R5462 (page 153)
பாவத்திற்கான நிவிர்த்தி என்பது இரண்டு வெவ்வேறு கோணங்களிலிருந்து பார்க்கப்படலாம். ஆதாமின் பாவத்திற்காகத் திவ்விய நீதிக்கு நிவிர்த்தி செய்யப்படுவது என்பது முதலாவது அவசியமாயிருந்தது. மனுஷசந்ததி மரித்துப்போக வேண்டும் என்றுள்ள அண்டசராசரத்தின் மகா பிரதான நியாயாதிபதியினுடைய ஆணையானது, ஆதாமின் கீழ்ப்படியாமை காரணமாகக் கடந்துவந்தது; இந்த ஆணையினுடைய நிபந்தனைகள் சந்திக்கப்பட்டு, அது ரத்து செய்யப்படாதது வரையிலும், ஒருவரும் மரணத்தினின்று விடுதலைப்பண்ணப்பட முடியாது. எனினும் நீதியினுடைய அந்த ஆணை ரத்து செய்யப்படுதல் என்பது, ஒரு நபரை உடனடியாகப் பூரண மனுஷனாக்கிடாது.
ஒருவேளை ஏதோ ஒரு குற்றத்திற்காக ஒரு மனுஷன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள் மற்றும் பத்து வருஷங்களுக்குப் பின்னர் யாரோ ஒருவர் கைதியினுடைய கணக்கைக் கட்டித்தீர்த்து, சட்டத்தின் கோரிக்கைகளைச் சந்திக்கின்றார் மற்றும் கைதி விடுதலைச்செய்யப்படுகின்றார் – நீதிக்கு நிவிர்த்தி செய்யப்பட்டாயிற்று. ஆனால் சிறைச்சாலை வாழ்க்கையினின்றுள்ள விடுதலை என்பது கைதி காவலில் இருந்த காலங்களில் அவனால் இழந்துபோகப்பட்ட தெளிவான கண்பார்வை, அவனது பற்கள், அவனது முடி, அவனது ஆரோக்கியம் அல்லது வேறு எதையேனும் அல்லது பலவீனப்பட்டுப்போன எதையேனும் அவனுக்குத் திரும்பி கொடுத்திடாது. இதுபோலவே மனுக்குலத்திற்காக நீதிக்கு என்னதான் நிவிர்த்தி செய்யப்பட்டாலும், இவர்கள் கல்லறையினின்று விழித்தெழுப்பப்படும்போது, இவர்கள்மீது பாவம் ஏற்படுத்தின அச்சடையாளங்களிடமிருந்து விடுதலையாகிறதில்லை.
அப்போது உலகத்தின்மீது எந்தத் திவ்விய தயவின்மையும் காணப்படுவதில்லை, காரணம் மனுஷனுடைய விடுதலைக்கான விலையானது கட்டித்தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் ஆயிர வருஷ யுகத்தினுடைய துவக்கத்தில், மனுக்குலத்திடம் விழுகையின் காரணமாய் உண்டான குறைவுகள் காணப்படவே செய்யும். மனுக்குலத்தைச் சீர்ப்பொருந்தப்பண்ணுவதும், அவர்களை அபூரணம் மற்றும் பெலவீனத்தினின்று வெளியே தூக்கியெடுப்பதும் அந்த யுகத்தினுடைய வேலையாகக் காணப்படும். நீதிக்கு நிவிர்த்தி செய்யப்பட்டிருப்பதினால், மனுஷன் அவனது விழுந்துபோன நிலைமையினின்று எழும்புவதற்கு உதவப்படுவான்.
தம் சொந்த ஜீவனைப் பலிசெலுத்தி வாங்கின உலகமானது, கிறிஸ்துவின் கரங்களில் காணப்படும். நீதிக்கு நிவிர்த்தி செய்யப்படும் காரியமானது, மனுஷனை அபூரணத்தினின்று திரும்பிவரப்பண்ணாது என்றும், சட்டப்பூர்வமாய் நிவிர்த்தி செய்யப்படும் காரியமானது, தேவ அனுக்கிரகமின்மையினை மாற்றுவதை மாத்திரம் – மரண தண்டனையை ரத்து மாத்திரம் செய்கின்றது என்றுமுள்ள காரியங்களை நாம் மனதில்கொள்ள வேண்டும். இது மனுஷன் தேவனின் தயவுபெறும் நிலைக்குக் கொண்டுவரப்படுவதற்குரிய மற்றும் ஆயிர வருஷ அரசாட்சியினுடைய முடிவில் திவ்விய அங்கீகரிப்பிற்குப் பாத்திரமான நிலைக்குக் கொண்டுவரப்படுவதற்குரிய வாய்ப்பினைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது.
