SM349 – அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு

தலைப்புகள்
R5883 - அன்பு மற்றும் நீதியின் கொள்கைக்கிடையிலான வித்தியாசம்
R2589 - இராஜரிகப் பிரமாணம்-பொன்னான சட்டம்
R4826 - எண்ணங்களுக்கான சரியான பழக்கவழக்கங்கள்
R4567 - பொன்னான பிரமாணம்
R5740 - குணலட்சணத்திற்கான சிறிய சோதனைகள்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்
R3804 - பொன்னான சட்டம்
R5528 - தீமை பேசுதல் என்றால் என்ன?
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R5368 - அன்பின் பிரமாணங்கள் மற்றும் பாராளமன்ற பிரமாணங்கள்
R5430 - நீதி - நியாயம் - கிறிஸ்தவ குணலட்சணத்தின் அஸ்திபாரம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5722 - நீதியாகிய பொன்னான பிரமாணம்
R4816 - பொன்னான பிரமாணம்
R5770 - பேராசையின் பாவம்
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q286:3 - பொன்னான பிரமாணம் - தவறான விளக்கம்
Q429:1 - இராஜ்யம் - இராஜ்யத்தின் சுதந்திரர்கள்
SERMON
SM349 - அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு
OVERLAND MONTHLY
OV369 - BUSINESS IDEALS
HARVEST GLEANINGS
2HG 590

SM349

அன்றாட ஜீவியத்தில் அச்சுறுத்தும் ஒரு குறைவு

AN APPALLING LACK IN EVERYDAY LIFE

நீங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.” (1 கொரிந்தியர் 15:34)

அப்போஸ்தலனின் எல்லா எழுத்துக்களைப்போன்று, இந்தப் புத்திமதியும் பாவிகளின் உலகத்தாருக்காய் இராமல், மாறாகக் கிறிஸ்தவர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இவ்வசனத்தில் இடம்பெறும் அப்போஸ்தலனின் கருத்தானது, நாம் சற்று வேறு வார்த்தைகளில் மொழிப்பெயர்த்து வழங்கினால் நன்கு விளங்கும்… “”நீதியைப்பற்றின சரியான புரிந்துகொள்ளுதலுக்கு விழித்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜீவியங்களில் நீதிக்கு எதிராய்ப் பாவம் செய்யாதிருங்கள்; ஏனெனில் சிலர் நீதி குறித்த, நீதியின் கொள்கைக் குறித்த தேவ அறிவு இல்லாதிருக்கிறார்கள். உங்களுக்கு வெட்கம் உண்டாகத்தக்கதாக இதைச் சொல்லுகிறேன்” என்பதாகும்.

கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் காணப்படும் நாம், எதிர்க்காலத்தின் மாபெரும் வேலைக்கென்று நமக்குக் கற்பித்துக்கொண்டிருக்கின்றார் என்றும், நம்மை ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கின்றார் என்றும் அடையாளம் கண்டுகொள்கின்றோம். வரவிருக்கின்ற யுகத்தில் சபையின் வேலையானது வேதாகமத்தின்படி, மேசியாவின் இராஜ்யத்தில் இராஜாக்களாக, ஆசாரியர்களாக, நியாயாதிபதிகளாக, தேவனுடைய பிரதிநிதிகளாக இருப்பதாகும். இராஜாக்களென அவர்கள் நமது கர்த்தர் இயேசுவோடுகூட உலகத்தின் ஆளுகையில் பங்குகொள்பவர்களாய் இருப்பார்கள். ஆசாரியர்களென அவர்கள் உலகை சொஸ்தப்படுத்தும், கற்பித்துக்கொடுக்கும், உலகத்திடம் அனுதாபம் காட்டும் வேலையில் பங்கெடுப்பார்கள். நியாயாதிபதிகளென அவர்கள் நீதி வழங்குவார்கள், மேசியாவின் ஆளுகையாகிய ஆயிரவருடங்களின் போது மனுக்குலத்திற்கு அடிகள் அல்லது வெகுமானங்கள் கொடுப்பவர்களாய் இருப்பார்கள். ஆகையால் இராஜாக்களாகுவதற்கு, ஆசாரியர்களாகுவதற்கு மற்றும் நியாயாதிபதிகளாகுவதற்கு நம்பிக்கைக்கொண்டிருக்கும் யார் ஒருவரும் தன்னை அவ்வேலைக்குத் தகுதியாக்கிடும் இருதயம் மற்றும் மனதின் தகுதிகளை இப்பொழுது அடைந்தாக வேண்டும்; ஏனெனில் முறையாய்த் தகுதி பெறாத யார் ஒருவரையும் தேவன் நியமிக்கமாட்டார் என்பதில் நமக்கு நிச்சயமே.

