போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி….” (லேவியராகமம் 16:10)
நீதியின் கணக்குகளானது சரிக்கட்டப்படும் விதத்தினை நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது என்கிறபோதிலும், கொலை அதாவது ஜீவனை எடுத்தல் என்பது உண்மையான கொலையாக இருப்பினும் சரி அல்லது இருதயத்தைக் கொலைசெய்தல் என்று கர்த்தரினால் சுட்டிக்காண்பிக்கப்படும் மற்றவரைப் பகைக்கும் காரியமாக இருப்பினும் சரி, இது திவ்விய கண்ணோட்டத்தில் மிகக் கடுமையானதாகக் காணப்படும் குற்றங்களில் ஒன்றாகும். “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங்கீதம் 116:15) என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது அவர்களுடைய மரணத்தின் விஷயத்தில் அவர் விசேஷித்த கவனம் செலுத்துவதைச் சுட்டிக்காட்டுகின்றது. நமது கர்த்தருடைய முதலாம் வருகைக்கு முன்புள்ள காலப்பகுதிகளில் ஆபேல் முதற்கொண்டு சகரியா வடையிலும் நீதிமான்களின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது.
காயீனைப் பொறுத்தமட்டில், இவர் தனது சகோதரனுடைய மரணத்தைக்குறித்துக் குற்றமுள்ளவராயிருந்தார்; தனது சகோதரனுடைய இரத்தத்ததைக்குறித்துக் குற்றமுள்ளவராயிருந்தார்; தேவனால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமான்களாகிய மற்றவர்களைக் கொலைசெய்தவர்களும், அவர்களது மரணத்தைக்குறித்துக் குற்றமுள்ளவர்களானார்கள்; இயேசுவைக் கொலைசெய்தவர்களும், கிறிஸ்துவினுடைய இரத்தத்தைக்குறித்துக் குற்றமுள்ளவர்களாயிருந்தனர். கிறிஸ்துவினுடைய புண்ணியத்தின் வாயிலாக, ஆதாமின் பாவம் அனைத்தையும் பொதுவான விதத்தில் மன்னிப்பதற்குத் தேவன் திட்டம்பண்ணியுள்ளார்; எனினும் ஆதாமினுடைய பெலவீனத்தினால் வந்தது என்று சொல்லப்பட முடியாததும், ஒருவிதமான பொறுப்பினைச் சாற்றுகின்றதுமான வேறு ஒருவகை பாவமும் உள்ளது.
பழிவாங்குதலுக்கான நீதியின் கூக்குரல்
வேதவாக்கியங்களின்படி ஆபேலின் இரத்தமானது பூமியிலிருந்து கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட்டது என்று பார்க்கின்றோம். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில் நீதியானது பழிவாங்குதலுக்காய்க் கூக்குரலிட்டது. உலகத்தின் பாவங்களுக்கென மீட்கும் விலைக்கிரயமாக இறுதியில் செயல்படுத்தப்படும் கிறிஸ்துவினுடைய மரணத்தின் புண்ணியமானது, மேற்கூறப்பட்டுள்ள இத்தகைய மீறுதல்களை முழுமையாக மூடிடுவதில்லை. அப்புண்ணியமானது ஆதாமின் பெலவீனங்கள் அல்லது சுதந்தரித்துக்கொண்ட பாவத்தின் பாகத்தினை மட்டும் மூடுகின்றது; ஒரு குறிப்பிட்ட அளவு பொறுப்பு தொடரும் என்றும், அவர்களது தவறான செய்கைகள் மற்றும் பொல்லாப்புகள் நிமித்தமாக அவர்கள் மீது கொஞ்சம் தண்டனைக் காணப்படும் என்றும் நாம் அனுமானிக்கின்றோம். மேலும், தேவன் இதைத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகின்றது; சிலர் பாடுபவேண்டிய அவசியமிருக்கின்றபடியால், இந்தக் கொலை கணக்கினை யூத யுகத்தினுடைய முடிவின்போதுள்ள யூதர்கள்மீது வரப்பண்ணுவதன் மூலம், இக்கணக்கானது ஒருவிதத்தில் செலுத்தித்தீர்க்கப்படும்படிக்குத் தேவன் அனுமதித்தார். யூதர்கள் அவர்களது யுகத்தினுடைய முடிவில் எப்படியும் ஒரு மகா உபத்திரவத்தினைப் பெறப்போவதினால், அவர்கள்மீது, அதுவும் அவர்களிலுள்ள அநேகம் குற்றமற்றவர்கள் மீதும்கூட இந்தக் கூடுதலான கஷ்டமானது சேர்ந்து கடந்துவருவதற்குக் கர்த்தர் திட்டமிட்டார்.