புதிய உடன்படிக்கையானது துவங்குவதற்கு முன்னதாக திவ்விய நீதிக்கு நிவிர்த்தி செய்யப்படவேண்டிய காரியமானது, ஆதாமின் பாவங்களுக்காக நிவிர்த்தி செய்யப்படும் காரியத்தினை மாத்திரம் உள்ளடக்குவதில்லை, இன்னுமாக ஓரளவு மனப்பூர்வமாய்ச் செய்யப்பட்ட பாவங்களுக்கு அடிகள் கொடுக்கப்படுவதையும்கூட உள்ளடக்கியுள்ளதாய் இருக்கின்றது; அதாவது நல்நடக்கைக்கான அறிவைப் பெற்றிருப்பவர்களாகவும், தங்கள் அநீதியான வார்த்தைகள் மற்றும் கிரியைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் பொறுப்பாளிகளாகவும் காணப்படும் மனுக்குலத்தினால் செய்யப்பட்டுள்ள சில கீழ்த்தரமான அநியாயங்களுக்காக நிவிர்த்தி செய்யப்படுவதையும்கூட உள்ளடக்கியுள்ளதாய் இருக்கின்றது. ஓரளவிற்கு இவர்கள் அறியாமையில்தான் காணப்பட்டனர்; ஆனாலும் பெரும்பாலும் இவர்கள் மனப்பூர்வமாகவே செய்துள்ளனர்; மேலும் பொறுப்பினுடைய அளவிற்கேற்ப நீதியானது பதில் கேட்கும்.
யூத யுகத்தினுடைய முடிவின்போது, தேவன் இஸ்ரயேல் ஜனங்களிடம் கணக்கு விசாரித்தார் மற்றும் இது உலகம் அறிந்துள்ள மிகக் கொடிதான உபத்திரவ காலங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. அந்த யுகத்தைக்குறித்து – அப்போது வாழ்ந்துகொண்டிருந்த தலைமுறையினர்குறித்து இயேசு பேசுகையில், தேவன் ஆபேலின் காலம் துவங்கி … அவர் பேசிக்கொண்டிருந்த காலம் மட்டும் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தத்திற்காகச் சரிக்கட்டுவார் என்று கூறியுள்ளார். (மத்தேயு 23:34-36)
உலகத்தினால் ஓரளவு மனப்பூர்வமாய்ச் செய்யப்பட்ட இந்தப் பாவங்கள் என்பவை, பாவநிவாரண பலிகளினால் முழுமையாய் மூடப்படுகிறதில்லை. இவைகள் மனப்பூர்வமாய் இருக்கும் அளவுக்கு, தண்டனை வழங்கப்பட்டு நிவிர்த்தி செய்யப்படவேண்டும். இந்தப் பாவங்களும், அக்கிரமங்களும் போக்காடு வகுப்பாராகிய – திரள் கூட்டத்தார்மீது வைக்கப்படுவதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. சீக்கிரத்தில் செயல்படப்போகின்ற மாபெரும் நிஜத்தில், இந்த வகுப்பார் உலகத்தினால் ஓரளவு மனப்பூர்வமாய்ச் செய்யப்பட்ட பாவங்களில் சிலவற்றிற்காக – அதிலும் விசேஷமாகப் பாபிலோனுடைய பாவங்களுக்காகப் பாடுபடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய துவக்கம் முதல் சிந்தப்பட்ட தேவனுடைய பரிசுத்தவான்கள் அனைவரின் இரத்தத்திற்கான கணக்கானது, தற்காலத் தலைமுறையினரிடத்தில், இதுவரை இல்லாத “மகா உபத்திரவ காலத்தின்போது” விசாரிக்கப்படும்.
கடந்த காலங்களிலுள்ள இரத்த சாட்சிகளாகிய, “பலிபீடத்தின்கீழுள்ள ஆத்துமாக்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூறி” நீதி செய்யப்படத்தக்கதாகக் கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதாக அடையாளமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளனர் (வெளிப்படுத்தல் 6:9-11). இவர்கள் தங்கள் சகோதரர்களும் இவர்களைப்போன்று கொல்லப்பட்டு, பின்னர் குற்றங்கள் அனைத்திற்காகவும் பழிவாங்கப்படுவது வரையிலும் காத்திருக்கும்படியாகச் சொல்லப்பட்டிருக்கின்றனர்.