இந்தக் காரணத்திற்காகவே தேவன் தம்முடைய சபையைக் கடந்த 19 நூற்றாண்டுகளாக உலகத்திலிருந்து அழைத்துக்கொண்டிருக்கின்றார் மற்றும் நமது கர்த்தர் இயேசுவின், அப்போஸ்தலர்களின், நியாயப்பிரமாணத்தின் மற்றும் தீர்க்கத்தரிசிகளின் மகிமையான அறிவுரைகளை நமக்குத் தந்துகொண்டிருக்கின்றார். இவைகள் அனைத்தும் தேவன் நம்மை அழைத்துள்ளதான மாபெரும் ஊழியத்திற்கு நம்மைத் தகுதியாக்கிடும் இருதயம் மற்றும் மனதின் அந்தப் பண்புகளில் நம்மைக் கட்டியெழுப்புவதற்கேயாகும்.

ஆனால் தேவன் தம்முடைய பிள்ளைகளை அவர்களது பூரணமற்ற சரீரங்களின் அடிப்படையில் பரீட்சித்துப்பார்க்கிறதில்லை; ஏனெனில் நாம் செய்ய வேண்டுமென்று விரும்புபவைகளைச் செய்ய முடியாதவர்களாய் இருக்கின்றோம் என்பதை அவர் அறிவார். அவர் நம் சிந்தைகளுடன், நம்முடைய மனங்களுடன் தம் கையாளுதலைக் கொண்டிருக்கின்றார். அவரது வார்த்தைகளினுடைய மறுரூபமாக்கும் வல்லமையினால், அவர் நமக்குப் புதிய மனதைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார் மற்றும் இந்தப் புதிய மனதையே அவர் தமது குடும்பத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்கின்றார். அதுவே புதுச்சிருஷ்டியாகிறது (ரோமர் 12:1,2; 2 கொரிந்தியர் 5:17). நம்முடைய சொந்த சித்தங்களுக்குப் பதிலாக நாம் புதிய சித்தத்தை, தேவனுடைய சித்தத்தை ஏற்றுக்கொள்கின்றோம் மற்றும் நம்முடைய சொந்த திட்டங்கள் மற்றும் நோக்கங்களுக்குப் பதிலாக, திவ்விய ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றோம். இப்படியாக விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் வாயிலாக நாம் கடந்துவந்துள்ள இந்தப் புதிய உறவின் அடிப்படையில் தேவன் நம்மை அவரது பிள்ளைகளெனக் கையாளுகின்றார் மற்றும் நமது கர்த்தராகிய கிறிஸ்து வாயிலாக, நாம் தேவனுடைய பார்வையில் பூரணர்களாய் எண்ணப்படுகின்றோம்.

தேவ சித்தம் குறித்த அறிவு

நமது சரீரங்கள் அபூரணமானவைகளாக இருக்க, எப்படிச் சித்தங்களில் நாம் பூரணமாய் இருக்க முடியும்? அப்போஸ்தலர் போன்று நாமும்: “”நன்மை செய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்தில் இருக்கிறது, நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை” என்றே பதிலளிக்கின்றோம் (ரோமர் 7:18). நீதியைச் செய்வதற்கான தன்னுடைய சித்தத்தில் அப்போஸ்தலன் எல்லா நேரங்களிலும் வெற்றிக் காணவில்லை. இப்படியாகவே இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்க நாடிடும் ஒவ்வொருவரின் விஷயத்திலும் காணப்படுகின்றது. நீதி செய்ய வேண்டும் என்ற சித்தம், விருப்பம் நம் அனைவருக்கும் உள்ளது, ஆனால் நீதியை எப்படிச் செய்வது என்பதுதான் பிரச்சனை.

நம்முடைய மாம்சத்தின் அபூரணங்களின் அடிப்படையில் தேவன் நம்மை நியாயந்தீர்க்கிறதில்லை என்று நாம் படிப்படியாகக் கற்றுக்கொள்கின்றோம்; நாம் உண்மையுள்ளவர்களாகக் காணப்படுவது வரையிலும், இந்தக் குறைவுகளானது கிறிஸ்துவால் தரிப்பிக்கப்படும் நீதியின் வஸ்திரத்தினால் மூடப்படுகின்றது. ஆகையால் சரியானவைகளை நமது ஒவ்வொரு கிரியையிலும், வார்த்தையிலும், சிந்தையிலும் நடப்பிப்பதற்கு நாம் கடுமையாய் முயன்றுகொண்டிருக்கின்றோம் என்பதை நமது பரம பிதாவுக்குக் காண்பிக்கத்தக்கதாக நம்மால் முடிந்ததை நாம் செய்கின்றோம். மேலும் தமது குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும் பூரண சித்தம் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கின்றபடியால், நமக்கான தேவ சித்தம் யாது? என்ற தனிப்பட்ட ஒரு கேள்வி எழும்புகின்றது. ஆகையால், “”தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக”” நாம் கவனமாய் நாடுகின்றோம் (ரோமர் 12:1,2).