விசேஷித்த கொலைகள் முதலானவைகளைப் புரிந்தவர்களுக்கு எதிரான நீதியினுடைய கணக்கினைத் தீர்க்கத்தக்கதாகக் குற்றமற்றவர்களைத் தண்டிக்கும் இத்தண்டனையை அவர் அனுமதித்துள்ளதாகத் தெரிகின்றது; மேலும் இந்த ஒரு வெளிச்சத்தில், “நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்” (மத்தேயு 23:35) எனும் வேதவாக்கியத்தின் வார்த்தைகளை நாம் புரிந்துகொள்கின்றோம். இதுவே எருசலேமின்மீது கடந்துவந்த “கோபாக்கினையாகும்;” மேலும் இது கடந்த காலத்தினுடைய கணக்குகளைத் தீர்த்துவைத்துள்ளதாகத் தெரிகின்றது. அங்கு ஒரு புதிய யுகம் துவங்கியபோது, புதிய கணக்கினுடைய ஆரம்பமும் காணப்பட்டது. நிஜமான ஆசாரியத்துவமும், நிஜமான லேவியர்களும் அங்குக் காட்சியில் வந்தார்கள் மற்றும் இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதிலும் கர்த்தர் தமது அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் அனைவருடைய மரணத்தைக்குறித்தும் கணக்கு வைத்திருக்கின்றார். கர்த்தருடைய பரிசுத்தவான்களில், அர்ப்பணிக்கப்பட்டவர்களில் யார் ஒருவருடைய மரணத்தைக்குறித்து ஒருவன் குற்றமுள்ளவனாயிருப்பானானால், அப்படிப்பட்டவன் தன்னையே பிரத்தியேகமான ஒரு கடன் மற்றும் பொறுப்பின்கீழ்க் கொண்டுவந்துவிடுபவனாய் இருப்பான். கர்த்தருடைய பரிசுத்தவான்களைத் துன்புறுத்திய அல்லது கொன்ற நபருக்கு எதிராக நீதியினுடைய விசேஷித்த குற்றச்சாட்டு காணப்படும் என்பதாகத் தெரிகின்றது. இதுபற்றின ஒரு கருத்தானது, இயேசுவினுடைய சாட்சியின் நிமித்தமாகவும், தேவவசனத்தினுடைய சாட்சியின் நிமித்தமாகவும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களானது, “தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்” என்றுள்ள வேதவாக்கியத்தின் வார்த்தைகளில் விளங்குகின்றது. இது அடையாளமான காட்சியே தவிர, தனிப்பட்ட நபரின் கூக்குரலல்ல; ஏனெனில், இந்த நபர்கள் மரித்துப்போய்விட்டனர். மற்றும் எதைக்குறித்தும் அறியாதவர்களாகவும், உணராதவர்களாகவும் காணப்படுகின்றனர் – ஏனெனில் “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்;” ஆனால் எப்படி ஆபேலின் விஷயத்தில், அவர் மரித்த பிற்பாடு நீதி அபயமிட்டதோ, அதுபோல இங்கும் நீதியே கூக்குரலிடுகின்றது. இறந்தவர்களுக்கும், அவர்களது இரத்தத்தின் கூக்குரலுக்கும் சம்பந்தமில்லை. அது நீதியின் சத்தமேயாகும்.