மேற்கூறிய காரியங்களை வைத்துப்பார்க்கையில், இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய முடிவிலும், மற்றுமொரு கணக்கு விசாரிக்கப்படுதல் சம்பவிக்கும் என்று அறிகின்றோம். எந்த ஒரு ஜாதியார் தோன்றினது முதற்கொண்டு சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவ காலம் ஒன்று சீக்கிரம் வரவிருக்கின்றது (மத்தேயு 24:21-22). இதுகுறித்து அநேக தீர்க்கத்தரிசன வேதவாக்கியங்களில் அழுத்தம்கொடுத்துக் காண்பிக்கப்பட்டுள்ளது. நமது கர்த்தர் மறுபடியும் இப்பொழுது மகா நியாயாதிபதியாக வந்து இருக்கின்றார் மற்றும் புயல் மேகங்களானது இராஜாவாகிய அவரது பிரசன்ன நாளில் வேகமாய்த் திரண்டு கூடிவருகின்றது.
இரண்டு யுகங்களின், அதாவது சுவிசேஷ யுகம் மற்றும் அதற்கு முன்புள்ள யுகத்தின், [R5463 : page 154] அதாவது நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் சிந்தப்பட்டது முதற்கொண்டு, தற்காலம் வரையுள்ள காலப்பகுதியின் தப்பிதங்கள் யாவற்றிற்குமான முழுச்சரிக்கட்டுதலும் ஏன் இந்த யுகங்களினுடைய முடிவின்போது நிறைவேற்றப்படுகின்றது என்று கேள்வி எழும்புகின்றதா? இதற்கு எங்கள் பதில்: காரணம் ஒவ்வொரு யுகத்திற்காக பிரதான வெளிச்சமானது, அதன் முடிவின்போது வருகின்றது; மேலும் இத்தகைய வெளிச்சத்திற்கு எதிராகப் பாவம் செய்பவர்கள், இவர்களுக்கு முன்புள்ள காலங்களில் குறைவான வெளிச்சம் பெற்று காணப்பட்ட பொல்லாதவர்களைக்காட்டிலும் மிகக் கடினமான நியாயத்தீர்ப்பிற்குப் பாத்திரமாய்க் காணப்படுகின்றனர். தற்காலத்தின் வெளிச்சத்தின்கீழ்க் கடந்த காலங்களினுடைய தவறுகளுக்கு உடன்படுவது என்பது, பொறுப்பினைப் பெருக்கி, அனைத்திற்குமான வாதைகளுக்கு ஆளாகுவதற்குப் பாத்திரமாக்குகின்றது.
இன்றுள்ள உலகத்தாரின், அதிலும் விசேஷமாகக் கிறிஸ்தவ மண்டலத்தின் இந்த அக்கிரமங்களை அல்லது அநியாயங்களைப் பார்த்தாலே நாம் புரிந்துகொள்ளலாம். இப்பொழுது ஒட்டுமொத்த உலகத்தின்மீது அதிகமான வெளிச்சம் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது; அதிலும் விசேஷமாய் உலகத்தாரிலுள்ள நாகரிகமடைந்தோர்மீது பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது. யூதருடைய நியாயப்பிரமாணத்தில் முன்வைக்கப்பட்டதும், பின்னர் கர்த்தரினாலும் அப்போஸ்தலர்களாலும் விவரிக்கப்பட்டதுமான நீதியின் கொள்கைகளானது, நீதி-அநியாயம் தொடர்பாகவும், சரி-தவறு தொடர்பாகவும், நன்மை-தீமை தொடர்பாகவும் பொது ஜனங்களுடைய மனங்களை வெளிச்சமூட்டியுள்ளபடியால், இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் தலைமுறையினர் போன்று இந்தளவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களாக வேறு யாரும் காணப்படுவதில்லை.