தேவனுடைய சித்தம் இன்னதென்று பகுத்தறிய முயல்வது என்பது, அவரது சித்தம் குறித்த அறிவிற்குள்ளாக வருவதாகும், அதை நமக்கு நாம் விவரித்துக்கொள்வதாகும். நாம் உண்மையுள்ளவர்களாக இருப்போமானால் நாம் இதில் நாட்கள் செல்ல செல்ல முன்னேறுகிறவர்களாக இருப்போம். முதலில் நாம் கொஞ்சம் அறிவினைப் பெற்றிருந்தோம் மற்றும் அதை நாம் நடைமுறைப்படுத்தினோம். நாம் கிருபையிலும், அறிவிலும் வளருகையில், தேவ சித்தத்தினை நாம் அதிகம் அறிய வருகிறோம், மேலும் அதிகரித்திடும் இந்த அறிவையும்கூட நடைமுறையில் செயல்ப்படுத்துவது நமக்கான காரியமாய் இருக்கின்றது. தேவ சித்தத்தினைக் குறித்த இந்த அறிவினை நாம் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அடையாமல், மாறாக வேதாகமத்தை ஆராய்வதன் மூலமே அடைகின்றோம் (2 தீமோத்தேயு 2:15).

தேவனுடைய குடும்பத்திற்குள்ளாக வரும் ஒருவன் தன் சொந்த சித்தத்தை விட்டுவிட்டு, அதற்குப்பதிலாக தேவ சித்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளான். கர்த்தருக்கென்று தன் சொந்த சித்தத்தை விட்டுவிடாதவன், அவருடைய பிள்ளை இல்லை. அப்போஸ்தலன் கூறுவது போன்று, “”கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல”” (ரோமர் 8:9). கிறிஸ்துவின் ஆவி என்பது, பிதாவின் சித்தத்திற்கு முழுமையாய்க் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுக்கும் ஆவியாய் இருக்கின்றது; மேலும் இந்த ஒரு நிலைமைக்கு நாம் வரும்போது, நாம் நம் சொந்த சித்தங்களை விட்டுவிட்டு, இதற்குப்பதிலாக தெய்வீகச் சித்தத்தை ஏற்றுக்கொள்கிறவர்களாய் இருப்போம். இப்படி நாம் செய்வதற்கான காரணம் – இதுவே நமது மீட்பரின் அடிச்சுவடுகளில் பின்தொடர விரும்புகிற யாவருக்குமான தகுதியான நடக்கையாய் இருக்கின்றது என்பதினாலாகும்; நமது சொந்த சித்தங்களும் நமக்குத் திருப்தி தராதவைகளாய் இருக்கின்றது என்பதினாலாகும். நமது மனங்களும், நமது சரீரங்களும் மிகவும் அபூரணமானவைகளாக இருக்கின்றபடியால், நமது சொந்த சித்தத்தின்படி செய்வதன் மூலம் நாம் அடிக்கடி இன்னலுக்குள்ளாகுகின்றோம். ஆகையால் தேவ சித்தமானது, மிகவும் கிருபையான ஒரு சித்தமாக இருக்கின்றதென நாம் காண்கின்ற காரணத்தினால், தேவ சித்தத்தை அறிவதிலும், அதைச் செய்வதிலும் நாம் மகிழ்கின்றோம்.

நீதி முதலாவது, பின்னரே அன்பு

தம்முடைய பிள்ளைகள் சோதனைகளையும், இன்னல்களையும் மற்றும் மெருகூட்டுதல்களையும் பெற்றிருக்க வேண்டும் என்றும், இந்த அனுபவங்கள் மூலம் நம்மில் தேவனுக்கொத்த குணலட்சணத்தை வளர்க்க, குணலட்சணத்தை உறுதியடையப் பண்ண வேண்டும் என்றும் தேவ சித்தம் காணப்படுகின்றது; இப்படியாகத் தேவன், கர்த்தர் இயேசுவினிடத்தில் ஒப்புவித்ததான மாபெரும் வேலையில், தேவனால் நாம் பயன்படுத்தப்படுவதற்கு நம்மைப் பாத்திரவான்களாக்கிட வேண்டுமென்று அவர் இருக்கின்றார்; இப்படியாகப் பூமியின் குடிகளை ஆசீர்வதிப்பதற்காகப் பிதாவினால் திட்டமிடப்பட்டுள்ளதான பரலோகராஜ்யத்தில் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு உடன் சுதந்திரர்களாக நம்மை ஆக்கிட வேண்டுமென்று தேவன் இருக்கின்றார்.