இப்படிக் கொல்லப்பட்ட வகுப்பார், 1800-வருஷங்களுக்கும் அதிகமான இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதிலும் பெரும் வகுப்பாராய்க் காணப்படுகின்றனர் என்பது அனைவராலும் எளிதில் ஒப்புக்கொள்ள முடிகிற காரியமேயாகும். அநேகர் நீதியின் காரணங்களுக்காகவும், கர்த்தருடைய நாமத்தின் நிமித்தமாகவும் பாடுபட்டுள்ளனர்; [R4652 : page 235] மேலும் யூத யுகத்தினுடைய முடிவின்போது கர்த்தர் செய்ததுபோலவே, இந்த யுகத்தினுடைய முடிவின்போதும், கணக்கினைத் தீர்த்துக்கொள்ளவும், நீதியினைத் திருப்திப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஆனால் இது – ஆதாமினுடைய தண்டனைத் தீர்ப்பு மற்றும் பெலவீனத்தின் விஷயத்திலுள்ள நீதியின் கோரிக்கைகள் அனைத்தையும் இயேசு தம்முடைய சொந்த இரத்தத்தினுடைய புண்ணியத்தினைக்கொண்டு திருப்திப்படுத்திடும் நீதியின் திருப்திப்படுத்துதல் அல்ல, மாறாக “சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்திற்கு” எதிராகப் புரியப்பட்டுள்ள இந்த விசேஷித்த மீறுதல்கள் தொடர்புடைய நீதியினைத் திருப்திப்படுத்துதலாகும். “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.” (மத்தேயு 18:6)
திரள் கூட்டத்தினரால் செய்யப்படும் நிவிர்த்தியின் வகை
இந்த யுகத்தினுடைய முடிவில், திரள் கூட்டத்தினர் என்று அழைக்கப்படும் வகுப்பார் மரித்தாக வேண்டும், ஏனெனில் அவர்களுடைய உடன்படிக்கையின்படி அப்படிச் செய்தாக வேண்டும். இந்த நிபந்தனையின்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினுடைய ஜெநிப்பித்தலைப் பெற்றுக்கொண்டவர்கள் ஆனார்கள். ஆகையால் இவர்களுக்கு ஓர் ஆவிக்குரிய சுபாவத்தினைக் கொடுப்பதன் மூலம் இந்தக் கிருபையின் வேலையினைத் தேவன் நிறைவேற்றி முடித்துவைக்க வேண்டுமானால், மாம்சத்தினுடைய மரணம் சம்பவித்தாக வேண்டும். இதற்கு மாற்றுவழி ஏதும் இல்லை; இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் முடியாது; இவர்கள் பலியினை முழுமையான விதத்தில் ஏறெடுக்கத் தவறிப்போயுள்ளபடியால், கர்த்தருடைய பின்னடியார்களிடம் எதிர்ப்பார்க்கப்படும் பக்திவைராக்கியத்துடனும், சுறுசுறுப்புடனும் தொடர்ந்து செயல்படுவதற்கு இவர்கள் தவறிப்போயுள்ளபடியால், இவர்கள் சிறுமந்தை வகுப்பாரிடமிருந்து பிரிக்கப்படுகின்றனர்; ஆனாலும் இவர்கள் இரண்டாம் மரணத்திற்குள்ளாகத் தள்ளப்படுவதற்குப் பதிலாக, இவர்கள் தங்கள் மரணத்தினை நிறைவேற்றிட அனுமதிக்கப்படுகின்றனர். உண்மையில் திட்டமிட்டிருந்தபடி இவர்களது மரணமானது, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களுடைய மரணத்தைப்போன்று பலி என்ற விதத்தில் இருக்கப்போவதில்லை என்பதினால், இவர்கள் மாற்று விதத்தில் மரணத்திற்குள் கடந்துசெல்லும் வண்ணமாக ஏற்பாடு காணப்படுகின்றது; அதாவது இவர்கள் சுவிசேஷ யுகம் முழுவதிலும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களுக்குக் கொடுமைகள் செய்தவர்களின் சில மீறுதல்களுக்கு ஈடாக மரணத்திற்குள் கடந்துசெல்லும் வண்ணமாக ஏற்பாடு காணப்படுகின்றது. இப்படியாக நீதியின் கணக்குகளானது திரள் கூட்டத்தினரால் ஒரு விதத்தில் சரிக்கட்டி தீர்த்துவைக்கப்படுகின்றது. (squared); மேலும் இதன்விளைவாக முற்காலங்களில் கொலைபாதகம் புரிந்தவர்களுக்கு ஒரு விதத்தில் விடுதலையானது அருளப்படுகின்றது. [R4652 : page 236]