அறிவு இப்படிப் பெருகினபோதிலும், உலகம் முழுவதும் கடுமையான அக்கிரமங்கள் நிலவிவந்தபோதிலும், வெகுசிலரே உலகக் காரியங்களையும், பொருளாதாரக் காரியங்களையும், சமுதாயக் காரியங்களையும், மதக் காரியங்களையும் சரிப்படுத்துவதற்கும், சமப்படுத்துவதற்கும் ஏதுவாக எதையேனும் செய்திடுவதற்கு விருப்பமாய் இருப்பதை நாம் காண்கின்றோம். அநேக நன்மைகளைப் பெற்றிருக்கும் பெரும்பாலானவர்களோ, அந்நன்மைகளை தங்களுக்கே பயன்படுத்திடுவது என்பது அநியாயம் என்றும், அநீதி என்றும் அடையாளம் கண்டுகொண்டபோதிலும், அவைகளைத் தங்களுக்கென்றே வைத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிகின்றது.
கடந்த காலங்களில் கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட பெரும்பான்மையான தீமைகளுக்கு உரிய தண்டனை இதுவரை வரவில்லை என்றும் நம்மால் காணமுடிகின்றது. கிறிஸ்துவின் நாமத்தில் உண்மை சபையினைத் துன்புறுத்தின மகா அமைப்புகளானது இன்னமும் இயங்கிருகின்றது மற்றும் செழித்தோங்குகின்றது; எனினும் இவைகள் நீதியான பலனை இன்னும் அடையவில்லை. மிகவும் அண்மையில் காணப்படுகின்ற பயங்கரமான உபத்திரவ காலத்தில் – ஒழுங்கின்மையில் ஒவ்வொரு மனுஷனுடைய கைகளும் தன் அயலானுக்கு எதிராக ஓங்கப்படும் காலத்தில், “வெளியே போகிறவர்களுக்கும், உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லாத” காலத்தில், மகா பாபிலோன் பலத்த ஏந்திரக்கல்லெனக் கடலுக்குள் அமிழ்ந்துபோய்விடும்.
நிழலில் காண்பிக்கப்பட்டுள்ளதுபோன்று, இந்தப் பாவங்களைச் சட்டப்படி நிவிர்த்தி செய்திடும் காரியமானது, போக்காடு வகுப்பாரால் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதாகத் தெரிகின்றது (லேவியராகமம் 16:20-22). நிழலில் இஸ்ரயேல் உலகத்திற்கு அடையாளமாய்க் காணப்படுகின்றது. இந்தப் போக்காட்டினுடைய நிழலில், அர்ப்பணம்பண்ணின பிற்பாடு, “பாளயத்திற்குப் புறம்பே கிறிஸ்துவின் நிந்தனைகளைச் சுமப்பதற்காக” போவதற்கு விருப்பமற்றுக் காணப்படும் திரள் கூட்டத்தார் தனிமை மற்றும் உபத்திரவம் எனும் வனாந்தரத்திற்குள் அனுப்பிவைக்கப்படுவதைக் கர்த்தர் சித்தரித்துக் காட்டுகின்றார். இவர்கள் பாவநிவாரணத்தில் பங்கடைவதில்லை, மாறாக உலகத்தினுடைய மனப்பூர்வமான பாவங்கள் சிலவற்றின் பாரப்பளுவினைச் சுமப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர், ஆம்! கட்டாயப்படுத்தப்படுகின்றனர் மற்றும் இவர்களது ஆவிக்குரிய ஜீவனானது கர்த்தர் இயேசுவின் நாளில் இரட்சிக்கப்படத்தக்கதாக, இப்படி உலகத்திற்கு மரித்தவர்களாகுவார்கள்.
தற்காலத்தில் குறிப்பாய் அதிக எண்ணிக்கையில் காணப்படும் இந்த வகுப்பார், இந்த மகா உபத்திரவ காலத்தில் பாடுபடத்தக்கதாக எதிராளியானவனிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். இவர்களில் யாரெல்லாம் இந்த உபத்திரவங்களுக்கு உண்மையாயும், நேர்மையாயும் இணங்குவார்களோ, அத்தகையவர்கள் ஜெயம்கொண்டவர்களாகக் கருதப்பட்டு வெளிப்படுத்தல் 7-ஆம் அதிகாரத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதுபோன்று வெற்றியின் குருத்தோலைகளை அருளப் பெற்றுக்கொள்வார்கள் மற்றும் ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்தில் பங்கடைவதற்கும், கிறிஸ்துவினுடைய மணவாட்டியின் கனமிக்க ஊழியர்களாக இருப்பதற்குமான சிலாக்கியமடைவார்கள். ஒருவேளை இவர்கள் இணங்கத் தவறி, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் வஸ்திரங்ககளைத் தோய்த்து வெளுக்கத் தவறுவார்களானால், இரண்டாம் மரணத்திற்குள்ளாகக் கடந்துசெல்வார்கள்.