சிலசமயங்கள் கிறிஸ்தவ ஜனங்கள் வேதாகமத்தில் அன்பு குறித்த உபதேசத்தைக் கண்ணோக்குகின்றனர்; ஆனால் அன்பிற்கு முன்னதாக இன்னொரு பாடம் இருக்கின்றது என்பதை மறந்துபோய் விடுகின்றனர். அந்த அடிப்படையான பாடத்தைக்குறித்தே இன்று உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம். அது நீதி பற்றின பாடமாகும். “”நீதிக்கு விழித்தெழுங்கள்!”” என்றே நம் ஆதார வசனம் உண்மையில் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. தவறிலிருந்து, சரியானவற்றை நாம் வேறுபடுத்திப் பார்த்திடவும் மற்றும் நீதியானவற்றை, சரியானவற்றை நடைமுறைப்படுத்திடவும் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். நீதியானவைகளே சரியானவைகளாக இருக்கின்றது.

நீதி என்றால் என்ன என்று காண்பித்துக்கொடுக்கும்படியாகத் தேவனுடைய நியாயப்பிரணமானது, சீனாய் மலையில் வைத்து இஸ்ரயேலர்களுக்குக் கொடுக்கப்பட்டது. நீதிக்கும் அதிகமான எதையும் செய்யும்படிக்கு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படவில்லை. “”கொலைச் செய்யாதிருப்பாயாக”” என்று நியாயப்பிரமாணம் கூறினது; ஏனெனில் தேவனுடைய சொந்த நியாயப்பிரமாணமானது ஜீவனைக் கேட்டாலொழிய மற்றபடி, ஒருவரின் ஜீவனை எடுத்துப்போடுவது என்பது தவறானதாகும். “”களவுச் செய்யாதிருப்பாயாக;”” இப்படிச் செய்வது தவறாகும், அநீதியாகும். “”பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;”” இப்படிச் செய்வது அநீதியாயிருக்கும் (யாத்திராகமம் 20:2-17).

ஆகையால் இஸ்ரயேல் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவனுடைய பிரமாணத்தினுடைய சாரம் “”உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக”” (மத்தேயு 22:37) என்பதாகக் காணப்பட்டது. மற்றவர்களை நடத்திடும் விஷயத்தில் யூதர்களுக்குக் கற்பிக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தினுடைய சாரம்: உங்கள் அயலார் உங்களுக்கு நீதி செய்திடவேண்டுமென்று நீங்கள் விரும்புவதுபோன்று, நீங்களும் உங்கள் அயலாருக்கு நீதி செய்யுங்கள் என்பதேயாகும் (மத்தேயு 7:12).

நடைமுறையில் நீதியினைச் செயல்படுத்துதல்

தேவன் இதே பிரமாணத்தினைச் சபைக்குக் கொடுத்திட்டாரா? ஆம்! அது நியாயப்பிரமாணத்தின் ஆவியினுடைய காரியமாகும். தேவனுடைய பிரமாணமானது, அவரது சிருஷ்டிகள் யாவற்றின் மீதும் காணப்படுகின்றது. ஆனால் நியாயப்பிரமாண காலக்கட்டத்தில், தேவன் மாம்சீக இஸ்ரயேலருடன் ஒரு விசேஷித்த நியாயப்பிரமாண உடன்படிக்கையினைப் பண்ணியிருந்தார். வேறுயாருமே அந்த நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ்க் காணப்பட்டிருக்கவில்லை. அந்த நியாயப்பிரமாணத்தினைப் பூரணமாய்க் கைக்கொள்ள முடிகின்ற யூதனால், என்றென்றுமாய் ஜீவிக்க முடியும் மற்றும் நித்திய ஜீவனைத் தன் வசத்தில் பெற்றிருப்பதினால், அவனால் பூமியின் குடிகளை ஆசீர்வதிக்கப்போகின்ற அந்த மாபெரும் நிஜமான ஆவிக்குரிய இஸ்ரயேலில் அங்கம் வகிக்கும் வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும். இதைத்தான் நமது கர்த்தர் இயேசு செய்திட்டார். ஆவிக்குரிய இஸ்ரயேலுக்கான திவ்விய பிரமாணத்தைக் குறித்துப் பேசுகையில், அவர் அதன் கோரிக்கைகள் எவ்வளவு விசாலமானவையாகவும், பிரமாண்டமானதாகவும் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதன் வாயிலாய், அவர் “”தம் திருச்சட்டத்தைச் சிறப்பித்து மேன்மைபடுத்தியுள்ளார்” (ஏசாயா 42:21, திருவிவிலியம்).