உதாரணத்திற்குத் தானியேலிடம் தேவதூதனால் கூறப்பட்ட வார்த்தைகளானது (தானியேல் 12:2) நீரோ மன்னன் உயிர்த்தெழுதலின் காலங்களில் வரும்போது, அவர் நிந்தைக்கும், நித்திய இகழ்ச்சிக்கும் எழுந்திருப்பார் என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. அனைவருமே இந்த மனுஷனுடைய ஜீவியத்தின் விவரங்களை அறிந்திருப்பார்கள்; இம்மனுஷனுடைய ஜீவியமே முழு உலகத்திற்கும் திறந்த புஸ்தகமாகக் காணப்படும். “இதோ இவர்தான் நீரோ! இதோ இவர்தான்!” என்று ஜனங்கள் சொல்லுவார்கள். தனது சொந்தத் தாயைக் கொலைசெய்தவன் என்றும், நூற்றுக்கணக்கான தேவனுடைய பரிசுத்தவான்களைக் கொலைசெய்தவன் என்றும், பார்க்கப்படுவது என்பது கஷ்டமான நிலைமையாக இருக்கும்; இவர் சீர்க்கெட்ட நிலையினின்று வெளிவந்து, தன்னை முற்றிலும் மாற்றம் அடைந்துள்ள மனுஷனாகக் குணலட்சணத்தினுடைய மாற்றத்தின் மூலமாய் வெளிப்படுத்துவது வரையிலும், இவரது நிந்தனையும், இகழ்ச்சியும் தொடர்ந்து காணப்படும். ஆனாலும் கர்த்தருடைய அந்தப் பரிசுத்தவான்களின் மரணத்தின் காரணமாய், நீரோவிற்கு எதிராய்க் குறிப்பிட்ட ஒரு மகா காரியப்பொறுப்பு காணப்படும்; இது இவர் தேவனிடமிருந்து இரக்கத்தினைப் பெறுவதற்குரிய எந்த ஒரு வாய்ப்பினையும் கிட்டத்தட்ட தடைப்பண்ணிவிடுகின்றதாயிருக்கும் என்று நாம் எண்ணுகின்றோம். ஒரு பரிசுத்தவானைக் கொன்ற விஷயம் தண்டனையைக் கொண்டுவருமானால், அநேகம் பரிசுத்தவான்களைக் கொன்றுபோட்ட காரியம் அதிகத் தண்டனையைக் கொண்டுவருகின்றதாயிருக்கும். நீரோ அதிகமான நிந்தனையையும், இகழ்ச்சியையும் அடைவார் என்று நாம் அனுமானிக்கின்றோம்; எனினும் கிறிஸ்துவினுடைய மரணத்தின் புண்ணியமானது, நீரோவிற்கும் சரி, மீதமுள்ள மனுக்குலத்திற்கும் சரி செயல்பாட்டிலிருக்கும்.
நீரோவைப் போல மனங்களையும், இருதயங்களையும் உடைய அநேக ஜனங்கள் உலகில் ஜீவித்திருப்பார்கள்; ஆனால் இவர்கள் தங்களுடைய இந்தப் பொல்லாத மனப்பாங்கினை வெளிப்படுத்துவதற்கு, நீரோ பெற்றுக்கொண்ட வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்திருப்பார்கள். அநேகமாகக் கொலைசெய்தவதற்குரிய விருப்பத்துடன் அநேகர் இருந்திருப்பார்கள்; எனினும் தாங்கள் சக்கர்வர்த்திகளாக இல்லாதபடியினாலும், சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களாகவும், அதனால் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளபடியினாலும் தடுக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டிருப்பார்கள். ஆகையால் நீரோ தன் செய்கை அனைத்திற்கும் எப்படிக் குறிப்பாகப் பொறுப்பாளியாக இருக்கின்றார் என்றோ, நம் இனத்திலுள்ள வேறு சிலரைக்காட்டிலும் நீரோ எவ்வளவுக்கு அதிகமாகக் குற்றமுள்ளவராக இருப்பார் என்றோ நியாயந்தீர்ப்பதற்கு நாம் இயலாதவர்களாய் இருக்கின்றோம்.
திரள் கூட்டத்தாருடைய பாடுகளும், மரணமும், நாம் பார்த்திருக்கின்றபடி அவசியமானதாகும்; மேலும் இவர்களது இந்தப் பாடுகளும், மரணமும், “கிறிஸ்துவினுடைய சரீரத்திற்கு” எதிராகச் செய்யப்பட்ட விசேஷித்த மீறுதல்களுக்குரிய கணக்கிற்கென்று மாற்றீடான விதத்தில் செயல்படுத்தப்படுவது என்பது, கர்த்தர் சார்பிலுள்ள குறிப்பிட்ட ஓர் ஏற்பாடாகும். இப்படியான விதத்தில் “பலிபீடத்திங்கீழ்க் காணப்படும் ஆத்துமாக்களும்,” அவர்களின் இரத்தமும், பழிவாங்குதலுக்காய்க் கதறுகின்றது; மேலும் இப்படியான விதத்தில் பழிவாங்குதல் நிறைவேற்றப்படுகின்றது. மகா உபத்திரவ காலத்தின்போது திரள் கூட்டம் வகுப்பாரிலுள்ள இந்த குற்றமற்ற நபர்களின் மரணம் தொடர்புடைய விஷயத்தில், நீதியின் கூக்குரலானது திருப்திப்படுத்தப்படும். நீரோவின் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களின் மரணமானது, குற்றமற்றவர்கள் பாடுபடுவதன் வாயிலாக ஈடுசெய்யப்படுகின்றது என்று நாம் எண்ணுகின்றோம். இப்படியான விதத்தில் நீதியின் கணக்குகளானது திருப்திப்படுத்தப்படும்.”