிவோம்.

யோசேப்பு அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்திடும்போது, தனது சகோதரனாகிய பென்யமீனை முத்தமிட்டார் மற்றும் அவரோடுகூடக் கொஞ்சம் நேரம் செலவழித்துக்கொண்டிருந்தார்; இருவரும் ஒருவரையொருவர் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார்கள். மீதி பத்துச் சகோதரர்களை வழியனுப்பும் தருணம் வந்தது. எப்படி யோசேப்பு அவர்களிடத்தில் நடந்துகொள்ளப் போகின்றார்? கிழக்கத்திய நாடுகளினுடைய வழக்கத்தின்படி அவர்களை முத்தம் செய்வதின் மூலம் அன்பை/பாசத்தை நிச்சயமாய் அவர் வெளிப்படுத்தப் போகிறதில்லை, ஏனெனில் அவர்களிடத்தில் அவரால் பூரணமான அன்பையும், நல்லெண்ணத்தையும் நிச்சயமாய்க் கொண்டிருக்க முடியாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் யோசேப்பு அவர்கள் ஒவ்வொருவரையும் முத்தமிட்டார்; மேலும் நிர்ப்பந்தம் காரணமாகவோ (அ) பயனை முன்னிட்டோ, யோசேப்பு முத்தமிடாததினால், அவர் முத்தமிட்டதான காரியமானது, அவரது இருதயம் முழுக்க பெருந்தன்மையினாலும், அன்புடன்கூடிய இரக்கத்தினாலும் நிறைந்திருந்ததை உறுதிபடுத்துகின்றது. “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,” இப்படிப்பட்டவர்களுக்கே பரம பிதாவானவர் தமது இரக்கத்தையும், தயவையும் காட்டிடுவதற்குப் பிரியமுள்ளவராய் இருக்கின்றார். இவர்கள் மாத்திரமே இராஜ்யத்தின் மாபெரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய சரியான மனநிலையில் இருப்பவர்கள் ஆவர்; இந்த இரக்கம் எனும் பண்பினை வளர்த்துக்கொள்ளாதவர்கள், உயர்வாய் உயர்த்தப்படுவதற்குப் பாத்திரமற்றவர்களாய் இருப்பார்கள்.

“நான் தேவனா?”

இராஜாவாகிய பார்வோனுடைய முழுச்சம்மதத்தின் பேரில், எகிப்தின் அதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட வண்டிகளில், யாக்கோபும், அவரது குடும்பத்தாரும் எகிப்துக்கு வருதல் பற்றின காரியங்களையும் மற்றும் அவர்கள் எப்படிக் கோசேனில் குடியேறி, அங்குச் செழித்தோங்கினார்கள் என்பதையும் பற்றி இப்பாடத்தில் நாம் பார்க்கப்போகிறதில்லை. வருடங்கள் கடந்து வயதான யாக்கோபு எகிப்து தேசத்தில் மரித்தார், ஆனால் அடக்கம் பண்ணும்படிக்குப் பாலஸ்தீனியாவுக்குக்கொண்டு செல்லப்பட்டார். அடக்கம் பண்ணுதல் முடிந்தது; யோசேப்பின் [R3981 : page 125] சகோதரர்கள் மனக்கலக்கம் அடைந்திருந்தார்கள். யோசேப்புக்கு எதிராகச் செய்யப்பட்ட இத்தனை பெரும் தீமைக்கு, அவர் பதிலாக இவ்வளவு பெரும் நன்மையைச் செய்யும் காரியமானது, அவர்களுக்கு மிகவும் வழக்கத்திற்கு மாறான காரியமாக தோன்றியபடியால், தங்கள் தகப்பன் நிமித்தமாக யோசேப்பு இப்படித் தற்காலிகமாக நடந்துகொள்கின்றார் என்றும், தந்தை இப்பொழுது மரித்துப்போயிருக்க, தங்களுக்கு இனிமேல் அதிபதியினிடத்திலிருந்து முற்றிலுமாய்த் தயவு கிடைக்கப்போவதில்லை என்றும் அஞ்சினார்கள். அவர்கள் மீண்டுமாய் யோசேப்பினிடத்தில் வந்து, முன்பு செய்தவைகளுக்காக வருத்தம் தெரிவித்து, அவரது மன்னிப்பிற்கான வாக்குறுதியைக் கேட்டுக்கொண்டார்கள்; இன்னுமாக தாங்கள் தேவனுடைய ஊழியக்காரர்களாய் இருக்கின்றார்கள் என்றும், தாங்கள் யோசேப்பினுடைய ஊழியக்காரர்களாகவும் கூட இருப்பதற்கு விரும்புகின்றார்கள் என்றும் கூறினார்கள். “யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல்சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்” (ஆதியாகமம் 50:19-21).