உலகத்திலுள்ள ஒவ்வொருவரையும் நீதியாய்க் கையாளுவது தகுதியான காரியமே என்கிற விஷயத்தில் எந்த அறிவுள்ள மனுஷனும் கேள்வி எழுப்புவதில்லை. இப்பாடமானது நமது அன்றாட ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் அநேகம் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கின்றதாய் இருக்கின்றது. நீதியின் கொள்கையானது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், மிகவும் சாதாரணமான விஷயங்களிலும்கூடத் தலையிடுகின்றதாயிருக்கும். இது உலகத்திலுள்ளவர்களைக் கையாளும் விஷயத்தில் மாத்திரமல்லாமல், நம்முடைய சொந்த குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினர்கள் விஷயத்திலும்கூடப் பொருந்துகின்றதாயிருக்கும். நம் சொந்த விஷயத்திலும், மற்றவர்கள் விஷயத்திலும் நீதியின் கொள்கையானது அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். பொன்னான பிரமாணம் குறித்த இச்சிந்தனையை அனைவருமே ஒருவேளை தங்கள் மனங்களில் உறுதியாய்ப் பதியப் பெற்றுக்கொள்வார்களானால், ஒவ்வொருவரும் நீதிக்கு, நியாயத்திற்கு விழித்தெழுவார்களானால், ஒட்டுமொத்த உலகமும் மறுமலர்ச்சியடைந்து விடும்.

ஒருவேளை நீதியின் இக்கொள்கையானது அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு, கைக்கொள்ளப்பட்டால் ஐரோப்பாவில் இன்று மனுஷர்கள் ஒருவரையொருவர் சுட்டுக்கொன்று கொண்டிருக்கமாட்டார்கள். மாறாகச் சிறப்பான ஏதோ சிலவற்றைச் செய்துகொண்டிருப்பார்கள், அதாவது மற்றவர்கள் தங்களுக்குச் செய்ய வேண்டுமென்று இவர்கள் விரும்பும் ஏதோ சில நன்மைகளை ஒருவருக்கொருவர் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் மனுஷர்கள் நீதியின், நியாயத்தின் இந்த நியமனத்திற்கு ஏற்றபடி வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. இக்கொள்கையானது அரசாங்கங்களினாலும், தனிமனிதர்களாலும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பொன்னான பிரமாணத்தினை மீறுகிறதற்கு வழங்கப்படும் பொதுவான சாக்குப்போக்கு: “”நமக்குச் செய்யப்படும்படிக்கு நாம் எதிர்ப்பார்ப்பவைகளை, மற்றவர்களுக்கு நாம் செய்வது ஒருபோதும் சரியாய் இருக்காது; ஏனெனில் மற்றவர்கள் இதைச் சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் தங்கள் பங்கைச் செய்ய மாட்டார்கள்; அவர்கள் பிரதி உபகாரம் செய்ய மாட்டார்கள்” என்பதேயாகும். பிரிட்டன் கூறுவதாவது: “”ஜெர்மானியர்களுக்கு நாம் பொன்னான பிரமாணத்தினைச் செயல்படுத்தக்கூடாது; ஏனெனில் அவர்கள் நமக்கு என்ன செய்வார்கள் என்பதை நாம் அறியோம்.”” ஜெர்மானியர்களும் இதே மாதிரியே வாக்குவாதம் பண்ணுகின்றனர்.

இப்படி நடந்துகொள்வதற்கான காரணம், தேவனுக்கான பயமாயிராமல், மாறாக மனுஷனுக்கான பயமேயாகும்; தேவனுக்கான பயமில்லை. கிறிஸ்தவர்கள் மனுஷரையும், தேசங்களையும் குறித்தும், இவர்கள் என்ன செய்வார்களோ என்பது குறித்தும் பயப்படுவார்களானால், இவர்கள் மாம்சமானவர்களாகவும், மாம்சத்தின்படி ஜீவிப்பவர்களாகவும் இருந்து, அவிசுவாசியான உலகத்தாரைப் போன்று இருப்பார்கள் என்று தேவன் கூறுகின்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுடன் உறவிற்குள்ளாக வந்தவர்களும், அவருக்கென்று நம்முடைய ஜீவியங்களை ஒப்புக்கொடுத்துள்ளவர்களுமான நாம் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் எப்படி நடந்துகொள்வோம்? நம்முடைய ஜீவியங்களின் காரியங்களில் நீதியின் இக்கொள்கையின் மீது நம்பிக்கை வைக்க பயமாய் உள்ளது என்றும், நமது ஒவ்வொரு வார்த்தை, சிந்தை மற்றும் கிரியையின் விஷயத்தில் இக்கொள்கையினைக் கைக்கொள்ள துணிவில்லை என்றும் நாம் சொல்லுவோமா? தேவனை விசுவாசிப்பதற்கும், அவருக்குக் கீழ்ப்படிவதற்கும் நாம் அச்சம் கொண்டுள்ளோமா?