இந்த மகா உபத்திரவ காலத்தில் சிறுமந்தையாகிய, உண்மையாய்ப் பலிசெலுத்திடும் கர்த்தருடைய ஆடு வகுப்பார் தப்பித்துக்கொள்வார்கள் மற்றும் இதிலிருந்து திரள் கூட்டத்தினர் தப்பித்துக்கொள்ளமாட்டார்கள், மாறாக பங்கடைவார்கள். இவர்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் வெளுக்கப்பெற்றவர்களாக இந்த உபத்திரவத்தினின்று வெளிவருவார்கள். இவர்களது பாடுகளானது இவர்களது வஸ்திரங்களைத் தோய்ப்பதில்லை, மாறாக தங்கள் பாடுகளில் இவர்கள் முன்பு ஒருபோதும் இல்லாதளவுக்குத் தங்களுக்குத் தேவனுடைய ஆட்டுக்குட்டியானவருடனும், அவரது பாவநிவாரண புண்ணியத்துடனும் இருக்கும் உறவினைக்குறித்து உணர்ந்துகொள்ள கற்றுக்கொள்வார்கள் மற்றும் விசுவாசத்தின்மூலம் அந்தப் புண்ணியத்தினைக் கொண்டு தங்கள் சொந்தச் சுத்திகரிப்பை அடைகின்றவர்களாய்க் காணப்படுவார்கள். சீக்கிரம் வரவிருக்கின்ற இந்தத் தேவ பிள்ளைகளுக்கான அனுபவங்களை நாம் கவனத்தில் எடுத்துப்பார்க்கையில், நாம் நமது அன்பினை கர்த்தருக்கு அதிகமாய் வெளிப்படுத்த நாடிடுவோமாக – நமது இராஜாவுக்கான ஊழியத்திலும், விசுவாச வீட்டாரின் சார்பிலும் நம்முடைய ஜீவியங்களை உண்மையாய் ஒப்புக்கொடுக்க நாடிடுவோமாக.
போக்காடு வகுப்பார் பாவத்திற்கான நிவிர்த்தியினை ஏறெடுத்து, இப்படியாக மனுக்குலத்தின் ஒரு பகுதியினரைக் கல்லறைகளினின்று வெளிக்கொண்டு வந்தார்கள் என்று கூறிடுவது சரியான காரியமாய் இராது. கல்லறை என்பது ஆதாமுடைய மீறுதலின் நிமித்தமான தண்டனையைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; மேலும் இந்தத் தண்டனையானது ஆதாமின் பிள்ளைகள் அனைவராலும் சுதந்தரிக்கப்பட்டுள்ளது. “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் (கீழ்ப்படியாமை) பாவத்தினாலே (பாவத்தின் விளைவாக) மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார் (உரோமர் 5:12).
இயேசுவின் மரணம் மாத்திரமே ஆதாமின் பாவத்தினை ரத்து செய்திட முடியும். அவர் மாத்திரமே மீட்கிறவர் ஆவார், ஈடுபலியாவார். அவர் தம்முடைய ஜீவனைத் தகப்பனாகிய ஆதாமின் ஜீவனுக்காய்க் கொடுத்தார்; இப்படியாக முழு உலகத்தின் பாவங்களுக்காய் நிவிர்த்தி செய்யப்பட்டது. இயேசு தம்முடைய சரீரத்தின் அங்கத்தினர்களென யாருக்குப் பரிந்துபேசுகின்றாரோ, அவர்கள் தங்கள் சொந்தத் தகுதியினால் இல்லாமல், மாறாக “பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன்” காரணமாக, அவரோடு இணைந்தவர்களாக அவரது வேலையில் அவரோடுகூடக் காணப்படுகின்றனர். இவர்கள் தலையானவருடன் இணைக்கப்பட்டிருக்கின்றபடியால், “உலகத்தின் பாவங்களை” ரத்து செய்திடும் காரியத்தில் ஏதோ சில பங்கினை ஆற்ற வேண்டியவர்களாக வேதவாக்கியங்களில் காண்பிக்கப்பட்டுள்ளனர். உலகத்தின் பாவத்தை ரத்து செய்திடும் விஷயத்தில் திரள் கூட்டத்தினர் பங்காற்றிடுவதற்கு ஏதும் பெற்றிருப்பதில்லை.