பெருந்தன்மையுள்ள யோசேப்பு! குற்றஞ்சாட்டும் வண்ணமான ஒரு வார்த்தையையோ, துயர்க்கொடுக்கும் ஒரு வார்த்தையையோ பேசாமல், மாறாக அவர்களது பாதகச் செயலின் பழியினின்று, அவர்களை விலக்கிடுவதற்கான காரணங்களை மாத்திரமே கூறினவராக இருந்தார். அவர்கள் செய்திட்ட காரியங்களானது, நன்மையைக்கொண்டுவந்துள்ளபடியால், தேவனால் அனுமதிக்கப்பட்டவர்களும், பயன்படுத்தப்பட்டவர்களுமான கருவிகளுக்கு எதிராக யோசேப்பு ஏன் தீமையாய்ச் சிந்தித்திட வேண்டும்? “நான் தேவனா?” என்ற யோசேப்பின் வார்த்தைகளானது குறிப்பது என்னவெனில், “உங்களை நியாயந்தீர்ப்பதோ அல்லது உங்களை எவ்விதத்திலாகிலும் தண்டிக்க முயற்சிப்பதோ எனக்கடுத்தக் காரியமா? இந்த விஷயத்தில் நீங்கள் தேவனிடத்தில் மாத்திரம் கணக்கொப்புவிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றீர்களல்லவா? நீங்கள் தேவனிடத்திலேயே ஒப்புரவாகிக்கொண்டுவிட்டீர்களானால், என்னிடத்திலும் ஏற்கெனவே ஆகிவிட்டதல்லவா?” ஏனெனில் பழிவாங்குதல் என்பது கர்த்தருக்கே உரியதே ஒழிய, ஏதோ ஒருவிதத்தில் ஏறக்குறைய பூரணமற்றவர்களாகவே காணப்படுகின்றதான அவரது சிருஷ்டிகளுக்குரியதல்ல.

இந்த ஒரு பாடத்தை நாம் ஒவ்வொருவரும், தேவனுடைய சபையிலுள்ள சகோதர சகோதரிகளினுடைய விஷயத்தில் மாத்திரமல்லாமல், மாம்சத்திலுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளின் விஷயத்திலும் மற்றும் அயலார்களின் விஷயத்திலும் செயல்படுத்திடுவோமாக. அவர்கள் நமக்குத் தீமை செய்தாலோ (அ) நன்மை செய்தாலோ நமக்கென்ன, தேவனை அன்புகூருகின்றவர்களுக்கும், அவரது தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் சகலமும் நன்மைக்கு ஏதுவாய் நடந்தேறும் எனும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் பெற்றிருக்கின்றோம் அல்லவா? இப்படி வாக்குத்தத்தம் பெற்றவர்களாய் இருக்க, நம்முடைய காரியங்களில் கர்த்தரினால் பயன்படுத்தப்படுகின்றதான நபர்கள் (அ) கருவிகளுக்கு எதிராக நாம் ஏன் மனக்கசப்பையோ (அ) கொஞ்சமேனும் கோபத்தையோ கொண்டிருக்க வேண்டும்? இப்படியாகக் கர்த்தரில் நம்பிக்கைக் கொள்பவர்கள் மாத்திரமே ஜீவியத்தின் காரியங்களைச் சரியாய்க் கண்ணோக்கவும், சிந்திக்கவும் முடிகின்றவர்களாய்க் காணப்படுவார்கள் மற்றும் இவர்களால் மாத்திரமே உபத்திரவத்திலும், [R3982 : page 125] துன்புறுத்துதல்களிலும், நீதியின் நிமித்தமாய்ப் பாடுபடுகிற விஷயத்திலும் களிக்கூர முடியும், ஏனெனில் இவர்கள் அனைத்துக் காரியங்களும் தங்களுக்கு மிகவும் அதிகமான நித்திய கனமகிமையைக் கொண்டுவருகின்றது என்றும், தற்காலத்துச் சிரமங்களும், சோதனைகளும், நாம் நமது அருமை மீட்பருடன் பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிக்கத்தக்கதாக, பூமியின் சிங்காசனத்தில் உட்காருகையிலுள்ள மகிமைகளுக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்றும் அப்போஸ்தலர் உறுதிப்படுத்துபவைகளை அறிவார்கள்.