மற்றவர்கள் நம்மிடத்தில் பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ளும்போது மாத்திரமே, நாமும் பொன்னான பிரமாணத்தினைக் கைக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் நம் விஷயத்தில் அதைக் கைக்கொள்ளத் தவறும்போது, நாமும் அதைக் கைக்கொள்ளாமல் புறக்கணித்துவிடலாம் என்றும் தேவன் நம்மிடத்தில் சொல்லவில்லை. மாறாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும், மற்றவர்கள் செய்வதைப் பொருட்படுத்தாத நிலையில் நாம் அதை நடைமுறைப்படுத்திட வேண்டும். பின்னர் எல்லாக் காரியங்களும் நம்முடைய நன்மைக்கேதுவாய் நடக்கும் என்பதை நாம் அறிந்துகொள்வோம்; காரணம் நாம் தேவனுக்கும், அவரது ஏற்பாடுகளுக்கும் இசைவாகக் காணப்பட்டிருக்கின்றோம். ஜீவியத்தின் காரியங்கள் அனைத்தையும் நன்மைக்கேதுவாய் மாற்றிப்போடுவதற்கு அவர் வல்லமையுள்ளவராய் இருக்கின்றார். நாம் ஒருவருக்கொருவர் நீதியானவைகளைச் செய்திட வேண்டும் என்பது அடிப்படையான காரியமாய் இருக்கின்றது மற்றும் இப்படிச் செய்வது என்பது, நமது சொந்த குணலட்சணங்களுடைய விஷயத்தில் மகா ஆசீர்வாதத்தினைக் கொண்டுவருகின்றதாய் இருக்கும்.

தன் குடும்பத்தில் அல்லது கிறிஸ்துவின் சபையில் நீதியின் கொள்கையினை, பொன்னான பிரமாணத்தினை மீறியிருப்பவன், ஒருவேளை கிறிஸ்தவனாய் இருப்பானானால், இக்காரியத்தினைக் கவனத்தோடும், ஜெபத்தோடும் கண்ணோக்கி, “”நீதிக்கு விழித்தெழுவானாக மற்றும் பாவம் செய்யாதிருப்பானாக.”” இப்படியாக நீதியை மீறுவது என்பது பாவமாகும் மற்றும் நாங்கள் அறிந்திருக்கிறவரை, இந்தப் பாவம் எங்கும் நிலவியுள்ளது. இந்த உண்மையினைக் குறித்த ஒரு சரியான புரிந்துகொள்ளுதல் அநேகருக்கில்லை. இவர்கள் நீதியே அனைத்துக் குணலட்சணங்களுக்கும், சரியான ஜீவியத்திற்குமான அஸ்திபாரமாய்க் காணப்படுகின்றது என்று காண்கிறதில்லை. அது தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரமாய் இருக்கின்றது (சங்கீதம் 89:14). ஒருவன் தன் சக சிருஷ்டியின் விஷயத்தில் நீதியின் கொள்கையினை மீறிக்கொண்டிருக்கிற அதேவேளையில், அந்தச் சக சிருஷ்டியினிடத்தில் அல்லது தேவனிடத்தில் அன்பு பாராட்டிக்கொண்டிருப்பானானால், அது விருதாவே. நாம் நீதியைச் செய்த பிற்பாடே, ஒருவர் இன்னொருவரிடத்தில் அன்பினை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமையினை உடையவர்களாய் இருப்போம். பின்னர் நம்மால் முடிந்தமட்டும் அன்பின் அடிப்படையில் காரியங்களைச் செய்திடலாம். முதலாவது நீதி, பின்பே அன்பு என்பதே மற்றவர்கள் விஷயத்திலுள்ள நமது கையாளுதல்கள் அனைத்தையும் நிர்வகிக்கும் விதியாய் இருக்க வேண்டும்.

தேவ ஜனங்களின் பொறுப்பு

தேவனுடைய பிள்ளைகளாக இருப்பவர்கள், சீக்கிரத்தில் உலகத்தினுடைய நியாயாதிபதிகளாக்கப்படுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். “”பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?”” (1 கொரிந்தியர் 6:2,3) என்று அப்போஸ்தலன் கூறுவது போன்றதாகும். மேலும் நம்முடைய இருதயங்களிலும், ஜீவியங்களிலும், நம்முடைய குணலட்சணங்களிலும், அவர் விரும்புகின்றதான அந்தக் கொள்கைகளை வளர்த்திடுவதற்குத் தேவன் இப்பொழுது நாடிக்கொண்டிருக்கின்றார். ஆகையால் நாம் நம்முடைய இருதயங்களில் நீதியாய்க் காணப்படவில்லையெனில், நீதியின் இக்கொள்கையினை மதித்து, அதை நடைமுறைப்படுத்துவதில் சந்தோஷம் கொள்ளவில்லையெனில், நாம் இராஜ்யத்திற்குத் தகுதியடைய மாட்டோம். மிருக ஜீவன்களிடம்கூட நாம் அநீதியாய் நடக்கக்கூடாது. ஒவ்வொரு சிருஷ்டிக்கும் அதன் உரிமைகள் காணப்படுகின்றன; மற்றும் ஒவ்வொரு சிருஷ்டிக்கும், அதற்கே உரிய உரிமைகளை நாம் கொடுத்திட வேண்டும். விளைவுகள் தேவனிடத்தில் இருக்கின்றது. இப்படிச் செயல்பட்டு தேவன் தமது உண்மையுள்ள பிள்ளைகளுக்கு வைத்துவைத்துள்ளதான அந்த மகிமையான நிலைமைக்கு நம் மனங்களையும், நமது இருதயங்களையும் ஆயத்தப்படுத்த வேண்டாமோ?