“உலகத்தின் பாவம்” என்பவை ஆதாமின் பாவமாகும் (யோவான் 1:29). ஆனாலும் விழுகையின் காரணமாய்ச் சந்ததியார்மீது வந்த ஆதாமின் பாவம் அல்லாத வேறு பாவங்களும் காணப்படுகின்றன. ஒவ்வொரு யுகத்திலும், ஒரு குறீப்பிட்ட அளவு வெளிச்சத்திற்கு எதிராய்ப் பாவங்கள் செய்யப்படுகின்றன என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் இந்தப் பாவிகள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல; ஆகையால் வெளிச்சத்திற்கு எதிரான இவர்களுடைய பாவங்களானது, இவர்களை இரண்டாம் மரணத்திற்குள்ளாக்குவதில்லை.
எனினும் இவர்கள் எந்தளவுக்கு வெளிச்சத்தையும், அறிவையும் பெற்றிருந்தார்களோ, அந்தளவுக்கு இவர்கள் பொறுப்பினையும்கூடப் பெற்றிருந்தார்கள். அனைவருமே கல்லறையினின்று வெளியே வருவதற்கும், பூரண ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்குமான வாய்ப்பினை அடையும்பொருட்டு இயேசு மரித்திருந்தபோதிலும், அவர் (உலகத்தினால்) வெளிச்சத்திற்கு எதிராகச் செய்யப்பட்டிருந்த எந்தத் தனிப்பட்ட பாவங்களுக்காகவும் மரிக்கவில்லை. ஏனெனில் இத்தகைய பாவங்களுக்காய், அந்தந்த தனி நபரே பொறுப்பாளியாகக் காணப்படுகின்றனர்.
சபை வகுப்பார் விஷயத்தில், மனப்பூர்வமாய்த் தீமை செய்பவர்கள் ஜீவனின்று அறுப்புண்டு போகப்பண்ணப்படுவார்கள். சிலருடைய ஆவி இரட்சிக்கப்படத்தக்கதாக, இவர்களுடைய மாம்சம் அழிக்கப்படுவதற்காய்ச் சாத்தானிடம் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகின்றார். ஒவ்வொரு மனப்பூர்வமான பாவமும், அது யாரால் செய்யப்பட்டதாக இருப்பினும் அல்லது எப்போது செய்யப்பட்டதாக இருப்பினும், அது அடிகள் படுவதன் மூலமாகவோ அல்லது பாவியினுடைய மரணத்தின் மூலமாகவோ ஈடுபண்ணப்பட வேண்டும்.
ஆதாமின் பாவமே கிறிஸ்துவின் மரணம் மூலம் நிவிர்த்தி செய்யப்படுகின்றதே ஒழிய, வேறு எதுவுமல்ல. ஆனால் நேரடியாய்ப் பொறுப்பைப் பெற்றிருக்கும் மற்ற பாவங்கள், அதாவது வெளிச்சத்திற்கு எதிரான பாவங்களுக்காக கணக்கும் சரிக்கட்டப்பட வேண்டும். முற்காலங்களில் தேவ ஜனங்கள் கசப்பான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் மற்றும் இப்படித் துன்புறுத்தப்பட்டவர்கள் குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும் வாசம்பண்ணும்படிக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர் (எபிரெயர் 11:32-40). இவர்களுக்கு எதிரான மீறுதல்களானது, ஒரளவு வெளிச்சத்தில் செய்யப்பட்டிருப்பதின் அளவிற்கேற்ப, இவைகளின் கணக்குகளானது அக்கிரமக்காரர்களால் சந்திக்கப்பட வேண்டும்.
தேவ ஏற்பாடானது யூத ஜனங்களுக்கு எதிரான கணக்கினை யூத யுகத்தினுடைய முடிவில் சரிக்கட்டி தீர்த்துவைத்தது. அந்த ஜனங்கள் மீது மிகுந்த கோபாக்கினை வந்தது. அந்த ஜனங்களினுடைய கணக்கின் சரிக்கட்டுதல் கி.பி. 70-இல் நிறைவடைந்ததென நாம் புரிந்துகொள்கின்றோம். மற்ற ஜாதியாரைப் பொறுத்தமட்டில், அவர்களையும் இதேவகையில் தேவன் கையாண்டார், ஆனாலும் இதேபோன்றே அல்ல என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டும்; இதேபோன்றே இல்லாததற்கான காரணம், மற்ற ஜாதியார் இஸ்ரயேலர்களைப்போன்று அவருடன் உடன்படிக்கை உறவில் காணப்படவில்லை.