“ஜெபத்தின் மற்றும் விண்ணப்பத்தின் ஆவி”

யோசேப்பின் சம்பவமும், அவரது பாடுகளும், அவர் இராஜாவுக்கு அடுத்த நிலையில் எகிப்தினுடைய அதிபதியென அதிகாரத்திற்கு உயர்த்தப்பட்டதும், இயேசுவையும், பாடுகள் மற்றும் சுயத்தைப் பலி செலுத்துதல் எனும் இடுக்கமான வழியில், அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கும் பின்னடியார்கள் அனைவரையும் மற்றும் அவர்கள் வானத்தின் கீழ், தேவனுடைய இராஜ்யத்தில் வல்லமைக்கு உயர்த்தப்படுவதையும் ஒருவேளை குறிக்கின்றதாய் இருக்கிறதென்றால் மற்றும் அனைவரின் ஜீவியங்களை இரட்சிக்கத்தக்கதாய் எகிப்தின் ஆகாரமாகிய கோதுமை சேகரிக்கப்பட்டதும், பின் விநியோகிக்கப்பட்டதுமான காரியங்களானது, மகிமையடைந்த மீட்பர் மூலம் ஆயிர வருட யுகத்தின்போது, மனுக்குலம் முழுவதின்மேலும் வரவிருக்கின்ற ஆசீர்வாதங்களையும், மகிமையான வாய்ப்புகளையும் குறிக்கின்றதாய் ஒருவேளை இருக்கிறதென்றால், யோசேப்பின் பதினொரு சகோதரர்களும் கூட நிழலாய்ச் சிலருக்கு இருப்பார்கள் என்று கருதுவது தவறாய் இருக்காது. இயேசுவுக்குச் சொந்தமானவர்களே அவரை ஏற்றுக்கொண்டார்களே ஒழிய, “இவரைச் சிலுவையில் அறையும், இவரது இரத்தப்பழி எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் இருப்பதாக” என்று கூறினவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

கர்த்தருடைய வழிநடத்துதலின்படி, அந்த ஜனங்கள் அதுமுதல் கடுமையான அனுபவங்கள் மற்றும் சோதனைக்குள்ளாகக் கடந்து சென்றார்கள் என்பதை நாம் பார்த்துள்ளோம். இந்த அனுபவங்கள் நன்மையாய்க் காணப்பட்டிருக்கும் என்றும், கர்த்தருடைய வார்த்தைக்கான பஞ்சம் அவர்களுக்கு ஏற்பட்டு, அவர்களை ஜீவனுக்கான அப்பத்திற்காக மாபெரும் அதிபதியினிடத்திற்கு வரச்செய்திடும் என்றும் நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அந்தக் காலக்கட்டத்தை வேதவாக்கியங்கள் “யாக்கோபின் இக்கட்டுக்காலம்” என்று குறிப்பிடுகின்றது; இன்னுமாக தேவன் அவர்களை விடுவிப்பார் என்றும் குறிப்பிடுகின்றது (எரேமியா 30:7). இக்காரியத்தையே, “ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்” என்று கூறி அப்போஸ்தலன் உறுதிப்படுத்துகின்றார் (ரோமர் 11:30,31). இதே காரியத்தைக் குறித்துத் தீர்க்கத்தரிசி பேசுகையில், அவர்கள் எப்படித் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்றும், யோசேப்பின் சகோதரர்கள் துக்கித்ததுபோன்று, எப்படி அவர்கள் துக்கிப்பார்கள் என்றும், பின்னர் எப்படிக் கர்த்தர் அவர்கள் மீது ஜெபம் மற்றும் விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றுவார் என்றும், அவர்கள் மனம் வருந்துதலை வெளிப்படுத்துகையில் எப்படி மன்னிப்பை அருளுவார் என்றும், எப்படி இறுதியில் கர்த்தர் அவர்களது அக்கிரமங்களையும், பாவங்களையும் பிற்பாடு நினைவில்கொள்ளப்போகிறதில்லை என்றும், பாவத்தை நினைவில் கொள்கிறதற்குப்பதிலாகக் கர்த்தர் எப்படி மிகவும் கிருபையாய் அவர்களிடத்தில் காணப்படப்போகிறார் மற்றும் அவர்களை முத்தஞ்செய்யப்போகிறார் என்றும் நமக்குத் தெரிவிக்கின்றார் (சகரியா 12:10).