இரக்கத்தின் அல்லது தயவின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யமானது கொடுக்கப்படும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. பரலோக வெகுமானத்தை அருளும் விஷயத்தில் இரக்கமோ அல்லது தயவோ பாராட்டப்படுகிறதில்லை. நம்முடைய பாவங்களின் விஷயத்திலும், நாம் எதிர்த்துப்போராடிக்கொண்டிருக்கின்றதான பெலவீனங்களின் விஷயத்திலும் தேவன் இரக்கம் பாராட்டுகின்றார்; ஆனாலும் பொருத்தமான குணலட்சணம் இல்லாத எந்தவொரு நபரையும் அந்த இராஜ்யத்தில் அவர் அனுமதிப்பதில்லை. நமது கர்த்தராகிய இயேசுவோடுகூட உடன்சுதந்திரர்களாகவும், ஆளுபவர்களாகவும் இருப்பதற்குத் தேவனால் அங்கீகரிக்கப்படுபவர்கள், நீதியின் கொள்கைகளைக் கொண்டவர்களாகவும், அந்தக் கொள்கைகளை இப்பொழுது எப்படிச் செயல்படுத்துவது என்பதை அறிந்தவர்களாகவும் இருத்தல் வேண்டும். அநீதியானவைகளைச் செய்வதைப்பார்க்கிலும், இழப்புகளைச் சந்திக்க விருப்பமுள்ளவர்களாக இருக்கும் அளவுக்கு நீதி செய்ய விரும்பாதவர்கள் இராஜ்யத்தில் பங்கினைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தேவனை, நீதிக்கான மாபெரும் பிரதிநிதியென வேதாகமம் சுட்டிக்காட்டுகின்றதாயிருக்கின்றது. நாம் இராஜ்யத்தில் ஓர் இடத்தினைப் பெற்றுக்கொள்வோமானால், அது கிரியைகளின் அடிப்படையிலும், கிருபை மற்றும் அறிவின் விஷயத்திலும், நமது கர்த்தர் இயேசுவுக்கொத்த குணலட்சணத்திலுமுள்ள நமது வளர்ச்சியின் அடிப்படையிலுமே கொடுக்கப்படுகின்றதாயிருக்கும். இயேசுவின் இரத்தத்தின் மீதான விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்பட்டிருந்தால், தேவனோடு ஓர் உடன்படிக்கையினைப் பண்ணி, அவரது பரிசுத்த ஆவியினால் நாம் ஜெநிப்பிக்கப்பட்டிருந்தால், நாம் புதுச்சிருஷ்டிகளெனப் பூரணத்தினை நோக்கிச் செல்வதை அவர் காண விரும்புகின்றார். நமது பரம தந்தை நம்மிடத்தில் அக்கறையற்று இருக்கின்றார் என்றும், அவர் நம்மை இரக்கமற்ற விதத்தில், அக்கறையற்ற விதத்தில் நியாயந்தீர்ப்பார் என்றும் எண்ணக்கூடாது. மாறாக பிதா தாமே உங்களை நேசிக்கிறார்” என்ற நமது கர்த்தருடைய வாக்குறுதியை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

இறுதியாக, நாம் தேவனுக்கு உண்மையான, நேர்மையான பிள்ளைகளாக இருந்து, நம்முடைய குறைவுகளைக் கிறிஸ்துவினுடைய நீதியின் வஸ்திரத்தினால் மூடப்பெற்றிருப்போமானால் – நீதி எனும் இம்மாபெரும் விஷயத்தில், அதாவது அனைத்தையும் பொன்னான பிரமாணத்தினுடைய அடிப்படையில் கையாளும் விஷயத்தில் நம்மால் முடிந்ததை நம் முழுப்பெலத்துடன் செய்வோமானால் இக்கொள்கையானது, பிதாவினுடைய ஆளுகையின் அஸ்திபாரமாய் இருக்கின்றதாக நாம் உணர்ந்திருக்கும் காரியத்தினைப் பிதாவுக்கு வெளிப்படுத்துபவர்களாக இருப்போம் என்பதை நினைவில்கொள்வோமாக. இந்த உறுதியான அஸ்திபாரத்தின்மீதே அன்பின் கட்டிடத்தை நாம் கட்டியெழுப்ப முடியும். இப்படியாக நாம் இராஜ்யத்திற்கு ஆயத்தமாக்கப்படுவோம்.