சுவிசேஷ யுகத்திற்கு வருகையில், அநேக பாவங்கள் புரியப்பட்டுள்ளன மற்றும் இவை கிறிஸ்துவின் பலியினால் மூடப்படுகிறதில்லை – இவைகள் ஓரளவிற்கு வெளிச்சம் மற்றும் அறிவிற்கு எதிராய்ப் புரியப்பட்டுள்ள பாவங்களாகும். இந்தப் பாவங்களிலேயே பிரதான பாவம், ஆண்டவருடைய [R5463 : page 155] வார்த்தைகளின்படி, அவரது ஜனங்களுக்கு எதிராய்ப் புரியப்பட்டவையாகும். தம்மில் விசுவாசம் வைத்துள்ள “சிறியரில்” ஒருவனுக்குத் தீமைசெய்யும் எவனும் தண்டிக்கப்படுவான் என்றும், இந்தச் சிறியரில் ஒருவனுக்குக் குடிக்க “ஒரு கலசம் தண்ணீர்” கொடுப்பவனும், பலனை அடைவான் என்றும் அவர் கூறியுள்ளார். (மத்தேயு 18:6; 10:42)
இருண்ட யுகங்களில் பரிசுத்தவான்களுக்கு எதிராகப் பயங்கரமான கொடுமைகள் செய்யப்பட்டுள்ளதைக்குறித்து நாம் வாசித்திருக்கின்றோம். அவர்கள் தார் பூசப்பட்டு, எரிக்கப்பட்டுள்ளனர்; அவர்கள் காட்டு மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டு, அவர்களின் பாவப்பட்ட சரீரங்கள் பீறப்பட்டுள்ளன. அவர்கள் எண்ணமுடியாத விதங்களிலெல்லாம் சித்திரவதைப் பண்ணப்பட்டுள்ளனர். இந்தக் கொடுமைகளைப் புரிந்துள்ளோருக்குரிய சில தண்டனைக்கான காலம் சமீபமாயுள்ளது என்பதில் நமக்கு நிச்சயமே. ஆனாலும் காலத்திற்கு முன்பாக நாம் யாதொன்றைக்குறித்தும் நியாயந்திர்க்கக்கூடாது என்று கர்த்தர் நமக்குக் கூறியுள்ளார். ஏற்றகாலத்தில் நாம் உலகத்தின் நியாயாதிபதிகளாக்கப்படுவோம். இப்பொழுதும் நாம் கர்த்தரையே நோக்கிப்பார்த்து, அவரது நியாயத்தீர்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டும்.
கி.பி. 70-இல் நிறைவடைந்த யூதர்களின் கணக்குச்சரிக்கட்டும் காலம் ஒன்று காணப்பட்டது போன்று, கிறிஸ்தவ தேசங்கள் என்று உரிமைப்பாராட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும்கூடக் கணக்குச்சரிக்கட்டும் காலம் ஒன்று இருக்குமென வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்கள் எந்தளவுக்குத் தங்களை அநியாயத்தில் உட்படுத்தியிருந்தார்களோ, எந்தளவுக்கு வெளிச்சத்திற்கு எதிராகப் பாவம்செய்திருந்தார்களோ, அந்தளவுக்குப் பொறுப்பாளிகளாகக் காணப்படுவார்கள். நாம் இவர்களது பொறுப்பினுடைய அளவினை அறியோம் – தேவனே அறிவார்! ஆனால் இந்த உபத்திரவ காலத்தில் அவர் இந்தக் காரியங்களின் கணக்கு அனைத்தையும் சரிக்கட்டித் தீர்ப்பார் – இப்படியாகப் புதிய யுகமானது கணக்குகள் அனைத்தினின்றும் விடுவிக்கப்பட்டிருக்கும் – இப்படியாக இவ்வகையான கணக்குகள் எதுவும் மனுக்குலத்திற்கு எதிராகச் சாற்றப்பட்டிருக்காது. தேசமாகப் புரிந்த பாவங்கள் விஷயத்தில், தேசமாக நிவிர்த்தி செய்யப்படும். தீமையான செய்கைகளினால் தனிநபர்கள் கஷ்டமடைந்தபடியால், சரிக்கட்டப்படுதலிலும் தனிநபர்கள் கஷ்டம் அனுபவிப்பார்கள்.