இந்தப் பாடத்தை, நம்முடைய ஆதார வசனத்தில் இடம்பெறும் அப்போஸ்தலனாகிய பவுலினுடைய புத்திமதியைப் பார்த்து நிறைவு செய்கின்றோம்; “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:32). நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட விஷயத்திலும், நாம் தேவனுடைய குடும்பத்திற்குள்ளாகச் சேர்க்கப்பட்ட விஷயத்திலும், தேவனுடைய குமாரர்களென நமக்கு வந்திட்ட ஆசீர்வாதங்களுடைய விஷயத்திலும், நாம் தேவனுக்குக் கடன்பட்டிருப்பதை அதிகமாய் உணர்ந்துகொள்ளுகையில், நாம் அவரது மகிமையான குணலட்சணத்தின் சாயலையும், நமது அருமை மீட்பருடைய சாயலையும் (அனைவருக்கும் நீதி செய்வதே அவரது ஒட்டுமொத்த குணலட்சணத்தின் சாரமாகும்) மற்றும் நம்மால் அதிகப்பட்சமாய் வளர்க்க/அடைய முடிகின்ற அன்பையும், இரக்கத்தையும் அடைவதற்கு அதிகமாய் நாடுகின்றவர்களாய் நாம் காணப்பட வேண்டும். நாம் தேவனுக்கொத்த இந்தப் பண்பில் அதிகமாய் வளர்ந்து காணப்படும்போது நாம் பிதாவின் பார்வையில் மிகவும் பிரியமாய்க் காணப்படுவோம் மற்றும் பரலோக இராஜ்யத்திற்கான உடன்சுதந்தரத்துவத்திற்கும், மனுக்குலத்தின் உலகம் அனைத்திற்கும் ஜீவ அப்பத்தை விநியோகிப்பதற்கும் நாம் நன்கு பாத்திரமானவர்களாய்க் காணப்படுவோம்.

இவைகளைக் கண்டுகொள்ளாதவனும், அப்போஸ்தலனுடைய வார்த்தையின்படியான இந்தப் போக்கைப் பின்பற்றாதவனும் குருடனாகவும், மேலாகப் பார்க்க முடியாதவனாகவும் காணப்படுகின்றான்; அதாவது தேவனுக்கொத்த சாயலை உத்தமமாய் அடைகின்றவர்களுக்கு, அவர் வாக்களித்துள்ள ஆசீர்வாதங்களைப் பார்க்கவும், உணர்ந்துகொள்ளவும் முடியாமல் இருப்பான். காண்கின்றவர்களோ நாளுக்குநாள் தங்கள் புரிந்துகொள்ளுதலின் கண்களானது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ அன்பினுடைய நீளம், ஆழம், அகலம் மற்றும் உயரத்திற்கு மிக அகலமாய்த் திறந்துக்கொண்டிருப்பதைக் காண்பார்கள். இன்னுமாக நமது உபகாரியான கர்த்தரைச் சந்தோஷத்துடன் போற்றிக்கொண்டு, மேற்சொன்னபடி முன்னேறுகையில் நாம் மற்றவர்களிடத்திலான அன்பிலும், பரிவிலும், இரக்கத்திலும், கனிவிலும் வளருவோம் என்றும் கர்த்தர் நமக்கு உறுதியளிக்கின்றார். இவைகளை விசேஷமாக நாம் விசுவாச வீட்டாரிடத்தில் காண்பிக்க வேண்டுமென்றாலும், நாம் இவைகளை நம்முடைய மாம்ச சொந்தங்களிடத்திலும், நம்முடைய அயலார்களிடத்திலும், நண்பர்களிடத்திலும், சத்துருக்களிடத்திலும், விலங்குகளிடத்திலும் கூடக் காண்பித்திட வேண்டும். இவர்கள் அனைவரும் நம்முடைய குணலட்சணங்கள் மற்றும் பண்புகளின் மாறுதலை அதிகமதிகமாய் உணர்ந்துகொள்வார்கள் மற்றும் இப்படி இவர்கள் உணர்ந்துகொள்வது இவர்களுக்கு ஆசீர்வாதமாயும், நமக்குச் சந்தோஷமாயும் காணப்படும்.