SM259

இந்தத் தையல் வேலையில், இந்தச் சித்திர தையல் வேலையில் எவை உள்ளடங்குகின்றது என்பது தொடர்புடைய விஷயத்தில் நாம் தவறு செய்யாதிருப்போமாக. அது அறிவல்ல; தையலைச் சரியாய்த் தைப்பதற்கு அறிவு மிகவும் தேவை என்றாலும், அது அறிவல்ல. அது நம் திறமைகளுமல்ல; தையல் விஷயத்தில் திறமைகள் பயன்படுத்தப்பட்டாலும், அது திறமைகளல்ல. அது நம் கடுமையான உழைப்பை மாத்திரம் குறிக்கிறதில்லை; உழைப்பு மிகவும் ஏற்றவையாகவும், ஒருவேளை சூழ்நிலைகள் சாதகமாய் இருக்கும் பட்சத்தில் அவசியமானவையாகவும் இருப்பினும், அது உழைப்புகளல்ல. இந்தச் சித்திரத் தையல் அன்பைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; ஏனெனில் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறை வேறுதலாய் இருக்கின்றது. (ரோமர் 13:10) இது நமது கர்த்தரினால் கொடுக்கப்பட்ட புதிய கட்டளையாயிருக்கின்றது. “”நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவான் 13:34), “”என்னையும், என் வார்த்தைகளையும்” என்று சொல்லுகையில், கர்த்தர் அவருக்கான மற்றும் அவரது சத்தியத்திற்கான அன்பினைச் சமநிலையில் வைக்கின்றார். நமது கர்த்தருக்கும், அவரது வார்த்தைகளுக்கும் நாம் எல்லாச் சூழ்நிலைகளிலும் உண்மையாய்க் காணப்பட வேண்டும். பின்னர்ச் சகோதரருக்கான அன்பு கடந்துவருகின்றது – ஏனெனில் அவர்கள் அவருடையவர்களாய் இருக்கின்றனர் – ஏனெனில் அவரது ஆவியினை அவர்கள் உடையவர்களாய் இருக்கின்றனர் – ஏனெனில் அவரது அடிச்சுவடுகளில் நடப்பதற்கு அவர்கள் நாடுகின்றனர். “”தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?”” (1 யோவான் 4:20) இது அப்போஸ்தலனுடைய பலமான வார்த்தைகளாய் இருக்கின்றன. அன்பானது அயலார்களிடத்திற்கு, நண்பர்களிடத்திற்கு, ஆம் சத்துருக்களிடத்திற்குக் கடந்து தொடர்ந்து வரவேண்டும்; வஸ்திரங்களில் முழுமையான சித்திரத்தைப் பெற்றிருக்க வேண்டுமெனில், மேற்கூறப்பட்டுள்ள இவர்கள் அனைவருக்குமான ஓர் உண்மையான, மெய்யான, உறுதியான அன்பானது குணலட்சணத்தில் காணப்பட வேண்டும். மேலும் ஒருவேளை சத்துரு, சகோதரன் ஒருவனாகக் காணப்படுவானானால், அன்பிற்கான சோதனை மிகவும் கடுமையாய்க் காணப்படும். ஆனால் சித்திரத் தையலின் இவ்வம்சமானது தைக்கப்பட வேண்டும் என்பது நமது கர்த்தரின் எதிர்ப்பார்ப்பாய் இருக்கின்றது. தன் சத்துருக்களைக்கூட அன்புகூராதவன், வேறு எந்தக் காரியங்களுக்கும் தகுதியானவனாய்க் காணப்பட்டாலும், இராஜ்யத்திற்குத் தகுதியானவனாய் இருப்பதில்லை; சகோதர சிநேகம் உள்ளவர்களாய் இருங்கள், இரக்கம் கொள்ளுங்கள், அனுதாபம் கொண்டிருங்கள், தயவு பாராட்டுங்கள், உதவுங்கள், சுயத்தைப் பலிசெலுத்துங்கள், மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகின்றீர்களோ, அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள். பொன்னான பிரமாணமானது, உங்களது எண்ணங்களை, வார்த்தைகளை மற்றும் கிரியைகளை அளப்பதாக – உங்கள் சித்திர தையலின் நீளங்களை அளந்துபார்த்து, அவை நல்ல சித்திர தையலென உங்களுக்கு உறுதியளித்திடுவதாக.