உலகம் கணக்குகளினின்று விடுவிக்கப்படத்தக்கதாக, தேவன் ரத்து செய்ய விரும்பிடும் அநியாயங்களை அவர் எவ்வாறு விசாரிக்கப்போகின்றார்? திரள் கூட்ட வகுப்பார் அந்த உபத்திரவத்தில் ஒரு பங்கினை அடைவார்கள் என்று நாங்கள் பதிலளிக்கின்றோம். தெய்வீகக் கோபாக்கினைக்கு உரியவர்கள் என்ற விதத்தில் உபத்திரவத்தில் ஒரு பங்கினை அடைவதற்கு இவர்கள் பாத்திரவான்களாய் இராதபடியால், இவர்கள் படும் பாடுகளின் புண்ணியமானது மற்றவர்களுக்குக் கடந்துபோக்கூடியதாய் இருக்கின்றது. திரள் கூட்ட வகுப்பாருக்குள் வருவது என்பது ஒரு தண்டனையல்ல. திரள் கூட்ட வகுப்பார் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட வகுப்பாராய்க் காணப்படுவார்கள். இவர்கள் சிங்காசனத்தில் அமர்த்தப்படுகிறதில்லை, ஆனாலும் சிங்காசனத்தின் முன்னிலையில் சேவை செய்கின்றவர்களாய் இருப்பார்கள்; இவர்கள் திவ்விய சுபாவத்தினையும் அடையப்போகிறதில்லை. சிறுமந்தை வகுப்பார் ஆண்டவரோடுகூட, அவருடைய உடன்சுதந்தரர்களென இராஜ்யத்தில் இணைந்துகொள்ளும் மகா பரிசினை அடைபவர்களாய் இருப்பார்கள். மற்ற வகுப்பார் ஆவிக்குரிய தளத்தினுடைய கீழ்நிலையில் பலனை அடைவார்கள் – இவர்கள் ஆவிக்குரிய தளத்தை அடைவதற்கான காரணம், இவர்களும் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர் என்பதினாலாகும்.
திரள் கூட்டத்தாரைப் பொறுத்தமட்டில், இவர்களை இந்த யுகத்தினுடைய முடிவின்போதுள்ள உபத்திரவத்தில் பங்குகொள்ள தேவன் அனுமதிப்பது என்பது, இவர்களது சொந்த முன்னேற்றத்திற்கேயாகும். இவர்களது உடன்படிக்கையானது, மரணபரியந்தமான உடன்படிக்கையாகும்; கர்த்தருக்குக் கீழ்ப்படிவதில் இவர்கள் தங்கள் ஜீவியங்களை இழக்கவில்லையெனில், மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களெனத் தங்களை நிரூபிக்கவில்லையெனில், இவர்கள் எந்த ஒரு தளத்திலும் ஜீவ நிலையினைப் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியாய் இருக்கமாட்டார்கள். ஆகையால் இவர்கள் அந்த [R5464 : page 155] உபத்திரவ காலத்தில் பாடுபடுவது என்பது இவர்களது சொந்த நன்மைக்காகவே இருக்கும். இவர்கள் நிஜமான போக்காடென உலக ஜனங்களுடைய அக்கிரமங்கள், பாவங்கள் மற்றும் மீறுதல்களுக்காய்ப் பாடுபடுவதாகக் கூறப்பட்டுள்ளனர் (லேவியராகமம் 16:21-22). [ஆசரிப்புக்கூடார நிழல்கள் புத்தகம், பக்கம்: 68-72 (ஆங்கிலம்); 74-79 (தமிழ்) பார்க்கவும்]. திரள் கூட்டத்தாரின் புண்ணியத்தினை விருதாவாக விடுவதற்குப் பதிலாக, கர்த்தர் அதைக் கணக்கில் வரவாக எடுத்துக்கொள்கின்றார்; மனப்பூர்வமான பாவங்களுக்குரிய உலகத்தின் கணக்கினைச் சரிக்கட்ட பயன்படுத்துகின்றார்.